உன் மீது மென்னிலவின் ஒளியைப் பொழிவதற்காகவே, எனக்குள் இருக்கும் காட்டுத்தீயை மறைத்து வைத்திருக்கிறேன். ஆனால் நான் விட்டுச்செல்லும் சாம்பலை நீ காண நேர்ந்தால், அப்போதும் என்னை உனக்கான ஒருவன் என்று ஏற்பாயா?
துர்கா புகழேந்தியிடம் மொபைலில் பேசிக்கொண்டிருந்தாள்.
“அவங்க ரெண்டு பேரும் நம்ம எல்லாரோடவும் ஐஸ்பால் விளையாடுறாங்க புகழ். அதெல்லாம் பிடிச்சிருக்கு அவங்களுக்கு. நம்மகிட்ட காட்டிக்கவும் செய்றாங்க. ஐயோ அன்னைக்கு ஆரெம்கேவில நடந்துச்சே ஒரு சீன். அதை அப்பிடியே ரெக்கார்ட் பண்ணி இன்ஸ்டால ரீல்ஸா போட்டிருந்தோம்னா வைரல் லவ்வர்ஸா இன்னைக்கு அவங்கதான் பேசப்பட்டிருப்பாங்க.”
புகழேந்தி மறுமுனையில் சிரித்தான். அவனுக்கு நேத்ரனைப் பற்றி நன்றாகவே தெரியும். பிடிக்காத மனிதர்களிடம் அவன் நெருங்க மாட்டான். பிடித்த மனிதர்களை எக்காலத்திலும் தன்னை விட்டு விலகவும் விடமாட்டான். அவர்களுக்கான ஸ்பேஸைக் கொடுத்துவிடுவான். அவனது செயல்களே அவனை அந்நபர்களுக்கு நெருக்கமாக்கிவிடும்.
வெண்பாவின் விஷயத்திலும் அதுதான் நடந்திருக்குமென ஊகித்தவன் அதைத் துர்காவிடம் சொல்ல அவளும் ஆமோதித்தாள்.
“நானும் அப்பிடித்தான் நினைக்குறேன். வெண்பா பிடிக்காதவங்ககிட்ட நெருங்காத டைப். என்ன ஒண்ணு, அவ தப்புனு நினைக்குறதைப் பிடிச்சவங்களே செஞ்சாலும் அவங்களை விட்டு ஒதுங்கிடுவா. ஐ ஹோப், கொழுந்தனார் எலக்சன்ல ஜெயிச்சு அவளையும் ஜெயிக்கணும்”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“பார்றா! என் பொண்டாட்டிக்கு ரைமிங்கா பேச வருது”
“நான் டீச்சராக்கும்”
“ஏம்மா நீ கெமிஸ்ட்ரி டீச்சர். தமிழாசிரியை இல்ல” நினைவூட்டினான் அவளுக்கு.
“ஞாபகப்படுத்துனதுக்கு தேங்க்ஸ். உங்ககூட பேசுறப்ப எனக்கு எல்லாமே மறந்துபோகுது புகழ்”
“ஏய்! கலாய்க்குறியா என்னை?” புகழேந்தி சிரிப்போடு வினவ
“நிஜமா புகழ்.”
அவர்களது எண்ணவோட்டம்தான் இரு குடும்பத்துப் பெரியவர்களுக்கும். ஆனால் வெண்பாவும் நேத்ரனும் தங்களது முடிவுகளில் தெளிவாக உறுதியாக இருந்தார்கள்.
அவன் தேர்தல் வேலைகளில் பிஸியாக இருக்க வெண்பாவோ அவளது மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வில் மும்முரமாகிப் போனாள்.
இதற்கிடையே புகழேந்தி – துர்காவின் நிச்சயதார்த்த நாளும் வந்தது. திருநெல்வேலி – மதுரை நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் ‘அமோகா பேலஸ்’, அவர்களது நிச்சயதார்த்த நிகழ்வின் அலங்காரங்களைச் சுமந்து கம்பீரமாக நின்றது.
