NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
டன்னிங்-க்ரூகர் விள...
 
Notifications
Clear all

டன்னிங்-க்ரூகர் விளைவு: குறைகுடங்களின் உளவியல் ரகசியம்

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

ரொம்ப மாதங்கள் ஆகுது Unfiltered by Nithya – இந்த  பகுதி தளத்துல வந்து. இன்னைக்கு ஒரு இன்ட்ரெஸ்டிங்கான விசயத்தைத் தான் கொண்டு வந்திருக்கேன். வழக்கம் போல மூஞ்சிபுக்ல உலாவுனப்ப சில பதிவுகளை காண நேர்ந்தது. அதன் அடிப்படைல கூகுள்ல தேடுனப்ப நான் படிச்ச டேர்ம் ‘டன்னிங் க்ரூகர் எஃபெக்ட்’.

எதுக்காக இதை பத்தி இப்ப போஸ்ட் போடுறேன்னா கடந்த இரண்டு மூன்று வாரங்கள்ல நிறைய நபர்கள் இந்த சைக்காலஜிக்கல் ட்ரெயிட்டோட முகப்புத்தகத்துல உலாவுறதை கவனிச்சேன்.

சிரிக்க தகுந்த பதிவுகளா இருந்தாலும் அது பின்னாடி இருக்குற சைக்காலஜிய தெரிஞ்சிக்கணும்னு ஒரு ஆர்வம். ஆர்வத்தின் விளைவா நான் கத்துக்கிட்டதை இங்க ஷேர் பண்ணுறேன்.

டன்னிங்-க்ரூகர் விளைவு: குறைகுடங்களின் உளவியல் ரகசியம்

நம்ம வாழ்க்கையில ஒருமுறையாவது சில பேரப் பாத்து இப்படி நினச்சிருப்போம்... "இவங்களுக்கு இந்த விஷயத்துல ஒரு மண்ணும் தெரியல, ஆனா எப்படி இவ்வளவு கான்ஃபிடெண்டா எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்/ ஏகாம்பரி மாதிரி பில்டப் குடுக்குறாங்க?" அப்படின்னு.

அதே சமயம், ரொம்ப அறிவாளியா, அந்தத் துறையில பல வருஷமா சாதிச்ச ஒருத்தரை பாக்கும்போது, அவர் ரொம்ப அமைதியா, "எனக்கு தெரிஞ்சது கொஞ்சம்தான்பா"னு அடக்கமா சொல்றதையும் பாத்திருப்போம்.

இந்த முரண்பாடு ஏன் வருது? ஒன்னுமே தெரியாதவங்க தங்களை 'ஜீனியஸ்'னு நினைச்சு காலரை தூக்கி விடுறதும், எல்லாம் தெரிஞ்சவங்க தங்களை குறைச்சு எடை போடுறதும் ஏன்? இதுக்கு பின்னாடி இருக்கிற ஒரு சுவாரஸ்யமான உளவியல் உண்மைதான் இந்த டன்னிங்-க்ரூகர் விளைவு (Dunning-Kruger Effect).

டன்னிங் க்ரூகர் விளைவோட தோற்றம் - ஒரு சுவாரஸ்யமான திருட்டு சம்பவம்!

இந்த டன்னிங்-க்ரூகர் விளைவு எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டுச்சுனு தெரியுமா? ஒரு நிஜமான, கொஞ்சம் நகைச்சுவையான குற்றச் சம்பவத்துல இருந்துதான்!

1995-ம் வருஷம், அமெரிக்காவுல இருக்கிற பிட்ஸ்பர்க் நகரத்துல ஒரு பேங்க் கொள்ளை நடக்குது. மெக்ஆர்தர் வீலர் அப்படிங்கிற ஆளு, பட்டப்பகல்ல, முகத்துல எந்த மாஸ்க்கும் போடாம, தைரியமா பேங்குக்குள்ள நுழைஞ்சு துப்பாக்கியைக் காட்டிப் பணத்தைக் கொள்ளையடிச்சிட்டுப் போறான். சிசிடிவி கேமராவுல அவனோட முகம் அப்பட்டமா பதிவாகியிருக்கு.

போலீஸ் ரொம்ப ஈஸியா அவனைப் பிடிச்சிட்டாங்க. அரெஸ்ட் பண்ணப்போ அந்த வீலருக்கு பயங்கர ஷாக்!

