“கல்யாணம் – ஏதோ ஸ்டெஜ் ட்ராமா மாதிரி இருக்கு நினைக்கவே. இதுல இணையுற நான் ஹீரோயினும் இல்ல. கர்ணன் ஹீரோவும் இல்ல. என்னமோ ரெண்டு எதிரிகள் ஒரு கூரைக்குக் கீழ வாழப்போற மாதிரி தோணுது. நாளைக்கு இந்நேரத்துக்கு ‘பட்டு உடுத்து’ ‘மேக்கப் போடு’னு என்னைப் பாடாப்படுத்துவாங்க. என்ன நடந்தாலும், நாளைக்கு என் கழுத்துல தாலி ஏறிடும். ஆனா, ஒன்னு மட்டும் அந்தக் கர்ணனுக்கு நல்லா புரிய வைக்கணும். இந்தக் கல்யாணம் ஒரு ஆரம்பம்தான், என் சரணாகதி இல்ல. அவன் என்ன வம்பு இழுத்தாலும், நான் பதிலுக்கு ரெடியாத்தான் இருப்பேன். ஹூம்”
-மிருணாளினி
அன்று வாராந்திர பகுப்பாய்வு எனப்படும் ‘வீக்லி ரிவியூ’வுக்கான நாள். கர்ணனுடன் சீனியர் டெவலப்பர் ஒருவரும், QA டீம் உறுப்பினர் ஒருவரும் இணைந்து செய்த பகுப்பாய்வில் வங்கி செயலியில் முக்கியமான ஒரு செயலைச் செய்யும் APIயின் வேகம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.
வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தனது கணக்கில் நடந்த பணப்பரிவர்த்தனைகள் என்னென்னவெனப் பார்க்க பயன்படும் ‘Get account details’ என்ற பகுதிதான் அது.
அவர்கள் முன்னரே தீர்மானித்திருந்த வேகம் இருநூறு மில்லி வினாடிகள். ஆனால் க்ளவுட் மானிட்டரிங்கில் 1.2 வினாடிகள் வரை தாமதமாய் இயங்கியது அந்த பகுதி.
1.2 வினாடி எல்லாம் ஒரு விசயமா என நாம் கருதலாம். இது ஒருவருக்கு ஏற்படும் கால தாமதம் மட்டுமே. ஒரே நேரத்தில் அந்தச் செயலியை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் போது அத்தனை பேருக்கும் இதே போல தாமதமானால்?
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இது ஆப் மீது அவர்களுக்கு அதிருப்தி உருவாகக் காரணமாக அமையும். நாமே சில வங்கி செயலிகள் சரியாக இயங்கவில்லை என்றால் கடுப்போடு இருப்போமே!
அதை மனதில் வைத்து முதற்கட்டத்தில் சரி செய்யவேண்டிய சிக்கலைக் கண்டறிந்து அதற்கானத் தீர்வுகளை டீமிடம் சொல்லிக்கொண்டிருந்தான் கர்ணன்.
சீனியர் டெவலப்பர் நர்மதா, டெவலப்பர் ரகு இருவருமே இது கொஞ்சம் தீவிரமானப் பிரச்சனை என்று புரிந்துகொண்டார்கள்.
“நான் லோக்கல் என்விராண்ட்மெண்ட்ல செக் பண்ணுனப்ப ஸ்பீடா இருந்துச்சு கர்ணன்” என்றாள் நர்மதா.

“லோக்கள் என்விராண்மெண்ட் வேற. க்ளவுட் டேட்டாபேஸ்ல இணைஞ்சிருக்கப்ப இயங்குற விதம் வேற. இந்த API தான் ஒரு அக்கவுண்ட் ஹோல்டரோட பேங்க் அக்கவுண்ட் டீடெய்லையும்., அவங்க செஞ்ச ட்ரான்சக்சனையும் காட்டும். ஏகப்பட்ட அக்கவுண்ட் ஹோல்டர்ஸோட டேட்டாபேஸ்ல இருந்து ஒருத்தரோட ஃபில்டர் பண்ணி எடுக்குறப்ப உண்டாக்குற சிக்கல் இது. இதுல ஒரு சிக்கல் இல்ல. ரெண்டு இருக்கு. நாம மொத்த டேட்டாபேஸ்ல இருந்து ஒருத்தரோட விவரங்களை மட்டும் எடுக்குற விதம் சரியா இல்ல. அதிகமான லோட் அதாவது நிறைய அக்கவுண்ட் ஹோல்டர்ஸ் ஒரே நேரத்துல ஆப்ல லாகின் பண்ணி தங்களோட ட்ரான்சக்சனை செக் பண்ணுனா இந்த டிலே வருது. இது ரெண்டையும் நாம சரி செய்யணும்”
நர்மதாவும் ரகுவும் தலையாட்டினார்கள்.
