“நாம யாருக்கும் ரெண்டாவது சாய்ஸா இருக்கக் கூடாதுன்னு நினைப்போம்ல? இப்போ அந்த எண்ணம்தான் மனசுல ஓடிட்டே இருக்கு. மனசு சும்மா இல்ல. சண்டை சச்சரவுனு எதுவும் இல்ல. ஆனா, ஏதோ ஒரு பெரிய இடைவெளி வந்த மாதிரி உள்ளுக்குள்ள ஒரு ஃபீலிங். அதே நேரம் எங்களுக்குள்ள இருக்குற இந்த அமைதி, இந்தத் தனிமை எல்லாம் எனக்குப் பழகிடுச்சு. நான், என்னோட ஆன்லைன் கோர்ஸ், என்னோட ஹாபினு என் மேல கவனம் செலுத்த நான் பழகிட்டேன். நாம ஏன் இன்னொருத்தருக்காக வாழணும்ங்கிற எண்ணம் எனக்குள்ல ஸ்ட்ராங்கா ஆகிடுச்சு இப்ப. சந்தோஷம் இல்லன்னு சொல்ல முடியாது. ஆனா, ஒரு நிறைவு இல்ல. சரி, பரவாயில்ல. எல்லாரோட வாழ்க்கையும் நூறு சதவீதம் பெர்ஃபெக்ட்டா இருக்கணும்னு அவசியம் இல்லையே”
-மிருணாளினி
“அப்ப நான் சேஞ்ச் ஆகுறேன்னு நீ நினைக்குறியா ஜோய்?”
கஃபடேரியாவில் காபியை அருந்தியபடியே துர்ஜோயிடம் வினவினான் கர்ணன்.
மிருணாளினியிடம் தனது மனநிலையை விவரித்த பிறகு இருந்த நிம்மதி அதை அவள் எதிர்கொண்ட விதத்தால் தொலைந்தது போல உணர்வதாக கர்ணன் சொல்லியிருந்தான்.
“நீ சேஞ்ச் ஆகுற. அதை ஒத்துக்க உனக்குப் பிரியமில்ல. நீ சேஞ்ச் ஆகுறதுக்குக் காரணம் என்ன தெரியுமா? கண்டிப்பா அது முழுமையான நேசம்னு சொல்லிட முடியாது. அந்தப் பொண்ணு கிட்ட எமோஷனல் பாண்டிங் வேண்டாம்னு நீ சொன்னதும் அவ கலங்கி அழணும்னு உன் உள்மனசு எதிர்பாத்திருக்கும். ஆனா அவ அதுக்கான சான்ஸை குடுக்கல. அதனால உனக்கு அவ மேல ஒரு ஈர்ப்பு வந்திருக்கு. எப்பிடி இவளால இந்தச் சூழ்நிலைய கையாள முடிஞ்சுதுங்கிற கேள்வி உனக்குள்ள இருக்கு.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஆம்பளைங்களான நாம ஒரு பொண்ணோட அன்பையும் நேசத்தையும் நிராகரிக்குறதுக்கான உரிமை நமக்கு மட்டுமே இருக்குறதா நினைக்குறோம். அதைச் செய்யுறப்ப நமக்கு நெருக்கமானப் பொண்ணு வருத்தப்படுறதை நம்ம உள்மனசு விரும்பும். எனக்கு இவளைப் பிடிக்கல, ஆனா இவளால நான் இல்லாம இருக்கமுடியாதுனு சொல்லி மார்தட்டிக்க அந்த மனசு துடிக்கும். அன்ஃபார்சூனேட்லி மிருணாளினி உன் மனசுக்கு அந்தச் சான்ஸ் எதையும் குடுக்கல. அந்த கியூரியாசிட்டிலதான் நீ அந்தப் பொண்ணைக் கவனிக்க ஆரம்பிச்சிருக்க. இது தப்பில்ல கர்ணா! ஏதோ ஒரு கியூரியாசிட்டிலதான் காதலே ஆரம்பிக்கும். இந்த மாற்றத்தை நல்லதுனு நினைச்சுக்க”

கர்ணனுக்கு இந்தக் கேள்வி மூளையில் உதயமானதன் காரணமே மிருணாளினிதான்.
