“எனக்குள்ள குட்டி குட்டியா நிறைய ஆசைகள் இருக்கு. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து ரெஸ்டே இல்லாம உழைக்குற எங்கப்பாக்கு சின்னதா ஒரு ஆசுவாசத்தைக் குடுக்குற மாதிரி நல்ல வேலையில உக்காரணும். அம்மா ரொம்ப வருசமா ஆசைப்படுற மயில் முகப்பு வச்ச செயின் வாங்கிக் குடுக்கனும். அப்புறம் பிங் கோல்ட் ஸ்ட்ராப் வச்ச டைட்டன் க்ரஸ்ட் ஸ்மார்ட் வாட்ச் என்னோட பக்கெட் லிஸ்டுல இருக்கு. அதை வாங்கனும். அப்புறம் முதல் மாச சம்பளம் வாங்குனதும் ஸ்டார்பக்ஸ் போய் என் பெர் எழுதுன கப்ல கேப்புசினோ வாங்கி குடிக்கணும். இப்பிடி லட்சியம் ஒரு பக்கம், குட்டி குட்டியா எனக்குள்ள முழிச்சிட்டிருக்குற ஆசைகள் ஒரு பக்கம்! இப்போதைக்கு இதெல்லாம் எனக்குக் கனவு தான்! ஒரு நாள் ஒரு நல்ல வேலை கிடைச்ச அப்புறம் இந்தத் தருணம் ஒவ்வொன்னையும் செல்ஃபி எடுத்து ஃபோட்டோ போர்டுல ஒட்டி வைக்கணும். மிருணாளினியால ஆசைகளையும் இலட்சியங்களையும் நிறைவேத்திக்க முடியும்ங்கிறதுக்கான ஆதாரமா அந்த ஃபோட்டோ போர்ட் காலத்துக்கும் என் ரூம்ல இருக்கும்.
-மிருணாளினி
ஒலிம்பியா டெக் பார்க், கிண்டி…
பரந்து விரிந்த அந்த தொழில்நுட்ப பூங்காவின் டவர் மூன்றில் இயங்கி வரும் பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஜே.பி.எம் டெக்னாலஜியின் மீட்டிங் அறையில் புதிதாக ஆரம்பிக்கவிருக்கிற புராஜெக்டான வங்கி ஒன்றின் செயலி குறித்த இண்டர்னல் கிக் – ஆப் மீட்டிக்குக்காகத் தயாராகிக்கொண்டிருந்தார்கள் சில இளைஞர்கள்.
அது கிளவுட் தொழில்நுட்பத்தோடு இணைந்த புராஜெக்ட் என்பதால் முன்னதாகவே புராஜெக்ட் மேனேஜர் மற்றும் க்ளையண்டுடன் கிக்-ஆப் மீட்டிங்கை முடித்துக்கொண்ட அவர்களின் டீம் லீடர் இப்போது தனது டீமுக்காகத் தேர்வு செய்த நபர்களுடன் புராஜெக்ட் பற்றி பேச விரும்பினான்.
இந்தப் புராஜெக்ட் அவன் அடுத்தப் பணிநிலைக்குச் செல்வதைத் தீர்மானிக்கப் போகிற புராஜெக்ட் என்பதால் அவனுக்குள் பரபரப்பும் ஆர்வமும் ஒருசேர நிறைந்திருந்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவன் கர்ணன்! இருபத்தெட்டை இந்தாண்டு தொட்டிருந்தான். அவனது ஐந்தடி பத்து அங்குல உயரத்துக்கு வெள்ளையில் சின்னதாக கருப்பு வண்ணத்தில் கட்டங்கள் போட்ட செக்ட் ஃபார்மல் சட்டையும், கருப்பு வண்ண ரெகுலர் ஃபிட் பேண்ட்டும் அட்டகாசமாக இருந்தது.
மீட்டிங் அறையைத் தனது குழுவினரால் நிரப்பியவனின் முகத்தில் முந்தைய தினம் நடந்த கிக் ஆப் மீட்டிங்கில் பேசப்பட்ட புராஜெக்ட் குறித்த நம்பிக்கை அதீதமாகத் தெரிந்தது.
