நம்ம சொசைட்டிய பொறுத்தவரைக்கும் திருமண பந்தத்தோட சுமை பெரும்பான்மையா விழுறது பொண்ணுங்க மேலதான். அந்த உறவுல என்ன சிக்கல் வந்தாலும் அதைச் சரி செய்ய வேண்டியது பொண்ணுங்கதான். சரி செய்ய முடியாதச் சிக்கல் வந்துச்சுனா அதைச் சகிச்சுக்க வேண்டிய கடமையும் பொண்ணுங்களுக்குத்தான் இருக்கு. பல நேரங்கள்ல அந்தப் பிரச்சனைய பத்தி பேசுறதோ, அதுல இருந்து வெளிய வர்றதோ செய்யாம எல்லா வேதனையையும் மனசுக்குள்ள புதைச்சுக்குறதும் பொண்ணுங்கதான். கல்யாண வாழ்க்கை தோத்துப் போச்சுனா தன்னோட குடும்பத்துக்கு அவமானமாகிடுமோங்கிற சோசியல் ஸ்டிக்மாவ நினைச்சு வர்ற பயம்தான் நிறைய பொண்ணுங்க பிடிக்காத திருமணவுறவுல நிலைச்சிருக்க காரணம்னு நான் நினைக்குறேன். இதுக்கு இடையில குழந்தைங்க வந்துட்டா அவங்களுக்காகவும் பொண்ணுங்க யோசிக்கனும். ப்ச்! இதெல்லாம் யோசிச்சாலே தலை சுத்துது எனக்கு”
-மிருணாளினி
கர்ணன் தனது அறையில் கடுங்கோபத்தில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்துகொண்டிருந்தான். முழுதாகக் கோபம் என்று சொல்லிவிட முடியாது. ஆற்றாமை எனலாம்! இல்லையென்றால் கையறுநிலை எனலாம்.

இதற்கெல்லாம் காரணம் மருதநாயகி!
அன்று ஆதிராவை மணக்கப் போகிற அவினாஷின் வீட்டுக்கு ‘மாப்பிளை வீடு பார்க்கும் முறைக்காகச்’ சென்றுவிட்டு வீடு திரும்பிய பிறகு இயல்பாகதான் இருந்தார் அவர்.
இரவுணவுக்குப் பிறகு திடுமென மூர்ச்சையடைந்தவரை அம்பாசமுத்திரத்தில் இருக்கும் கார்த்திக் நர்சிங் ஹோமுக்கு அழைத்துச் சென்று அவரது மூர்ச்சைக்கான வைத்தியம் முடிந்த பிறகு சந்திரவிலாசத்துக்கு அழைத்து வந்தார்கள் கர்ணனும் வினாயகமும்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
மருத்துவமனையிலேயே மருதநாயகி ஒரே அழுகை! வீட்டுக்கு வந்ததும் ஆதிரா சமாதானம் செய்தாள். ஆனாலும் மருதநாயகியின் பயம் அடங்கவில்லை.
ஆனால் அந்தப் பயத்தைப் போக்க அவர் கண்ட தீர்வுதான் இப்போது கர்ணனின் கையறுநிலைக்குக் காரணமாக அமைந்துவிட்டது.
மருதநாயகி வீட்டுக்கு வந்ததும் கலக்கத்தோடு ஆதிரையிடம் பேசினார்.
அடுத்து வினாயகத்தின் கையைப் பிடித்தவர் “ஐயா நான் திடமா இருக்கப்பவே என் பேரப்புள்ளைகளோட கல்யாணத்தைக் கண்ணால பாத்துடணும்னு ஏக்கமா இருக்கு. சீக்கிரமா நம்ம கர்ணனுக்குப் பொண்ணு பாருய்யா” என்று சொல்ல
“கிழவி…” என்று எதிர்ப்புகுரல் எழுந்தது கர்ணனிடமிருந்து.
அவன் அதிர்ந்தே போனான். அவனால் திருமணம் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால் அந்த இடத்தில் மருதநாயகி அமைதியாக இல்லை.