‘அவளிடம் எந்தப் பிணைப்பையும் விரும்பாத மனம் அவள் எனக்காக சில கடமைகளைச் செய்ய வேண்டுமென ஏன் எதிர்பாக்கிறது? எனக்கு மட்டுமே சொந்தமான என் வீட்டில், என் படுக்கையறையில் அவளது பிரசன்னம் என்னை ஏன் சொல்லவொண்ணா நிம்மதியில் ஆழ்த்துகிறது? அப்படி என்றால் முழுவதுமாக மாறிவிட்டேனா? என் மனம் அவளை ஏற்கத் தயாராகி விட்டதா? ஏன் இந்த இருவிதமான மனநிலையோடு நான் உலாவுகிறேன்?’
தனக்குள் இருக்கும் எண்ணற்ற கேள்விகளை நண்பனிடம் கொட்ட, துர்ஜோயும் நல்ல நண்பனாக கர்ணனுக்கு அவனது மனதில் துளிர்த்த உணர்வுகள் இயல்பானவையே என்பதைப் புரியவைத்துவிட்டான்.
அன்றைய தினம் நிறுவனத்தில் வழக்கம் போல பரபரப்புகளுடன் கழிந்தது.
மறுநாள் புதிய புராஜெக்ட் பற்றிய மீட்டிங் ஒன்று இருக்குமென புராஜெக்ட் மேனேஜர் விக்ரம் சொல்லிவிட்டான்.
புதிய புராஜெக்ட் என்றாலே கர்ணன் உற்சாகமாகிவிடுவான். புராஜெக்டடின் தன்மையைப் பொறுத்து தனக்கான டீமை தேர்வு செய்யவேண்டும். இன்னும் ஒரு வாரத்துக்கு அது தொடர்பான வேலைகள் இருக்கும்.
பழைய புராஜெக்டின் டாக்குமெண்டேசன் வேலையை முழுவதுமாக முடித்துவிட்டான் அவன்.
இப்படி அவனது நாட்கள் நிறுவனத்தில் பிசியாகப் போனாலும் வீட்டில் மிருணாளினியின் செயல்பாடுகள் சில நேரங்களில் அவனுக்கு எரிச்சலை மூட்டின.
அவனுக்கு அண்டை வீட்டாரிடம் அதீதமாக உரிமை எடுத்து உறவு பாராட்டுவது எல்லாம் சுத்தமாகப் பிடிக்காது. ஆனால் மிருணாளினி அவனுக்கு அப்படியே நேர்மாறாக இருந்தாள்.
லட்சுமி – நாராயணன் தம்பதியிடம் அவள் அதிகம் பழகுவதாக அவனுக்குத் தோன்றியது. மாலையில் அவன் வீடு திரும்பும் நேரங்களில் பெரும்பாலும் அவள் வீட்டில் இருப்பதில்லை.
அவன் வந்து சில மணி நேரங்கள் கழித்து நாராயணனின் ஃப்ளாட்டிலிருந்து வருபவள் இரவுணவைச் சமைப்பாள்.
உறக்கத்துக்கும் வீட்டுக்கு வந்து இளைப்பாறுவதற்குமான இடைவெளியில் அவர்களிடையே உரையாடல்களே நடக்காது. அவன் ஒரு பக்கம் ஓ.டி.டியில் சீரிஸ் எதையாவது வைத்து அதில் மூழ்கியிருப்பான்.
அவளோ புதிதாக வாங்கிய விண்டேஜ் மாடல் ரேடியோவில் எண்பதுகளில் உள்ள தமிழ் திரைப்பாடல்களைக் கேட்டபடி சமையலறையில் மும்முரமாய் சமைத்துக்கொண்டிருப்பாள்.
அவள் தன்னிடம் உரையாட வேண்டுமெனத் தன் மனம் எதிர்பார்க்கிறதோ என்று ஒரு கட்டத்தில் கர்ணனே ஐயம் கொண்டான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
அவன் நினைத்தால் டி.வியை அணைத்துவிட்டுச் சமையலறைக்குப் போய் அவளிடம் பேசிக்கொண்டிருக்கலாம். ஆனால் அவள் வந்து தன்னருகே அமர்ந்து பேசவேண்டுமென எதிர்பார்த்தான்.