பழைய பாணியிலான கட்-அவுட்களோ, ஃப்ளெக்ஸ் பேனர்களோ அங்கே மருந்துக்கும் இல்லை. முற்றிலும் நவீனமான அழகியலோடு அந்த மண்டபம் ஒரு புதுப்பொலிவுடன் மிளிர்ந்தது. நுழைவாயிலில் வெளிப்படையான ஆடம்பரம் இல்லை; மாறாக, நுணுக்கமான கலைநயம் இருந்தது. வெளிர் பிங்க் மற்றும் பீச் நிறங்களிலான வெளிநாட்டு ஆர்க்கிட் மலர்களும், வெள்ளை நிற ஜிப்சோபிலா பூக்களும் அடர்ந்திருக்க, நடுவே இருந்த அக்ரிலிக் போர்டில் தங்க நிற எழுத்துக்களில் ‘புகழேந்தி – துர்கா’ எனப் பொறிக்கப்பட்டிருந்த வரவேற்புப் பலகை அனைவரையும் ரசனையோடு வரவேற்றது.

மண்டபத்தின் உள்ளே நுழைந்தால், கூரையிலிருந்து தொங்கும் மெல்லிய ஃபேரி லைட்ஸ்களும், ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பேஸ்டல் நிற பலூன்களும், உலர் மலர் அலங்காரங்களும் ஒரு மேஜிக்கல் உலகத்திற்குள் நுழைந்தது போன்ற உணர்வைத் தந்தன. மேடையின் பின்புறம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, நடுவே ‘பெட்டர் டுகெதர்’ என்ற நியான் விளக்கு மென்மையாக ஒளிர, அந்த இடமே ஓர் அழகிய திரைப்படக் காட்சிபோலக் காட்சியளித்தது.
ஒருபுறம் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த போட்டோ பூத்தில் உறவுக்கார இளைஞர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துகொண்டிருந்தனர்.
காதைக் கிழிக்கும் மேளச் சத்தங்கள் இல்லாமல், மெல்லிய வயலின் இசையில் இளையராஜாவின் காதல் பாடல்கள் இதமாக ஒலித்துக்கொண்டிருந்தன. உறவினர்களும், நண்பர்களும் நவீனமான பட்டு உடைகளிலும், ட்ரெண்டியான இண்டோ-வெஸ்டர்ன் ஆடைகளிலும் வலம் வந்தனர். நிச்சயதார்த்தச் சீர்வரிசைத் தட்டுகளும் அந்த நவீன ட்ரெண்டுக்கு ஏற்ப மாறியிருந்தன. வழக்கமான தட்டுகளாக இல்லாமல், விதவிதமான டிசைனர் கூடைகளில் உலர் பழங்கள், அழகிய கண்ணாடி ஜாடிகளில் சாக்லேட்டுகள், மக்கரூன்கள், கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஃபியூஷன் இனிப்புகள் என அழகிய ரிப்பன்களால் கட்டப்பட்டு, கண்களைப் பறிக்கும் வகையில் மேடைக்குக் கீழே அடுக்கப்பட்டிருந்தன.
கெட்டிமேளம் முழங்க, நண்பர்கள் புடைசூழ மிடுக்காக மேடைக்கு வந்தான் புகழேந்தி. அடர்சிவப்பு வண்ணச் சட்டையும் அதன் மேலே பூவேலைகள் செய்த ப்ளேசருமாக அவனது தோற்றம் மிகவும் ட்ரெண்டியாகவும் வசீகரமாகவும் இருந்தது. உதட்டில் ரசனையான புன்னகையோடு வந்து மேடையில் அமர்ந்தான்.
அடுத்த சில நிமிடங்களில், தோழிகள் புடைசூழ மேடைக்கு அழைத்து வரப்பட்டாள் துர்கா. அலங்காரத்தின் மையக்கருத்துக்கு ஏற்றவாறு, பேஸ்டல் லாவெண்டர் நிறத்தில், வெள்ளி ஜரிகை ஓடிய முகூர்த்தப் பட்டுப்புடவையில் அவள் ஒரு நடமாடும் தேவதையாகவே தெரிந்தாள். கழுத்தை நிறைக்கும் பழைய காலத்து நகைகளைத் தவிர்த்துவிட்டு, ஒற்றையான, மிகவும் நேர்த்தியான வைர நெக்லஸ், கைகளில் குலுங்கும் வைர வளையல்கள், அளவான மேக்கப் என அத்தனை மாடர்ன் அழகியலோடு நடந்து வந்தவளைப் பார்த்ததும், புகழேந்தியின் விழிகள் ஒரு கணம் இமைக்க மறந்து அவளிலேயே லயித்தன. அவனது இதழ்கள் அவளையும் அறியாமல் ‘வாவ்’ என முணுமுணுத்தன.