“நர்மதா நீங்க செக் பண்ண வேண்டியது, நாம எல்லா ட்ரான்சக்சனையும் ஒரே பக்கத்துல கொண்டு வரப் போறோமா? இல்ல பேஜினேசன் மூலமா அடுத்தடுத்தப் பக்கங்கள்ல காட்டப் போறோமாங்கிறதுதான். ரகு நீங்க டேட்டபேஸ் சர்வரோட சி.பி.யூ யூசேஜ் எப்பிடி இருக்குனு பாருங்க. நாம குடுக்குற லோடுக்கு சரியா இல்லனா அதை மேம்படுத்தணும். இன்னைக்கு ஈவ்னிங்குள்ள இந்த இஷ்யூவை நாம சரி பண்ணனும்.”
பிரச்சனையைக் கண்டறிந்து தீர்வையும் சொன்னதும் டீம் மெம்பர்கள் கலைந்தார்கள்.
அவர்கள் சென்றதும் QA டீம் ஊழியரிடம் இந்த திருத்தங்கள் எல்லாம் முடிந்ததும் ஒரே நேரத்தில் 500 நபர்கள் தங்களின் வங்கி கணக்கு விவரங்களை அதில் கேட்பது போல ஒரு சோதனையைச் செய்து பார்க்குமாறு கூறினான் கர்ணன்.
அப்போது வேகம் சரியாக இருக்கிறதா எனக் கண்டறியவே இந்த யுக்தி.
அவரும் சரியென்றுவிட வாராந்திர ரிவியூவில் பாதி வேலைகள் முடிந்தன.
மீட்டிங் முடிந்து கியூபிக்கிளை அடைந்ததும் கர்ணனின் விழிகள் மொபைல் திரையில் படிந்தன. வழக்கம் போல மிருணாளினியிடமிருந்து எந்த அழைப்புகளும் இல்லை.
எதிர்பார்த்ததுதான். ஆனால் மனதுக்குள் எரிச்சல் மூண்டது அவனுக்கு.
நிச்சயதார்த்தம் முடிந்து பத்து நாட்களாகிவிட்டது. அவளிடம் திருமணத்தில் விருப்பமில்லை என்று சொல்லி திருமணத்தை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டவன் ஆதிராவை வைத்து மிருணாளினியின் மொபைல் எண்ணை வாங்கிக்கொண்டான்.
சென்னைக்குத் திரும்பியதும் அவளது எண்ணுக்கு அழைத்தவன் மீண்டும் திருமணத்தை நிறுத்துமாறு சொல்ல அவளோ யோசிக்கிறேன் என்றே கூறினாள்.
“யோசிக்குறதுக்கு இதுல என்ன இருக்கு? உனக்குக் கல்யாணத்துல இஷ்டமில்லனு சொல்லிட வேண்டியதுதானே?”
“என் இடத்துல இருந்து பாத்தா தான் என்னோட தயக்கத்துக்கு உங்களுக்குக் காரணம் புரியும்.” என்றவள் அதன் பிற்பாடு அவனிடம் பேசவில்லை.
அவனும் அவளே அழைக்கட்டுமெனக் காத்திருந்தான். அதற்கு முன்னர் தனது வீட்டாரே அழைத்து திருமணம் நடக்காது என்று சொல்லிவிட்டாலும் மகிழ்ச்சிதான் என்ற மனநிலையில் உலாவியவனுக்குப் புராஜெக்ட் வேலை கழுத்தை நெறித்தது.
இதைக் கச்சிதமாக முடித்தால் அவனுக்கும் துர்ஜோய்க்கும் கரியர் அட்வான்ஸ்மெண்ட் கிடைக்குமே!
அவனது நிலை இவ்வாறு என்றால் மிருணாளினியின் நிலை இன்னுமே சிக்கல்.
