ஒருத்தர் சீரியசான ஒரு காரணத்துக்காக பெரிய முடிவுகளை எடுக்குறப்ப அதை நாம ஏத்துக்கலாம். ஆனா அல்பமான ஒரு காரணத்துக்காக அவங்க ஒரு முடிவை எடுத்து அந்த முடிவு நம்மளைப் பாதிச்சா எப்பிடி சும்மா இருக்க முடியும்? காதல்னு சொன்னப்ப நான் என்னமோ தெய்வீகக்காதல் ரேஞ்சுக்குக் கற்பனை பண்ணிட்டேன். ஆஃப்டர் ஆல் ஒன் சைட் லவ், அதுக்காக என்னை விலக்கி வச்சிட்டாரு இந்தாளு. நான் அவ்ளோ மட்டமா போயிட்டேன்ல. மிருணாளினினா இஷ்டத்துக்கு நடத்தலாம்ங்கிற அளவுக்கு நான் என்ன குறைவா போயிட்டேன்? இந்தக் கேள்வி எனக்குள்ள தீயா எரியுது. எதையும் கண்டுக்காத மாதிரி நடந்துக்கிட்டாலும் எல்லாருக்கும் இயல்பா கிடைக்குற ஹஸ்பெண்டோட அன்பு எனக்கு மட்டும் எட்டாக்கனி ஆகிடிச்சுஞ்சு என் மனசும் வருத்தப்பட்டுச்சுல்ல. அதுக்கு என்ன பதில்?”
-மிருணாளினி
ஆதிரா – புவனேந்திரனின் நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்து முடிந்தது.
நிச்சயதார்த்தத்துக்கு வந்திருந்த மலர்விழியின் அன்னை குழலி ஆதிராவைத் தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆதிராவுக்குமே மலர்விழியின் தந்தையுடைய தோட்டத்தைப் பார்க்கும் ஆவல் இருக்கவே மிருணாளினியையும் தன்னோடு வருமாறு அழைத்தாள்.
அவளுக்குச் சென்னையைப் போல ஊரிலும் வீட்டுக்குள் அடைந்து கிடக்க பிரியமில்லை. காலையிலேயே பெண்கள் இருவரும் கிளம்பினார்கள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
மிருணாளினி குளித்து உடைமாற்றும்போது தங்கையிடம் இரகசியம் பேசிக்கொண்டிருந்தான் கர்ணன்.
“கார்ல தானே போறிங்க? உன் மதினி கிட்ட காரைக் குடுத்துடாத ஆதி. இன்னும் அவ டிரைவிங்கில தேறல. அவ ஃப்ரெண்ட் அர்ஜூன் மாரல் பூஸ்ட் பண்ணுறதா நினைச்சுக்கிட்டு அவளை ஏத்தி விட்டிருக்கான். கவனம்”
அவன் எச்சரிகையாக இருவெனச் சொல்லும்போதே மிருணாளினியும் தயாராகி வந்துவிட்டாள்.
“என்னைப் பத்தி தானே பேசிட்டிருந்திங்க?” என்று சரியாகக் கண்டுபிடித்தவளிடம்
“உன்னைப் பத்தி பேச என்ன இருக்கு? எப்பவுமே ‘மெயின் கேரக்டர்’ வைப்லயே இருப்பியோ? மலர் வீட்டுல முருங்கை மரம் ஒன்னு உண்டு. அதைப் பத்தி பேசிட்டிருந்தேன்” என்றான் கர்ணன் அமர்த்தலாக.
மிருணாளினி நக்கலாகச் சிரித்தாள்.
“எங்க யார் எதை யோசிச்சாலும் வேதாளத்தோட கவனம் மட்டும் முருங்கை மரம் மேலதான் இருக்குமாம். நீங்க வாங்க மதினி. ஆல்ரெடி லேட் ஆகிடுச்சு”
ஆதிரா சத்தமாக நகைத்தபடி அவளோடு செல்லும்போதுதான் மிருணாளினி வேதாளம் என்று தன்னைக் கிண்டல் செய்ததே கர்ணனின் புத்தியில் உறைத்தது.
உடனே கடுப்போடு “ஏய் நில்லுடி” என்றபடி அவர்களை நோக்கி விறுவிறுவென முன்னேறியவன் இடையில் வினாயகம் வரவும் வேகநடையை நிறுத்தினான்.
