“மெச்சூர்டான லவ்ங்கிறது என்ன தெரியுமா? ஒருத்தர் இன்னொருத்தரோட குறைகளையும் பிரச்சனைகளையும் புரிஞ்சிக்கிட்டு பரஸ்பர சம்மதத்தோட இணையுறதுதான். அந்தக் குறைகள் என்னவா வேணும்னாலும் இருக்கலாம். அதைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு பார்ட்னரோடது இல்ல. காதலோ கல்யாணமோ அந்த உறவோட நோக்கமே ரெண்டு பேர் சேர்ந்து வாழுறது, சேர்ந்து வளருறதுதான். ஒருத்தர் இன்னொருத்தரை தன்னோட ரீஹேபிலிடேசன் செண்டரா (மறுவாழ்வு மையம்) பயன்படுத்திக்கிறது திருமணம், காதலோட ஆன்மாவையே சிதைச்சிடும். வெயிட் வெயிட்! இதெல்லாம் நான் சொல்லலை. ஒரேயடியா படிச்சு மூளை சூடாகுதுனு ஆன்லைன் பக்கம் வந்தப்ப ஒரு கதைய படிக்குற சான்ஸ் கிடைச்சுது. அதுல ரைட்டர் சொன்ன கருத்து இது. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு இந்தக் கருத்து. மத்தபடி நாம காதலைக் கண்டோமா கல்யாணத்தைக் கண்டோமா?”
-மிருணாளினி
மிருணாளினி தனது பெற்றோரின் முன்னே கைகளைப் பிசைந்துகொண்டு நின்றாள். சற்று முன்னர் தான் அவளது ஆன்லைன் வகுப்பு முடிந்திருந்தது.
எப்போதும் வகுப்பு முடிந்ததும் கொஞ்சநேரம் ஓய்வெடுப்பது வழக்கம். இன்றும் கட்டிலில் சாயப்போனவளின் செவியில் திடுமெனத் தந்தையின் குரல் கேட்டதும் திகைத்தாள்.
உலகமே அழிந்தாலும் ஆறே முக்காலுக்கு முன்னர் மாலையில் வீடு திரும்பாத தங்கவேலு அன்று மூன்று மணிக்கே வந்தால் ஆச்சரியம் வரத் தானே செய்யும்?
ஆனால் ஹாலுக்கு வந்தவளுக்கோ அவரோடு மருதநாயகியும் எழிலரசியும் வரவே இன்னும் திகைப்பு!
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவர்களைத் தொடர்ந்து சந்தோசமான வதனத்தோடு வினாயகமும் வர ஏதோ பெரிய சம்பவம் போல என்று மனதிற்குள் எண்ணியவள் “வாங்க ஆச்சி! வாங்கத்தை வாங்க மாமா” என்று வரவேற்றாள்.
“வாங்க வாங்க! நாலு மணிக்குத் தான் எல்லாரும் வருவோம்னு இவர் சொன்னதும் நான் கொஞ்சம் கண்ணயர்ந்துட்டேன்” என்றபடி வந்தார் உலகம்மை.
“எல்லாம் அத்தை வேலைதான்” என்ற எழிலரசி “நேரத்தை வீணாக்க வேண்டாம். நம்ம பேசி முடிச்சதை மிருணா கிட்ட சொல்லிடுவோம்! அப்பிடியே கையோட கொண்டு வந்த வெத்திலை பாக்கு வச்சு ஒப்பு தாம்பூலம் மாத்திக்கலாம்” என்றார்.
மிருணாளினிக்கோ ஒன்றும் புரியவில்லை. வெற்றிலை பாக்கு ஒப்பு தாம்பூலம் என அனைத்து வார்த்தைகளும் அவளுக்குப் புரியாத பாஷையாகத் தோன்றின.
அனைவரும் அவள் முகத்தைப் பார்க்கவும் குழப்பத்தோடு சிரித்தாள்.
