அதைக் கேட்டதும் இது என்ன அநியாயம் என்று பொங்கிவிட்டாள்.
“நான் வெறும் ரசம் ஊத்திச் சாப்டணுமா? முடியாது”
“அப்போ சாப்டாமப் பட்டினியாக் கூட இருந்துக்கோ. சும்மா சும்மா மாப்பிள்ளையக் கரிச்சுக் கொட்டாத”
அம்புவைக் கழுத்தை நெறிப்பது போலப் பாவனை செய்ய அவரோ அவளது கையைத் தட்டிவிட்டு டேபிளில் சாப்பாட்டை வைத்துவிட்டு ராகவை அழைத்தார்.
“வாவ் தாதிம்மா! சிக்கன் இஸ் மை ஃபேவரைட். ஐ லவ் யூ தாதிம்மா” என்று சொல்லவும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தது அவனுக்கு அடுத்த நாற்காலியில் அமர்ந்து ரசம் சாதத்தை உள்ளே தள்ளிக் கொண்டிருந்த அவந்திகாதான்.
அவளது ஆச்சரியத்தை ஓரக்கண்ணால் கவனித்தவன் “தாதிம்மா! சில பேரைப் பாத்தா மட்டும் ஐ லவ் யூ சொல்லு ராகவ் அப்படின்னு என்னோட மனசு என்னைப் பாடாப் படுத்துது. அந்த லிஸ்ட்ல நீங்கதான் நம்பர் ஒன்” என்று சொல்லி அவளைக் கிண்டலாகப் பார்க்கவும் அவள் உதடு சுழித்தாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“வீணா போனவன், கிழவிகிட்ட ஐ லவ் யூ சொல்லிட்டு அதுல உனக்குப் பெருமை வேற” என்று மனதிற்குள் திட்டிக் கொண்டபடியே சாப்பிட்டாள்.
“அட ராகவ்! அந்தக் காலத்துல உங்க தாத்தாவும் உன்னை மாதிரிதான்” என்று அம்பு சொல்லவும் இடைமறித்தாள் அவந்திகா.
“எப்பிடி? உன்னைக் கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடியே வேற எந்தக் கிழவியையும் லவ் பண்ணாரா?” என்று அவந்திகா கேலியாகக் கேட்க இந்த வார்த்தையில் ராகவுக்குப் புரை ஏறவும் தலையில் தட்டித் தண்ணீரைக் குடித்தபடிச் சமாளித்தான்.
“இவ ஒருத்தி! நீ தண்ணியக் குடிப்பா! அந்தக் காலத்துல நான் இந்த மாதிரி சண்டை போட்டுட்டு எங்க அம்மா வீட்டுக்குக் கிளம்பிப் போனா உங்க தாத்தாவும் உன்னை மாதிரியே என்னைச் சமாதானப்படுத்துறதுக்காக என் பின்னாடியே வந்துடுவாரு” என்றார் அம்புஜா ராகவுக்குத் தண்ணீரைக் கொடுத்தபடியே.
“இஸிட் தாதிமா? வாட் அ லவ்!! நீங்க ரெண்டு பேரும்தான் இன்னைக்கு இருக்குற கபிள்சுக்கு ரோல் மாடல்” என்று அவன் சிலாகிக்கவும் அவந்திகா தலையில் அடித்துக்கொண்டாள்.
“அம்பு! தாத்தா இல்லாத தைரியத்துல கதையாச் சொல்லுற நீ? பீ கேர்ஃபுல். இல்லன்னா தாத்தா கூடவே உன்னையும் பார்சல் பண்ணிடுவேன்” என்று மிரட்டிவிட்டுச் சென்றவளைப் பார்த்துச் சத்தம் போட்டுச் சிரித்த அவர்கள் ஹைஃபை கொடுத்துக் கொண்டனர்.
இவ்வாறு ராகவ் அம்புஜாவின் மனதில் என்னவோ புகுந்துவிட்டான். ஆனால் அவரின் பேத்தியோ அவனை அருகில் கண்டாலே கூறு போடும் பார்வை பார்த்தபடியே விலகிச் சென்றாள்.
மாலை அஜ்ஜூ பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் நேரே “ஜீஜூ!“ என்று ராகவிடம் ஓட அவந்திகா உதட்டைச் சுழித்து அழகு காட்டிவிட்டு டிவியைப் பார்க்க ஆரம்பித்தாள்.
