“இரக்கம் வேண்டி யாருடைய நிழலிலும் நான் ஒதுங்கியதில்லை; என் வெற்றிக்கான விலையை என் தனிமையின் வலிகளாலும் காதலின் பிரிவாலும் நானே கொடுத்தேன். என் கண்ணீரைப் பார்த்து நான் வீழ்ந்துவிட்டதாக மற்றவர்கள் கணக்கிடலாம். நீயும் அப்படியா நினைத்துவிட்டாய்?”
-நியதி
அதிகாலைப் பனி இன்னும் முழுமையாக விலகாத நேரத்தில் அம்பாசமுத்திரத்தின் அழகான வீதியில் அமைந்திருந்த நிலவனின் வீடு, ஒருவித அமைதியான கம்பீரத்தோடு காட்சியளித்தது. பாரம்பரியமும் நவீனமும் கலந்த, கான்கிரீட் தளம் போடப்பட்ட அந்தப் பெரிய கட்டைக்குத்து வீடு அது. விசாலமான முற்றம், இரண்டு தளங்களில் மூன்று பெரிய படுக்கையறைகள், நன்கு விரிந்த சமையலறை, வீட்டின் மேலே நீண்ட ஒரு மொட்டை மாடி என நேர்த்தியாகக் கட்டப்பட்டிருந்தது.
காலை நேரத்திற்குரிய அடையாளமாய் வீட்டு வாசலின் அந்தப் பெரிய முற்றத்தில், குனிந்தபடி நேர்த்தியாகப் புள்ளிகள் வைத்துப் பெரியதொரு கோலத்தைப் போட்டுக்கொண்டிருந்தார் வசந்தா. மஞ்சள் பூசிய முகத்தில் எப்போதுமே குடிகொண்டிருக்கும் அந்தச் சாந்தமான புன்னகையும், நெற்றியில் துலங்கும் குங்குமமும் அவருக்கு ஒரு தெய்வீகக் களையைக் கொடுத்திருக்கும்.
ஜீப்பின் சத்தம் கேட்டு நிமிர்ந்தவர், வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே வந்த மகனைப் பார்த்ததும் முகம் மலர்ந்தார்.
“வாப்பா நிலவா! ட்ரெயின் லேட் ஆகிடுச்சோனு நினைச்சேன். முகம் எல்லாம் வாடிப்போயிருக்கே. நைட் ட்ரெயின்ல சரியா தூங்கலையா?” என்றபடி அவனது தோளைத் தொட்டார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லம்மா. நல்லாதான் தூங்குனேன்,” என்று அவரிடம் மென்மையாகப் பேசியபடியே உள்ளே நுழைந்தான்.
அங்கே கூடத்தில் நாளிதழைப் படித்துக்கொண்டிருந்த வைத்தியலிங்கம், நிமிர்ந்து மகனைப் பார்த்தார்.
“வா நிலவா! சென்னையில துளசிராஜா மகன் கல்யாணம், அப்புறம் நீ போக வேண்டிய கம்பெனி வேலை எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?” என்று விசாரித்தார்.
“எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதுப்பா,” என்று ஒற்றை வரியில் பதிலளித்த நிலவனின் முகத்தில் ஒரு துளிகூடச் சந்தோஷமோ, நிம்மதியோ இல்லை என்பதை வைத்தியலிங்கத்தின் அனுபவம் வாய்ந்த கண்கள் கண்டுகொண்டன.
‘அவளைப் பார்த்திருப்பானோ? பார்த்ததால்தான் இத்தனை இறுக்கமோ!’ என்று அவரது மனதுக்குள் கேள்விகள் மையங்கொள்ள ஒரு பெருமூச்சு கிளம்பியது. ஆனால் அதை வார்த்தையாக அவர் வெளியே கேட்கவில்லை.
அப்போது நிலவனின் பாக்கெட்டுக்குள் இருந்த மொபைல் சிணுங்கியது. அழைப்பது அவனது இரட்டைச் சகோதரி நிலா.
