“யாருனே தெரியாதவங்க கிட்ட உருவாகுற நட்பு ரொம்ப அற்புதமானது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நமக்காக யோசிக்குற நட்பும், மனுசங்களும் எல்லாருக்கும் வாய்க்க மாட்டாங்க. சென்னைல எனக்கான உலகம்னு ஒன்னு சரியா இன்னும் உருவாகாத நிலமைல எனக்கான மனுசங்களை நான் சம்பாதிச்சிட்டதா நினைக்குறேன். இந்த உலகத்துல காசு பணம் அதிகாரத்தை எல்லாம் ஈசியா சம்பாதிச்சிட முடியும். ஆனா நட்பும் நமக்கான மனுசங்களும் நமக்கு வாய்க்கணும்னா அதெல்லாம் அதிர்ஷ்டம்னு தான் நான் சொல்லுவேன்”
-மிருணாளினி
ஆதிராவின் திருமணம் ரத்தான தகவலை அறிந்ததும் மிருணாளினிக்கு மனம் தாங்கவில்லை. பெரியவர்கள் எத்துணை ஆசையாக நிச்சயதார்த்தத்தை நடத்தினார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்த்தவளாயிற்றே அவள்!
இப்போது ஒன்றுமே இல்லை என்றால் அவர்களுக்குச் சங்கடம்! கூடவே சொந்தக்காரர்களின் கேள்விகளுக்கு வேறு பதிலளிக்க வேண்டும்.
அவளும் கர்ணனும் வருத்தப்பட்ட இரவன்றே இன்னொரு சுபச்செய்தியும் அவர்களின் செவிகளை அடைந்தது. அதைச் சொன்னவர் தங்கவேலு.
“நம்ம ஐயா ஆதிம்மாக்கும் புவன் தம்பிக்கும் கல்யாணம் பண்ணுனா நல்லா இருக்கும்னு பிரியப்படுறார்ல”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இதைக் கேட்டதும் மிருணாளினிக்கு ‘இன்னொரு திடீர் திருமணமா?’ என்ற அயர்ச்சிதான் முதலில் தோன்றியது. ஆனால் கொஞ்சம் நிதானித்து புவனேந்திரனுடன் ஆதிரா பேசிய விதத்தை யோசித்துப் பார்த்தாள்.
இருவரிடையே நல்ல நட்பும் பழக்கமும் இருக்கையில் அவர்கள் வாழ்க்கையில் இணைந்தால் என்ன தவறு இருக்கப்போகிறது?
“நல்ல விசயம்தான்பா. புவன் அண்ணா மாதிரி ஜெண்டில்மேன் ஆதி மதினிக்கு ஹஸ்பெண்டா வந்தா அத்தைக்கும் மாமாக்கும் நிம்மதி. ஆதி மதினி லைஃபும் நல்லபடியா இருக்கும்”
மிருணாளினி தனது தந்தை சொன்ன செய்தியைக் கர்ணனிடம் பகிர்ந்துகொண்டாள்.
“புவனா? ம்ம்ம்..” என்று அவன் யோசிக்கவும்
“என்ன ம்ம்ம்? உங்களை விட அவர் கோடி மடங்கு பெஸ்ட்” என்றாள் அவள் எரிச்சலோடு.

கர்ணன் கடுப்போடு ஏதோ சொல்ல வந்தவன் சற்று முன்னர் லட்சுமி சொன்ன விசயம் நினைவுக்கு வந்ததும் அமைதியானான்.
கூடவே மிருணாளினி சொன்னதும் உண்மை வேறு! தொண்டையைச் செருமிக்கொண்டான்.
“நீ எல்லாரும் ஐ.எஸ்.ஓ சர்டிபிகேட் குடுக்குற வேலையா பாக்குற?” என்று கிண்டலாய் சொல்லிவிட்டு நகர்ந்தவனை நம்ப முடியாமல் பார்த்தாள் மிருணாளினி.
அந்த பாவனையே அடுத்த ஒரு வாரத்துக்குத் தொடர்ந்தது அவளிடம். காரணம் கர்ணனிடம் தெரிந்த சின்ன மாற்றம்.
முன்பு போல அவளுக்குக் கூடுதலாக எந்த வேலையையும் இழுத்து வைக்கவில்லை. கொஞ்சம் போல பொறுப்பு வந்திருக்கலாமென்பது அவளது ஊகம்.