“வாயை மூடுல. கல்யாணத்துல பாத்தானாம். காதலிச்சானாம்! அந்தப் புள்ளைக்குத்தான் இப்ப கல்யாணம் பண்ணுற எண்ணமில்லனு அவளைப் பெத்தவங்களே சொல்லிட்டாங்களே! இன்னுமா அவளையே மனசுல சுமந்துக்கிட்டு சுத்துவ? எனக்கு உன் கல்யாணததைப் பாக்காம போயிடுவேனோனு பயமா இருக்குயா” என்று அதட்டலாக ஆரம்பித்து அழுகையில் முடித்தார் மருதநாயகி.
கர்ணன் உடனே உடைந்துவிட்டான்.
“அழாத ஆச்சி!” என்றவன் அவரது கையைப் பிடித்தான்.
“என்னால ஈஸ்வரிய மறக்க முடியல ஆச்சி” என்றான் கம்மிய குரலில்.
“அவளுக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லனு தெரிஞ்சும் ஏன்யா இப்பிடி அவளையே நினைச்சிட்டிருக்க? ஆச்சியோட பயம் உனக்குப் புரியலையா?”
மருதநாயகி ஆதங்கத்தோடு கேட்க என்ன பதில் சொல்வதெனப் புரியாமல் திகைத்தான் அவன்.
அந்த நேரத்தில் அவன் தனது இயல்பையே வெறுத்தான் என்று சொல்லலாம்.
பிடித்த ஒருவரை மறக்க முடியாமல் அந்தப் பிடித்தத்தில் பிடிவாதமாய் இருப்பதெல்லாம் பைத்தியக்காரத்தனம் இந்த உலகத்தின் பார்வையில்!
தெரிந்தும் ‘திருமணம்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே கசக்கிறதே அவனுக்கு!
கர்ணனின் மௌனத்தைக் குடும்பத்தார் சம்மதமென எடுத்துக்கொள்ள அறைக்குள் வந்தவனுக்கோ தலைக்குள் ஆயிரம் சம்மட்டியடி.
மொபைலை எடுத்து அதில் இருந்த ஈஸ்வரியின் புகைப்படத்தையே பார்த்தபடி அங்குமிங்கும் உலாவினான்.
மறுநாள் காலை எட்டு மணிக்குத் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு விமானம் ஏறவேண்டும். அவன் இங்கிருந்து போய்விட்டால் அன்னையும் ஆச்சியும் இஷ்டத்துக்குப் புகுந்து விளையாடுவார்களே என்ற பயம்.
க்ஷணப்பொழுது மௌனத்தைச் சம்மதமாகக் கருதியவர்கள் இரண்டே நாளில் பெண்ணைப் பார்த்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
அப்படி ஒருத்தியைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டால்? நினைத்தாலே மனதில் குழப்ப மேகங்கள் சூழ்ந்தன.
ஆனாலும் வேறு வழியில்லையே! அவர்களது புராஜெக்டின் ஆரம்பக் கட்டத்தில் நினைத்த நேரம் எல்லாம் விடுப்பு எடுக்க முடியாது.
ஒருதலைக்காதலில் சிக்கும் ஆணின் மனதுக்குள் நடக்கும் போராட்டம் தீவிரமாய் இருக்கும். ஒரே நேரத்தில் அவனது மனம் இருவிதமாய் யோசிக்கும்.
தான் விரும்பும் பெண்ணுக்குத் தன்மீது விருப்பமில்லை என்பதும், இன்னொரு பெண்ணை மணக்க வேண்டிய கட்டாயம் என்றோ ஒரு நாள் தன் வாழ்வில் உண்டாகும் என்பதும் நிதர்சனம் என அவனது மனதுக்குத் தெரியும்.
அதே நேரம் மனதின் இன்னொரு பகுதியில் அந்தப் பெண்ணை மறக்க முடியாமல் அவள் மீது கொண்ட ஆசை உயிர்ப்போடு இருக்கும்.
