“அது எப்பிடி இந்த ஆம்பளைங்களுக்குச் சொல்லி வச்ச மாதிரி கார் பைக் மேல அவ்ளோ அன்பு வருது? என்னமோ அதெல்லாம் ஜீவனுள்ள ஆட்கள்ங்கிற ரேஞ்சுக்குப் பேசுறாங்க. இந்தக் கர்ணாவோட கார் இருக்கே, அதை வச்சுக்கிட்டு இந்தாளு போடுற சீன் ரொம்ப ஓவரா இருக்கு. அன்னைக்குத் தெரியாம அந்தக் கார் கதவைக் கொஞ்சம் வேகமா அறைஞ்சு சாத்திட்டேன். அதுக்கு என்ன ஆட்டம்? ஷப்பா! சில நேரத்துல அது வெறும் கார் தானா இல்ல எனக்கு சக்களத்தியானு டவுட்டே வருது. பொண்டாட்டிய விலக்கி வைப்பானாம். காரைக் கொஞ்சுவானாம். இந்த வினோதப்பிறவி கூட இன்னும் நாப்பது ஐம்பது வருசம் நான் எப்பிடி காலந்தள்ளப் போறேன்னு நினைச்சா பிரமிப்பா இருக்கு போங்க”
-மிருணாளினி
“இன்னைக்கு நீ சூப்பரா கார் ஓட்டுன மிருணா. எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் லைசென்ஸ் வாங்கிடு. ஆபீஸ் போறப்ப கர்ணா ஜி மட்டுமே கார் ஓட்டுறதை விட அதை நீ ஷேர் பண்ணிக்கிட்டா அவருக்கும் ஹேப்பியா இருக்கும்”
காரிலிருந்த் இறங்கிய மிருணாளினியிடம் கூறினான் அர்ஜூன்.
கடந்த சில வாரங்களாக அவனிடம் கார் ஓட்டப் பழகுகிறாள் மிருணாளினி. ஓட்டுனர் பயிற்சியகத்தில் சேர்ந்தால் பணம் கட்டவேண்டும் என்பதை விட முன்பின் தெரியாத பயிற்சியாளரிடம் கற்றுக்கொள்ள அவளுக்கு அசௌகரியம்.
முதலில் அவள் போய் நின்றது என்னவோ கர்ணனிடம்தான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவன் ஏறயிறங்க அவளைப் பார்த்தான்.
“ஏன் இந்த விபரீத ஆசை? லேடீஸ் கார், பைக் ஓட்டுற லெட்சணம் எல்லாம் யூடியூப், இண்ஸ்டால ட்ராலா வருமே. அதைப் பாத்ததில்ல நீ? அந்த லிஸ்டுல நீயும் சேரப்போறியா?” என்று கிண்டல் செய்ய
“அப்பிடி பாத்தா பஸ் லாரி எல்லாம் ஆம்பளைங்க தான் ஓட்டுறிங்க. அதெல்லாம் ஆக்சிடெண்ட் ஆகுறதில்லையா? லேடீஸ் செஞ்சா மட்டும் அது உங்களுக்கு ட்ராலா?” எனப் பொங்கிவிட்டாள் அவள்.
“அடேங்கப்பா! கோவமெல்லாம் வருது! இது சரிபட்டு வராது. இங்க பாரு, உனக்குக் கார் ஓட்ட ட்ரெயின் பண்ணுறதுக்கு எனக்கு நேரமில்ல. வேணும்னா டிரைவிங் ஸ்கூல்ல சேர்த்துவிடுறேன். கத்துக்க” என்றான் கர்ணன் விட்டேற்றியாக.
“எனக்கு அடுத்த ஆம்பளைங்க கிட்ட கத்துக்க ஒரு மாதிரி இருக்கு”
“மத்த வாயெல்லாம் பேசுற. நாளைக்கு ஆபிஸ் வந்தா மத்த ஆம்பளைங்கள்ல ஒருத்தன் தான் உனக்கு டீம் லீடராவோ மெண்டாராவோ வருவான். அப்ப என்ன பண்ணுவ?”