ராகவும் அவளைக் கண்டுகொள்ளாமல் அஜ்ஜூவிடம் பள்ளியில் நடந்த நிகழ்வுகளைக் கேட்டவன் அவனுடன் சேர்ந்து விளையாடத் துவங்கினான். அம்புஜா இதை அவந்திகாவிடம் காண்பித்துச் சிலாகிக்கவும் அவள் காதுகளை மூடிக்கொண்டு அவளின் அறைக்குச் சென்றுவிட்டாள்.
ராகவ் இரவு சாப்பிட்டு முடித்தவன் உஷாவுக்குப் போன் செய்து அவன் சென்னை வந்து சேர்ந்த விஷயத்தைக் கூறினான். அவந்திகாவைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று குடும்பத்தினருக்குச் சொல்லிவிடுமாறும் கூறினான்.
“டோன்ட் வொர்ரி பாபி! ஷீ இஸ் ஃபைன். கௌசிம்மா கிட்ட நான் சென்னை வந்ததும் இன்ஃபார்ம் பண்ணிட்டேன். ஹனிபினு நீங்க வச்ச நேமுக்குப் பொருத்தமா எப்பவும் என்னைக் கொட்டிட்டே இருக்கா. ஐ கேன் மேனேஜ். பை!! குட்நைட்” என்று போனை வைத்தவன் தூங்குவதற்காக அவர்களின் அறைக்குச் செல்ல அவந்திகா பெட்ஷீட் தலையணைகளுடன் நிற்பதைக் கண்டதும் அவன் திகைத்தான்.
“கம் ஆன் ஜான்சி ராணி! இப்போ என்ன நடந்துட்டுனு நீ கீழ போய்ப் படுத்துக்கப் போற?”
“வாட்? என்னோட ரூம்ல நான் எதுக்குக் கீழப் படுக்கப் போறேன்? இது உனக்குத்தான்” என்று சொல்லி அவன் அருகில் வந்தவள் அவனது கையில் பெட்ஷீட்டையும் தலையணையையும் கொடுத்து அந்த அறையை விட்டு வெளியே தள்ள ராகவ் ‘இந்தப் பொண்ணுக்குப் பைத்தியம் பிடிச்சிருச்சா’ என்று எண்ணிக்கொண்டே அவளை முறைத்தான்.
“போய் ஹால்ல தூங்கு” என்று சொல்லிவிட்டுக் கதவை அடைக்க முற்பட வேகமாக அதைப் பிடித்து நிறுத்தியவன் கையிலிருந்தவற்றை அவளது அறைக்குள்ளே எறிந்துவிட்டு “எனக்கு இப்பிடிலாம் இருந்து பழக்கம் இல்ல ஜான்சி ராணி! அண்ட் அதுக்கு அவசியமும் இல்ல. நான் இந்த ரூம்ல அந்த பெட்லதான் தூங்கப் போறேன்! உனக்கு அன்கம்ஃபர்டபிளா இருந்தா நீ ஹால்ல போய்த் தூங்கு! இந்தக் கண்ணை உருட்டி மிரட்டுறதல்லாம் வேற யாருகிட்டவாச்சும் வச்சுக்கோ” என்று சொல்லிவிட்டுப் படுக்கையில் சென்று படுத்துவிட்டான்.
அவனைக் கடுப்புடன் பார்ப்பதைத் தவிர அவளால் எதுவும் செய்ய இயலவில்லை அவளால். மெதுவாகச் சென்று இன்னொரு முனையில் படுத்து உறங்கினாள் அவந்திகா.
அவள் உறங்கியதும் விழித்து அவளைப் பார்த்தவன் “ரொம்ப நாள் டிலே பண்ணாத ஜான்சி ராணி! சீக்கிரமாச் சமாதானம் ஆயிடு ப்ளீஸ்” என்று தூங்குபவளின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்ச அவள் புரண்டு படுத்தாள்.
இதற்கு மேல் ஏதாவது செய்தால் அவளது தூக்கம் கலைவது கன்ஃபார்ம் என்பதால் சுதாரித்தவன் அவளை அணைத்தபடி தூங்க ஆரம்பித்தான்.