“நம்ம கர்ணனுக்கு உன்னைப் பொண்ணு கேட்டு வந்திருக்கோம்டி” என்ற மருதநாயகி மருமகளிடம் கண் காட்ட அவரும் வாழையிலையில் மடித்து வைத்திருந்த மல்லிகை சரத்தை எடுத்துக்கொண்டு மிருணாளினியிடம் வந்தார்.

உலகம்மை ஹேர் பின் கொண்டு வந்து கொடுக்கவும் பூவை மிருணாளினியின் கூந்தலில் சூட்டியவர் அவளது முகம் வருடி திருஷ்டி கழித்தார்.
‘கர்ணனுக்கா? அந்த அலட்சியப்பேர்வழிக்கா?’ மிருணாளினியின் தலையில் இடிவிழாதக் குறை!
அவன் சிரித்து அவள் பார்த்ததில்லை. எப்போதும் சட்டைக்குப் போட வேண்டிய கஞ்சியை அவனே குடித்தது போல விறைப்பாகத் திரிவானே! போயும் போயும் அவனுடனா தன்னுடைய வாழ்க்கை பிணைக்கப்படவேண்டும்?
இப்போதும் அவள் யோசனையோடு மலங்க மலங்க விழித்தாளேயொழிய பதில் பேசவில்லை. இதழில் மட்டும் குழப்பப் புன்னகை.
“புள்ளைக்கு எதுவும் புரியல தங்கவேலு. நீயே சொல்லிடுப்பா” என்றார் வினாயகம்.
தங்கவேலு மகளிடம் வந்தவர் “நம்ம கர்ணன் தம்பி ஜாதகமும் உன் ஜாதகமும் பொருந்தியிருக்குல. ஐயாவும் நானும் கலந்து பேசி உனக்கும் தம்பிக்கும் கல்யாணம் பண்ணிடலாம்னு முடிவெடுத்திருக்கோம். உனக்கு எதுவும்…” என்று அவளுக்குக் காதல் எதுவும் இருக்கிறதா என்பதை மறைமுகமாக வினவ மிருணாளினியோ திகைத்து விழித்தாள்.
‘காதலா? அதெற்கெல்லாம் எங்கே நேரமிருந்தது இத்தனை வருடங்களில்? பள்ளி கல்லூரியில் நல்ல மதிப்பெண் பெற மாங்குமாங்கென படிக்கவே நேரம் போதாது. இதில் எங்கிருந்து காதலிப்பதாம்!’
மிருணாளினி அவரமாக “எனக்கு என் படிப்பு, என் வேலை தவிர வேர எதைப் பத்தியும் இப்போதைக்கு யோசனை இல்லப்பா” என்று சொல்லி காதல் எல்லாம் என் வாழ்வில் இன்னும் நுழையவில்லை என்பதை மறைமுகமாக் கூறிவிட்டாள்.
“அப்ப இந்தக் கல்யாணத்துல உனக்குச் சம்மதம்தானே?”
“நான்… ஜூன்ல வேலையில ஜாயின் பண்ணனுமேப்பா”
தவிப்போடு மிருணாளினி சொல்லவும் எழிலரசி பதில் சொல்ல முன்வந்தார்.
“கர்ணனும் ஐ.டி கம்பெனிலதானே வேலை பாக்குறான் தங்கம். ரெண்டு பேரும் ஒரே துறையில வேலை பாக்குறது ரொம்ப நல்லது. ஒருத்தரோட பிரச்சனைய இன்னொருத்தர் புரிஞ்சிக்கலாம். கல்யாணத்துக்கு அப்புறம் நீயும் அவனும் மெட்ராசுலதான் இருக்கப் போறிங்க. நீ வேலைக்குப் போறதுல எந்தப் பிரச்சனையும் வராது தங்கம். அதுக்கு நான் உறுதி குடுக்குறேன்” என்றார்.
மிருணாளினிக்கு எல்லாம் துரிதமாக நடப்பது ஒருவித பயத்தையும் பதற்றத்தையும் கொடுத்தது.
அவளது முக்கிய பயமே கர்ணனைப் பற்றியதுதான்!
