“மனுசங்களைச் சமூக விலங்குனு சொல்லுவாங்க. அவங்களால தனியா வாழமுடியாது. முடிஞ்ச வரைக்கும் உறவும் நட்பும் சேர்ந்த வாழ்க்கைய அவங்க வாழ ஆசைப்படுவாங்க. ஆனா ஒன்னு சேர்ந்து வாழுற இடத்துல கூட பல நேரங்கள்ல நாம தனிமைய உணருவோம். அது தற்காலிகமா இருக்குறவரைக்கும் பிரச்சனை இல்ல. அந்தத் தனிமை தொடர்கதையாச்சுனா என்ன வாழ்க்கை இதுங்கிற சலிப்பு நமக்குள்ள வந்துடும்”
-மிருணாளினி
மிருணாளினியிடம் சொன்னது போலவே அன்று மாலை சென்னைக்குப் பேருந்து ஏறிவிட்டான் கர்ணன். பேருந்தின் இருக்கையில் அமர்ந்தவனின் மனமோ புயல் கண்ட கடலாய் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
மிருணாளினியின் வார்த்தைகள் கொடுத்த அதிர்ச்சியும் கோபமும் தீருவேனா என்றது.
அவளிடம் கத்திவிட்டு மடமடவென உடைகளை மாற்றியவன் சரியாக ஆச்சியிடம் பேசாமல் விடைபெற்றிருந்தான். அவனால் கோபத்தைக் கட்டுப்படுத்தவோ மறைக்கவோ முடியாது. இது ஒரு ஆளுமை குறைபாடு என்று அவனுக்கும் தெரியும்.
ஆனால் கோபத்தை முதிர்ச்சியாகக் கையாளும் பயிற்சி அவனுக்குக் கைவரவில்லையே!
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அதனால் கோபமாய் இருக்கும்போது பிரியத்துக்குரியவர்களிடம் வார்த்தைகளைச் சுருக்கிக்கொள்வான்.
எல்லாவற்றுக்கும் காரணம் மிருணாளினி என்றது அவனது மனம். கொஞ்சமும் யோசனையின்றி வார்த்தைகளைச் சிதறிடிக்கிறாள் இந்தப் பெண் என்று நினைத்துக்கொண்டான்.
பெண் என்பவள் பெரும்பாலான நேரங்களில் கண்ணாடி போல தன்னை மாற்றிக்கொள்வாள். ஆண் அதில் காணும் பிம்பம் அவனுடைய வார்த்தைகள், அவளை நடத்தும் விதம், அவளுக்குக் கொடுக்கும் மரியாதையைப் பொறுத்தே அழகாகவோ அவலட்சணமாகவோ வரும்.
மிருணாளினியின் அதீத எரிச்சலுக்குக் காரணம் அவளை நீ நடத்திய முறையெனக் கர்ணனின் கன்னத்தில் அறைந்து சொல்ல யார் இருக்கிறார்கள்?
கோபமும் வெறுப்பும் கொடுக்கும் காயங்களை விட உதாசீனமும் புறக்கணிப்பும் கொடுக்கும் காயங்கள் அதிக வேதனையைக் கொடுக்கும்.
சுற்றி ஆட்கள் இருக்கும்போதே தனிமையை உணர்வது துர்பாக்கியம். இதெல்லாம் ஆண்களுக்குப் புரியாது. உணர்வுகளைக் கையாளுவதை அவற்றைச் சரிவர வெளிப்படுத்துவதை, மற்றவர்களின் உணர்வுகளை அறிந்து செயல்படுவதை ‘எமோஷனல் இண்டெலிஜென்ஸ்’ என்பார்கள்.
அந்தோ பரிதாபம்! இந்திய ஆண்களுக்கு ‘எமோஷனல் இண்டெலிஜென்ஸ்’ மிகவும் குறைவு. ஆண் என்ற தகுதியில் அவர்கள் எப்போதும் ‘எமோஷனல் இண்டெலிஜென்சை’ சேர்த்துக்கொள்வதுமில்லை. அதை வளர்த்துக்கொள்வதும் இல்லை.