“சொல்லு நிலா…”
“மெட்ராஸ்ல இருந்து வந்துட்டியாடா? வந்ததும் ஒரு எட்டு நம்ம வீட்டுக்கு வந்துட்டுப் போ. மாமா உன்னைப் பாக்கணும்னு நேத்துல இருந்து சொல்லிட்டே இருக்காரு. உடனே கிளம்பி வா,” என்று அதிகாரமும் பாசமுமாகக் கட்டளையிட்டுவிட்டு இணைப்பைத் துண்டித்தாள்.
‘மாமா எதுக்கு என்னைப் பார்க்கணும்னு சொல்றார்? அப்பாவும் அம்மாவும் ஒரு வாரத்துக்கு முன்னாடிகூடப் போய்ப் பாத்துட்டு வந்தாங்களே’ என்று நிலவன் யோசனையோடு நிற்க,
அங்கே வந்த வசந்தா, “நாங்க அன்னைக்குப் போனப்பவே இந்திரண்ணன் உன்கிட்ட பேசணும்னு துடிச்சார்யா. நீ அவருக்கு மகன் மாதிரிங்கிறதால அவர் பேச்சுக்குச் சொல்லலை. அன்பான மனுஷன். போய் ஒரு எட்டு என்னனு பாத்து மனசுக்கு இதமா பேசிட்டு வா,” என்றார் மென்மையாக.
சரியென்று தலையசைத்துவிட்டுத் தன் அறைக்குள் சென்றான் நிலவன். தோளில் இருந்த லக்கேஜ் நிரம்பிய பேக்பேக்கை ஓர் ஓரமாக வைத்துவிட்டு, நேராக மாடிப்படிகளில் ஏறி மொட்டை மாடிக்குச் சென்றான்.
அங்கிருந்து பார்த்தால் அம்பாசமுத்திரத்தின் வயல்வெளிகளின் அழகும், தூரத்து மலைமுகடுகளும் அத்துணை ரம்மியமாகத் தெரியும். ஆனால், அவனது கண்கள் இயற்கையை ரசிக்கவில்லை. இந்த மாடியின் ஒவ்வொரு செங்கல்லிலும் அவளது நினைவுகள் அல்லவா உறைந்து கிடக்கின்றன!
அவனது மூளை தன்னிச்சையாகப் பின்னோக்கிப் பயணித்தது. இதே மொட்டை மாடியில், மழைக்காலத்து மாலை நேரத்தில் அவனருகே தலைசாய்த்துப் படுத்திருந்தாள் நியதி.
இருவருக்கும் நடுவே, அப்போது அவர்கள் படித்துக்கொண்டிருந்த நா.முத்துக்குமாரின் ‘பட்டாம்பூச்சி விற்பவன்’ புத்தகம்கூடக் கிடந்ததாய் ஞாபகம்.
அவள் புத்தகத்தை வாசிக்க அவனது விழிகளோ அவளை வாசித்தபடி இருந்தன.
புத்தகத்தைப் படித்தபடியே அவனது மோவாயைப் பற்றி வேறுபுறம் திருப்பினாள் நியதி.
“பாத்தாகூடத் தப்பா?” என அவன் குறைபேசவும் அவன் புறம் திரும்பியவள்
“நீங்க பாத்தா என்னால இயல்பா இருக்க முடியாது” என்றாள் மெல்லிய நாணத்தோடு.
“ஓஹ்! அதை இவ்ளோ நெருக்கமா படுத்தபடி சொல்லுறப்பதான் நம்ப முடியல நிதி” என்றவன் ஒரு கையைத் தலைக்கு அண்டைகொடுத்துப் பள்ளிகொண்ட பரந்தாமனாய் அவன் புருவங்களை ஏற்றியிறக்க
“என்னைப் புக் படிக்க விடமாட்டீங்கல்ல?” என்று அவள் சொல்ல
“நான் உன்னைத் தடுத்தேனா? என் கைவிரல்கூட உன் மேல படல” என்று வெகு கவனமாய்த் தங்களிடையே இருக்கும் பத்து சென்டிமீட்டர் இடைவெளியைக் காட்டினான் நிலவன்.