நிறைய தடவை பார்த்திருந்தாலும் அவன் முழுக்க முழுக்க அவளுக்குப் புதியவன்! தவிப்போடு அவள் நிற்க தங்கவேலுவோ அவனது குடும்பத்தாரிடம் வெற்றிலை பாக்கு மாற்றிக்கொண்டார்.
மகள் மீது அத்துணை நம்பிக்கை! அவரது நம்பிக்கையை உடைக்க மிருணாளினிக்குத் தோன்றவில்லை. அனைத்தையும் வேடிக்கை பார்த்தவள் கர்ணனின் குடும்பத்தார் இனிப்பு சாப்பிட்டுவிட்டுக் கிளம்பும்வரை குழப்பச்சிரிப்போடுதான் நின்று கொண்டிருந்தாள்.
அவர்களது கார் கிளம்பிய சத்தம் கேட்டு பெற்றோர் வீட்டுக்குள் வந்ததும் சங்கடத்தோடு அவர்கள் முன்னே போய் நின்றாள்.
அவளது மனநிலை அவர்களுக்கு மட்டும் புரியாதா என்ன?
“என்னல? இந்த அப்பன்காரன் சொல்லாம கொள்ளாம கல்யாணப்பேச்சை எடுத்துட்டானேனு வருத்தமா இருக்குதா?”
தங்கவேலு கேட்டதும் பதறிவிட்டாள் மிருணாளினி.
“அப்பிடியெல்லாம் இல்லப்பா. என் சம்பந்தப்பட்ட எல்லா முடிவையும் எடுக்குறதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு. ஆனா எல்லாமே திடீர்னு ரொம்ப வேகமா நடக்குறதால ஒரு மாதிரி பயமா இருக்குப்பா”
உலகம்மை மகளைத் தோளோடு அணைத்துக்கொண்டார்.
“புரியுது மிருணா! நல்ல விசயம் வேகமா நடந்தா தப்பில்ல கண்ணு! என்னைக்கு இருந்தாலும் உனக்குக் கல்யாணம் பண்ணித்தானே ஆகணும். அது கொஞ்சம் சீக்கிரமா நடக்குதுனு நினைச்சுக்க. கர்ணன் தம்பியும் நமக்குப் பழக்கமானவர். நல்ல பையன். எந்தக் கெட்டப்பழக்கமும் கிடையாதுனு உங்கப்பா சொல்லுவார். வினாயகம் அண்ணன் குடும்பத்துல உன்னை மகாராணி மாதிரி பாத்துப்பாங்க மிருணா. உன் கல்யாண விவகாரத்துக்காக சொந்தக்காரங்க கால்ல விழுந்து உதவி கேப்போம்னு சிலர் நினைச்சாங்க. வேற யாரும் வேண்டாம், என் ஒன்னுவிட்ட அக்கா அவங்க மக உஷாவோட கல்யாணத்துல என்னை எவ்ளோ இளப்பமா பேசுனாங்க தெரியுமா? கமல் மாதிரி வசதியான மாப்பிள்ளை ஒருத்தருக்கு உன்னைக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நான் கனவு கூட காண முடியாதுனு சொல்லி நக்கலா சிரிச்சாங்க. மனசு அவ்ளோ வலிச்சுது. இப்ப ரொம்ப சந்தோசமா இருக்கு மிருணா. என் மக வாழ்க்கைய நினைச்சு இனிமே நாங்க பரிதவிக்க வேண்டாம்”
மிருணாளினியால் பதில் பேச முடியவில்லை. பெரியவர்களின் கவலையும் நியாயமானதே! கொஞ்சம் பொருளாதாரத்தில் கீழ்நிலையில் இருந்தால் சாப்பாட்டில் ஆரம்பித்து பிள்ளைகளின் திருமணம் வரை அனைத்துமே கேலிப்பொருள்தான் சொந்தக்காரர்களுக்கு.
மிருணாளினியின் படிப்புக்காக நகைகளை வங்கியில் வைத்து கடன் வாங்கியிருந்தார்கள் உலகம்மையும் தங்கவேலுவும். உறவுக்கார வீட்டு விசேசங்களுக்குக் கவரிங் அணிந்து செல்வதை ஒரு முறை உலகம்மையின் ஒன்றுவிட்ட தமக்கை கண்டுகொண்டார்.