மறுநாள் காலை விழித்தவன் நேரே மொட்டைமாடிக்குச் சென்றவன் அங்கே நின்று சுற்றித் தெரிந்த காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். பக்கத்துவீட்டு மாமா காலையிலேயே சந்தியாவந்தனம் செய்ய வந்தவர் அவனைப் பார்த்து யாரென்று விசாரிக்க அவன் அம்புஜாவின் பேத்தியான அவந்திகாவின் கணவன் என்று தன்னை அறிமுகப்படுத்தியவன் அவரிடம் பேசிக் கொண்டிருந்தான்.
அதற்குள் அந்த மாமாவை அழைத்தபடி வந்த மாமியும் விஷயத்தைக் கேட்டவர் அவனிடம் இரண்டு வார்த்தை பேசிவிட்டுக் கணவரையும் கையோடு அழைத்துச் சென்றார்.
ராகவ் கீழே சென்றவர்களை வேடிக்கை பார்த்தவன் மனதில் தோன்றிய எண்ணம் இதுதான். மகிழ்ச்சியாக வாழ கார், பங்களா வசதிகள் தேவையில்லை. இந்தச் சிறிய வீட்டில் வாழும் இவர்கள் முன்பின் தெரியாத தன்னிடம் கூடத் தன்மையாகப் பழகுவதைக் கண்டவன் தங்களுடைய வாழ்க்கை முறையையும் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது என்பதை அன்று புரிந்துகொண்டான்.
அதன்பின் ராகவ் அங்கே வந்ததிலிருந்து ஏதாவது செய்து அவளைக் கடுப்பாக்குவதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தான்.
அவந்திகாவுடன் சேர்ந்து அஜ்ஜுவைப் பள்ளிக்குத் தயார் செய்வதிலிருந்து அவளுடன் மார்க்கெட் செல்வது வரை அனைத்திலும் கூடவே வரவே அவளால் அவனைத் தவிர்க்க முடியவில்லை. அவனுக்குமே இந்த வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிக்க ஆரம்பித்தது.
அவனது இந்த மாற்றம் அவள் எதிர்ப்பார்க்காத ஒன்று. வீடு, கார், ஆபிஸ் என்று ஏ.சி-யிலேயே பழகியவன் அவளுக்காக ஆட்டோவில் பயணம் செல்லவும் பழகிக் கொண்டான்.
வேலையாட்களை வைத்தே சிறு வேலையையும் செய்து வளர்ந்தவன் அவளுடன் சேர்ந்து எல்லா வேலைகளையும் பகிர்ந்துகொண்டான். அவந்திகாவின் பக்கத்து வீட்டு மாமி அம்புவின் காதில் “அவந்திகா ஆத்துக்காரர் ரொம்பக் கெட்டிக்காரப் பையனா இருக்கானே அம்புஜா மாமி! எவ்ளோ சமத்து! இந்தக் காலத்துல எந்த ஆம்படையான் ஆத்துக்காரிக்கு இந்த மாதிரி ஒத்தாசையா இருக்கா? உங்காத்து பொண்ணு ரொம்ப அதிர்ஷ்டக்காரி” என்று ஓதிவிட அம்புவைக் கையிலேயே பிடிக்க முடியவில்லை.
அன்றுடன் அவன் சென்னை வந்து ஏழு நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் அவந்திகா கொஞ்சம் கூட இறங்கிவரவில்லை. அவனோ வேதாளத்தின் பின் செல்லும் விக்கிரமாதித்தன் மாதிரி அவள் பின்னே சுற்றினான். அவனுடன் சாதாரணமாகப் பேசும் அளவுக்குத்தான் அவர்களின் உறவு சென்று கொண்டிருந்தது.
அன்று ஃபீனிக்ஸ் மால் சென்றவளிடம் உள்ளே செல்லுமாறு சொல்லிவிட்டுச் சென்றவன் சிறிது நேரத்தில் திரும்பி வந்தான். ஜீன்சின் பாக்கெட்டில் கை வைத்து முறைத்தவளின் தலைமுடியைக் கலைத்தவன் அவளுடன் கைகோர்த்தபடி ஒவ்வொறு ஷாப்பாகச் சென்று பார்க்க நேரம் போனதே தெரியவில்லை. ஃபுட் கோர்ட்டில் ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்தவர்களை அங்கிருந்த சில பெண்கள் கைகாட்டி ஏதோ சொல்ல அவந்திகாவுக்குப் புரிந்துவிட்டது. அவர்கள் ராகவைப் பற்றித்தான் பேசிக்கொள்கிறார்கள் என்று.
ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்வது போல அவர்களின் மேஜையைக் கடக்கும்போது அவர்களின் பேச்சு காதில் விழுந்தது.
“ஹீ இஸ் சோ ஹாண்ட்சம்டி. மே பி நார்த்தி”
“யா! வாட் அ ஸ்டைல்? பேச்சிலரா இருந்தா இப்போவே போய்ப் ப்ரபோஸ் பண்ணிடுவேன்”
“பேச்சிலராதாண்டி இருப்பான். கூட வந்த பொண்ணு பாக்க மேரிட் மாதிரி இல்லயே”
“மே பி ஹிஸ் கேர்ள் ஃப்ரெண்ட்” என்று அவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டவளுக்கு உள்ளே ஒரு மினி எரிமலை வெடித்தது. விறுவிறுவென்று ராகவின் கையைப் பிடித்து அவர்களின் டேபிளுக்கு அழைத்து வந்தாள்.
“ஜான்சி ராணி! வாட் ஆர் யூ டூயிங்?” என்று சொன்னவனைக் கண்ணால் அமைதியாக்கியவளை அந்த இளம்பெண்கள் கேள்வியாகப் பார்த்தனர்.
“ஹாய் பியூட்டிஸ்! நீங்க பேசுனத எல்லாம் நான் தெளிவா கேட்டுட்டேன்… என்ன சொன்னீங்க? பேச்சிலரா இருந்தா ப்ரபோஸ் பண்ணுவீங்களா? யா ஹீ இஸ் தி மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் இன் ஹிஸ் சரவுண்டிங். பட் என்ன பண்ணுறது?” என்று சோகமாகச் சொல்ல அவர்கள் அவன் பேச்சிலர் என்று அறிந்ததும் முகம் பிரகாசமடைய என்னாச்சு என்று கேட்டனர்.
அவர்களைக் கூரிய விழிகளால் அளவிட்டவள் “ஒரே ஒரு தடவை கல்யாணம் ஆயிடுச்சு” என்று சொல்ல அவர்களின் முகம் போன போக்கைப் பார்த்ததும் அவளுக்கு மனதிற்கு இதமாக இருந்தது.
“எப்பிடி எப்பிடி? ஹீ இஸ் சோ ஹேண்ட்சமா? ஒரு வயசுப் பையனை இப்பிடிச் சைட் அடிக்கிறதுக்கு உங்களுக்குல்லாம் வெக்கமாவே இல்ல? நீங்கல்லாம் அண்ணன் தம்பி கூடப் பொறக்கலையா?” என்று கேட்கவும் அவர்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியாமல் விழித்தனர்.
“ஹலோ! நீங்க எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க?” என்று அவர்களில் ஒருத்தி கேட்க அவந்திகா “ஏன்னா நான் அவனோட வைஃப்… என்னோட புருஷனை நீங்க சைட் அடிச்சா நான் கேக்காம என் பக்கத்துவீட்டுக்காரியா கேப்பா?” என்று சொல்லி மூச்சுவிட்டுக்கொண்டாள்.
அதற்குள் ராகவ் அவள் செய்த டிராமாவை ரசித்தவன் மிகவும் சிரமப்பட்டு அவர்களை அவந்திகாவிடமிருந்து காப்பாற்றி அவளை அங்கிருந்து வெளியே அழைத்து வந்தான்.
“ஜீன்ஸ் போட்டாக் கல்யாணம் ஆகாதவனு அர்த்தமா? எந்த உலகத்துல இருக்காங்க இவங்கல்லாம்?” என்று புலம்பியபடியே வந்தவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே வந்தான்.
“நீ சிரிக்காத மேன்.. நான் ரொம்ப இரிட்டேட் ஆகிப் போயிருக்கேன்” என்று முகத்தைச் சுழித்துத் திரும்பி நின்று சொல்லவும் அவனுக்குச் சிரிப்பு இன்னும் அதிகமானது.
எவ்வளவு நேரம் நின்றாளோ என்று அவந்திகாவுக்குத் தெரியவில்லை.
“அவந்திகா” என்ற ராகவின் குரலில் திரும்பியவள் மகிழ்ச்சியில் சிலையானாள்.
அவள் முன்னே மண்டியிட்டுப் பொக்கேயை நீட்டி “ஐ லவ் யூ அவந்திகா” என்று சொன்னவன் ராகவ்!