சென்னைக்கு வந்த நாளிலிருந்து மிருணாளினி எங்கேயும் வெளியே சென்றதில்லை. வீடே உலகமெனச் சுற்றி வந்தவளை எங்காவது அழைத்துப் போவோமென அவனுக்கும் தோன்றவில்லை.
ஆனால் திடீர் ஞானோதயத்தால் ஒரு ஞாயிறன்று காலையில் “இன்னைக்கு வெளிய போய் சாப்பிடலாமா?” என்று கேட்டான் அவன்.
மிருணாளினி அசட்டையாகத் தோள்களைக் குலுக்கினாள்.
“இந்த ஊர் சாப்பாடு எனக்குச் செட் ஆகுமோ என்னமோ! நான் லட்சுமி ஆன்ட்டி கூட எக்மோர் மியூசியத்துக்குப் போறேன்”
லட்சுமியோடு இந்த அளவுக்கு நெருக்கமா என கர்ணன் திகைத்தான்.
“அங்க எதுக்கு?”
“எதுக்குனு கேட்டா என்ன அர்த்தம்? அவுட்டிங் போனா நல்லா இருக்கும்னு தோணுச்சு. ஆன்ட்டி கிட்ட சொன்னேன். அவங்களும் என்னை மியூசியம் போகலாம்னு சொல்லிட்டாங்க”
“அதே அவுட்டிங் தானே நானும் கூப்பிட்டேன்?” திகைத்தான் கர்ணன்.
மிருணாளினி அவனை நமட்டுச்சிரிப்போடு பார்த்தவள் “ஹோட்டல்ல போய் சாப்பிடுறதுக்குப் பேர் அவுட்டிங்கா? வழக்கமான வேலைல இருந்து நமக்கு ஆசுவாசம் கிடைக்குறதுக்காக வித்தியாசமா ஏதோ ஒன்னை ட்ரை பண்ணி பாக்கணும்னு தோனுச்சு எனக்கு. அதுக்கு ஆன்ட்டி கூட போறதுதான் சரியா இருக்கு,” என்று சொல்லிவிட்டாள்.
அதாவது எனது ரசனையைப் பற்றி ஒன்றும் தெரியாமல் நீ போடும் திட்டங்களுக்கு எல்லாம் நான் உடன்படவேண்டிய அவசியமில்லை என்று மறைமுகமாகச் சொல்லிவிட்டாள்.
சொன்னது போலவே மாலையில் அர்ஜூன் வந்து அழைக்கவும் கிளம்பிவிட்டாள் அவள்.
“ஏழு மணிக்கு வந்துடுவேன்” என்ற செய்தியோடு.
அர்ஜூனுடன் அவள் இயல்பாய்ப் பேசி சன்னமாய்ச் சிரித்தபடி சென்ற காட்சி முதல் முறையாக கர்ணனின் மனதில் உரிமையுணர்ச்சியைத் தூண்ட போதுமானதாய்!
அவளிடம் நேசம் இல்லை. உணர்வுரீதியான பிணைப்பும் இல்லை. இந்த உரிமையுணர்வு மட்டும் என்ன மண்ணாங்கட்டிக்கு வருகிறதெனத் தன்னைத் தானே கழுவி ஊற்றிக்கொண்டு தங்களது அறைக்குள் போய்விட்டான்.
அங்கே போய் அமர்ந்தவனுக்கு சற்று முன்னர் ட்ரஸ்சிங் டேபிள் முன்னே நின்று கூந்தலை சரி செய்துகொண்டிருந்தவளின் நினைவு.
ஏன் அவளும் அர்ஜூனும் ஒன்றாய் செல்வதைக் கண்டதும் இப்படி புகைகிறோமென கர்ணன் ஒரு நொடியில் குழம்பிப் போனான். சொல்லப்போனால் அவன் சொன்னதை இம்மி பிசகாமல் மிருணாளினி கடைபிடிக்கிறாள். அவனைத் தேவையின்றி நெருங்குவதில்லை. மனைவி என்ற உரிமையை எடுத்துக்கொண்டு எதையும் கேட்பது கூட இல்லை. ஆனாலும் ஏதோ ஒரு உறுத்தல்!
