“நான் ஏன் இப்பிடி இருக்கேன்? என் கூட எமோஷனல் பாண்டிங்கை உருவாக்க விரும்பாத ஒரு நபர் என் கையைப் பிடிச்சதும் சட்டுனு இன்னொரு உலகத்துக்குள்ள நுழைஞ்ச மாதிரி எனக்குள்ள ஒரு ஃபீல். ஏதோ ஒரு இனம்புரியாத பதற்றம் எனக்குள்ள, ஆனா கொஞ்சம் ஸ்வீட்டான பதற்றம். அவரோட செய்கையில ரொம்பவும் உரிமை எடுத்துக்காத, ஆனா உரிமையோட இருக்கிற ஒரு பந்தத்துக்கான அடையாளத்தை என்னால புரிஞ்சிக்க முடிஞ்சுது! எங்க என்னை அறியாம எனக்குள்ள ஏதோ ஒன்னு நடந்துடுமோனு சின்னதா ஒரு குழப்பம். தயக்கமும் கூட. நான் விரும்பாத ஒருத்தர் மேல, என்னைய அறியாம உண்டாகுற ஒரு காதல் ஆரம்பமோன்னு நினைக்கப் பயமா இருக்கு!
-மிருணாளினி
“மிருணா! இந்த விளக்கை ஏத்துமா. கர்ணா! பால் இருக்குற பித்தளை பானையை எடுத்துட்டு வந்து சாமி முன்னாடி வை”
சுவரோடு பதிக்கப்பட்ட மரக்கதவுகள் கொண்ட கொஞ்சம் மீடியம் சைஸ் பூஜையறையில் முருகன், வினாயகர், பெருமாள், அம்பாள் படங்களுடன் நெல்லையப்பரும் அமர்ந்திருந்தார். குலதெய்வமான களக்கோடி சாஸ்தாவின் திருவுருவப்படமும் மலர் மாலை அலங்காரத்துடன் ஜொலித்துக்கொண்டிருந்தது. ஊதுவத்தி, சாம்பிராணியின் மணம் கமழ்ந்து கொண்டிருக்க மிருணாளினி அங்கே வைக்கப்பட்டிருந்த காமாட்சி விளக்கை ஏற்றினாள். கர்ணன் பித்தளை உருளியில் சற்று முன்னர் மிருணாளினி காய்ச்சிய பாலைக் கொண்டு வந்து அங்கே வைக்க கற்பூர ஆரத்தியுடன் பூஜை இனிதே நிறைவுற்றது.

“ரெண்டு பேரும் பக்கத்து ஃப்ளாட் காரங்களுக்குப் பாலைக் குடுத்துட்டு வாங்க. அக்கம் பக்கத்து ஆளுங்க கிட்ட பேசி பழக இதுதான் சான்ஸ்” என்றபடி சிறிய டப்பர்வேர் கொள்கலன்களில் பாலை ஊற்றிக் கொடுத்தார் எழிலரசி.
கர்ணன் அங்கே யாரிடமும் பழகியதில்லை. இது போல கேட்டட் கம்யூனிட்டிகளில் வீட்டின் உரிமையாளர்கள் சந்திப்பதற்கு அனேகச் சந்தர்ப்பங்கள் வாய்க்கும்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
கம்யூனிட்டியின் ஜிம், நீச்சல் குளம், பார்க், க்ளப் ஹவுசில் ஓரிருவரை அவனும் சந்தித்திருக்கிறான். ஆனால் வெளியாட்களுடன் அத்துணை சுலபத்தில் பழகுவது அவனது இயல்பு இல்லை என்பதால் ஒதுங்கியே போய்விடுவான்.
இப்போது பால் கொண்டு போய் கொடுப்பதிலும் அவனுக்குப் பெரிதாக உடன்பாடில்லை. ஆனால் அவனது அன்னை சொல்வதைக் கேட்கவேண்டுமே!