“என்னப்பா ஏதோ கோவமா பேசுன மாதிரி தெரிஞ்சுதே?” என அவர் கேட்க
“கோவமா? அதுவும் நானா? போங்கப்பா. நான் மிருணாவ கவனமா போயிட்டு வானு சொன்னேன்” எனச் சமாளித்தான் அவன்.
“சரி சரி! நம்ம சாஸ்தா கோவிலுக்கு அடுத்த மாசம் போகலாம்னு இருக்கோம். உனக்கு லீவ் கிடைக்குமா?”
“எதுக்குப்பா?”
“லட்சார்ச்சனை நடக்கப் போகுதுப்பா. நீயும் மருமகளும் கலந்துக்கிட்டா நல்லா இருக்கும்னு தோணுச்சு”
“லீவ் கிடைக்குறது கஷ்டம்பா. அடுத்த மாசம் மிருணாவும் வேலையில ஜாயின் பண்ணிடுவா. எனக்கும் புராஜெக்ட் வேலை வந்துடும். இனி ஆதி கல்யாணத்துக்குத்தான் லீவ் அப்ளை பண்ணனும்பா”
வினாயகத்துக்கும் மகனின் நிலை புரிந்தது. அதோடு அவனது வேலை அவனுடைய நீண்டநாள் கனவு என்பதும் தெரியும் அவருக்கு. ஏதோ திருமணம் ஆகிவிட்ட காரணத்தால் மட்டுமே இப்போதெல்லாம் விடுமுறை எடுக்கிறான். இதுவே பழைய கர்ணன் என்றால் தீபாவளி பொங்கலுக்குக் கூட ஊருக்கு வர சிணுங்குவான்.
அதே நேரம் ஆதிராவும் மிருணாளினியும் காரில் போய்க்கொண்டிருந்தார்கள். மிருணாளினி வார்த்தைக்கு வார்த்தை மதினி என்று அழைக்கவும் ஆதிராவுக்குச் சங்கடம்.
வயதளவில் மிருணாளினி ஆதிராவை விட சிறியவளே! ஆனாலும் அண்ணன் மனைவி என்பதால் உறவுமுறையைச் சரியாகக் கடைப்பிடித்தாள் ஆதிரா.
ஆனால் அவள் தன்னை மதினி என்றது ஏதோ ஒரு வகையில் அசௌகரியமாய்!
“என்னை ஆதினே கூப்பிடுங்க மதினி”
“அதில்ல… ஏஜ்…”
“வயசு என்ன வயசு? நீங்க மதினினு கூப்பிட்டா ரொம்ப ஃபார்மலா இருக்கு”
“இதையே நானும் சொல்லலாம்ல”
“பார்றா! இப்பிடி கவுண்டர் குடுக்குறதாலதான் எங்கண்ணா அலறுறானா?”
ஆதிரா கிண்டல் செய்யவும் மிருணாளினி சிரித்துவிட்டாள்.
“இல்லனா மட்டும் உங்கண்ணன் புன்னகை மன்னன் தான்”
“அதுவும் சரி! அவன் எங்க தாத்தா மாதிரி. உர்ருனு இருப்பான். ஆச்சி கிட்ட மட்டும் முழ நீளத்துக்கு வாய் பேசுவான். சரி! அவன் கூட உங்க லைஃப் எப்பிடி போகுது?”
“நீங்க கோவப்படமாட்டிங்கனா உண்மைய சொல்லுவேன்” என்றாள் மிருணாளினி.
“உங்க கிட்ட நான் எப்பிடி கோவப்படுவேன் மதினி?”
“ப்ராமிஸ்?”
ஆதிரா சத்தியம் செய்ததும் “எனக்கு வீட்டுல இருக்குற ஃபீல் வரல. ஏதோ காட்டுக்குள்ள இருக்குற மாதிரி ஃபீல் ஆகுது. உங்கண்ணன் சரியான மலைக்குரங்கு. சில நேரம் கடுகடுனு கடுவன் பூனை மாதிரி இருக்குறார். எனக்கு ஏதாச்சும் ஹெல்ப் பண்ணுங்கனு கேக்குறப்ப சோம்பேறித்தனம் வந்து தேவாங்கா மாறிடுவார். மனுசன் கூட வாழுற ஃபீல் வரல எனக்கு” என்று கடுகடுத்தாள் மிருணாளினி.

ஆதிரா அனைத்தையும் கேட்டுவிட்டு “எனக்கு அடுத்து அவனைச் சரியா கணிச்சது நீங்கதான் மதினி” என்று சொல்ல இரு பெண்களும் ஹைஃபை கொடுத்துக்கொண்டார்கள்.