சீனியர் டெவலப்பர் நர்மதா, டெவலப்பர் ரகு, டெவொப்ஸ் பொறியாளர் அருண், அசோசியேட் டெவொப்ஸ் பொறியாளர் சந்தோஷ் இவர்களோடு டெக் லீட் (டீம் லீடர்) கர்ணனையும் அடக்கியது அந்த பேக்கெண்ட் டீம்.
முந்தைய தினம் க்ளவுட் சொல்யூசன்ஸ் ஆர்க்கிடெக்டான விவேக் கொடுத்த ஆலோசனையின்படி அங்கிருந்த அனைவரிடமும் புராஜெக்டை விளக்க ஆரம்பித்தான்.

“குட் மானிங் டீம்! இது நம்ம புராஜெக்டோட முதல் இண்டர்னல் கிக் ஆப் மீட். இனி நாம ஒர்க் பண்ணப்போற புராஜெக்டோட முக்கியமான கோல், க்ளையண்டோட எதிர்பார்ப்பு என்ன, நம்ம என்ன மாதிரி அவங்க எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யணும்ங்கிறதை ஜஸ்ட் சொல்லிடுறேன்”
அந்த வங்கிக்கான செயலியில் என்னென்ன அம்சங்களை க்ளையண்ட் எதிர்பார்க்கிறார் என்பதைத் தனது குழுவினரிடம் தெரிவித்தான் கர்ணன்.
அடுத்து அந்த பேக்கெண்ட் குழுவிலிருக்கும் யார் யாருக்கு என்னென்ன வேலை என அவரவருக்கான பணிநிலைகளைச் சொன்னவன் “இதுல யாருக்கும் அப்ஜெக்சன் இருந்தா மீட்டிங்கோட முடிவுல கேளுங்க. இப்ப புராஜெக்டோட டைம்லைன் பத்தி பேசிடலாம். இந்தப் புராஜெக்டுக்கான டைம்லைன் எட்டு வாரங்கள் மட்டுமே! வீக்லி புராஜெக்ட் ரிவியூ பண்ணிடலாம்.” என்றான்.
இடையில் நர்மதாவின் கேள்வி!
“மைக்ரோசர்வீஸ் ஆர்க்கிடெக்சர் ஃபைனல் ஆகிடுச்சா கர்ணா?”
“யப்! விவேக் செக் பண்ணிட்டார். நாம முழுக்க முழுக்க AWS சர்வர்லெஸ் அப்ரோசலதான் பண்ணப்போறோம். நர்மதா, நீங்க செய்ய வேண்டிய முதல் வேலை ‘யூசர் ஆதண்டிகேசன் சர்வீஸ்’.”
“ஷ்யூர் கர்ணா! நான் டேட்டா மாடல் டிசைனிங்கை ஆரம்பிச்சிடுறேன்”
அடுத்தடுத்து டெவலப்பர் ரகு மற்றும் டெவொப்ஸ் பொறியாளனான அருணிடம் பேசி முடித்தவன், அந்தப் புராஜெக்டில் என்னென்ன சவால்கள் நேரலாம், ஒவ்வொரு வாரமும் அவர்கள் முடித்த வேலை பற்றிய ரிவியூ மீட்டிங், தினசரி மீட்டிங், ஒருவருக்கொருவர் எதன் வாயிலாகத் தொடர்புகொள்வது என அனைத்தையும் சொல்லி முடித்தான்.
“எனி ஒன் ஹேஸ் டவுட்ஸ் ஆர் சஜசன்ஸ்? ஃபீல் ஃப்ரீ டூ ஷேர் (யாருக்காவது சந்தேகங்கள், பரிந்துரைகள் இருக்குதா? இருந்தா தாராளமா பகிரலாம்)”
யாருக்கும் எந்தச் சந்தேகமுமில்லை என்றதும் “லெட்ஸ் கோ டீம்! மீட்டிங் ஓவர்” என்று அவன் சொன்னதும் அனைவரும் கலைந்தார்கள், நர்மதாவைத் தவிர.
அவள் இன்னும் மீட்டிங் அறையிலேயே இருப்பதைப் பார்த்தவன் “என்ன? நீங்க கிளம்பல?” என்று கேட்க
“இப்ப டீம் இல்ல கர்ணா. நீ வா போனு பேசலாம்” என்றாள் அவள் இலகுவாகச் சிரித்தபடி.