மணமுடிக்கப் போகிறவனுக்கு விருப்பமில்லை என்று தெரிந்ததும் திருமணத்தை நடத்த விடுவதற்கு அவளும் தயாராக இல்லைதான். இரண்டு மூன்று நாட்கள் நன்கு யோசித்துத் திருமணத்தில் விருப்பமில்லை என்று சொல்ல தன்னைத் தயார்ப்படுத்தியும் கொண்டவளுக்கு, சொல்ல நினைத்த தினத்தில் மாபெரும் குற்றவுணர்ச்சி மனதில் கூடு கட்டியது.
தங்கவேலுவும் உலகம்மையும் அவளது திருமணத்திற்கான ஏற்பாடுகளை வினாயகம், எழிலரசியோடு முனைப்பாய்ச் செய்த விதத்தைப் பார்த்தவளுக்குத் தொண்டையை அடைத்தது.
திருமணம் நின்றது என்றால் இரு குடும்பத்துப் பெரியவர்களுக்கும் அது மனவருத்தத்தையும் தலைகுனிவையும் உருவாக்குமே என்று தவித்துப் போனாள்.
அதோடு ஆதிராவின் வருங்கால புகுந்தகத்தினரில் நாத்தனார் பிரச்சனைக்குரியவளாகத் தெரிந்தாள். தங்கள் திருமனம் மட்டும் நின்று போனது என்றால் அவள் நிச்சயம் ஆதிராவை இழுத்துவைத்து இல்லாத பிரச்சனையை எல்லாம் உருவாக்குவாள்.
நிச்சயதார்த்தத்தில் அவினாஷ் ஆதிராவின் கழுத்தில் மாலையிடப் போனபோது மாலையின் கண்ணி அருந்து விழுந்ததையே சகுனத் தடை என்றாளே அவள்!
இதில் நிச்சயித்த திருமணம் நின்றது என்றால்?
தானும் கர்ணனும் மட்டும் சம்பந்தப்பட்டிருந்தால் துணிந்து இத்திருமணத்தை நிறுத்திவிடலாம்.
ஆனால் இங்கே ஆதிராவின் எதிர்காலம், இரு குடும்பத்துப் பெரியவர்களின் மகிழ்ச்சி, இரு குடும்பங்களின் கௌரவம் என அனைத்துமே அடங்கியிருக்கின்றன.
இதில் எதைப் பற்றியும் கர்ணனுக்குக் கவலை இல்லையே என்ற கடுப்பு அவளுக்கு.
அவனிடம் பேசாமல் நாட்களைக் கடத்தினாள் பெண். அந்தக் கடந்து போன நாட்களில் பத்திரிக்கை அச்சிடுவது, பாத்திர பண்டங்கள் வாங்குவது, திருமணத்துக்கான ஆடைகள் வாங்குவதென வேலை ஜரூராக நடந்தது.
திருமணத்துக்கு முகூர்த்தப்புடவை எடுக்கப் போன இடத்தில் ஆதிராவும் மிருணாளினியும் இணைந்தே பட்டுப்புடவைகளை அலசினார்கள்.
இறுதியாக ரீகல் ராணி பிங்க் வண்ணத்தில் உடலெங்கும் மலர்களும் கொடிகளும் சதுரவடிவத்தில் இணைந்து அதற்குள் குட்டியாய் சக்கரம் போன்ற புட்டாவுடன் அழகான விவாகா பட்டுப்புடவை மிருணாளினிக்கும் ஆதிராவுக்கும் பிடித்துவிட அவர்கள் அந்தப் புடவையைத் தேர்வு செய்தார்கள்.

திருமணத்துக்குப் பிறகு தினசரி அணிய சில குர்தி செட்கள் மட்டும் வாங்கிக்கொண்டாள் மிருணாளினி.
இதற்கிடையே ஆதிரா கர்ணனின் எண்ணுக்கு வீடியோ காலில் அழைத்து மிருணாளினிக்குத் தேர்வு செய்த புடவையைக் காட்ட அவனோ அசிரத்தையாகப் பதிலளித்தான்.
“புடவைய நானா கட்டப்போறேன் ஆதி? அதை உடுத்திக்கப் போறவளுக்குப் பிடிச்சிருக்குனா இதையே வாங்கிக்கோங்க”
ஆதிராவின் முகத்தில் யோசனைக்கோடுகள்!
“கல்யாணம் உனக்குத்தான்! நீ என்னமோ பக்கத்துவீட்டுக்காரன் கல்யாணம் மாதிரி பிஹேவ் பண்ணுறண்ணா”
ஆதிரா இவ்வாறு சொன்னதும் சுதாரித்தவன் வாயெல்லாம் பல்லாகச் சிரித்தான்.