தனது மகளின் திருமணத்தில் அதைச் சுட்டிக் காட்டி கேலி செய்தார்.
“இப்பிடியே போச்சுனா உன் மவளையும் கவரிங் நகை போடுற நிலமைலதான் வச்சிருக்கணும் போல. எங்க உஷாக்கு அமைஞ்ச மாதிரி எல்லாம் நீ மாப்பிள்ளை பாக்கணும்னா உனக்கு அது கனவுதான் உலகு. படிப்பு படிப்புனு அள்ளிக் கொட்டாம கொஞ்சம் காசை அவளுக்கு நகை, சீருக்கு ஒதுக்கி வை. பொட்டப்புள்ளை என்ன படிச்சாலும் நாளைக்கு உனக்கா வேலைக்குப் போய் சம்பாதிச்சுக் கொட்டப் போகுது? அவ புருசன் வீட்டுக்குல தான் குடுக்கணும். அவளே பெத்தவங்களுக்குச் செய்யணும்னு நினைச்சாலும் புருசன் விட்டுடுவானா? யோசி! இல்லனா இதே நிலமைதான் உன் மவளுக்கும்”
இம்மாதிரி வார்த்தைகள் பெண்ணைப் பெற்றவர்களின் மனதை ஆழமாக நோகடித்துவிடும்.
எந்தப் பெற்றோரும் தங்களின் பிள்ளைகள் தங்களைப் போல வாழவேண்டுமென விரும்புவதில்லை. தங்களைவிட மேம்பட்ட வாழ்க்கையைப் பிள்ளைகள் வாழவேண்டும் என்பதற்காகதான் படிப்பு, எதிர்காலச் சேமிப்பு என வாழ்க்கை முழுவதும் அல்லாடுகிறார்கள். அப்படி இருக்கையில் சிலர் இது போல எதிர்மறையாய்ப் பேசி கிண்டல் செய்தால் அவர்கள் மனம் எப்படி வேதனையுறும்!
பல்லாண்டு கால வேதனையைக் கருத்தில் கொண்டு மிருணாளினியைக் கர்ணனுக்கு மணமுடிக்கச் சம்மதித்திருந்தார்கள் உலகம்மையும் தங்கவேலுவும்.
ஒருவேளை குணமில்லாத ஒரு குடும்பம் வினாயகத்தின் குடும்பத்துக்குப் பதிலாக அந்த இடத்தில் இருந்திருந்தால் கட்டாயம் தங்கவேலு சம்பந்தத்தை மறுத்திருப்பார்.
பெண் கேட்டவர்களுடன் பணி ரீதியாகவும் ஆத்மார்த்தமாகவும் கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாகப் பழகுபவருக்கு அவர்கள் வீட்டில் தன் பெண் நிம்மதியாக இருப்பாள் என்ற நம்பிகை வந்த காரணத்தால் மட்டுமே மகிழ்ச்சியோடு சம்பந்தம் பேச சம்மதித்திருந்தார்.
மிருணாளினிக்குப் பெற்றோரின் மனவோட்டம் புரிந்தது. ஆனால் அவளது ஆசைகள்? விருப்பங்கள்? கனவுகள்?

“ம்மா! எனக்குப் புரியுது. ஆனா நான் வேலைக்குப் போகணும்னு நினைச்சதே நம்ம குடும்பத்தை இன்னும் முன்னுக்குக் கொண்டு வரணும்னுதான். அது நடக்குறதுக்குள்ள நீங்க கல்யாணம் பண்ணி வச்சா எப்பிடி? எனக்கு ஒரு மாதிரி குழப்பமா இருக்கும்மா”
அவள் இவ்வாறு சொன்னதும் உலகம்மையின் இதழ்கள் பெருமிதத்தில் வளைந்தன.
