“Sense of familiarity – பழகிய உணர்வு! அது எல்லார் கிட்டவும் டக்குனு தோணாது. சிலரைப் பாத்தா நாமளே கான்வர்சேசனை ஆரம்பிச்சுடுவோம். இத்தனைக்கும் அவங்க நமக்குத் தெரிஞ்ச ஆளா கூட இருக்க மாட்டாங்க. ஆனா சிலரை எத்தனை தடவை பாத்தாலும் அவங்க கிட்ட பழகுன உணர்வே வராது. ஏனோ அவங்க கிட்ட பேசவோ பழகவோ நாம முயற்சி பண்ணமாட்டோம். சாதாரணமான உரையாடலைக் கூட அவங்க கிட்ட நம்மளால வளர்த்துக்க முடியாது. அதுக்கான ஆர்வமும் நமக்குள்ள இருக்காது. இதுக்கானக் காரணம் என்ன தெரியுமா? Lack of attention. ஆமா! எத்தனை தடவை பாத்தாலும் நாம அந்த நபர் மேல கவனமே செலுத்தியிருக்கமாட்டோம். அவங்களைக் கவனிக்கணும்ங்கிற எண்ணமே வராது நமக்கு. அதனால அவங்க முக்கியமான நபரா நமக்குத் தோணமாட்டாங்க. அப்ப எங்க இருந்து அவங்க கிட்ட பழகுன உணர்வு வரும்?”
-மிருணாளினி
“கங்கிராஜுலேசன்ஸ்மா! உங்களுக்கு ஜே.பி.எம் டெக்னாலஜில இண்டர்ன்ஷிப் பண்ணுற ஆஃபர் கிடைச்சிருக்கு. நம்ம காலேஜ்ல இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இருபத்தைஞ்சு ஸ்டூடண்ட்ஸ்ல ஒன்னோட சேர்த்து நாலு பேருக்கு மட்டும்தான் இண்டர்ன்ஷிப் முடிஞ்சதும் ஜாப் ஆஃபரும் குடுத்திருக்காங்க.”
கல்லூரியின் ப்ளேஸ்மெண்ட் செல் அலுவலகத்தில் அமர்ந்திருந்த அந்த இருபத்திரண்டு வயது பெண்ணுக்கு இவ்வளவு பெரிய சந்தோசத்தைத் தாங்கும் அளவுக்கு மனவலிமை இல்லை.

கேம்பஸ் இண்டர்வியூவின் அனைத்துச் சுற்றுகளும் முடிவடைந்து அறுபத்தைந்தில் பதினைந்து பேரை மட்டும் தேர்வு செய்திருந்தார்கள். அந்தப் பதினைந்து பேரிடம் பயோமெட்ரிக்ஸ் எல்லாம் வாங்கியபோதே அவளுக்கு இண்டர்ன்ஷிப் உறுதியாகியிருக்கும் என்ற நம்பிக்கை.
ஆனால் பணிக்கான ஆர்டரும் சேர்ந்தே கிடைத்ததுதான் அவளது இப்போதைய சந்தோசத்துக்கு முக்கிய காரணம். தனது பரபரப்பையும் சந்தோசத்தையும் எப்படி காட்டுவதெனத் தெரியாமல் கொஞ்சமாய் கலங்கிய விழிகளும், பூரித்த முகமுமாய் அமர்ந்திருந்த அந்தப் பெண் மிருணாளினி.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“இது அவங்க அனுப்புன மெயில் காப்பி. இனிமே ஃபர்தர் கம்யூனிகேசன் எல்லாமே உங்களோட மெயில் ஐடிக்கு வந்துடும்”
ப்ளேஸ்மெண்ட் செல்லில் இருந்த ஊழியர் சொல்லவும் நன்றி சொல்லிவிட்டு எழுந்தவள் அவர் கொடுத்த மின்னஞ்சலின் அச்சுப் பிரதியை வாங்கிக்கொண்டாள்.
ப்ளேஸ்மெண்ட் செல் அலுவலகத்தை விட்டு வெளியேறும்வரை எத்தனை முறை அந்தப் பிரதியைப் படித்திருப்பாள் என்று அவளுக்கே தெரியாது.
ஜூனில் ஆரம்பித்து ஆறு மாதம் சென்னையில் இருக்கும் அவர்களின் நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப். ஸ்டைஃபண்டாக முப்பதாயிரம் வரும் எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.
