கொண்டாடும் உலகத்தின் சத்தங்களை மழை அடித்துச் செல்ல, அங்கே எஞ்சியிருந்தது என் வாகனத்தின் கர்ஜனையும் அவளது அணைப்பின் சிலிர்க்க வைக்கும் மின்னலும் மட்டுமே!
-நேத்ரன்
நேத்ரனின் தடுமாறும் பார்வை வெண்பாவைச் சொல்லவொண்ணா இம்சையில் ஆழ்த்தியது.
‘இதென்ன இதயத்தைத் துளையிடுவது போல இப்படியொரு பார்வை? பார்வை துளைக்கும்போதே அனஸ்தீசியா எடுத்தது போல உடலும் மனமும் அரைத்தூக்கமும் மயக்கமும் கலந்த மோனநிலையில் மிதக்க ஆரம்பிக்கிறதே!’
தனக்குள் விறுவிறுவெனப் பரவிய அந்த மோனநிலையைக் கட்டுப்படுத்திக்கொண்டவள் “என்ன கிஃப்ட்னு கேக்கமாட்டீங்களா?” என்று வினவ
“நீயே சொல்லு டீச்சரம்மா” என்றபோதும் அவனது பார்வையின் துளையிடும் போக்கு மாறுமா என்றது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“இருங்க” என்று கைகாட்டிவிட்டு எழுந்தவள் அடைமழையின் வேகம் குறைந்ததை உணர்ந்து பைக்கை நோக்கிச் சென்றாள்.
என்ன செய்யப்போகிறாளென ஒருவிதக் குறுகுறுப்போடு காத்திருந்தவன் ராயல் என்ஃபீல்டின் ஸ்டோரேஜ் பாக்ஸிலிருந்து க்ளட்ச் பர்ஸை எடுத்து வந்தவளின் மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்திய மழை மீது கோபித்துக்கொண்டது தனிக்கதை.
வெண்பா ஆர்வமாய் வந்து அவனருகே அமர்ந்தவள் “கண்ணை மூடுங்க” என்று சொல்ல நேத்ரனும் கண்களை மூடிக்கொண்டான்.
“ஒன்… டூ… த்ரீ… ஓபன் யுவர் ஐஸ்… டடன்…” என்று அவள் குழந்தைகளிடம் பேசும் தொனியில் சொல்லவும் கண்களைத் திறந்தவன் அவளது கையில் அமர்ந்திருந்த சிறிய க்ரோசே கண்ணாடி கேஸைப் பார்த்ததும் முறுவலித்தான்.
பவுடர் ப்ளூ வண்ணத்தில் அழகான டேலியாக்கள் இரண்டு மலர்ந்திருக்க நடுவே ‘N.V’ என்ற எழுத்துகளோடு கண்ணாடி வடிவத்தில் சிறிய பர்ஸ் போலச் சிரித்தது க்ரோசே கண்ணாடி கேஸ். அதன் நீட்சியாய் நூலில் பின்னப்பட்ட ஹேங்கர் ஒன்றும்.

“உங்களோட ஹாரிபாட்டர் கண்ணாடிக்கும், ரேபானுக்கும் இது கரெக்டா இருக்கும்” என்று ஆசையாய்ச் சொல்லவும் நேத்ரனின் கண்களில் கனிவு நிறைந்தது.
அதை ஆர்வத்தோடு வாங்கியவன் உதடுகளில் புன்னகை பூக்க அவளை ஏறிட்டான்.
“அதென்ன என்.வி? நான் வெஜ்ஜா?” என்று வேண்டுமென்றே சீண்டினான் அவளை.
உடனே வெண்பாவின் கண்களில் குட்டியாய் ஓர் எரிமலை புகையைக் கக்கியது.
“எப்ப பாரு சாப்பாடு சாப்பாடுனு உன் நினைப்பு எல்லாம் திங்குறது மேலதான் இருக்குமா?” என்று கேட்டபடி அவனது புஜத்தில் ‘டப்டப்’ என அடித்தவள் தலையில் வலிக்காதவண்ணம் நறுக்கெனக் குட்டினாள்.