‘என் மகளை நான் நன்றாக வளர்த்திருக்கிறேன்’ என்ற கர்வம் அவரது முகத்தில்!
மிருணாளினியின் கையில் தட்டிக்கொடுத்தவர் “எங்களுக்கு இந்த வீடு இருக்கு. உழைக்குறதுக்கு உங்கப்பாக்குத் தெம்பும் இருக்கு. நீ இந்த உலகத்துக்கு வர்றதுக்கு முன்னாடி இருந்து அவர்தானே என்னைப் பாத்துக்குறார் மிருணா!” என்று நிதர்சனத்தைச் சொல்ல
“அதெல்லாம் இருக்கட்டும்மா! கல்யாணம்னா குறைஞ்சது லட்சக்கணக்குல செலவாகும். அவ்ளோ பணத்துக்கு…” என்று பரிதவிப்போடு அவள் இழுக்க
“எழில் மதினி கல்யாணச் செலவுனு எதையும் செய்யக்கூடாதுனு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டுத்தான் இந்தச் சம்பந்தத்தைப் பேசவே ஆரம்பிச்சாங்க மிருணா” என அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார் உலகம்மை.
மிருணாளினி அதிசயித்துப் போனாள். அவளால் நம்ப முடியவில்லை.
ஆண் பிள்ளையைப் பெற்ற எந்தப் புண்ணியவதிக்கு இந்த மனம் வரும்? பெண்வீட்டார் கொடுக்கும் நகை, பணம். சீர் வரிசை வைத்துதான் மகனின் கௌரவம் சபையில் உயரும் என்ற மாயையில் உழலுபவர்கள்தானே பெரும்பான்மையான ஆண்பிள்ளைகளின் அன்னையர்!
‘ஒரு ஆணுக்காக அவர்கள் கேட்கும் வரதட்சணைதான் அந்த ஆணை இந்த ஆண்டுகள் வளர்த்து ஆளாக்கியதற்கும், அந்த ஆணின் கௌரவத்துக்கும் அவர்கள் வைக்கும் விலை’
ஆனால் எழிலரசி கல்யாணச்செலவைச் செய்யக்கூடாதெனச் சொல்லிவிட்டார் என்றால்?
“அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா? நாம எப்பிடி வாழுறோம்ங்கிறதை அவங்களும் பாக்குறாங்க. திடுதிடுப்புனு கல்யாணப்பேச்சை ஆரம்பிச்சது அவங்கதானாம். அப்ப அவங்க அவசரத்துக்கு நம்மளைப் பொருளாதாரரீதியான சிக்கல்ல தள்ளக்கூடாதாம். இப்பிடி சொல்லுறவங்க கிட்ட நான் எப்பிடி மறுத்துப் பேச?”
மகளின் முகத்தில் யோசனை பரவவும் வேறு மாதிரி தோன்ற ஆரம்பித்துவிட்டது தங்கவேலுவுக்கு.
‘பணம் செலவளிக்காமல் திருமணம் என்றதும் தன்னை அவசரமாகத் தள்ளிவிடப் பார்க்கிறார்களோ என மகள் நினைத்துவிட்டால்?’
“அவங்க கல்யாணச்செலவு வேண்டாம்னு சொன்னதுக்காக நாங்க சம்மதிச்சிட்டோம்னு நினைச்சுடாதல. ஆம்பளை புள்ளை பெத்தவங்களுக்குக் கல்யாணச்செலவு மட்டும்தான். ஆனா பொம்பளை புள்ளை பெத்தவங்களுக்குக் கல்யாணம், மறுவீடு, ஆடிச்சீரு, பொங்கல்பிடி, கார்த்திகை சீரு, தலை தீபாவளி செலவு, பேறுகாலச்செலவு, பிள்ளை பிறந்ததும் அதுக்குச் செய்யுற முறைனு நிறைய இருக்கு. அதெல்லாம் நானும் செஞ்சிடுவேன். எந்தக் குறையும் வைக்காம”
தந்தை இவ்வாறு சொன்னதும் சங்கடப்பட்டுப்போனாள் மிருணாளினி.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