முதல் முறையாகத் தங்களது வாழ்க்கை இயல்பான பாதையில் செல்லவில்லை என்பது கர்ணனுக்கு உறைத்தது அந்நொடியில்தான்.

மனம் அமைதியிழந்து தவித்தது. அவர்களது கம்யூனிட்டியில் திறந்த வெளியில் யோகா செய்ய ஒரு இடமுண்டு. அங்கே சென்று யோகாவில் மனதை ஒருங்கிணைக்க முயன்றான். சில நிமிடங்கள் இஷ்டத்துக்குக் கூத்தாடினாலும் ஒரு கட்டத்தில் மனமும் அவன் இழுத்த இழுப்புக்குக் கட்டுப்பட்டு ஒரு புள்ளியில் அடங்கியது.
கூடவே அவனுக்கு அறிவுரையும் சொன்னது.
‘உனக்கு என்ன வேணும்னு நீ தான் தீர்மானிக்கணும். நீ முதல்ல தெளிவா யோசிக்கப் பழகு. உனக்குள்ள இருக்குற ஃபேண்டசி உலகத்துல இருந்து வெளிய வா. நிதர்சனத்தோட இணைஞ்சு வாழ பழகு’
அனைத்துக்கும் உம் கொட்டியவன் மிருணாளினி வீடு திரும்பும் நேரத்துக்காகக் காத்திருந்தான். அவளும் வந்தாள். கையில் இரண்டு புத்தகங்களோடு.
“என்ன இது?”
“அர்ஜூனோட கிப்ட்” என்று கள்ளமற்றுச் சொன்னவளின் பேச்சில் அவனது மனம் முரண்டியது.
“கிப்ட்? எதுக்கு?”
சட்டெனத் திரும்பியவள் “எனக்குப் புக் படிக்க பிடிக்கும்னு சொன்னேன். வாங்கி குடுத்தான்” என்றாள்.
“குடுத்தானா? அவன் இவன்னு சொல்லுற அளவுக்கு ஆகிடுச்சா?” பொருமலோடு வினவினான் கர்ணன்.
“அர்ஜூன் தான் அப்பிடி கூப்பிட சொன்னான்”
கர்ணன் மெதுவாக எழுந்தான்.
“இங்க பாரு மிருணாளினி! உனக்கு இந்த உலகம் புரியல…” என்று ஆரம்பித்தவனிடம்
“உண்மைதான்” எனச் சட்டென ஒத்துக்கொண்டாள் அவள்.
தனது வேலை எளிமையாகிவிட்டதென அவன் பெருமூச்சுவிட்டுக்கொண்டு அறிவுரையை ஆரம்பித்தான்.
“உன் கூட பழகுற எல்லாரும் நல்ல நோக்கத்துக்காகப் பழகுறாங்கனு நினைக்கக்கூடாது. அதுலயும் ஆம்பளைங்க…”
“நீங்களும் ஆம்பளைதானே?” என்று சட்டென இடையில் வெட்டினாள் அவள்.
கர்ணன் நொடி திகைத்தான். பின்னரோ பற்றிக்கொண்டு வந்தது அவனுக்கு. நானும் அர்ஜூனும் ஒன்றா என்ற புகைச்சல்.
“நான் உன் புருசன்டி” என்றான் சூடாக.
“இருந்துட்டுப் போங்க! அதனால மட்டும் நீங்க எனக்கு நெருங்குன நபரா ஆகிட்டிங்களா என்ன? ஒரு கோடு போட்டு என்னை வெளிய தானே நிறுத்தி வச்சிருக்கிங்க? அப்பிடி பாத்தா நீங்களும் எனக்கு மூனாவது மனுசன் தான் தேவதாஸ் சார்”
அவளது ‘தேவதாஸ் சார்’ என்ற விளிப்பே அவனுக்கு எரிச்சலை மூட்டியது.
“முதல்ல தேவதாஸ்னு கிண்டல் பண்ணுறதை நிறுத்து. உனக்கு அட்வைஸ் பண்ண எனக்கு உரிமை இருக்கா இல்லையாங்கிறது இங்க பேச்சு இல்ல. நீ இங்க என்னோட வீட்டுல இருக்குற. உன் பாதுகாப்புக்கு நான்தான் பொறுப்பு. உன் மேல அன்பு பாசம் ப்ளா ப்ளா இல்லனாலும் உன் பாதுகாப்பைப் பத்தி எனக்கு அக்கறை இருக்கு. அந்த அக்கறையிலதான் சொல்லுறேன், ஃப்ரெண்ட்ஷிப்ல கவனமா இரு”
மிருணாளினி அவனை ஏறயிறங்கப் பார்த்தாள்.