கர்ணன் மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவளைக் கூரிய விழிகளால் வெறித்தவன் “தேவையில்லாத பேச்சுல என் டைம் வேஸ்ட் ஆகுறதுல எனக்கு உடன்பாடு இல்ல நர்மதா. யூ மே கோ நவ்” என்றான் அதிகாரமாய்.
“பட் கர்ணா… என் புரபோசல்…” அவனது அதிகாரத்தில் அவளது குரல் தடுமாறியது.

“யுவர் புரபோசல் இஸ் அவுட் ஆப் கொஸ்டீன் நர்மதா. எனக்கு இதுல எல்லாம் சுத்தமா இண்ட்ரெஸ்ட் இல்ல. எதையும் ஒரு தடவைக்கு மேல சொல்ல எனக்குப் பிடிக்காது. ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட்”
நர்மதாவின் முகம் வாடும்போதே அடர்ந்த தாடியை நீவியபடி அவளைக் கடந்து போனான் கர்ணன்.
அவனும் அவர்களது டீமும் பணியாற்றும் கியூபிக்கிளை அடைந்தவனுக்கு சந்தோஷ் கேட்ட சந்தேகங்களை நிவர்த்தி செய்வதில் நேரம் போய்விட்டது.
சந்தோஷின் பயிற்சிக்காலம் இன்னும் மிச்சம் இருக்கிறது. இம்மாதிரி ஊழியர்களைச் சின்ன சின்ன வேலைக்கு டீமில் பயன்படுத்திக்கொள்வார்கள். கர்ணனைப் போல டி.எல் அமைந்துவிட்டால் எந்தத் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட வேலையைச் செய்கிறார்களோ அதைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
“ஆட்டோமேசன் ஸ்க்ரிப்ட் எல்லாம் டெவலப் பண்ணி பாத்தியா சந்தோஷ்? எந்த டவுட்டா இருந்தாலும் நீ அருண் கிட்ட தாராளமா கேக்கலாம். புராஜெக்ட்ல ஒர்க் பண்ணுறதோட உன் வேலை முடிஞ்சிடாது. நிறைய கத்துக்கணும். தொடர்ந்து கத்துக்குறவங்க, டெக்னாலஜிக்கு ஏத்த மாதிரி தன்னை அப்டேட் பண்ணிக்குறவங்களால மட்டும்தான் ஐ.டில சர்வைவ் ஆக முடியும்”
கர்ணன் சொன்ன அறிவுரையைத் தலையாட்டிக் கேட்டுக்கொண்டான் சந்தோஷ்.
சிறிது நேரத்தில் அங்கே வந்து சேர்ந்தான் துர்ஜோய் கோஷ். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவன். அவனும் கர்ணனும் ஒரே சமயத்தில் இந்நிறுவனத்தில் நுழைந்தவர்கள். இருவரது வளர்ச்சியும் சமச்சீராகப் போய்க்கொண்டிருக்கிறது. இருவரிடையே இருக்கும் நட்போ ஆண்டுக்கு ஆண்டு ஆழமாகிக்கொண்டிருந்தது.
“விக்ரம் இஸ் ஆஸ்கிங் ஃபார் யூ கர்ணா”
“ஃபார் வாட்?”
தெரியவில்லை என்பது போல தோள்களைக் குலுக்கியவன் “சீனியர் டெவலப்பர் கிட்ட கொஞ்சம் பேசணும்னு வந்தேன்” என்று நர்மதாவைத் தேடிப் போய்விட்டான்.
கர்ணனும் புராஜெக்ட் மேனேஜரான விக்ரமின் கேபினை நோக்கிச் சென்றான். செல்லும்போதே மனதுக்குள் கொஞ்சம் புகைச்சல் அவனுக்கு.
எல்லா துறைகளைப் போலவே தகவல் தொழில்நுட்பத் துறையிலும் அரசியல் உண்டு. அதுவும் கார்பரேட் அரசியல். அது ஒன்று போதுமே கர்ணனைப் புகைச்சலில் தள்ள.