"நான் தான் முகத்துல ஜூஸ் தடவியிருந்தேனே... அப்புறம் எப்படி என்னை கண்டுபிடிச்சீங்க?"னு போலீஸைப் பாத்து சீரியஸா கேட்டான். போலீஸுக்கே ஒண்ணும் புரியல. அப்புறம் விசாரிச்சப்பதான் தெரிஞ்சது... எலுமிச்சை சாறை வச்சு பேப்பர்ல எழுதுனா, அது கண்ணுக்குத் தெரியாது. நெருப்புல காட்டுனா தான் தெரியும். இந்த சயின்ஸ் லாஜிக்கை இவன் தப்பா புரிஞ்சுக்கிட்டான்.

எலுமிச்சை சாறை தன் முகத்துல பூசிக்கிட்டா, சிசிடிவி கேமராவுல தன் முகம் பதிவாகாதுனு அந்த அரைவேக்காடு ரொம்ப ஸ்ட்ராங்கா நம்பியிருக்கான். இந்த முட்டாள்தனமான ஒரு லாஜிக்கை நம்பி, கொஞ்சம்கூட பயமில்லாம ஒரு பேங்கையே கொள்ளையடிச்சிருக்கான்.

இந்த நியூஸை பேப்பர்ல படிச்ச டேவிட் டன்னிங் (David Dunning) மற்றும் ஜஸ்டின் க்ரூகர் (Justin Kruger) அப்படிங்கிற ரெண்டு உளவியலாளர்கள் ரொம்ப ஆச்சரியப்பட்டாங்க. "ஒரு மனுஷன் எப்படி இவ்வளவு முட்டாள்தனமா இருக்க முடியும்? அதுவும் அந்த முட்டாள்தனத்துல எப்படி இவ்வளவு அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க முடியும்?"னு ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சாங்க. அந்த ஆராய்ச்சியோட முடிவுல அவங்க வெளியிட்ட தியரிதான் இந்த 'டன்னிங்-க்ரூகர் எஃபெக்ட்'

 

டன்னிங்-க்ரூகர் விளைவுன்னா என்ன?

 

ரொம்ப சிம்பிளா சொல்லணும்னா:

அறியாமையின் தைரியம்: ஒரு விஷயத்தைப் பத்தி அரைகுறையா தெரிஞ்சவங்க, தாங்கள் அந்த விஷயத்துல பெரிய எக்ஸ்பர்ட்னு நினைச்சுப்பாங்க. அவங்களுக்கு தங்களோட 'அறியாமை' எந்த அளவுக்குப் பெருசுன்னே தெரியாது.

அறிவின் தயக்கம்: ஆனா, அதே விஷயத்தை ஆழமா படிச்சவங்க, "இது ரொம்ப சாதாரண விஷயம் தானே, எல்லாரும் நம்மள மாதிரி தான் இதைப் புரிஞ்சு வச்சிருப்பாங்க"னு நினைச்சு, தங்களோட சொந்தத் திறமையையே குறைச்சு எடை போடுவாங்க.

"குறைகுடம் கூத்தாடும், நிறைகுடம் தளும்பாது’’ என்ற பழமொழியோட சைக்காலஜிக்கல் வெர்சன் தான் இந்த டன்னிங் க்ரூகர் எஃபெக்ட்.

 

டன்னிங்-க்ரூகர் விளைவின் நான்கு படிநிலைகள்

 

ஒரு புது விஷயத்தை நாம கத்துக்க ஆரம்பிக்கும்போது, நம்ம மூளை எப்படி வேலை செய்யுது அப்படிங்கிறத நாலு ஸ்டேஜா பிரிச்சு சொல்றாங்க:

  1. முட்டாள்தனத்தின் உச்சி (Mount Stupid):

இதுதான் முதல் ஸ்டேஜ். ஒரு விஷயத்தைப் பத்தி லேசா, மேலோட்டமா கத்துக்கிட்ட உடனே வர்ற மிதமிஞ்சிய தன்னம்பிக்கை. "அவ்வளவுதான், இதுல கத்துக்க என்ன இருக்கு? எனக்கு எல்லாம் அத்துப்படி!"னு ஒரு கர்வம் வரும். இதுதான் ஆபத்தான இடம்.