முப்பதாயிரம்! கண்களில் பக்கெட் லிஸ்ட் கனவுகள் மின்னின.
“டி மிருணா” ஆவலோடு வந்தாள் திவ்யா. மிருணாளினியின் நெருங்கிய தோழி.
அவளிடம் அச்சுப்பிரதியை நீட்டியதும் ஆர்வமாய் அவளும் படித்துப் பார்த்தாள்.
படித்து முடித்ததும் முகத்தில் மத்தாப்பூவாய்ச் சந்தோசம் சிரித்தது.
“செல்லக்குட்டி நீ செலக்ட் ஆகிட்ட” என்று அவளது கையைப் பிடித்துக்கொண்டு குதித்தாள் திவ்யா.
“ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு மிருணா”
தோழனோ தோழியோ ஜெயிக்கும்போது அனைவருக்கும் மெய்யானச் சந்தோசம் வந்துவிடுவதில்லை. நட்பென்ற பெயரில் நமது சின்ன வெற்றியைக் கூட காந்தலோடு அணுகும் நண்பர்கள் அனேகம்.
ஆனால் திவ்யாவுக்கு மெய்யாகவே மிருணாளினியின் இந்த வெற்றியில் சந்தோசம். இருவரும் ஒன்பதாம் வகுப்பிலிருந்து ஒன்றாகப் படிப்பவர்கள்.

இணைபிரியாத தோழிகள் என்று கூட சொல்லலாம். மிருணாளினியின் கனவுகளும் ஆசைகளும் அந்த வகையில் திவ்யாவுக்கு அத்துப்படி.
“அப்பா கிட்ட சொன்னியா? கால் பண்ணி சொல்லு. நான் நம்ம பேக்கை எடுத்துட்டு வந்துடுறேன்”
திவ்யா ஓடியதும் தந்தையின் எண்ணுக்கு அழைத்தாள்.
அழைப்பு ஏற்கப்பட்டு “சொல்லு மிருணாம்மா” என்று தந்தை தங்கவேலுவின் குரல் கேட்டதும் மிருணாளினிக்குச் சந்தோசத்தில் பேச வார்த்தைகள் கூட கோவையாக வரவில்லை.
“அப்பா… நான்”
திக்கித் திணறியவள் “எனக்கு இண்டர்ன்ஷிப்புக்கு ஆஃபர்…” என்றவள் அவருக்குப் புரியாது என்பதால் “எனக்கு வேலை கிடைச்சிடுச்சுப்பா” என்றாள் குதூகலத்தோடு.
மறுமுனையில் தங்கவேலுவுக்கு மகிழ்ச்சியோடு சேர்த்து கர்வமும்!
“எனக்குத் தெரியும்ல! தங்கவேலு மவ நினைச்சதைச் சாதிப்பா”
பெருமிதத்தோடு சொன்னவர் “இன்னைக்கு நைட்டு உனக்குப் பிடிச்ச ஹோட்டலுக்குப் போய் சாப்பிடுவோமா?” என்று மகளுக்குப் பிடித்த ஹோட்டலைச் சொல்லி கேட்க
“நீங்கதான் உங்க மில் வேலைல பிசியாச்சே! அதோட உங்க முதலாளியோட மகளுக்கு வேற கல்யாணம்னு சொன்னிங்க” என மிருணாளினி சொல்லவும்
“அதைப் பாத்துக்கிடலாம்ல. நாம இன்னைக்கு நைட்டு போறோம். சரியா?” என்று அவர் உறுதியாய் சொல்ல கடைசியில் மிருணாளினியும் சம்மதித்துவிட்டாள்.
இன்னும் இரண்டு தேர்வுகள் மட்டும் பாக்கி இருந்தன. அவற்றை முடித்துவிட்டால் அவளது கல்லூரி வாழ்க்கை முடிந்துவிடும். ஜூனில் ஜே.பி.எம்மில் இண்டர்ன்ஷிப் ஆரம்பிக்கும்.
இடையில் இருக்கும் மே மாதத்தில் சும்மா இருக்க விருப்பமில்லை. தனது இண்டர்ன்ஷிப் சார்ந்து ஏதாவது ஆன்லைன் கோர்ச்சில் சேரலாமென்ற எண்ணம்.
இணையத்தில் தேடியபோது கட்டணம் கொஞ்சம் அதிகமெனத் தோன்றியது. நாற்பத்தாறு மணி நேர ஆன்லைன் வகுப்புக்கு எட்டாயிரம் ரூபாய் என அறிவித்திருந்தார்கள் ஒரு தளத்தில்.