மேடையில் இரு குடும்பத்துப் பெரியவர்களும் எதிரெதிரே அமர்ந்திருக்க, புரோகிதர்கள் வேத மந்திரங்களை முழங்கினர். சுபமுகூர்த்தத்தில் லக்னப் பத்திரிகை வாசிக்கப்பட்டு, தாம்பூலம் மாற்றிக்கொண்டனர். பின்னர், டிசைனர் தட்டில் அழகாக வைக்கப்பட்டிருந்த வைர மோதிரங்களை எடுத்து, உறவினர்களின் கைத்தட்டல்களுக்கு நடுவே புகழேந்தியும் துர்காவும் ஒருவருக்கொருவர் அணிவித்துக்கொண்டனர். கூடியிருந்தவர்கள் மலர்களைத் தூவி ஆசீர்வதிக்க, மண்டபமே சந்தோஷக் குரல்களால் நிறைந்தது.
சடங்குகள் முடிந்து, பெரியவர்களின் ஆசீர்வாதங்களைப் பெற்றுவிட்டு அவனருகில் வந்து அமர்ந்தாள் துர்கா. போட்டோகிராபர்களின் கேமரா ஃப்ளாஷ்கள் மின்ன, இருவரும் ஜோடியாக நின்று புகைப்படங்களுக்குப் புன்னகைத்துக்கொண்டிருந்தனர்.
அத்தனைக் கூட்டத்திற்கும் நடுவிலும், யாரும் கவனிக்காத ஒரு நொடியில் துர்காவின் பக்கம் லேசாகச் சாய்ந்த புகழேந்தி, “இந்த லாவெண்டர் கலர்ல நீ நிஜமாவே ஒரு ஏஞ்சல் மாதிரி இருக்க துர்கா… உன்னைப் பார்த்ததும் என் ஹார்ட்பீட் கொஞ்சம் ரைஸ் ஆயிடுச்சு,” என்று ரகசியமாகக் கிசுகிசுத்தான்.
அதுவரை பதற்றமாக இருந்த துர்காவின் முகம், அவனது வார்த்தைகளில் செம்பருத்தியாகச் சிவந்து வெட்கத்தில் விரிந்தது. அவனை நிமிர்ந்து பார்க்கத் தயங்கி, தன் கைகளில் இருந்த மலர்க்கொத்தை மென்மையாகச் சுருட்டியபடி அவளது இதழ்கள் மட்டும் அழகாகச் சிரித்தன.
இந்த ஜோடிகள் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் வந்தவர்களிடம் பேசிக்கொண்டே ஒரு கண்ணை வெண்பாவின் பக்கம் வைத்திருந்தான் நேத்ரன்.
“வழியுது! துடைச்சுக்க” டிஷ்யூவால் அவனது மோவாயைத் துடைப்பதுபோலப் பாவனை செய்த நிகிலனின் தோளில் வலிக்கும் வண்ணம் அடித்தவன் அவனை நகர்ந்து நிற்குமாறு சொல்ல அவனும் வலித்த தோளைத் தடவிக்கொண்டு தள்ளி நின்றான்.
குந்தவை வாங்கிக் கொடுத்த மெஜந்தா வண்ணப் பட்டுப்புடவையில் மொத்த பேருடைய கவனத்தையும் தன்பக்கம் திருப்பிக்கொண்டவளை யாரால்தான் தவிர்க்க முடியும்?
அவர்கள் வழி உறவுக்கார இளைஞன் ஒருவன் வெண்பாவிடம் பேச ஆரம்பித்தபோதுதான் நேத்ரனால் ஒரேயடியாகத் தள்ளி நிற்க முடியவில்லை.
அவர்களை நோக்கிச் சென்றான். அவனைப் பார்த்ததும் வெண்பா முறுவலிக்க, நேத்ரனைப் பார்த்ததும் அந்த உறவுக்கார இளைஞனின் முகத்தில் மெல்லிய ஆச்சரியம்!
“நியூஸ்ல, ஃபேஸ்புக், இன்ஸ்டால பாத்திருப்ப. இவங்க புகழ் மாமாவோட தம்பி” என வெண்பா சொல்ல
“அது மட்டுமில்ல, வெண்பாவோட வருங்காலப் புருஷனும்கூட” என்றான் நேத்ரன் வேண்டுமென்றே.