“அது இப்ப பேச்சில்ல. எனக்கு நீங்களே கத்துத் தாங்க”
“முடியாதுடி. மனுசன் எப்படா ரெஸ்ட் கிடைக்கும்னு வீட்டுக்கு வர்றேன். வந்ததும் உனக்குக் கார் ஓட்ட வேற கத்துத் தரணுமா? முடியாது முடியாது! போ போ!”
மிருணாளினி நகம் கடித்து யோசித்தாள். திடுமென அவள் முகம் பிரகாசித்தது.
“ஓ.கே! அப்ப உங்க கார் மட்டும் தாங்க. அர்ஜூன் கிட்ட கத்துக்குறேன்|”
அவ்வளவுதான்! கர்ணன் சுனாமியாய் பொங்கியெழுந்தான்.
“என் கார் மேல கையை வச்ச, அவ்ளோதான் சொல்லிட்டேன்! இப்ப தான் காரோட ஈ.எம்.ஐ முடிஞ்சிருக்கு. நீ ஓட்டுறதுக்குப் பழகுறதா சொல்லிட்டு அதை எங்கயும் இடிச்சிட்டு வருவ. என் காரை என்னைத் தவிர வேற யாரும் தொடக்கூடாது”
“ஏன்? அது உங்க பொண்டாட்டியா?”

சுள்ளென்று கேட்டுவிட்டு அவனிடம் முகம் திருப்பிக்கொண்டாள் மிருணாளினி.
மறுநாள் மாலையில் அர்ஜூனிடம் உதவி கேட்டபோது அவன் சந்தோசமாகச் சொல்லிக் கொடுக்க முன்வந்தான். தனது காரை வைத்தே பயிற்சியும் கொடுத்தான்.
தட்டுத்தடுமாறி, அவனிடம் திட்டு வாங்கி, இறுதியாகக் கார் ஓட்டுவதில் ஓரளவுக்குத் தேர்ந்தாள் மிருணாளினி.
“உன்னால ஆக்சிடெண்ட் பண்ணாம ஓட்ட முடியும். சீக்கிரமா லைசென்ஸ் வாங்கிடு” என்று நம்பிக்கை கொடுத்துவிட்டு அர்ஜூன் லட்சுமியின் ஃப்ளாட்டுக்குள் சென்றுவிட்டான்.
மிருணாளினி குதூகலத்தோடு தங்களது ஃப்ளாட்டுக்கு வந்தவள் பெயர்ப்பலகைக்கு அருகே இருக்கும் குட்டி கண்ணாடி ஜாடி விளக்குகளைக் கர்ணன் இன்னும் போடவில்லை என்றதும் அவளே போட்டுவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.
வழக்கம் போல சோஃபாவில் அமர்ந்து நெட்ஃப்ளிக்சில் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடரைப் பார்த்துக்கொண்டிருந்தவனின் முகத்தில் ஏனோ சின்னதாய்க் கடுப்பு!
மிருணாளினி வந்ததும் அது இன்னும் அதீதமானது.
‘எப்பவும் மூஞ்சிய உர்ருனு வச்சுட்டுச் சுத்துறான் உர்ராங்குட்டான். எந்த நேரத்துல பிறந்தானோ?’
மனதுக்குள் கிண்டல் செய்தபடி நகர எத்தனித்தவளை அவனது குரலே தடுத்து நிறுத்தியது.
“நான் உன் கிட்ட அடிக்கடி சொல்லிட்டேன், அர்ஜூன் கூட பழகுறதைக் குறைச்சுக்கனு. நீ கேக்குற மாதிரி இல்ல மிருணாளினி”
டிவியைப் பார்த்தபடி கட்டளையிடும் தொனியில் சொல்ல அவளது நடையோ நின்றது.