உதடு கடித்து அவள் யோசிக்கும்போதே திவ்யாவும் வந்து சேர்ந்தாள்.
“அப்பா கிட்ட சொல்லிட்டியா?”
“ம்ம்! இன்னைக்கு நைட் டின்னர் சாப்பிட எனக்குப் பிடிச்ச ஹோட்டலுக்கு அழைச்சிட்டுப் போறேன்னு சொல்லிருக்கார்”
தோழியர் இருவரும் அடுத்து வரும் இரு தேர்வுக்குப் படிக்க வேண்டுமெனப் பேசிவைத்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பினார்கள்.
மிருணாளினிக்கு வேலை கிடைத்துவிட்ட செய்தியை மகிழ்ச்சியோடு உலகம்மையிடம் கூறியிருந்தார் தங்கவேலு.
அப்போதுதான் மில்லில் இருந்து வீட்டுக்குச் சாப்பிட வந்திருந்தார்.
“நம்ம மவளைப் பத்தி நினைச்சு இனிமே கவலைப்பட வேண்டாம் உலகு. இத்தனை வருசம் அரும்பாடுப்பட்டு படிக்க வச்சதுக்குப் பலன் கிடைச்சிடுச்சு.”
“ஆமாங்க! வேலைக்குப் போனதுக்கு அப்புறம் அவ சம்பளத்தைச் சேர்த்து வச்சோம்னா இன்னும் ரெண்டு வருசத்துல நல்ல வரனா பாத்துக் கல்யாணம் பண்ணி வச்சிடலாம். என்னோட நகையும் சிலது இருக்கு. இனிமே எனக்கெதுக்கு நகையும் பவுனும்? அதை எல்லாம் போட்டு அவளுக்குப் புது நகையா வாங்கிடலாம்”
மகள் சம்பாதிக்க ஆரம்பித்துவிடுவாள் என்ற உறுதி கிடைத்ததும் பெற்றோரின் கவனம் திருமணத்தின் மீது குவிவதுதானே வாடிக்கை. உலகம்மையின் எண்ணமும் அதே திசையில் சென்றது.
“ம்ம்! அதுவும் சரிதான்! ஆனா உன் கழுத்துல காதுல இருக்குறது எதையும் விக்கணும்னு அவசியமில்ல. கடவுள் புண்ணியத்துல எனக்குக் கையும் காலும் நல்லா இருக்கு. கடைசி மூச்சு உள்ளவரைக்கும் என் பொண்டாட்டி கழுத்துல காதுல தங்கம் இல்லாம நிக்க விடமாட்டேன். ஏற்கெனவே மிருணா படிப்புக்குனு உன் நகைய வச்சிருக்கோம். அதைக் கொஞ்சம் கொஞ்சமா மீட்கணும்”
தங்கவேலு இவ்வாறு சொன்னதும் உலகம்மையின் முகத்தில் சந்தோசத் தீற்றல்! எத்தனை வயதானாலும் பொன் மீதான மயக்கம் பெண்களுக்குத் தீருவதேயில்லை.
இருவரும் சாப்பிட்டு உண்ட மயக்கம் போக கண்ணயர்ந்த நேரத்தில் மிருணாளினியும் கல்லூரி பேருந்தில் வந்து இறங்கினாள் அம்பாசமுத்திரத்தில்.
திவ்யாவிடம் டாட்டா காட்டிவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தவள் அன்னையும் தந்தையும் ஓய்வெடுப்பதைக் கவனித்துவிட்டுச் சத்தம் போடாமல் தனது பேக்கைத் தனக்கென ஒதுக்கியிருந்த அறையில் வைத்துவிட்டு முகம் கழுவப் பின்வாயிலுக்குச் சென்றாள்.
அங்கே நீளமாகச் சிமெண்டில் தொட்டி ஒன்றைக் கட்டிப் போட்டிருந்தார் தங்கவேலு. என்ன வெயில் அடித்தாலும் அதிலிருக்கும் தண்ணீர் ஜில்லென்று இருக்கும்.
அதில் முகம் கழுவி அங்கேயே கொடியில் உலர்ந்திருந்த டவல் ஒன்றில் முகத்தைத் துடைத்துக்கொண்டாள்.