பெரும்பான்மை தமிழ் ஆண்களின் எதிர்பார்ப்பு இது. வீட்டுக்கு வந்ததும் மனைவி தன்னிடம் சில மணி நேரமாவது பேசவேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
ஆனால் மனைவிமார்களுக்கோ இரவுணவு சமைப்பதும், பின்னர் பாத்திரங்களைக் கழுவி வைப்பதும் பெரிய டாஸ்க். இதில் மறுநாள் காலையுணவுக்கான ஆயத்தத்தை வேறு செய்து வைக்க வேண்டும். சாப்பாட்டில் ஒரு சின்ன குறை வந்தாலும் அதை நையாண்டியாகவோ, குத்தலாகவோ சொல்லிக் காட்டும் ஆண்கள் அனேகம்.
‘இவனிடம் பேசினால் மட்டும் சமையலில் உள்ள குறையைப் பூதாகரமாக்காமல், அவனது அன்னையுடன் என்னை ஒப்பிடாமலா இருக்கப் போகிறான்?’ என்ற எண்ணம் ஒரு கட்டத்தில் பெண்களுக்கு வந்துவிடும்.
ஆண்களுக்கு வீட்டில் மூன்று வேளை உணவும் சட்டமாக இருக்கவேண்டும். அதே நேரம் மனைவியும் தன்னுடன் நேரம் செலவளிக்க வேண்டும். வீட்டுவேலையில் தனது பங்களிப்பு இல்லாமல் இது எப்படி சாத்தியமாகும் என எந்த ஆணும் யோசிப்பதில்லை.
கர்ணன் மட்டும் யோசிப்பானா என்ன? தங்களுக்குள் இருக்கும் உரையாடலற்ற வெறுமை அவனை வெறுப்பேற்றியது.
“பொண்டாட்டினு எதுக்கு இவ இருக்கானு புரியல. காதல் வசனம் பேசவேண்டாம். ஒரே ஆபிஸ்ல ஒர்க் பண்ணப்போறோம். அதைப் பத்தி பேசலாம். எப்ப பாத்தாலும் கிச்சன் கிச்சன்னு அங்கயே அடைஞ்சு கிடக்குறா” என சலிப்பாக எண்ணிக்கொண்டான்.
சலிப்பின் உச்சக்கட்டமாக அவன் மனம் கோணல் மாணலாக ஒன்றை யோசித்தது.
‘இந்த வெறுமையோடு நான் ஏன் உழலவேண்டும்? இவளை என் வாழ்க்கையின் ஒரு பாகமாக இனி ஏன் வைத்திருக்க வேண்டும்?’
எண்ணங்களின் வெளிப்பாடாகச் சில பல கிறுக்குத்தனங்களை வேண்டுமென்றே செய்ய ஆரம்பித்தான் அவன்.
ஒரு கட்டத்தில் மிருணாளினியே வெடித்து இங்கிருந்து போய்விடுவாள் என்ற எதிர்பார்ப்பு.
தனக்கு என்ன வேண்டும் என்ற தெளிவே இல்லாதவனின் செயல்கள் வேறு எப்படி இருந்துவிட முடியும்? நன்றாகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் குறுக்கே வந்து இப்போது தன்னைத் தனிமையில் ஆழ்த்தும் விதமாய் நடந்து கொள்பவளால் தனது அமைதியே போய்விட்டதாகக் கருதுபவன் அதன் ஆரம்பப்புள்ளி அவன்தான் என்பதை எப்படி ஒப்புக்கொள்வான்?
மிருணாளினிக்கோ அவனது எதிர்பார்ப்பு, ஏமாற்றம், அதன் விளைவாக அவன் செய்யும் கிறுக்குத்தனங்களுக்கானக் காரணங்கள் புரியவேயில்லை.
‘என்னிடம் உணர்வுரீதியாகத் தன்னைப் பிணைத்துக்கொள்ள விரும்பவில்லை என்றான். நான் விலகி நிற்கிறேன்’ இதுவே அவளது மனநிலை.