திரும்பிப் பார்த்தவள் “இதை நீங்க ஏன் சொல்லுறிங்க? நீங்க கூட தான் உங்க ஃப்ரெண்ட் துர்ஜோய் கூட நடுராத்திரி வரைக்கும் போன்ல கிசுகிசு பேசுறிங்க. நான் ஏதாச்சும் கமெண்ட் பண்ணுனேனா?” என்று கேட்க
“ரெண்டு பசங்க பேசுறதுல என்னடி பிரச்சனை?” என்றான் கர்ணன் சீற்றமாய்.
“ரெண்டு பசங்க ஃப்ரெண்ட்சா இருந்தா பிரச்சனை இல்ல. அதுல ஒருத்தன் அவன் பொண்டாட்டிய தூரமா நிறுத்தி வச்சான்னா கண்டிப்பா அது பிரச்சனைதான். ஒருவேளை அந்த ஒருத்தனுக்குப் பொண்ணுங்களே பிடிக்காதோனு தோணுதுல்ல”
மிருணாளினி சொன்னதன் உண்மை அர்த்தம் புரிந்ததும் கர்ணனால் பதில் சொல்ல முடியவில்லை. திணறிப்போனான் அவன்.
“என்ன? பதிலே வரல. எத்தனை நாள் பொண்ணுங்களுக்கும் பசங்களுக்கும் இடையில இருக்குற ஃப்ரெண்ட்ஷிப்பை வேற ஆங்கிள்ல பாத்துக் கொச்சைப்படுத்துவிங்க? இனிமே பசங்க ஃப்ரெண்ட்ஷிப்பையும் லவ்…”
“ஏய் நாராசமா பேசாதடி” காதுகளைப் பொத்திக்கொண்டான் கர்ணன்.
மிருணாளினி உதடுகளை ஒரு பக்கமாய் இழுத்துச் சிரித்தவள் “இனிமே எனக்கும் அர்ஜூனுக்கும் இடையில இருக்குற நட்பைத் தப்பா நினைச்சுக் கொஸ்டீன் பண்ணாதிங்க. பண்ண மாட்டிங்க தானே? ம்ம்” என்று புருவத்தை ஏற்றியிறக்கிக் கேட்க
“நீ கொஞ்சம் ஓவராதான் போற. ஒரு நாள் உனக்கு இருக்கு” என்றான் கடுப்போடு.
“அந்த ஒரு நாள் வரட்டும். அப்ப பாத்துக்கலாம்”
சவால் விடுவது போல சொல்லிவிட்டுப் போனாள் மிருணாளினி.
கர்ணனால் அவளது பதிலடிகளைச் சீரணிக்கவே முடிவதில்லை இப்போதெல்லாம். அம்பாசமுத்திரத்தில் வளர்ந்த பெண்ணுக்கு என்ன உலகம் தெரியப்போகிறதென அவளைக் குறைத்து எடை போட்டுவிட்டது இப்போதுதான் அவனது புத்திக்கு உறைத்தது.
ஒரு பக்கம் அந்த எரிச்சல். இன்னொரு பக்கமோ தன்னை விட மிருணாளினிக்கு அர்ஜூன் பழகுவதற்கு இனிமையானவனாகிவிட்டானே என்ற கடுப்பு.
முதல் காதல், மண்ணாங்கட்டியென தான் பேசிய யாவும் தன்னை நெருங்க முடியாத தொலைவுக்கு அவளை இட்டுச் சென்றுவிட்டதெனப் புரிந்ததும் கொஞ்சம் அசௌகரியமாகவும் இருந்தது.
அந்தக் கடன்காரனாவது திருமணமான பெண்ணோடு ஒரு எல்லை வைத்துப் பழகினால் என்னவாம்?
இவ்வாறு கர்ணனின் மனம் கொதிக்கும்போதே மூளை அவனுக்குக் குட்டு வைத்தது.
