“திக் திக் உணர்வுனு க்ரைம் த்ரில்லர் கதைகள்ல நான் படிச்ச உணர்வை இப்ப அனுபவிக்குறேன். மலர் சொன்ன மாதிரி கர்ணன் ஒன்னும் சிங்கமோ புலியோ இல்ல. ஆனா அவரைப் பாத்தாலே ஏதோ இறுக்கத்தோட நடமாடுற மாதிரியே இருக்கும். ஒரு மனுசன் தாலி கட்டறப்ப கூடவா கடுகடுனு இருப்பான்! என் புருசன் இருப்பான். ஏன்னா அவனோட டிசைன் அப்பிடி. ரொம்ப மோசமான ஆளுனு சொல்லமாட்டேன். ஆனா அவரைப் பாத்தாலே ஒரு பிடிவாதம், நினைச்சதைச் செய்யுற அதிகாரத்தோட நடமாடுற ஃபீல் வரும். இதை எதிர்கொள்ளுறதே எனக்கு ஒரு சவாலா இருக்கும்னு தோணுது”
-மிருணாளினி
ஜன்னலருகே நின்று வெளியே தெரிந்த வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான் கர்ணன். மனதில் குழப்ப மேகங்களின் ஊர்வலம்.
திருமணம் முடிந்தது. அவனது வாழ்க்கையில் ஒருத்தி நுழைந்துவிட்டாள். விருப்பமிருக்கிறதோ இல்லையோ இனி அவள் அவனது சரிபாதி. நினைக்கும்போதே மனதில் கசப்பு வழிந்தது.
அப்போதுமே நிதர்சனம் புரியாத அவன் மனம் மிருணாளினி நினைத்திருந்தால் இத்திருமணத்தைத் தவிர்த்திருக்கலாமென்றே நினைத்தது.
அதே நேரம் மூளை விழித்துக்கொண்டு உடனடியாக அவன் செய்ய வேண்டிய காரியம் ஒன்று பாக்கி இருக்கிறது என்று அறிவித்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!

அதை அவனும் செய்ய முனைந்தான்.
பெரிதாக ஒரு வேலையுமில்லை. அவனது மொபைல் கேலரியில் இன்னுமே ஈஸ்வரியின் புகைப்படம் உள்ளது. இப்போது அவனது வாழ்க்கையில் மனைவியென ஒருத்தி வந்த பிறகு ஈஸ்வரியின் புகைப்படம் தனது மொபைலில் இருப்பது நியாயமாகத் தோன்றவில்லை.
பெருமூச்சுடன் அவளது புகைப்படத்தை அழித்தான். மனதிலிருந்த அவளது முகமும் மறைந்து போனது அக்கணத்தில்.
அவனால் உடனடியாக ‘பெர்ஃபெக்ட் ஹஸ்மெண்ட்’ மெட்டீரியலாக மாற முடியாது. ஆனால் மனதளவில் கூட மனைவியைத் தவிர்த்து இன்னொருத்தியை நினைக்கும் எண்ணமில்லை.
‘அவ்ளோ நல்லவனாடா நீ?’ என்று அவனை மனசாட்சி கேலி செய்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் வானத்தை மீண்டும் வெறிக்க ஆரம்பித்தான்.
சற்று முன்னர் துர்ஜோயும் அவனது டீமும் விடைபெறுகையில் மிருணாளினியையும் அவனையும் வாழ்த்திவிட்டுத்தான் போனார்கள்.
பின்னர் தான் இரவுணவு நடந்தது. மிருணாளினி அப்போதும் கப்சிப் தான். மணமேடையில் அத்துணை தூரம் முறைத்தவளா இவள் என்று கர்ணனே ஆச்சரியப்படும் வகையில் பவ்வியமும் பதவிசுமாக அவனது அன்னையிடமும் ஆதிராவிடமும் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள் அவள்.
அவன் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்கையில் “இன்னும் மதினி சாப்பிட்டு முடிக்கல” என்றாள் ஆதிரா.
நம்மோடு சேர்ந்து இணையர் சாப்பிடுகையில் அவர் சாப்பிட்டு முடிக்கும் வரை உடனிருப்பது ஒரு வகையில் நாகரிகமானச் செய்கை. நாம் சாப்பிட்டே முடித்தாலும் காத்திருப்பது சிறந்தது. அதைத்தான் ஆதிரா மறைமுகமாகக் குறிப்பிட்டாள்.