சமையலறைக்குப் போய் பார்த்தவளுக்குக் கண் முதலில் பதிந்ததே உலகம்மை வைத்திருந்த ரவா பாயாசத்தின் மீதுதான்.
அவசரத்தில் இனிப்பு செய்யவேண்டுமென இந்தப் பாயாசத்தை வைத்திருப்பார் போல.
ஒரு தம்ளரில் ஊற்றி ஸ்பூனால் அருந்தியபோதே அத்துணை ருசி!
அந்த இடத்தில் தாய் தந்தையரின் அன்பை எண்ணி அவளது கண்கள் கலங்கின.
சில பெற்றோர் மட்டுமே தங்களது வரும்படி அனைத்தையும் பெண் குழந்தைகளின் படிப்புக்காகச் செலவு செய்வார்கள். அவர்களுக்குச் சேமிப்பு, வயோதிகத்தில் பொருளாதார பாதுகாப்பு என மற்ற காரணிகளை விட மகளின் படிப்பும், எதிர்காலமும் பெரிதாகத் தெரியும்.
அப்படிப்பட்டவர்களின் பிரதிநிதிகள்தான் தங்கவேலுவும், உலகம்மையும்.
மிருணாளினியிடம் சரஸ்வதியின் கடாட்சம் இருந்ததால் அவளது கல்விக்கு எந்தக் குறையும் வைத்ததில்லை இருவரும்.
பொறியியல் கல்லூரியில் மிருணாளினி சேர்ந்தபோது சேமிப்பு என இருந்த அனைத்தும் கரைந்து போனது. கூடவே உலகம்மையின் சில நகைகளும் வங்கியின் லாக்கர்களுக்குப் போய்விட்டன.
மதிப்பு மரியாதைக்குக் குறைவில்லாத சொந்தபந்தங்கள் வாய்த்தாலும் திருமணம், காது குத்து என்று எங்கே சென்றாலும் அன்னை கவரிங் அணிந்து செல்வதைக் கவனித்து மிருணாளினி மனம் குமைந்த நாட்கள் அனேகம்.
தங்கவேலுவுக்கு எண்ணெய் மில்லில் நல்ல ஊதியம்தான். அதில் மிருணாளினியின் படிப்பு செலவு, மாதாமாதம் வீட்டுக்கு ஆகும் செலவு எனத் திருப்தியாக வாழலாம். ஆனால் சேமிப்பு? ஆசைப்பட்டதை வாங்கும் வாய்ப்பு? அதைத் தாண்டி சேமித்தாலும் அவை யாவும் மருத்துவம் போன்ற திடீர்ச்செலவுகளுக்கே சரியாகிவிடும்.
இதெல்லாம் பார்த்து வளர்ந்தவள் என்பதாலேயே மிருணாளினிக்குத் தனது பெற்றோர் விரும்பிய அனைத்தையும் செய்யும் இடத்துக்கு வரவேண்டுமென்ற முனைப்பு அதிகம்.
சிந்தனைவயப்பட்டு ரவா பாயாசத்தின் கடைசி ஸ்பூனை விழுங்கியபோதே பசி அடங்கிப்போனது அவளுக்கு. பின்னர் எங்கிருந்து சாப்பிடுவது?
புத்தகத்தோடு படிக்க அமர்ந்தவள் படித்தபடியே உறங்கியும் போனாள்.
உறக்கத்தில் என்னென்னவோ கனவுகள்! அதில் மயில் முகப்பு வைத்த தங்கச் செயின் அணிந்து பட்டுப்புடவை அணிந்து பூரிப்போடு நின்றார் அவளது அன்னை உலகம்மை. அவருக்குக் குறையாத கம்பீரத்தோடு வேஷ்டி சட்டை நெற்றியில் துலங்கும் திருநீறுடன் காட்சி தந்தார் தங்கவேலு.
இருவரும் நின்ற இடம் ஒரு திருமண மண்டபம்! அதோடு கனவு முடிந்து எழுந்து அமர்ந்தவளுக்குச் சமீபநாட்களாக ஆதிராவின் திருமணம் பற்றி அடிக்கடி தந்தை பேசிக்கொண்டே இருப்பதால் வந்த கனவாக இருக்குமென நினைத்துக்கொண்டாள்.
அன்றிரவு தங்கவேலு மனைவியையும் மகளையும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
அடுத்தடுத்து அந்த வாரத்திலேயே இரண்டு தேர்வுகள் மிருணாளினிக்கு. அவற்றை நல்லபடியாக எழுதி முடித்துவிட்டுக் கல்லூரிப்பருவத்தை முடித்தவள் எப்போதடா ஜூன் வருமென ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்தாள்.
