என் கண்கள் தவிக்கும் அலைகள் என்றால், அவற்றை ஈர்க்கும் முழுநிலவு நீ. மீறவே முடியாத இந்த வசீகர ஈர்ப்பை யாரிடமிருந்து கடனாகப் பெற்றாய்?
-நேத்ரன்
நாட்கள் சிறகு கட்டிப் பறந்தன. வெண்பாவின் விரல்கள் வெளிர் நீல நிற நூலோடு சேர்ந்து, நேத்ரனின் நினைவுகளையும் சேர்த்து அழகாகப் பின்னிக்கொண்டிருந்தன. அவளது ஓய்வு நேரங்களில் உருவான அந்த அழகான கார்டிகன் ஆகாஷின் அளவிற்குக் கச்சிதமாக முற்றுப்பெற்றிருந்தது. இடையிடையே நேத்ரனிடம் என நினைத்தாலும், தேர்தல் காய்ச்சல் அவனை முழுமையாகச் சுருட்டிப் போட்டிருந்தது.
இருவருக்கும் இடையிலான பேச்சுகள் எல்லாம் பயணங்களுக்கு நடுவே காற்றில் பறந்து வரும் ஒற்றை முத்தத்திலோ, அல்லது இரவில் அசதியில் உறங்கும் முன் அனுப்பும் ‘குட் நைட், லவ் யூ’ என்ற குறுஞ்செய்தியிலோ சுருங்கிப் போயிருந்தது. அவனது அலைச்சலை உணர்ந்தவளாக, வெண்பாவும் அவனுக்குத் தொந்தரவு கொடுக்காமல் தன் பள்ளி வேலைகளில் கவனம் செலுத்தினாள்.
ஒருவழியாகத் தேர்தல் நாளும் வந்தது. ஊரெங்கும் திருவிழா போன்றதொரு பரபரப்பு. வெண்பா தன் குடும்பத்தோடு ரங்கநல்லூரில் உள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்குச் சென்றாள். வெயிலின் தாக்கம் ஏறுவதற்கு முன்பே ஓட்டுப் போட்டுவிடலாம் எனச் சென்றவர்களுக்குக் காத்திருந்தது பெரிய வரிசை.
சுமார் ஒரு மணிநேரக் காத்திருப்பிற்குப் பின், தன் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு, இடது கை ஆள்காட்டி விரலில் மைத்தழும்போடு வெளியே வந்தாள் வெண்பா. காரில் ஏறி அமர்ந்த மறுகணமே அவளது மொபைல் சிணுங்கியது. திரையில் ‘நேத்ரன்’ என்ற பெயர் மின்ன, இதழ்களில் மலர்ந்த புன்னகையோடு அழைப்பை ஏற்றாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“சொல்லுங்க வேட்பாளரே! என்ன, இந்த நேரத்துல கூப்பிட்டுருக்கீங்க? பிஸியா இருப்பீங்கனு நினைச்சேன்,” என்றாள் குறும்பாக.
மறுமுனையில் அவனது கம்பீரமானக் குரலில் ஒரு சின்னச் சிரிப்பு எட்டிப்பார்த்தது.
“நான் எவ்ளோ பிஸியா இருந்தாலும், எனக்கு ஓட்டுப் போட்ட என் ஸ்பெஷல் வாக்காளருக்கு நன்றி சொல்ல வேண்டாமா? அதான் கூப்பிட்டேன். ஓட்டுப் போட்டியா டீச்சரம்மா?”
“போட்டாச்சு! கையில மையோடதான் கார்ல உக்காந்துருக்கேன்.”
“வெரிகுட்! ஆமா, கரெக்டா என் சின்னத்துலதானே குத்துன? இல்லை உங்க வீட்டுல உள்ளவங்க பேச்சைக் கேட்டு வேற யாருக்காவது ஓட்டுப் போட்டுட்டியா?” என்று அவன் சந்தேகமாகக் கேட்பது போல் பாவனை செய்தான்.
வெண்பா சத்தமாகச் சிரித்தாள்.