“நல்ல அட்வைஸ்! பட் எனக்கு யூஸ் ஆகாது” என்றவள் “ஹான்! நைட்டுக்கு ஸ்விகில டின்னர் ஆர்டர் பண்ணிக்கோங்க. நானும் லட்சுமி ஆன்ட்டியும் ஸ்ட்ரீட் ஃபுட்ல புகுந்து விளையாடிட்டோம். எனக்கு நைட் டின்னர் வேண்டாம். உங்களுக்குனு தனியா சமைக்க முடியாது. ரொம்ப டயர்டா இருக்கேன் நான்”
அவ்வளவு தான் செய்தி என்று சொல்லிவிட்டுத் தங்களின் அறைக்கு வந்தவள் அங்கே இருந்த குட்டி மர அலமாரியில் வாங்கி வந்த புத்தகங்களை அடுக்கி வைத்தாள்.
சின்னதாய் மனதுக்குள் ஒரு நிறைவு! சில நாட்கள் பழக்கத்திலேயே உறவுகளைத் தாண்டி வெளியாட்களின் நட்பு கிடைத்தது அவளுக்கு ஒரு வரமாய்!
உடை மாற்றிவிட்டு வாங்கி வந்த புத்தகத்தில் ஒன்றை பிரித்து அவள் படிக்க ஆரம்பித்தபோது மொபைல் இசைத்தது.
அழைத்தது உஷா. மிருணாளினியின் பெரியம்மா மகள்.
உற்சாகமாக அழைப்பை ஏற்றாள்.
“எப்பிடி இருக்குறிங்க உஷாக்கா? கமல் மாமா, தினேஷ் குட்டி எல்லாம் நல்லா இருக்குறாங்களா?” என குசலம் விசாரித்தாள்.
“எல்லாரும் நல்லா இருக்கோம். நீயும் மாப்பிள்ளையும் சென்னைக்கு வந்து செட்டில் ஆகி எத்தனை வாரமாகுது? எங்க வீட்டுக்கு வரணும்னு தோணுச்சா உங்களுக்கு?”
உரிமையோடு கோபித்துக்கொண்டார் உஷா. மிருணாளினிக்குச் சங்கடமாய்ப் போனது. அவளுக்குமே உஷாவைப் பார்த்துவிட்டு வரவேண்டுமென்ற ஆசைதான்.
ஆனால் கர்ணனிடம் அதைச் சொல்லி அவனை இழுத்துச் செல்ல பிரியமில்லை. நேசமற்ற உறவில் மனைவி என்ற கடமையைச் சரியாகச் செய்ய வேண்டுமென அவன் வேண்டுமென்றால் எதிர்பார்க்கலாம். ஆனால் மிருணாளினியால் அப்படி நினைக்க முடியவில்லை.
ஏதோ ஒன்று தங்களுக்குள் சரியாகாமல் இருக்கிறது என்ற உணர்வு அவளை அவனிடம் இயல்பான உரையாடலுக்குக் கூட அனுமதிக்கவில்லை எனும்போது உரிமையாய் உறவுக்காரர்களின் வீட்டுக்கு அழைத்துச் செல்வது எல்லாம் சாத்தியப்படுமா?
“இங்க வந்ததுல இருந்து அவருக்குப் புராஜெக்ட் வேலை அதிகம்கா. கண்டிப்பா ஒரு நாள் வருவோம்”
“ஒரு நாள் என்ன ஒரு நாள்? நெக்ஸ்ட் வீக்கெண்ட் வர்றிங்க.” என்றவர் “எப்பிடி போகுது லைஃப்?” என்று கேட்டார் ஆர்வத்தோடு.
“ம்ம்… நல்லா போகுதுக்கா” என்று சுருக்கமாகப் பதிலளித்தவள் “உங்க லொகேசன் ஷேர் பண்ணுங்க அக்கா வாட்சப்ல. வீக்கெண்ட்ல வந்துடுறேன்” என்றாள்.