அதனாலேயே பெரும்பான்மை இந்திய ஆண்களால் தங்களது மனைவிமார்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.
ஒரு பெண் தனது மனதில் இருக்கும் உணர்வுகள், எண்ணங்களில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகவே வார்த்தைகளால் வெளியிடுவாள். மிச்சத்தை அவள் உங்களை நடத்தும் விதத்தில் புரிந்துகொள்ள முடியும். அதைப் புரிந்துகொள்ளவே ‘எமோஷனல் இண்டெலிஜென்ஸ்’ தேவைப்படுகிறது.
கர்ணன் மட்டும் செவ்வாய்கிரகவாசியா என்ன? அவனுக்கும் இதெல்லாம் சுத்தமாகக் கிடையாது. கொஞ்சம் போல அவன் தனது செயல்களைச் சீர்தூக்கிப் பார்த்திருக்கலாம்.
மிருணாளினி பேசிய வார்த்தைகள் தவறாகவே இருந்தாலும் அதன் அடிப்படை அவன் மீதான அவளுடைய நம்பிக்கையின்மை.
ஒரு ஆணின் பெரிய தோல்வியே அவனது மனைவியிடம் நம்பிக்கையைச் சம்பாதிக்கத் தவறுவதுதான்.
கர்ணனுக்கும் அந்த வெற்றிகரமானத் தோல்வி கிடைத்துவிட்டதே!
கொந்தளிப்புடன் சென்னை மண்ணை மிதித்தவன் ஃப்ளாட்டிற்குள் போய் அடைந்துகொண்ட ஐந்தாவது நிமிடத்தில் அழைப்புமணி ஒலித்தது.
‘யாரடா இந்நேரத்தில்’ எனச் சலித்தவனாய் கதவைத் திறந்தவன் அங்கே லட்சுமி நிற்கவும் எப்படி அவரிடம் உரையாடலை ஆரம்பிப்பதெனத் தெரியாமல் திகைத்தான்.
“ஊர்ல இருந்து வந்துட்டிங்களா? நேத்து நைட் மிருணா பேசுனப்ப சொன்னா நீங்க வருவிங்கனு” என்றவரிடம்
“ஆ… ஆமா ஆன்ட்டி. உள்ள வாங்க” என்றான் தடுமாறியபடியே.
லட்சுமி உள்ளே வந்தவர் தனது கைகளில் இருந்த ஹாட்பாக்சை அவனிடம் கொடுத்தார்.
“இட்லியும் சட்னியும் இருக்கு. சாப்பிடுங்க. அப்புறமா ஆபிசுக்குக் கிளம்புங்க” என்றார்.
“ஏன் ஆன்ட்டி இதெல்லாம்?” என்றவனிடம்
“காலைல ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டே பழகிட்டிங்களாம். மிருணா சொன்னா. எங்களுக்குச் செய்யுறப்ப கூடுதலா ஒரு தட்டு அவிச்சிட்டேன். இதுல என்ன சிரமம் இருக்குப்பா? சாப்பிடுங்க. நைட் டின்னரும் கொண்டு வந்துடுறேன்” என்றார் அவர்.
“ஐயோ ஆன்ட்டி! எனக்கு நல்லா சமைக்கத் தெரியும். நான் சமைச்சுக்குறேன். ப்ரேக்ஃபாஸ்டுக்குத் தேங்க்ஸ்”
லட்சுமி கிளம்பியதும் ஹாட்பாக்ஸை உணவு மேஜையில் வைத்தவனின் மனதில் சின்னதாய் ஒரு குற்றவுணர்ச்சி.
‘அவளிடம் அதிகமாய்க் காய்ந்துவிட்டோமே’ என எண்ணியவன் அதிகம் யோசிக்காமல் மிருணாளினியின் எண்ணுக்கு அழைத்தான்.
அழைப்பை ஏற்பாளா என்ற சந்தேகம் உதயமான நொடியில் “சொல்லுங்க” என்று மிருணாளினியின் குரல் அவனது செவியில் விழுந்தது.