வேறு வழியின்றி மிருணாளினியோடு சேர்ந்து கிளம்பினான்.
அவர்களுக்கு அடுத்த ஃப்ளாட் நானூற்று மூன்று!
வெளியே அந்த வீட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்கள் பெயர்ப்பலகையில் இருந்தன. மிருணாளினியின் கண்கள் அனிச்சையாக அவர்களது ஃப்ளாட்டான நானூற்று இரண்டின் பக்கம் தாவின.
பெயர்ப்பலகையோ இந்த வீட்டின் முன்னே அழகுக்காக வைக்கப்பட்டிருக்கும் செடி வகைகள் போல எதுவும் இல்லாமல் வெறுமையாக இருந்தது.
“ப்ளாண்ட்ஸ் எல்லாம் வாங்கி வைக்கணும்” என அவள் மனதில் குறித்துக்கொண்டபோதே கதவு திறந்தது.
அறுபது வயது நபர் ஒருவர் முகமலர்ச்சியுடன் “அட! நீங்களா? வாங்க வாங்க” என்று கர்ணனை வீட்டுக்குள் வரவேற்றார்.
“க்ளப் ஹவுஸ்ல உங்களைப் பாத்திருக்கேன். நீங்க யார் கிட்டவும் பேசுனதைக் கவனிச்சதில்ல” என்றவர் மிருணாளினியிடம் பார்வையைத் திருப்பியதும்
“என் ஒய்ப்! மிருணாளினி! இப்ப தான் வீட்டுல பால் காய்ச்சுனோம். அம்மா குடுத்துட்டு வரச் சொன்னாங்க” என்றான் கர்ணன்.
“ஓஹ்! வாழ்த்துகள்.” என்றவர் “லட்சுமி! இங்க வாம்மா! பக்கத்து ஃப்ளாட் கர்ணனும் அவரோட ஒய்பும் வந்திருக்காங்க” என்றார்.
அவரது மனைவியும் வர மிருணாளினி பால் இருந்த டப்பர்வேரை அவரிடம் கொடுத்தாள்.
“உக்காருங்க! காபி எடுத்துட்டு வர்றேன்” என்று அந்தப் பெண்மணி சொல்ல
“காலையிலயே குடிச்சாச்சு ஆன்ட்டி” என்றாள் மிருணாளினி.
‘ஆன்ட்டியா? அதற்குள் பழகியவளைப் போல பேசுகிறாளே!’
திகைப்பைத் தனக்குள் அடக்கிக்கொண்டான் கர்ணன்.
“அட புதுப்பொண்ணை வெறும் வயித்தோட அனுப்ப முடியாதுல்ல” என்றவர் திரும்பி வந்த போது அவர் கையில் சிறிய கிண்ணங்களில் அசோகா அல்வா இருந்தது.
“இவருக்கு அசோகா அல்வானா உயிர். அடிக்கடி பண்ணுவேன்.” என்றவர் மிருணாளினியிடம் கொடுக்க அவளும் வாங்கிக்கொண்டாள்.
பின்னர் படிப்பு, சொந்த ஊர் பற்றிய விவரங்களைப் பேச்சினூடே விசாரித்தார்கள் லட்சுமியும் அவரது கணவர் நாராயணனும்.
மிருணாளினியும் பதில் சொன்னபடியே அல்வாவை விழுங்கினாள்.
“ஜாப் எல்லாம் செட் ஆகிடுச்சாம்மா?”