‘நீ உன் மனைவியைத் தூர நிறுத்தினாய்! அவள் தனக்கான நண்பனைத் தேடிக்கொண்டாள். அது நட்பு என்றபோது உனக்கென்ன பிரச்சனை? அவர்களிடையே கல்மிசம் இல்லை. அது உன் மனதில்தான் இருக்கிறது’
ஒருவேளை நான் தேவையில்லாமல் அனைத்தையும் போட்டுக் குழப்பிக்கொள்கிறேனோ என்று சுய அலசலில் ஆழ்ந்துவிட்டான் கர்ணன்.
இதே மனநிலையோடு ஆதிராவின் நிச்சயதார்த்தத்துக்காக இருவரும் அம்பாசமுத்திரத்துக்குக் கிளம்பினார்கள்.
சந்திரவிலாசத்தில் இருவருக்கும் வரவேற்பு என்னவோ பிரமாதம் தான்.
“கர்ணா! கொஞ்சம் சதை போட்டுட்டியே! மிருணா அவ்ளோ ருசியா சமைக்குறாளாக்கும்?” என்று மருதநாயகி கிண்டல் செய்ய

“அவ சமையல் கேவலமா இருக்கு கிழவி. அந்த ஸ்ட்ரெஸ்ல தான் எனக்கு வெயிட் போட்டிருச்சு” என்றான் அவனும் கிண்டலாக.
இதை மிருணாளினி கேட்டு வைத்து அவனை மனதுக்குள் கரித்துக் கொட்டியது எல்லாம் தனி.
மறுநாள் நிச்சயதார்த்தம். ஏற்கெனவே முறிந்து போன நிச்சயதார்த்தம் பற்றி சொந்தக்காரர்களுக்குத் தகவல் தெரிவித்திருந்த வினாயகம் இம்முறை திருமணம் போல வெகு விமரிச்சையாக நிச்சயதார்த்தத்தை நடத்த திட்டமிட்டிருந்தார்.
இதுதான் வைத்தியநாதனின் குடும்பத்துக்குத் தகுந்த பதிலடியாக இருக்கும் என்பது அவரது எண்ணம்.
கிடைத்த நேரத்தில் மிருணாளினி ஆதிராவிடம் திருமணம் பற்றி வினவினாள்.
அவளோ நாணத்தோடு புவனேந்திரனைப் பற்றி பேச ஆரம்பித்தாள். அப்போதே மிருணாளினிக்குப் புரிந்துபோனது ஆதிராவுக்குப் புவனேந்திரன் மீது பிரியம் இருக்கிறதென.
நிச்சயதார்த்தத்துக்காக மருமகளுக்கு அழகானப் பட்டுப்புடவை ஒன்று எடுத்திருந்தார் எழிலரசி.
“உலகு மதினி கிட்ட உனக்கு அளவு ப்ளவுஸ் வாங்கி தைக்கச் சொல்லிட்டா ஆதி. போட்டுப் பாரு. டைட்டா இருந்தா இன்னைக்கே சரி பண்ணிடலாம்” என்றார் அவர்.
“சரிங்கத்தை”
திருமணமாகிவிட்டால் பெண்கள் மணவாழ்க்கையின் மகிழ்ச்சி பூரிப்பில் எடை கூடுவது வாடிக்கை.
“இவங்க மகன் கிட்ட ஆர்கியூ பண்ணி நான் வெயிட்லாஸ் ஆகிருக்கேன்.”
ப்ளவுஸ் கொஞ்சம் லூசாக இருக்கவும் இவ்வாறு சொல்லிக்கொண்டாள் மிருணாளினி.
அன்று மாலை ஸ்வேதாவும் அவளது குடும்பத்தோடு வந்துவிட மாமியாரிடம் சொல்லிக்கொண்டு தனது பெற்றோரைப் பார்க்கப் போய்விட்டாள் மிருணாளினி.
உலகம்மையும் தங்கவேலுவும் மருமகனையும் எதிர்பார்த்தார்கள் போல. மகள் தனியே வந்ததும் முகம் வாடிப்போனது இருவருக்கும்.