“என்னடி இப்பிடி அடிக்குற? லேடி ராக்” என்று செல்லமாய் அவளை வைதவன் “நீ கோவப்படுறப்ப எக்ஸ்ட்ரா அழகு” என்று சொல்லி அவளது கன்னங்களைக் கிள்ளித் தனது உதட்டில் ஒற்றி முத்தமிட்டுக்கொண்டான்.
கிள்ளிய விரல்களில் வெண்பாவின் பார்வை நிலைக்கவும் அவனது எண்ணங்கள் வேறு திசையில் பறக்கத் தொடங்கின.
“விரலுக்கு முத்தம் குடுத்தது பிடிக்கலையா டீச்சரம்மாக்கு?” என்றபடி அவளது கன்னங்களை அள்ளித் தன்னருகே கொண்டுவந்தவன் அழுத்தமாய் தனது முத்த முத்திரையை அவளது கன்னத்தில் பதித்தான்.
மெத்தென்ற கன்னத்தில் அவனது உதடுகள் புதைந்த விதம் முத்தம் கொடுத்தவனுக்கும் முத்தத்தை வாங்கிக்கொண்டவளுக்கும் சேர்த்தே போதையூட்டுவதாய்!
கண்கள் கிறக்கத்தில் ஆழ்ந்துபோக எத்தனித்த க்ஷணமே சட்டென விலகியவன் “நேத்ரன் – வெண்பாவோட சுருக்கம்தானே இது! ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு” என்றான் மனம் நிறைந்த குரலில்.
வெண்பாவும் மயக்கம் குறைந்து இயல்பாகிப் பூரித்துப்போனாள். அதே நொடியில், அவனது பேன்ட் பாக்கெட்டில் இருந்த மொபைல் அதிர்ந்தது. நிகிலன்தான் அழைத்திருந்தான்.
“இப்ப வந்துடுறேன்” என்று கண் சிமிட்டிவிட்டுக் கடையின் ஓரமாகச் சென்று அழைப்பை ஏற்றான் நேத்ரன்.
சில நொடிகள் மட்டுமே நீடித்த அந்த உரையாடலின் முடிவில், நேத்ரனின் உதடுகளில் மிடுக்கான, ஆனால் அத்தனை நிறைவான புன்னகை விரிந்தது. உடல்மொழியில் இயல்பாய் இருக்கும் கம்பீரம் இன்னும் அதீதமாவதாய்!
அழைப்பைப் பேசி முடித்துவிட்டு வெண்பாவை நோக்கி வந்தவனின் ஒவ்வொரு அடியிலும் ஆளுமை கூடியிருந்தது.
“டீச்சரம்மா…” என்று அவளருகே வந்து நின்றவன், அவளது இரு தோள்களையும் தன் கைகளால் அழுத்தமாகப் பற்றிக்கொண்டான்.
“உன் வேட்பாளர் ஜெயிச்சுட்டான் வெண்பா! அதுவும் முப்பது ஆயிரத்துக்கும் மேல வாக்கு வித்தியாசத்துல ஜெயிச்சிட்டான். நம்ம தொகுதி எம்.எல்.ஏ நான்தான்.”
அதைச் சொல்லும்போது அவனது குரலில் அதிகாரத்தின் கர்வம் இல்லை, மாறாகப் போரில் தான் கண்ட வெற்றியைத் தன் காதலியிடம் சமர்ப்பிக்கும் போர்வீரனின் குதூகலம்தான் நிரம்பியிருந்தது.
“ஹேய்! கங்கிராட்ஸ்” என்று உற்சாகத்தில் துள்ளிக் குதித்தவள் உணர்ச்சிப் பெருக்கில் அவனை அப்படியே இறுகக் கட்டிக்கொண்டாள்.
“எனக்குத் தெரியும். நீங்க கண்டிப்பா ஜெயிப்பீங்கனு எனக்குத் தெரியும். ஒன்ஸ் அகெய்ன் கங்கிராட்ஸ் எம்.எல்.ஏ சார்!” என்று அவனது நெஞ்சில் முகம் புதைத்துச் சொன்னாள்.