“கம் இன் கர்ணா! டேக் யுவர் சீட்”
விக்ரம் காண்பித்த இருக்கையில் அமர்ந்தவனிடம் “காபி குடிச்சிட்டே பேசலமா?” என்று பேச்சை ஆரம்பித்தான் விக்ரம்.
அதுவே அபாய மணி போல ஒலித்தது கர்ணனின் செவிகளில்.
“ஷ்யூர்!
இருவரும் கேபினை விட்டு வெளியேறி அதே டவரில் இருக்கும் ஃபுட் கோர்ட்டை நோக்கி நடந்தார்கள்.
“ஃப்ரண்ட் எண்ட் டீம் லீட் துர்ஜோய் பத்தி என்ன நினைக்குற கர்ணா?”
கேட்டபடியே தனக்கும் கர்ணனுக்கும் காபி மேக்கரில் பேப்பர் கப்புகளை வைத்து காபியை நிரப்பிக்கொண்டான் விக்ரம்.
பொதுவாக இம்மாதிரி இலகுவாகப் பேச புராஜெக்ட் மேனேஜர் அழைத்தாலே அது தகவல்களைக் கறப்பதற்கான முயற்சி என்று இத்தனை ஆண்டுகளில் கர்ணனுக்கு நன்றாகவே புரிந்திருந்தது.
விக்ரம் இப்போது துர்ஜோய் பற்றி விசாரிப்பது கூட மேனேஜரிடம் தங்களைப் பற்றி போட்டு வைப்பதற்காகதான் என்று அவனுக்குத் தோன்றியது.
‘யாருக்குத் தெரியும்? இவன் தன்னைப் பற்றி கூட துர்ஜோயிடம் விசாரித்திருக்கலாம்’
கர்ணன் மனதுக்குள் நினைக்கும்போதே காபியை ஒரு மிடறு அருந்திவிட்டான் விக்ரம்.
“துர்ஜோய் எந்த ஒர்க் குடுத்தாலும் பெர்ஃபெக்டா பண்ணுவான் விக்ரம். இதுவரை அவன் கிட்ட ஒப்படைச்ச எந்தப் புராஜெக்டும் டைம்லைனைத் தாண்டுனதில்ல. என்னைக் கேட்டா தி பெஸ்ட்னு சொல்லுவேன் அவனை”
நல்லவிதமாகக் கர்ணன் சொன்னதும் கமுக்கமாகச் சிரித்தான் விக்ரம். அவன் எதிர்பார்த்தது போல கர்ணன் துர்ஜோயைக் குறை சொல்லியிருந்தான் என்றால் உண்மையாகவேச் சிரித்திருப்பான். அதுதான் நடக்கவில்லையே!
“ஆன்வல் அப்ரைசல் பத்தி உனக்குத் தெரிஞ்சிருக்கும் கர்ணா. நீயும் துர்ஜோயும் இப்ப ஒரே லெவல்ல இருக்குறிங்க. உங்கள்ல ஒருத்தருக்குத் தான் லெவல் அப்கான சான்ஸ் கிடைக்கும். புத்திசாலித்தனமா நடந்துக்க”
பணி உயர்வைச் சுட்டிக்காட்டி கர்ணனின் மனதைக் கலைக்க முயன்றான் விக்ரம். இதுவும் தகவல் தொழில்நுட்பத் துறையில் நடக்கும்.
கர்ணனுக்கு விக்ரம் யாரென்றும் தெரியும்! துர்ஜோய் யாரென்றும் தெரியும். எனவே விக்ரமிடம் நேரடியாகப் பதில் சொல்லாமல் உதடு பிரிக்காதச் சிரிப்பொன்றை உதிர்த்தான்.
‘கல்லுளிமங்கன்! வாயைத் திறக்குறானா பாரு’ கறுவிக்கொண்டான் விக்ரம்.
கர்ணன் காபியை அருந்தி முடித்தான்.
“எனக்குக் கொஞ்சம் ஒர்க் இருக்கு விக்ரம்” என்று விடைபெறவும் செய்தான்.
அவன் சென்றதும் ஏமாற்றமாக உணர்ந்தான் விக்ரம்.
