Header Image

 

பிரியம் 20

காதலிக்க டைம் தராம அதிரடியா கழுத்துல தாலியைக் கட்டிட்டு, இப்ப என் முன்னாடி பரிதாபமா நிக்குறான் சந்தீப்., நான் சீண்டறப்ப எல்லாம் அவனோட அந்த கறார் முகத்துல தெரியுற சின்னச் சின்னத் தடுமாற்றமும், ரகசிய ரசனையும் செம்ம கியூட்டா இருக்கு. லைஃப் பயங்கர ஸ்பீடா மாறிட்டாலும், அவனோட இந்தத் தவிப்பை ரசிக்குறதுல எனக்கு ஒரு தனி எக்சைட்மென்ட் தான்!

-ப்ரியம்வதா

தரையில் ரோஜா இதழ்களால் வரையப்பட்ட இதயத்தை மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்றபடி பார்த்தார்கள் சந்தீப்பும் ப்ரியம்வதாவும். இருவரது வதனங்களும் ‘இதெல்லாம் தேவையா’ என்ற கேள்வியைப் பாவனையாய் உடுத்தியிருந்தன.

மெத்தையில் அழகான வெள்ளை விரிப்புகள் படர்ந்திருக்க அதன் முனைகளிலிருந்து சரம் சரமாய் கூடாரம் போல மேல் நோக்கி விளக்குச் சரங்கள் வளர்ந்திருந்தன.

சிரத்தை எடுத்துச் செய்திருந்த அலங்காரம் இருவருக்கும் பிடித்திருந்தாலும் அவர்களது மனநிலைக்கு ஏற்றதாக இல்லை இப்போதிருக்கும் சூழல்.

“இதெல்லாம் டிஸ்போஸ் பண்ண எனக்கு ஹெல்ப் பண்ணுறியா?”

PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!

சட்டையின் ஸ்லீவை மடித்தபடி கேட்ட சந்தீப்பிடம் தான் அணிந்திருந்த புடவையைக் காட்டினாள் ப்ரியம்வதா.

“இதோட உனக்கு ஹெல்ப் பண்ணுறது கஷ்டம். நானே நாலு தடவை தடுக்கி விழாம இங்க வந்து சேர்ந்தது பெரிய விசயம்” என்றபடி புடவையின் முந்தானைத் தலைப்பின் ஊக்கினை அவள் தீண்டியதுமே அவசரமாக அவளது கையைப் பற்றினான் சந்தீப்.

ப்ரியம்வதா திகைத்துப் போனவள் பின்னர் குறும்பாய் கண்சிமிட்டினாள்.

“பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லையே”

அவள் சொன்னதன் அர்த்தம் புரிந்தவன் சட்டென கையை விலக்கிக்கொண்டான்.

“ட்ரஸ் சேஞ்ச் பண்ணனும்னா அங்க போய் பண்ணு. அவசரப்படாதனு சொல்ல வந்தேன். உடனே உன் மைண்ட் எவ்ளோ டர்ட்டியா யோசிக்குது.”

“இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட். இப்ப டர்ட்டியா யோசிக்கலனாதான் தப்பு” என்றவள் அவனது தோளைத் தனது தோளால் இடிக்க, சந்தீப் விக்கித்து விலகினான்.

“அடேங்கப்பா! நான் தொடக்கூட கூடாதா? ஓவரா போற நீ. இன்னைக்கு முதல் நாள்ங்கிறதால உன்னை மன்னிச்சு விடுறேன்.” என்று அமர்த்தலாகச் சொன்னவள் உடைமாற்றும் இடத்திற்குத் தனது ரோலர் சூட்கேஸை இழுத்துச் சென்றாள்.

சந்தீப் தரையில் அலங்கரிக்கப்பட்டிருந்த ரோஜா இதழ்களைக் குவித்து அள்ளியபோது ப்ரியம்வதாவும் உடை மாற்றிவிட்டு வந்துவிட்டாள்.

“நான் பெட்ல இருக்குற பூவை க்ளீன் பண்ணட்டுமா?”

“ம்ம்”

அடுத்த அரை மணி நேரத்தில் அலங்காரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு சந்தீப்பின் அறை எப்போதும்போல மாறியிருந்தது.

“இந்த மேக்கப் எல்லாம் ரிமூவ் பண்ணிட்டு வர்றேன். எனக்கு சென்சிடிவ் ஸ்கின். அப்புறம் ஆக்னே வந்துடும்”

தனது ரோலர் சூட்கேஸிலிருந்து உடைமைகளை எடுத்து வைத்தவள் குளியலறை நோக்கிச் செல்ல அமைதியாக மெத்தையில் அமர்ந்தான் சந்தீப்.

அவனுக்குள் மெல்லிய அலைக்கழிப்பு. ப்ரியம்வதாவைப் போல அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. இவ்வளவு ஏன்? அவளை இயல்பாகவே ஏறிட்டுப் பார்ப்பதற்கே இந்தத் தனிமையான சூழல் பெருஞ்சோதனையாய்!

சந்தீப் தன்னைப் பார்ப்பதும் தவிர்ப்பதும் தவிப்பதுமாய் இருப்பதை ஓரக்கண்ணால் கவனித்தபடி தனது தினசரி ஸ்கின்கேரைச் செய்து முடித்தாள் ப்ரியம்வதா.