அரசியல்வாதியாக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் மாலை மரியாதைகளோடு கொண்டாடப்பட வேண்டிய ஒரு மாபெரும் வெற்றியை, யாருமற்ற மலைப்பாதையின் சிறிய டீக்கடையில், மழையின் சத்தத்தை மட்டுமே சாட்சியாக வைத்துத் தன் காதலியின் ஆலிங்கனத்தோடு அத்தனை அழகாகக் கொண்டாடிக்கொண்டிருந்தான் நேத்ரன்.
அந்தச் சூழலில் வெற்றியின் இனிமையும், மழையின் குளிரும், காதலின் வெம்மையும் சரிவிகிதத்தில் கலந்திருந்தன.
இப்படியே ஜென்மம் முழுவதும் அணைத்திருந்தால்கூட அவனுக்கு விருப்பம்தான்! பூங்கொத்து ஒன்றைக் கட்டியணைத்தாற்போல மென்மையும் சுகமுமாய் இதயமே மகிழ்ச்சியில் திளைத்த தருணம் அது!
வெற்றிக்களிப்போடு காதலியின் அணைப்பு கொடுத்த இதமும் இனிதே கலந்த அழகான பொழுது இனி அவனே நினைத்தாலும் ‘ரீ-க்ரியேட்’ செய்ய முடியாத ஒன்று என நேத்ரனுக்கும் தெரியும் என்பதால் அந்தத் தருணத்தில் ஆழ மட்டுமே அவனது மனம் விரும்பியது.
கொஞ்சம் தணிந்த மழை விடுவதாகத் தெரியவில்லை. மாறாக, இன்னும் அடர்த்தியாகப் பெய்யத் தொடங்கியிருந்தது.
அணைப்பிலிருந்தபடியே வெளியே கொட்டும் மழையைப் பார்த்துவிட்டு வெண்பாவிடம் திரும்பினான்.
“மழை நிக்கிற மாதிரி தெரியல. வண்டியில போகலாமா? இல்ல கொஞ்ச நேரம் இங்கயே வெயிட் பண்ணுவோமா?”
“எப்பவும் மழைக்காக ஒதுங்குறது என் வழக்கம் நேத்ரன். ஆனா இன்னைக்கு, இந்த மழையில நனைஞ்சுகிட்டே போகணும்னு தோணுது. உங்க வெற்றியை இந்த இயற்கையும் சேர்ந்து கொண்டாடுற மாதிரி இருக்கு. கிளம்பலாமா?” என்றாள் கண்களில் ஒருவிதப் போதை கலந்த உற்சாகத்தோடு.
அவளது இந்தத் துள்ளலான மறுபக்கம் நேத்ரனுக்குப் புதிது.
“யுவர் விஷ் இஸ் மை கமாண்ட், மை லேடி,” என்று தலைசரித்துப் புன்னகைத்தவன், பைக்கைக் கிளப்பினான்.
ராயல் என்ஃபீல்டின் இன்ஜின் உறும, மழையின் சத்தத்தைக் கிழித்துக்கொண்டு பைக் மீண்டும் மலைப்பாதையில் சீறியது.
வானமே கிழிந்து கொட்டுவது போன்ற பேய்மழை. ஊசியாக இறங்கும் மழைத்துளிகள் முகத்தில் பட்டாலும், அது வலியாகத் தெரியவில்லை. குளிர்க் காற்று உடலைத் துளைக்க, வெண்பா நேத்ரனின் பரந்த முதுகில் தன் முகத்தை முழுமையாகப் புதைத்துக்கொண்டாள். அவளது இரு கைகளும் அவனது வயிற்றைச் சுற்றி ஓர் இரும்பு வளையம்போல இறுகப் பின்னிக்கொண்டன.
அவளது உடலின் இதமான வெப்பம் அவனது முதுகில் அழுத்தமாகப் பதிய, நேத்ரனுக்கு அந்த மழையின் குளிரே தெரியவில்லை. ஒவ்வொரு முறை பைக் வளைவுகளில் திரும்பும்போதும், வெண்பாவின் பிடி இன்னும் இறுகியது. மழையின் பேரிரைச்சலையும், பைக்கின் இன்ஜின் சத்தத்தையும் தாண்டி, அவர்கள் இருவரின் இதயத் துடிப்பும் ஒரே தாளத்தில் லயித்திருந்தது.