“அதெப்பிடிச் சொல்ல முடியும்? ஓட்டுங்கிறது ரகசியக் காப்புப் பிரமாணம் மாதிரி நேத்ரன். யாருக்குப் போட்டேன்னு வெளிய சொல்லக் கூடாதுனு எலக்சன் கமிஷன் ரூல்ஸ் இருக்கு. மறுபடி மறுபடி ரூல்ஸை மீறுனா என்ன அர்த்தம்?”
“அடிப்பாவி! எனக்கே ரூல்ஸ் பேசுறியா? நான் உன் வருங்காலப் புருஷண்டி. என்கிட்டயே சீக்ரெட்டா?”
“வருங்காலப் புருஷனா இருந்தாலும், வாக்குச்சாவடிக்குள்ள நான் ஒரு தனிப்பட்ட வாக்காளர். என் மனசாட்சிப்படி, இந்தத் தொகுதிக்கு யார் நல்லபடியா வேலை செய்வாங்களோ, எந்த வேட்பாளர் நேர்மையானவரோ அவருக்குத்தான் என் ஓட்டை போட்டிருக்கேன்.”
“அப்ப கண்டிப்பா எனக்குத்தான் போட்டிருப்ப. ஏன்னா, என்னை விட உன்னையும் இந்தத் தொகுதியையும் நேசிக்கிறவன் வேற எவனும் இல்லை,”
அவன் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல, மறுமுனையில் பேசிக்கொண்டிருந்த வெண்பாவின் கன்னங்களில் ஸ்ட்ராபெர்ரிக்கள் முளைத்தன.
“ரொம்பத்தான் கான்ஃபிடன்ஸ் உங்களுக்கு! பாக்கலாம்… ரிசல்ட் வர்ற அன்னைக்குத் தெரியும், இந்த டீச்சரம்மாவோட ஓட்டு யாருக்குனு,” என்று அவள் மேலும் சீண்டினாள்.
“எனக்கு ரிசல்ட் பத்தியெல்லாம் கவலையே இல்லை வெண்பா. எனக்குத் தேவையான ஆகப்பெரிய வெற்றி, அன்னைக்கு நெல்லையப்பர் கோவில்லேயே கிடைச்சுடுச்சு. நீ என் பொண்டாட்டியாகச் சம்மதிச்ச அந்த நொடியிலயே நான் ஜெயிச்சுட்டேன். மத்ததெல்லாம் வெறும் போனஸ்தான்,” என்று அவன் ஆழமான நம்பிக்கையோடு.
அந்தக் குரலில் இருந்த காதலின் அடர்த்தி வெண்பாவை என்னவோ செய்தது. வெட்கத்தின் அதீதமாய், மனநிறைவின் பூரணத்துவமாய், குரல் நாண்கள் ஒத்துழைப்பு நல்காமல் போனதன் அறிகுறியாய் அவளிடம் மௌனமாய் ஒரு யுத்தத்தின் சாயல்!
“என்னாச்சு டீச்சரம்மா? வெறும் நேத்ரன் வேண்டாமா உங்களுக்கு? எம்.எல்.ஏ நேத்ரன் தான் வேணுமா? பதிலையே காணுமே?” சீண்டி சீண்டி அவளை வாய் திறக்க வைத்தான் நேத்ரன்.
“நான் விரும்புறது நேத்ரனை மட்டும்தான். இந்த எம்.எல்.ஏ லொட்டு லொசுக்கு எல்லாம் எனக்குத் தேவையில்லாத ஆணி” என்று நிமிர்வாய் சொன்னவள் அவனது மனம் நெகிழ்ந்து போனதன் அறிகுறியாய் வந்த பெருமூச்சை வைத்தே தனது எண்ணமே அவனது எண்ணமும் என்பதைப் புரிந்துகொண்டாள்.
“ஐயோ! நீ தங்கப்பொண்ணு டீச்சரம்மா! நீ மட்டும் எதிர்ல இருந்தனா அப்பிடியே கையில தூக்கி உன்னைச் சுத்திருப்பேன்”
“சரி சரி, ரொம்ப ஐஸ் வைக்க வேண்டாம். சாப்பிட்டீங்களா? வாய்ஸ் ரொம்ப டயர்டா இருக்கு,” என அக்கறையாக விசாரித்தாள்.
