அந்த வீட்டுக்கு மதுரவாணி முதல் முறை போன போது தான் அவளுக்கு அறிமுகமாயினர் விஜயலெட்சுமியும், ஆதிவராஹனும். ஆதிவராஹன் மைதிலியின் சகோதரன் என்றதும் அவனைக் கண்டுப் புன்னகைத்தாள் மதுரவாணி. அவனும் மேற்படிப்பு படித்துக் கொண்டிருப்பதால் அவனிடம் அவள் சகஜாமாகப் பேசவே இதைக் கண்ட மைதிலியின் அத்தை மகளான விஜயலெட்சுமிக்கு அவளை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய்விட்டது.
விஜயலெட்சுமி ஆதிவராஹனை தனது வருங்கால கணவனாக எண்ணி அந்நாளுக்காக காத்திருந்தவளுக்கு தன்னுடைய கனவு மதுரவாணியால் நாசமாகி விடுமோ என்ற அச்சம் வேறு அவளுக்கு. எனவே மதுரவாணி செல்லும் வரை அவளை அசூயையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் விஜயலெட்சுமி.
ஆனால் மதுரவாணிக்கோ முதல் பார்வையிலேயே பத்மாவதியை மிகவும் பிடித்துப் போய்விட வீட்டுக்குச் சென்றதும் தன் பெற்றோரிடம் அவளை மூத்த அண்ணனுக்கு மணமுடிக்கலாமா என்று கேட்டு ஒரே வாரத்தில் பத்மாவதியை அவரது அண்ணனுக்கு பேசியும் முடிக்க வைத்தாள். சுற்றுவட்டாரத்தில் பத்மாவதிக்கு ஸ்ரீநிவாசவிலாசத்தில் விவாகம் செய்யப் போகிற செய்தி பரவ அனைவருமே அவரது அதிர்ஷ்டத்தை எண்ணி பொறுமி போயினர்.
பத்மாவதியின் குடும்பம் சிரம திசையில் இருந்த நேரம் அது. அதனால் திருமணத்தைக் கூட பட்டாபிராமனே எடுத்துச் செய்தார். பத்மாவதியும் புகுந்த வீட்டாரிடம் கொள்ளைப்பிரியத்துடனே இருந்தாள் எனலாம். அதிலும் மதுரவாணி என்றால் அவளுக்கு மிகவும் பிரியம். அந்த சமயத்தில் தான் ஆதிவராஹனின் பிஸினஸ் முயற்சி வெற்றி பெற்று அவனது தொழில் சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தது. அந்நேரம் சீதாலெட்சுமிக்கு மகளை ஆதிவராஹனுக்கு மணமுடிக்கும் எண்ணம் வரவே பத்மாவதி மகிழ்ந்தாள். ஆனால் மைதிலிக்கு மணமுடிக்காமல் ஆதிவராஹனின் திருமணத்தைப் பற்றி யோசிக்க அவளது தந்தை தயங்கவே சீதாலெட்சுமி தயங்காமல் தன்னுடைய இளைய மகனுக்கு மைதிலியை சூட்டோடு சூடாக விவாகம் செய்து வைத்துவிட்டார்.
அதே சமயம் மதிவாணனுக்கும் மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் பணியில் சேருமாறு அழைப்பு வர அவன் விஜயவாடாவில் பணிக்குச் சேர்ந்துவிட்டு மதுரவாணிக்கு கடிதம் மூலம் அச்செய்தியைத் தெரிவித்தான். இரண்டு வருடங்கள் மட்டும் பொறுத்திருந்தால் தான் ஒரு நல்ல நிலைக்கு வந்துவிடுவேன், அதற்குப் பின் திருமணம் செய்து கொள்ளலாம், அதுவும் பெற்றோர் சம்மதத்துடனே என்று அவன் கூறிவிடவே மதுரவாணியும் தான் மேற்படிப்பை தொடருவதாகக் கூறி விட்டாள். இது விஜயலெட்சுமிக்கு தன் அத்தை மகன் தனது கையை விட்டுப் போக மாட்டான் என்ற நம்பிக்கையை விதைக்க அவளும் அமைதியானாள்.