பச்சை வர்ணம் பூசிய அந்த மலைப்பாதையில், மேகங்கள் இறங்கி வந்து சாலையை முத்தமிட்டுச் செல்லும் அந்தப் பனிமூட்டத்திற்குள், மழையோடு மழையாகக் கரைந்து பயணம் செய்துகொண்டிருந்தார்கள். அதிகாரத்தின் முதல் படிக்குச் சென்ற ஓர் இளம் அரசியல்வாதியும், அவனை முழுமையாக ஆட்கொண்ட ஆசிரியையும், காதலின் ஆகச்சிறந்த எல்லையைத் தேடி அந்த மழையில் தங்கள் பயணத்தை மிக அழகாகத் தொடர்ந்தார்கள்.
கேரளத்தின் அழகான மழைச்சாரலில் அவர்கள் இருவரும் நனைந்தபடி வந்துகொண்டிருக்க, நேத்ரனின் தேர்தல் அலுவலகம் ஒரு மாபெரும் திருவிழாக் கோலத்தைப் பூண்டிருந்தது.
முடிவுகள் முழுமையாக வெளியாகி, நேத்ரனின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மறுகணமே, அங்கே ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.
தன் அரசியல் சாம்ராஜ்யத்தின் வாரிசு, இன்று மக்கள் தீர்ப்பின் மூலம் வெற்றியடைந்ததை எண்ணி, ராஜவேலுவின் முகத்தில் பெருமிதம் பொங்கியது.
நேத்ரனின் வெற்றி மட்டுமில்லை. இம்முறையும் அவர் சார்ந்த கட்சி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி வெற்றிக்கனியை ருசித்தது அவரை இன்னும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ஒரு தந்தையாகவும், கட்சியின் மூத்த தலைவராகவும் அவரது கண்கள் ஆனந்தத்தில் கலங்கின. பத்தாயிரம் வாலா சரவெடிகள் அந்த ஊரின் சாலைகளைத் தொடர்ந்து அதிரவைத்தன. தொண்டர்களின் முழக்கம் அந்தப் பகுதியையே சிலிர்க்க வைத்துக்கொண்டிருந்தது.
நேத்ரனின் வலதுகரமாகச் செயல்படும் நிகிலனுக்கோ, இது தன் சொந்த வெற்றியைக் கொண்டாடுவது போன்றதொரு குதூகலம். தேர்தல் வேலைகளில் அல்லும் பகலும் நேத்ரனோடு சுழன்றவன் அவன். இப்போது, நேத்ரன் தன் சொந்தப் பணத்தில் ஸ்பான்சர் செய்து வளர்த்துவிட்ட ஸ்ரீவைகுண்டம் கபடிகுழு பையன்களோடு சேர்ந்து, ஒரு மினி ஆட்டோ நிறைய லட்டுகளையும், மைசூர்பாக்கையும் வைத்துக்கொண்டு, தெருத்தெருவாகப் போய் முகம் தெரிந்தவர், தெரியாதவர் என அனைவருக்கும் இனிப்புகளை அள்ளி வழங்கிக்கொண்டிருந்தான் நிகிலன்.
அந்தக் கபடிகுழுவின் பையன்களுக்கோ நேத்ரனின் வெற்றி, தாங்கள் தேசிய அளவில் ஜெயித்த கோப்பையை விடப் பலமடங்குப் பெரியதாகத் தெரிந்தது.
“எங்க அண்ணன் எம்.எல்.ஏ ஆயிட்டாருடா! இது நம்ம ஊருக்கான வெற்றி!” என நெஞ்சை நிமிர்த்தி அவர்கள் ஆனந்தக் கூச்சலிட்ட காட்சி, நேத்ரன் அந்த இளைஞர்கள் மீது எந்தப் பிரதிபலனும் பாராமல் விதைத்த அன்பின் அறுவடையாகவே அமைந்தது.