“ஜூன்ல இருந்து ஜாயின் பண்ணனும் அங்கிள். இங்க பக்கத்துலதான்! ஒலிம்பியா டெக் பார்க்ல”
“ஓஹ்! என் தங்கச்சி மகன் எங்களோட தங்கியிருக்கான். அவனும் அங்க தான் ஒர்க் பண்ணுறான். டவர் டூல அவனோட கம்பெனி இருக்கு”
“நான் இண்டர்ன்சிப் பண்ணப் போற ஜே.பி.எம் டெக்னாலஜி டவர் த்ரீ ஆன்ட்டி”
“இப்பவே எல்லா டீடெய்லும் கலெக்ட் பண்ணிட்ட போல”
“முதல் நாள் அங்க போனதும் திணறிடக்கூடாதுல்ல ஆன்ட்டி”
தன்னருகே ஒருவன் தான் சொன்ன தகவல்களால் அல்வாவை விழுங்க முடியாமல் திணறுவதை மிருணாளினி கவனிக்கவில்லை.
‘இவள் நான் பணியாற்றும் நிறுவனத்திலா இண்டர்ன்ஷிப்புக்கு வரப்போகிறாள்? கல்யாணம் மீதிருந்த வெறுப்பில் இவள் எந்த நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப்புக்குச் சேரப்போகிறாள் என்பதைக் கேட்காமல் இருந்து விட்டேனே’
“கர்ணன் நீங்க எங்க ஒர்க் பண்ணுறிங்க?”
சிரமத்தோடு அல்வாவை விழுங்கியவன் “அதே கம்பெனிலதான் அங்கிள். டெக் லீடா இருக்குறேன்” என்றான்.
இப்போது மிருணாளினியின் விழிகளிலும் பரிபூரண அதிர்ச்சி! ஆனால் அவர்களின் பதிலில் எதிரிலிருந்த தம்பதிகள் பூவாய் சிரித்தார்கள்.
“ஒரே இடத்துல ஹஸ்பெண்டும் ஒய்பும் வேலை பாக்குறது ரொம்ப சௌகரியம்”
அவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலேயே அலுவலகத்துக்குத் தயாரான கோலத்தில் அங்கே வந்தான் இளைஞன் ஒருவன். சுண்டினால் ரத்தம் வரும் நிறம் அவனுடையது.
அதென்னவோ ஆண்கள் பளீர் வண்ணத்தில் இருக்கும்போது அவர்கள் மென்மையானவர்களாகத் தெரிவார்கள். அந்த இளைஞனும் அப்படியே தெரிந்தான்.
“கிளம்பிட்டியா அர்ஜூன்?” என்ற லட்சுமி மிருணாளினியையும் கர்ணனையும் அவனிடம் அறிமுகப்படுத்தினார்.
“ஹலோ” என்று இருவரிடமும் அவன் கைகுலுக்கினான். ஒரே இடத்தில் பணியாற்றுவதைக் கேட்டதும் ஆச்சரியப்பட்டான்.
“எப்பிடிஜி உங்களை நான் கவனிக்காம விட்டேன்?” எனத் திகைப்பாய்க் கேட்டான்.
“இண்டர்னுக்கு வாழ்த்துகள்” என்று மிருணாளினியிடம் வாழ்த்து சொன்னவன் “டைம் ஆகிடுச்சு கய்ஸ். நான் கிளம்பணும். டோண்ட் மிஸ்டேக் மீ” என்றவனிடம் கைகுலுக்கி வழியனுப்பிவைத்தான் கர்ணன்.
“அப்ப நாங்களும் கிளம்புறோம் ஆன்ட்டி” என மிருணாளினி எழுந்திருக்க லட்சுமி அவளுக்கு மஞ்சள் குங்குமம் கொடுத்தார்.
அதை வாங்கிக்கொண்டவள் கர்ணனுடன் அங்கிருந்து வெளியேறினாள்.
ஃப்ளாட்டுக்குப் போனதும் அவளிடம் வேலை குறித்துப் பேச வேண்டுமென நினைத்த கர்ணன் அங்கே போனதும் அன்னை ஏவிய வேலைகளில் அதை மறந்தான்.