கர்ணனைப் பற்றி துர்ஜோயிடமும், துர்ஜோய் பற்றி கர்ணனிடம் பேசி எதிர்மறையான விசயங்களைக் கறந்துவிட்டு இருவரையும் மேலாளரின் முன்னே நிறுத்தி, அவர்களிடம் ‘டீம் ஸ்ப்ரிட்’ இல்லை என்று சொல்லி தனக்கு வேண்டிய ஒருவனுக்குப் பணியுயர்வுக்கான பரிந்துரையைச் செய்யலாம் என்ற அவனது கனவு நிராசை ஆகிவிட்டதே!
தனது டெஸ்குக்கு வந்து அமர்ந்த கர்ணன் இன்னும் துர்ஜோய் நர்மதாவிடம் பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்துவிட்டுத் தன்னிடம் வருமாறு அழைத்தான்.
“என்னடா?” என்றவனிடம்
“விக்ரம் உன்னைப் பத்தி என் கிட்ட விசாரிச்சான்” என்றான். துர்ஜோய் சிரித்தான்.
“எதிர்பாத்ததுதான். அவனோட பாலிடிக்சாலதான் நம்ம கரியர் அட்வான்ஸ்மென்ட்ல ஒரு வருசம் தாமதம். இன்னும் என்ன எதிர்பாக்குறான் அவன்?” என்றான் துர்ஜோய்.

கர்ணன் பூடகமாய்ச் சிரிக்கவும் சலிப்பு வந்துவிட்டது அவனுக்கு.
“இந்தத் தடவையும் நாம லெவல் அப் ஆகக்கூடாதுனு நினைக்குறான், அதானே?. அவனுக்கு வேண்டியவங்களுக்கு அப்ரைசல் குடுக்க திட்டம் கூட போட்டிருப்பான். என்ன செய்யலாம் டியூட்?” என்றான் தொடர்ந்து சிறிது கவலையோடு;
“எப்பவும் போல கடமைய செய்வோம். பலன் அதுவா கிடைக்கும்”
கர்ணன் தோள்களைக் குலுக்கிச் சொல்லவும் துர்ஜோயின் கண்கள் சுருங்கின.
“உனக்கு என்னப்பா? அம்பாசமுத்திரத்துல சொத்துபத்து இருக்கு. கடல் மாதிரி வீடு இருக்கு. எனக்குத் தலை மேல கடன் தான் இருக்கு” என்ற துர்ஜோயின் தோளில் அடித்தான் கர்ணன்.
“நீ சொன்ன எல்லாமே என் தாத்தா, தாத்தாக்குத் தாத்தானு எங்க மூத்த தலைமுறை சம்பாதிச்சது. நான் சம்பாதிச்சதுனு பாத்தா என்னோட காரும், ஃப்ளாட்டும் மட்டும்தான். இதைத் தக்க வச்சிக்க நானும் இந்த சர்வைவல் ரேஸ்ல ஓடணும் துர்ஜோய்”
“எப்பிடியும் இன்னும் ஏழு வருசத்துக்கு நம்மளை அசைக்க முடியாது. அதுக்குள்ள இந்த பாலிடிக்ஸைக் கடந்து இதோட கைகள் தொடாத இடத்துக்குப் போயிடனும் கர்ணா”
துர்ஜோயின் கண்களில் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பும் கனவுகளும். கூடவே கொஞ்சம் ஏக்கமும். அவனது குடும்பத்தின் பொருளாதாரமே அவனை நம்பிதானே இருக்கிறது.
கர்ணன் மென்மையாகப் புன்னகைத்தான்.
“ஆன்வல் அப்ரைசலுக்கு இன்னும் நிறைய மாசம் இருக்கு. நீ கண்டிப்பா லெவல் அப் ஆகிடுவ ஜோய்” மெய்யான அன்போடு கர்ணன் சொல்ல துர்ஜோயின் கண்களில் நம்பிக்கை ஒளியின் பிரகாசம்.
தோழர்கள் இருவரும் நம்பிக்கையோடு பேசியபோதே துர்ஜோய் நர்மதாவைக் கண் காட்டினான்.
“உன் கிட்ட புரபோஸ் பண்ணுனாளாமே! நீ தயவு தாட்சணியமில்லாம ரிஜெக்ட் பண்ணிட்டனு என் கிட்ட வாய் விட்டு அழாதக் குறை”
கர்ணன் அசிரத்தையாய் உச்சு கொட்டினான்.
