“செக்யூர்டான ரிஸ்க் இல்லாத ஜாப், கம்ஃபர்டபிள் ஜோன்குள்ளவே நகருற வாழ்க்கை ஒரு ஆணுக்கு என்ன சுவாரசியத்தைக் குடுத்துட முடியும்? ஆனா நம்ம சொசைட்டியோட செம்மறியாட்டு மனப்பான்மை இந்த மாதிரி சுவாரசியமே இல்லாத இயந்திரத்தனமான வாழ்க்கைய தான் ஒரு ஆணுக்கு ரெகமண்ட் பண்ணும்… எனக்கு இந்த மாதிரி சஜஷன்ல விருப்பமே இருந்ததில்ல… பத்தோட பதினொன்னா இருக்குதை விட நான் இருக்குற இடத்துல நான் தான் பெஸ்ட்டா இருக்கணும்ங்கிற எண்ணம் ரொம்ப சின்ன வயசுலயே எனக்குள்ள ஊறிப்போன ஒன்னு… நான் பெஸ்டா வரணும்னா, அதுக்கு நான் போட்டி போட வேண்டியது பெஸ்டான ஆண்களோட தானே… அதுதான் எனக்குப் பெருமையும் கூட”
– ராகவர்தன்
“தேசிய ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்யும்படி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளேன்”
அரசியல்வாதிக்குரிய தொனியுடன் பேசிக்கொண்டிருந்தார் ஒருவர். அவரைச் சுற்றி எண்ணற்ற புகைப்படக்கருவிகளின் ஃப்ளாஷ்கள் மின்னின.
அந்தச் சளசளப்பைத் தாண்டி பரப்பரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது எழும்பூர் F2 காவல் நிலையம். ‘காவல் துணை ஆணையர் அலுவலகம் – எழும்பூர் சரகம்’ என்ற பெயர்ப்பலகையும் அதனுடன் இணைந்திருக்க பதவிக்குரிய காவல் துணை ஆணையரின் அலுவலக அறையில் அதீத பதற்றத்துடன் அமர்ந்திருந்தார் காவல் ஆய்வாளர்.
“சி.சி.டி.வி ஃபூட்டேஜ் எல்லாம் செக் பண்ணுனதுல அவங்க எல்லாருமே மர்டரான பொண்ணு கூட ரொம்ப நேரமா பேசிட்டிருந்தது தெரியுது சார்”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவரால் ‘சார்’ என்று விளிக்கப்பட்ட காவல் துணை ஆணையர் காக்கியின் மிடுக்கையும், விறைப்பையும் உடல்மொழியில் காட்டியபடி ‘டி. ராகவர்தன்’ என்ற ‘நேம் பேட்ஜை’ நெஞ்சில் தாங்கிய சீருடையுடன் அமர்ந்திருந்தா(ன்)ர்.
வயது முப்பதைத் தாண்டி இரு வருடங்கள் ஓடிவிட்டது. தோற்றத்தில் எந்தளவுக்குக் கம்பீரம் இருந்ததோ அதை விட அதிகமாக அலட்சியம் இருந்தது. அந்த அலட்சியத்தை அவனுடன் நீண்டநாட்கள் பயணித்தவர்கள் மட்டுமே உணரமுடியும் என்பது சிறப்பு.
‘இஞ்சினியரிங் படிச்சு சாப்ட்வேர் லைன்ல போ’
‘பேங்கிங் செக்டார் தான் இப்ப ஹைலி செக்யூர்டான ஃபீல்ட்… பேசாம பேங்க் எக்சாம் எழுதி உள்ள நுழைஞ்சிடு… க்ளார்க், மேனேஜர்னு படிப்படியா முன்னேறிடலாம்’
இத்தகைய வழக்கமான அறிவுரைகள் அவனுக்கும் வழங்கப்பட்டன. ஆனால் அவனுக்கு வழக்கமான ஆண்பிள்ளையாக ‘கம்ஃபர்டபிள் ஜோனுக்குள்’ வாழும் விருப்பமில்லை.