சொன்னதோடு மட்டுமில்லாது அவளது கையைக் கோர்த்துக்கொள்ள இப்போது உறவுக்கார இளைஞனின் விழிகளில் இருந்த ரசனை மாறிப்போய் அங்கே மரியாதை வந்து அமர்ந்தது.
“சொல்லவேல்ல. கங்கிராட்ஸ்” என நேத்ரனின் கையைக் குலுக்கியவன் அவர்களிடமிருந்து விடைபெற்றான்.
அவன் சென்றதும் தனது கையை உருவிக்கொண்டாள் வெண்பா.
“என்ன இது? நாம இன்னும் பேரண்ட்ஸ்கிட்ட எதையும் சொல்லலை. அதுக்குள்ள நீங்களே வதந்தியைப் பரப்புவீங்களா?”
“நான் என்ன செய்யுறது? சிச்சுவேஷன் என்னை இப்பிடி சொல்ல வைக்க புஷ் பண்ணுது.” என்றான் அவன் அமர்த்தலாய்.
வெண்பா இடையில் கைகளை ஊன்றிக்கொண்டாள்.
“ஓஹ்! அப்ப சிச்சுவேஷன் புஷ் பண்ணுச்சுனா என்ன வேணும்னாலும் பண்ணுவீங்களாக்கும்?”
“ஆமா! சூழ்நிலையைச் சமாளிக்குறது ஒரு கலை டீச்சரம்மா. அதுல நான் பிக்காசோ”
“ஹூம்! உங்ககிட்ட கொஞ்சம் கவனமாதான் இருக்கணும்”
“அதை நான் சொல்லணும்.” என்றவனின் விழிகள் அவளை மயிலிறகாய் வருடியதில் மேனி சிலிர்த்துப்போனது வெண்பாவுக்கு.
கொஞ்சம்கூட அசௌகரியத்தை உருவாக்காத பார்வை அது. பார்ப்பவனுக்கு ரசனையையும் பார்க்கப்படுகிறவளுக்கு வார்த்தைகளில் விவரிக்க முடியாத பரவசத்தையும் கொடுக்க இருவருக்கும் அதில் சம்மதமே!
“சாரி ரொம்ப அழகு” என்றவன் அவளது புடவையின் முந்தானையைப் பிடித்து அதைப் பார்த்தவனாய் “ஹேய் டூட்! கங்கிராட்ஸ். என்னால செய்ய முடியாத காரியத்தைச் செஞ்சு இந்த டீச்சரம்மாவோட க்ளோஸா இருக்குறதுக்கு. டீச்சரம்மாவோட பீரோல தூங்குற மை டியர் அனார்கலி, உனக்கு பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்” என்றான் கள்ளச் சிரிப்போடு.

வெண்பா சிரிப்போடு வெட்கத்தையும் முகத்தில் பூசிக்கொண்டு முகச்சிவப்பை மறைக்கப் போராடியவளாய் அவனிடமிருந்து முந்தானையைப் பிடுங்கினாள்.
“யாரும் பாத்துடப்போறாங்க”
“பாத்தா என்ன? என்னை யார் கேள்வி கேக்க முடியும்? ஹான்?”
“கேள்வி கேக்கமாட்டாங்க. சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்கனு அவசரப்படுத்துவாங்க. அது பரவால்லையா?”
“எனக்குப் பிரச்சனையே இல்ல. அங்க பாரு, அழகான டெக்கரேட்டட் ஸ்டேஜ் இருக்கு. ஐயர்கூட இருக்கார்”
“ஆனா நான்…”
‘நிறுத்து’ என்பதுபோலக் கைகாட்டினான் நேத்ரன்.
“உன்னாலதான் இந்த டிலே. இதுதான் நான். இன்னுமா உனக்குப் புரியல?”
“ம்ம்! ஆனா அரசியல்வாதி பேச்சை நம்ப முடியாதே. எப்பிடி எலக்சனுக்கு முன்னாடி ஒரு பேச்சு, எலக்சனுக்குப் பின்னாடி இன்னொரு பேச்சுனு இருக்குறவங்கதானே? அதே மாதிரி கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு மாதிரி கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு மாதிரினு நீங்க மாறிட்டா?”