இந்த இரண்டுக்கும் இடையே சிக்கித் தவித்து அவன் அடையும் மன அழுத்தத்தை Cognitive Dissonance என்பார்கள். இத்தகைய மனநிலையில் இருக்கும் ஆண்கள் நிஜத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து, ஒருதலைக் காதலியின் நினைவுகளிலேயே நீடித்து வாழத் தவிப்பார்கள்
அதோடு ஒருதலைக்காதலில் ஆண் என்பவன் தனது உணர்வுகளையும் கனவுகளையும் தான் ஒருதலையாக நேசிக்கும் பெண் மீது குவித்துவிடுகிறான் ஒரு முதலீடு போல. அதைத் தவிர்க்க அவனது மனம் மறுக்கும். ‘நான் தகுதியற்ற ஒருத்தியை நேசிக்கவில்லை’ என்று அந்தப் பெண்ணை உயர்வாக எண்ணி மறக்க முடியாமல் தவிப்பான்.
என்றோ ஒரு நாள் அவள் மனம் மாறுமென்ற மாயையான நம்பிக்கை ஒன்று அவனுக்குள் ஒட்டிக்கொண்டிருக்கும்.
இதனாலேயே புதிதாகத் தனது வாழ்க்கைக்குள் வரும் மனைவியை அவனால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. மனைவி என்பவள், மறக்க முடியாத பழைய காதலின் நினைவுக்குத் தடையாக இருக்கிறாள் என்றே ஆழ்மனதில் அந்த ஆண் உணர்வான்.
அவன் வாழ்க்கை சிறக்க வேண்டுமென்றால் அவனது மனதில் ஒருதலைக்காதலி மீது இருக்கும் மாயபிம்பம் உடையவேண்டும். நிஜம் எது நிதர்சனம் எது நிரந்தரம் எதுவென அவனது மண்டையில் அடித்து யாராவது புரியவைக்க வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாகக் கர்ணனுக்கு அதைப் புரியவைக்கும் நபர் இன்னும் அவன் வாழ்க்கைக்குள் வரவில்லையே!
பெரும் போராட்டத்திற்கிடையே இரவு கண்ணயர்ந்தவன் அதிகாலையில் எழுந்து சென்னைக்குக் கிளம்ப ஆயத்தமானான்.
வினாயகம் அவனைத் தூத்துக்குடி விமானநிலையத்தில் கொண்டு போய் விடுவதாகச் சொல்லியிருந்ததால் அவரும் விழித்துவிட்டார்.
ஆனால் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக மருதநாயகியும் கண் விழித்து பேரனுக்காகக் காத்திருந்தார்.
அவன் ஷோல்டர் பேக்குடன் வந்ததும் ஆவலோடு எழுந்து அவனருகே வந்தார்.
“பாத்துப் பத்திரமா போயிட்டு வாய்யா” என்று கனிவாய் அவர் சொல்ல
“எப்பவும் நீ இந்த டயலாக் பேசமாட்டியே!” என அவன் ஐயமாய் கேட்கவும்
“க்கும்! இந்த நக்கலுக்குக் குறைச்சலே இல்ல” என்றவர் இரகசியம் பேசும் குரலில் “இங்க பாருல, நானும் உங்கம்மையும் பாக்குற பொண்ணு உனக்குச் சரிவராதுனு நினைச்சனா உன் ஆபிசுல இருக்குற பொண்ணு எவளையாச்சும் கட்டிக்க. உங்கப்பன் கிட்ட நான் பேசுறேன்.” என்க
“வயசுக்கேத்த மாதிரி பேசு கிழவி! இதுக்காகதான் காலைலயே முழிச்சு உக்காந்திருந்தியாக்கும்?” என கடுகடுத்தான் கர்ணன்.
“அப்ப நாங்க பாக்குற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லுற”

கர்ணன் இடுப்பில் கையூன்றி மருதநாயகியை முறைத்தான்.
“இந்த முறைப்புக்குப் பயப்படுறவ இல்ல நான். நீயும் உன் பொண்டாட்டியும் கையைப் பிடிச்சு இந்த வீட்டுக்குள்ள வர்றதைப் பாத்துட்டா இந்தக் கட்டை நிம்மதியா வேகும்”
“இதே டயலாக்கை தானே ஆதிரா கிட்டவும் சொன்ன. டயலாக்கை மாத்து கிழவி. இல்லனா எமோசனைக் கொஞ்சம் தூக்கலா போட்டுப் பேசு. கேக்கவே மொக்கையா இருக்கு”
பாட்டியும் பேரனும் சளைக்காமல் பதிலடி கொடுத்துக்கொண்டிருக்க எழிலரசியும் வந்துவிட்டார். அவரது முகத்தில் தீவிரமான பாவனை.