கல்லூரியில் அடியெடுத்து வைத்த போதே ‘இந்திய குடியியல் பணி’க்கான தேர்வுக்குத் தன்னைத் தயார் செய்ய ஆரம்பித்தான்.
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, பயிற்சிக்காலம் முடிந்து அவனது கனவுப்பணியை ‘ஐ.பி.எஸ்’ என்ற அடைமொழியோடு தொடர்ந்தான்.
முதலில் காவல்துறை என்றதும் பயந்த குடும்பத்தினர் கூட பின்னர் சமாதானமாகிப்போனார்கள்.
சினிமாக்களில் வரும் காவல்துறை கதாநாயகர்களைப் போல ‘நீதிடா நேர்மைடா நியாயம்டா’ என்று பக்கத்துக்குப் பக்கம் முழங்கும் நாடகத்தனம் எல்லாம் அவனிடம் கிடையாது.
‘கண்களையோ காதுகளையோ நம்பாதே! உன் மூளையை மட்டும் நம்பு. நீ எதை நம்புகிறாயோ அதற்கான ஆதாரங்களைச் சேகரி. நீ நம்புவது உண்மை என்று ஆதாரப்பூர்வமாக ருசுவாகும் முன்னர் எந்த அறிக்கையும் வாய் வார்த்தையாகக் கூட கொடுத்துவிடாதே!’
இது பயிற்சிக்காலத்தில் இந்தியாவின் தலைசிறந்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் அவனுக்கு வழங்கிய அறிவுரை. இன்றளவும் அதைக் கடைபிடித்து வருவதால் “ஏ.சி.பி ராகவர்தனா? கல்லுல கூட நார் உறிக்கலாம்… அந்தாளு வாய்ல இருந்து வார்த்தைய புடுங்குறது ரொம்ப கஷ்டம்” என்று காவல்துறை வட்டாரத்தில் அவனைப் பற்றி பேசிக்கொள்வது வாடிக்கை!
இப்போது அவன் விசாரித்துக் கொண்டிருக்கும் வழக்கு கொஞ்சம் தீவிரமானது. நிறைய உயர்மட்ட ஆட்கள், பண முதலைகள், தொழிலதிபர்கள் அதில் விசாரிக்கப்பட வேண்டியவர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
அந்த வழக்குக்காக சென்னை காவல்துறை ஆணையரின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு குழுவில் அவனும் ஒருவன்.
காவல் ஆய்வாளர் சொன்னதைக் கருத்தில் எடுத்துக்கொண்டவன் கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே வந்த கான்ஸ்டபிள் சொன்ன தகவலில் புருவம் சுழித்தான்.
பின்னர் “பத்து நிமிசம் வெயிட் பண்ணட்டும்… நான் ஸ்ரீதர் கிட்ட கேஸ் விசயமா பேசிட்டிருக்கேன்” என்று அலட்சியமாக மொழிய அவரும் வெளியேறினார்.
ஆனால் சொன்னவன் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் வழக்கு குறித்து எதுவும் பேசாமல் அவர் கொடுத்த பெண்ட்ரைவில் இருந்த வீடியோ காட்சியை மீண்டும் மீண்டும் கணினியில் ஓடவிட்டுப் பார்த்தான்.
அதில் கையில் மது குவளையோடு நவநாகரிக ஆடை அணிந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள் இளம்பெண் மமிதா குரியன். அந்தக் காட்சி முடிந்த பதினைந்தாவது நிமிடத்தில் அவள் இறந்தும் போயிருந்தாள். அவளது இறப்பு ‘கொலை’ என்ற சந்தேகம் காவல்துறைக்கு! அங்கிருந்து ஆரம்பித்த விசாரணை பத்து நாட்களாக ஒரே இடத்தில் நகராமல் வட்டமடிக்கிறது!
பதினெட்டு வயது இறப்பதற்குரிய வயது இல்லை தான்! ஆனால் ராகவர்தனுக்கு அவள்மீது பரிதாபம் வரவில்லை.
“பதினெட்டு வயசு ஆல்கஹால், ட்ரக் எடுத்துக்குறதுக்கான வயசும் இல்ல” அவனது அக்மார்க் அலட்சியத்தோடு முணுமுணுத்தான்.