அதே நேரம், மகாராஜநகரில் உள்ள ராஜவிலாசம் மாளிகையோ களைகட்டியிருந்தது தேர்தல் வெற்றியால். வெற்றிச் செய்தியைக் கேட்டதிலிருந்து குந்தவையின் கால்கள் தரையிலேயே படவில்லை.
மாளிகையின் பெரிய ஹால் முழுவதும் சொந்தபந்தங்களும், கட்சிப் பிரமுகர்களும் நிரம்பி வழிய, பெரியம்மா அங்கயற்கண்ணியோ வருபவர்களுக்கெல்லாம் இன்முகத்தோடு குங்குமம் கொடுத்து, தட்டில் இனிப்புகளை வாரி வழங்கிக்கொண்டிருந்தார்.
ஒரு தாய்க்கு இதைவிடப் பெரிய கர்வம் என்ன இருக்க முடியும்? தன் மகன் வெறும் பணக்காரனாக மட்டும் இல்லாமல், மக்கள் நேசிக்கும் ஒரு தலைவனாகச் சிம்மாசனத்தில் ஏறிய அந்தத் தருணம், குந்தவையின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசத்தைக் கொடுத்திருந்தது. மகனின் வெற்றியை எண்ணி எண்ணி அவர் அகம் குளிர்ந்துபோயிருந்தார்.
அப்போதுதான் கல்லூரியிலிருந்து காரில் வந்திறங்கினாள் நிருபமா. தோளில் தொங்கிய பேக்கைச் சோபாவில் வீசிவிட்டு, காதில் ஒட்டியிருந்த மொபைலோடு உற்சாகமாகத் துள்ளியபடி ஹாலுக்குள் நுழைந்தாள்.
“ஹேய்… நான் சொன்னேன்ல? அண்ணன் கண்டிப்பா பெரிய மார்ஜின்ல ஜெயிப்பான்னு! சும்மா அதிரடி விக்டரிடி! இனிமே எம்.எல்.ஏவோட தங்கச்சினு கெத்தா காலர் தூக்கிவிட்டுட்டுப் போவேன்” என்று தன் கல்லூரித் தோழிகளிடம் பெருமையடித்துக்கொண்டிருந்தாள்.
அவளது குரலில் இருந்த அந்த இளமைத் துள்ளலும், அண்ணன் மீதான பாசமும் அந்தப் பெரிய வீட்டின் சந்தோஷத்தை இன்னும் பலமடங்காகக் கூட்டியது.
அந்த ஆரவாரங்களுக்கு நடுவே குந்தவையின் அலைபேசி திரையில் ‘புகழேந்தி’ என்ற பெயர் மின்னியது. தேனிலவுக்காக நியூசிலாந்துக்குச் சென்றிருந்த புகழேந்தியும் துர்காவும், அங்கிருந்தபடியே காணொளி அழைப்பில் வந்தனர். பின்னணியில் தூய வெண்பனி கொட்டிக்கொண்டிருக்க, இருவரின் முகத்திலும் உறைபனியையும் தாண்டிய உற்சாகம் ததும்பியது.
“அத்தை! கங்கிராட்ஸ்! புகழ் காலையில இருந்து எலக்சன் அப்டேட்ஸை நெட்ல பாத்துக்கிட்டே இருந்தாரு. நேத்ரன் இவ்வளவு பெரிய மார்ஜின்ல ஜெயிச்சது எங்களுக்கு அவ்ளோ சந்தோஷம் அத்தை,” என்றாள் துர்கா உற்சாகமாய்.
“ஆமாம்மா! அவன் பெரிய ஆளாயிட்டான். பேசலாம்னு நாலு தடவை ட்ரை பண்ணேன், போன் நாட் ரீச்சபிள்னு வருது. எங்கயோ பிஸியா இருக்கான் போலயே?” என்றான் புகழேந்தி.