“ஆச்சி கிட்ட விளையாடுறது இருக்கட்டும் கர்ணா. நாங்க உனக்குப் பொண்ணு பாக்கப் போறது உறுதி. அதை மனசுல வச்சுக்க. உனக்கு எந்தப் பொண்ணு மேலயாச்சும் விருப்பம் இருந்தா…” என்றவர் அந்த வாக்கியத்தைச் சொன்னதும் மகனின் முகத்தில் ஆசையின் நிழல் தெரிவதைக் கண்ணுற்றுவிட்டு “ஈஸ்வரியைத் தவிர – வேற எந்தப் பொண்ணாச்சும் உன் மனசுல இருந்தா சொல்லு” என்றார்.
கர்ணனுக்குச் சப்பென்று ஆனது.
“ஏதோ பண்ணுங்க! நான் கிளம்புறேன்! சென்னை ரீச் ஆனதும் கால் பண்ணுறேன். கிழவி! நீ டைமுக்கு மாத்திரை போடு. நீ போட்ட மாஸ்டர் ப்ளான் ஒர்க் அவுட் ஆகுற வரைக்கும் உசுரோட நடமாடணும்ல”
விறைப்பாகச் சொல்லிவிட்டுத் தந்தையோடு சந்திரவிலாசத்திலிருந்து கிளம்பினான் கர்ணன்.
கார் வேகமெடுத்து அம்பாசமுத்திரத்தின் வீதியில் ஓடியபோது சில்லென்ற காற்று காரின் திறந்திருந்த ஜன்னல் வழியே உள்ளே வந்து அவனை உற்சாகமாக்க முயன்றது.
வினாயகம் சீராகப் போய்க்கொண்டிருந்த காரைத் திடுமென நிறுத்தவும் என்னவெனப் பார்த்தான் அவன். கார் நின்ற இடம் தங்கவேலுவின் வீட்டு முற்றம்.
“தங்கவேலு கிட்ட இந்த டாக்குமெண்டைக் குடுக்கணும். இது கொஞ்சம் அவசரம்” என்றபடி காரிலிருந்து இறங்கினார் வினாயகம்.
வீட்டின் முன்வாயிலில் எரிந்துகொண்டிருந்த மஞ்சள் விளக்கின் ஒளியில் மிருணாளினி வாசல் தெளிப்பது தெரிந்தது காரிலிருந்த கர்ணனின் விழிகளுக்கு.
“என்னல இன்னைக்கு அம்மாக்கு ரெஸ்டு குடுத்திட்டியா?”
“ஆமா மாமா! நேத்தே முழங்கால் வலினு சொன்னாங்க. அதான் அவங்க தூங்கட்டும்னு நான் வாசல் தெளிக்க வந்துட்டேன்”
“சரில” என்றவர் “இந்த டாக்குமெண்ட் ரொம்ப முக்கியமானது. உங்கப்பா கிட்ட குடுத்துடு. நான் கிளம்புறேன். தூத்துக்குடி ஏர்போர்ட்டுக்குப் போயிட்டிருக்கேன். மவனுக்கு எட்டு மணிக்கு அங்க இருந்து சென்னைக்கு ஃப்ளைட்டு” என்றதும்
“போயிட்டு வாங்க மாமா” என மலர்ச்சியோடு மிருணாளினி சொல்வது அவனது செவிகளில் விழுந்தது.
காட்டன் நைட்டி, கொண்டையாய்க் கட்டப்பட்ட கூந்தலில் ஆங்காங்கே தப்பிவிட்ட கூந்தல் இழைகள் நெற்றியில் புரண்டு கன்னங்களைத் தழுவிக்கொண்டிருந்தன.
மஞ்சள் விளக்கின் ஒளியில் அவளது கன்னங்கள் பளபளப்பதைப் பார்க்க முடிந்தது கர்ணனால்.

ஒப்பனையற்ற முகத்திலும் ஒருவித அழகு உள்ளது என்று அவன் மனம் சொல்ல மிருணாளினியின் பார்வை சட்டென அவன் பக்கம் பாயவும் விறைப்பாக முகத்தை வைத்துக்கொண்டான்.
