“என் வாழ்க்கைய நான் அழகா டிசைன் பண்ணிட்டிருக்குறப்ப வேற ஒருத்தர் வந்து கை வச்சு கலைக்குற மாதிரி இருக்கு. என் மனசுக்குள்ள ரெண்டு பேர் தீவிரமா சண்டை போட்டிட்டிருக்காங்க. ஒருத்தர் “பேரண்ட்ஸ் சந்தோசமா இருக்காங்க. கல்யாணம் தானே? பண்ணிக்க”னு சொல்லுறாங்க. இன்னொருத்தர் “போடி இவளே! இப்ப தான் உன் லைஃப் ஆரம்பிக்கவே செஞ்சிருக்கு. வேலையில கவனம் செல்லுத்தாம என்ன கல்யாணம் வேண்டியது இருக்கு”னு என்னைத் திட்டுறாங்க. ஒரு மாதிரி மைண்ட் குழப்பமா இருக்கு.”
-மிருணாளினி
நிச்சயதார்த்த தேதியைக் குறித்ததும் கர்ணனுக்குத் தகவல் சொல்லிவிட்டார் வினாயகம். அவனும் நிறுவனத்தில் விடுப்புக்கு விண்ணப்பித்தான்.
அதே நேரத்தில் தனக்கு இவ்வாறு பெண் பார்த்திருக்கிறார்கள் என்று துர்ஜோயிடம் மட்டும் இரகசியமாகக் கூறியிருந்தான் அவன். தனக்கு இத்திருமண ஏற்பாட்டில் விருப்பமில்லை என்பதையும் பதிவு செய்தான்.
“அந்தப் பொண்ணு உனக்கு ஏத்தப் பொண்ணா கூட இருக்கலாம் கர்ணா. நல்ல குணமானு மட்டும் பாருடா. பெங்காலில ஒரு பழமொழி உண்டு. ‘ஷோங்ஷார் ஷூகேர் ஹோய் ரோமோனீர் குணே’. ஒரு நல்ல குணமுள்ள பொண்ணாலதான் குடும்ப வாழ்க்கைய மகிழ்ச்சியா ஆக்க முடியும்னு அதுக்கு அர்த்தம். நீ இதை மட்டும் யோசி. தேவையில்லாத குப்பைய உன் மனசுல இருந்து தூக்கிப் போட்டுடு” என நல்ல நண்பனாகக் கர்ணனுக்குத் தக்க சமயத்தில் துர்ஜோயும் அறிவுரை வழங்க தயங்கவில்லை.

அதைக் கேட்க கர்ணன் தயாராக இருக்க வேண்டுமே!
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவனது நிலை இழுபறியாக இருக்க, இன்னொரு பக்கம் மிருணாளினியின் நிலை பரிதாபம்! அவளுக்குத் திருமணத்தில் சம்மதம் தான்! ஆனாலும் ஏதோ ஒரு தடை.
எப்படியும் கர்ணனுக்குத் திருமணம் முடிவானத் தகவலை அவனது குடும்பத்தினர் சொல்லியிருப்பார்கள். அவனிடமிருந்து என்ன எதிர்வினை வந்திருக்குமெனத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மிருணாளினிக்கு.
அதை எப்படி தெரிந்து கொள்வதெனப் புரியாமல் நாட்களைக் கடத்தினாள்.
பொதுவாகப் பெண் பேசி முடித்துவிட்டாலே மொபைல் எண்கள் பரிமாறப்பட்டு ஆணும் பெண்ணும் பேசிக்கொள்வது இன்றைய ஏற்பாட்டுத் திருமணங்களில் சகஜமான ஒன்றாகிவிட்டது.
மிருணாளினியின் மனதுக்குள்ளும் கர்ணனிடமிருந்து ஏதாவது மொபைல் அழைப்பு வருமா என்ற ஆவல் எழாமல் இல்லை.
பெரிதாக ஒன்றுமில்லை.