பத்து நிமிடம் இவ்வாறு கழிந்ததும் “ஓ.கே ஸ்ரீதர்… நீங்க கிளம்புங்க… ஆர்.கே.பி பார்ட்டி செகரட்டரி கிளம்பிட்டாரானு பாத்துடுங்க… இந்தப் பொலிட்டீசியன்சும், ரிப்போர்ட்டர்சும் விசாரணை பண்ணுற மூடை ஸ்பாயில் பண்ணிவிடுறதுல எக்ஸ்பர்ட்” என்று சொல்ல காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் எழுந்து சல்யூட் அடித்துவிட்டு வெளியேறினார்.
“வெயிட் பண்ணுறாங்கல்ல, அவங்களை வரச் சொல்லுங்க”
கான்ஸ்டபிள் இவ்வளவு நேரம் காத்திருந்த நபரை உள்ளே செல்லுமாறு கூற அடுத்த நொடி ராகவர்தனின் அலுவலக அறைக்கதவு தட்டப்பட்டது.
“கமின்”
கதவு திறந்து உள்ளே வந்த நபரைப் பார்த்தவனின் விழிகளில் ஏளனம்!
“இன்னைக்குத் துணைக்கு யாரும் வரலனு நம்புறேன்”
அந்நபர் எதுவும் பேசாமல் இருக்கையில் அமரவும் அவனது விழிகளில் இருந்த ஏளனம் மாறியது.
“உங்களை நான் உக்காரச் சொன்னதா ஞாபகம் இல்ல மிஸ் அனுக்ரஹா”
அதிகாரத்துடன் ஒலித்த அக்குரலிலும், தலை முதல் பாதம் வரை ஸ்கேன் செய்த விழிகளின் தீர்க்கத்திலும் அடிவயிற்று சதை இழுத்துப் பிடிக்க எழுந்து நின்றாள் அனுக்ரஹா!
மனவுணர்வுகளை வெளியில் காட்டாமல் “விசாரணைக்கு வந்தவங்க உக்காரக் கூடாதுனு புதுசா எதுவும் ரூல் இருக்கா?” என்று கேட்கவும் செய்தாள்.
ராகவர்தனுக்கு அவள் பேசிய தொனியில் கிஞ்சித்தும் பிடித்தமில்லை என்பது அவனது முகம் மாறிய விதமே சொன்னது.
“ரூல்ல ஆயிரம் இருக்கும்… அதை பத்தி க்ரைம் சஸ்பெக்ட்ஸ் லிஸ்டுல இருக்குறவங்க கிட்ட நான் ஆலோசனை பண்ணுறதில்ல”
‘நீ விசாரணைக்கு மட்டும் வரவில்லை; நடந்த குற்றத்தில் பங்கிருக்கலாமென்ற சந்தேகப்பட்டியலில் இருப்பதால் இங்கே வரவழைக்கப்பட்டிருக்கிறாய்’
அவன் மறைமுகமாகச் சொன்ன செய்தியில் அனுக்ரஹாவின் முகம் சிவந்து போனது.
“உக்காருங்க”
ஏதோ போனால் போகிறது என்று அமர அனுமதித்தான் அவன்.
அனுக்ரஹாவும் அமர்ந்தாள். இல்லை என்றால் இன்னும் இரண்டு ஏளனக்குத்தல்கள் வரலாம்.
முடிந்தவரை நிமிர்வாக அமர்ந்தவள் “இங்க பாருங்க சார்… அன்னைக்கு க்ராடிசன் க்ரீன்ல நடந்த மர்டர்ல எனக்கோ எங்க கம்பெனிய சேர்ந்தவங்களுக்கோ எந்தச் சம்பந்தமும் இல்ல… மிஸ்டர் தாமஸ் குரியன் எங்களோட ஏஞ்சல் இன்வெஸ்டார்… அவரோட மகளை மர்டர் பண்ணுற அளவுக்கு எங்களுக்கு என்ன மோட்டிவ் இருக்கப் போகுது? நாங்க அன்னைக்கு அங்க போனது மமிதாவோட பர்த்டே பார்ட்டிய அட்டெண்ட் பண்ணுறதுக்காக மட்டும் தான்” என்று சொல்ல ராகவர்தனின் கண்களில் அவளது பேச்சை நம்பாத பாவனை!