“இன்னும் இல்லம்மா. பூத் விசிட் போயிட்டு இருக்கேன். மதியம் சாப்பிடுவேன். நீ வீட்டுக்குப் போய்ப் பத்திரமா இரு. சாயங்காலம் ஃப்ரீ ஆனதும் கூப்பிடுறேன்,” என்று நேத்ரன் விடைபெற, வெண்பாவின் மனம் முழுதும் அவனது குரலின் அதிர்வுகளே நிறைந்திருந்தன.
நாட்கள் மீண்டும் தம் பயணத்தைத் தொடர்ந்தன. தேர்தல் முடிந்து, முடிவுகளுக்காகக் காத்திருக்கும் அந்த இடைவெளியில்தான் புகழேந்தி – துர்காவின் திருமண நாள் வந்தது.
அவர்களது நிச்சயதார்த்தம் நடந்த அதே திருநெல்வேலி – மதுரை நெடுஞ்சாலையில் உள்ள ‘அமோகா பேலஸ்’ மண்டபத்தில்தான் திருமணமும் ஏற்பாடாகி இருந்தது. ஆனால், நிச்சயதார்த்தத்தில் இருந்த அந்த ட்ரெண்டியான, அமைதியான சூழல் இப்போது இல்லை. இது ஒரு முன்னாள் அமைச்சரின், பெரும் தொழிலதிபரின் வீட்டு வாரிசுக்கு நடக்கும் திருமணம். அதிகாரமும், செல்வமும், செல்வாக்கும் கைகோர்த்துச் சுழலும் ஒரு பிரம்மாண்டமான திருவிழாவாக அந்த மண்டபம் மாறியிருந்தது.
நெடுஞ்சாலையிலிருந்து மண்டபம் வரை இருபுறமும் பிரம்மாண்டமான வரவேற்பு வளைவுகள். மண்டபத்தின் முகப்பே ஒரு சோழர் காலத்து அரண்மனை போல வடிவமைக்கப்பட்டிருந்தது. பல ஆயிரம் வெளிநாட்டு மலர்கள், டன் கணக்கில் பெங்களூரு ரோஜாக்கள், சாமந்திப் பூக்கள் என அந்த இடமே ஒரு மலர் வனமாகக் காட்சியளித்தது.
வாகன நிறுத்துமிடத்தில் சிவப்புச் சுழல் விளக்குகள் பொருத்திய அமைச்சர்களின் கார்கள், எதிர்க்கட்சித் தலைவர்களின் வாகனங்கள், திரையுலகப் பிரபலங்களின் சொகுசுக் கார்கள் எனத் தமிழகத்தின் வி.ஐ.பி-க்கள் அனைவரும் அங்குத் திரண்டிருந்தனர். பட்டு வேட்டி சட்டைகளிலும், வைர நகைகள் மின்னும் காஞ்சிவரப் பட்டுப் புடவைகளிலும் உறவினர்களும், விருந்தினர்களும் மண்டபத்தை நிறைத்திருந்தனர்.
நாதஸ்வரமும், தவில் ஓசையும் காற்றில் மங்களகரமாக ஒலித்துக்கொண்டிருக்க, மேடையில் ஒரு இளவரசனைப் போலப் பட்டு வேட்டி, பட்டுச் சட்டையில் அமர்ந்திருந்தான் புகழேந்தி. அவனருகில், அடர் அரக்கு நிற முகூர்த்தப் பட்டுப் புடவையில், கழுத்து நிறையப் பாரம்பரியமான அன்னப்பட்சி டிசைன் கொண்ட ஆன்டிக் மாடல் தங்க நகைகள், நெற்றிச்சுட்டி, வங்கி என ஒரு மகாலட்சுமியைப் போல நாணத்துடன் அமர்ந்திருந்தாள் துர்கா.