கூடவே தங்கவேலுவிடம் ஆன்லைன் கோர்ஸ் பற்றி சொல்லி, கட்டணம் செலுத்தி அதையும் படித்துக்கொண்டிருந்தாள்.
அந்த வாரயிறுதியான ஞாயிறு மதியம் வீட்டில் ஓய்வாக டிவி பார்த்துக்கொண்டிருந்த தங்கவேலு மொபைலில் அழைப்பு வரவும் பரபரப்புக்கு ஆளானார்.
அழைத்தவர் அவரது முதலாளியான வினாயகம்.
“சொல்லுங்க முதலாளி”
அவர் மறுமுனையில் என்ன சொன்னாரோ தெரியவில்லை. சட்டை ஒன்றை அணிந்துகொண்டு செருப்பை மாட்டியவர் “முதலாளி குடும்பத்தோட ஊர் எல்லையில நிக்காராம் உலகு. அவங்க வந்த கார் ரிப்பேர் ஆகிடுச்சாம். நான் போய் என்னனு பாத்துட்டு வந்துடுறேன்” என்று சொல்ல
“ஆதிக்குப் போன் போட்டு அவ காரைக் கொண்டு வரச் சொல்லுங்க. மொட்டை வெயில்ல எப்பிடி அவங்க எல்லாம் நிப்பாங்க” என்றார் உலகமமி கரிசனத்தோடு.
தலையை ஆட்டியபடி அவர் கிளம்பிவிட மிருணாளினியும் அன்னையிடம் வந்து என்னவென வினவினாள்.
உலகம்மை நடந்ததைச் சொல்லவும் “ஊர் எல்லையில இருந்து அவங்க வீட்டுக்கு நடந்து போகலாமே! இதுக்குனு வீட்டுல இருக்குற பொண்ணு காரை எடுத்துட்டு அவங்களைக் கூப்பிட வரணுமா?” என்றாள் சலிப்போடு.
“அவங்க எல்லா இடத்துக்கும் கார்ல போய் பழகுனவங்க மிருணா. அப்பிடியெல்லாம் நடந்து போக முடியாது. அதோட வயசான அம்மா வேற கூட இருப்பாங்க. ஆதிக்குக் கார் ஓட்டத் தெரிஞ்சது எவ்ளோ நல்ல விசயம்ல? நீயும் உங்கப்பா கிட்ட கார் ஓட்ட பழகிக்க. பழகுறதுக்கு ஆதியோட காரை வாங்கிக்கலாம். அவ குணத்துல தங்கம். சந்தோசமா குடுப்பா”
“ம்ம்! பாக்கலாம்மா”
அவளுக்கும் ஆதிராவைப் பற்றி தெரியும்தான்! ஆதிரா மட்டுமில்லை அவளது பெற்றோர், ஆச்சி, தமக்கை என அனைவருமே தங்கவேலுவைச் சம்பளம் வாங்கும் ஊழியராக நடத்துவதில்லை. அதற்காக அவர்களிடம் ஓவராக உரிமை எடுத்துக்கொள்ள அவளுக்கு விருப்பமில்லை.
அடுத்தச் சில நிமிடங்களில் தங்கவேலுவின் எண்ணிலிருந்து மிருணாளினிக்கு அழைப்பு வந்தது.
“உங்கம்மை கிட்ட எலுமிச்சை பழத்தைப் புழிஞ்சு உப்பு போட்டுத் தரச் சொல்லு மிருணா. மருதநாயகியம்மாக்கு மயக்கம் வந்துடுச்சு திடீர்னு”
உலகம்மையிடம் அவளும் விவரத்தைச் சொல்ல அவரும் அவசரமாக உப்பும் சர்க்கரையும் சமபங்கு கலந்து எலுமிச்சை சாறு தயார் செய்து ஒரு பெரிய சொம்பில் கொடுத்து அனுப்பினார் மிருணாளினியிடம்.
கூடவே நான்கு எவர்சில்வர் தம்ளர்களை ஒன்றுக்குள் ஒன்று வைத்து அவளிடம் நீட்டினார்.