அலட்சியமாக கணினியின் திரையை அவள் பக்கமாகத் திருப்பினான்.
அதில் ஓடிய வீடியோவைப் பார்த்தவளின் விழிகளில் கலக்கம்!
“ஆல்கஹால், ட்ரக் இந்த ரெண்டும் ஒரு மனுசனை எந்த க்ரைமும் செய்ய வைக்கும்… அன்னைக்கு நடந்த பர்த்டே பார்ட்டில நீங்க எல்லாரும் போதைல இருந்திருக்கிங்க”
“லேடீஸ் யாரும் குடிக்கல சார்”
“உங்க எல்லாருக்கும் எடுத்த டெஸ்ட்ல உங்க ப்ளட்ல ட்ரக் கலந்திருந்தது தெரிய வந்திருக்கு… பார்ட்டி ஹாலுக்கு வெளிய இருந்த சி.சி.டி.வில மமிதா கூட ஒட்டுமொத்த கும்பலும் இருந்திருக்கிங்க… பத்து நிமிசம் வீடியோ பதிவாகாம கட் ஆகிருக்கு… அதுக்கு அப்புறம் ரெக்கார்ட் ஆன வீடியோல மமிதா இறந்து கிடந்தது மட்டும் தான் ரெக்கார்ட் ஆகிருக்கு… நீங்க யாருமே அங்க இல்ல… இந்த பத்து நிமிச கேப்ல உங்கள்ல யாரோ ஒருத்தரோ அல்லது பார்ட்டிக்கு வந்திருந்த ஹை ப்ரொபைல் ஆளுங்கள்ல ஒருத்தரோ மமிதாவ கொலை பண்ணிருக்குறதுக்கான சான்ஸ் அதிகமா இருக்கு”
அனுக்ரஹாவுக்குத் தலை வலித்தது. இத்துணை அபாண்டமான பழி தன்மீதும் தனது தோழமைகள் மீதும் விழுவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவளது அடக்கப்பட்ட கோபத்தை முகம் பிரதிபலித்ததோ என்னவோ ராகவர்தன் அடுத்த அஸ்திரத்தை எய்தான்.
“என்னோட கொஸ்டீன் சிம்பிள்.. அவ்ளோ நேரம் மமிதா கூட இருந்த நீங்க எல்லாரும் கரெக்டா அவ மர்டர் ஆகுற சமயத்துல எங்க போனிங்க? எதுக்காக அவளைத் தனியா விட்டுட்டுப் போனிங்க? இந்தக் கேள்விக்கு மெல்டிங் பாட் கம்பெனியோட சி.ஈ.ஓல இருந்து யாருமே சரியான பதில் சொல்லல… ஏன்னா எல்லாரும் ட்ரக் எடுத்துக்கிட்டு போதைல இருந்திருக்கிங்க… அந்தப் போதைல தான் கொலையும் நடந்திருக்கணும்ங்கிறது எங்களோட கெஸ்”
“மறுபடி மறுபடி ட்ரக் எடுத்தோம்னு சொல்லாதிங்க சார்… நாங்க எல்லாரும் நல்ல ஃபேமிலிய சேர்ந்தவங்க… நீங்க சொன்ன அந்த குறிப்பிட்ட நேரத்துல நடந்த எதுவும் சத்தியமா எங்களுக்கு ஞாபகம் இல்ல… எங்களுக்கே தெரியாம யாரோ நாங்க குடிச்ச கூல் ட்ரிங்ஸ்ல ட்ரக் கலந்திருக்காங்க… நாங்க யாரும் ட்ரக் அடிக்ட் இல்ல, மர்டர் பண்ணுற அளவுக்குப் போறதுக்கு”
“எம்மா! நல்ல ஃபேமிலிய சேர்ந்தவங்க கொலை பண்ணமாட்டாங்கனு உனக்கு யார் சொன்னாங்க?”