சரியாக ஒரு வருடம் முடியவே ஹர்சவர்தனும், மைத்திரேயியும் பிறந்துவிட அந்த வீட்டில் மழலைகளின் இன்மொழி கேட்க ஆரம்பித்தது. மதுரவாணிக்கு இருவரும் உயிர். அவர்களின் முதல் பிறந்தநாள் முடிந்த கையோடு மதுரவாணி ஆதிவராஹன் விவாகச் செய்தியை பட்டாபிராமன் உறுதி செய்ய அது மதுரவாணி, விஜயலெட்சுமி இருவருக்குமே அதிர்ச்சியைக் கொடுத்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
மதுரவாணி பதறிப் போனவளாய் மதிவாணனுக்கு கடிதம் போட்டு எப்போதும் சந்திக்கும் கோயிலுக்கு வரச் சொல்லவே இருவரின் பேச்சையும் எதேச்சையாக அந்த கோயிலுக்கு வந்த விஜயலெட்சுமி கேட்டுவிட்டாள். மதுரவாணி வேறு ஒருவனை காதலிக்கும் செய்தி நல்லது தான் என்றாலும் அவள் காதலிப்பவன் பெற்றோர் சம்மதம், அது, இது என்று பிதற்றுவது அவளுக்கு எரிச்சலைக் கொடுத்தது.
எனவே மனதில் திட்டம் தீட்டியவளாய் ஒரு நாள் அத்தை வீட்டினர் அனைவரும் வெளியே சென்றிருக்கும் சமயம் மதுரவாணியை வீட்டுக்கு அழைத்தவள் அவளது கார் வீட்டின் நுழைவாயிலுக்குள் நுழையும் சத்தம் கேட்டதும் வேகமாக ஒரு அறைக்குள் சென்று தன்னை அடைத்துக் கொண்டவள் தனது நாடகத்தை அரங்கேற்ற தொடங்கினாள்.
மதுரவாணியோ ஒவ்வொரு அறையாக விஜயலெட்சுமியைத் தேடியவள் இறுதியாக உள்ள அறை உட்பக்கம் தாழ்பாள் போட்டிருக்க கதவைத் தட்டினாள். ஆனால் சத்தமின்றி இருக்கவே ஜன்னல் வழியே பார்க்க அங்கே விஜயலெட்சுமி புடவையை உத்தரத்தில் போட்டு முடிச்சிட்டு தூக்கு மாட்ட முயன்று கொண்டிருந்தாள்.
மதுரவாணி எவ்வளவோ கதறியும் இறங்க மறுத்தவள் தனது அத்தை மகன் இல்லாத வாழ்க்கை தனக்கு தேவையில்லை என்று மட்டும் மீண்டும் மீண்டும் கூற மதுரவாணி “விஜி அக்கா! நான் மன்னி கிட்ட பேசி உங்க விவாகத்தை நடத்தி வைக்கறேன். தயவு பண்ணி இறங்கி வாங்கோ” என்று கண்ணீர் விட அவள் வாயிலிருந்து அந்த வார்த்தையை வரவழைக்க போட்ட நாடகம் ஜெயித்துவிட்டதால் மகிழ்ச்சியுடன் கதவை திறந்தாள் விஜயலெட்சுமி.
ஆனால் அது இன்னும் முழுதாக முடியவில்லையே. ஓடிச் சென்று மதுரவாணியை அணைத்தவள் “நீ சொன்னாலும் பத்மா கேக்க மாட்டா மதுரா. அவளுக்கு நீன்னா ரொம்ப இஷ்டம்” என்றுக் கூறியவள் அன்று கோயிலில் அவளும், மதிவாணனும் பேசியதைத் தான் கேட்டுவிட்டதாகக் கூற மதுரவாணி அதிர்ந்தாள். தொடர்ந்து விஜயலெட்சுமி கூறிய திட்டத்தையும் கேட்டவள் இன்னும் அதிர்ந்தாள்.