ஆனால் கர்ணனின் செயல்கள் அவளுக்கு எரிச்சலை வரவழைத்தன. வழக்கம் போல அன்றும் மெத்தை மீது கிடந்த ஈரமான டவலை எரிச்சலுடன் பார்த்தாள் மிருணாளினி.
கடந்த சில நாட்களாக அவளுக்கு எரிச்சலையூட்டும் எல்லா வேலைகளையும் நோட்டில் குறித்துவைத்துச் செய்பவனைப் போல வரிசைகிரமமாகச் செய்து வந்தான் கர்ணன்.
காலையில் குளித்துவிட்டு டவலை மெத்தையில் வீசுவது, காதைச் சுத்தம் செய்யும் ஏர்பட்சை தரையில் வீசுவது, பற்பசையை ஸ்டாண்டிலிருந்து எடுக்கிறேன் பேர்வழியாக அவளது டங்க் – க்ளீனரைத் தள்ளிவிட்டு அவளைத் தேடவிடுவது இவையெல்லாம் அவனது தினசரி எரிச்சலூட்டும் பட்டியலில் அடக்கம்.
ஒரு நாள் இரண்டு நாள் என்றால் இதெல்லாம் எல்லா வீட்டிலும் நடப்பதுதானே என்று தோன்றும்! தினசரி இதுவே வாடிக்கையாகவும், வேண்டுமென்றே செய்கிறான் என்றே எண்ணிவிட்டாள் மிருணாளினி.
எப்போதும் அவன் ஈர டவலை வீசிய இடத்தை ஹேர் ட்ரையர் மூலம் உலர்த்துபவளுக்கு அன்று பொறுமைவிட்டுப் போனது.
கண்ணாடி முன்னே நின்று சட்டையை டக்-இன் செய்துகொண்டிருந்தவனின் அருகில் போய் நின்றாள்.
கண்ணாடியில் அவளது பிம்பத்தைப் பார்த்தும் பார்க்காதவனைப் போல விசிலடித்தபடியே ஸ்லீவை முழங்கைக்கு ஏற்றிவிட்டவன் தனது மோவாயில் அடர்ந்திருந்த தாடியை வருடிவிட்டுக் கொண்டான்.
மனதுக்குள் மெல்லிய சந்தோசம். ஒருவழியாக மிருணாளினியைக் கோபப்படுத்திவிட்டோமென்ற திருப்தி.
‘கம் ஆன்! வாயைத் திறந்து கத்துடி. இதை வச்சே உன்னைத் துரத்திவிடுறேன்’
மனதுக்குள் பேசிக்கொண்டவன் எதிர்பார்ப்புடன் காத்திருக்க அவனுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்காமல் சூடாக உரையாடலை ஆரம்பித்தாள் மிருணாளினியும்.
“எதுக்கு ஈர டவலை டெய்லி பெட்ல வீசிட்டுப் போறிங்க?”

“சாரி! இனிமே உன் தலை மேல வீசிட்டுப் போறேன்”
மிருணாளினி பற்களைக் கடித்தாள். செய்தது உதவாக்கரை வேலை! இதில் அமர்த்தலாகப் பதிலடி வேறு!
“நீங்க இதெல்லாம் வேணும்னுதானே செய்யுறிங்க? அப்பிடியென்ன விரோதம் உங்களுக்கு என் மேல?”
“ஏன் உனக்குத் தெரியாது?” கிடுக்குப்பிடியாய் அவனும் கேட்கவும் இப்போது அவள் வாயை மூட வேண்டியதாயிற்று!
“என்னாச்சு? போஸ்ட் பாக்ஸ் வாய்க்குப் பூட்டு போட்டுட்ட போல? இங்க பாரு, நான் இப்பிடித்தான் இருப்பேன். பேச்சிலர் லைஃப்ல எப்பிடி இருந்தேனோ அதுல இருந்து ஒரு துளி கூட மாறமாட்டேன். உனக்கு இஷ்டம்னா இங்க இரு. இல்லனா அன்னைக்குச் சொன்ன மாதிரி, உனக்கு ஏத்த ஏதோ ஒரு பி.ஜில போய் தங்கிக்க. சும்மா குரலை உசத்துறது, கண்ணை உருட்டுறதுனு என்னை மிரட்டுற வேலை வச்சுக்காத.”
“இது உங்களுக்கே ஓவரா தெரியலையா? இப்ப நான் ஒர்க் பண்ணல. ஆனா நான் ஒர்க்ல ஜாயின் பண்ணுனேன்னா நீங்க இழுத்துப் போடுற வேலையையும் செஞ்சிட்டு நான் எப்பிடி ஆபிசுக்குப் போறது?”
“அது உன் பிரச்சனை. மேரேஜ் லைஃப்னா இதெல்லாம் கலந்ததுதான்”
அலட்சியமாகத் தோளைக் குலுக்கியவனின் கன்னத்தில் பளாரென ஒன்று வைக்குமளவுக்கு ஆத்திரம் பெருகியது மிருணாளினிக்கு. அதை அவளது கண்கள் பிரதிபலித்தனவோ என்னவோ!
“கோவம் வருதுல்ல? நான் சொன்னதை மீறி கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னல்ல, அப்ப எனக்கும் இப்பிடித்தான் ஆத்திரம் வந்துச்சு. கையைக் காலைக் கட்டி மணமேடைல உக்கார வச்ச ஃபீல். நீ நினைச்சிருந்தா இந்தக் கல்யாணத்தை நிறுத்தியிருக்கலாம். ஆனா நீ என்ன பண்ணுன? பணக்காரவீட்டுப்பையனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டுச் சொகுசா வாழணும்னு ஆசைப்பட்டல்ல. இதுதான் உனக்கான சொகுசுவாழ்க்கை. என்ஜாய் பண்ணு”
“ஏன் உங்க வாய்ல மோமோஸ் இருந்துச்சா? நீங்க வேண்டாம்னு சொல்லிட்டுப் போயிருக்கலாம்ல” என்று மிருணாளினி சீறவும்
“எங்க வீட்டுக் கிழவி அழுதுடும். அதோட பிடிவாதத்துக்கு முன்னாடி என்னால ஒன்னும் பண்ண முடியல. நீ பண்ணியிருக்கலாம். வேணும்னே நீ அமுக்குணியா இருந்தல்ல. அதுக்கு அனுபவி. எனக்கு டைம் ஆகுது. பை”
மிருணாளினிக்குப் பற்றிக்கொண்டு வந்தது. இவனை எதை வைத்து அடிப்பதென்று தெரியவில்லை. அவள் பார்த்த உம்மணாமூஞ்சி கர்ணனுக்குள் இப்படியொரு வன்மம் பிடித்த ஆசாமி இருப்பான் எனக் கனவிலும் அவள் நினைத்ததில்லை.
கடுப்பில் கையைப் பிசைந்தபடி நின்றவளின் தோற்றம் திறந்திருந்த கதவின் வழியே ஹாலில் இருந்த கர்ணனுக்குத் தெரிந்தது.
கோபத்தில் சிவந்த கன்னங்களில் மெல்லிய பளபளப்பு! அவனை மனதுக்குள் அர்ச்சித்துக்கொண்டிருந்தவளின் இதழ்கள் அசைந்ததில் கொஞ்சம் தலையில் கிர்ரென்ற உணர்வு!
சட்டெனத் தலையை உலுக்கிக்கொண்டான் கர்ணன்.
‘இவளைக் கண்டு மயங்காதே! அத்துணை தூரம் சொல்லியும் அமைதியாய் இருந்து உன் வாழ்க்கையின் போக்கை மாற்றியவள் இவள். இன்று நீ திரிசங்கு சொர்க்கத்தில் தவிக்கவும் இவளே காரணம்’
மனதுக்குள் வைரியாய் அவளை வரித்துக்கொண்டு அலுவலகத்துக்குக் கிளம்பினான் கர்ணன்.
மிருணாளினிக்கு மூண்ட எரிச்சலுக்கு அளவேயில்லை.