கர்ணன் அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கியவன் “புராஜெக்ட் மேனேஜர் கிட்ட பேசணும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அறைக்கு வந்துவிட்டான்.
அப்போது ஜன்னல் அருகே வந்தவன்தான், இன்னும் நகரவில்லை அங்கிருந்து.
புதுமணமகனுக்குரிய கிளர்ச்சியோ, சலனமோ, மனைவி எப்போது அறைக்குள் வருவாள் என்ற எதிர்பார்ப்போ கிஞ்சித்தும் இல்லை அவனிடம்.
அந்நேரத்தில் அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டது. கூடவே கொலுசொலியும். நாசிக்கு இதமாய் மல்லிகையின் மணம் வேறு கமழ்ந்தது அந்த அறைக்குள்.
கர்ணனுக்கு மிருணாளினி அறைக்குள் வந்துவிட்டாள் என்பது புரிந்தது.
திரும்பினான் அவன்.
மிருணாளினிதான் நின்று கொண்டிருந்தாள். பீச் வண்ணத்தில் சாப்ட் சில்க் புடவையில் அதீத ஆபரணங்கள் இல்லாமல் காதில் குட்டியாய் ஜிமிக்கி, கழுத்தில் அவன் அணிவித்த மாங்கல்யம் மின்னும் மஞ்சள் கயிறு, கரங்களில் எளிமையாய் தங்க வளையல்கள்! விரலில் கொடியாய் வளைந்து முடிவில் பூவிதழ்கள் வடிவில் தங்க மோதிரம் ஒன்று!
‘அழகிதான்’ அவனே மறுக்க நினைத்தாலும் மனசாட்சி உண்மையைச் சொல்லிவிட்டது.
அவன் குறுகுறுவெனப் பார்க்கவும் “என்ன?” என்று கேட்டாள் அவள் சட்டென.
“என்ன நொன்ன? உன் கிட்ட நான் என்ன சொன்னேன்?” என்று அவன் ஆரம்பிக்க
“எதையும் சொல்லுறது ஈசி. ஆனா நடைமுறைனு வர்றப்பதான் அதைச் செயல்படுத்துறது கஷ்டம்னு புரியும்” என்றாள் மிருணாளினி.
“வார்த்தைய வளைச்சு வளைச்சு பேசாத. நீ நினைச்சா செஞ்சிருக்கலாம். ஆனா நீ செய்யல. சரி போ! என் கஷ்ட காலம், நீ எனக்குப் பொண்டாட்டி ஆகிட்ட” என்றவன் அருகில் வர மிருணாளினி இப்போது திகைத்தாள்.
‘கல்யாணத்தை நிறுத்தச் சொல்லிட்டு என்ன இதுக்கு இவன் என் கிட்ட வர்றான்?’
தடதடத்த இதயத்துடன் நின்றவளை நெருங்கி வந்தவன் வெகு சுவாதீனமாய் அவள் கழுத்திலிருந்த மஞ்சள் சரடை எடுத்து வெளியே போட்டுவிட்டான்.
“எக்ஸ்யூஸ் மீ” அதிர்ந்து போய் அவனை விலக்கித் தள்ள எத்தனித்தவளின் கையைப் பிடித்தவன் பின்னர் விடுவித்தான்.
“இது உனக்கே ஓவரா இல்லயா? என் மூஞ்சிய பாத்தா உன் கூட ரொமான்ஸ் பண்ண வர்ற மாதிரியா இருக்கு?” என்றவன் பின்னர் பெருமூச்சு விட்டான்.
மிருணாளினி கண்களைச் சிமிட்டி சிமிட்டி மூடவும் “போதும்! சமாளிக்காத. இன்னும் என் மனசுல உனக்கான ஸ்பேஸ் உருவாகல. அது உருவாகும்னு தோணவும் இல்ல. கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டல்ல. இனிமே அவஸ்தைப்பட ரெடியாகு” என்றவன் நேரே போய் மெத்தையில் அமர்ந்தான்.
இருந்த இரண்டு தலையணைகளில் ஒன்றை தூக்கி தரையில் வீசினான். கூடவே போர்வையும்.
