“எல்லா மனுஷங்களுக்கும் மத்தவங்க கிட்ட இருந்து பாசமும் பாதுகாப்பும் தேவைப்படும். எனக்கும் கர்ணன் கிட்ட அந்தப் பாசத்துக்கானத் தேடல் இருக்கு. ‘இவங்க நமக்குத் துணையா, நம்பிக்கையான ஆளா இருக்க மாட்டாங்களா?’னு மனசு ஏங்குது. கூட ஒருத்தர் இருந்தாலும், அவங்களோட நமக்கு எந்தப் பிணைப்பும் இல்லாதப்ப வர்ற தனிமை ரொம்பக் கொடுமையானது. கிட்டத்தட்ட ஒரு தீவுல இருந்த ஃபீல். ஆனா இதையும் ஏத்துக்கிட்டுத்தானே ஆகனும். வாழ்க்கையில எல்லாமே ஏத்துக்குறதும் கடந்து போறதும்தானே”
-மிருணாளினி
தங்கவேலுவும் உலகம்மையும் பூரிப்போடு கர்ணன் – மிருணாளினியை வரவேற்றார்கள்.
“வாங்க மாப்பிள்ளை”
கர்ணனுக்கு அந்த அழைப்பே சங்கடமாக இருந்தது. எப்போதும் கர்ணா என்று அழைப்பவர் இப்போது உறவைச் சொல்லி அழைத்ததும் சின்னதாய் ஒரு சங்கடம்.
அமைதியாக மிருணாளினியோடு வீட்டுக்குள் வந்தவனுக்கு மாப்பிள்ளை சீராட்டு எல்லாம் பிரமாதமாகவே நடந்தேறியது எனலாம்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
காபி என்ன? சிற்றுண்டி என்ன? அனைத்தையும் மொக்கிவிட்டுத் தந்தையோடு இரண்டு வார்த்தைகள் பேசாமல் போனும் கையுமாய் ஜன்னலோரம் ஒரு நாற்காலியோடு பதுங்கிக்கொண்டவனைப் பார்க்க பார்க்க மிருணாளினிக்குப் பற்றிக்கொண்டு வந்தது.
தங்கவேலுவே உரையாடலை வளர்க்க விரும்பினாலும் ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான் அவன்.
“எத்தனை நாள் கல்யாணத்துக்கு லீவு போட்டிருக்கிங்க மாப்பிள்ளை?”

“ஏழு நாள்”
“நாம மெட்ராசுக்குப் போறதைப் பத்தி வினாயகம் ஐயா சொன்னாங்களா?”
“ம்ம். எல்லாருக்கும் ஃப்ளைட்ல டிக்கெட் புக் பண்ணிட்டேன்.”
“அங்க போன அப்புறம் உங்களுக்கு வேலை நிறைய சேர்ந்திருக்கும்ல?”
புது மருமகனுடன் ஆர்வமாய்ப் பேச தங்கவேலு விரும்புவதைக் கண்கூடாகப் பார்த்தாள் மிருணாளினி. ஆனால் கர்ணன் அளித்த ஒற்றை வார்த்தை பதில்கள் அவனது அலட்சியத்தை வெளிப்படுத்துவதாக அவளுக்குத் தோன்றிவிட்டது.
அவனுக்குத் தங்கவேலு மாப்பிள்ளை மாப்பிள்ளை என்று அழைப்பதும், பன்மைவிகுதியில் பேசுவதும் புதிய சங்கடமாய்!
தந்தை அடுத்தக் கேள்வியைக் கேட்கும் முன்னர் அவரிடம் வந்தவள் “அம்மா உங்களைக் கூப்பிடுறாங்கப்பா” என்று அவரைத் தன்னோடு அழைத்துப் போய்விட்டாள்.
தனியே அழைத்து வந்தவள் தந்தையிடம் சிடுசிடுக்க ஆரம்பித்தாள்.
“அவன் தான் ஆட்டிட்டியூட் காட்டுறான்ல. ஏன்பா மறுபடி மறுபடி அவன் கிட்ட வழிய போய் பேசுறிங்க?”