எரிச்சலோடு அந்த அறையில் இருக்கும் அவனது மேஜையை உதைத்தாள்.
அதன் இழுப்பறை சட்டெனத் திறந்துகொள்ள, எப்போதும் சாவி போட்டு மூடிவைப்பவன் இன்று மறந்துவிட்டான் போல என்று எண்ணியவளாக அதை மூடப்போனவள் அதில் இருந்த ஜர்னல் ஒன்றை பார்த்ததும் திகைத்துப் போனாள்.
“பார்றா! இந்தச் சிடுமூஞ்சிக்கு ஜர்னல் ரைட்டிங் எல்லாம் தெரியுமா?”
ஆச்சரியமாகச் சொன்னபடி அதை எடுத்துப் பார்த்தாள். விதவிதமான படங்கள், ஸ்டிக்கர்கள் என அழகாய்த்தான் செய்திருந்தான் கர்ணன்.
ஆனால் கடைசியாக எழுதியிருந்த ஜர்னல் பக்கத்தில் இருந்த பெயர்களை வாசித்ததும் மிருணாளினிக்குப் பற்றிக்கொண்டு வந்தது.
‘ஈஸ்வரி – கர்ணன்’
அந்தப் பெயர்களுக்கு இடையே இருந்த இதய வடிவிலான ஸ்டிக்கர் பெயர்களுக்குரிய நபர்களிடையே என்ன உறவென அவளுக்குப் புரியவைத்துவிட்டது.
‘The Embrace of Love: This moment is enough, until eternity’
காதலின் அரவணைப்பு – இந்த நொடி மட்டும் போதும் என்றென்றும்!
வாசித்தவள் சட்டென அந்த ஜர்னலை மூடினாள்.
வீட்டிலிருந்த பெயர்ப்பலகையில் அவனது பெயரை இரண்டாவதாக வைத்ததற்கு அவ்வளவு தூரம் பொருமினான். அவன் கைப்பட தயார் செய்த ஜர்னல் பக்கத்தில் யாரோ ஒரு பெண்ணுடைய பெயருக்குப் பின்னே தனது பெயரைச் செதுக்கி வைத்திருக்கிறான்.
சொல்லிக்கொள்ளும்படி அவர்களுக்குள் பிணைப்பு இல்லாவிட்டாலும் எரிச்சல் வந்தது மிருணாளினிக்கு.
கொதிப்போடு இருந்தவள் மாலையில் கர்ணன் வீட்டுக்கு வந்ததும் ஜர்னலை அவன் முன்னே வீசினாள்.
கர்ணன் முதலில் திகைத்தாலும் பின்னர் நிதானமாகக் குனிந்து அதைக் கையில் எடுத்துக்கொண்டான்.
“என்ன இது?”
“பாத்தா தெரியல, ஜர்னல்”
சாதாரணமாகச் சொல்லிவிட்டுத் தங்களது அறைக்குள் நுழைந்தவனைப் பின்தொடர்ந்தாள் மிருணாளினி.
“அப்ப நீங்க லவ் பண்ணிருக்கிங்க?”

ஜர்னலை மேஜையின் இழுப்பறையில் வைத்துவிட்டுத் திரும்பியவன் “ஆமா! லவ் பண்ணுனேன். என் எதிர்பார்ப்புக்கு ஏத்தப் பொண்ணா அவ தெரிஞ்சா. ப்ச்! அவளை நான் மிஸ் பண்ணிட்டேன். இப்பவும் அதை நினைச்சா வருத்தமா இருக்கு. என் எதிர்பார்ப்புல ஒன்னை கூட கம்ப்ளீட் பண்ண முடியாத ஒருத்தியோட என் லைஃபை பிணைச்சு வச்சிடுச்சு எங்க வீட்டு கிழவி” என்று சொல்லி பெருமூச்சு விட்டான்.
மிருணாளினிக்கு அயர்ச்சியாக இருந்தது.