“அவருக்குப் புராஜெக்ட் வேலை இருக்குப்பா. லேப்டாப்பை எடுத்து வச்சிட்டுக் காலைல உக்கார்ந்தவர் இன்னும் வேலைய முடிக்கல” என்று சமாளித்தாள் மிருணாளினி.
இப்போதும் கர்ணன் மீது சின்னதாய் மனச்சுணக்கம். மாப்பிள்ளை முறுக்கில் திரிபவன் என்று கறுவிக்கொண்டாள் மனதிற்குள்.
எத்தனை வயதானாலும் பெண்களுக்குப் பிறந்தகத்தில் கிடைக்கும் உரிமையுணர்வையும், ஆசுவாசத்தையும், நிம்மதியையும் வேறு எந்த இடமும் கொடுக்க முடியாது.
தனது வீட்டில் உணர்ந்த ஆசுவாசத்தில் கர்ணனை மறந்து போனாள் மிருணாளினி.
இரவுணவுக்காக அன்னையோடு சேர்ந்து சமையலறையில் வேலை செய்தபடியே லட்சுமி, நாராயணன், அர்ஜூனைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாள்.
இடையே வீடியோ கால் செய்து அவர்களிடம் பேசவும் வைத்தாள்.
“ரொம்ப சந்தோசம்மா. எங்க புள்ளைய அவ்ளோ தூரம் அனுப்பி வச்சிருக்கோமேனு கலங்கிப் போயிருந்தேன். உங்களைப் பத்தி மிருணா அடிக்கடி பேசுவா. என் புள்ளைய அடிக்கடி போய் பாத்துக்கோங்கம்மா”
“இதை நீங்க சொல்லணுமா? மிருணா எங்க வீட்டுப் பொண்ணு மாதிரி” என லட்சுமி சொல்ல உலகம்மைக்கு மனம் நிறைந்து போனது.
இரவுணவுக்குச் சப்பாத்தியும் தக்காளி குருமாவும் செய்தார்கள் அன்னையும் மகளும்.
சரியாகச் சாப்பிட அமருகையில் வாயிலில் ஏதோ சத்தம். திடுமெனக் கர்ணனின் குரலும் கேட்கவும் மிருணாளினிக்குத் திகைப்பு.
எழுந்து போய் பார்த்தவள் அங்கே தங்கவேலுவோடு சாதாரணமாகச் சிரித்துப் பேசியபடி வந்தவனைக் கண்டதும் தலை சுற்றி மயங்கி விழப்போனாள்.
‘இந்த மகாராஜா சிரித்தெல்லாம் பேசுவானா? ஆச்சரியம்தான்’
மனதுக்குள் புகைந்தபடி “நீங்க வர்றதா சொல்லவேல்ல” என்றாள் குத்தலாய். ஆனால் தங்கவேலுவுக்கு மகளின் இந்தக் குத்தல் பேச்சு புரியவில்லை.
புரிந்தவனோ சிரித்தான் எரிச்சலை மறைத்தபடி.
“நைட் டின்னர் இங்கதான்னு அம்மா கிட்ட சொன்னியாமே! அப்புறம் மாமா உன்னை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வரணும். எதுக்குச் சிரமம்? அதான் நானே வந்துட்டேன்” என்றான் அவன்.
‘நம் வீடா?’ அடுத்த அதிர்ச்சி மிருணாளினிக்கு.
“நடிக்குறான் எருமை” என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி வீட்டுக்குள் போய்விட்டாள் அவள்.
பின்னர் மாப்பிள்ளைக்கு விருந்துபசாரம் என்ற பெயரில் அங்கே நடந்த அமர்க்களத்தை யாரோ போல வேடிக்கை பார்த்தாள் அவள்.
“நீயும் உக்காரு மிருணா. நான் பரிமாறுறேன்” என்று சொல்லிவிட்டார் உலகம்மை.