தொண்டையைச் செருமிக்கொண்டவன் “லட்சுமி ஆன்ட்டி இட்லி கொண்டு வந்து குடுத்துட்டுப் போனாங்க. நீ ஏதோ சொன்னியாமே” என்றான் அமர்த்தலாக.
“பேச்சுவாக்குல சொன்னேன். மத்தபடி நீங்க சாப்பிட்டாலும் சாப்பிடலனாலும் எனக்கென்ன கவலை?”
சுள்ளென்று எரிந்து விழுந்தாள் மிருணாளினி. நேற்றைய பேச்சின் பாதிப்பு என்பதால் கர்ணன் எகிறவில்லை.

“அக்கறை இருக்குனு ஒத்துக்கிட்டா நெடுநெடுனு வளர்ந்திருக்குற நீ தரைக்குத் தங்கச்சியாவா ஆகிடுவ?” என்றான் கிண்டலாக.
“இதுக்குப் பேர் மனிதாபிமானம். அக்கறை இல்ல. கூடவே இருக்குற ஆளைக் கண்டும் காணாம அலைய நான் ஒன்னும் நீங்க இல்ல” மீண்டும் சூடானப் பதிலடி.
“எதுவோ ஒன்னு! அதை விடு. எத்தனை நாள் ஊர்ல தங்கலாம்னு ப்ளான் போட்டிருக்க?” என்று வினவினான் மெதுவாக.
காலையில் வந்ததும் ஃப்ளாட்டின் அமைதியும் தனிமையும் அவன் முகத்தில் அறைவதாய்!
“எப்ப வந்தா உங்களுக்கு என்ன? எனக்குத் தோணுறப்ப வருவேன்” என்றாள் அவள்.
“அப்பிடியா?” என்றவன் சோஃபாவில் சாய்ந்துகொண்டான் வசதியாக.
மறுமுனையில் மிருணாளினியோ விசித்திரமாய் உணர்ந்தாள்.
நேற்று அந்தப் பேச்சு பேசியவன் இப்போது என்ன உரையாடலை வளர்க்கிறான்? அதுவும் இயல்பான தம்பதிகளின் உரையாடலைப் போல!
“எங்கம்மா நார்த்தங்காய் ஊறுகா செமய்யா பண்ணும். நீ என்ன பண்ணுற, ஊறுகா வடாம் எல்லாம் நிறைய ரெடி பண்ண சொல்லுற. அடுத்த வாரம் சென்னைக்கு வர்றப்ப அதெல்லாம் பேக் பண்ணி எடுத்துட்டு வர்ற”
“நான் எப்ப அடுத்த வாரம் வர்றேன்னு சொன்னேன்?”
“நான் உன்னை ஒரு வாரம் தங்கச் சொன்னதா ஞாபகம்”
“நீங்க சொன்னா நான் கேக்கணுமா?”
“சரி கேக்காத! யார் சொன்னா கேப்பியோ அவங்க மூலமா சொல்லி கேக்க வைக்குறேன்”
மறுமுனையில் மிருணாளினி பற்களை அரைத்தாள்.
பின்னரோ “நேத்து என்னை நாயே பேயேனு மட்டும்தான் சொல்லலை. அவ்ளோ தூரம் பேசிட்டு எதுவுமே நடக்காத மாதிரி இவ்ளோ கூலா பேசிட்டிருக்கிங்க? இவ்ளோ அடாசிட்டி எங்க இருந்து வருது உங்களை மாதிரி ஆம்பளைங்களுக்கு?”
“எம்மா! நீ என்னைப் பேசாத பேச்சா? நீ இன்ஸ்டால்மெண்ட்ல திட்டுவ. நான் சிங்கிள் பேமெண்டா திட்டிட்டேன். நீ பேசுனது மட்டும் சரியா?”
மிருணாளினி மறுமுனையில் அமைதியானாள். அதே நேரம் தான் பேசியதற்கான காரணம் நினைவுக்கு வந்ததும் மீண்டும் கொந்தளித்தாள்.