“அங்கதான் தூங்கணும் நீ”
“நான் எதுக்கு இங்க தூங்கணும்? ஹான்”
மிருணாளினி அவனை நெருங்கவும் “ஏன்னா இது என்னோட பெட். சொல்பேச்சு கேக்காத எவளுக்கும் இங்க இடமில்ல” என்றான் அவன் அதிகாரமாய்.
மிருணாளினி அவனை கடுகடுவென முறைத்தவள் தரையில் கிடந்த தலையணையை எடுத்துக்கொண்டாள்.
நேரே கதவை நோக்கி நடந்தாள். கர்ணன் பதறியெழுந்தான்.
“ஏய்! எங்கடி போற?” என்று வேகமாக வந்து அவன் அவளது கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தினான்.

மிருணாளினி கலங்காதவளாய் “எனக்குத் தரையில படுத்து பழக்கமில்ல. அதான் பக்கத்து ரூம்ல போய் தூங்கப் போறேன்” என்றாள்.
“இப்ப நீ வெளிய போனா எல்லாரும் என்ன நினைப்பாங்க?” என்றான் அவன் கடுப்போடு.
“பார்றா! உங்களுக்கு ஒரு சிக்கல்னா எல்லாரும் என்ன நினைப்பாங்கனு யோசிப்பிங்க. அதுவே என் சம்பந்தப்பட்ட பிரச்சனைனா நான் யாரைப் பத்தியும் கவலைப்படாம எடுத்தேன் கவிழ்த்தேன்னு பேசணும். நல்லா இருக்கு உங்க நியாயம்”
திருமணத்தை நிறுத்த முடியாமல் போனதைக் குறிப்பிடுகிறாள் என்பது புரிந்தது அவனுக்கு.
“நான் எதுக்குத் தரையில தூங்கணும்? இதுவே உங்களுக்கு ஒரு பணக்காரப் பொண்ணைக் கல்யாணம் பண்ணி வச்சிருந்தாங்கனா நீங்க இப்பிடி பேசுவிங்களா? தங்கவேலு மவதானே உங்களுக்கு இளிச்சவாயி”
கர்ணன் அயர்ந்து போனான். அவனுக்குப் பிரச்சனை மிருணாளினிதானே தவிர தங்கவேலுவின் மகள் என்ற ஸ்தானம் இல்லை.
“எம்மா தங்கவேலு மவளே! போ! போய் மெத்தையிலயே படுத்துக்க” என்றான் பட்டென்று கையெடுத்துக் கும்பிட்டவனாக.
மிருணாளினி வெற்றிச்சிரிப்பு சிரித்தவள் மெத்தையில் தலையணையை வைத்துவிட்டுப் படுத்தாள். அவன் இன்னும் கதவருகே நிற்பதைக் கவனித்தவள் “நீங்க தூங்கல?” என்று கேட்க
“உன் கழுத்துல தாலி கட்டுன பாவத்துக்குத் தரையில தூங்கிக்கிறேன்” என்றான் அவன்.
மிருணாளினி எழுந்து அமர்ந்தவள் “நமக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. இதெல்லாம் கல்யாண வாழ்க்கைல சகஜம். ரொம்ப கூச்சப்படாதிங்க. இங்கயே படுத்துக்கோங்க” என்று சொல்லி தள்ளிப் படுத்துக்கொண்டாள்.
கர்ணன் அதற்கு மேல் பிகு செய்யவில்லை. பெரிய கட்டில்தானே! இன்னொரு பக்கத்தில் அவனும் படுத்துக்கொண்டான்.
விளக்கை அணைத்த பிறகும் அவனுக்கு உறக்கம் மட்டும் வருவேனா என்றது.
பழக்கமற்ற மல்லிகையின் நறுமணம் நாசிக்குள் ஏறியிறங்கியதே புதுவொரு உணர்வு! வரிவடிவமாய் அருகே படுத்திருந்தவள் உறங்கினாலும் அவளது ஆரா (Aura) கர்ணனை உறங்கவிடவில்லை.
‘எப்படி இவளால் மட்டும் இயல்பாக இருக்க முடிகிறது? சின்ன தயக்கம், கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் பயம் இதெல்லாம் அவளிடம் நான் நெருங்குகையில் முகத்தில் தெரிந்ததே! இப்போது அதை விட அருகில் உறங்குகிறாள் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல்! இது எப்படி சாத்தியம்?’