மண்டபத்தின் முன்வரிசையில், தனக்கு வந்திருந்த முக்கியப் பிரமுகர்களை வரவேற்று, அவர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தான் நேத்ரன். அரசியல்வாதிகளுக்கே உரிய மிடுக்குடன் தூய வெள்ளைப் பட்டுச் சட்டையும், வேட்டியும் அணிந்து, கம்பீரமாக நின்றிருந்தான். கையில் வெள்ளி காப்புக்குப் பதிலாக சின்னதாய் தங்க காப்பும், கழுத்தில் தங்க செயினும் மின்னியது.
அப்போதுதான் வெண்பா அவனிருக்கும் இடத்தை அடைந்தாள். அடர் பச்சை நிறத்தில் மெல்லிய தங்க ஜரிகை ஓடிய தூய காஞ்சிவரப் பட்டுப் புடவையில் அவள் வந்துகொண்டிருந்தாள். அடர்ந்த நீளமானக் கூந்தலை நேர்த்தியாகப் பின்னி, அதில் அடர்த்தியாகத் தொடுக்கப்பட்ட மல்லிகைச் சரம் வைத்திருந்தாள். கழுத்தில் ஒரு சிறிய ஆனால் கெட்டியான ஆரம், காதுகளில் குடை ஜிமிக்கி, நெற்றியில் அளவான பொட்டுடன் மேக்கப் ஆர்டிஸ்டின் கைவண்ணத்தால் அவளது இயல்பான நிறத்திற்கும், அந்தப் புடவையின் நிறத்திற்கும் ஒரு வசீகரக் கவிதையாகவே தெரிந்தாள்.
முக்கியப் பிரமுகர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த நேத்ரனின் விழிகள், தற்செயலாக நுழைவாயில் பக்கம் திரும்பியபோது, அப்படியே உறைந்துபோயின. எத்தனையோ அழகான பெண்களை, திரை நட்சத்திரங்களை அந்த மண்டபத்தில் அவன் பார்த்திருந்தாலும், வெண்பாவைப் பார்த்த அந்த நொடியில் அவனுக்கு உலகமே ப்ளர் மோடுக்குச் சென்று, அவள் மட்டுமே வெளிச்சமாகத் தெரிந்தாள்.
‘எந்தப் பழக்கத்திற்கும் அடிபணியாதவன், இன்று உன் கண்களின் போதையில் என்னை முழுதாய் இழந்துவிட்டேன்’ என்று அவன் மனம் தனக்குத்தானே சொல்லிக்கொண்டது.
அவளைப் பார்த்த கணமே பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு, அவளை நோக்கியே காந்தம் கண்ட இரும்பாக அவனது கால்கள் நடக்கத் தொடங்கின. வெண்பாவும் அவனைக் கவனித்துவிட்டாள். கூட்டத்திற்கு நடுவே அவன் அத்தனை மிடுக்காகத் தன்னை நோக்கி வருவதைப் பார்க்கப் பார்க்க, அவளது இதயம் வழக்கத்தை விட வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.
அவளருகே வந்தவன், அவளைத் தன் விழிகளால் ஆழமாக வருடினான்.

“இந்தக் கலர் உனக்கு ரொம்பப் பொருத்தம் வெண்பா. டீச்சரம்மா, இன்னைக்கு என்னைக் கொல்லுறதுனு முடிவோடதான் வந்திருக்க போல,” என்று அவளது காதருகே குனிந்து மிக மெல்லிய குரலில், மற்றவர்களுக்குக் கேட்காதவாறு ரகசியமாகக் கிசுகிசுத்தான்.
“கல்யாண மண்டபத்துல எல்லாரும் இருக்காங்க. கொஞ்சம் தள்ளி நில்லுங்க,” என்று அவள் வெட்கத்தோடு தன் பார்வையைத் தாழ்த்திக்கொண்டாலும், அவளது இதழ்களில் அந்த ரசனையான புன்னகை ஒட்டிக்கொண்டது.
“எல்லாரும் இருந்தா என்ன? என் பொண்டாட்டிய நான் ரசிக்குறேன்,” என்று அவன் கண்களைச் சிமிட்ட, வெண்பாவுக்கு முகம் செம்பருத்தியாகச் சிவந்துபோனது.