“இந்த இடத்துல ஒரு லைட் போடணும், மறந்துடாத. கேஸ் சிலிண்டர் இன்னொன்னு வாங்கி வச்சுக்க. ஒரு சிலிண்டர் வச்சு சமாளிக்கலாம்னு யோசிக்காத. மளிகை ஜாமான் வாங்க போன கடை நல்லா பெருசா இருக்குதே! மாச மளிகை எல்லாம் அங்க வாங்கிக்க.”
இதெல்லாம் எழிலரசி தனது மைந்தனிடம் கூறியவை.
“எம்மா இதெல்லாம் உன் மருமக கிட்ட சொல்லு”
“அவ ஏதோ ஆன்லைன்ல படிக்குறா. எப்பிடி பாத்தாலும் ரெண்டு பேரும் சேர்ந்துதான் எல்லாத்தையும் பாக்கணும். நீயும் தெரிஞ்சிக்க, தப்பில்ல.” என்று சொல்லிவிட்டார் அவர்.
சிறிது நேரத்தில் வீட்டுக்குள் யாரோ உற்சாகமாகப் பேசியபடி வந்தார்கள். கூடவே ஆதிராவின் குரலும் கேட்டது.
வந்தவன் புவனேந்திரன். கர்ணனுடைய தமக்கை ஸ்வேதாவின் நண்பனான மகிழ்மாறனின் மூத்த சகோதரன். இளையவர்களின் நட்பைத் தாண்டி இரு குடும்பத்துக்கிடையே தூரத்து உறவு முறையும் உண்டு.
குடும்பத்தொழில்களில் ஒன்றான என்.எஸ்.என் ஹோட்டலை நிர்வகிக்கிறான். அதற்கு முன்னர் அவர்களின் கல்வி குழுமங்களை மேற்பார்வை செய்துகொண்டிருந்தான்.
அவன் மீது எப்போதுமே கர்ணனுக்கு மரியாதை உண்டு.
“வாங்க புவன்!”
“என்ன புது மாப்பிள்ளை! முகம் ஃபேஷியல் பண்ணுன மாதிரி ஜொலிக்குதே”
கேலியோடு அவனிடம் ஹைஃபை கொடுத்தான் புவனேந்திரன்.
“எல்லாம் மதினியோட கைவண்ணம்” ஆதிரா வேறு சும்மா இருக்காமல் ஏற்றிவிட கர்ணனுக்கோ ‘என்னை விட்டுடுங்கடா’ என்ற மனநிலை.
மதியவுணவின் போது அனைவரும் உணவு மேஜையில் அமர்ந்தவாறு ஆதிராவின் செல்ஃபிக்கு போஸ் கொடுக்க, மிருணாளினிக்கு அன்று மாலையே அனைவரும் ஊருக்குக் கிளம்பிவிடுவார்களே என்ற சோகம்.
ஊரிலிருந்து கொண்டு வந்த மளிகை ஜாமான்கள், அன்று காலையில் அருகிலிருக்கும் டிமார்ட்டில் வாங்கிய மளிகை பொருட்களை அவற்றுக்குரிய கொள்கலன்களில் மாமியாரோடு சேர்ந்து எடுத்து வைத்தாள் மிருணாளினி.
“அரிசி எல்லாம் இதுக்குள்ள வச்சுக்க மிருணா. உள்ள சின்னதா ஒரு உலக்கு வச்சிருக்கேன். உங்க ரெண்டு பேருக்கும் ரெண்டு உலக்கு வச்சிங்கனா சாதம் சரியா இருக்கும். சாதத்தை மட்டும் வடிச்சே சாப்பிடு. குக்கர்ல வைக்காத. எருக்கட்டி மாதிரி இருக்கும்” என்றார் உலகம்மை.
அனைத்துக்கும் தலையை ஆட்டியவள் ஆதிராவிடம் பெயர்ப்பலகை பற்றிய தனது ஆவலைப் பகிர்ந்துகொண்டாள்.