“ஸ்பரிசம் குடுக்காத வெக்கத்தைப் பல நேரங்கள்ல பார்வை குடுத்துடும் நிலன். அதுல நீங்க கில்லாடி”
“அடப்போம்மா! நானே இன்னும் எவ்ளோ நாள் பாத்துக்கிட்டே இருக்கணும்னு ஏங்கிப்போயிருக்கேன்”

சலிப்பாய் அவன் சொல்லவும் அந்தச் சலிப்பிலிருந்த காதல் கொடுத்த வெட்கத்தில் தன் முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டு அவள் சிரித்த அந்தப் பேரழகான தருணம் மனக்கண்ணில் விரிந்தது.
அந்தப் புத்தகத்தை வைத்துக்கொண்டு அவள் பேசிய குறும்புப் பேச்சுகள் இப்போதும் தித்தித்தன அவனது ஞாபக அடுக்குகளில்!
நினைவுகளின் சுழலில் சிக்கிய நிலவனின் இமைகளின் ஓரத்தில் லேசாக நீர் கசிந்தது. சட்டெனத் தன் முகத்தைத் துடைத்துக்கொண்டவன்,
‘எதற்காக இப்படி உருகுகிறோம்? என் உணர்வுகளை ஒரு துளிகூட மதிக்காதவளுக்காக நான் ஏன் கலங்க வேண்டும்?’ என்று தன் மனதை மீண்டும் பழைய இறுக்கத்திற்குக் கொண்டுவந்தான்.
கீழே சென்று குளித்து உடைமாற்றிக்கொண்டு, தனது ஜீப்பைக் கிளப்பிக்கொண்டு, அவனுடன் பிறந்த இரட்டைச் சகோதரி நிலாவின் புகுந்த வீடு அமைந்திருக்கும் ஆலங்குளத்துக்கு விரைந்தான் நிலவன்.
ஆலங்குளம் – வியாபாரமும் விவசாயமும் செழிக்கும் ஊர். அங்கே, பிரதான சாலை அருகில் ஆலங்குளம் பேருந்து நிலையத்துக்கு அண்மையில் அமைந்திருந்தது ‘முத்தமிழ் புக் சென்டர்’. நாவல்கள், கல்விப் புத்தகங்கள், ஸ்டேஷனரி பொருட்கள் எனப் பெரிய அளவிலான இரண்டு அடுக்குக் கடையாகக் கம்பீரமாக நின்றது. அந்தப் பெரிய கடையின் முதலாளி பூபேந்திரன். அந்த ஊரிலேயே பெரிய வசதியான குடும்பம் அவர்களுடையது.
கடையைத் தாண்டி உள்ளடங்கிச் சென்றால், நெல்லை, தென்காசி, செங்கோட்டைப் பகுதிகளில் மட்டுமே காணக்கிடைக்கும் கரிய நிற ஓடுகளுடன் பிரம்மாண்டமான ‘பழங்காலத்துக் காரைவீடு’ காட்சியளிக்கும். பெரிய மரக்கதவுகளோடு கூடிய முகப்பு, காற்றோட்டமான விசாலமான முற்றம், பக்கவாட்டில் நிழல் தரும் தென்னை மரங்கள், பின்புறம் பெரிய தோட்டமும் கிணறும், கார்களை நிறுத்தத் தனியாக அமைக்கப்பட்ட ஷெட் எனப் பார்ப்பதற்கே அத்தனை அம்சமாக இருக்கும் அந்த வீடு.
ஜீப் வந்து நிற்கும் சத்தம் கேட்டதுமே, உள்ளேயிருந்து ஓடிவந்தாள் நிலா. நிலவனைவிட ஐந்து நிமிடங்கள் முந்திப் பிறந்தவள். அண்ணன் என்பதைவிட, அவனை ஒரு தோழனாகவே பாவிப்பவள். அவன் மீதும், தன் பிறந்த வீட்டின் மீதும் அவளுக்கு அத்துணை பாசம்.