‘திடீரென அனைத்தும் முடிவானதால் உனக்கு அதிர்ச்சியாக இருக்கும். பயப்படாதே! பார்த்துக் கொள்ளலாம்!’ என்ற தைரியமான அறிவுரை ஒன்றையே அவள் விரும்பினாள்.
மற்றபடி கல்யாணக்கனவுகள், உல்லாசமான மனநிலையில் எழும் பேச்சுகள் என எதையும் அவள் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் நாட்கள் தான் கடந்ததேயொழிய கர்ணன் என்ன மனநிலையில் உள்ளான் என்பதைப் பற்றிய எந்தத் தகவலும் அவளுக்குக் கிடைத்தபாடில்லை.
அதற்கு பதிலாக அவனது தமக்கை ஸ்வேதா பேசினாள். முதலில் வாழ்த்தியவள் பின்னர் அவளுக்குப் பெங்களூருவிலிருந்து என்ன வாங்கி வரட்டுமெனக் கேட்க மிருணாளினிக்கோ எதைக் கேட்பதெனத் தெரியவில்லை.
“உங்க இஷ்டம்கா” என்றாள் அமைதியாக.
“அக்காவா? உன் வருங்காலப் புருசனுக்குத் தான் நான் அக்கா. உனக்கு மதினி. உறவுமுறைய மாத்தாத தங்கமே! எங்க வீட்டுக் கிழவி காதுல மட்டும் இது விழுந்திருக்கணும். நாலு பக்கத்துக்கு லெக்சர் அடிக்கும்.”
ஸ்வேதா சொன்ன விதத்தில் மிருணாளினி சிரித்துவிட்டாள்.
“நீ கேம்பஸ் இண்டர்வியூல செலக்ட் ஆகிருக்கனு அம்மா சொன்னாங்க. சென்னைக்குப் போனதும் கொஞ்சம் உன்னை ரிலாக்ஸ் பண்ணிக்க. அப்புறம் வேலை, ஃபேமிலிய பேலன்ஸ் பண்ணுறதுனு டைம் பறந்துடும். அப்புறம் குட்டீஸ் வந்துட்டா ‘மீ டைம்’னு ஒன்னு இருக்கவே இருக்காது”
ஸ்வேதா தோழமையோடு பேசியதில் மிருணாளினிக்கும் மனதுக்குக் கொஞ்சம் இதமாக இருந்தது.
சரியாக நிச்சயதார்த்தத்துக்கு இரண்டு நாட்கள் மட்டும் இருக்கையில் மதியவுணவுக்கு வந்த தங்கவேலு மகளிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.
“ஆதிம்மா இந்தக் கல்யாணத்துல உனக்கு முழு சம்மதம் தானானு கேட்டா மிருணா. எனக்கு இதுநாள் வரை இப்பிடி கேக்கணும்னு தோணல. உனக்கு முழு சம்மதம்தானல?”
தந்தை இவ்வாறு கேட்டதும் மிருணாளினியின் மனம் இன்னும் நெகிழ்ந்தது.
மில்லில் நடந்ததை விவரித்தார் தங்கவேலு.
ஆதிரா மிருணாளினியின் சம்மதத்தை மட்டும் கேட்கவில்லை. அவளது வேலையைக் குறிப்பிட்டும் பேசினாளாம்!
“எந்த மகளும் அப்பாவோட நம்பிக்கைய உடைக்க நினைக்குறதில்ல. அதனாலதான் அப்பாக்கள் ரொம்ப கவனமா அவளுக்கான வாழ்க்கைத்துணைய தேர்ந்தெடுக்கணும்னு சொன்னா ஆதிம்மா”
தங்கவேலு சொன்ன இந்தச் செய்தி மிருணாளினியை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தந்தை மேல் கழுவ சென்றுவிட அவரிடம் ஆதிராவின் மொபைல் எண்ணை வாங்கிக்கொண்டாள்.
மாலையில் ஆதிரா ஓய்வாக இருக்கும் நேரத்தில் அவளது எண்ணுக்கு அழைத்தாள்.
முதல் ரிங்கிலேயே அழைப்பு ஏற்கப்பட்டு “ஹலோ” என்று ஆதிராவின் குரல் கேட்டது.
“நான் மிருணா பேசுறேன்”
“ஹான்… சொல்லு.. சொல்லுங்க மதினி”

அவளது மதினி என்ற அழைப்பில் மிருணாளினி ஜெர்க் ஆனாலும் அதைக் குரலில் காட்டிக்கொள்ளவில்லை.
“அது… நீங்க அப்பா கிட்ட எனக்குக் கல்யாணத்துல சம்மதமானு கேட்டிங்களாம்”
“ஆமா! எல்லாம் திடீர்னு நடந்துடுச்சுல்ல” மறுமுனையில் ஆதிராவின் குரலிலும் சின்னதாய்க் கவலை தெரிந்தது. தனக்காக யோசிக்கிறாள் இவள் என்று புரிந்துகொண்டாள் மிருணாளினி.
“உண்மைதான்! ஆனா… எனக்குக் கல்யாணத்துல விருப்பம் தான்” என்று சொல்லிவிட்டாள் அவளிடம்.
ஆனால் ஆதிரா நம்ப வேண்டுமே!
“இப்பவும் உங்க குரல்ல தயக்கம் தெரியுது” என்றாள் அவள்.
“ரொம்ப தேங்க்ஸ்” மிருணாளினி நன்றி சொன்னவள் “என் விருப்பத்துக்கு நீங்க முக்கியத்துவம் குடுக்குறது எனக்குச் சந்தோசமா இருக்கு. உங்களை மாதிரிதானே உங்க குடும்பமும் இருப்பாங்க? எனக்கு இந்தக் கல்யாணத்துல முழு சம்மதம்”
பின்னர் பொதுப்படையானப் பேச்சுக்குப் பிறகு அழைப்பை முடித்துக்கொண்டாள் மிருணாளினி.
பயம் குறைந்து தயக்கம் மட்டும் நிறைந்திருக்க நிச்சயதார்த்தத்தை எதிர்கொண்டாள் மிருணாளினி. அதுவும் இரட்டை நிச்சயதார்த்தம்.
கர்ணன் புதிய புராஜெக்டில் பிசியாக இருந்ததால் அவனால் நிச்சயதார்த்தத்தின் காலையில் தான் ஊருக்கே வர முடிந்தது. அவனது டீம் மொத்தமும் அவனை வாழ்த்தி வழியனுப்பி வைத்தது, நர்மதாவைத் தவிர.
நிச்சயதார்த்தத்தின் காலையில் சந்திரவிலாசத்துக்கு வந்து சேர்ந்தவன் நெருங்கிய உறவுக்காரர்களால் நிறைந்திருந்த வீட்டில் தனது அறைக்குச் செல்லும் முன்னர் நிறைய உரிமைப்பேச்சுகள், கிண்டல்களைச் சந்திக்க நேர்ந்தது.
“இவங்க வேற! நிலமை புரியாம” என்று அவன் புலம்பியபோதே ஸ்வேதாவுடன் வந்தார் அவளது தோழன் மகிழ்மாறனின் அன்னை சிவகாமி.
“பார்றா! பையனுக்கு இப்பவே கல்யாணக்களை வந்துடுச்சு”
“ஏன் அத்தை நீங்களுமா?” என அவன் பரிதாபமாகக் கேட்க
“என்னடாப்பா நீ இவ்ளோ சலிச்சிக்கிற? உங்க ஊர் ஆலமரத்தடில பிள்ளையாருக்குத் துணையா போய் உக்காந்திடுவியோனு எழில் மதினி எத்தனை நாள் புலம்பிருக்காங்க தெரியுமா?” என்றார் அவர்.
“நம்ம ஊர்லதான் பிள்ளையார் பிரம்மச்சாரி. வடக்குல அவருக்கு சித்தி புத்தினு ரெண்டு ஒய்ப் அத்தை”
அவன் ஏறுக்குமாறாக பேசும்போதே மருதநாயகி வந்துவிட்டார்.
அவர் இன்னும் ஏதாவது பேசி கடுப்பைக் கிளப்புவாரென நைசாக நழுவித் தனது அறைக்குள் புகுந்துகொண்டான்.
குளித்து உடைமாற்றியவன் யாரோ கதவைத் தட்டவும் திறந்தான். ஸ்வெதாவின் கணவன் கவின் நின்று கொண்டிருந்தான்.
“வாங்க மாமா! ஊர்ல அத்தை மாமா எல்லாம் சௌக்கியமா?” எனக் குசலம் விசாரித்த மைத்துனனிடம்
“உன் நிச்சயதார்த்தத்துக்கு நீயே இன்னைக்குக் காலையிலதான் வர்ற. இதுல்லாம் நியாயமா?” என்றான் அவன்.
“புது புராஜெக்ட் மாமா! ரெண்டு மாசம் தான் டைம்”
“புரியுது. மிருணாளினி கோச்சுக்கலையா நீ இப்ப வந்ததுக்கு?”
கவின் கேட்கவும் புருவம் சுருக்கினான் கர்ணன்.
“அவ என்ன சொல்லுறது? நாங்க இதுவரைக்கும் பேசிக்கிட்டதே இல்ல மாமா”
கவின் திகைத்துப் போனான்.
“டேய் உனக்கு அந்தப் பொண்ணை உறுதி பண்ணி எவ்ளோ நாளாகுது? இன்னுமா போன்ல பேசிக்கல நீங்க?”
“சொன்னேனே மாமா! புராஜெக்ட் ரொம்ப ஹெக்டிக்கா போகுதுனு”
“ப்ச்! வேலை எப்பவும் இருக்கும் கர்ணா. அந்தப் பொண்ணுக்கும் சில எதிர்பார்ப்பு இருக்கும்ல”
“அப்ப அவளே கால் பண்ணிருக்கலாமே?”
“பொண்ணுங்க எப்படா முதல்ல அப்ரோச் பண்ணுனாங்க? நாம தான் பேசணும் கர்ணா”
கர்ணன் சலிப்பாய் சோம்பல் முறித்தான்.
“என்ன பேசுறது மாமா? அந்த நெட்டை கொக்கு கிட்ட இதுவரை நான் பேசுனதில்ல”
“பேசுனதில்ல! ஆனா பட்டப்பேர் மட்டும் வைப்பீராக்கும்? போடா டேய்! இன்னும் கொஞ்சநேரத்துல நிச்சயதார்த்தம். இதுக்கு அப்புறமாச்சும் அந்தப் பொண்ணு கிட்ட பேசு”
கவின் அறிவுரை சொல்லிவிட்டுப் போக சற்று நேரத்தில் அவினாஷ் குடும்பத்தினரும் வருகை தந்தார்கள். தங்கவேலுவும் குடும்பத்தோடு வந்துவிட இரட்டை நிச்சயதார்த்தங்களுக்காக மணமக்களும் தயாரானார்கள்.
சபையில் பெற்றோருடன் அமர்ந்திருந்த கர்ணன் மிருணாளினியையும் ஆதிராவையும் சபையில் அமரவைத்தபோது தலையை உயர்த்தினான்.
அழகான கரும்பச்சை வண்ண பட்டுப்புடவையில் அழகாகவே தெரிந்தாள் மிருணாளினி. ஆதிராவின் அழகுக்கும் குறைவில்லை.