வினாயகமும் மிருணாளினியிடம் விடைபெற்றுக் காரிலேறி காரைக் கிளப்பினார்.
“பொம்பளைப்புள்ளைங்கனா தங்கவேலு மவ மாதிரி இருக்கனும் கர்ணா! படிப்புல சூட்டிகை! இப்ப வேலையும் கிடைச்சிடுச்சு. பொதுவா மெத்தப் படிச்சவங்களுக்கு ஒரு அகங்காரம் இருக்கும். அது அந்தப் பொண்ணு கிட்ட கிடையாது”
வினாயகம் சொல்ல அசுவாரசியமாய் உம் கொட்டினான் கர்ணன்.
“ஜூன் மாசம் அவளும் மெட்ராஸ் போயிட்டானா தங்கவேலுவும் உலகம்மையும் அவ இல்லாம எப்பிடி சமாளிப்பாங்களா? கைக்குள்ளவே வளர்ந்த புள்ளை. மிருணாவும் நம்ம ஊரைத் தாண்டுனதில்ல.”
“சம்பாதிக்கணும்னா சொந்த ஊர் செண்டிமெண்டை விட்டுடணும்பா. இன்னைக்குக் காலகட்டத்துல வேலை கிடைக்குறதே குதிரைக்கொம்பு. இதுல சொந்த ஊர் செண்டிமெண்டைத் தூக்கிட்டுச் சுத்துனா நம்ம வாழ்க்கை மட்டுமில்ல, அடுத்து வர்ற தலைமுறையோட வாழ்க்கையும் சேர்ந்து பாதிக்கப்படும். இப்ப இந்தப் பொண்ணு சென்னைக்கு வந்து சம்பாதிச்சா தங்கவேலு மாமாவோட குடும்பம் நிமிர்ந்துடும். அவளோட வாழ்க்கையும் வேற லெவலுக்கு மாறிடும். அவளோட அடுத்த ஜெனரேசன் அவ வாழ்ந்ததை விட சௌகரியமா வாழும். எப்பவும் ஒரு தலைமுறையோட வாழ்க்கை அதுக்கு முந்தைய தலைமுறை வாழ்க்கைய விட ஒரு படி மேல இருக்கணும்பா. எங்கயோ பாத்த ஞாபகம். ஒரு தலைமுறை நீச்சல் அடிச்சா அதுக்கு அடுத்த தலைமுறை நடக்கணும். அதுக்கு அடுத்த தலைமுறை வானத்துல பறக்கணும். இதை generational shiftனு சொல்லுவாங்க. இதுதான் வளர்ச்சிப்பா”
பேசி முடித்த பிறகுதான் நீளமாகப் பேசிவிட்டோமென அவனுக்கே உறைத்தது. ஏன் பேசினோம் எதற்கு பேசினோமெனப் புரியவில்லை என்பதுதான் விந்தை.
வினாயகமும் அதை ஆமோதித்தார்.
தந்தையும் மகனும் பேசிக்கொண்டே விமானநிலையம் வந்து சேர்ந்தார்கள். விமானத்துக்கான அறிவிப்பு வந்ததும் தந்தையிடம் விடைபெற்றான் கர்ணன்.
சென்னை சென்று இறங்கியவனை வங்கி செயலிக்கானப் புராஜெக்ட் இழுத்துக்கொள்ள இனி பெண் பார்க்கும் படலத்தைப் பற்றி யோசிக்க அவனுக்கு எங்கே நேரமிருக்கப் போகிறது! இனி ஆதிராவின் நிச்சயதார்த்தத்துக்குத்தான் அவன் அம்பாசமுத்திரத்துக்குச் செல்ல வேண்டும்.
அதே நேரம் அம்பாசமுத்திரத்தில் மருதநாயகியும் எழிலரசியும் கர்ணனுக்குப் பெண் தேடுவதில் மும்முரமானார்கள்.
மூத்த மருமகனின் உறவுக்கார்களில் நல்ல பெண் இருக்கிறாளா என்று மூத்த மகள் ஸ்வேதாவிடம் விசாரிக்க அவளோ கர்ணனுக்கு விருப்பமா இந்த ஏற்பாட்டில் என்று கேட்டாள்.