திருமண வாழ்க்கையில் எல்லாமே ‘ஏற்றுக்கொள்வதில் (Acceptance)’ தான் அடங்கியிருக்கிறது. அதை யார் சரியாகச் செய்கிறார்களோ அவர்கள் பயத்தையும் தயக்கத்தையும் ஒதுக்கிவிட்டு வாழ்க்கையைச் சீராக வாழ ஆரம்பிக்கிறார்கள். ஏற்றுக்கொள்ள தயங்குபவர்கள் தடுமாறுகிறார்கள்.
இங்கே மிருணாளினி ஏற்றுக்கொண்டாள். கர்ணனோ ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறான். அவனது தயக்கமும் ஒரு நாள் தீரும். ஆனால் அந்நாள் வரை அவனுக்கும் மிருணாளினிக்குமிடையேயான உறவை அவனது வாய்த்துடுக்கால் கெடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமே என விதி அவனுக்காகக் கவலைப்பட்டது.
மறுநாள் காலையில் கர்ணன் கண் விழித்தபோது அவனது அறையில் மிருணாளினி இல்லை.
ஆனாலும் அருகில் கிடந்த அவளது தலையணையில் மல்லிகைப்பூவின் வாசம் அவளே இங்கே இருப்பது போன்றதொரு மாயையை அவனுக்குள் தோற்றுவித்தது.
மெதுவாக எழுந்து சோம்பல் முறித்தவனுக்குத் தன்னிடம் இருந்தும் மல்லிகைப்பூவின் நறுமணம் வருவது போன்ற மாயை.
“சைக்! தலை வலிக்குதுடா சாமி” என்றபடி எழுந்தவன் குளித்து வேறு ஆடை புனையும்வரை மிருணாளினி அந்தப் பக்கமே வரவில்லை.
மெதுவாக அறையிலிருந்து வெளியே தலைநீட்டியவன் இன்னும் உறவுக்காரர்கள் யாரும் கிளம்பவில்லை என்பதைக் கண்டுகொண்டான்.
அவனைப் பார்த்ததும் புன்னகையைப் பூசிக்கொண்ட முகங்களோடு ஆர்வமாய்க் கேட்கத் துடித்ததார்கள். இலாவகமாக அவர்களைக் கடந்து ஆச்சியைத் தேடிச் சென்றவன் அங்கேதான் மிருணாளினியும் இருப்பதைப் பார்த்தான்.
“நீ ரொம்ப வேலை எல்லாம் செய்யாத. உங்கம்மை உன்னை வீட்டுல எந்த வேலையும் செய்யவிடமாட்டாளாமே! திடீர்னு எல்லா வேலையையும் நீயே செஞ்சனா உடம்புக்கு எதுவும் ஆகிடும். அங்க போனதும் வேலைக்கு ஆள் வச்சுக்க”
ஆச்சி மிருணாளினியிடம் பேசியதைக் கேட்டவன் “இவ அப்பிடியே பூ மேனி. வேலை செஞ்சா அலுப்பு வந்துடும். இந்தக் கிழவி ஓவரா இவளுக்குச் செல்லம் குடுக்குது. அதை வச்சிட்டு இனிமே ஆடுவா. இரு! இப்பவே வந்து இதுக்கு ஒரு ஃபுல்ஸ்டாப் வைக்குறேன்” என்று கறுவிக்கொண்டு அவர்களிடம் வந்தான்.
“வா கர்ணா!” என வாயெல்லாம் பல்லாகச் சொன்ன ஆச்சியைக் கவனியாதவனை போல காட்டிக்கொண்டவன் “நான் எழுந்திருச்சு அரைமணி நேரம் ஆகுது. இன்னும் காபி குடிக்கல. நீ இங்க வந்து கதை பேசிட்டிருக்க. புருசனுக்குக் காபி கொண்டு வரணும்னு அறிவில்ல?” என்று கேட்க
“இத்தனை வருசமா நீயே அடுக்களைக்குப் போய் வாங்கி குடிப்பியே! இப்ப மட்டும் என்னவாம்?” என்று மிருணாளினிக்குப் பதிலாய் ஆச்சியே பதில் சொல்ல
“நான் உன் கிட்ட பேசல கிழவி. நீ பாத்துக் கல்யாணம் முடிச்சு வச்சியே அவ கிட்ட பேசுறேன்” என்றான் கர்ணன் அலட்சியமாக.