“அதை நீ கல்யாணம் பண்ணுனாதான் கண்டுபிடிக்க முடியும்டி”
கைகளை அயர்ச்சியோடு விரித்தான் நேத்ரன்.
“டியா? மரியாதை மரியாதை”
பள்ளிச் சிறுவனை மிரட்டும் குரலில் ஆட்காட்டி விரலை நீட்டிச் சொன்னாள் வெண்பா.
“நமக்குள்ள என்ன ஃபார்மாலிட்டியான மரியாதை?”
“அப்ப நானும் உங்களை வாடா போடானு கூப்பிடவா?”
“கூப்பிட்டுக்க செல்லம். நீ கூப்பிடத்தானே நான் ஒருத்தன் இருக்குறேன்”
வெண்பா சத்தமாக நகைத்துவிட்டு ஏதோ சொல்ல வருவதற்குள் நேத்ரனின் மொபைல் அடித்தது. அழைத்தவன் நிகிலன்.
“மண்டபத்துக்குள்ள இருந்துட்டு இவன் ஏன் கால் பண்ணுறான்?” என்றபடி அழைப்பை ஏற்றான் அவன்.
“என்னடா?”
“மச்சி கடலை போட்டது போதும். இங்க ஒரு பிரச்சனை. நாம இப்பவே ஸ்ரீவைகுண்டம் போயாகணும்”
“என்னாச்சு? பசங்களுக்கு எதுவும்…” நேத்ரனின் முகம் மாறி இறுகிப்போக வெண்பாவுக்கோ எதுவும் புரியவில்லை.
மறுமுனையில் நிகிலன் என்ன சொன்னான் என்றும் தெரியவில்லை அவளுக்கு.
“நான் வர்றேன்” இறுகிப்போன மோவாயும் தாடையும் பிரச்சனையின் தீவிரத்தை வெண்பாவுக்கு உணர்த்தியது. அவனது இறுக்கம் அவளுக்குள் பதற்றமாக இடம்பெயர்ந்தது.
“என்னாச்சு நேத்ரன்?” மைபூசிய விழிகளில் கவலையோடு அவள் கேட்கவும் நேத்ரனின் முகம் குறைந்தபட்ச இயல்புக்கு மாறியது.
மெதுவாய்க் கை நீட்டி அவளது கன்னத்தை உள்ளங்கையில் தாங்கியவன் “ஒண்ணுமில்ல! என்ஜாய் த மொமண்ட். எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கும்மா. போயிட்டு வர்றேன்” என்று சொல்ல வெண்பாவின் சிரம் ஆமோதிப்பாய் அசைந்தது.
நேத்ரன் வெளியேறுவதைப் பார்த்தபடியே நின்றவளுக்கு நேத்ரனின் குரலில் இருந்த இறுக்கமும் அவனது கடினமான முகபாவனையும் கவலையூட்டப் போதுமானதாய் இருந்தது!
நிகிலனோடு காரிலேறிய நேத்ரனுக்கோ மனமெங்கும் கோபத்தீயின் ஜுவாலை பற்றியெரிந்துகொண்டிருந்தது.
“எப்பிடி நடந்துச்சு?”
“பசங்களுக்குள்ள சாதாரணப் பேச்சா ஆரம்பிச்சிருக்கு. டெல்லியில நம்ம பசங்க ஜெயிச்சு கப் அடிச்சாங்கல்ல. அதுதான் இப்ப பிரச்சனை. அமைதியா ஆரம்பிச்ச கலாய்க்குற பேச்சு கப் அடிச்சதுக்குத் தாவி அப்புறம் ஜாதியைச் சொல்லித் திட்டுறதுல முடிஞ்சிருக்கு.”
“ச்சீ! ஆஃப்டர் ஆல் ஜாதிக்காக… ஷப்பா! எனக்குத் தலை சுத்துது நிகில்” என்றவன் படுவேகமாய்க் காரை ஓட்டினான் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை நோக்கி.
அங்கே போய் சேர்ந்ததும் கபடிக் குழுவில் விளையாடும் பையன்கள் அனைவரும் நேத்ரனைப் பார்த்ததும் ஓடி வந்தார்கள்.