இவ்வளவு நேரம் இருந்த மரியாதைப்பன்மை ஓடோடிப்போய்விட எரிச்சலுடன் வினவினான் ராகவர்தன்.
கூடவே “ஒன்னு இந்தக் கொலைல நீங்க யாரோ சம்பந்தப்பட்டிருக்கணும்… இல்ல கொலைக்குக் காரணமானவன் யாருனு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும்… உங்க வாய்ல இருந்து உண்மை வெளிவராத வரைக்கும் நான் என்ன மாதிரி என்கொயரிக்குக் கூப்பிட்டாலும் உங்க கம்பெனி மெம்பர்ஸ் வரணும்… நீங்க யாரும் விட்னஸ் இல்ல, சஸ்பெக்ட்ஸ்… ஜாமீன்ல வெளிவந்ததாலயோ, உங்க சி.ஈ.ஓவோட ஃபேமிலி பேக்ரவுண்டை வச்சு உங்க எல்லாரோட பேரையும் வெளிவராம பாத்துக்கிட்டதாலயோ எதுவும் மாறிடாது… என் விசாரணைக்கு ஒத்துழைக்கலனா மீடியாக்கு உங்களை பத்தி டீடெய்ல்ஸ் குடுக்க நான் தயங்கவே மாட்டேன்” என்றான் அவன் கடினக்குரலில்.
அனுக்ரஹாவுக்குத் திடீரென பயம் வந்தது!
‘மெல்டிங் பாட்’ அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான முதலீட்டை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நேரம் இது. இந்நேரத்தில் தங்களைப் பற்றிய தகவலை இவன் கசியவிட்டால் எந்த முதலீட்டாளரும் முதலீடு செய்ய வரமாட்டார்கள். இப்போதே தயங்குகிறார்கள்! கூடவே அங்கிருக்கும் அனைவருடைய தனிப்பட்ட வாழ்வும் இவன் ஒருவனது கோபத்தால் சீரழியும் வாய்ப்பு அதிகம்.
“சார் ப்ளீஸ்! நாங்க எல்லாரும் ரொம்ப கஷ்டப்பட்டு மெல்டிங் பாட் கம்பெனிக்குனு ஒரு நல்லப்பேரை உருவாக்கிருக்கோம்… இந்த மர்டர் பத்தி எந்த நியூஸ் வெளிய வந்தாலும் அது மெல்டிங் பாட்டோட சேர்த்து எங்க பெர்ஷனல் லைஃபையும் பாதிக்கும்… எங்க ஃபேமிலில கேக்குற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது… எங்களோட கெரியர், எங்களோட எதிர்காலம் எல்லாமே கேள்விக்குறி ஆகிடும்”
ராகவர்தன் அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கினான்.
“அதை பத்தி எனக்கு என்ன கவலை? ஃபேமிலி, கெரியர், ஃப்யூச்சரை நினைச்சு இவ்ளோ பயப்படுறவங்க ட்ரக் எடுத்திருக்கக் கூடாது… போதையில கொலை பண்ணிருக்கக்கூடாது”
“நாங்க யாரும் கொலை பண்ணல சார்”
“அப்ப எதுக்காக என்கொயரினு வந்தா இவ்ளோ டென்சன் ஆகுறிங்க? ஏன் நடந்த விசயத்தை மறைக்குறிங்க? ஓ.கே! நான் கேக்கப்போற கேள்விகளுக்கு ஒளிவு மறைவில்லாத பதில் வேணும்”
வேறு வழியில்லாமல் சரியெனத் தலையாட்டினாள் அனுக்ரஹா.
“அன்னைக்குப் பார்ட்டிக்கு வந்த வி.ஐ.பீஸ், ஹை புரொபைல் ஆளுங்க யாரெல்லாம்?”
இந்த இடத்தில் தயங்கினாள் அவள். வந்தவர்களில் சிலர் ‘மெல்டிங் பாட்டில்’ முதலீடு செய்ய ஆர்வமாக இருந்தவர்கள் ஆயிற்றே! அவர்களைப் பற்றி விசாரணையில் சொன்னால் நிறுவனம் பாதிக்கப்படுமோ என்ற பயம்!