மிருணாளினிக்கு அவன் வார்த்தைக்கு வார்த்தை ஆச்சியைக் ‘கிழவி’ என்றதே கடுப்பு. என்னதான் உரிமை என்றாலும் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா?
கடுகடுவென எழுந்தவள் “நான் காபி கொண்டு வந்துடுறேன்” என்ற நகர எத்தனிக்க
“ஸ்ட்ராங்கா, சுகர் கம்மியா இருக்கணும். முடிஞ்சா நீயே போட்டு எடுத்துட்டு வா. காபி போடத் தெரியும்ல?” எனச் சீண்டி அனுப்பிவைத்தான் அவளை.
அவள் போனதும் ஆச்சியிடம் பேச்சு கொடுத்தான்.

“கிழவி நீ ரொம்ப அவளுக்கு இடம் குடுக்குற. இது நல்லதுக்கு இல்ல”
மருதநாயகி அவனை முறைத்தார்.
“அவ யாரு? நம்ம தங்கவேலு மவ. இடம் குடுத்தாலும் என்னல தப்பு?”
“ப்ச்! இது ஒன்னை வச்சுக்கிட்டுத்தான் அவளும் ஓவரா ஆடுறா” என வாய்க்குள் முணுமுணுத்தவன் “அட கிழவி! வீட்டுக்கு வந்த மருமகளை நம்ம கண்ட்ரோல்ல வச்சுக்கணும். என்னத்த நீ இத்தனை வருசம் மாமியாரா இருந்த?” என்று சலித்துக்கொண்டான்.
“நீ சொல்லுற மாதிரி மாமியாரா நான் இருந்திருந்தேன்னா உன் அம்மை என் கிட்ட இவ்ளோ பாசமா இருப்பாளா? என் மருமவளையே நான் அதிகாரம் பண்ணுனதில்ல. இதுல எங்க இருந்து மிருணாவ அதிகாரம் பண்ணுறது? இங்க பாருய்யா! அதிகாரம் என்னைக்கும் அன்பை ஜெயிக்காது”
“அட்வைஸ் நல்லாதான் இருக்கு. ஆனா சிலருக்கு நாம ஈசியா அன்பைத் தூக்கிக் குடுத்துட்டா அவங்க ஓவரா ஆடுவாங்க. எனக்கென்னமோ நீ பாத்துக் கல்யாணம் பண்ணி வச்சியே ஒருத்தி, அவ அந்த மாதிரினு தோணுது”
மீண்டும் மருதநாயகி முறைத்தார். இம்முறை அந்த முறைப்பில் கடுமையேறியிருந்தது.
“அவ ஆடவே செஞ்சாலும் அதை நீ என் கிட்ட சொல்லக்கூடாது. அதுதான்ல புருசன் பொண்டாட்டி உறவு. வந்துட்டான் எனக்குப் பாடம் எடுக்க. உங்க தாத்தனை மாதிரி நொரைநாட்டியம் பேசிட்டுத் திரிஞ்சனா, வேணும்னு நினைக்கப்ப உன் பொண்டாட்டி உன்னை விட்டுத் தூரமா போயிடுவா. பாத்துச் சூதானமா இருந்துக்க. அவ்ளோதான் சொல்லுவேன்! தள்ளிப் போல அங்குட்டு”
அவனை விலக்கிவிட்டு வெளியேறிய மருதநாயகி அறைக்கு வெளியே காபி கோப்பையுடன் நின்ற மிருணாளினியைப் பார்த்ததும் கொஞ்சம் திடுக்கிட்டுப் போனார்.
அவளது முகத்தில் எந்த சலனமுமில்லை.
“ஆச்சி… அவங்க உள்ளதான் இருக்காங்களா?” என்று கேட்டாள் அவள்.
‘நல்லவேளை! இவன் உளறிய எதையும் இந்தப் பெண் கேட்கவில்லை’
நிம்மதி பெருமூச்சு விட்டார் மருதநாயகி.
“உள்ள தான் இருக்கான் மிருணா. நீ காபிய குடுத்துட்டுப் போய் வேற சீலை கட்டிக்கல. சாஸ்தாக்குப் பொங்கல் வச்சிட்டு மறுவீடு போகணும்.”
“சரி ஆச்சி!”
அவர் போனதும் மிருணாளினியின் முகம் கறுத்தது. நடந்தது என்னவென்றால் கர்ணன் பேசிய அனைத்தையும் அவள் கேட்டுவிட்டாள்.