“புராஜெக்ட் ஹெக்டிக்கா இருக்கு ஆதி. புரிஞ்சிக்க” என்ற சமாளிப்பு வேறு!
கூடவே இத்தனை நாட்கள் ஒரு முறை கூட மொபைலில் அழைத்து திருமணத்தை நிறுத்துவதற்கான முயற்சி குறித்துப் பேசாத மிருணாளினி மீது கடுப்பும்!
தங்கையிடம் அதை மறைக்கவே இந்த அசட்டுச்சிரிப்பும் சமாளிப்பும். ஆதிரா புத்திசாலி! குரல் மாறினாலே மனநிலையைக் கிரகித்துவிடும் அளவுக்கு அதீதமான புத்திசாலி.
அண்ணனிடம் ஏதோ பிரச்சனை எனப் புரிந்துகொள்ள அவளுக்கு அதிகநேரம் எடுக்கவில்லை.
“புராஜெக்ட், கம்பெனி, கரியர் அட்வாண்ஸ்மெண்ட் இதுக்கெல்லாம் வெளிய ஒரு உலகம் இருக்குண்ணா. அந்த உலகத்துல நாங்க எல்லாரும் உன் கல்யாணத்துக்காக ஆர்வமா தயாராகிட்டிருக்கோம். இதை மறந்துடாத” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள் அவள்.
கர்ணன் கண்களை மூடிச் சமாளித்தவன் வீடியோ கால் பேசுகையில் திரையின் ஒரு ஓரமாய் மிருணாளினி பதுங்கி தலை நீட்டியது நினைவுக்கு வந்ததும் பற்களை அரைத்தான்.
“யோசிக்கிறேன் யோசிக்குறேன்னு சொல்லி என் தலையில மொளகா அரைச்சிட்டல்ல நெட்டைக்கொக்கு. இருடி உனக்கு இருக்கு”
கறுவிக்கொண்டவனுக்கு மேற்கொண்டு மிருணாளினியைப் பற்றி நினைக்க நேரமில்லாமல் போனது.
புராஜெக்ட் ஒவ்வொரு கட்டமாக நகர நகர சின்னச்சின்ன திருத்தங்கள்! சின்ன சின்ன உரசல்கள்! எப்படியோ இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டது அவர்களின் புராஜெக்ட்.
முழு வங்கி செயலியும் தயாரானது. புராஜெக்ட் க்ளையண்டிடம் ஒப்படைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக Sign off செய்தார்கள் கர்ணனும் அவனது குழுவும்.
இனி புதிய புராஜெக்ட் வரும்வரை அவர்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்டுக்கான நேரம் கிடைக்கும். இதெல்லாம் கடந்து பொதுவான சில பணிகளை மற்ற டீம்களுடன் சேர்ந்து செய்வார்கள்.
டீம் லீடர் என்ற வகையில் கர்ணனுக்கு டெக்னிக்கல் டாக்குமெண்டேசனை ஒரு முறை சோதித்து உறுதி செய்வது, இந்தப் புராஜெக்டில் டீம் மெம்பர்களின் செயல்பாடு எப்படி இருந்ததென பின்னூட்டங்கள் வழங்குவது, இனி புதிய புராஜெக்ட் கிடைத்தால் அதில் யார் யாரைத் தனது டீமில் இணைக்கலாமெனத் திட்டமிடுவதில் நாட்கள் கடந்தன.
புராஜெக்ட் தொடர்பான வேலைகள் தவிர Non – Project வேலைகளை அவர்கள் செய்துகொண்டிருந்த சமயத்தில் கர்ணனின் திருமணநாள் நெருங்கியிருந்தது.
அவனது விடுப்பு விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு வாரம் மட்டுமே!
அவன் அதற்குள் மேற்சொன்னவற்றை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டான். ஏனெனில் அந்த விடுப்பு முடிந்து அவன் பணிக்குத் திரும்பும்போது புதிய புராஜெக்ட் ஒன்று முடிவாகலாம் என்ற தகவலைக் கூறியிருந்தான் புராஜெக்ட் மேனேஜரான விக்ரம்.
திருமணத்துக்கு முந்தைய நாள் அவன் அம்பாசமுத்திரம் செல்லத் தயாரானான். விமானப் பயணம்தான்! அவனுடன் துர்ஜோயும், அவனது குழுவினரும் வருவதாக ஏற்பாடு.