தங்கவேலுக்கோ அதிர்ச்சி! அவருக்குக் கர்ணனின் இயல்பு தெரியும். அவன் இப்போது காட்டுவது அலட்சியமல்ல, அது புது மாப்பிள்ளைக்கே உரித்தான தயக்கம் என அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. அவனை இலகுவாக உணர வைக்கவே அவர் அடுத்தடுத்துக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தார்.
ஆனால் மகள் அதை வேறுவிதமாகப் புரிந்துகொண்டாள் போலவே!
உடனடியாக மறுப்பாகத் தலையசைத்தவர் “இல்லம்மா! அவர் அந்த மாதிரி ஆளு இல்ல. நான் அவரைக் குழந்தைல இருந்து பாக்குறேன்.” என்றதும்
“எனக்கு அப்பிடி தோணலப்பா. அவன் தலையில இருந்து கால் வரைக்கும் அவங்கப்பா சம்பாதிச்ச காசு குடுத்த திமிரு மட்டும்தான் இருக்கு. இதுவே உங்க இடத்துல வசதியான மாமனார் ஒருத்தர் இருந்தார்னா இவ்ளோ அலட்சியமா பதில் சொல்லுவானா? ஏன்பா இப்பிடி ஒருத்தனை நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு விரும்புனிங்க?” என ஆதங்கத்தில் உடைந்தது மிருணாளினியின் குரல்.
தங்கவேலுக்கோ மகள் பேச பேச தலை சுற்றாதக் குறை.
“அம்மாடி! நீ நினைக்குற மாதிரி கர்ணன் தம்பி திமிரான ஆள் எல்லாம் கிடையாது. இது புது மாப்பிள்ளையோட சுபாவம்மா. உன் அப்பனும் அந்த நிலைல இருந்துதான் வந்திருக்கேன்”
“நல்லா சமாளிக்கிறிங்கப்பா”
அதற்கு மேல் தந்தையிடம் எதுவும் பேசவில்லை மிருணாளினி.
தங்கவேலுக்கு மகளின் மனவருத்தம் புரிந்தது. அவள் சமையலறையில் உலகம்மையோடு இருக்க, மருமகனோ போனே கதியென இருந்தான்.
இருவருக்குள்ளும் எதுவோ சரியில்லை என்று பட்சி சொன்னது. ஆனால் அது தீவிரமாகாது என்ற நம்பிக்கையும் அவருக்கு இருந்தது.
அடுத்த சில மணி நேரங்களில் மறுவீட்டு விருந்து! சும்மா சொல்லக்கூடாது, உலகம்மையின் கைப்பக்குவம் மற்ற மூவருக்கும் அமிர்தம் பரிமாறப்பட்டது போல பிரமையைத் தோற்றுவித்தது.
சைவ விருந்துதான் அன்று. அதுவே அத்துணை பிரமாதம்.
இனிப்புக்காக அவர் செய்திருந்த பாலடை பிரதமனின் சுவை தொண்டை வரை தித்தித்தது.
கேரமலைஸ் ஆன சர்க்கரையின் நறுமணம், நாவில் மென்மையாய்க் கரைந்த அடையின் சுவை என வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
மறுவீட்டு விருந்து முடிந்ததும் பெண்ணுக்குக் கொடுத்தனுப்ப வேண்டிய பலகாரங்களை எவர்சில்வர் பாத்திரங்களில் மூடி போட்டு வைத்துக் காரிலேற்றினார்கள் உலகம்மையும் தங்கவேலுவும்.
கிளம்பும் முன்னர் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் புத்தாடைகளைத் தாம்பளத்தில் வைத்துக் கொடுத்தார்கள்.
“இதெல்லாம் எதுக்குப்பா?” என்று அங்கே வைக்கப்பட்ட இரண்டு ஐநூறு ரூபாய் சுருள்களைப் பார்த்து ஆதங்கத்துடன் வினவினாள் மிருணாளினி.