  1. விரக்தியின் பள்ளத்தாக்கு:

அந்த விஷயத்துல இன்னும் கொஞ்சம் உள்ளே இறங்கிப் படிக்கும்போதுதான், "அடேங்கப்பா! இதுக்குள்ள இவ்வளவு ரூல்ஸ் இருக்கா? இவ்வளவு நுணுக்கங்கள் இருக்கா? நமக்கு ஒண்ணுமே தெரியலையே!"னு ஒரு பயம் வரும். அப்போ அந்த ஓவர் கான்ஃபிடென்ஸ் அப்படியே சுக்குநூறா உடைஞ்சு, தன்னம்பிக்கை அதலபாதாளத்துக்குப் போயிடும்.

  1. விழிப்புணர்வு:

தனக்கு எதுவும் தெரியாதுனு உணர்ந்துகிட்ட ஒருத்தர், பொறுமையா, கொஞ்சம் கொஞ்சமா அந்த விஷயத்தை ஆழமா கத்துக்க ஆரம்பிப்பார். தப்புகள் செஞ்சு, அதைத் திருத்திக்கிட்டு படிப்படியா முன்னுக்கு வர்ற ஸ்டேஜ் இது. இப்ப நிஜமான அறிவு வளரும்.

  1. நிலையான திறன்:

பல வருஷ உழைப்புக்குப் பிறகு, அந்தத் துறையில அவங்க ஒரு நிபுணரா மாறிடுவாங்க. இப்ப அவங்களுக்குப் பெரிய அளவுல திறமை இருக்கும். தன்னம்பிக்கையும் இருக்கும். ஆனா, அந்த 'ஸ்டேஜ் 1'-ல் இருந்த கர்வம் துளியும் இருக்காது. ரொம்ப யதார்த்தமா, அமைதியா அவங்க வேலையைப் பார்ப்பாங்க.

 

நிஜ வாழ்க்கை உதாரணங்கள்

 

உதாரணம் 1: சோசியல் மீடியா நிபுணர்கள்

 

போன்ல ஒரு கிரிக்கெட் மேட்ச் பாத்துட்டு இருக்கிற சாதாரண ஆளு, திடீர்னு "கோலி இப்படி ஷாட் அடிச்சிருக்கக் கூடாது, இப்படி ஆடியிருக்கணும்"னு பல வருஷமா கிரிக்கெட் விளையாடுற பிளேயருக்கே அட்வைஸ் பண்ணுவார்.

கிரிக்கெட் பத்தி தெரியுமோ தெரியாதோ எல்லாரும் பேசுறாங்க, நாமளும் பேசுவோம்னு அரைவேக்காட்டுத்தனமா எதையாச்சும் பேசுவாரு.

அதே மாதிரி, ஒரு சீரியஸ்ஸான க்ரைம் நியூஸ் டிவியில ஓடிட்டு இருக்கும். அதைப் பாக்குற நபர், எந்த விதமான தடயவியல் அறிவும் இல்லாம, "போலீஸ் இப்படித்தான் விசாரிக்கணும், நான் மட்டும் அங்க இருந்தா இந்நேரம் குற்றவாளியைப் பிடிச்சிருப்பேன்"னு அளந்து விடுவார்.

இது எல்லாமே டன்னிங்-க்ரூகர் விளைவுதான்.

 

உதாரணம் 2: எழுத்துலகமும் நாவலாசிரியர்களும்

 

ஓவியம், திரைப்படம், எழுத்து இது எல்லாத்தோட உச்சமா இருக்குறதை மேக்னம் ஓபஸ்னு சொல்லுவாங்க. ஃபார் எக்சாம்பிள் : சினிமாத்துறைல ராஜமவுலிக்கு மேக்னம் ஓபஸ் பாகுபலி.

இதே போல எழுத்தாளருக்கும் மேக்னஸ் ஓபஸ் நாவல் ஒன்னு இருக்கும். ஏதோ ஒன்னை புதுசா ட்ரை பண்ணிருப்பாங்க. அதுவும் ஒர்க் அவுட் ஆகிருக்கும். ஆனா அதை வச்சு எனக்குத்தான் எல்லாம் தெரியும்,  நான் தான் ஆகச்சிறந்த எழுத்தாளர்/எழுத்தாளினினு படம் ஓட்டுறது அறியாமையின் உச்சம்.