“நான் பேசுனது தப்புதான். ஆனா எல்லாத்துக்கும் யார் காரணம்? நீங்க தானே? என்னைப் பாத்தா எப்பிடி தெரியுது உங்களுக்கு? என்னமோ காவியக்காதல் ரேஞ்சுக்குப் பில்டப் பண்ணி என்னை உதாசீனப்படுத்துனது எல்லாம் ஆஃப்டர் ஆல் ஒருதலைக்காதலுக்காக தானே? அதுக்காக என்னை…”
“சரி! சரி! நான் தான் தப்பு. போதுமா?”
குறுக்கே புகுந்தவன் எகிறுவான் என அவள் எதிர்பார்க்க மறுமுனையோ தணிந்து போனது.
மிருணாளினிக்கே ஆச்சரியம் தாங்கவில்லை.
“என்ன டக்குனு தப்பை ஒத்துக்கிட்டிங்க?” என ஐயத்தோடு வினவினாள் அவள்.
பெருமூச்சு விட்டவன் “நீயும் உன் தப்பை ஒத்துக்கணும்ல. அதுக்காக தான் முதல்ல நான் என் தப்பை ஒத்துக்கிட்டேன்” என்றான்.
“என்ன தப்பு? அத்து விட்டுருங்கனு சொன்னதா? அதுல என்ன தப்பு இருக்கு? பேருக்குப் பொண்டாட்டியா வாழுறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா? அது ஒருவகைல எனக்கு அவமானமும் கூட. நீங்களும் நானும் ஒரே வீட்டுல இருக்குறோம். ஒரே ரூம்ல ஒரே பெட்ல படுத்துத் தூங்குறோம். ஆனா மனசளவுல நீங்களும் நானும் கண்ணுக்கு எட்டாத தூரத்துல இருக்குறோம். அந்த வீட்டுல என்னை நான் உயிர்ப்போட வச்சுக்க எவ்ளோ போராடுறேன்னு உங்களுக்குப் புரியல. தனியா இருந்தா தான் அது உங்களுக்குப் புரியும். அப்பவும் உங்களுக்கு மிருணாளினினு ஒருத்தியோட பிரசன்னத்தோட முக்கியத்துவம் புரியும்னு எனக்கு நம்பிக்கை இல்ல. எவளோ ஒருத்தி குர்தியும் பேண்டும் போட்டு நடமாடிக்கிட்டிருந்தா. மூனு வேளையும் சமைச்சுப் போட்டா. இப்ப அவ இல்லனுதான் தோணும். எனக்கான முக்கியத்துவம் உங்க வீட்டுலயும் உங்க வாழ்க்கைலயும் இல்லங்க. இந்த மாதிரி நிலமைல நான் வேற எப்பிடி பேசணும்னு எதிர்பாக்குறிங்க?”
இந்தக் கேள்விக்கு அவன் பதில் சொல்லமாட்டான் என அவள் எதிர்பார்த்திருக்க, கர்ணனோ பதிலைத் தயாராக வைத்திருந்தான்.
“இதுக்குத்தான் உன்னைக் கல்யாணத்தை நிறுத்தச் சொன்னேன். நீ அப்பவும் என் பேச்சைக் கேக்கல”
“கிடைச்ச வாழ்க்கைய நல்லபடியா வாழனும்னு உங்களுக்குத் தோணவே செய்யாதா?” சலித்துப்போனாள் மிருணாளினி.
“அந்த வாழ்க்கை கிடைக்கல. என் மேல திணிக்கப்பட்டுச்சு. நீ அதை மறந்துடாத”
“ஷப்பா! ஒருத்தருக்கொருத்தார் மாத்தி மாத்தி குறை சொன்னா எதுவும் மாறிடாதுங்க.”
“இப்ப தான் நீ சரியா யோசிக்குற. இதே மைண்ட்செட்டோட அடுத்த சனிக்கிழமை ட்ரெயின் ஏறு”
“டிக்கெட்?”