சொல்லப்போனால் ஒட்டுமொத்த ‘மெல்டிங் பாட்’ நிறுவனமும் பயந்து விசாரணைக்கு ஒத்துழைக்க தயங்கியது இதனால் தான்!
ஸ்டார்ட்-அப்களுக்கு முதலீடு கிடைப்பது குதிரை கொம்பு! கிடைக்கிற முதலீட்டுக்கு ஆப்பு வைத்துக்கொள்ள அவர்கள் பத்து பேரும் விரும்பவில்லை.
ஆனால் இப்போது வேறு வழியில்லை. அனுக்ரஹா அன்றைய பிறந்தநாள் பார்ட்டிக்கு வருகை தந்தவர்களின் பெயரைச் சொல்ல ஆரம்பித்தாள்.
விசாரணை முழுவதும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டது. இன்னும் சில கேள்விகளுக்குத் தயக்கத்தை உடைத்துப் பதில் சொன்னாள்.
அவளது பதிலில் ராகவர்தன் முழுவதுமாகத் திருப்தியடைந்தது போல தெரியவில்லை.
“நீங்க சொன்ன பதிலை நான் அப்பிடியே நம்பிட மாட்டேன்… ஹோட்டல் ஸ்டாப்ஸ் கிட்டவும் என்கொயரி நடந்துட்டிருக்கு… இதுல ஒரு பதில் பொய்யா இருந்தாலும் விளைவுகளைப் பத்தி நான் யோசிக்கமாட்டேன்”
அனுக்ரஹாவுக்குத் தலை வலிக்க ஆரம்பித்தது. வெளிக்காட்டாமல் அமைதி காத்தாள்.
அடுத்தும் சில கேள்விகள் வந்தன. பதில் சொன்னாள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீண்ட விசாரணையை முடித்துக்கொள்ளும் எண்ணம் வந்ததும் ராகவர்தனிடம் கோரிக்கை ஒன்று விடுத்தாள் அவள்.
“நீங்க முகுந்த் அண்ணாவ என்கொயரிக்குக் கூப்பிடுறிங்கனா முன்கூட்டியே தகவல் குடுத்தா நல்லா இருக்கும்… லாஸ்ட் டைம் திடீர்னு என்கொயரிக்குக் கூப்பிட்டதால ஒரு இன்வெஸ்டாரை மீட் பண்ண முடியாம போயிடுச்சு… சோ…”
“இது ஒன்னும் உங்க முகுந்த் அண்ணாவோட மாமியார் வீட்டு விருந்து அழைப்பு இல்ல… ‘நாளைக்கு வர உங்களுக்கு வசதிப்படுமா மாப்பிள்ளை?’னு கேக்க நானும் அவரோட மாமனார் இல்ல… ஹீ இஸ் அ சஸ்பெக்ட் இன் திஸ் மர்டர் கேஸ்… நான் சொல்லுறப்ப அவர் விசாரணைக்கு வந்தாகணும்… ஒரு பொண்ணோட உயிர் போயிருக்கு… அதைவிட உங்களுக்கு இன்வெஸ்டார் முக்கியமா போயிட்டாங்களா? ஹான்! உன் முகுந்த் அண்ணாவோட ஃபேமிலி செல்வாக்கு எல்லாம் உங்க பேரை வெளிய தெரியாம செய்யுற வரைக்கும் தான் செல்லுபடி ஆகும்… என் விசாரணைக்குள்ள வந்துட்டா யாரா இருந்தாலும் ஒன்னு தான்… நீங்க யாரும் அக்யூஸ்ட் இல்லனு ப்ரூவ் ஆகுற வரைக்கும் இதே மரியாதை தான் உங்களுக்குக் கிடைக்கும்”
முகத்திலடித்தாற்போல சொன்னவனிடம் என்ன பேசுவது?
‘நான் காவலதிகாரி நீ சந்தேகப்பட்டியலில் இருப்பவள்; உன்னை நான் இப்படி தான் நடத்துவேன்’ எனத் தெளிவாக ஒவ்வொரு முறையும் புரியவைத்துவிடுகிறான்.