“நமக்குச் சிட்டிப்பொண்ணுங்க செட் ஆகாது ஜோய்”
துர்ஜோயின் கண்களில் பளபளப்பு.
“இன்னும் அந்த வில்லேஜ் பெல்லியை மறக்கலையா நீ?” கேலியாய் அவன் கேட்க கர்ணனின் கண்களில் மென்மை படர்ந்தது.
அவனது மனதிலோ ஓவியரின் தூரிகை வரைபடத்தாளில் பட்டதும் வரிவரியாய் விரியும் வண்ணங்களைப் போல ஈஸ்வரியின் நினைவு!
கர்ணனின் தமக்கை ஸ்வேதாவின் நண்பனான மகிழ்மாறனின் திருமணத்தில் மணப்பெண் மலர்விழியின் தோழியாக பட்டாம்பூச்சி போல அங்குமிங்கும் நடமாடிய ஈஸ்வரி பார்த்த நொடியிலேயே கர்ணனின் மனதுக்குள் குடியேறிவிட்டாள். அவளைப் பற்றி யோசித்தால் கர்ணனின் மனதுக்குச் சிறகு முளைத்துவிடும்.
முகம் கனிந்து ஆளே மாறியிருந்த கர்ணனை உலுக்கினான் துர்ஜோய்.
“அந்தப் பொண்ணு உன்னை ரிஜெக்ட் பண்ணிடுச்சுல்ல”
மனதில் முளைத்தச் சிறகைக் கத்தரிக்கோலாய் மாறி வெட்டி வீழ்த்தின துர்ஜோயின் வார்த்தைகள்.
ஆம்! ஈஸ்வரியை மணமுடிக்க விரும்பி ஸ்வேதாவை வைத்துத் திருமணப்பேச்சை எடுத்த கர்ணனுக்கு அவளது நிராகரிப்பே பதிலாகக் கிடைத்தது. அதெல்லாம் நடந்து முடிந்து வருடக்கணக்காகி விட்டது.
‘பணக்காரர்கள் சங்காத்தமே வேண்டாம் என்றாளாமே! நான் பணக்கார குடும்பத்தில் பிறந்தது என்னுடைய தவறா?’
வழக்கம் போல இப்போதும் மானசீகமாக நொந்துகொண்டான் கர்ணன்.
“பேசாம நர்மதாவோட புரபோசலை ஏத்துக்க கர்ணா. ஷீ லவ்ஸ் யூ அ லாட். உன் பேரைச் சொல்லுறப்பவே அவ கண்ணுல காதல் சொட்டுது”
“ஆனா அவளைப் பாத்தாலே என் கண்ணுல யாரோ கொள்ளிக்கட்டைய வச்ச மாதிரி எரியுது ஜோய்” என்றான் கர்ணன் எரிச்சலோடு.
துர்ஜோய் சிரித்தான்.
“சீக்கிரமே இதே கண்ணுல ஹார்ட்டின் வர வைக்குற மாதிரி ஒரு பொண்ணு உன் லைஃப்ல எண்ட்ரி குடுக்கும்”
“ஈஸ்வரிய தவிர மத்த பொண்ணுங்களுக்கு இங்க நோ எண்ட்ரி ஜோய்”
தனது இடப்பக்க மார்பைத் தொட்டுக் காட்டினான் கர்ணன்.
அன்றைய மதிய உணவு இடைவேளையில் அவனது மொபைல் சிணுங்கியது. அழைத்தவர் அவனது ஆச்சி மருதநாயகி.
அழைப்பை ஏற்றவன் “சொல்லு ஆச்சி! மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டுப் போயாச்சா? நம்ம வீட்டு வாயாடிய பிடிச்சிருக்கா அவினாஷுக்கு?” என்று விசாரித்தான்.
அன்று அவனது தங்கை ஆதிராவைப் பெண் பார்க்க விக்கிரமசிங்கபுரத்திலிருந்து வைத்தியநாதனின் குடும்பத்தார் வருவதாக முந்தைய இரவில் அன்னை எழிலரசியிடம் பேசியபோதே செய்தி அவனுக்குக் கடத்தப்பட்டிருந்தது.
