“யாராவது என் கிட்ட உன்னோட ஃபேவரைட் ஹாபி என்னனு கேட்டா ‘குக்கிங்’னு யோசிக்காம சொல்லுவேன்… ஐயோ இன்னமும் பொண்ணுங்க அடுப்படியில சிக்கித் தவிக்கிறிங்களானு யாரும் உணர்ச்சிவசப்பட்டுப் பொங்கிடாதிங்க… எனக்குப் பிடிச்சது, நான் படிச்சது, இப்ப ஒர்க் பண்ணுறது எல்லாமே குக்கிங் ரிளேட்டட் செக்டார் தான்… அதனால ரசிச்சு ருசிச்சு சமைக்க பிடிக்கும்… அதனாலயே என்னவோ குக்கிங்கை ஒரு புரபசனா மதிக்காதவங்க மேல எனக்கும் மரியாதை வர்றதில்ல”
-அனுராகா
“ஷ்ஷ்ஷ்…”
செவ்வக வடிவத்திலிருந்த செராமிக் பேனில் முட்டை கலவையை ஊற்றியதும் பேனிலிருந்த எண்ணெய் ரீங்காரம் பாடியது.
பேன் சூட்டில் முட்டை வெந்து கொண்டிருக்க சரியான பதம் வந்ததும் ஸ்பேசுலாவால் அதை மடித்து மீண்டும் முட்டைக்கலவையால் அதை நிரப்பியது ‘ரோஸ் கோல்டில்’ கருப்பு கண் வடிவத்தைச் சுற்றிலும் பொடி பொடி வைரங்கள்’ டாலடித்த ‘ஈவில் ஐ’ ப்ரேஸ்லெட்டுடன் கூடிய தளிர்க்கரம் ஒன்று!
ஸ்டவ்வின் இன்னொரு பகுதியில் சாண்ட்விச்சுக்கான ரொட்டியை வெண்ணெய் தடவி வாட்டியது அதன் ஜோடிக்கரம்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
‘ரீல்ஸ்களிலும்’, கொரியன் தொடர்களும் அடிக்கடி பார்த்து பழக்கப்பட்ட ‘எக்ரோலை’ தயாரித்து முடித்து சாண்ட்விச்சுக்காகக் காய்கறிகளை நறுக்குகையில் ‘ஈவில் ஐ’ ப்ரேஸ்லெட் அணிந்த கரத்துக்குச் சொந்தக்காரியின் செவிகளைக் கொடூரமாகப் பதம் பார்த்தது ‘டெட்பூல் அண்ட் வுல்வரின்’ படத்தின் ‘பை பை பை’ என்ற பாடல்.
காது வலியெடுக்க “ஏய் பிரபா! ஏன் இவ்ளோ வால்யூம்? போன வாரமே ஜி5ல இருக்குற ஆன்ட்டி அபார்ட்மெண்ட் செகரட்டரி கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிருக்காங்க… வால்யூமைக் குறைச்சுக் கேட்டா ஆகாதா?” என்று கத்தினாள் அந்த ‘ஈவில் ஐ’ ப்ரேஸ்லெட்டின் சொந்தக்காரியான அனுக்ரஹா.
வயது இருபத்தாறு. உயரம் ஐந்தடி இரண்டங்குலம். ‘ஸ்கின் கேரும்’ ‘மேக்கப்பும்’ செய்யாமல் இருப்பதுதான் இயற்கையான அழகு என்ற பொய்யான மாயையை மதிக்காத இந்தக் காலத்துப் பெண்! அதற்கு அடையாளமாக முகம் மாய்சுரைசரிலும், உதடுகள் லிப் பாமிலும் குளித்திருந்தன. க்ளட்சில் அடக்கியது போக ஆங்காங்கே குழல் கற்றைகள் பிரிந்து ஆடுவது கூட அழகாகத் தான் இருந்தது அவளுக்கு
ஆலிவ் பச்சையில் காட்டன் குர்தாவும், வெண்ணிற பளாசோவும் அணிந்து ஸ்பேசுலாவோடு கத்தியவளுக்கு அன்று காலை விடியவே கூடாது என்ற தனது வேண்டுதல் பலிக்காத கோபம்.