சில நிமிடங்கள் போனை நோண்டிய ஆதிரா பின்னர் ஒரு இணையதள பக்கத்தைக் காட்டினாள்.
“இதுல உங்களுக்குப் பிடிச்ச நேம்போர்ட் டிசைனை செலக்ட் பண்ணுங்க மதினி”
அவ்வளவுதான்! உற்சாகமாக ஒவ்வொரு பெயர்ப்பலகையாகப் பார்க்க ஆரம்பித்தார்கள் இருவரும்.
இறுதியில் ஆகாய நீலவண்ணத்தில் இரு பலகைகள், அதில் பெரிய பலகையின் மேற்பகுதியில் ஒரு வீடு அதனருகே இரண்டு பறவைகள் ஒன்றை ஒன்று முத்தமிடுவது, சிறிய பலகையில் வீட்டு உரிமையாளர்களின் பெயர்கள் போன்ற வடிவமைப்புடன் கூடிய பெயர்ப்பலகை மிருணாளினிக்குப் பிடித்துப் போனது.
அதை ஆர்டர் செய்த ஆதிரா “சென்னைக்குள்ள ரெண்டு நாள்ல டெலிவரி பண்ணிடுவாங்க மதினி. இதுல மிருணாளினி அண்ட் கர்ணன்னு போடணும்னு சொல்லிருக்கேன். அண்ணா கிட்ட சொல்லிடாதிங்க. என் பேரை எதுக்காக ரெண்டாவது போடச் சொன்னனு சண்டைக்கு வருவான்” என்றாள் இரகசியமாக.
‘இதற்கெல்லாமா சண்டை போடுவார்கள்?’
மிருணாளினி யோசிக்கையிலேயே “எங்கண்ணா போடுவான்! அவனைப் பத்தி நீங்க தெரிஞ்சிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு” என்று ஆதிரா நமட்டுச்சிரிப்போடு முடித்துக்கொண்டாள் உரையாடலை.
மாலையில் குடும்பத்தினர் அனைவரையும் எழும்பூர் இரயில் நிலையத்துக்குச் சென்று வழியனுப்பினார்கள் கர்ணனும் மிருணாளினியும்.
இரயில் நிலையத்திலிருந்து வெளியே வருகையில் ஆட்டோ டிரைவர்கள் முண்டியடிக்க, சென்னைக்குப் புதியவளான மிருணாளினி அவர்களைக் கடக்கத் திணறிப்போனாள். கூடவே கூட்டமாக வந்த பயணிகளின் குடும்பங்கள் வேறு!
அவள் பின்னே வருகிறாள் என்று நடந்து சென்ற கர்ணன் அவளது பெர்ஃபியூம் நறுமணம் தன்னைத் தொடரவில்லை என்றதும் திரும்பிப் பார்த்தான்.
ஆட்டோ டிரைவர்கள், இதர பயணிகள் கூட்டத்தில் சிக்கிக்கொண்டவள் அவர்களைக் கடந்து வரத் தெரியாமல் தவிப்பதைக் கண்கூடாகக் கண்டவன் அதிகம் யோசிக்கவில்லை.
விறுவிறுவென அவளை நோக்கி வந்தான்.
“ஆட்டோ வேணுமா சார்?”
“வேண்டாம்ணா… ண்ணா! கொஞ்சம் வழி விடுண்ணா! லேடீஸ் வர சிரமப்படுறாங்க” என்று சொன்னபடி அங்கே நின்றவளின் கையைப் பற்றிக்கொள்ள கூட்டமும் விலகிக்கொண்டது.

கூட்டத்திலிருந்து பிடித்தக் கரத்தை விடாமல் அழைத்து வந்தவன் சாலையைக் கடந்தபோது மிருணாளினியே கையை விடுவிக்கவும் சட்டெனத் திகைப்பாய் விழித்தான்.