திருமண நாளன்று மாலையில் துர்ஜோயும் கர்ணனின் குழுவினரும் சென்னைக்குத் திரும்பிவிடுவதாகத் திட்டமிட்டிருந்தார்கள்.
திருமணத்துக்குச் செல்ல கர்ணன் தனது நண்பர்களுடன் விமானம் ஏறிய அதே நேரத்தில் அம்பாசமுத்திரத்தில் உறவுக்காரர்களால் திருமண மண்டபம் கலகலப்பாகியிருந்தது.
மணப்பெண்ணுக்கான அறையில் மிருணாளினியின் கையில் மெஹந்தி வைத்துக்கொண்டிருந்தார்கள்.
அந்நேரத்தில் “சிவகாமி மதினி வந்துட்டாங்க போல” என்றபடி எழிலரசி அவரை வரவேற்கச் சென்றுவிட்டார்.
அந்த அறையில் சில உறவுக்காரப் பெண்களும், மிருணாளினியின் பெரியம்மாவும் அவரது மகள் உஷாவும் இருந்தார்கள்.
மெஹந்தி பெண்ணுடன் உஷா பேசிக்கொண்டிருக்க மிருணாளினியின் பெரியம்மா மெதுவாகத் தனது சலிப்பைக் காட்டினார்.
“உன் நாத்தனாரோட புகுந்தவீட்டு ஆளுங்க எப்பிடிப்பட்டவங்க மிருணா?” என அவர் வினவ
“என்னாச்சு பெரியம்மா?” என்றாள் மிருணாளினி.
“அந்தச் சுஜாதா அப்ப இருந்து கொழுந்தன் கிட்ட நக்கலும் கேலியுமா பேசிட்டிருக்கா. வெத்தலைப்பெட்டி எல்லாம் வைக்கலையானு நுழைச்சு நுழைச்சுக் கேள்வி கேக்குறாடி. உன் அம்மையும் அப்பாவும் முடிஞ்சவரைக்கும் சீரிவரிசை, பண்டபாத்திரத்தைச் சேர்த்துட்டாங்க. இவ ஒருத்தி இப்ப வந்து நொச்சு பண்ணிட்டிருக்கா”
தன்னை விட ஒருத்தி நக்கல் கேலி செய்து அடுத்தவர் மனதை வருத்தும் வேலையைச் சிறப்பாகக் கையாளுவதில் பெரியம்மாவுக்குச் சின்னதாய் கடுப்பு.
மிருணாளினியின் முகம் இதில் வாடிவிட்டது.
திருமணம் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம். ஆனால் இந்தியத் திருமணங்களில் தான் பெரும்பாலும் அற்பத்தனமானக் காரியங்களுக்காகப் பெண்வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் மனவருத்தத்துக்கு ஆளாவார்கள்.
சாப்பாடு சரியில்லை, சீர்வரிசை சரியில்லை, அந்தச் சடங்கு இல்லை, இந்தச் சம்பிரதாயம் இல்லை என்று குறை சொல்ல ஆயிரம் காரணங்கள் கிடைக்கும் சில கலகக்காரர்களுக்கு.
சுஜாதாவும் அப்படிப்பட்டவர்களில் ஒருத்தி. அவளை அடக்க ஆதிரா ஒருத்தியால் மட்டுமே முடியுமென எண்ணிக்கொண்டாள் மிருணாளினி.
அதே நேரம் அந்த சுஜாதா தங்கவேலுவிடம் குறை பேசிக்கொண்டிருந்தாள்.
“கர்ணனும் அவன் குடும்பமும் உங்களுக்குத் தெரிஞ்சவங்கதான். உங்க நிலமை தெரிஞ்சு ஏதோ உங்களால முடிஞ்சதைச் செய்ங்கனு அவங்க சொல்லுவாங்க. அதுக்குனு இவ்ளோ கம்மியாவா செய்விங்க? போன வாரம் குத்துக்கல்வளசைல ஒரு கல்யாணம்! சீரும் பண்டபாத்திரமும் மட்டுமே ஒரு ரூம் நிறைய அடுக்கி வச்சிருந்தாங்க. பஞ்சபாத்திரம், விளக்கு எல்லாம் பித்தளைல ஒரு செட். வெள்ளில ஒரு செட்! அது போக வெள்ளில பல்லாங்குழி பலகை, தேங்கா, பிள்ளை மாத்துறதுக்கு வெள்ளி பிள்ளை பொம்மைனு அவ்ளோ சீர். பழம், சாக்லெட்னு தனித்தனியா அழகான மூங்கில் கூடைல ராப் பண்ணி ரிப்பன் கட்டி அலங்கரிச்சிருந்த விதம் இன்னும் என் கண்ணுக்குள்ளயே நிக்குது. அதுல பாதி கூட நீங்க செய்யலையே!”