ஒரு சிலர் வாசகர்களுக்கு புரியாத மாதிரி எழுதுறதையே சாதனையா, மேதாவித்தனமா நினைப்பாங்க. இன்னும் சிலர் தாங்கள் வித்தியாசமா ஏதோ ஒரு நாவலை எழுதிட்டு ‘கம்ஃபர்டபிள் ஜோன்’ வச்சு எழுதுற ரைட்டர்சை பாவிகள் மாதிரி சித்தரிப்பாங்க. நல்லா கவனிச்சா அது அறியாமையோட உச்சக்கட்டம்னு நமக்கே தெரியும்.

 

உதாரணம் 3: டிரைவிங் கத்துக்கிறவங்க

 

புதுசா கார் ஓட்டக் கத்துக்கிட்டு, ரெண்டு நாள்ல லைசென்ஸ் வாங்குன பையன், ஹைவேல 120 கிலோமீட்டர் ஸ்பீட்ல காரை முறுக்குவான். தனக்கு எல்லாம் தெரியும்ங்கிற ஓவர் கான்ஃபிடென்ஸ். ஆனா 20 வருஷமா லாரி ஓட்டுற ஒரு சீனியர் டிரைவர், ரோட்டுல எந்த நேரத்துல வேணா குறுக்க நாய் வரலாம், டயர் வெடிக்கலாம்னு எல்லா ஆபத்தையும் உணர்ந்து, 60 ஸ்பீட்ல ரொம்ப கவனமா வண்டிய ஓட்டுவார்.

எங்கப்பா ஒரு டிரைவர். அவரோட பதினெட்டாவது வயசுல இருந்து டிரைவிங் தான் அவரோட வேலை. வேகமா ஓட்டுறது எல்லாம் டிரைவிங்ல சாதனை இல்ல, எந்த உயிருக்கும் ஆபத்து இல்லாம ஓட்டுறது தான் பெரிய விசயம்னு அடிக்கடி சொல்லுவாரு. இதையே டிரைவிங்கில புதுசா நுழையுற ஆள் சொல்லுவாரானானு கேட்டா A big no is the answer.

 

காட் காம்ப்ளக்ஸ் (God Complex) - இதற்கும் டன்னிங்-க்ரூகர் விளைவுக்கும் உள்ள தொடர்பு

 

உளவியல்ல 'காட் காம்ப்ளக்ஸ்'னு ஒரு வார்த்தை இருக்கு. அதாவது, "நான்தான் கடவுள், நான் நினைக்கிறது மட்டும்தான் சரி, என்னோட அறிவுக்கு மிஞ்சினது உலகத்துல எதுவுமே இல்லை"னு நினைக்கிறது. தங்களைத் தாங்களே கடவுளுக்கு நிகரா நினைச்சுக்கிற ஒரு உளவியல் கோளாறு இது.

இந்தக் காட் காம்ப்ளக்ஸ் இருக்கிற கேரக்டர்கள், டன்னிங்-க்ரூகர் விளைவோட உச்சகட்டத்துல இருப்பாங்க. இவங்க தப்பு செஞ்சா கூட, அதை ஒத்துக்கவே மாட்டாங்க. "நான் செஞ்சா அது சரியாதான் இருக்கும். மத்தவங்கதான் அதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க"னு வாதிடுவாங்க. பல க்ரைம் கதைகள்ல வர்ற சீரியல் கில்லர்கள், "நம்மளை போலீஸால பிடிக்கவே முடியாது"னு நினைச்சு மாட்டிக்கிறதுக்கும், இந்த காட் காம்ப்ளக்ஸ் கலந்த டன்னிங்-க்ரூகர் எஃபெக்ட்தான் காரணம்.

 

இது ஏன் ஏற்படுகிறது? (Metacognition குறைபாடு)

 

ஏன் ஒண்ணுமே தெரியாதவங்க இவ்வளவு தைரியமா இருக்காங்க? இதுக்கு உளவியலாளர்கள் சொல்ற காரணம்: Metacognition குறைபாடு.

மெட்டாகாக்னிஷன் அப்படின்னா, 'நம்ம சிந்தனையை நாமே அளவிட்டுப் பார்க்கும் திறன்'. அதாவது, நாம செய்றது சரியா தவறானு நாமே அலசி ஆராயும் ஒரு செல்ஃப்- அசெஸ்மெண்ட்.