‘இருப்பதை எல்லாம் திருமணத்துக்கே வழித்துக் கொடுத்துவிட்டால் என் தந்தைக்கும் தாய்க்கும் என்ன மிஞ்சும்?’
இந்த இடத்தில் கர்ணன் வாயைத் திறந்திருக்கலாம். திறந்திருந்தால் அவனைப் பற்றிய தப்பெண்ணத்தை மிருணாளினி தூக்கிப் போட்டிருப்பாள். ஆனால் அது நடக்கவில்லை.
தந்தைக்கும் மகளுக்குமிடையே பேச தனக்கு என்ன உரிமை இருக்கிறது என அவன் ஒதுங்கிவிட, அதுவும் அவன் பக்கம் இன்னொரு மைனஸ் பாயிண்டாகச் சேர்ந்துகொண்டது.
‘மாமனார் வீட்டில் கிடைத்தது வரை லாபமென உறிஞ்சும் வகையறா’
மிருணாளினி கறுவிக்கொண்டே விடைபெற்றாள் பெற்றோரிடம்.
சந்திரவிலாசத்துக்கு வந்து சேர்ந்ததும் மாமியாரும் நாத்தனாரும் அவளுக்காகக் காத்திருந்தார்கள்.
“என்ன மதினி உண்ட மயக்கமா?” என கேலி செய்த ஆதிராவும்
“இதெல்லாம் வேண்டாம்னு சொல்லியும் தங்கவேலு அண்ணன் கேக்கல பாரு” என்று பலகார பாத்திரங்கள், புத்தாடைகளைப் பார்த்து ஆதங்கப்பட்ட எழிலரசியும் மிருணாளினியின் இதயத்தில் எரிந்துகொண்டிருந்த அக்னியை அணைத்தார்கள்.
ஆனால் உறவுக்காரர்கள் எதற்கு இருக்கிறார்கள்?
“ஏன் மதினி இந்த நூறு முறுக்கு, நூறு அதிரசத்துக்கா இவ்ளோ வெப்ராளம் (ஆதங்கம்)? என் மவ கல்யாணத்துல மறுவீட்டுப் பலகாரமே தலைக்கு ஐநூறு வச்சோம்”
மருமகளின் முகம் மாறுவதைக் கண்டுகொண்டார் எழிலரசி. கர்ணனோ இது பெண்கள் விவகாரமென ஒதுங்கியபடி அவனது அறைக்குப் போய்விட இருக்கிற பாத்திரங்களில் ஒன்றை அவன் பிடறியில் வீசிவிடலாமா எனும் அளவுக்கு மிருணாளினிக்கு ஆத்திரம்.
“ஐநூறு ஆயிரம்னு வாங்கி என்ன புண்ணியம்? திங்குறதுக்கு வயிறு வேணுமே! பலகாரம் எல்லாம் நாளாச்சுனா காம்பி போன மாதிரி ஆகிடும்ல. இதுவே எங்க வீட்டுக்கு அதிகம்” என்று யாருடைய மனமும் வேதனையடையாமல் பேச்சைச் சுமூகமாக்கினார் எழிலரசி.
“மதினி நீங்க ரெஸ்ட் எடுங்க” என்று மிருணாளினியை அனுப்பி வைத்தாள் ஆதிரா.
அவள் போனதும் அன்னையைத் தனியே அழைத்துப் போய் அவரிடம் கர்ணனது செயல்பாடுகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தாள்.
“நேத்து நைட் மதினி சாப்பிடுறவரைக்கும் கூட அவன் வெயிட் பண்ணல. இன்னைக்கு அந்த அத்தை பலகாரக் கணக்கு சொல்லுது. என் பொண்டாட்டி வீட்டுல எவ்ளோ செஞ்சா உங்களுக்கென்னனு கேக்காம ரூமுக்குப் போறான். ஏன்மா இவன் இப்பிடி இருக்கான்?”