“அவன் எந்தப் பக்கம் சுத்திட்டு இருக்கான்னு தெரியல புகழ். வெற்றிக் களிப்புல இருப்பான், வந்ததும் கண்டிப்பா உனக்குப் பேசச் சொல்றேன்,” எனச் சிரித்தபடியே மகனின் காதலை மறைமுகமாக ரசித்தார் குந்தவை. அவனுக்கு இப்போது எதில் பிஸி, எங்கே சென்றிருக்கிறான் என்ற ரகசியம் அவருக்கு மட்டுமே தெரிந்த தவிப்பு கலந்த சந்தோஷமாக இருந்தது.
இந்தக் கொண்டாட்ட மனநிலை ராஜவிலாசத்தில் மட்டுமல்ல, வெண்பாவின் வீட்டிலும் முழுமையாகப் பரவியிருந்தது. தொலைக்காட்சியில் நேத்ரனின் வெற்றிச் செய்தியையும், ராஜவேலுவின் பேட்டியையும் பார்த்துக்கொண்டிருந்த வெண்பாவின் பெற்றோருக்கு, தங்களின் வருங்கால மருமகன் இவ்வளவு பெரிய ஆளுமையாக உயர்ந்து நிற்பதைப் பார்த்து நெஞ்சடைக்கும் பெருமையாக இருந்தது.
எந்தப் பந்தாவும் இல்லாமல் தங்களுடன் இயல்பாகப் பேசிச் சிரித்த அந்த இளைஞன் இன்று ஒரு தொகுதியையே தன் வசப்படுத்தியிருக்கிறான் என்ற பிரமிப்பு அவர்களுக்குள் ஆழமாக வேரூன்றியது. ஆரம்பத்தில் இருந்த அந்தப் ‘பெரிய இடத்துச் சம்பந்தம்’ என்ற பயம் முழுவதுமாக விலகி, ‘இவன் நம் வீட்டுப் பிள்ளை’ என்ற நேசம் அங்கே அரசோச்சத் தொடங்கியிருந்தது.
ஹாலில் ஓடிக்கொண்டிருந்த செய்திச் சேனலைப் பார்த்த எழிலனுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. அப்போதுதான் ‘உமையாள் ஸ்டோரிலிருந்து’ மதியவுணவுக்காக வீட்டுக்கு வந்திருந்தான். இச்செய்தியைப் பார்த்ததும் சோபாவில் ஏறிநின்று குதிக்கும் அளவுக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ள, சமையலறையை நோக்கிக் குரல் கொடுத்தான்.
“ஹேமா! இங்க வா! சீக்கிரம் வந்து டிவியைப் பாரு. நேத்ரன் மாப்பிள்ளை ஜெயிச்சுட்டார்டி! அதுவும் எவ்ளோ ஓட்டு லீடிங் தெரியுமா?”
அவசரமாக வெளியே வந்த ஹேமா, டிவி திரையைப் பார்த்துவிட்டு முகம் மலர்ந்தாள்.
“நான் அப்பவே சொல்லல? அவர் ஈஸியா ஜெயிச்சிடுவார்னு. இனிமே என்ன, உங்க தங்கச்சி எம்.எல்.ஏ பொண்டாட்டியாகப் போறா. சந்தோஷமா மிஸ்டர் எழில்?” என்று கணவனைப் பார்த்துக் கண்ணடித்தாள்.
“பின்ன இருக்காதா? எனக்கு அவ்ளோ பெருமையா இருக்கு ஹேமா.”
“சரி, எலக்சன் ஃபீவர் ஒருவழியா முடிஞ்சுது. அடுத்து நம்ம வீட்ல கல்யாண வேலைகளை ஆரம்பிக்க வேண்டியதுதானே?” என்றாள் ஹேமா.
“அப்பா அதுக்குள்ள ஒரு லிஸ்ட்டே போட்டு வச்சிருப்பார். துர்கா கல்யாணத்துலயே பேசி முடிச்சதுதானே! இனிமே எல்லாமே தடபுடல்தான். எம்.எல்.ஏ கல்யாணம்னா சும்மாவா? நெல்லையே அதிரப்போகுது பாரு!” என்று சிரித்தவனின் முகத்தில் மெல்லிய நெகிழ்ச்சி.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