எப்போதுமே தம்பி என்றால் ஸ்பெஷல் அவளுக்கு.
“அதெல்லாம் அவன் சம்மதிச்சிட்டான். அந்த விடாக்கண்டன் சம்மதிச்சதே பெருசு. நீ வேற குறுக்கால புகுந்து கூறு கெடுத்துடாத. ஆதிரை கல்யாணம் முடிஞ்ச கையோட அவன் கல்யாணத்தையு முடிச்சுடணும்னு நானும் உன் அம்மையும் உறுதியா இருக்கோம்”
“நீயும் அம்மாவும் அவனுக்குப் பதிலா வாழ முடியாதுல்ல ஆச்சி” கிண்டலாய்ச் சொன்னாள் ஸ்வேதா.
“இவ்ளோ பகுமானமா பேசுதியே! உனக்கு மாப்பிள்ளை பாத்துக் கல்யாணம் பண்ணி வச்சது யாராம்? நீ சீரும் சிறப்புமா வாழல? தங்கம் போல ஒரு மவனைப் பெத்துக்கல?”
“எனக்குக் கவினைப் பிடிச்சிருந்துச்சு ஆச்சி”
“உன் தம்பிக்காரனுக்கும் நாங்க பாக்குற பொண்ணைப் பிடிக்கும்”
மருதநாயகி பிடிவாதமாய்ச் சொல்லிவிட ஸ்வேதாவை வைத்து அவரது உறுதியைக் கலைக்கும் கர்ணனின் முயற்சி அங்கே தோற்றுப்போனது.
அவனது முயற்சி மட்டுமா? அவனுக்குப் பெண் தேட மருதநாயகியும் எழிலரசியும் எடுத்த முயற்சிகள் கூட தட்டிக்கொண்டே போயின. எந்தப் பெண் வீடும் தகையவில்லை. விசாரித்த இடத்தில் எல்லாம் ஏதோ ஒரு அதிருப்தி.
மாமியாரும் மருமகளும் ஒரு கட்டத்தில் சோர்ந்து போனார்கள். அவர்கள் பெண் தேடுகையில் படும் பாட்டை லைவ் அப்டேட் செய்வாள் ஆதிரா. கர்ணனுக்கோ பெண் வீடு அமையாததில் படு குஷி.
அப்படி இருக்கையில்தான் ஒரு நாள் பூஜையறையில் குலதெய்வத்திடம் புலம்பிக்கொண்டிருந்தார் மருதநாயகி.
“களக்கோடி சாஸ்தாவே! நான் கண் மூடுறதுக்குள்ள என் பேரனுக்கு ஒரு வழிய காட்டுய்யா. எல்லா பொண்ணு வீடும் தட்டிப் போவுது! நீ ஒன்னைத் தட்டிவிட்டனா அதுக்கு ஆயிரம் காரணம் இருக்கும்னு இந்தக் கிழட்டு மூளைக்குப் புரிஞ்சாலும் மனசு கேக்க மாட்டேங்குதே!”
அவர் புலம்புவதைக் கேட்ட எழிலரசிக்கும் கவலைதான்!
‘எங்கிருந்து இந்தப் பையனுக்குப் பெண் தேடுவது? அவனுக்காகப் பிறந்தவளைக் கடவுள் ஏழு கடல் ஏழு மலை தாண்டி மந்திர குகையில் மறைத்து வைத்திருக்கிறாரோ? ஒரு நல்லப் பெண் அமைந்துவிட்டால் அதை விட வேறு என்ன சந்தோசம் எனக்கு?’
எழிலரசி மனம் குமையும்போதே “ஆதிம்மா” என்று அழைத்தபடி சந்திரவிலாசத்துக்குள் வந்தார் தங்கவேலு. அவரது கையில் மஞ்சள் துணிப்பை ஒன்று இருந்தது.
மனச்சோர்வை மறைத்துக்கொண்டு “வாங்கண்ணே! இருங்க காபி கொண்டு வர்றேன்” என்று எழிலரசி விருந்தோம்பலில் மூழ்க ஆதிராவும் அங்கே வந்துவிட அவளோடு பேசியபடி சோஃபாவில் அமர்ந்தார் தங்கவேலு.