“வந்துடுறேன் இல்ல, வர்றோம்” உஷா திருத்தவும் மிருணாளினிக்குப் பதில் சொல்ல தெரியவில்லை.
“கண்டிப்பா! சைதாபேட்டை தானே? உங்க அப்பார்ட்மெண்ட் சைதாபேட்டை மெட்ரோல இருந்து எவ்ளோ தூரம்?”
“மெட்ரோ எதுக்குடி? கர்ணன் கார் வச்சிருக்கார்னு சித்தி சொன்னாங்களே”
“காரா? ஹான், கார் இருக்கு. ஆனா மெட்ரோ பத்தியும் தெரிஞ்சு வச்சுக்கலாம்னு கேட்டேன். சப்போஸ் அவர் இல்லாத நேரத்துல நான் உங்க வீட்டுக்கு வரனும்னா மெட்ரோ பத்தி தெரிஞ்சாதானே வர முடியும்?”
உஷாவும் விபரம் சொல்ல சரியாக அந்நேரத்தில் அறைக்குள் வந்தான். மெட்ரோ, சைதாபேட்டை போன்ற வார்த்தைகள் காதில் விழுந்ததும் கூர்ந்து கவனித்தான்.
‘நான் இல்லாத நேரத்தில் இவள் எங்கே செல்வாள்?’
சின்னதாய் ஒரு குறுகுறுப்பு!
மிருணாளினி அழைப்பைப் பேசி முடித்ததும் “சைதாபேட்டைல யார் இருக்காங்க?” என்று விசாரித்தான்.
“எங்க உஷாக்கா ஃபேமிலி இருக்காங்க”
கர்ணனுக்கு அது யாரென்றே தெரியவில்லை. திருமணத்தின்போது அவன் மனம் எங்கே ஒரு நிலையில் இருந்தது!
அவனது பார்வையிலிருந்தே அதைக் கண்டுகொண்டாள் மிருணாளினி.
“என் பெரியம்மா பொண்ணு அவங்க. சைதாப்பேட்டைல இருக்காங்க. விருந்துக்குக் கூப்பிட்டாங்க” சுருக்கமாகச் சொன்னாள்.
‘நாம் செல்லலாமா? நீ வருவாயா?’ என்பது போன்ற எந்தக் கேள்விகளும் இல்லை.
“நான் வீக்கெண்ட் போய் அவங்களைப் பாத்துட்டு வந்துடுறேன்”
புத்தகத்தைப் படிக்கப் போனவளிடம் “தனியா போறியா?” என்று கேட்டான் அவன்.
“ஆமா! ஏன் கேக்குறிங்க?”
“விருந்துனா ஜோடியாதானே போவாங்க?”
“அது நல்லபடியா வாழுறவங்களுக்குப் பொருந்தும். நமக்கு எதுக்கு அதெல்லாம்? நான் போயிட்டு வந்துடுறேன். நீங்க ஏன் வரலனு கேட்டா புராஜெக்ட் வேலைனு சொல்லி சமாளிச்சிடுவேன்”
வேண்டுமென்றே அவள் தன்னை விலக்கி வைப்பது இன்னும் அழுத்தமாய் அவனது கவனத்தில் பதிவதாய்!
“அட்லீஸ்ட் நாம நல்லபடியாதான் வாழுறோம்னு அடுத்தவங்க நினைக்கட்டும். இதைத்தானே ஊர்ல பண்ணுனோம்”
“ஊரோட அதை நிறுத்திக்கலாமே! இங்கயும் நடிக்கணும்னு என்ன அவசியம்? எனக்கு அது ஒரு மாதிரி அசௌகரியமா இருக்கு.”
“இப்ப உன் அக்கா வீட்டுக்கு நீ தனியா போனா அவங்க அதை அத்தை கிட்ட சொல்லமாட்டாங்களா? விசயம் ஊருக்குப் போகாதுனு என்ன நிச்சயம்? புரிஞ்சுக்க மிருணாளினி”
இதுவரை இத்துணை தெளிவாய் அமைதியாய் அவன் பேசி அவள் கேட்டதில்லை. ஆச்சரியமாய் உணர்ந்தவள் கர்ணன் சொல்வதிலும் நியாயம் இருப்பதால் சேர்ந்தே செல்லலாம் எனச் சம்மதித்தாள்.