முகூர்த்த நேரம் நெருங்க, வேத மந்திரங்கள் முழங்க, கெட்டிமேளம் ஒலிக்க, புகழேந்தி துர்காவின் கழுத்தில் திருமாங்கல்யத்தைக் கட்டினான். மலர்கள் மழையாகப் பொழிய, இரு குடும்பத்தாரும் அந்தப் புதிய தம்பதிகளை வாழ்த்தினர். வெண்பாவும் நேத்ரனும் ஒன்றாக நின்றபடி, மலர்களைத் தூவி அவர்களை ஆசீர்வதித்தனர். அப்போது நேத்ரனின் விரல்கள் தற்செயலாகப் படுவது போல வெண்பாவின் விரல்களை உரச, அவள் சிலிர்த்துப் போய் அவனைப் பார்த்தாள். அவனோ எதுவும் நடவாதது போல மேடையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
இப்படியே சின்ன குறும்பும், செல்லத் தீண்டலுமாய் மாலை நேர வரவேற்பு நிகழ்ச்சியும் வந்தது.
அரசியல் பரபரப்புகளும், பெரிய கூட்டமும் சற்று ஓய்ந்திருந்தது. இரு குடும்பத்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே மண்டபத்தில் இருந்தனர். மேடையின் கீழே போடப்பட்டிருந்த சோஃபாக்களில் ராஜவேலு, குந்தவை, அங்கயற்கண்ணி மற்றும் வெண்பாவின் பெற்றோர் என அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
நேத்ரனும் வெண்பாவும் சற்றுத் தள்ளி நின்று சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.
“நேத்ரன்! இதுதான் சரியான நேரம்னு நினைக்கிறேன். நம்ம முடிவை வீட்டுல சொல்லிடலாமா?” என்று வெண்பா தயக்கத்தோடு கேட்டாள்.
“நான் எப்பவோ ரெடி டீச்சரம்மா! நீங்க ஓகேனா, இப்பவே போய்ப் பேசுறேன்,” என்றவன், சற்றும் தாமதிக்காமல் அவளையும் அழைத்துக்கொண்டு பெரியவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்றான்.
அவர்கள் இருவரும் ஒன்றாக வருவதைப் பார்த்த பெரியவர்களின் பேச்சுக் குரல் அடங்கியது. குந்தவைக்கு ஏற்கனவே விஷயம் தெரியும் என்பதால், அவர் முகத்தில் ஒரு நமட்டுச் சிரிப்பு ஓடியது.
“அப்பா… அம்மா…” என்று கம்பீரமாக ஆரம்பித்தான் நேத்ரன். அனைவரின் பார்வையும் அவன் மீது குவிந்தது. வெண்பா லேசான பதற்றத்துடன் தன் புடவைத் தலைப்பை விரல்களால் முறுக்கிக்கொண்டிருந்தாள்.
“புகழ் கல்யாணம் ரொம்பச் சிறப்பா முடிஞ்சுது. அடுத்து… எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சா நல்லா இருக்கும்னு நாங்க நினைக்கிறோம்,” என்று எந்தவிதச் சுற்றிவளைத்தலும் இல்லாமல், மரியாதையான குரலில் தன் விருப்பத்தைச் சொன்னான் நேத்ரன்.
அந்த வார்த்தைகளின் கனத்தால்ஒரு கணம் அங்கு நிசப்தம் நிலவியது. வெண்பாவின் பெற்றோர் சற்றுத் திகைத்து நேத்ரனையும், தங்கள் மகளையும் பார்த்தனர். ராஜவேலுவின் முகத்தில் ஒரு பெரிய ஆச்சரியம், பின் அதுவே மலர்ச்சியாக மாறியது.
குந்தவை சத்தமாகச் சிரித்துவிட்டு, “அப்பாடா! எப்ப சொல்லுவிங்கனு காத்துக்கிட்டு இருந்தேன். தேர்தல், மாநாடுனு அலைஞ்சிட்டிருந்தவன் இன்னைக்கு என் மருமக கிட்ட சரணாகதி அடைஞ்சிட்டான். நிம்மதி!,” என்று கிண்டலாகச் சொல்ல, அங்கிருந்த இறுக்கம் சட்டென உடைந்து எல்லோரும் சிரிக்கத் தொடங்கினர்.