அனுக்ரஹாவுக்கு மட்டுமில்லை, ஒட்டுமொத்த ‘மெல்டிங் பாட்டுக்கும்’ ராகவர்தனை நினைத்து பயம் வருவதில் ஆச்சரியம் இல்லை தானே!
விசாரணை முடிந்ததெனச் சொல்லி அனுக்ரஹாவைச் செல்லுமாறு பணித்தான். அவளும் கதவு வரை போய்விட்டாள். திடுமென விரல் சொடுக்கும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தாள்.
“நீங்க எல்லாரும் பார்ட்டில ட்ரக் எடுத்ததால இன்னொரு கோணத்துல எனக்குச் சந்தேகம் வந்திருக்கு… என் சந்தேகத்தை நிவர்த்தி பண்ண எப்ப வேணும்னாலும் நான் மெல்டிங் பாட் ஆபிசுக்கு வருவேன்”
அனுக்ரஹா அதிர்ந்தே போனாள். அவர்களுடைய அலுவலகத்திற்கு இவன் விசாரணை என்ற பெயரில் வந்து நின்றான் என்றால் ஒட்டுமொத்த வேலையும் ஸ்தம்பித்துப் போகும்.
“அதுக்கு என்ன அவசியம்?” தனது அதிர்ச்சியை மறைத்துக் கேட்டாள்.
“நீங்க ‘ரெடி டூ ஈட் புட்’ விக்குறதா சொல்லிக்கிட்டு ட்ரக் வித்திங்கனா, அதை செக் பண்ண உங்க ஆபிசுக்குத் தானே வரணும்”
இலகுவாகச் சொல்லிவிட்டு அவன் புருவங்களை உயர்த்தவும் அனுக்ரஹாவுக்கு உடலில் தீப்பிடிக்காதக் குறை!
பாவி! கிராதகன்! இன்னும் என்னவெல்லாம் பழி போடுவானோ? மனம் பதபதைத்தது.
அவளது முகமாற்றம், பதற்றம், கோபத்தில் விடைத்த நாசியின் சிவப்பு என எதுவும் ராகவர்தனின் விழிகளுக்குத் தப்பவில்லை.
“யூ மே கோ நவ்… ஆல்கஹால் அண்ட் ட்ரக் இஸ் இன்ஜூரியஸ் டு மைண்ட்னு நான் சொன்னதா உன் டீமுக்குச் சொல்லிடு”
கை விரல்களை மடக்கி துப்பட்டாவின் நுனியைத் திருகியபடி வெளியேறியவளை இளக்கமற்ற ஏளனத்தோடு பார்த்தவன் அவள் சென்றதும் ஒரு கோப்பினை எடுத்து வாசித்தான்.
அது மமிதா குரியனின் பிரேதப் பரிசோதனை பற்றிய அறிக்கை அடங்கிய கோப்பு.
அவளது இறப்புக்குக் காரணம் அளவுக்கு அதிகமான போதைமருந்து உபயோகம். அதையும் அவளாக எடுத்துக்கொள்ளவில்லை. யாரோ அவளை வற்புறுத்தி கொடுத்திருக்கிறார்கள் என்றது அந்த அறிக்கை!
ராகவர்தனின் புருவங்கள் முடிச்சிட்டன. அனுக்ரஹா விசாரணையின்போது வெளியிட்ட நபர்களின் பெயர்களை அசை போட்டபடியே எழுந்தவன் அடுத்த சில நொடிகளில் காவல் வாகனத்தில் ஹோட்டல் க்ராடிசன் க்ரீனை நோக்கி சென்று கொண்டிருந்தான், அவள் சொன்ன தகவல்களில் எவ்வளவு சதவிகிதம் உண்மை என்பதை உறுதி செய்வதற்கு! அவனால் மனவுளைச்சலுக்கு ஆளான அனுக்ரஹாவோ மதிய நேரத்தில் மண்டையைப் பிளக்கும் வெயிலில் வெஸ்பாவை ஓட்டிக்கொண்டு அவனுக்குச் சாபம் விட்டபடி ‘மெல்டிங் பாட்’ நிறுவனத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