மிருணாளினியின் வீடு ஊர் எல்லைக்கு அருகேதான்! அதனால் பொடி நடையாக நடந்து வந்தவள் தூரத்திலிருந்து பார்த்தபோதே காரை மெக்கானிக் பழுது பார்ப்பது தெரிந்தது.
வினாயகமும் எழிலரசியும் தங்கவேலுவிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்க மருதநாயகி மட்டும் காருக்குள் அமர்ந்திருந்தார்.
அவரோடு யாரோ ஒரு ஆடவனும் அமர்ந்திருப்பதைக் கவனித்தாள் மிருணாளினி. காரின் முன்னிருக்கையில் அமர்ந்து பின்னிருக்கையில் இருந்த மருதநாயகியிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்த அந்த ஆடவனின் முதுகு மட்டுமே அவளது பார்வைக்குக் கிடைத்தது.
“அடடா! மிருணா ஏன்மா வெயில்ல வர்ற? ஏன்ணே இது உங்க வேலையா?” என்று எழிலரசி சொல்லவும் திரும்பிப் பார்த்தான் அந்த ஆடவன். வேறு யாருமில்லை. கர்ணன் தான். அவனைப் பற்றி மிருணாளினிக்குப் பெரிதாக எந்த அபிப்பிராயமும் இல்லை.
மிருணாளினிக்கு வினாயகத்தின் இல்லமான சந்திரவிலாசத்தின் அழகு மீது தனி ப்ரேமை உண்டு. சின்ன வயதில் தந்தையோடு அங்கே அவள் போயிருக்கிறாள்.
ஆதிராவும் ஸ்வேதாவும் அவளிடம் நன்றாகப் பேசுவார்கள். ஆனால் கர்ணன் எப்போதுமே முகத்தை ஒரு அங்குலம் தூக்கிக்கொண்டே திரிவான். பேசியது கூட இல்லை அவனிடம்.
ஒரே ஊர்க்காரன் என்ற அளவில் அவ்வபோது பார்க்க நேர்ந்தாலும் யாரோ ஒருவன் என்பது போலதான் கடந்துவிடுவாள் மிருணாளினி.
கர்ணனும் அவ்வாறே கடப்பான்! பேசிக்கொள்ளவோ, இயல்பாகச் சிரிக்கவோ அவர்களுக்குள் எதுவுமில்லையே!
மிருணாளினி வினாயகத்துக்கும் எழிலரசிக்கும் எவர்சில்வர் தம்ளரில் எலுமிச்சை சாறை ஊற்றிக் கொடுத்தாள்.
எழிலரசி ஒரு மிடறு குடித்ததும் “உப்பு, சீனி கரெக்டா இருக்கா அத்தை?” என வினவினாள் அவள்.
“ம்ம்! நல்லா இருக்கு மிருணா. காய்ஞ்சு போன தொண்டைக்கு இதமாவும் இருக்கு” என்றார் அவர்.
“அப்பிடியே ஆச்சிக்கும் குடுத்துடு தங்கம்” எழிலரசி சொல்லவும் மிச்சமிருந்த இரண்டு தம்ளர்களில் எலுமிச்சை சாரை ஊற்றி காருக்குள் அமர்ந்திருந்த மருதநாயகியிடமும் கர்ணனிடம் கொடுத்தாள் மிருணாளினி.
மருதநாயகி அதை வாங்கிக்கொள்ள மொபைலில் தீவிரமாய் மூழ்கியிருந்த கர்ணனோ கண்டுகொள்ளவில்லை.
“ஜூஸ்?”
அவள் அழுத்தமாய் சொல்லவும் அவளிடம் பார்வையை உயர்த்தியவன் ‘வேண்டாம் என்பது போல் கையசைக்கவும் ஏனோ மிருணாளினிக்கு எரிச்சலாக வந்தது.

‘பெரிய மகாராஜா! வாயைத் திறந்து சொன்னால் முத்தும் வைரமும் உதிர்ந்துவிடும்’
“ஆச்சி இன்னும் கொஞ்சம் ஜூஸ் குடிக்கிறிங்களா?” என்று மருதநாயகியிடம் கேட்கவும்
“ம்ம்! கண்ணை இருட்டிட்டு வந்துச்சு. இதைக் குடிச்ச அப்புறம்தான் பார்வையே தெளிவாகுது போ” என்றவர் தம்ளரைக் கொடுத்தார் அவளிடம்.