வெண்பாவின் அப்பா செண்பகராமன் மெல்ல எழுந்தார்.
“தம்பி! எங்களுக்குப் பெரிய இடத்துச் சம்பந்தம் பண்ணுறோம்ங்கிற பயம் இருந்துச்சு. ஆனா, வெண்பாவை நீங்க எவ்வளவு தூரம் புரிஞ்சு வச்சிருக்கீங்கனு நான் கண்கூடாப் பார்த்திருக்கேன். என் பொண்ணுக்கு உங்களை விடச் சிறந்த துணை கிடைக்காது,” என்று தழுதழுத்த குரலில் சம்மதம் தெரிவித்தார்.
எழிலனும் ஹேமாவும் செண்பகராமனின் முடிவுக்குத் தலைவணங்கி நின்றார்கள். மனோன்மணிக்கோ தங்கை மகளும் தன் மகளும் ஒரே வீட்டில் வாழப்போகும் நிம்மதியில் உள்ளம் உவகையில் ஆழ்ந்துபோனது.
ராஜவேலுவின் மூத்தமகளான புவனாவுக்கோ எக்கச்சக்க மகிழ்ச்சி! தனது புத்திரி மதுஸ்ரீயிடம் வெண்பாவைக் காட்டி “இனிமே இவங்க உனக்கு சின்னத்தை” என்று சொல்ல குழந்தையும் முத்துப்பற்களைக் காட்டி புன்னகைத்தது ஆகாஷை நோக்கி.
“அவங்க எனக்குத்தான் முதல்ல அத்தை” என அவன் வெண்பாவை உரிமை கொண்டாடியது தனிக்கதை.
ராஜவேலு நேத்ரனின் தோளைத் தட்டிக்கொடுத்தார்.
“எலக்ஷன் ரிசல்ட் வர்றதுக்கு முன்னாடியே என் பையன் பெரிய வெற்றியை அடைஞ்சுட்டான். ரெண்டு குடும்பத்தோட மனசையும் நிறைய வைக்குற சம்பந்தம் இது,” என்று மகிழ்ச்சியோடு கூறினார்.
மார்த்தாண்டனும் குந்தவையும் செண்பகராமன் உமையாளோடு திருமணம் முடிவானதன் அடையாளமாய் ஒப்பு தாம்பளம் மாற்றிக்கொண்டார்கள் அங்கேயே.
அனைவரின் ஆசீர்வாதங்களும், வாழ்த்துகளும் அந்த இடத்தையே ஒரு சிறிய சொர்க்கமாக மாற்றியது. பெரியவர்கள் தங்களுக்குள் அடுத்தகட்டப் பேச்சுகளைத் தொடங்க, நேத்ரன் வெண்பாவை நோக்கித் திரும்பினான்.
அவளது கண்கள் சந்தோஷத்தில் லேசாகக் கலங்கியிருந்தன. அந்தப் பிரம்மாண்டமான அலங்கார விளக்குகளின் ஒளியில், அவளது முகம் நிறைவான அழகும் முழுமையான பிரகாசமும் கலந்து ஆழ்கடல் முத்து போல ஜொலித்தது.
நேத்ரன் கழுத்தைச் சுற்றி தாலி கட்டி மூன்று முடிச்சிடுவது போல சைகை செய்ய வெண்பாவின் முகத்திலோ நாணம் நாணேற்றி கொடிநாட்டியது செந்தூரமாய்!
பதிலுக்கு அவள் இரு கரங்களையும் இதய வடிவில் குவித்து அவனை நோக்கிக் காட்டிப் புன்னகைத்தாள். ஏதோ நேத்ரனின் இதயத்தையே அவள் தனது உள்ளங்கையில் பொதிந்திருப்பது போல ஒரு மாயை அவனுக்கு.
இருவரும் கண்களாலும் சைகையாலும் பேசிக்கொண்ட காதல்மொழியில் மொத்த திருமண மண்டபத்திலும் நேசத்தின் சாரலைத் தூவிச் சென்றது கியூபிட்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