“அண்ணா எங்க மேல எந்தத் தப்பும் இல்ல. அந்த ஈஸ்வர்தான் முதல்ல ஆரம்பிச்சான்”
ஒரே ஊரைச் சேர்ந்த இளைஞர்களிடம் விளையாட்டாய் ஆரம்பித்த கேலிப்பேச்சு கபடிப் போட்டி பற்றியதாய் மாறி பின்னர் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரின் சாதியைச் சொல்லித் திட்டியதில் சண்டையாக மாறிவிட்டது.
அதில் ஒருவனுக்கு நெற்றியில் வீக்கம். இன்னொருவனுக்குக் கால் எலும்பு முறிந்துபோனது. இன்னும் இருவருக்குச் சின்னச் சின்னக் காயங்கள்.
பார்க்கும்போதே கடுப்பானது நேத்ரனுக்கு.
“ஏன்டா ரௌடித்தனமா நடந்துக்குறவனுங்ககூடப் பேச்சுவார்த்தை வச்சுக்குறீங்க?”
“நாங்க எல்லாம் சின்ன வயசுல இருந்து ஃப்ரெண்ட்ஸ்ணா. எப்பவும் இந்த மாதிரி ஆனதில்ல. நம்ம முருகனோட ஜாதியைச் சொல்லி அசிங்கமா திட்டிட்டான்ணா. அது மோசமான கெட்டவார்த்தைண்ணா. அம்மாவைப் பத்தித் தப்பா சொன்னவனை எப்பிடிண்ணா விட முடியும்?”
“டேய்! திறமையில்லாதவன் திறமையானவனை மட்டம் தட்ட இப்பிடித்தான் புரோவோக் பண்ணுவான். சீ நாயேனு விலகி வராம… சரி விடு! அவன் யாரு? அந்தக் கும்பல்ல இருந்தவன் எல்லாரோட விவரமும் எனக்கு வேணும்”
கபடிக் குழுவின் வீரர்களைத் தாக்கியவர்களின் விவரங்களை வாங்கிக்கொண்டு எலும்பு முறிவானவனை மட்டும் திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு நேத்ரன் வீட்டுக்கு வந்து சேர நள்ளிரவாகிப்போனது.
வீட்டுக்கு வந்தவன் காவல்துறை அதிகாரியின் எண்ணுக்கு அழைத்துப் பேசினான்.
“அவங்களை விடவேண்டாம். நான் நாளைக்குக் காலையில வந்து பேசிக்கிறேன்”
அந்தத் தொகுதியில் ராஜவேலுவுக்கு இருந்த செல்வாக்கால் அவரது அரசியல் வாரிசின் பேச்சுக்குக் காவல்துறையினரால்கூட மறுபேச்சு பேச முடியவில்லை.
மறுநாள் நிகிலனோடு காவல் நிலையத்துக்கு வந்து சேர்ந்தான் நேத்ரன்.
அவனைக் கண்டதும் பரபரப்பானார் காவல்துறை ஆணையர்.
“செல்லுக்குள்ள இருக்கானுங்க சார்”
“அதுல முத்துங்கிறவனை மட்டும் வெளிய வரச் சொல்லுங்க”
நேத்ரன் குறிப்பிட்ட இளைஞனை அழைத்து வந்தார் கான்ஸ்டபிள். ஆள் வாட்டசாட்டமாக முரட்டு ஆசாமியாய் இருந்தான். நேத்ரனைப் பார்த்ததும் தலையைக் குனிந்துகொண்டான்.
“எதுக்கு முருகனோட காலை உடைச்ச?”
அமைதியாய் நின்றான் அவன். நேத்ரன் அவனது தாடையைப் பற்றி நிமிர்த்தியவன் அடக்கப்பட்ட கோபத்தோடு புருவங்கள் நெறிய “அவன் சாதியைச் சொல்லித் திட்டி இந்த நாய்க்கெல்லாம் கபடி விளையாட கால் எதுக்குனு சொல்லி உடைச்சியாமே? அப்பிடியா?” என்று கேட்டான்.
அவன் கேட்ட விதத்தில் சம்பந்தப்பட்டவனுக்குப் பயத்தில் வார்த்தை வரவில்லை வாயிலிருந்து.
“ஏய்…” நேத்ரனின் குரல் கர்ஜனையாய் உயர்ந்ததும் பதறியவன் பதற்றத்தை மறைத்துக்கொண்டான்.