சொன்னபடியே அந்த வாரயிறுதியில் இருவரும் சேர்ந்தே உஷா – கமலின் அப்பார்ட்மெண்டுக்கு விசிட் அடித்தார்கள்.
அன்றைய தினம் காலையில் ஆதிராவும் புவனேந்திரனும் திருமணத்துக்குச் சம்மதித்த தகவல் வேறு கூடுதல் இனிமையாய் சேர்ந்துகொள்ள உற்சாகமாகவே மிருணாளினியோடு கிளம்பினான் கர்ணன்.
“ஸ்வீட் வாங்கிப்போம். அந்த வீட்டுல ஒரு சின்னப்பையன் இருக்கான்னு சொன்னல்ல. அவனுக்கு ஸ்னாக்ஸ் தனியா வாங்கணுமா?”

அவன் கேட்டதும் ஒரு நொடியில் கனவு காணுகிறோமோ என்று எண்ணிவிட்டாள் மிருணாளினி.
“என்னடி பேசாம முழிக்கிற?” என்று அவன் அதட்டியதும்,
“ஹான், ஒன்னுமில்ல. அவனுக்குச் சமோசா பிடிக்கும்” என்றாள்.
இனிப்பு காரம் பூ பழங்கள் எல்லாம் வாங்கிக்கொண்டு இருவரும் சைதாபேட்டையிலிருக்கும் ஆம்பர் அப்பார்ட்மெண்டை அடைந்தார்கள்.
உஷாவிடமும் கமலிடமும் இன்முகத்துடன் பேசினான். மிருணாளினியே அவனது மாற்றத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டுப்போனாள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
ஆனால் அவனது பேச்சும் சிரிப்பும் அவளுக்குச் சமாளிப்பாகத் தோன்றியது. எதுவுமே உண்மையில்லை என்றே எண்ணினாள்.
முன்னரே சொன்னது போல தங்களின் குடும்பத்தாருக்கு தாங்கள் வாழும் விதம் தெரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் இப்படி எல்லாம் அவன் நடந்துகொள்வதாக எண்ணினாள் அவள்.
பாவம்! கர்ணனின் மனநிலையில் வந்த மாற்றம் அவளுக்குப் புரியவில்லை.
ஆண்களின் மனோபாவம் -சொன்ன வார்த்தைகளை அதிகம் மனதில் வைக்காமல் மறந்துவிடுவது! அதை அவர்களின் பெருந்தன்மை என்று கூட சொல்லலாம்.
ஆனால் பெண்களின் மனோபாவம் அப்படிப்பட்டது இல்லை. அவர்களால் வார்த்தைகளை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அதை அவர்கள் உதிர்த்தாலும் சரி, அவர்களை நோக்கி யாரேனும் உதிர்த்தாலும் சரி!
‘என்னிடமிருந்து விலகி நில்’ என்று எளிதாகச் சொல்லிவிட்ட கர்ணனால் அதை எளிதாகக் கடக்கவும் முடிந்தது.
ஆனால் அதை யாரை நோக்கி சொன்னானோ அவளால் அதை மறக்கவோ கடக்கவோ முடியவில்லை. இறுகப் பற்றிக்கொண்டாள் அவனது வார்த்தைகளை.
உங்கள் இதயத்தில் யார் மீதேனும் சரியான மதிப்பீடு இல்லை என்றால் அவர்கள் எவ்வளவு புனிதமானக் காரியங்கள் செய்தாலும் அவை உங்கள் இதயத்தைத் தொடாது.
இப்படியாகக் கர்ணன் செய்த எதுவும் மிருணாளினியின் இதயத்தைத் தொடவேயில்லை. ஆனால் குடும்பத்தாரிடம் நல்ல தம்பதிகளாகத் தாங்கள் உருவாக்கி வைத்த பிம்பம் உடையாது என்ற நிம்மதியோடு அவள் இருந்துகொண்டாள்.
இந்நிலையில் ஆதிரா – புவனேந்திரனின் நிச்சயதார்த்தத்துக்கு இருவரையும் கட்டாயம் வரவேண்டும் எனக் குடும்பத்தார் சொல்லிவிட, அம்பாசமுத்திரம் கிளம்ப தயாரானார்கள் கர்ணனும் மிருணாளினியும்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