விடிந்தால் நேற்றிரவு நடந்த சம்பவத்தின் தொடர்ச்சியைத் தேடி அவள் ஓடவேண்டும். ஓடப்போகிற இடமோ அவளுக்குக் கிஞ்சித்தும் பிடிக்காத இடம்.
நினைத்தாலே எரிச்சல்!
“இந்த அப்பார்ட்மெண்ட்ல வாடகைக்குக் குடியிருந்தா பாட்டு போட்டு டான்ஸ் கூட ஆடக்கூடாதா? இது என்ன நாட்டியத்தாரகை பிரபாவதிக்கு வந்த சோதனை?”
சரோஜா தேவி பாணியில் கேட்டுக்கொண்டு வந்து நின்ற பிரபாவதியைக் கண்டதும் முறைப்பில் காட்டம் கூடியது அனுக்ரஹாவுக்கு.
“நானே அங்க போகணும்ங்கிற டென்சன்ல இருக்குறேன்… உனக்கு என்ன கவலை? அதான் இவ்ளோ ஜாலியா பாட்டு போட்டு ஆடிட்டிருக்க”
சிடுசிடுத்தவளுக்கு வயிற்றுக்குள் சதை இழுத்துப் பிடிப்பது போன்ற உணர்வு! ஆனால் அவளெதிரெ நின்ற பிரபாவதியோ அசட்டையாகத் தோளைக் குலுக்கினாள்.
“நீ ரொம்ப யோசிக்கிற ஆத்தா… ரிலாக்ஸ்… நான் உன் கூட வர்றேன்”
“மண்ணாங்கட்டி”
பற்களை நறநறத்தவள் “ப்ரேக்ஃபாஸ்டுக்குச் சாண்ட்விச்சும், எக்ரோலும் பண்ணிட்டேன்… நான் குளிச்சிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தனது அறைக்கு வந்தாள்.
இரண்டு படுக்கையறை, சமையலறை, ஹால் கொண்ட ஃப்ளாட் அது. வாடகையை இருவரும் பகிர்ந்துகொள்கிறார்கள்.
அன்று அணிய வேண்டிய உடையை எடுத்துப் படுக்கை மீது வைத்தவள் டவலை எடுத்துக்கொண்டு குளியலறை வாயில் வரை போய்விட்டாள்.
பின்னர் ஏதோ தலைக்குள் இடிக்கவும் சட்டெனத் திரும்பிப் பார்த்தாள்.
ஆப்பிள் சிவப்பில் கோட்டா டோரியா காட்டன் ஹேண்ட் ப்ளாக் சேலை, அதற்குப் பொருத்தமாக ஹாஃப் ஒயிட் நிறத்தில் அதே ஹேண்ட் ப்ளாக் ப்ரிண்ட் போடப்பட்ட மல் காட்டன் ப்ளவுஸ் – அணிந்தால் பாந்தமாக இருக்கும். அவளை முதிர்ச்சியாகவும் காட்டும்.
ஆனால் ஏனோ இப்போது அணியத் தோன்றவில்லை.
ஓடோடிப் போய் எடுத்த இடத்தில் வைத்துவிட்டு ஆகாயநீலத்தில் முழங்கை அளவுக்குக் கையுள்ள ‘மல்டி ஃப்ளாரல் குர்தி’, கரண்டை கால் அளவுள்ள பேரல்லல் பேண்ட், மெல்லிய ஷிபானில் வெள்ளை துப்பட்டா என மொத்தமாக எடுத்தவள் “இது போதும்” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.
மடமடவெனக் குளித்து குர்தி, பேண்டை அணிந்து கூந்தலை உலர்த்தியவள் அதை கச்சிதமாகச் சீவி மிதமான ஒப்பனையோடு சாப்பிட வந்தாள்.