“ஆமா! சொன்னேன்! அதுக்கு என்ன இப்ப? அந்த நாயெல்லாம் ஒரு காலத்துல என் தாத்தனோட காலை நக்கிப் பிழைச்ச இனம். இன்னைக்கு எனக்குச் சரிசமமா பேச உரிமை குடுத்தா தலை மேல ஏறி நிக்குறான். அதான் காலை உடைச்சேன்”
அந்த இளைஞன் சொல்லி முடிக்கவும் நேத்ரனின் கை அவனது கன்னத்தில் இறங்கியது. அவன் அடித்த அடியில் கீழே விழுந்தவனின் கன்னத்தில் கடுமையான சேதாரம்.
கீழே கிடந்தவனின் சட்டையைக் கொத்தாய்ப் பற்றித் தூக்கியவன் “படிக்காம ஊர் சுத்திட்டுத் திரியுற உனக்குப் படிச்சு ஸ்போர்ட்ஸ்ல தனக்குனு ஒரு அடையாளத்தை உருவாக்குனவனைக் கண்டா அவ்ளோ எளப்பமா இருக்கா? டீம்ல உன் ஜாதிக்காரனும்தானே இருந்தான். அவன் மேல கைவைக்காம ஜாதி பாத்துதான் கோவத்தைக் காட்டுவீங்களோ?” என்று கேட்டு மீண்டும் மற்றொரு கன்னத்தில் அறைந்தான். இம்முறை தவறாமல் அவனது உதடு கிழிந்தது.
இன்னொரு அறை அறையப்போனவனைக் காவல் ஆய்வாளர் வந்து தடுத்தார்.
“வேண்டாம் சார்! அப்புறம் லாக்கப் வன்முறை அது இதுனு உங்களுக்கும் கஷ்டம், எனக்கும் கஷ்டம்”
நேத்ரன் கோபத்தோடு அவனது சட்டையை விடுவித்தான்.
பின்னர் ஆட்காட்டி விரலால் அங்கே நின்ற அனைவரையும் சுட்டிக்காட்டினான்.
“இதுதான் முதலும் கடைசியுமான வேலையா இருக்கணும். அவங்க என் பசங்க. இனி எவனாச்சும் ஜாதியைச் சொல்லி அவங்க மேல கை வச்சீங்க, தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை!”
அவர்களை எச்சரித்துவிட்டுக் காவல் ஆய்வாளரிடம் திரும்பினான்.
“இவங்களை ஈஸியா வெளிய விடக்கூடாது. வெளிய வந்துட்டா ஜாதிங்கிற சாக்கடையை இன்னும் நாலு பேர் மண்டையில ஏத்திவிடுவானுங்க. நானே கம்ப்ளைன்ட் குடுக்குறேன்.”
புகார் கொடுத்துவிட்டு வெளியேறப் போனவனின் முதுகுக்குப் பின்னே ஒரு குரல் கேட்டது.
“எங்களை உள்ள வச்சிட்டு எப்பிடி எங்காளுங்ககிட்ட ஓட்டு கேப்பீங்க? இது மட்டும் ஃபேஸ்புக்ல பரவுச்சுனா தென்மாவட்டத்துல இருக்குற எங்காளுங்க யாரும் உங்களுக்கு ஓட்டுப் போடமாட்டாங்க”
திமிராய்ச் சொன்னவனை நோக்கித் திரும்பினான் நேத்ரன்.
நிதானமாய் அவனிடம் வந்து நின்றவன் அவனது சட்டையைச் சரிசெய்தான்.
“தம்பி! எல்லா ஜாதியிலயும் நல்லவனும் இருப்பான். உன்னை மாதிரி ஜாதிவெறி பிடிச்ச தற்குறியும் இருப்பான். உன்னை மாதிரி தற்குறிகளோட ஓட்டு எனக்குத் தேவையே இல்ல. அதனால நான் தோத்துப்போனாலும் எனக்குக் கவலையில்ல! போடா”
அவனது நெஞ்சில் கை வைத்து அலட்சியமாய்த் தள்ளிவிட்டு நிகிலனோடு வெளியேறினான் நேத்ரன்.
தன்னிடம் பட்டாய்க் குழைபவனின் இன்னொரு பக்கத்தை வெண்பா பார்க்க நேர்ந்தால் அவளது எதிர்வினை எப்படி இருக்குமோ!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