“அவன் சுபாவம் தெரிஞ்சதுதானே ஆதி”

“அதுக்குனு இப்பிடியா? அவினாஷ் ஒரு தடவை இவனை மாதிரி பிஹேவ் பண்ணுனாலும் நான் ஆடித் தீர்த்துடுவேன், ஆமா. அதென்னமா சுபாவம்? இதெல்லாம் அலட்சியம்”
எழிலரசிக்கும் மகன் கொஞ்சம் பேசியிருக்கலாம் என்றே தோன்றியது. தொழிலில் எப்படி ஒட்டாமல் விலகினானோ அது போல எல்லா இடத்திலும் விலகமுடியாதென அவனுக்கு யாராவது புரியவைத்தே ஆகவேண்டும் என்று எண்ணினார்.
மகன் சொல்லித் திருந்தும் ரகமல்ல, பட்டுத் திருந்தும் ரகமென அவருக்குத் தெரியாதே!
அங்கேயோ அறைக்குள் புகுந்ததும் கதவை அடைத்த மிருணாளினி தனது வீட்டிலிருந்து அடக்கிவைத்த கோபம் அனைத்தையும் கர்ணனிடம் கொட்ட ஆரம்பித்தாள். மெதுவானக் குரலில்தான்!
“ஏன் நீங்க இப்பிடி இருக்குறிங்க?”
அவள் வந்ததும் தொடுத்தக் கேள்வியே அவனுக்குப் புரியவில்லை. கட்டிலில் கால் நீட்டி அமர்ந்திருந்தவன் கால்களை மடக்கிக்கொண்டான்.
“இப்பிடி இருக்கட்டுமா?”
“நீங்க உக்காந்திருந்த தோரணைய சொல்லலைங்க. உங்களோட பஹேவியரைச் சொன்னேன்”
கர்ணன் மொபைலை மெத்தை மீது வைத்துவிட்டு மிருணாளினியை ஊன்றி கவனித்தான்.
“என் பிஹேவியர்ல என்ன குறைய கண்டிங்க தங்கவேலு மவளே?”
அவன் என்னவோ கிண்டலாகத்தான் சொன்னான். ஆனால் கேட்க எதிராளிக்கு விருப்பமில்லையே!
“எல்லாமே குறைதான் உங்ககிட்ட. எங்க வீட்டுல எங்கப்பா உங்க கிட்ட ஆர்வமா பேசுனார். ஆனா நீங்க வேண்டாவெறுப்பா ஒன்லைனரா சொல்லி அவரை இக்னோர் பண்ணுனிங்க. இங்க வந்ததும் உங்க அத்தை பலகாரக்கணக்கு சொல்லி என்னையும் என் வீட்டையும் கேலியா பேசுறாங்க. எனக்காக ஒரு வார்த்தை பேசாம அலட்சியமா ரூமுக்கு வந்து போனை நோண்டிக்கிட்டு இருக்கிங்க.”
கர்ணன் நிதானமாக எழுந்தான். மிருணாளினியின் அருகே வந்து அவளை ஏறயிறங்க பார்த்தான். பின்னர் தாடை உரோமங்களை வருடியவனாக “இப்ப நான் என்ன செஞ்சிருக்கணும்னு எதிர்பாக்குற?” என்று வினவ
“எங்கப்பா கிட்ட நல்லபடியா பேசிருக்கலாம். உங்கத்தை கிட்ட பலகாரக் கணக்கை விட மனுசங்க அன்பு முக்கியம்னு சொல்லி புரிய வச்சிருக்கலாம்.. அப்புறம்…” என்றவள் அடுத்துச் சொல்லும் முன்னர் அவனது குரல் இடைவெட்டியது.
“இதெல்லாம் நான் எதுக்கு செய்யணும்?”
மிருணாளினி அமைதியானாள். அவளது விழிகளில் குழப்ப ரேகைகள்.
“சொல்லும்மா! இதெல்லாம் நான் எதுக்கு செய்யணும்? உனக்காகவா?”
தலையிலிருந்து கால் வரை அவளைச் சுட்டிக் காட்டியவன் சன்னமாகப் புன்னகைத்தான்.