பின்னர் சாவதானமாக வந்து அவனருகே அமர்ந்தாள். அமர்ந்தவளின் இதழ்களில் விஷமச்சிரிப்பு. குனிந்து அவனது கண்களைக் குறுகுறுவெனப் பார்த்தாள்.

சந்தீப் பார்வையை விலக்கிக்கொள்ள எத்தனிக்கையில் அவனது மோவாயைப் பற்றித் தன்பக்கம் திருப்பினாள்.

“ஏன் இவ்ளோ போராட்டம்? ஐ அம் யுவர் வைஃப். நீ என்னை உரிமையாவே பாக்கலாம். நான் என்ன ஈவ் டீசிங் கேஸா போடப்போறேன்?”

சொல்லும்போதே சந்தீப்பின் இதழ்களில் சிரிப்பு முகிழ்த்தது. சிரிப்பின் மலர்ச்சி அவனது விழிகளிலும் குடியேறியது.

“நீ எனக்குப் பெர்மிஷன் குடுக்குறியா?”

“யூ ஹேவ் லைசென்ஸ் மேன்” என்று அவனது புஜத்தில் அடித்தவள் தனது கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிறைத் தொட்டுக் காட்டிக் கண் சிமிட்டவும் சந்தீப் தயக்கம் மறந்து அவளது கூந்தலைக் கலைத்துவிட்டான்.

“ஞாபகப்படுத்துனதுக்கு தேங்க்ஸ்” என்று சுருக்கமாகச் சொன்னவனிடம் கண்களால் படுக்கையைக் காட்டியவள்,

“தூக்கம் வருது சந்தீப். செம டயர்ட் நான். என்னடா இந்தப் பொண்ணு லவ் அது இதுனு பேசிட்டுத் தூங்கப்போறாளே, இவ சீரியஸா லவ் பண்ணலையோனு நினைச்சுக்காத. எனக்கும் குட் நைட் கிஸ் குடுக்கணும்னு ஆசைதான். ஆனா பாரு, லிப் பாம் போட்டுருக்கேன். முத்தம் குடுத்தா உன் கன்னத்துல பிசுபிசுனு ஒட்டிக்கும். ஃபேஸ் ஃபுல்லா சீரம் வேற. நாளைக்கு ஸ்கின் கேர் பண்ணுறதுக்கு முன்னாடி குட் நைட் கிஸ் பண்ணிடுவேன். டீல்?” என்று பெருவிரலை தம்ஸ் அப் போல காட்டிக் வினவ,

“சப்போஸ் எனக்கு அதெல்லாம் ப்ராப்ளம் இல்லனு நான் சொன்னா?” என வேண்டுமென்றே வினவினான் அவன்.

அதற்கெல்லாம் அசருபவளா ப்ரியம்வதா? கண்களை இறுக மூடிக்கொண்டவள் தனது கரத்தால் கன்னத்தைத் தொட்டுக் காட்டினாள்.

“கம் அண்ட் கிஸ் மீ”

சந்தீப் திகைத்து என்ன செய்வதெனப் புரியாமல் விழிக்கவும் கண்களைத் திறந்தவள் “என்னாச்சு? பயமா இருக்கா? என்கிட்ட சேலஞ்ச் பண்ணுறதுக்கு முன்னாடி இனிமே யோசிச்சுக்க. சரியா?” என்று அவனது கன்னத்தில் தட்டிவிட்டுப் படுக்கையில் வசதியாகப் படுத்து கம்ஃபோர்டரை மூடிக்கொண்டாள்.

அவளது விரல்கள் பட்ட கன்னத்தை வருடிக்கொண்டவன் மேற்கொண்டு எதையும் யோசித்து மூளையைக் குழப்பிக்கொள்ள விரும்பாமல் அவனும் படுத்துக்கொண்டான்.

அந்த அறையைக் கவ்விய இருள் எந்த வகையிலும் மோனநிலையைக் கொடுக்கவில்லை. மாறாய் புதிதாய் உறவில் இணைந்த இரு அழகிய உள்ளங்களுக்கு இதமான ஒரு ஆசுவாசத்தைக் கொடுத்து நித்திரையில் ஆழ்த்தியது.

இரவில் எப்படி புதியதொரு உறவில் சின்னச் சின்ன தடுமாற்றத்தை உணர்ந்தானோ அப்படியே மறுநாள் விடியலும் சந்தீப்பைக் கொஞ்சம் திகைக்க வைத்தது.

கண் விழித்ததும் சட்டென ப்ரியம்வதாவின் வதனம் அவனது பார்வைக்குக் கிடைத்துவிட்டது.

முன் நெற்றியில் பரவிக் கிடந்த பேங்க்ஸாக வெட்டப்பட்ட குட்டி முடிகள் அவளைக் குழந்தையாய்க் காட்ட முயன்று கொண்டிருந்தன.

ஆனால் அழகான வதனமும், கிள்ளத் தூண்டும் கன்னங்களும், சதைப்பிடிப்பான செவ்விதழ்களும், மூடிக் கிடந்த பெரிய கண்களும் அவளை அழகியாகக் கட்டமைத்துவிட்டதால் விழிகளை விலக்க முடியாமல் உறைந்து போனான் அவன்.

எங்கிருந்தோ வந்து ஒட்டிக்கொண்டது துணிச்சல். மெல்ல உயர்ந்த அவனது கரம் ப்ரியம்வதாவின் சிகையை வருடிக்கொடுத்தது.

தொடுதல் என்பது பார்வை, பேச்சைக் காட்டிலும் ