இதற்கு மேல் தவிப்பதற்கும் தவிர்ப்பதற்கும் என்ன இருக்கிறது?
“நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்பா. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் என் சேலரிய நான் நம்ம வீட்டுக்குத் தான் குடுப்பேன். இதுக்காக நான் யார் கிட்டவும் அனுமதி வாங்கப் போறது இல்ல. என்னைப் பெத்தவங்களை நான் தானே பாத்துக்கணும்? நீங்க நான் குடுக்குற சம்பளத்தை வாங்கிக்கிறதா வாக்கு குடுத்தா நான் இந்தக் கல்யாணத்தைப் பண்ணிப்பேன்”
உலகம்மையும் தங்கவேலுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
‘இது எப்படி சாத்தியம்? சம்பந்திகளிடம் கூற வேண்டாமா?’
“யார் கிட்டவும் சொல்லணும்னு அவசியமில்ல. கர்ணன் வாங்குற சம்பளத்தை அவரோட குடும்பத்துக்காகச் செலவு பண்ணுறது எவ்ளோ இயல்பான விசயமோ அதே போல என் சம்பளத்தை என் குடும்பத்துக்காகச் செலவு பண்ணுறதும் இயல்பான ஒரு விசயம். இதுக்கு நான் யார் கிட்ட அனுமதி வாங்கணும்னு நினைக்குறிங்க?”
“அதில்லம்மா! காலங்காலமா சமுதாயம்…”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“சமுதாயம் காலங்காலமா நிறைய முட்டாள்தனமான, க்ரூயலான வழக்கங்களைக் கூட ஃபாலோ பண்ணுச்சுப்பா. காலம் மாறுச்சுனா சில வழக்கங்களைத் தூக்கிப் போடணும். சில வழக்கங்களை மாத்தி அமைக்கணும். என் அப்பா அம்மாக்கு என்னோட சம்பளத்தைக் குடுக்குறதுல என்ன தப்பு இருக்கு? இதுக்கு நீங்க ஓ.கே சொன்னா நான் கல்யாணம் பண்ணிப்பேன்”
மிருணாளினி பிடிவாதமாய்ச் சொல்லவும் சில நிமிடங்கள் யோசனையில் கரைந்தன. முடிவில் உலகம்மையும் தங்கவேலுவும் அவளது வாதத்தை ஏற்றுச் சம்மதிப்பதாக உறுதி கொடுக்கவும் மிருணாளினியும் கர்ணனை மணப்பதற்கானத் தனது சம்மதத்தைத் தெரிவித்தாள்.
உள்ளுக்குள் கர்ணனோடு திருமணம் என்பது ஏதோ நித்திய கண்டம் போல தோன்றியதெல்லாம் வேறு விசயம்!
மிருணாளினிக்கே இப்படியொரு மனப்போராட்டம் என்றால் கர்ணனைப் பற்றி கேட்கவா வேண்டும்?
தனக்குப் பெண் பார்த்து உறுதியானத் தகவலை எழிலரசி சொன்னதுமே அதிர்ந்து போனான் அவன்.

அதிலும் அந்தப் பெண் மிருணாளினி என்றதும் உச்சபட்ச அதிர்ச்சி! அவளைப் பார்த்திருக்கிறான், கடந்திருக்கிறான்! ஆனால் பேசியதில்லை. இவ்வளவு ஏன்? யாரோ ஒருத்தியாக எண்ணி சில சமயங்களில் பார்வையைக் கூட அவளிடம் பதிக்காமல் அலட்சியமாய் இருந்திருக்கிறான்.
அவளையா அவன் மணக்கப் போகிறான்?
அன்னையும் ஆச்சியும் பெண் தேடினால் மட்டும் சட்டெனப் பெண் வீடு அமைந்துவிடுமா என இத்தனை நாட்கள் இறுமாந்திருந்தவனுக்கு இப்போது தலையில் இடி விழுந்தது.
இத்தனை நாட்கள் மாய உலகத்தில் சஞ்சரித்தவனுக்கு இப்போது அதிர்ச்சி வைத்தியம் நடந்திருக்கிறது, இந்த இடத்தில் அவன் விழித்தே ஆகவேண்டும். நிதர்சனத்தை உணர்ந்தே ஆகவேண்டும்.
ஆனால் அதற்குரிய முதிர்ச்சி அவ்வளவு எளிதில் வந்துவிடுமா என்ன!
மனித மனமானது விரும்பாத நிகழ்வு நடக்கும்போது அனுசரித்துப் போவதை விட அந்த நிகழ்வைத் தவிர்க்கவே அதிகம் விரும்பும்.
கர்ணனின் மனமும் அதையே விரும்பியது. அன்னை இத்தகவலைச் சொன்னதும் முதலில் மறுக்கவே செய்தான் அவன்.
“யாரு அந்த நெட்டை கொக்கா? எம்மா உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா?” எனத் தனது எரிச்சலை வெளிப்படையாகக் காட்டினான் மொபைலில் பேசிக்கொண்டிருந்த எழிலரசியிடம்.
“ஏன்? மிருணாக்கு என்ன குறை? என்ன வேணாலும் பண்ணுங்கனு சொல்லிட்டு இப்ப என்ன மாத்திப் பேசுற?”
அன்னையின் குரலில் சூடு ஏறவும் கொஞ்சம் தணிந்தான் கர்ணன்.
“அதில்லம்மா! அது ரொம்ப சின்னப் பொண்ணு. கேம்பஸ்ல வேற ப்ளேஸ்மெண்ட் வாங்கிருக்கு போல. அதுக்கும் வேலைக்குப் போகணும்னு ஆசை இருக்கும்ல?” என மிருணாளினிக்காக யோசிப்பது போல பேசினான் அவன்.
“அதெல்லாம் எங்களுக்கும் தெரியும் மகனே! அவளுக்கு உன்னை விட ஆறு வயசுதான் கம்மி. அவளை நீ வேலைக்குப் போக விடமாட்டியா என்ன?”
“எம்மா பிரச்சனை வேலைக்குப் போறது இல்ல”
“வேற எதுதான் உனக்குப் பிரச்சனை? தங்கவேலு அண்ணன் குடும்பம் நம்ம அளவுக்கு வசதியானது இல்லனு நினைக்குறியா?”
கர்ணன் மானசீகமாகத் தனது தலையில் அடித்துக்கொண்டான்.
“நான் அந்த மாதிரி யோசிக்குறவனா? நீ வேற ஏன்மா தப்பு தப்பா புரிஞ்சிக்கிற? அது… ஒன்னுமில்ல தாயே! பொண்ணு பாத்துட்டல்ல. எப்ப கல்யாணம்னு சொல்லு. வந்து தாலிய கட்டுறேன்” என்று முடித்துக்கொண்டான் சட்டென.
எழிலரசிக்குத் தனது காதுகளையே நம்ப முடியவில்லை.
“நிஜமாவா சொல்லுற கர்ணா?”
“வேண்டாம்னு சொன்னா நீ விடவா போற?”
“ஐயோ எனக்குச் சந்தோசத்துல…” என்றவர் சட்டென நிறுத்திவிட்டு “என் கிட்ட சம்மதம் சொல்லிட்டுப் பின்னாடி போய் வேற எதுவும் வேலை பாத்து வச்சிடமாட்டியே! இங்க சம்பந்தி குடும்பம் நமக்கு ரொம்ப வேண்டியவங்க. நீ என்ன செஞ்சாலும் அவங்களுக்கும் அது அசிங்கம். அப்புறம் காலத்துக்கும் உங்கப்பா உன் முகத்துல முழிக்கமாட்டார்.” என்றார் எச்சரிக்கும் தொனியில்.
உண்மையில் கர்ணனும் அப்படித்தான் யோசித்திருந்தான்.
திருமணத்துக்குச் சம்மதிப்பது போல நடித்துவிட்டு அப்புறம் குட்டையைக் குழப்பலாமென யோசித்தவனுக்குத் தனது மூளையை ஸ்கேன் செய்தது போல அன்னை பேசியதும் பதில் பேச வரவில்லை.
இருந்தாலும் சமாளிக்க வேண்டுமே!
“சேச்சே! நான் போய் அப்பிடியெல்லாம் யோசிப்பேனா?” என்றவன் “ஆமா, மிருணாளினிய எனக்குச் செலக்ட் பண்ணுனது யாரு?” என கேட்க
“உன் ஆச்சிதான் கர்ணா”
‘அந்தக் கிழவிக்கு என் வாழ்க்கை என்ன ஃபுட்பால் கிரவுண்டா? இஷ்டத்துக்கு விளையாடுது’
“அப்பிடியா? ரொம்ப சந்தோசம். கல்யாண தேதிய முடிவு பண்ணிட்டிங்களா?”
“இல்ல! ஆதிராவோட புகுந்தவீட்டுக்காரங்க கிட்ட கலந்து பேசி ரெண்டு நிச்சயதார்த்தத்தையும் ஒரே இடத்துல வச்சுக்கலாம்னு யோசிச்சிருக்கோம். அப்பிடியே கல்யாணமும் ஒரே மேடைல வச்சிட்டா ஆச்சியோட ஆசை நிறைவேறிடும்ல”
“எதையோ பண்ணுங்க. தேதி முடிவு பண்ணுனதும் தகவல் சொல்லுங்க. நான் இங்க லீவுக்கு அப்ளை பண்ணனும். இப்பதான் புது புராஜெக்ட்ல ஒர்க் பண்ண ஆரம்பிச்சிருக்கேன்”
சலிப்போடு சொன்னாலும் அவன் சம்மதித்ததே எழிலரசிக்கு இமாலய மகிழ்ச்சி! அவர் மொபைல் அழைப்பைத் துண்டித்ததும் சோர்வாய் பால்கனியில் கிடந்த பீன்பேக்கில் அமர்ந்தான் கர்ணன்.

அவன் தலைக்குள் ஆயிரம் யோசனைகள்!
இந்த அப்பார்ட்மெண்ட் மற்றும் காரின் ஈ.எம்.ஐ அவனது பொறுப்பு. எப்போது குடும்பத்தொழிலை ஏற்க மறுத்தானோ அப்போதே அந்தத் தொழிலில் அவன் எந்தப் பங்குக்கும் சென்றதில்லை.
இலாபமும் நஷ்டமும் ஆதிராவும் தனது தந்தையும் சார்ந்த விவகாரங்கள் என்று ஒதுங்கிக்கொண்டான்.
சென்னையில் வசிக்க சகல வசதிகளுடன் ஒரு கேட்டட் கம்யூனிட்டியில் வீடும் வாங்கியாயிற்று. வங்கிக்கடன் மூலமாகத்தான். கூடவே கார் வேறு!
இதெல்லாம் அவனது சம்பளத்திலிருந்தே கழிக்கப்படும். வீடு ஒரு முதலீடு. கார் என்பது அவனுக்கு ஸ்டேட்டஸ் சிம்பல். இரண்டையும் அவன் இருக்கும் நிலையில் தவிர்க்க முடியாது.
இன்னும் சில வருடங்கள் போனால் ஈ.எம்.ஐயை முடித்திருக்கலாம்! அதற்கும் வாய்ப்பில்லை.
திருமணம் என்றால் அனைத்தையும் யோசிக்க வேண்டுமே! இப்போது வீடு காருக்கான ஈ.எம்.ஐ பணத்தைத் தந்தை கொடுக்க முன்வந்தாலும் வாங்கிக்கொள்ள கர்ணனின் மனம் ஒப்பாது.
இதோடு கூடுதல் கவலைதான் ஈஸ்வரியின் நினைவு. எந்த ஒரு நிறைவேறாதக் காதலிலும் மூன்று நிலைகள் உண்டு.
முதல் நிலை – அந்தக் காதலால் சிதைந்த மனமும் மூளையும் உணர்விழந்து போவது. இந்நிலையில் காதல் சார்ந்த எந்த உணர்வுகளும் மனதில் வராது வேறொரு பெண்ணின் மீது.
இரண்டாம் நிலை – பழைய நினைவுகளை, எதிர்பார்ப்புகளை மனதிலிருந்து வெளியேற்றுவது. இந்நிலையில் காதல் நேசத்துக்கான வெற்றிடம் ஒன்று மனதில் உருவாகும். அதை உடனே இன்னொரு நபரால் நிரப்ப முயலாது மனம்.
மூன்றாம் நிலை – ஏற்றுக்கொள்வது. எல்லாம் முடிந்துவிட்டது, இனி அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டுமென மூளை நிறைவேறாதக் காதலை ஏற்றுக்கொண்டு இன்னொரு உறவுக்குள் சுவாதீனமாக மகிழ்ச்சியாக நுழையும்.
துரதிர்ஷ்டவசமாக கர்ணன் இப்போது இருப்பதோ இரண்டாம் நிலையில். இந்நிலையில் புதிய பெண்ணொருத்தியை மனதிலிருக்கும் வெற்றிடத்தில் வைத்து தனது உணர்வுகளுக்கும் அவளது உணர்வுகளுக்கும் அநியாயம் செய்ய வேண்டுமா எனத் தவித்தான் அவன்.
கிட்டத்தட்ட அவன் ஒரு உடைந்த பாலத்தின் ஒரு முனையில் நிற்பது போல உணர்ந்தான்.
அதன் ஒரு கரையில் இருந்து மறு கரையை அடைவதற்குள், அவனுக்குச் சற்று ஓய்வெடுக்கவும், நிதானப்படுத்தவும், புதிய பயணத்திற்குத் தயாராகவும் கால அவகாசம் தேவைப்படுகிறது.
இதெல்லாம் முந்தைய தலைமுறைக்கு யார் புரியவைப்பது? சொன்னாலுமே “ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்க, எல்லாமே சரியாகிடும்” என்பார்கள்.
திருமணம் என்பது இரண்டு முதிர்ச்சியடைந்த தனிநபர்கள் முழுமையான மனதோடு இணைந்து, ஒரு புதிய கூட்டு வாழ்க்கையை (A New Partnership) உருவாக்குவது. ஒரு நபரின் அடிப்படை உளவியல் சிக்கல்களையோ, கடந்த காலத் துயரங்களையோ தீர்ப்பதற்கான பொறுப்பு அந்தத் திருமண உறவுக்கு இல்லை. அந்தக் காரணங்களுக்காகத் திருமணம் செய்வது என்பது திருமண உறவுக்கு மனிதர்கள் செய்யும் அநியாயம்.
ஒரு நபர் தனது வாழ்க்கையில் உள்ள வெற்றிடத்தை (Void) அல்லது தனது மனவலியைத் தீர்க்க, திருமணத்தை ஒரு சிகிச்சையாக (Cure) பயன்படுத்த முயல்வது ஆபத்தானது. அது கணவன் மனைவி இருவரையும் பாதிக்கும்.
இந்தக் கோணத்தில் யோசித்த கர்ணனுக்கு யாருடைய மனமும் புண்படாமல் மிருணாளினியை வைத்தே இந்தத் திருமணத்தை நிறுத்திவிடவேண்டுமென்ற எண்ணம் அப்போது துளிர்த்தது! சில நிமிடங்களில் அது உறுதியுமானது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