“ஸ்வேதாக்கா அவனுக்குச் செல்லம் குடுப்பா ஓவரா. அவங்க ரெண்டு பேரும் ஒரே கேங்க். நான் மட்டும் தனியாளா நிப்பேன்”
“இனிமே நான் துணைக்கு இருப்பேன்”
பெண்கள் கர்ணனைக் கலாய்த்தபடியே காரில் பயணமாகி போய் நின்ற இடம் என்.எஸ்.என் நிவாசம். குலவணிகர்புரத்தில் இருக்கும் புவனேந்திரனின் இல்லம்.
வீட்டின் பிரம்மாண்டத்தை வியந்தபடி காரிலிருந்து இறங்கினாள் மிருணாளினி. இவ்வளவு பெரிய வீட்டின் உரிமையாளரான சிவகாமி எத்துணை எளிமையாகப் பழகினார் என்ற எண்ணம் வந்தபோதே சுஜாதாவின் நினைவும் வந்து தொலைத்தது அவளுக்கு.
தனது திருமணத்தில் அவள் செய்த களேபரங்களை எப்போதுமே மிருணாளினியால் மறக்க முடியாது.
அவளது எண்ணங்களின் நாயகியான சிவகாமி மருமகளாகப் போகிறவளை ஆவலோடு வரவேற்றார். மிருணாளினியிடம் கனிந்த புன்னகையொன்று வீசினார்.
“என்னம்மா புதுப்பொண்ணு…” என அவர் ஆரம்பிக்கும்போதே
“நான் பழைய பொண்ணு பெரியம்மா. இன்னும் எத்தனை மாசத்துக்குப் புதுப்பொண்ணா இருக்குறது?” என மிருணாளினி சலித்துக்கொள்ள
“இவ என்னடி இப்பிடி சலிச்சுக்குறா? புதுப்பொண்ணுக்குனு சில சலுகைகள் இருக்கும். அதெல்லாம் மறுபடி கிடைக்காதுடி. கிடைக்கப்பவே அனுபவிச்சிக்கணும்” என்று கேலி செய்தபடி இருவரையும் சாப்பிட அழைத்துப் போனார்.
“சாப்பிட்டுட்டுத்தான் வந்தோம் அத்தை” என்ற ஆதிராவையும் மிருணாளினியையும் உணவு மேஜையில் அமர்த்திவிட்டார் அவர்.
“இங்க லைட்டா சாப்பிட்டா உன் வெயிட் ஒன்னும் அதிகமாகிடாது” என மிருணாளினியிடம் கேலியாய்ச் சொல்ல
“அதுக்கில்ல பெரியம்மா…” என இழுத்தவள் பிறகு தட்டில் மெத்தென்று வைக்கப்பட்ட ஆப்பத்தையும் கூடவே கிண்ணத்தில் ஏலக்காய் மணக்க வைக்கப்பட்ட தேங்காய்பாலையும் கண்ட பிறகு மறுக்கவில்லை.
ஆதிரா புவனேந்திரனைப் பற்றி விசாரித்தாள். அவன் ஹோட்டலுக்குச் சென்றிருப்பதாகச் சிவகாமி சொன்னதும் அவளது முகம் வாடிப்போனது.
மிருணாளினி சாப்பாட்டின் இடையே அதையும் கவனித்துவிட்டாள்.
‘ஏதோ வேலை இருப்பதால் சென்றிருப்பார். அதற்கு ஆதிராவின் முகம் ஏன் வாடவேண்டும்?’
யோசித்தபடியே சாப்பிட்டு முடித்தவள் மலர்விழியும் அவளது ஆறு மாதக் குழந்தையான கதிர்காமனும் தயாராகி வந்ததும் குழந்தையை வாங்கிக்கொண்டாள். அவனோ ஆதிராவிடம் செல்ல ஆர்ப்பரித்தான்.
“பார்றா! அதுக்குள்ள பெரியம்மா மேல ஓவர் அன்பு”
கொஞ்சியபடியே அவனது கன்னத்தை மெதுவாக வருடிவிட்டாள் மிருணாளினி. பெண்கள் மூவரும் சிவகாமியிடம் சொல்லிக்கொண்டு காரிலேறினார்கள்.
“நீங்க குழந்தைய வச்சுக்கங்க ஆதி. நான் காரை ட்ரைவ் பண்ணுறேன்” என்று மிருணாளினி சொல்லிவிட்டதால் மலர்விழியிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்ட ஆதிரா அவளை முன்னிருக்கைக்கு அனுப்பிவிட்டுக் கதிர்காமனோடு பின்னிருக்கையில் அமர்ந்துகொண்டாள்.