மூன்று சப்பாத்திகளோடு எழுந்திருக்கப் போனவளிடம் “மூனு போதுமா உனக்கு?” என வியப்பாய் வினவினான் அவன்.
“அதுக்கு மேல சாப்பிட்டா எங்கம்மாக்கும் அப்பாக்கும் சப்பாத்தி பத்தாது” என்றாள் அவள்.
“என்ன?”
“ஒரு வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி சொல்லிட்டு வரணும்ங்க. மருமகன்னா எந்த நேரத்துல வேணாலும் மாமனார் வீட்டுல வந்து குதிக்கலாம்னு அர்த்தமில்ல.”
கடுப்போடு சொல்லிவிட்டுக் கை கழுவப் போய்விட்டாள் அவள்.
அவளது கோபம் அவனுக்கு அவசியமற்றக் கோபமாகத் தெரிந்தது.
‘கடந்தமுறை தந்தையிடம் சரியாகப் பேசவில்லை என்று கோபப்பட்டாள். இன்று உரிமையாக வீட்டுக்கு வந்ததற்கு கோபம் கொள்கிறாள். இவளது எதிர்பார்ப்புதான் என்ன?’
அதே நேரம் பின்வாயில் தொட்டியில் கை கழுவிக்கொண்டிருந்த மிருணாளினியின் மனமோ வேறு விதமாக யோசித்தது.
உலகம்மைக்கு கை கால் மூட்டுகள் பலமிழந்து போனதால் அடிக்கடி மூட்டு வலி வருவதுண்டு.
“கை உலையுது கால் உலையுதுனு எத்தனை நாள் தைலம் தேய்ச்சிட்டே வேலை பாக்குறது?” என சில நேரங்களில் அவர் புலம்பியதைக் கேட்டிருக்கிறாளே!
இப்போது மூவருக்கு மட்டும் அவர் சமைத்திருக்க, முன்னறிவிப்பின்றி கர்ணன் வந்துவிட்டதால் அவர்களது சாப்பாட்டையும் சேர்த்து அவனுக்குப் பரிமாறி, மீண்டும் தந்தைக்கும் அவருக்குமாகச் சமைக்க வேண்டும். ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் மீண்டும் அன்னை அடுப்பு முன்னே நிற்பதா என்ற எண்ணம் அவளை அவ்வாறு பேசவைத்துவிட்டது.
கர்ணன் தனக்காக வீட்டுக்கு வந்தது அவள் மனதில் பதியவேயில்லை. முதல் கோணல் முற்றும் கோணலாகிப் போனது கர்ணனின் விவகாரத்தில்.
அவள் யோசனையோடு நின்றபோதே கர்ணனும் கை கழுவ வந்துவிட்டான்.
கையைக் கழுவியவன் அவளது சுடிதார் துப்பட்டாவைக் கை துடைக்க இழுக்கவும் மிருணாளினி பற்களைக் கடித்தாள்.
“டீசென்சி கிடையாதா உங்களுக்கு?”

“என்ன? கோவம் வருதோ? உனக்காக வந்தேன்ல. என்னைச் சொல்லணும். இது நீ என்னைக் கடிச்சுப் பேசுனதுக்குப் பனிஷ்மெண்ட்” அமர்த்தலாகச் சொன்னவன் கையையும் வாயையும் துப்பட்டாவில் துடைத்துவிட்டுச் சென்றான்.
‘எனக்காக வந்தானா?’
கர்ணனின் வார்த்தைகளால் குழம்பினாள் மிருணாளினி.
‘என்னை விலகி நில் என்றவன் உண்மையா? அல்லது உனக்காக வந்தேன் என்றானே இவன் உண்மையா?’
தடுமாறிப் போனாள் அவள். கர்ணனிடம் மாற்றம் நிகழ்ந்திருப்பதை யார் அவளிடம் சொல்லி புரியவைப்பது?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