“நம்ம ஆதிரைய பிடிக்காம போகுமா? எல்லாம் பேசி முடிச்சாச்சு. என்ன ஒன்னு, மாப்பிள்ளையோட அக்கானு ஒருத்தி வந்தா. அவ முகத்துல கடுகை அள்ளி போட்டா வெடிச்சிடும். அப்பிடி ஒரு விறைப்பு”
மருதநாயகி சொல்லவும் “அதெல்லாம் உன் பேத்தி கவனிச்சிப்பா” என்றான் கர்ணன்.
“சரிய்யா! ஆதிரைக்கு வரன் தகைஞ்சாச்சு. நீ எப்ப..”
“ஏய் கிழவி! ஆச்சினு மரியாதையா கூப்பிட்டவனைத் திட்ட வச்சிடாத. போனை வை”
“அட நல்ல குடும்பத்துப் பொண்ணா பாத்து…”
“பொண்ணைப் பாத்து உன் மகனுக்கு ரெண்டாங்கல்யாணம் பண்ணி வை. எனக்கு ஈஸ்வரிய தவிர வேற எந்தப் பொண்ணையும் கல்யாணம் பண்ணிக்கிறதுல இஷ்டமில்ல”
“ஏலேய்! அந்தப் பிள்ளை உன்னைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லனு சொல்லிடுச்சு”
“அப்ப காலம் முழுக்க நான் தனியாவே இருந்துடுவேன்”
“உன் வாய்ல வசம்பை வச்சு தேய்க்க”

“இப்ப வேண்டாம். சாப்பிட்டுட்டிருக்கேன். ஒரு பார்சல் கட்டி கொரியர்ல அனுப்பு. ஃப்ரீயா இருக்கப்ப நானே தேய்ச்சுக்குறேன்”
“இந்தப் பவுசுக்குக் குறைச்சலே இல்ல உனக்கு. க்கும்! பொலி காளை மாதிரி வளர்ந்தாச்சு. உன் வயசுக்காரன் எல்லாம் ஒரு புள்ளைக்கு அப்பன் ஆகிட்டானுவ”
“கிழவி ஓவரா பேசி ப்ரஷர் கூடி மயங்கிடாத. நான் வீக்கெண்ட் ஊருக்கு வருவேன். அப்ப கிலோ கணக்குல வசம்பு எடுத்து வை. இப்ப போனை வை”
அழைப்பைத் துண்டித்தவனின் மனதில் சின்னதாய் ஒரு இதம் பரவியிருந்தது.
கர்ணன் இயல்பிலேயே கொஞ்சம் முசுடு. தம்பி தம்பி என்று ஸ்வேதா கொடுத்த செல்லத்தால் பிடிவாதமும் அதிகம்.
அவன் அடிக்கடி மல்லுக்கு நிற்பது ஆதிராவிடம்தான். அடுத்த நபர் மருதநாயகி. பேரன் குணத்தில் தனது கணவரையே கொண்டு பிறந்ததில் கர்வம் இருந்தாலும் “அந்த மனுசனை மாதிரியே எடுத்ததுக்கு எல்லாம் நொரைநாட்டியம் பேசிட்டுத் திரியுறானே” என்று கவலையும் படுவார்.
அவன் அப்படித்தான்! பிடித்தமோ வெறுப்போ நெருக்கமோ விலகலோ அனைத்திலும் பிடிவாதமாய் இருப்பான்!
ஊரிலேயே இருந்து குடும்பத்தொழிலை பொறுப்பெற்று நடத்தப் பிடிக்கவில்லை என்பதில் ஆரம்பித்து இதோ இப்போது செய்யும்வேலையில் காட்டும் அதீதப் பிடித்தம் வரை அனைத்திலும் ஜெயித்தது அவனது பிடிவாதமே!
அந்தப் பிடிவாதம்தான் ஈஸ்வரியின் விவகாரத்திலும். அதே நேரம் வேண்டாம் என்றவள் பின்னே போகவும் விருப்பமில்லை. அவளை விடுத்து இன்னொருத்தியை நினைக்கவும் கசந்தது அவனுக்கு.