குழந்தையின் மென்மையோடு இருந்த கரம் தனது கரத்துக்குள் அடங்கியிருந்தபோது அவனையறியாமல் எழுந்த உரிமையுணர்வை இன்னும் சில நிமிடங்கள் அனுபவிக்க முடியாத ஏக்கம்! அதை ஏக்கமென ஒத்துக்கொள்ள விரும்பாதபோதும் அந்த ஏக்கம் எழுவதைத் தடுக்க முடியவில்லை அவனால்!
‘காரியம் ஆனதும் கழண்டுக்குறா பாரு’ ஆதங்கத்தில் உதித்த அவனுடைய மைண்ட் வாய்ஸ் இது.
அவளோடு சாலையைக் கடந்து எதிரே இருந்த ஹோட்டல் முன்னே நின்றபடி கேப் புக் செய்தான் கர்ணன்.
மிருணாளினிக்கு இன்னும் படபடப்பு அடங்கவில்லை. ஓரக்கண்ணால் கர்ணனைப் பார்த்தாள். அவள் தன்னைக் கவனிப்பதை அறியாமல் கேப் புக் செய்வதில் மும்முரமாகியிருந்தான் அவன்.
கூட்டத்தில் சிக்கிக்கொண்டபோது எப்படியோ போகட்டுமென விட்டுச் சென்றுவிடுவான் என எண்ணியவளுக்கு அவன் திரும்பி வந்ததே ஆச்சரியம்!
‘என்னுடன் எந்தப் பிணைப்பையும் விரும்பாதவனுக்கு இந்தக் கரிசனம் மட்டும் எதற்காம்?’
சுணங்கிக்கொண்டது அவளது மனம்.
கேப் வந்துவிட இருவரும் ஏறி அமர்ந்தார்கள். கேப் ஓட்டுனரிடம் ஓ.டி.பியைச் சொன்ன கர்ணன் சில நிமிடங்கள் கழிந்ததும் மியூசிக் ப்ளேயரில் ஓடிக்கொண்டிருந்த பாடலை மாற்றச் சொன்னான்.
“பழைய பாட்டு கேட்டாலே சோம்பேறித்தனம் வருதுண்ணா. அனிருத், சாய் அபயங்கர்னு யாரோட பாட்டாவது போட்டு விடுங்க. ஈவ்னிங் வைப் செமய்யா இருக்கும்”
ஜெயசந்திரன் – ஜானகியின் குரல் மிகவும் மென்மையாக ஒலிக்க அதில் இலயித்திருந்த மிருணாளினிக்கு அவனது இந்தப் பேச்சில் எரிச்சல் வந்துவிட்டது.
“மாத்தாதிங்கண்ணா! இந்த மாதிரி எய்ட்டீஸ் சாங்ஸ் எல்லாம் கேக்குறப்பவே காதுக்கு இதமா இருக்கும். இவர் சொன்ன ஆளுங்களோட பாட்டை வச்சிங்கனா, உங்க கேப்ல ஏறுனதுக்காக இலவசமா காதுவலியும் தலைவலியும் எங்களுக்கு வந்துடும்” என்றாள் அவனை முறைத்தவளாக
கர்ணன் அவளை நம்ப முடியாமல் பார்த்தான். அவன் தொண்ணூறுகளின் இறுதியில் பிறந்தவன். அவனுக்கே நவீன இசையில் மயக்கம். பிடித்தம் என்று கூட சொல்லலாம்.
‘இவள் ஈராயிரத்தின் குழவியாயிற்றே! இன்னும் இளையராஜாவிலேயே தேங்கி நிற்கிறாளே!’
“ராஜாவோட இசை எல்லா ஜெனரேசனையும் வசியப்படுத்திடும். அவரோட மியூசிக்கை ரசிக்கக் குறைஞ்சபட்ச ரசனையாவது இருக்கணும். இல்லண்ணா?”
கேப் ஓட்டுனரைத் துணைக்கு அழைத்துக்கொண்டாள் அவள்.