அதற்குள் பிரபாவதி சாப்பிட ஆரம்பித்திருந்தாள்.
சாண்ட்விச்சையும் எக்ரோலையும் ஒரு தட்டில் வைத்து அனுக்ரஹாவுக்கு நீட்டியது “இன்னைக்கு ஷேரி ஃப்ரைடே… ஏன் குர்தி பேண்ட்ல இருக்க?” என்று விசாரணையை ஆரம்பிக்கவும் அனுக்ரஹா தனக்குள் இருந்த தடுமாற்றத்தை மறைத்துக்கொண்டு தட்டை வாங்கினாள்.
“நான் கட்டணும்னு நினைச்ச ஷேரியோட ப்ளவுஸ் கொஞ்சம் டைட்டா இருக்கு”
சின்னப்பொய்! அது போதும் பிரபாவதியைச் சமாதானம் செய்ய. அப்பாவிப்பெண்ணும் நம்பிவிட தோழிகள் இருவரும் அமைதியாய்ச் சாப்பிட ஆரம்பித்தார்கள்.
“இன்னைக்கு மீட்டிங்கில டிஸ்கஸ் பண்ண வேண்டிய டாபிக் பத்தி நம்ம எடுத்த ரிப்போர்ட் அண்ணாக்குப் பிடிக்குமா?”
பிரபாவதி சந்தேகமாகக் கேட்டாள்.
“பிடிக்காம போக ஏதாச்சும் காரணமா இருக்குதா?”
“அப்பிடி இல்ல… பட் நம்ம சவுத் இந்தியாவ மட்டும் குறி வச்சு போட்ட ப்ளான் இது… அதனால அண்ணா கொஞ்சம் தயங்குவாரோனு டவுட்”
அனுக்ரஹா சாப்பிட்டு முடித்தே விட்டாள்.
“எந்தக் காலத்துல இருக்க நீ? இன்னமுமா நார்த் சவுத்னு யோசிக்கிற? போடி”
கிண்டலாகச் சொன்னவள் சாப்பிட்ட தட்டை அலம்பி வைத்தாள்.
அடுத்த ஐந்தாவது நிமிடம் அவளும் பிரபாவதியும் மஞ்சள் வண்ண வெஸ்பாவில் ‘ஒலிம்பியா க்ராண்டே ரெசிடென்சியைத்’ தாண்டியிருந்தார்கள்.
அவர்கள் இருவரும் போய்ச் சென்று நின்ற இடம் பல்லாவரத்திலுள்ள டையாக்ஸ் பிசினஸ் பார்க்கின் தரிப்பிடம். மாபெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் நிறுவனங்களின் அலுவலகங்கள் இயங்கும் தொழில் பூங்கா அது.
அதில் தான் அவர்கள் பணியாற்றும் ‘மெல்டிங் பாட் ப்ரைவேட் லிமிட்டட்’ நிறுவனத்தின் அலுவலகம் இருந்தது. தென்னிந்தியாவின் வளர்ந்து வரும் ‘ரெடி டூ ஈட் ஃபுட்’ தயாரிக்கும் நிறுவனம் அவர்களுடையது.
அதில் ‘புராடக்ட் மேனேஜராகப்’ பணியாற்றுகிறாள் அனுக்ரஹா. பிரபாவதி ‘அசிஸ்டெண்ட் புராடக்ட் மேனேஜர்’. இருவரும் ஒரே டீம்.
வெள்ளிகிழமை என்றால் அவர்களின் நிறுவனத்தில் மீட்டிங் என்பது எழுதப்படாத விதி. அந்த மீட்டிங்கில் ஏற்கனவே சந்தைப்படுத்திய பொருட்களின் விற்பனை எந்தளவில் உள்ளது, அதற்காக மேற்கொண்ட டிஜிட்டல் மார்க்கெட்டிங் உத்தியால் புதிதாக வாடிக்கை மற்றும் விற்பனை நடைபெற்றதா, புதிய பொருட்களின் விற்பனையைக் கூட்ட இன்னும் என்னென்ன சந்தைப்படுத்துதல் முறைகளைக் கையாலாம் போன்றவை விவாதிக்கப்படும்.