“தட்கல்ல ட்ரை பண்ணுறேன்”
“ம்ம்” என்றவள் “இருந்தாலும் என்னை நீங்க ஓவரா திட்டிட்டிங்க. எங்கப்பா அம்மா கூட இவ்ளோ பேசுனது இல்ல. எனக்கு இன்னும் மனசு ஆறல. அதை மறந்துடாதிங்க” என்று ஆதங்கத்தைச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
கர்ணனிடம் மெல்லிய சிரிப்பு! அலுவலகம் செல்ல தாமதமாகிவிடுமென மூளை அறிவிப்பு கொடுத்ததும் மடமடவெனத் தயாரானான்.
லட்சுமி கொடுத்த இட்லிகளைக் காலி செய்து பாத்திரங்களைக் கழுவித் துடைத்தவன் ஃப்ரிட்ஜில் எதுவும் இனிப்பு, சாக்லேட் இருக்குமா எனத் தேடினான்.
லட்சுமி ஏதாவது பதார்த்தம் கொடுத்துவிட்டார் என்றால் அதைச் சாப்பிட்ட கையோடு அவர் கொடுத்த பாத்திரத்தில் இனிப்பு வைத்து கொடுத்துவிட்டு வருவாள் மிருணாளினி.
இரண்டொரு முறை அதைக் கவனித்திருக்கிறான் கர்ணன்.
ஃப்ரிட்ஜில் சாக்லேட் எப்போதுமே ஸ்டாக் இருக்கும். மிருணாளினிக்கு ‘ஸ்வீட் டூத்’.
தேடிப் பார்த்தவனுக்கு உருண்டை வடிவத்தில் தங்க நிற தாள் சுற்றப்பட்ட சாக்லேட்கள் கிடைக்கவும் பாத்திரத்தில் அவற்றைப் போட்டு மூடி லட்சுமியிடம் கொடுத்துவிட்டு அலுவலகத்துக்குக் கிளம்பினான்.
யார் தன்னைக் கவனிக்கவில்லை என்று சற்று முன்பு வரை மிருணாளினி ஆதங்கமாகப் பேசினாளோ அவன் அவளது ஒவ்வொரு நடவடிக்கையையும் கூர்ந்து கவனித்தான் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.
ஒரு வாரம் மிருணாளினியும் மகிழ்ச்சியாகவே நாட்களைக் கழித்தாள் எனலாம். எழிலரசியுடன் சேர்ந்து கர்ணன் சொன்னபடி ஊறுகாய் செய்வது வடாம் பிழிவதில் நாட்கள் கழிந்தன அவளுக்கு.
அவன் வைத்துவிட்டுப் போன பணம் அப்படியே இருந்தது. அதைச் செலவு செய்யவில்லை. செலவு செய்வதற்கான சூழலும் வரவில்லை எனலாம்.
கர்ணன் தட்கலில் இரயில் பயணச்சீட்டைப் புக் செய்துவிட்டு அவளுக்குத் தகவலும் அனுப்பினான்.
தனது உடமைகள் வைக்கப்பட்ட பேக்கோடு ஊரிலிருந்து கொடுத்துவிடப்பட்ட வடாம், ஊறுகாய் பாட்டில்களையும் அள்ளிக்கொண்டு இரயில் ஏறினாள் மிருணாளினி.
உலகம்மைக்கு அவளைத் தனியே அனுப்ப விருப்பமில்லைதான். ஆனால் அவளே தனியாய்ப் போகத் தயாராய் இருந்ததும் அவரும் அதிகம் கவலைகொள்ளவில்லை.
“நைட் ஏறுனேன்னா மானிங் எக்மோர் வரப்போகுது. இதுக்கு ஏன்மா ஒரு ஆள் துணையா வரணும்?” என்று சொல்லிவிட்டாள் அவள்.
அவளுக்குக் கிடைத்தது அப்பர் பெர்த். மேலே ஏறி படுத்தவளுக்கு நல்ல உறக்கம். காலையில் எழும்பூரை இரயில் அடைந்ததுமே கர்ணனின் எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள்.
அவன் அப்போதுதான் உறக்கத்திலிருந்து விழித்திருந்தான்.