‘இவன் யார் என்னை ஜட்ஜ் செய்வதற்கு? என்னமோ உலகத்தில் இல்லாத ஆண் என்று தன்னையே கற்பனை செய்துகொள்வான் போல! இவனைத் திருமணம் செய்ய நான் தவம் கிடந்த மாதிரியும் இவன் இரக்கபப்ட்டுத் தாலி கட்டிய மாதிரியும் பேசும் audacity இவனுக்கு எங்கிருந்து வந்தது?’
புகைச்சலோடு அறைக்குள் சென்று காபியை அவனிடம் நீட்டியவள் “காபில சுகர் அதிகம்” என்று அவன் குறை சொல்ல வாயெடுத்தபோது அந்த அறையில் இல்லை.
கர்ணனின் பேச்சு யாவுமே அவளுக்கு உதாசீனத்தின் வெளிப்பாடாகவே தெரிந்தன.
‘இதுவே வசதியான குடும்பத்துப் பெண்ணொருத்தியை இவன் மணந்திருந்தால் இப்படி பேசியிருப்பானா?’
அவளது மனம் எப்போதுமே இந்தக் கோணத்தில்தான் யோசித்தது.
யாரும் யாருக்கும் இரக்கப்பட்டு வாழ்க்கை தரவில்லை என்பது அவளது சிந்தனையில் தோன்றவேயில்லை.
சுஜாதா மாதிரி சில விஷமிகள் திருமண மண்டபத்தில் பேசிய பேச்சுகள் அப்படி!
தங்கவேலுவின் பொருளாதார நிலையைக் கூட கணக்கில் எடுக்காமல் அவரது மகளை மருமகளாக்கிக்கொண்டு சந்திரவிலாசத்துவாசிகள் பெரிய தான தர்மத்தைச் செய்துவிட்டது போல அல்லவா அந்த விஷமிகளின் பேச்சு இருந்தது.
நீங்கள் எவ்வளவு தெளிவானச் சிந்தனையோடு இருந்தாலும் சில நேரங்களில் இம்மாதிரியான பேச்சுகள் உங்கள் மனதைக் கலைத்துவிடும். எனில் மிருணாளினி மட்டும் எம்மாத்திரம்?
கர்ணனைத் தவிர இதர சந்திரவிலாசத்துவாசிகள் யாவரும் அவள் கண்களுக்கு அன்பான உறவினர்களாவே தெரிந்தார்கள்.
தனது தந்தையின் நிலையைக் கேலியாகப் பேசிய சுஜாதாவை வினாயகமும் ஆதிராவும் ‘லெஃப்ட் அண்ட் ரைட்’ வாங்கியதை மிருணாளினியும் அறிவாளே!
ஆனால் இந்தக் கர்ணன்?
‘என்னமோ இவன் செல்வசெழிப்பானக் குடும்பத்தில் பிறந்தவன் என்பதால் இவனை நான் மணமுடித்ததாகக் கருதுகிறான். சந்தர்ப்ப சூழ்நிலையால் என்னால் இத்திருமணத்தை நிறுத்த முடியவில்லை. அதைப் பணக்கார வாழ்க்கைக்கு ஆசைப்படுவதாக எண்ணிவிட்டான் போல. இவன் பணம் எனக்கு எதுக்காம்? இன்னும் சில மாதங்களில் நானே கை நிறைய சம்பாதிக்கப் போகிறேன்”
உதட்டைச் சுழித்து அழகு காட்டிவிட்டு அவர்களின் அறைக்குப் போனவள் மடமடவென வேறொரு புடவையை அணிந்துகொண்டாள்.

மற்ற உறவுக்காரர்கள் வீட்டில் இருக்க குடும்பத்தோடு களக்கோடி சாஸ்தா கோவிலுக்குப் பயணமானார்கள் வினாயகத்தின் குடும்பத்தினர்.
அங்கே பொங்கல் வைத்துவிட்டு மிருணாளினியும் கர்ணனும் தங்கவேலுவின் வீட்டுக்கு மறுவீட்டு வைபவத்துக்காகக் கிளம்பினார்கள்.
ஏற்கெனவே கர்ணன் மீது மிருணாளினிக்கு இருக்கும் அதிருப்தி இன்னும் அதிகமாவது போல சூழல் ஒன்று அமையப்போகிறதென இருவருக்கும் அப்போது தெரியாது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