அந்நேரத்தில் மருதநாயகியும் அங்கே இருந்தார். அவரது முகத்தில் கடுகடுப்பு.
“தங்கவேலு எங்க குடும்பத்துல ஒருத்தன். எங்களுக்குள்ளவே நாங்க சீர் வாங்கி குடுத்துக்குற மாதிரி இருக்கும்னு தான் பெருசா எதுவும் வேண்டாம்னு எழில் சொல்லிட்டா. பிள்ளை மாத்துறதுக்கு என் கல்யாணத்துல எங்கம்மா குடுத்த பித்தளை பிள்ளை பொம்மை இருக்கு. அது ராசியானது. அதை வச்சு செஞ்சுக்கலாம் அந்தச் சடங்கு எல்லாம்” என்று சிடுசிடுத்தார் அவர்.
அதற்கும் சுஜாதா அடங்காமல் பேச எத்தனிக்கவும் அந்தப் பக்கமாக வந்த வினாயகம் அவளது பேச்சைக் கேட்டு எரிச்சலடைந்தார்.
“எம்மா சுஜாதா! இப்ப உனக்கு என்ன பிரச்சனை?” என்றபடி வந்தவரிடம்
“அதில்லங்க மாமா, நம்ம கர்ணன் தம்பியோட லெவலுக்கு எவ்ளோ நல்ல குடும்பத்துச் சம்பந்தம் எல்லாம் வரும்? நீங்க ஏதோ மனசு இரங்கி, இவரோட மகளை மருமகளாக்க நினைச்சா,…” என எகத்தாளமாகப் பேச ஆரம்பித்த சுஜாதா அவரது முறைப்பில் வாயடைத்துப் போனாள்.
“தங்கவேலு என் சம்பந்தி. என் சம்பந்திய என் கிட்டவே குறை சொல்லுறது எந்த வகைல நல்ல மனுசி செய்யுற காரியம்னு தோணுது உனக்கு? என் சம்பந்திக்குத் தெரியும் அவரோட மகளுக்கு என்ன செய்யணும்னு. உன் வயசு என்ன? தங்கவேலு வயசு என்ன? அவர் கிட்ட நீ என்ன தோரணைல பேசுறம்மா? உனக்கு இந்த உரிமைய யார் குடுத்தது? இனிமே அவர் கிட்ட நீ சீர் செனத்தினு எதைப் பத்தியும் பேசக்கூடாது. கிளம்பு” என்று உறுமித் தீர்த்தார் அவர்.
வினாயகத்தின் ருத்ர ரூபத்தில் சுஜாதா நடுங்கி கண்களில் கண்ணீர் பொங்க அங்கிருந்து ஓடி விட மருதநாயகியின் முகத்தில் சோர்வு!
தங்கவேலுவை உலகம்மை தேடுவதாக வினாயகம் அனுப்பிவைத்தார். அவர் சென்றதும் மருதநாயகி தனது ஆதங்கத்தை மகனிடம் கொட்டினார்.
“ஐயா வினாயகம்! இவ இன்னும் என்னென்ன கலகத்தைப் பண்ணப்போறாளோ? இவ இருக்குற இடத்துல ஆதிரையோட வாழ்க்கை என்ன ஆகுமோ?” என்றார் அவர் கவலையுடன்.
“நான் வைத்தியநாதன் கிட்ட பேசுறேன்மா. நீ கவலைப்படாத” என்று தைரியம் சொன்ன வினாயகம் எழிலரசியைத் தேடிக்கொண்டு போய்விட்டார்.
இது போல சின்ன சின்ன கலகங்களுடன் திருமணத்துக்கு முந்தைய மாலை கடந்து போனது.
திருமணநாள் இனிமையாகவே விடிந்தது மற்ற அனைவருக்கும். கர்ணன் – மிருணாளினிக்கு மட்டும் சின்ன பரபரப்போடும் குழப்பத்தோடும் விடிந்தது எனலாம்.