“வாடா நிலவா!” என்று அன்பாக அழைத்தபடி வந்தாள். அவளுக்குப் பின்னாலேயே அவளது கணவன் பிரகாஷ் அவர்களின் ஒன்றரை வயதுக் குழந்தை வைஷாலியைத் தூக்கிக்கொண்டு வந்தான்.
“வா மாப்பிள்ள. இன்னைக்குத்தான் சென்னைல இருந்து ரிட்டர்ன் வர்றதா மாமா சொன்னாங்க. ரெஸ்ட் எடுத்திருக்கலாமே?” என்று பிரகாஷ் இன்முகத்தோடு வரவேற்றான்.
அவர்களிடம் பேசிக்கொண்டே வீட்டின் பெரிய ஹாலுக்குள் நுழைந்தான் நிலவன். அங்கே, பூஜை அறையில் இருந்து வெளியே வந்த நிலாவின் மாமியார் விஜயாவின் முகம், மருமகனைக் கண்டதும் மலர்ந்தது.
“வாங்க மருமகனே! எப்ப மெட்ராஸ்ல இருந்து வந்தீங்க?”
“காலையிலதான் அத்தை வந்தேன். மாமாவுக்கு இப்ப உடம்பு எப்படி இருக்கு? பரவாயில்லையா?” என்று அக்கறையோடு விசாரித்தான் நிலவன்.
“கடவுள் புண்ணியத்துல இப்ப பயப்பட ஒண்ணுமில்லப்பா. நெஞ்சுல அடைப்புனு சொன்னதும் நாங்க எல்லாம் பயந்துட்டோம். ஆனா டாக்டர் சர்ஜரி எல்லாம் வேணாம், ஸ்டென்ட் வச்சிருக்கோம், அதுவே போதும்னு சொல்லிட்டாரு. நல்லா ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லியிருக்காங்க. உங்களைப் பாக்கணும், பேசணும்னு நேத்துல இருந்து மாமா உயிரை வாங்குறாரு. உள்ள போய்ப் பாருங்கப்பா,” என்றார் விஜயா.
நிலவன் மட்டும் தனியாகப் பூபேந்திரனின் அறைக்குள் சென்றான். அறையின் ஓர் ஓரத்தில் இருந்த பெரிய கட்டிலில் சாய்ந்து படுத்திருந்த பூபேந்திரன், மருமகனைப் பார்த்ததும் சிரமப்பட்டு எழுந்து உட்கார முயன்றார்.
பதறிப்போன நிலவன், அருகில் சென்று அவரைத் தாங்கி அமரவைத்து, முதுகிற்குப் பின்னால் தலையணையை வைத்தான்.
“எப்படி இருக்கீங்க மாமா? இப்ப வலி எதுவும் இல்லையே?”
“நான் நல்லா இருக்கேன் மருமகனே…” என்றவர், சிறிது நேரம் தயங்கிவிட்டு, “சென்னைக்குப் போனீங்கனு கேள்விப்பட்டேன்,” என்றார் தயக்கத்தோடு.
நிலவனுக்குச் சங்கடமாக இருந்தது. எதைப் பற்றி அவர் விசாரிக்கப் போகிறார் என்று அவனுக்குத் தெரியும். “ஆமா மாமா,” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டான்.
“அவ்வளவுதானா மருமகனே?” அவர் குரல் மனங்கொண்ட ஏக்கத்தைப் பிழிந்தெடுத்தது.
“வேற என்ன மாமா? குயிக் காமர்ஸ் கம்பெனியில செல்லர் ரிஜிஸ்ட்ரேஷன் வேலை இருந்துச்சு. அதை முடிச்சிட்டு, அப்படியே துளசி மாமா பையன் கல்யாணத்தையும் அட்டெண்ட் பண்ணிட்டு வந்துட்டேன்,” என்றான் எதுவும் புரியாதவன் போல.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