அந்த வாரம் முழுவதும் நடந்த வேலைகளைப் பற்றிய அறிக்கைகள் வாசிக்கப்படும். மிச்சமுள்ள வேலைகளுக்கான காரணங்கள் அலசப்படும்.
பரபரப்போடு மின்தூக்கியின் உதவியால் மூன்றாம் தளத்தில் இறங்கி ‘மெல்டிங் பாட் ப்ரைவேட் லிமிட்டட்’ என்ற பெயர்ப்பலகையோடு வரவேற்ற கார்பரேட் அலுவலகத்துக்குள் நுழைந்தார்கள்.
தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் ‘ஸ்டார்ட்-அப்களில்’ மெல்டிங் பாட்டும் ஒன்று!
முதலில் அவர்கள் பார்வையில் தட்டுப்பட்டவள் ‘ஹெட் ஆப் ப்ராண்ட் அண்ட் மார்க்கெட்டிங்’ மேலாளரான ரீவா ஜோன்ஸ் கல்லிங்கல்! செட்டிநாடு காட்டன் புடவையில் கண்ணைப் பறித்த திருச்சூர் அழகியின் கண்களில் அனுக்ரஹாவின் உடையைச் சுட்டிக்காட்டி ‘என்ன இது’ எனக் கண்டிப்புடன் கூடிய கேள்வி!
“சாரி ரீவா! ப்ளவுஸ் ஃபிட் ஆகல”
அனுக்ரஹா உதட்டைப் பிதுக்கிச் சொன்னபடி அவளுடைய கேபின் நோக்கி நடக்க “இதுக்குத் தான் டெய்லர் அக்காவ ஃபாலோ பண்ணி ப்ளவுஸ் ஃபிட் பாக்கணும்ங்கிறது” என்று தூரத்திலிருந்து குரல் கொடுத்தான் சோசியல் மீடியா மேனேஜரான ஷாம் சந்தோஷ்.
சிரிக்கத் தோன்றினாலும் போலிக்கோபத்தோடு திரும்பியவள் அனுக்ரஹா இல்லை, பிரபாவதி.
“சீ! நீயும் எல்லா பசங்க மாதிரி தானே? காம காட்டேரி”
கேபின் கதவு திறந்ததும் அவள் சென்றுவிட ஷாமின் கண்களில் கலவரம்.
“காம காட்டேரினு சொல்லுற அளவுக்கு நான் என்னடா செஞ்சுட்டேன்?” எனத் தனது குழுவில் இருக்கும் இன்னொரு ஜீவனான வித்யூத்திடம் அவன் சொல்லி மாய்ந்தபோதே
கேபினுக்குள் வந்த பிரபாவதியிடம் “ஏன்டி அவனை இப்பிடி படுத்துற? பாவம்! இப்ப புலம்பப் போறான் பாரு… இன்னைக்கு அவன் ஷூட் பண்ணப்போற குக்கிங் ரீல்ஸ் எல்லாமே அவனை மாதிரியே அழுது வடியப்போகுது” என்று கிண்டலாகச் சொன்னபடி மடிக்கணினியை ஆன் செய்தாள் அனுக்ரஹா.
அதே கேபினுக்குள் இருக்கும் இன்னொரு மேஜையில் அமர்ந்த பிரபாவதியோ உதட்டைச் சுழித்து அழகு காட்டினாள்.
“என்னை லவ் பண்ணுறான்… ஆனா இன்ஸ்டால இன்னொரு பொண்ணு ப்ளவுஸ் ஃபிட் பண்ணுற வீடியோவ ரசிச்சுப் பாக்குறான்… அப்ப என் மேல அவனுக்கு லவ் இல்லனு தானே அர்த்தம்?”