‘நான் திருமணத்தை நிறுத்தவில்லை என்று கோபமாய் இருப்பானோ? கோபப்பட்டு என்னிடம் அவன் வேறுவிதமாக நடந்துகொண்டால் அதை நான் எப்படி சமாளிப்பேன்?’ இது மிருணாளினியின் கவலை.
‘தேவையில்லாமல் என்னுடன் வாழ்க்கையைப் பிணைத்து இந்தப் பெண் அவளது வாழ்க்கையைச் சிக்கலாக்கிக்கொள்கிறாள். நான் அத்துணை முறை சொல்லியும் திருமணத்தை நிறுத்தாதவளின் பிடிவாதத்துக்கு வாழ்நாள் முழுவதும் நான் தலைவணங்கும் நிலை வருமோ?’ இது கர்ணனின் யோசனை.
இருவேறு துருவங்களாய் சிந்தனையிலும் செயலிலும் தனித்துத் தெரிபவர்கள் மணமேடையில் சந்தித்துக்கொண்டபோது அவர்களின் விழிகளில் எந்த நேசமும் ஆரோக்கியமான அதிர்ச்சியும் இல்லை.
‘மவளே! சொல்ல சொல்ல கேக்காம கல்யாணமேடை வரைக்கும் என்னைக் கொண்டு வந்துட்டல்ல?’ என்ற கடுப்பு கர்ணனின் கண்களில்.
‘இப்பவே அதிகாரமா பாக்குறான்! எப்பவும் இவன் சொல்லுறதை நான் கேக்கணும்னு எதிர்பாப்பானோ? லூசுத்தனமா இவன் எதையாச்சும் சொன்னான்னா அதெல்லாம் என்னால செய்ய முடியாது’ என்ற பிடிவாதம் மிருணாளினியின் கண்களில்.
அவள் தன்னருகே அமர்ந்ததும் இத்துணை நேரம் கண்டுகொள்ளாத கர்ணனின் விழிகளில் பார்வைக்குக் கிடைத்தது அவளது கன்னங்களின் பளபளப்பு.
“ஹைலைட்டர் அதிகமாகிடுச்சு போல” என்று அலட்சியமாக எண்ணிக்கொண்டவனுக்கு எப்போதுமே அவளது கன்னங்களில் அந்த மினுமினுப்பு இருக்கும் என்பது நினைவுக்கு வந்தது.
“கெட்டி மேளம்! கெட்டி மேளம்!”
யாரோ சொல்ல ஐயர் சொன்னபடி மாங்கல்யத்தை எடுத்தவன் மிருணாளினியின் கழுத்தில் அதை அணிவிக்க அட்சதையும் பூக்களுமாய் ஆசிர்வாதத்தைத் தூவினார்கள் பெரியவர்களும் உறவினர்களும்.
மிருணாளினியின் இதயத்தில் திக் திக் உணர்வு!
தோளோடு வளைத்து கர்ணன் அவளது நெற்றியில் குங்குமிடுகையிலேயே “அடியே அமுக்குணி! வம்படியா கல்யாணம் பண்ணிக்கிட்டல்ல” என்று சிடுசிடுக்க
சட்டென அவனை முறைத்தவள் “ஆமா! நான் ஒன்னும் உங்களை மாதிரி சுயநலவாதி இல்ல” என்றாள் கடுப்போடு.

இருவரும் சண்டைக்கோழிகளாய் முறைக்க நிலமை புரியாமல் போட்டோகிராபர் இடையில் குரல் கொடுத்தார்.
“மாப்பிள்ளை சார் அவங்க தோளை அணைச்சு சிரிச்சுக்கிட்டே ஒரு போஸ் குடுங்க”
“இவன் சிரிச்சிட்டாலும்…” என்று மனதுக்குள் மிருணாளினி அழகு காட்டியபோதே அவளது தோளை அணைத்துச் சிரித்தான் கர்ணன்.
மிருணாளினி இனி என்ன செய்ய முடியும்? அவளும் சிரித்தாள்.
‘அடடா! என்ன அழகான ஜோடி’ என்று அனைவருக்கும் சிலாகிக்க இருவரும் மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டார்கள்.
இந்த ஜோடியின் வாழ்க்கையில் இனி என்னென்ன களேபரங்கள் அரங்கேற போகிறதோ!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