“டோண்ட் பீ ஓவர் ட்ராமடிக். நான் ஒன்னும் உன்னைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கல. இது ப்யூர்லி அரேஞ்ச்ட் மேரேஜ். என்னைப் பொறுத்தவரைக்கும் இது கட்டாயத்திருமணமும் கூட. நான் எத்தனை தடவை சொன்னேன் கல்யாணத்தை நிறுத்திடுனு. நீ கேக்கலயே”
“நீங்க என்னைப் பழிவாங்குறிங்களா?” வெறுப்பிலும் சிரிப்பு வந்தது மிருணாளினிக்கு.
கர்ணன் மறுப்பாய்த் தலையசைத்தான்.
“அதெல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை. உன்னைப் பழிவாங்கி எனக்கென்ன ஆகப்போகுது? நான் ஜஸ்ட் ஒதுங்கி நிக்குறேன். அவ்ளோதான்”
“இப்பிடி பேச உங்களுக்கு வெ…”
“வெக்கமா இல்ல. ஏன் வெக்கப்படணும்? நான் உன்னை விரும்பி கல்யாணம் பண்ணுனாதான் உன் மனசு கஷ்டப்படுற மாதிரி ஏதாச்சும் நடந்தா அதை நிறுத்தணும்னு நினைப்பேன். உனக்காக எல்லா இடத்துலயும் பேசணும்னு துடிப்பேன். நான் வேற வழியில்லாம உன்னைக் கல்யாணம் பண்ணிருக்கேன் மிருணாளினி. என் கிட்ட நீ எப்பிடி கேரிங், எமோஷனல் சப்போர்ட்டை எதிர்பாக்குற? இது உனக்கே முட்டாள்தனமா தெரியல?”

மிருணாளினியால் பதில் பேச முடியவில்லை.
“இதைத்தான் நான் சொன்னேன். I am emotionally unavailable to you (உன்னுடன் எனக்கு எந்த உணர்வுரீதியான பிணைப்பும் இல்லை). பின்ன எப்பிடி நான் உனக்காகப் பேசணும், உனக்காக யோசிக்கணும்னு நீ எதிர்பாக்குற? அதுவுமில்லாம இதெல்லாம் பொம்பளைங்க விவகாரம். இதுல நான் தலையிடணும்னு நீ எதிர்பாக்குறதே தப்பு”
அவளைப் போலவே கர்ணனும் கத்தவில்லை. முகத்தில் கோபத்தைக் காட்டவில்லை. ஆனால் உச்சந்தலையில் அடித்தது போல அவனது மனநிலையை அவளுக்குப் புரியவைத்துவிட்டான் கர்ணன்.
மெய்தானே! அவனுக்கும் அவளுக்குமிடையே உணர்வுரீதியானப் பிணைப்பு எதுவுமில்லை. பெயரளவுக்குக் கணவன் மனைவி என்ற உறவை சபையில் அனைவர் முன்னிலையிலும் பிரகடனப்படுத்திக்கொண்டார்கள் மாங்கல்யம் மூலமாக. கல்யாணம் செய்தால் எல்லாம் சரியாகிவிடுமென்ற பெரியவர்களின் தியரி இங்கே பரிதாபமாகத் தோற்றுப்போனது என மிருணாளினிக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துபோனது.
அவளும் புரிந்தாற்போல தலையாட்டினாள்.
“சரிதான்! இப்பதான் எனக்கு உங்க மனநிலையே புரியுது. இனிமே உங்க கிட்ட எனக்காகப் பேசுங்க, எனக்காக யோசிங்கனு நான் கேக்கமாட்டேன். கொஞ்சம் முன்னாடி எனக்கு வந்த கோவம், கடுப்பு எல்லாத்துக்கும் அடிப்படையே இல்லங்கிறது இப்பதான் தெளிவா புரியுது”
அமைதியாய்ச் சொன்னவளுக்கு இனி எங்கிருந்து ஓய்வெடுக்கத் தோன்றும்?