கர்ணனின் கண்களைச் சந்தித்ததும் மிருணாளினியின் கண்கள் அலைபாய்ந்தன. அவை சொல்ல வரும் செய்தியை அறியாமல் அவன் மனமும் அலைபாய்ந்தது. ஆனால் முடிவை அவன் எடுத்திருந்தான் எப்போதோ!
நிச்சய ஓலை வாசித்தார்கள். தாம்பூலம் மாற்றினார்கள்.
புதுமையான எந்த பழக்கவழக்கங்களும் இல்லை. குறிப்பாக மோதிரம் மாற்றும் பழக்கம்.
ஆதிராவின் வருங்காலக் கணவன் அவினாஷின் தமக்கை சுஜாதா கொஞ்சம் பழமைவிரும்பியாம்! அதனால் மோதிரம் மாற்றும் வழக்கம் எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டாளாம்!
திருமணத்துக்கு முன்னர் மணமக்களை ஜோடியாக நிறுத்தி போட்டோ எடுக்கவும் அவள் சம்பிரதாயத்தைக் காரணம் காட்டி எதிர்ப்பு சொன்னதால் மணமக்களுக்குப் பேசிக்கொள்ளும் வாய்ப்பே இல்லை.
மாலையைப் போட்டு அருகருகே நின்ற ஜோடிகளைப் பெரியவர்கள் பூ தூவி ஆசிர்வதித்தார்கள்.
அப்போதுதான் முதல் முறையாக கர்ணனும் மிருணாளினியும் இவ்வளவு அருகில் முதன்முதலில் சந்தித்துக்கொள்கிறார்கள்! இருவருக்கும் என்ன பேசுவதெனத் தெரியவில்லை.
மிருணாளினியின் கூந்தல் அலங்காரத்தில் மாலை அடிக்கடி சிக்கிக் கொள்ளவும் அவள் பிடறியைத் தடவிக்கொண்டே இருந்தாள். கூந்தலை விடுவிக்க விடுவிக்க மீண்டும் அது சிக்கிக்கொண்டது.
போதாக்குறைக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கொண்டு வந்த நகைகள் வேறு பாரமாய்!
கர்ணன் எப்படியாவது அவளிடம் பேச்சை ஆரம்பிக்கவேண்டுமெனக் காத்திருந்தான் அல்லவா! அவன் கண்களில் இக்காட்சி தட்டுப்பட்டதும் இதை வாய்ப்பாக வைத்து அவளிடம் இயல்பான உரையாடல் ஒன்றை ஆரம்பித்தான்.
மிருணாளினி பிடறிக்கு அடியில் கையைக் கொண்டு செல்லும் போதே பின்னே பிடறியை ஒட்டிக் கிடந்த மாலையைக் கொஞ்சம் பின்னே தள்ளினான்.
அந்தச் சிறிய செயலில் அவள் அதிரும்போதே மின்சார அதிர்ச்சியாய் அவனது ஸ்பரிசத்தில் உடல் சிலிர்த்தது.
அவள் திடுக்கிட்டு விழிகளை உயர்த்த “இனிமே உன் ஜடை மாலையில சிக்கிக்காது” என்று சொல்லி சன்னமாய்ப் புன்னகைத்தான்.

அப்போதுதான் மிருணாளினி அவனை ஊன்றி கவனித்தாள் எனலாம்.
கச்சிதமாய் வெட்டப்பட்ட சிகை, கொஞ்சம் அடர்த்தியாய் வளர்ந்திருந்தாலும் அளவாய் ட்ரிம் செய்யப்பட்ட தாடி மீசை கூட்டணி, நெற்றியில் விபூதி கீற்று எனச் சிரிக்கும்போதே அத்துணை வசீகரம்!
முதல்முறையாக அவன் சிரித்து அவள் பார்க்கிறாள்.
கண்களை இமைக்க முடியவில்லை! விரும்பவும் இல்லை அவள்!
“ஹலோ! என்னாச்சு? இப்ப தொந்தரவா இல்லதானே?”
சாதாரணமாய் அவன் வினவ அவளுக்கோ மெல்ல மெல்ல இதயத்தில் சலனம்.
“கல்யாணத்துக்கு முன்னாடி மாப்பிள்ளை கூட பேசக்கூடாதுனு யாரும் சொன்னாங்களா?” என அவன் வினவ
“இ…இல்லயே” என அவசரமாய் பதிலளித்தாள்.
“அப்ப இந்த ட்ராமா எல்லாம் முடிஞ்சதும் மாடி வராண்டாக்கு வா! உன் கூட நான் கொஞ்சம் பேசணும்”
இப்போது அவனது குரலில் கட்டளையிடும் தொனி! மிருணாளினிக்கு வெளியாட்களிடம் பிடிக்காத தொனி அது! கூடவே அவன் சொன்ன ‘ட்ராமா’ என்ற வார்த்தை அவளைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. என்ன செய்வது? சொல்லுபவன் வருங்காலக் கணவனாயிற்றே!
சரியெனத் தலையசைத்து வைத்தாள்.
நிச்சயம் முடிந்த கையோடு மதிய விருந்து ஆரம்பித்தது. விருந்தினர்களை உபசரிப்பதில் பெரியவர்கள் மும்முரமாகியிருக்க கர்ணன் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு மாடிக்குப் போய்விட்டான்.
அங்கே நின்றவன் கீழே குனிந்து பார்த்தான். மிருணாளினி மகிழ்மாறனின் மனைவி மலர்விழியோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.
“மலர்!” கர்ணன் அழைக்க இரு பெண்களும் தலையை உயர்த்தினார்கள்.
மலர்விழியிடம் சைகையாய் மிருணாளினியைக் காட்டியவன் தான் இருக்குமிடத்துக்கு அழைத்து வருமாறு சொல்லவும் அவள் நமட்டுச்சிரிப்போடு மிருணாளினியை மாடிக்கு அழைத்து வந்தாள்.
“எனக்கு என்ன பேசணும்னு தெரியல மலர்”
“அப்ப பேசாதிங்க. ஜஸ்ட் அவங்க பேசுறதைக் கவனிங்க”
“அதுக்கும்…”
“அதுக்கெல்லாம் பயப்படவேண்டாம். கர்ணா அண்ணா சிங்கமோ புலியோ இல்ல.”
“ஆமா! காட்டுப்பூனை அவன்” வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டாள் மிருணாளினி.
கர்ணன் நிற்குமிடம் வந்ததும் மலர்விழி கழண்டுகொள்ள தனியே அவன் முன்னே மிருணாளினி நின்றாள்.
அவன் பேச வாயெடுக்கும் முன்னரே “கொஞ்சம் சுருக்கமா என்ன விசயம்னு சொல்லுறிங்களா? அம்மா அப்பா கிட்ட சொல்லாம வந்துட்டேன். யாரும் பாத்து அவங்க கிட்ட சொல்லிட்டா நல்லா இருக்காது” என்றாள் அவள்.

எந்தவித தயக்கமோ தேவையற்ற குழைவோ இல்லாமல் சாதாரணமாய் அவள் பேசிய விதம் கர்ணனின் இதழிலும் புன்னகையைத் துளிர்க்க வைத்தது.
“சொல்லலாமே!” என்றவன் மிருணாளினியை நேருக்கு நேர் பார்த்தான்.
“எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பமில்ல மிருணாளினி. அம்மாவும் பாட்டியும் சொன்னதால வேற வழியில்லாம சம்மதிச்சேன். இந்தக் கல்யாணம் உனக்கும் நல்லதில்ல. எனக்கும் நல்லதில்ல. நீ யாரோ ஒருத்தியா இருந்தா நான் இவ்ளோ தூரம் யோசிச்சிருக்க மாட்டேன். தங்கவேலு மாமா மக நீ. அவர் மேல எனக்கு நிறைய மரியாதை இருக்கு. நாளை பின்ன உன்னை நினைச்சு அவர் வருத்தப்படுறதுல எனக்கு விருப்பமில்ல”
அவன் நீளமாய்ப் பீடிகை போட்டுச் சொன்ன அதிர்ச்சியானச் செய்தியை எப்படி எதிர்கொள்வது என்று கூட புரியாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் மிருணாளினி. திடுமென மூளை விழித்துக்கொண்டு காரணத்தைக் கேளடி என்று தூண்டிவிட்டது.
தொண்டையைச் செருமிக்கொண்டவள் “எ… க்கும்.. என்ன காரணம்னு தெரிஞ்சிக்கலாமா?” என வினவ
“காரணத்தைச் சொன்னாதான் கல்யாணத்தை நிறுத்துவிங்களா மேடம்?” என்றவனின் குரலில் கடுப்பேறியிருந்தது.
மிருணாளினி புருவத்தைச் சுருக்கி அவனைப் பார்த்தாள்.
“இந்தக் கல்யாண விவகாரத்துல முதல் அடி எடுத்து வச்சது உங்க குடும்பம். நான் உண்டு என் ஆன்லைன் கோர்ஸ் உண்டுனு இருந்தேன். கல்யாணம் அது இதுனு இப்ப என் மூளை குழம்பிப் போய் கிடக்குது. எனக்குக் காரணத்தைத் தெரிஞ்சிக்குறதுக்கான முழு உரிமையும் இருக்குனு நினைக்குறேன்! சொல்லுங்க! என்ன காரணம்?”
அவள் நிமிர்வாய்க் கேட்டாள்.
கர்ணனோ ஆட்காட்டிவிரலால் நெற்றியில் கீறினான்.
“சில விசயங்களைப் புரிஞ்சிக்கிற அளவுக்கு நீ இன்னும் வளரல”
அமர்த்தலாக அவன் சொல்ல மிருணாளினிக்கு அவனது பேச்சு வெறும் சமாளிப்பாகத் தெரிந்தது.
“இருபத்திரண்டு வயசுல யாரும் குழந்தை இல்ல” சட்டெனப் பதில் வந்தது அவளிடமிருந்து.
“பேச்சை வளர்க்க வேண்டாம் மிருணாளினி. ஏதாச்சும் சொல்லி கல்யாணத்தை நிறுத்து. இந்தக் கல்யாணம் நடந்துச்சுனா நம்ம ரெண்டு பேர் வாழ்க்கையும் நாசமா போயிடும்”
‘நல்ல நாளும் அதுவுமாய் இவன் என்ன நாசம் கீசமென்கிறான்?’
அவனுக்குப் பதிலடி கொடுக்கத் துடித்த நாக்கை “மிருணா இங்க வாயேன்டி” என்ற சிவகாமியின் குரல் தடுத்துவிட்டது.
“மலரோட மாமியார் கூப்பிடுறாங்க. நான் போறேன்”
அவள் அவசரமாய்க் கிளம்ப “நான் சீரியசா சொல்லுறேன் மிருணா! ரிஸ்க் எடுக்காத” என்றான் அவன் இறுதி எச்சரிக்கையாய்!
மிருணாளினி படிகளில் இறங்கப் போனவள் திரும்பிப் பார்த்தாள் அவனை.
“யோசிக்கிறேன்” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னவள் விறுவிறுவெனப் படிகளில் இறங்கிச் செல்ல, அவளது காலடியோசையைக் கேட்டபடி மாடி வராண்டாவில் நின்றான் கர்ணன்!
அவள் என்ன செய்யப்போகிறாள் என்பது அவனுக்கும் புதிர் தான்! அவளது எதிர்வினைக்காகக் காத்திருக்க உத்தேசித்தான், தனக்குச் சாதகமான எதிர்வினை வருமென்ற உறுதியான நம்பிக்கையோடு!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