டன்னிங்-க்ரூகர் விளைவுல சிக்குறவங்களுக்கு, இந்த மெட்டாகாக்னிஷன் திறன் இருக்காது. ஒரு துறையில தாங்கள் தப்பு செய்றோம்னு கண்டுபிடிக்கிறதுக்கே, அவங்களுக்கு அந்தத் துறையில ஓரளவாவது நாலேட்ஜ் இருக்கணும் இல்லையா? தங்களைக் திருத்திக்கொள்ள தேவையான அடிப்படை அறிவு கூட அவங்ககிட்ட இருக்காது. அதனால, தாங்கள் போற பாதைதான் சரின்னு கண்மூடித்தனமா நம்புவாங்க.

 

இதுல இருந்து எப்படித் தப்பிக்கிறது?

 

நாமளும் எப்பவாவது இந்த மாதிரி டன்னிங்-க்ரூகர் விளைவுல மாட்டியிருப்போம். அது மனித இயல்புதான். ஆனா அதுல இருந்து எப்படி வெளிய வர்றது?

  1. கத்துக்கிறதை நிறுத்தக் கூடாது: எந்த ஒரு விஷயத்திலயும் "எனக்கு எல்லாம் தெரியும்"னு ஒரு முற்றுப்புள்ளி வைக்கக் கூடாது. கத்துக்க வேண்டிய விஷயங்கள் கடலளவு இருக்குனு எப்பவும் ஒரு மாணவன் மனநிலையில இருக்கணும்.
  2. விமர்சனங்களை ஏத்துக்கணும்: நம்மளோட வேலைகளையோ, சிந்தனைகளையோ மத்தவங்க விமர்சிக்கும்போது, உடனே கோபப்படாம, "ஒருவேளை அவங்க சொல்றதுல லாஜிக் இருக்குமோ?"னு யோசிக்கப் பழகணும்.
  3. கேள்வி கேட்கணும்: நமக்கு நாமே கேள்விகள் கேட்டுக்கணும். "இந்த முடிவு எடுக்குற அளவுக்கு எனக்கு இதுல போதுமான அனுபவம் இருக்கா?"னு செல்ஃப்-செக் பண்ணிக்கணும்.

 

முடிவாக...

சார்லஸ் டார்வின் ஒருமுறை சொன்னார், "அறிவை விட அறியாமைதான் மனிதனுக்கு அதிக நம்பிக்கையைத் தருகிறது." அது நூற்றுக்கு நூறு உண்மை.

டன்னிங்-க்ரூகர் விளைவு நமக்குச் சொல்லிக் கொடுக்குற பாடம் ரொம்ப சிம்பிள். அறிவுக்கு எப்பவுமே கொஞ்சம் வெட்கமும் தயக்கமும் இருக்கும், ஆனா அறியாமைக்கு கர்வம் மட்டுமே இருக்கும். அதனால, எந்த விஷயத்துலயும் ஓவர் கான்பிடென்ஸா சீன் போடாம, எப்பவும் தேடலோட, கொஞ்சம் அடக்கத்தோட இருக்கிறதே சிறந்தது! முக்கியமா எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரங்கள் / ஏகாம்பரிகள் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பாம அது உண்மையா இல்லையானு தேடிப் பாருங்க.

 இன்னைக்கு நம்ம கையில போன் இருக்கு. கூகுள்ல எல்லா துறை சார்ந்த ஆர்ட்டிக்கிளும் கொட்டிக் கிடக்குது. பொறுமையா உக்காந்து படிங்க.

இது உங்களுக்கும் உதவும். நாலு பேர் முன்னாடி எந்த அரைவேக்காடோ தப்பா சொன்ன செய்தியை நீங்க பகிர்ந்து அவமானப்படுறதை அந்த தேடல்திறனும் கற்றல்திறனும் தான் தடுக்கும்.

ஓகே! அடுத்த வாரம் வேற ஏதாச்சும் இண்ட்ரெஸ்டா சிக்குதானு பாத்துட்டு பதிவோட வர்றேன். டாட்டா!

1776503068-WhatsApp-Image-2026-04-18-at-23228-PM.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : April 18, 2026 2:34 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images