அது என்னவென்றால் மதுரவாணி திருமணத்துக்கு சம்மதிப்பது போல நடித்து திருமண நாளன்று மண்டபத்தை விட்டு நீங்கினால் விஜயலெட்சுமியை தான் அவளது மாமி மணப்பெண் ஆக்குவாள் என்றும், அதன் பின் பட்டாபிராமன் சீதாலெட்சுமியிடம் தானே பேசி மதுரவாணியையும், மதிவாணனையும் வீட்டில் ஏற்றுக்கொள்ள வைப்பதாகச் சொல்ல மதுரவாணியோ இதற்கு தான் சம்மதித்தாலும் மதிவாணன் சம்மதிக்க மாட்டான் என்று உறுதியாகக் கூறினாள்.
அப்படி என்றால் தான் சாவதை தவிர வேறு வழியில்லை என்று மீண்டும் விஜயலெட்சுமி நடிக்க தொடங்க இளகிய மனம் கொண்ட மதுரவாணி என்ன செய்ய என்று புரியாமல் விழித்தாள். அவளது கையைப் பிடித்த விஜயலெட்சுமி “நீ மணமேடைக்கு வராம இருந்தா மட்டும் தான் நான் விரும்புற வாழ்க்கை எனக்கு கிடைக்கும் மதுரா. உன் கால்ல வேணும்னாலும் விழறேன்” என்று விழப் போக மதுரவாணி விஜயலெட்சுமி மீது நம்பிக்கை வைத்து அவரது திட்டத்துக்கு ஒத்துழைத்தாள்.
மதிவாணன் அரைமனதுடன் சம்மதிக்க சரியாக முகூர்த்த நேரத்தில் யாருமறியா வண்ணம் வெளியேறிவள் ஒரு கோயிலில் மதிவாணன் கையால் மாங்கல்யம் வாங்கிக் கொள்ள அதே நேரம் மணப்பெண் ஓடிவிட்டதால் சொந்த அத்தை மகளையே ஆதிவராஹன் மணமுடித்தார். கடைசியில் விஜயலெட்சுமி தான் போட்ட திட்டம் பலித்ததில் மகிழ்ந்தார்.
ஆனால் அவர் கொடுத்த வாக்கை அவர் காப்பாற்றவில்லை. திருமணமான மறுநாள் மதிவாணனோடு வந்து நின்ற மதுரவாணியை அவளது குடும்பமே வெறுத்து தூற்ற அதைக் கண்டபின்னும் நடந்ததைக் கூறாமல் வேடிக்கை மட்டும் பார்த்தாள் அவள். மதுரவாணியின் கண்ணீரைக் கண்டு வெகுண்ட மதிவாணன் ” என் மதுராவ நான் மகாராணியா பார்த்துப்பேன். யார் யாருக்கோ உதவுறேனு போய் தான் அவ இன்னைக்கு கெட்டபேர் ஏத்துருக்காங்கிறதை நீங்க மறந்துடாதிங்க மிஸ்டர் பட்டாபிராமன். நீங்க என்ன சொல்லுறது? நான் சொல்லுறேன், இனி அவ மதுரவாணி பட்டாபிராமன் இல்ல. அவ மதிவாணனோட மனைவி. அவளைப் பத்தி பேசறதுக்கு உங்க வீட்டுல யாருக்கும் அருகதையோ தகுதியோ கிடையாது. இனி செத்தாலும் நானோ மதுராவோ இந்த வீட்டு வாசலை மிதிக்க மாட்டோம்” என்று வைராக்கியத்துடன் உரைத்துவிட்டு மதுரவாணியின் கரம் பற்றி அழைத்துச் சென்றான்.
அந்த காட்சி இன்றும் ஆதிவராஹனின் மனதில் பசுமையாக நினைவிருக்கவே நடந்த உண்மையை அறிந்து வெதும்பி போனார். கிருஷ்ணஜாட்சி அவரிடம் கடைசியாக “எங்க அம்மாவ இவங்க எல்லாரும் ஒதுக்கி வச்ச மாதிரி நீங்களும் வர்ஷாவை ஒதுக்கி வச்சிடாதிங்க பெரியப்பா” என்று மட்டும் உரைக்க ஆதிவராஹன் தலையசைத்துவிட்டு கனத்த இதயத்துடன் அந்த அவுட் ஹவுஸை விட்டு வெளியேறினார்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