“உங்க வீட்டு பெரிய தோட்டம் உண்டாமே? ஆதி மதினி சொன்னாங்க”
“ஆமா மதினி. அம்மாவும் அப்பாவும் செடி வளர்க்குறது, தோட்டம் போடுறதுல எக்ஸ்பர்ட்ஸ்”
அவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலேயே பின்னிருக்கையில் கதிர்காமனோடு விளையாடிக்கொண்டிருந்த ஆதிரா திடுமென ஒரு கேள்வியைக் கேட்டாள்.
“ஏன் மலர் உன்னோட பெரியப்பா பொண்ணு மேல புவனுக்கு ரொம்ப லவ் இருந்துச்சோ?”
மலர்விழி திடுக்கிட்டவள் “ஏன்கா திடீர்னு இந்தக் கேள்வி?” என்று திரும்பிப் பார்த்துக் கேட்க
“அதில்ல! அவளை அகமதாபாத்ல இருந்து இங்க அழைச்சிட்டு வர புவன் ரொம்ப முனைப்பு காட்டுனார்னு கேள்விப்பட்டேன்” என்றாள் ஆதிரா.
புவனேந்திரன் செய்த யாவும் இரக்கத்தின் காரணமாகத்தான் என்று ஆதிராவுக்கு விளக்கமளித்தாள் அவள்.
அதே நேரத்தில் மிருணாளினியின் மனதுக்குள்ளும் சில கேள்விகள். அவளது திருமண வாழ்க்கை எவ்வித ஒட்டுதலுமின்றி போகக் காரணமானவளைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய விசயங்கள் அனேகம் இருக்கிறதே!
காரை ஓட்டியபடியே “உன் ஃப்ரெண்ட் ஈஸ்வரி, அந்தப் பொண்ணு ரொம்ப அழகோ?” என மலர்விழியிடம் வினவினாள் அவள்.

‘அடுத்து நீயா’ என்ற ரீதியில் மிருணாளினியைப் பார்த்தாள் மலர்விழி.
“சும்மா தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன் மலர்” என அவள் சமாளிக்கப் பார்க்க
“மூக்கும் முழியுமா கோவில் சிலை மாதிரி அழகு மதினி. பேச்சும் படபடனு இருக்கும். எனக்கு எல்லா நேரத்துலயும் துணையா நின்னவ ஈஸ்வரி” என்றாள் மலர்விழி நெகிழ்ச்சியோடு.
மிருணாளினி “ஓஹ்!” என்றதும் ஆதிராவின் பார்வை ரியர்வியூ மிரரில் படிந்தது. அண்ணன் ஏதோ கிறுக்குத்தனம் செய்திருக்கிறான் என ஊகித்தவள் மதினியிடம் பேச முற்படுகையில் மலர்விழி இடை வெட்டினாள்.
“ஆனா ஈசுக்கும் கர்ணா அண்ணனுக்கும் பொருத்தமேயில்ல. அவளுக்குப் பணக்காரங்கனாலே அலர்ஜி. அதனாலதான் அவங்க சம்பந்தம் தட்டிப்போச்சு. இன்னொரு விசயம் சொல்லட்டுமா? கர்ணா அண்ணாவும் ஈசும் எங்க கல்யாணத்துக்கு அப்புறம் எங்கயும் சந்திக்கல”
‘ஒரே ஒரு முறையா?’ மிருணாளினிக்கு அதிர்ச்சியில் கண்கள் விரிந்தன.
மனதுக்குள் அத்துணை கடுப்பு கணவன் மீது.
“சந்திக்காமலே அந்தத் தாடிக்காரன் காவியக்காதல் படம் ஓட்டுனானா?” மிருணாளினி கொதிக்க மற்ற இரு பெண்களும் சத்தமாகச் சிரித்துவிட்டார்கள்.
“சிரிக்காதிங்க! ஹீ இஸ் ஈட்டிங் மை ப்ரெய்ன். நான் கூட அவன் ஓட்டுன படத்தை வச்சு அந்தப் பொண்ணு ஈஸ்வரி மேல செம கடுப்பா இருந்தேன். ப்ச்! பிரச்சனை அவன் கிட்ட தான். இன்னைக்கு வீட்டுக்குப் போய் அவன் மண்டைய பொளக்குறேன்”
“நம்ம வீட்டு பொறவாசல்ல தேங்கா உறிக்கிற கொண்டி இருக்கு மதினி. அதை வச்சு பொளந்து விடுங்க”
ஆதிரா பாயிண்ட் எடுத்துக் கொடுத்தாள் அவளுக்கு.
மெய்யாகவே அவனைக் கொல்லும் அளவுக்கு வெறிதான் மிருணாளினிக்கு.
‘இது ஒருதலைக்காதல். இதற்காகவா என்னை விலக்கி வைத்தான்? நான் அத்துணை மலிவாகத் தெரிகிறேனா அவனது பார்வைக்கு?’
புகைந்துகொண்டே மலர்விழியின் வீட்டுக்குக் காரை ஓட்டிவந்துவிட்டாள்.
அங்கே போனதும் மலர்விழியின் தந்தை சிகாமணியும், தாயார் குழலியும் மூன்று பெண்களையும் பூரிப்போடு வரவேற்றார்கள்.
ஆதிரா காபி தம்ளரோடு தோட்டத்துக்குப் போய்விட மிருணாளினி மனம் கொள்ளா கடுப்போடு வீட்டின் முன்வாயிலில் வேப்பமர நிழல் விழுந்துகொண்டிருந்த திண்ணையில் அமர்ந்தாள்.
மனமெங்கும் கர்ணன் மீதான கோபம் மலையளவுக்கு இருந்தது.
அவனைப் பற்றி யோசித்தது டெலிபதியில் தெரிந்ததோ என்னவோ அவனே மொபைலில் அழைத்தான்.
அழைப்பை ஏற்கக் கூட பிரியமில்லை அவளுக்கு. ஆனால் வீட்டுக்குப் போனதும் இதை வைத்துத் தர்க்கம் ஆரம்பிக்கலாம். எனவே அழைப்பை ஏற்றுத் தொலைவோமெனக் காதில் வைத்தாள் மொபைலை.
“ஹலோ”
“ஹான் மிருணா, எனக்கு ஆபிஸ்ல இருந்து கால் வந்துச்சு. நான் உடனே சென்னைக்குக் கிளம்பணும். நீ தனியா வந்துடுவல்ல”
‘வீட்டில் இவன் இருக்கும்போதே தனிமையாய் தான் உணருகிறேன். தனியே பயணிப்பது எனக்கு என்ன கடினமா?’
“ம்ம்! வந்துடுவேன்”
“ரூம்ல இருக்குற டேபிள்ல நான் கொஞ்சம் பணம் வச்சிட்டுப் போறேன். உனக்கு யூஸ் ஆகும்”
“அவசியமில்ல” என்றாள் மிருணாளினி சட்டென. எரிச்சலாக வந்தது அவளுக்கு. யார் அருகே அமர்ந்து போன் பேசுகிறானோ? இவ்வளவு நல்ல கணவனாக நடிக்கிறான் என பொருமித் தீர்த்தாள் மனதுக்குள்.
“தனியா ட்ராவல் பண்ணுறப்ப தேவைப்படும்டி.”
“தேவைப்பட்டா நான் எங்கப்பா கிட்ட வாங்கிக்கிறேன். இல்லனா மாமா கிட்ட கேட்டுக்குறேன். உங்க பக்கத்துல யாரும் இருக்காங்களா? இவ்ளோ பெர்ஃபெக்ட் புருசனா நடிக்குறிங்களே! அதான் கேட்டேன்”
மறுமுனையில் கர்ணன் திகைத்தான். சற்று முன்னர் தான் அவனுக்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. உடனடியாகக் கிளம்ப வேண்டிய சூழல்.
அதனால்தான் அவசரமாக மிருணாளினியின் மொபைலுக்கு அழைத்து விவரத்தைக் கூறி அவளால் தனியே சென்னைக்கு வந்துவிடமுடியுமா என வினவினான்.
அவளோ சிடுசிடுவென எரிந்து விழவும் யோசனையோடு “நான் பணத்தை வச்சிட்டுப் போறேன். வேணும்னா எடுத்து யூஸ் பண்ணு. வேண்டாம்னா ரெண்டா கிழிச்சு பறக்க விடு. ஐ டோண்ட் கேர். புருசனா என் கடமைய நான் செய்யுறேன். அவ்ளோ தான்” என்றான் அவனும் இறுகியக் குரலில்.
“இத்தனை நாள் என்ன கடமைய ஆத்திட்டிங்கனு இப்ப இவ்ளோ கோவம் வருது உங்களுக்கு?”