“இது லவ் ஃபெயிலியர் கேஸ் போல. அதான் நீளமா வசனம் பேசிருக்கான். சைக்! இவன் சொன்னப்பவே கல்யாணத்தை நிறுத்தியிருக்கலாம். இப்பிடி வந்து ஒரு தேவதாஸ் கிட்ட சிக்கிட்டியே மிருணா” என்று வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டவள்
“நீ பேசுறது கேக்கல” என்று அவன் சொல்லவும்
“கேட்டாலும் உங்களுக்கு அதால யூஸ் இல்ல” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.
அவள் சென்ற பிறகு கர்ணன் தன் நெற்றியில் அடித்துக்கொண்டான்.
“எப்பவும் ட்ராயரை லாக் பண்ணிட்டுப் போவேன். இன்னைக்கு ஏன் மறந்து தொலைச்சேன்?”
ஆனால் ஒன்று, அதன் பின்னர் வந்த நாட்களில் அடிக்கடி மிருணாளினியின் காதில்படும் வண்ணம் ஈஸ்வரியைப் பற்றி பேசி அவளது காதைத் தீய்ந்து போக வைத்தான்.
நேரடியாக அவளிடம் பேசாவிட்டாலும் துர்ஜோயிடம் மொபைலில் பேசுவது போல காட்டிக்கொண்டு தனது காதலின் உன்னதத்தை அவன் சொல்லி சொல்லி அவளை வெறுப்பேற்ற, மிருணாளினி கடுப்போடு அதைக் கடந்தாள்.
இவர்களின் வாழ்க்கையே இங்கு கந்தல் கோலமாக இருக்கையில் அம்பாசமுத்திரத்திலிருந்து ஒரு அதிர்ச்சியானத் தகவல் வந்து சேர்ந்தது. ஆதிராவுக்கும் அவினாஷுக்கும் நடக்கவிருந்த திருமணம் ரத்தாகிறது என்ற தகவல்தான் அது!
கர்ணனுக்கு இத்தகவலைச் சொன்னவர் மருதநாயகி.
“அவன் அக்காக்காரி நம்ம வீட்டுக்கே வந்து ஆதிரைய அசிங்கப்படுத்துறா. அந்தப் பய பாத்துட்டுக் கல்லு போல நிக்கான். இவனை நம்பி பிள்ளைய கட்டி வச்சா அவ வாழ்க்கை என்னாகும்? உங்கப்பன் எடுத்த முடிவுல எனக்கு வருத்தம் எதுவுமில்ல. ஆனா வீடு தேடி வந்து நம்ம வீட்டுப்புள்ள மனசை வருத்தப்பட வச்சிட்டுப் போயிட்டாளே! அதை நினைச்சு நினைச்சு நெஞ்சு எரியுதுல.”
மருதநாயகியிடம் பேசிவிட்டு மிருணாளினியிடம் இத்தகவலைச் சொல்ல அவளைத் தேடியவன் ஹாலில் அவளும் லட்சுமியும் நின்று பேசிக்கொண்டிருப்பதைக் கேட்க நேர்ந்தது.
“நானும் என் அக்கா கிட்ட சொல்லி சொல்லி சலிச்சுப் போயிட்டேன் மிருணா. நம்ம வீட்டுக்கு வாழ வந்த மருமக மனசு வருந்தி கண்ணீர் விட்டா அந்தக் கண்ணீர் நம்ம வீட்டுப் பொண்ணு வாழ்க்கைய எரிச்சிடும். அவ சொன்னா புரிஞ்சிக்கவே மாட்றாடா”
அந்த இடத்தில் கர்ணனுக்குச் சுருக்கென இதயத்தில் முள் தைத்தது போல ஒரு உணர்வு.
‘மிருணாளினியிடம் தான் நடந்துகொள்ளும் முறைக்காக அவள் மனம் வருந்தியிருப்பாளோ? அதுதான் ஆதிராவின் மனம் நோகும்படியானச் சம்பவங்கள் நடந்தேற காரணமாய் இருந்திருக்குமோ?’
பெரும்பாலான ஆண்கள் யோசிக்கத் தவறும் கோணம் இது. ஆனால் கர்ணன் யோசிக்க ஆரம்பித்தான். அவனது யோசனை அவர்களின் வாழ்க்கையில் சிறிய மாற்றத்தையாவது உண்டாக்குமா?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