பட்டெனக் கரம் குவித்தாள் அனுக்ரஹா.
“உங்க பஞ்சாயத்துக்கு நான் வரவேல்ல… இன்னும் கொஞ்சநேரத்துல அவனே முந்திரி பக்கோடா செஞ்சு டேஸ்ட் பண்ணு சுஜ்ஜூனு கொண்டு வந்து நீட்டுவான்… நீ சிரிச்சுக்கிட்டே வாங்கி சாப்பிடுவ… இந்தச் சின்ன கேப்ல ‘கண்ணீர்க்கதைய’ ஓட்டணுமா?”
கேபின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. திரும்பினார்கள் இருவரும்.
க்ராஃபிக் டிசைனிங் பிரிவைச் சேர்ந்த வேதிகா வந்திருந்தாள்.
அவளும் புடவையில் பளபளத்தாள்.
“வாட் இஸ் திஸ் பேப்?” என்று அனுக்ரஹாவின் குர்தியைக் காட்டியபடி வந்தவள் தனது மடிக்கணினியை அவளது மேஜை மீது வைத்தாள்.
“இதுதான் நம்ம ரிலீஸ் பண்ணப்போற சௌத் இந்தியன் லஞ்ச் மீல்ஸ் செட் புராடக்டோட பாக்ஸ்ல வரப்போற டிசைன்… ஏதாச்சும் ஆட் பண்ணனுமா? செக் பண்ணி சொல்லு”
அனுக்ரஹா அதைச் சரி பார்த்துவிட்டுச் சேர்க்க வேண்டிய சில பாயிண்ட்களைச் சொல்லவும் அதைக் குறித்துக்கொண்டாள்.
முடித்ததும் “அநேகமா இன்னைக்கு ஃப்ரைடே மீட் இருக்காதுனு தோணுது” என்று தயக்கத்தோடு கூறிய வேதிகாவை ஏன் என்பது போல பார்த்தாள் அவள்.
“இன்னைக்குத் தேதி என்னனு மறந்துட்டியா?”
‘மறக்கக்கூடிய விசயமா அது?’ விடியவே கூடாதென அதற்காக வேண்டியவள் ஆயிற்றே! அனுக்ரஹா கண்களை இறுக மூடித் திறந்தவள் மறுப்பாய்த் தலையசைத்தாள்.
“நோ வே! அதுக்கும் மீட்டிங்குக்கும் என்ன சம்பந்தம்? அண்ணா எப்பவும் பிசினஸையும் பெர்சனலையும் போட்டுக் குழப்பிக்க மாட்டார்”
“பட் இது நம்ம இன்வெஸ்டார் தாமஸ் குரியன் சம்பந்தப்பட்டதாச்சே? உஃப்… இப்பலாம் எனக்கு அதை நினைச்சா நைட் தூக்கம் கூட வர்றதில்ல பேப்… எல்லாத்துக்கும் காரணம் அந்தக் கடன்காரன் தான்”
கவலையோடு சொல்லிவிட்டு அங்கிருந்து போய்விட்டாள் வேதிகா.
அவளைப் போலவே தான் அனுக்ரஹாவின் மனமும் நொடித்துக்கொண்டது.
எல்லாம் அரை நொடிகள் மட்டுமே!
‘டொக்டொக்கென’ கேபின் கதவு தட்டப்பட்டு ரவிகிஷன் உள்ளே நுழைந்ததும் “அண்ணா வந்துட்டாரா?” என்று கேட்டவள் அவன் ஆமென்றதோடு மீட்டிங் ஆரம்பிக்கவிருப்பதைச் சொன்னதும் பரபரப்புடன் மடிக்கணினியோடு எழுந்துகொண்டாள்.
ரவிகிஷன் ‘லாஜிஸ்டிக் அண்ட் டிஸ்ட்ரிபியூசன்’ பிரிவின் மேலாளர்.