அவள் அங்கிருந்து வெளியேறியதும் கர்ணனுக்குப் பெருமூச்சு வந்தது. இப்படி பேசிவிட்டோமே என்றெல்லாம் தோன்றவில்லை. தனது மனநிலையைப் புரிந்துகொண்டு இனிமேலாவது தன்னைத் தொந்தரவு செய்யமாட்டாள் என்ற நிம்மதிதான் அவனுக்குப் பிறந்தது.
திருமணவுறவில் அனைத்தும் ஏற்றுக்கொள்வதில்தான் உள்ளது அல்லவா! எப்படி அவர்களின் திருமணத்தை ஏற்றுக்கொண்டாளோ அதே போலவே அவனது மனநிலையையும் ஏற்றுக்கொண்டாள் மிருணாளினி. எதையும் மாற்றவோ திருத்தவோ மறுக்கவோ அவள் விரும்பவில்லை.
ஸ்வேதா அன்று பெங்களூரு செல்வதாக இருந்ததால் நாத்தனார்கள் மாமியாரிடம் பேசுவதில் பொழுதைக் கழித்தாள் மிருணாளினி.
அவள் அவர்களிடம் நன்றாகப் பழகியதாலேயே உறவுக்காரப் பெண்களும் குற்றம் குறை கண்டுபிடிக்காமல் இயல்பாக அவளை நடத்தினார்கள்.
காரிலேறும் முன்னர் ஸ்வேதா தம்பியைத் தனியே அழைத்தாள்.
“நீயும் மிருணாவும் விலகி இருக்குற மாதிரி எனக்கு மட்டும்தான் தோணுதா? ஏன் கேக்குறேன்னா புதுப்பொண்டாட்டி அவ புருசன் கூட இருந்த நேரத்தை விட எங்க கூட இருந்த நேரம்தான் அதிகம். என்னவோ! அது உங்க பெர்ஷனல். ஆனா ஒன்னு மட்டும் சொல்லுவேன், அந்தப் பொண்ணு ரொம்ப ஸ்மார்ட். கரியரை பில்ட் பண்ண நினைக்குற டைப். ஒன்ஸ் அவ வேலையில கவனமானா அவளோட அட்டென்சனுக்காக நீ ஏங்குற நிலமை வந்துடும். மறந்துடாத”
கர்ணன் எந்த அறிவுரையையும் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டான் என அவளுக்குத் தெரியும். ஆனால் அவன் மீது அவளுக்கு இருந்த தனிப்பட்ட பாசம் அவளைப் பேசவைத்தது.
அவள் கிளம்பிப்போன பிற்பாடு சந்திரவிலாசவாசிகள் அவரவர் வேலைகளில் மும்முரமானார்கள். மிச்சமிருந்த நாட்களில் உறவினர்களின் வீடுகளுக்கு விருந்துக்குச் சென்றார்கள் கர்ணனும் மிருணாளினியும்.
அவனிடம் கோடு போட்டே பழகினாள் அவள். அது அவளுடைய குணம். ஒருவர் தன்னிடம் எதை எதிர்பார்க்கிறார்களோ அதை வஞ்சனையின்றி கொடுக்கும் ரகம்.
அன்பை விரும்பியவர்களுக்கு அள்ளிக் கொடுப்பது போல, விலகி நிற்க விரும்புவர்களுக்குத் தனது விலகலையும் பரிசாகக் கொடுக்கத் தெரிந்தவள் என்பதால் கொஞ்சம் தள்ளியே நின்று கொண்டாள் கர்ணனிடமிருந்து.
இந்த மனநிலையுடன் இருவரும் அவரவர் குடும்பத்தோடு சென்னைக்கு விமானம் ஏறினார்கள். அங்கே பால் காய்ச்சி அவர்களை வீட்டில் குடியேற்ற ஆர்வமாய்ப் போன குடும்பத்தாருக்கு இந்த விளையாட்டெல்லாம் தெரியாது. அந்த வகையில் கர்ணனும் மிருணாளினியும் திறமையாய் அவர்களின் கண்களை ஏமாற்றி சென்னை வரை அழைத்தும் வந்துவிட்டார்கள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