“என்னடி ஆச்சு உனக்கு? ஊருக்கு வந்ததும் எதுவும் மோகினி அடிச்சிடுச்சா? வந்த நாள்ல இருந்து நீ என்னை கடிச்சிட்டே இருக்க மிருணாளினி. என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு”
“உங்களை யாரு பொறுமையோட இருக்கச் சொன்னாங்க? பொண்டாட்டினு உங்க வாழ்க்கைல ஒப்புக்குச் சப்பாணியா ஒரு கேரக்டரை நடிக்குறது எனக்கும் வெறுப்பா இருக்கு. நான்னா உங்களுக்கு அவ்ளோ லேசா தெரியுறேன்ல? இப்பவே போய் உங்கம்மா அப்பா கிட்ட சொல்லி என்னை அத்து விட்டுருங்க. நானாச்சும் நிம்மதியா இருப்பேன்.”
“ஏய் வாயை மூடுடி”

கர்ணனின் கோபக்குரலில் திடுக்கிட்டவள் மொபைலைத் தவறவிட்டாள்.
இதுநாள் வரை அதிர்ந்து கூட மகளிடம் பேசியதில்லை தங்கவேலு. உலகம்மையும் இதுநாள் வரை மகளை அதட்டியதில்லை.
முதல் முறையாக இப்படி ஒரு தொனியில் ஒருவர் தன்னை அரட்டியதும் விக்கித்துப் போனவள் படபடத்த இதயத்தை அடக்கிக்கொண்டு தரையில் கிடந்த மொபைலை எடுத்து காதில் வைத்தாள்.
“கேக்குறியா?” என மீண்டும் கர்ஜனை.
“இங்க.. பா…”
“பேசக்கூடாது நீ. நான் சொல்லுறதை மட்டும் கேளு, அப்பிடியே மனசுல பதிய வச்சுக்க. இன்னொரு தடவை அத்து விடு அது இதுனு கிறுக்குத்தனமா உளறுனா நான் மனுசனா இருக்கமாட்டேன்! நீ இத்தனை நாள் என்னெல்லாமோ சொன்ன. நான் கத்துனேனாடி? ஏன்னா உன் ஆதங்கத்துல நியாயம் இருந்துச்சு. அதுக்குனு நீ என்ன வேணாலும் பேசலாம்னு அர்த்தமில்ல. உன் கூட எமோஷனலி கனெக்ட் ஆக முடியலனுதான் சொன்னேன். லைஃப் லாங் இப்பிடித்தான் நம்ம வாழ்க்கை போகும்னு சொன்னேனாடி? இந்த மண்ணாங்கட்டிக்குத்தான் கல்யாணமே வேண்டாம்னு சொன்னேன். என்ன விதினு தெரியல, கல்யாணம் முடிஞ்சாச்சு. இனிமே இந்த ரிலேசன்ஷிப்பை உடைக்குற எண்ணம் எனக்கு இல்ல. உனக்கும் வரக்கூடாது. புரிஞ்சுதா?”
மறுமுனை அமைதியாக இருக்கவும் “உன்னைத்தான் கேக்குறேன்!” என்று அவன் உறும
“க்…ம்ம்ம் கேட்டுச்சு” என்றவளின் குரலில் உறுதி தொலைந்து கலக்கம் மட்டுமே!
“ஒரு வாரமோ பத்து நாளோ ஊர்ல நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு மூளையில இருக்குற கிறுக்குத்தனமான எண்ணத்தை எல்லாம் ஊரோட கழிச்சிட்டுச் சென்னைக்கு வந்து சேரு.”
அழைப்பு துண்டிக்கப்பட்டது. மிருணாளினியின் அதிர்ச்சி தான் வடிந்தபாடில்லை.
மீண்டும் திண்ணையில் அமர்ந்தவளுக்குக் கண்கள் கலங்கிவிட்டது. போனில் தான் பேசினான் அவன். ஆனால் நேரில் நின்று கை நீட்டி மிரட்டி எச்சரித்தது போல ஒரு மாயை!
மொபைலைப் பிடித்திருந்த கையை விரித்துப் பார்த்தாள் மிருணாளினி. வேர்வையின் பிசுபிசுப்பில் நனைந்திருந்த உள்ளங்கையும், இன்னும் கொஞ்சம் நடுக்கத்தின் பிடியிலிருந்த விரல்களும் அவள் கொண்ட அதிர்ச்சியின் வெளிப்பாடாய்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