சொல்லப்போனால் ஈஸ்வரியைக் காட்டிலும் நர்மதா பேரழகி! ஆனாலும் அவளது காதலை ஏற்க அவன் மனம் ஒப்பவில்லை.
இத்தனைக்கும் அவன் ஈஸ்வரியைச் சந்தித்ததே ஒரு முறை தான். ஆம்! மகிழ்மாறன் – மலர்விழியின் திருமணத்துக்குப் பிறகு அவன் ஈஸ்வரியை நேரில் கூட பார்த்ததில்லை.
அவளுக்கு இப்போது திருமணம் செய்யும் எண்ணமில்லை என்று அவளது பெற்றோர் சொல்லிவிட்ட பிறகு நேரில் சென்று பார்ப்பது நாகரிகம் என்று அவனுக்குத் தோன்றவில்லை. ஆனால் அவனது மொபைலில் புகைப்படமாய் அவள் உறைந்துவிட்டாளே!
நகரத்து நாகரிக யுவதிகளைக் கண்டால் வரும் ஒதுக்கமும், ஈஸ்வரி மீது தோன்றிய விருப்பமும் இணைந்தது ஒரே புள்ளியில்தான்!
‘கிராமத்துப்பெண் என்றால் என்னையும் எனது விருப்பங்களையும் முன்னிலைப்படுத்துவாள். கெரியர், கனவு என்று சொல்லி தனது இல்லத்தரசி என்ற பொறுப்பைத் தட்டிக் கழிக்க மாட்டாள்’
தன்னை நேசிக்க, தனது வீட்டைக் கவனிக்க, தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை அரவணைக்க அவன் மனம் விரும்பியது என்னவோ அவளது அன்னை, பாட்டி போல வீடே உலகமென வாழும் பெண்களைத்தான்.
அவன் வீட்டிலேயே விதிவிலக்காய் ஆதிரா இருந்ததாலேயே அவனுக்கு இந்த விருப்பம் இன்னும் தீவிரமானது எனலாம்.
தந்தையிடமிருந்து தொழிலை வாங்கி நடத்துபவள் அடிக்கடி சொல்வது “கல்யாணம் பண்ணிட்டுப் போயிட்டா என் புருசன் வீட்டுல இதே சுதந்திரம் இருக்குமாண்ணா? ப்ச்! எனக்கு என்னமோ கல்யாணம்ங்கிற வார்த்தையே ஒட்டல. கடுப்பா இருக்கு” என்பதுதான்.
வாழ்க்கைத்துணையோடு பேரன்பும் அதீதமானக் காதலுமாய் வாழ விரும்புபவனுக்குத் தனக்கு வரப்போகும் மனைவியும் இதே போல வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏனோதானோவென்று குடும்ப வாழ்க்கையில் ஒட்டுதல் இல்லாமல் இருந்துவிடக்கூடாதே என்ற கவலையும் எச்சரிக்கையுணர்வும் காலப்போக்கில் அதீதமானது.
அவன் பணியாற்றிய சூழலும் அதற்கு ஒரு காரணம் எனலாம்.
மொத்தத்தில் கர்ணன் நமது சமுதாயத்தில் நாம் சந்திக்கும் அனைத்து ப்ரிவிலெஜ்களையும் அனுபவிக்கும் சராசரி ஆண். அவனது மனம் விரும்பிய குணாதிசயங்கள் நகரத்துப் பெண்களிடமும், வேலைக்கு முன்னுரிமை கொடுக்கும் பெண்களிடமும் இருக்காது என்று எண்ணும் வழக்கமான ஆண்!
இத்தகைய மனநிலையில் இருப்பவனை அவனது எதிர்பார்ப்புக்கு அப்படியே எதிர்மாறான ஒருத்தியோடு வாழ்க்கை இணைக்கப்போகிறதே! அதுதான் மாபெரும் வேடிக்கை!
அவனது எதிர்பார்ப்புகளையும் பிடிவாதத்தையும் அடித்து நொறுக்கும் வல்லமை படைத்தவள் திருச்செந்தூரில் இருக்கும் பிரபல பொறியியல் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூவில் முதல் சுற்றான எழுத்துத் தேர்வை வெற்றிகரமாக எழுதிவிட்டு அடுத்தச் சுற்றுக்காக ஆவலோடு காத்திருந்தாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