அவர்கள் நிறுவனம் விற்பனை செய்யும் ‘ரெடி டூ ஈட்’ வகை உணவுகளும், திரவ மசாலாக்களும், இதர உணவுப்பொருட்களும் வாடிக்கையாளர்களுக்கும், உள்ளூர் சூப்பர் மார்க்கெட்களுக்கும் அனுப்பி வைக்கும் பொறுப்பு அவனுடையது.
மீட்டிங் ரூம் அனைவரையும் வரவேற்றது!
எப்போதும் சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும் அந்த அறை மிகவும் அமைதியாக இருந்தது.
இவர்களால் ‘அண்ணா’ என்று அழைக்கப்பட்ட அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) முகுந்தனின் முகத்தில் கவலையின் ரேகைகள் தென்பட்டன!
அவனருகே நின்று கொண்டிருந்த விற்பனை பிரிவு மேலாளரான விஜய் குனிந்து மடிக்கணினியில் விற்பனை ஷார்ட்டைக் காட்டி விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தான்.
“ஹாய் அண்ணா”
அனுக்ரஹாவின் குரல் கேட்டதும் முத்தாய்ப்பாகப் புன்னகைத்தான் முகுந்தன்.
“எனி இம்ப்ரூவ்மெண்ட்?”
இல்லை என்பது போல உதட்டைப் பிதுக்கினான் முகுந்தன்.
“இந்தத் தலைவலி முடியுற வரைக்கும் நமக்கு இன்வெஸ்டார்ஸ் கிடைப்பாங்கனு தோணல அனு”
யோசனையோடு அமர்ந்தவள் தனது தோழமைகளின் கண்களிலும் அதே வாட்டம் தென்படுவதைக் கவனித்தாள்.
இப்படி எல்லாம் அவர்களின் நிறுவனம் இருந்ததேயில்லை.
முகுந்தனின் தலைமையின் கீழ் ஒன்பது பேர் வேலை செய்கிறார்கள் என்று தோன்றவே செய்யாது. அங்கிருந்த பத்து பேருமே நிறுவனத்தின் தூண்கள் என்பான் அவன்.
தலைமை என்பது மேலிருந்து கட்டளை பிறப்பிப்பது அல்ல! உடனிருந்து பணிகளைக் கவனிப்பது என்பான்! சிறந்த நிர்வாகிக்கான அத்தனை அம்சங்களும் பொருந்திய அவனது ஆளுமையின் கீழ் ‘மெல்டிங் பாட் ப்ரைவேட் லிமிட்டட்’ செழித்து வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் நேர்ந்த சிறு அனர்த்தம் அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்திவிட்டது.
‘மெல்டிங் பாட்டின்’ தயாரிப்பான ‘ரெடி டூ ஈட்’ உணவு வகைகள், திரவ மசாலாக்கள், பொடி வடிவ துரித உணவுகள் அனைத்துமே தமிழகத்தின் அனைத்து பெருநகரங்களிலும் அசுரவேகத்தில் விற்பனை ஆகிக்கொண்டிருந்தன.
அவர்களின் விற்பனையில் தொண்ணூறு சதவிகிதம் ‘ஆன்லைனில்’ நடப்பதே! சூப்பர் மார்க்கெட்கள், செயின் ஸ்டோர்களில் விற்பனையாகும் சதவிகிதம் வெறும் பத்து மட்டுமே!
அவர்களுக்கென ‘யூடியூப் சேனல்’, ‘இன்ஸ்டாக்ராம் பேஜ்’, ‘ஃபேஸ்புக் பேஜ்’ இருக்கிறது. அதில் தங்களது தயாரிப்பு பொருட்கள் குறித்தும், பொதுவான உணவு தயாரிப்பு முறைகள் குறித்தும் வாரத்தில் ஐந்து ரீல்ஸ் வீடியோக்கள் வந்துவிடும்.