சந்தோஷத்தில் எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் முகம் சிவந்து நின்றாள் அவந்திகா. அங்கே இருந்த இளம்பெண்கள், ஆண்கள் என்று அனைவரும் இவர்கள் இருவரையுமே ஒரு விதத் திகைப்புடன் பார்க்க ஒரு சிறுமி அவந்திகாவின் அருகில் வந்தவள் “அக்கா! பொக்கேவை வாங்கிக்கோங்க! அங்கிளுக்கு முட்டி வலிக்கும்ல” என்று அவந்திகாவைப் பார்த்துச் சொல்ல அவள் அந்தச் சிறுமியைச் சிரித்தவள் பின்னர் சுதாரித்து அவன் நீட்டிய பொக்கேயைச் சந்தோஷமாக வாங்கிக் கொண்டாள்.
அவள் வாங்கியதும் எழுந்தவன் “உனக்கும் எனக்கும் இடையில என்னைக்குமே வேற யாரும் வர்றதுக்கு நான் அலோவ் பண்ண மாட்டேன். பிளீவ் மீ” என்று ஆழ்ந்த குரலில் சொல்லவும் அவனது அந்தக் குரலில் கண்கலங்கச் சிவந்த முகத்துடன் தலையாட்டினாள் அவந்திகா!
அதே சந்தோஷத்துடன் அவர்கள் இருவரும் கைகோர்த்தபடியே வீடு வந்து சேர்ந்தனர்.
அம்புவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவந்திகா ராகவிடம் சண்டைப் பிடிக்காமல் நல்ல பிள்ளையாக வீட்டில் நுழையவும் அவர் ஒரு நிமிடம் திகைத்துவிட்டார்.
ராகவ் அவரிடம் வந்து அனைத்தையும் சொல்லவே ‘இந்த வாயாடிக்கு அதான் பேச்சு வரலயா?’ என்று செல்லமாக அவளை மனதில் வைதவர் மனதார இருவரையும் ஆசீர்வதித்தார்.
எல்லாம் நன்றாகவே சென்றது அவந்திகா தியாவைப் பற்றிக் கேட்கும் வரை!
மொட்டைமாடியில் அமர்ந்திருந்தவளிடம் வந்த ராகவ் குளிரில் இருக்க வேண்டாம் என்று அழைக்க அவனைத் தன்னருகில் அமரச் சொன்னாள்.
“நீ தியாவுக்கும் இப்பிடித்தான் பிரபோஸ் பண்ணியா ராகவ்?” என்று கேட்டுவிட்டு அவன் பார்வையை உணர்ந்து “ஹானஸ்ட்லி நான் உன்னைச் சந்தேகமாவோ இல்ல சண்டை போடவோ கேக்கல” என்று சொல்லவும் அமைதியாகச் சிரித்தவன் அவள் கண்களை ஊடுருவிப் பார்க்க அவந்திகாவுக்கு அன்று அப்பா அம்மாவப் பார்த்த பார்வை, சித்தியை ரகு சித்தப்பா பார்த்த பார்வை எல்லாமே மூளையில் அணிவகுத்தது.
“இல்ல! நான் தியாக்குப் ப்ரபோஸ் பண்ணல” என்று சொன்னவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள் அவந்திகா.
“அப்போ அவதான் உனக்குப் ப்ரபோஸ் பண்ணாளா?”
“யெஸ்..”
“அப்புறம் என்னாச்சு?”
“நான் அவளுக்கும் எனக்கும் செட் ஆகாதுனு ரிஜெக்ட் பண்ணிட்டேன்”
இப்போது மீண்டும் திகைத்தாள் அவள் “அப்போ எப்பிடி நீங்க லவ் பண்ண ஆரம்பிச்சீங்க?”
“நான் எப்போ அவளை லவ் பண்ணுனேன்? என்னைக்கும் நான் அவளை லவ் பண்ணதே இல்ல” என்று அவன் வானத்தைப் பார்த்துச் சொன்னதும் அவந்திகாவுக்குத் தன் மேலே யாரோ பூக்கள் தூவுவதைப் போல் தோன்றியது..
வானத்தைப் பார்த்தவளுக்கு நட்சத்திரம் கூட நிலாக்களாகத் தெரிய அவளின் மனதில் இருந்த ஆனந்தம் அவளது முகத்தில் பிரதிபலித்ததைப் பார்த்ததும்தான் ராகவிற்கு நீண்ட நாளுக்குப் பின் மனநிறைவாக இருந்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