மிருணாளினி அதில் பழச்சாறை நிரப்பிக் கொடுக்க அதை அருந்தியபடியே “ஆதிரைய பொண்ணு பாக்க வந்த அன்னைக்கு உனக்குக் காலேஜுல ஏதோ வேலையாமே! என்னாச்சு அது?” என்று மறக்காமல் விசாரித்தார்.
“கேம்பஸ் இண்டர்வியூ ஆச்சி! நான் அதுல செலக்ட் ஆகிட்டேன். ஜூன் மாசம் சென்னைக்குப் போகணும்”
அவளைக் கவனிக்கவில்லை என்றாலும் அவளது குரல் கர்ணனின் காதில் விழுந்தது.
தங்கவேலுவின் மீது அவனுக்கும் மரியாதை அதிகமே! ஒருவேளை அவருக்கு மகன் இருந்திருந்தால் அவனால் தங்குதடையின்றி பழகியிருக்க முடியுமோ என்னவோ!
ஒல்லியாக நெடு நெடு உயரத்தில் விசுக் விசுக்கெனத் தங்கள் வீட்டுக்கு அவரோடு வரும் மிருணாளினியிடம் பேசவே கர்ணனுக்குத் தோன்றியதில்லை.
“எவ்ளோ உயரம்! என்னை விட கொஞ்சம் தான் உயரம் கம்மி” என எண்ணிக்கொள்வான் அவன். அதைத் தாண்டி அவனை அவள் வசீகரித்தது இல்லை. அவளுமே ஆர்வம் எடுத்து அவனைப் பார்த்ததில்லை.
‘கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகியிருக்கிறாள்! திறமைசாலியாகத்தான் இருப்பாள்!’
அவ்வளவுதான்! அடுத்து போனில் வந்த வாட்சப் மெசேஜில் பிசியாகிப்போனான் அவன்.
ஆதிராவுக்குப் பேசி முடித்திருந்த அவினாஷின் வீட்டுக்கு ‘மாப்பிள்ளை வீடு பார்க்கும் முறைக்குச்’ செல்வதற்காக அவன் வந்திருந்தான்.
பார்த்தவரையில், பேசியவரையில் அவினாஷ் அவனது தமக்கையின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் புரிந்தும் கொண்டான்.
அவன் இப்போது வாட்சப்பில் பேசிக்கொண்டிருந்தது ஆதிராவிடம்.
அவளைக் காரை எடுத்துக்கொண்டு ஊர் எல்லைக்கு வரவேண்டாமெனச் செய்தி அனுப்பியிருந்தான்.
“மெக்கானிக் பாத்துட்டிருக்கார். இன்னும் கொஞ்சநேரத்துல நாங்களே வீட்டுக்கு வந்துடுவோம் ஆதி. இங்க தங்கவேலு மாமா இருக்குறார். ஒரு பிரச்சனையும் இல்ல.”
தட்டச்சு செய்தபடியே பின்னிருக்கையில் ஆச்சியும மிருணாளினியும் பேசிக்கொண்டிருப்பதைச் செவிமடுத்தான் கர்ணன்.
“மெட்ராசு உனக்குப் புது ஊர். பாத்து கவனமா இருக்கணும். உனக்கு என்ன உதவி வேணும்னாலும் எங்க வீட்டு மகராசன் கிட்ட கேளு. அவனுக்கு அந்த ஊர்ல தெரியாத இடமே இல்லயாம்”
மருதநாயகி பெருமிதத்தோடு சொல்லவும் “இந்தக் கிழவிக்கு வேற வேலை இல்ல” என மனதுக்குள் சலித்துக்கொண்டான் அவன்.
பின்னர் மருதநாயகியிடம் முகமலர்ச்சியோடு ஆசி வாங்கிகொண்டு மிருணாளினியும் அங்கிருந்து கிளம்பினாள்.
யாரோ எவரோ போல நடந்துகொள்ளும் இந்த இருவருக்குள்ளும் இன்னும் ஒரு வாரத்தில் பிரிக்க முடியாத பந்தமொன்று திடுமென உருவாகப் போகிறதென அப்போது அங்கிருந்த யாருக்குமே தெரியாது!
அந்தப் பந்தத்துக்கானக் காரணியாக இருக்கப்போகிற மருதநாயகியோ கண் மூடி காரின் சீட்டில் சாய்ந்திருந்தார். அடுத்த நான்கு மணி நேரத்தில் மொத்த சந்திரவிலாசமும் அவரைப் பற்றி நினைத்துப் பரிதவிக்கப் போகிறதே!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