“நான் வரணும்னா இன்னும் டைம் ஆகும். நீ கேப் புக் பண்ணி வந்து சேரு” என்று உறக்கக் கலக்கத்தோடு சொன்னவன் அழைப்பைத் துண்டித்துவிட மிருணாளினிக்குப் பற்றிக்கொண்டு வந்தது.

கேப் புக் செய்ய அவளுக்குத் தெரியாதா? உடைமைகள் மட்டுமில்லாமல் தின்பண்டங்கள், ஊறுகாய், வடாமென அவள் கொண்டு வந்த சுமை அதிகம்.
அதைத் தூக்கி செல்ல போர்ட்டர்களிடம் பேசலாமென்றாலோ தயக்கம். இந்தத் தயக்கம் இண்ட்ரோவெர்ட்டுகளின் சாபம்.
அதனால் தான் கர்ணனை இரயில் நிலையத்துக்கு வருமாறு அழைத்தாள். அவனோ உறக்கத்திலிருந்து விழிக்காமல் அரைகுறை தூக்கத்தில் உலறிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
அந்நேரத்தில் ஆபத்பாந்தவனாய் அவளுக்கு நினைவிற்கு வந்தவன் அர்ஜூன்,
அவனது எண்ணுக்கு அழைத்ததும் உடனே அழைப்பு ஏற்கப்பட்டது.
“ஏய் மிருணா! காலையிலயே கால் பண்ணிருக்க? ஸ்டேசன்ல இருந்து கிளம்பிட்டியா?”
“எங்க கிளம்புறது? நான் நிறைய லக்கேஜ் கொண்டு வந்திருக்கேன் அர்ஜூன். கர்ணனுக்குக் கால் பண்ணுனேன், அவர் தூங்குறார்னு நினைக்குறேன். நீ வர முடியுமா ஸ்டேசனுக்கு?”
“இதோ கிளம்புறேன்”
அவன் வரும்வரை மிருணாளினி இரயில் நிலையத்தில் காத்திருக்க கர்ணனோ வீட்டில் அவளுக்காகக் காத்திருந்தான்.
நேரம் கடந்து போக இறுதியில் அவன் பொறுமையிழந்து அலுவலகத்துக்குக் கிளம்பிவிட்டான்.
தரிப்பிடத்தில் அவன் காரைக் கிளப்பியபோது அர்ஜூனின் கார் அவனுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை நோக்கி வருவதைக் கண்டான்.
கார் நின்றதும் அதிலிருந்து மிருணாளினி அர்ஜூனோடு சிரித்தபடி பேசிக்கொண்டு இறங்க, கர்ணனுக்கோ இந்தக் காட்சியில் அந்நியன் விக்ரம் போல விறுவிறுவென மூளைக்குள் மின்னல் வெட்டியது.
அர்ஜூன் ரோலர் சூட்கேசை நகர்த்தியபடி ஷோல்டர் பேக்கைப் போட்டுக்கொள்ள மிருணாளினி அவளது ஹேண்ட்பேக்கை மட்டும் எடுத்துக்கொண்டாள்.
அவன் ஏதோ ஜோக் சொல்ல அவளும் சிரித்தபடி தோளில் அடிக்க இக்காட்சியைக் காரிலிருந்து பார்த்தவனுக்கோ ஒட்டுமொத்த கேட்டட் கம்யூனிட்டியையே எரித்துவிடும் அளவுக்குக் கோபம்.
“இவளைக் கேப்ல தானே வரச் சொன்னேன்? வெளியாளுங்க கிட்ட பேச தயக்கம்னு சொல்லுவா. அர்ஜூன் கிட்ட பேசுறப்ப மட்டும் தயக்கம் ஓடிப்போயிடும். இவனுக்கு ஆபிசுக்கு டைம் ஆகலயா? வர வர ரொம்ப ஓவரா பண்ணுதுங்க ரெண்டும்”
கோபத்தோடு ஸ்டீயரிங் வீலில் குத்தினான் கர்ணன். அதே கடுப்போடு அலுவலகத்துக்கும் கிளம்பினான் அவன்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