தன்னை ரசனையில்லாதவன் என அவள் சொல்லவும் கடுப்பாய் முறைத்த கர்ணன் ஜன்னல் வழியே வெளியே தெரிந்த காட்சிகளை வேடிக்கை பார்ப்பதில் மூழ்கினான்.
அலை மீது ஆடும் உள்ளம்…
எங்கும் ஒரே ராகம்…
நிலை மீறி ஆடும் மீன்கள் ரெண்டும்…
ஒரே கோலம்…
மேல் வானத்தில் ஒரு நட்சத்திரம்…
கீழ் வானத்தில் ஒரு பெண் சித்திரம்…
எண்ணம் ஒரு வேகம்…
அதில் உள்ளம் தரும் நாதம்…
வேடிக்கையில் கவனம் கலைந்து மிருணாளினியின் பக்கம் திரும்பியவன், அவள் கண்கள் மூடி பக்கவாட்டில் சாய்ந்து பாடல் கேட்டபடி இருப்பதைக் கவனிக்க ஆரம்பித்தான்.
மூடிய இமைகளுக்குள் கருவிழிகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்க, எப்போதும் அவனது கவனத்தை ஈர்க்கும் கன்னக்கதுப்புகளின் பளபளப்புக்கு இப்போதும் குறைவில்லை.
‘இவளுக்கு ஆயில் ஸ்கின்னாக இருக்குமோ?’
மனசாட்சி கேட்ட கேள்வியைப் புறந்தள்ளிவிட்டு, மெல்ல இதழ்களை வளைத்து முறுவலித்தவளை கண்ணெடுக்காமல் பார்க்க ஆரம்பித்தான் அவன்.
இமைக்காத அவனது விழிகளில் மெல்லிய ரசனை! அவனுக்குள் துடித்த இதயத்தில் சின்னதாய் ஒரு ஈர்ப்பு! இத்தனை நாட்கள் இல்லாத ஈர்ப்பு திடீரென இன்று ஏனாம்? அவனுக்கே தெரியவில்லை.
சொர்க்கத்திலே இது முடிவானது…
சொர்க்கம் என்றே இது முடிவானது…
காதல் ஒரு வேதம்…
அது தெய்வம் தரும் கீதம்…
தாலாட்டுதே வானம்…
தள்ளாடுதே மேகம்…
தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்…
இது கார்கால சங்கீதம்…
அந்தப் பாடலின் வரிகள் அவன் செவிகளுக்கல்ல, அவனது உணர்வுகளுக்குள்ளும் ஒலித்து அடங்கின.
திருமணம் மீதான விருப்பமின்மையைப் போர்த்தியிருந்த அவனது இதயம் அவளிடம் ஒரு நொடி உருகிப் போகும் அபாயம்! தனக்குள் நிகழ்ந்த இந்த ஆழமான அசைவை அவள் ஒருபோதும் அறியக் கூடாது என்பதில் கர்ணன் தெளிவாக இருந்தான்.
அவளது அழகிய முகத்தின் மீதிருந்த அவனது பார்வையின் தீவிரம், எங்கோ ஒரு மூலையில், தன்னையும் அறியாமல் அவளுக்கான நேசத்தின் அறைகூவலாக மாறிவிடுமோ என்ற அச்சம் பிறந்தது அவனிடம்.
அடுத்த நொடி…
சட்டென்று முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டான் அவன். கண்களின் ரசனைக் கனலை அணைக்க, ஒரு விறைப்பான பாவனையை அவனது விழிகளில் வரவழைத்துக் கொண்டான். சாய்ந்து அமர்ந்து பாடலில் இலயித்திருந்த மிருணாளினியிடமிருந்து பார்வையை விலக்கியும் கொண்டான்.
இதெல்லாம் அறியாதவள் அடுத்ததாக ஒலித்தப் பாடலுக்குள் இலயிக்க ஆரம்பித்தாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