போதாக்குறைக்கு ‘சோசியல் மீடியாவுக்கென’ தனிக் குழுவே இயங்கி வந்தது அவர்களிடம். ஷாம் சந்தோஷும், வித்யூத்தும் தான் அந்தக் குழு.
விளம்பரமெனத் தனியே மெனக்கிடாமல் தினமும் சமூக வலைதளங்களில் அவர்களின் முகம் தெரிவதால் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான ஜனத்தொகைக்கு அவர்கள் அனைவரும் பரிச்சயமானவர்களே!
ஏனெனில் ரீல்ஸ் வீடியோக்களில் அனைத்து பிரிவில் பணியாற்றுபவர்களும் பங்கேற்று புதுமையாக எதையாவது சமைப்பார்கள்!
சொல்லப்போனால் உலகளாவிய பெருந்தொற்று ஏற்பட்ட காலத்தில் ‘சோசியல் மீடியா’ பயன்பாடு அதிகரித்ததே மக்கள் மத்தியில் ‘மெல்டிங் பாட்’ நிறுவனத்தைக் கொண்டு போய் சேர்த்தது எனலாம்.
தேனீக்களைப் போல சுறுசுறுப்போடு இயங்குபவர்கள் இப்போது சோர்ந்து போயிருக்கக் காரணம் அவர்களின் நிறுவனத்தில் முதலீடு செய்வதாக இருந்த தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் வெங்கடேஷ் ஓடிலாவின் பின்னடைவே!
முதலில் இருந்த ஆர்வம் வடிந்து அவர் திடுமென யோசிக்கக் காரணம் என்னவென அங்கிருந்த பத்து பேருக்குமே தெரியும்.
அந்தப் பிரச்சனையின் ஆரம்பப்புள்ளி அவர்களின் ‘ஏஞ்சல் இன்வெஸ்டார்களில்’ ஒருவரான தாமஸ் குரியன். முகுந்தனின் தந்தையுடைய நண்பர்களில் ஒருவர்.
‘மெல்டிங் பாட்’ போன்ற ஒரு நிறுவனம் முகுந்தனின் மூளையிலிருந்து குழந்தையாகப் பிரசவிக்கப்பட்ட போது அவனை நம்பி பணம் கொடுத்து தொழில் ஆரம்பிக்கச் சொன்னவர் அவர்.
ஒரு ஸ்டார்ட்-அப் ஆரம்பிக்க துணிந்து பணம் கொடுக்கும் முதலீட்டாளர்களை ‘ஏஞ்சல் இன்வெஸ்டார்’ (ANGEL INVESTORS) என்பார்கள். அவர்களின் முதலீடு ‘சீட் மனி (SEED MONEY)’ என்று அழைக்கப்படும்.
அந்த முதலீடு தான் தொழிலின் ஜீவன்! அத்தகைய ஏஞ்சல் இன்வெஸ்டாருக்கு நேர்த்த ஒரு மாபெரும் துக்கத்தின் தொடர்ச்சியில் மெல்டிங் பாட்டின் பத்து தூண்களும் சிக்கிக்கொண்டதால் இப்போது அடுத்தக்கட்ட முதலீடு தாமதமாகிறது.
அரசல் புரசலாக ஊடகங்கள் இலைமறை காயாக ‘மெல்டிங் பாட்’டைக் குறிவைத்து செய்திகளைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இது தொடர்ந்தால் ‘மெல்டிங் பாட்’டின் சரிவை யாராலும் தடுக்க முடியாது.
தனது ‘ப்ரெய்ன் சைல்டான’ (BRAIN CHILD) நிறுவனம் இப்படி சரிவைச் சந்திப்பது முகுந்தனுக்கு மனவுளைச்சலைக் கொடுத்திருந்தது.
தன்னோடு சேர்ந்து உத்வேகத்தோடு பணியாற்றும் இந்த ஒன்பது இளைஞர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடக் கூடாதே என்ற பயமும் அவனுக்குள் இருந்தது.
ஆற்றாமையோடு அனுக்ரஹாவைப் பார்த்தான் அவன்.