ஆதிரா தானே உலகம் எண்ணெய் மில்லை நிர்வகித்து வருகிறாள். அவர்களுக்குக் கேரளாவில் ‘ரெடி டூ ஈட்’ உணவு தயாரிக்கும் நிறுவனத்திலிருந்து பெரிய ஆர்டர் ஒன்று கிடைத்திருந்தது. அவளது திருமணத்துக்கு முன்னர் அந்த ஆர்டரை முடித்துவிடும் முனைப்பு!
ஆதிராவுக்குத் தொழிலில் வழிகாட்டியாக இருப்பவர் தங்கவேலு. அவரிடம் அந்த ஆர்டர் குறித்து முக்கியமாகப் பேசவேண்டுமென வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தாள் அவள்.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் காபியும் ஒரு கிண்ணத்தில் ஓமப்பொடியும் வந்தன.
அதே நேரம் பூஜையறையிலிருந்து வெளியே வந்தார் மருதநாயகி.
அவரைப் பார்த்ததும் மரியாதைக்காக எழுந்தார் தங்கவேலு. மருதநாயகி அவரை அமரச் சொல்லிவிட்டுத் தானும் ஒரு இருக்கையில் அமர்ந்தார்.
அப்போதுதான் தங்கவேலுவின் கையிலிருந்த மஞ்சள் துணிப்பை அவரது பார்வையில் விழுந்தது.
“இந்தா தங்கவேலு! மஞ்சப்பை எல்லாம் கனமா இருக்கே. உள்ள இருக்குறது தங்கமா வெள்ளியா?” என விளையாட்டாக அவர் கேட்க
“என் மவ ஜாதகம் பெரியம்மா! அவ மெட்ராசுக்குப் போறதுக்கு முன்னாடி ஒரு தடவை ஜோசியர் கிட்ட காட்டிடுவோம்னு உலகு சொன்னா. அதான் எடுத்துட்டு வந்தேன். ஆதிம்மாவ பாத்துட்டு அப்பிடியே ஜோசியர் வீட்டுக்குப் போயிடலாம்னு கையோட கொண்டு வந்தேன்” என்றார் தங்கவேலு.
அந்த இடத்தில்தான் மாமியாருக்கும் மருமகளுக்கும் பொறி தட்டியது. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
தொண்டையைச் செருமிக்கொண்டார் மருதநாயகி.
“உன் மவ ஜாதகம் ஜெராக்சு இருக்கா தங்கவேலு?”
தங்கவேலு குழம்பினார்.
“நாளை பின்ன வரன் பாக்கணும்னா தேவைப்படுமே”
ஆதிரா இடையிட்டாள்.
“இப்ப வாட்சப்ல ஜாதகம் அனுப்புறதுதான் வழக்கம் ஆச்சி”
மருதநாயகி மனதுக்குள் வந்த கடுப்பை மறைத்தபடி பேத்தியைப் பார்த்தார்.
“நான் ஒன்னு சொன்னா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும் ஆதிரை” என வரவழைத்துக்கொண்ட நிதானத்தோடு சொல்லிவிட்டுத் தங்கவேலுவிடம் இருந்த ஜாதகத்தின் பிரதியொன்றை வாங்கிக்கொண்டார் அவர்.
எதற்காக வாங்கினார் எனப் புரியாமல் தங்கவேலுவும் அங்கிருந்து ஜோசியரைப் பார்க்கக் கிளம்பினார்.

அன்னையும் ஆச்சியும் ஒருவரை ஒருவர் வெற்றிப்புன்னகையோடு பார்த்துக்கொள்வதைக் கவனித்த ஆதிரா “என்னமோ திட்டம் போடுறிங்கனு புரியுது. ஆனா அண்ணாவ மறந்துடாதிங்க” என்று எச்சரிக்க
“அதெல்லாம் நானும் என் மருமவளும் பாத்துப்போம். நீ போயி உன் கணக்கு வழக்கைப் பாரு ஆதிரை” என்று சொல்லிவிட்டார் மருதநாயகி.
ஆதிரா தோள்களைக் குலுக்கிவிட்டுப் போய்விட எழிலரசியும் மருதநாயகியும் அடுத்தக் கட்ட நகர்வைத் திட்டமிட்டார்கள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