“ஹீ இஸ் டார்க்கெட்டிங் அஸ் டூ டார்மெண்ட் (அவன் நம்மளைச் சித்திரவதை செய்யணும்னே குறி வைக்குறான்)”
அனுக்ரஹாவிடம் பெருமூச்சு மட்டுமே பதிலாக வந்தது.
“இன்னைக்கு நான் எல்லாத்துக்கும் ஃபுல்ஸ்டாப் வச்சிடுவேன்ணா… நீங்க கவலைப்படாதிங்க”
முகுந்தனிடம் சொல்லிவிட்டாள். ஆனால் எப்படி இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறாள் என்பது அவளுக்கே தெரியாது.
சிலந்தி விரித்த வலையில் தானாகச் சிக்கிக்கொண்ட சிறுபூச்சிகளின் நிலை அங்கிருந்த பத்து பேருக்கும்.
அனுக்ரஹா யோசனையில் ஆழ்ந்தபோதே மொபைல் சிணுங்கியது.
திடுக்கிட்டுத் தொடுதிரையைப் பார்த்தவள் அதில் தெரிந்த எண்ணைப் பார்த்ததும் இறுகத் தொடங்கினாள்.
பின்னர் எழுந்தவள் “நான் கிளம்புறேன்ணா… பிலீவ் மீ, இனிமே யாரும் நம்மளைத் தொந்தரவு பண்ணாத வகையில நான் பேசி முடிச்சிட்டு வர்றேன்” என்று சொன்னபடி கிளம்ப அவளோடு சேர்ந்து போக எத்தனித்தாள் பிரபாவதி.
அவளைப் பிடித்து நிறுத்தினான் ஷாம்.
“நீ எங்க போற?”
“அனுக்குத் துணையா போறேன்டா”
“இதுக்கும் சேர்த்து நம்ம தான் அனுபவிக்கணும்டி”
அவன் பற்களைக் கடிக்கவும் பிரபாவதியின் முகம் வாடியது.
“டேய் நீ வேற எதுக்குடா இவளைத் திட்டுற?” முகுந்தன் சலித்துகொண்டான்.
“இல்லண்ணா… நிலமை புரியாம…”
“ப்ச்! நான் அனுவ நம்புறேன்… நீங்க எல்லாரும் அவளை நம்புறிங்கனா நம்மளோட மீட்டிங்கை தொடரலாம்… அசிஸ்டெண்ட் புராடக்ட் மேனேஜர் பிரபாவதி, நீங்க சொல்லுங்க… நம்மளோட ‘ரெடி டூ ஈட்’ பிசிபேளாபாத் புராடக்ட் ஐடியா சக்சஸ் ஆகுமா?”
முகுந்தன் கேட்ட தொனியில் பிரபாவதியின் முகத்தில் சிரிப்பு மலர மீட்டிங் ஆரம்பித்தது.
அதே நேரம் தனது கேபினிலிருந்து ஹேண்ட்பேக், வெஸ்பா சாவியுடன் வெளியேறிய அனுக்ரஹாவின் மனமோ தனியாய்ப் போகத் தயங்கியது.
யாரையும் உடன் அழைத்துச் சென்றால் போன முறை நடந்தது போல எதுவும் நடந்து ‘உள்ளதும் போச்சு’ கதையாகிவிடக் கூடாது!
துணிந்து தரிப்பிடம் வந்தவள் வெஸ்பாவை விரட்டியபோதே மனம் கடவுளிடம் பிரார்த்திக்க ஆரம்பித்தது.
அனுக்ரஹாவோடு சேர்ந்து அனைவரையும் வதைக்கும் பிரச்சனைக்குரிய சூத்திரதாரியை நோக்கிய அவளது வெஸ்பா பயணத்தில் சாதகமான முடிவு வருமா என்பது அவளது கையில் இல்லை. அதைத் தீர்மானிக்க வேண்டியவன் இன்னொருவன்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


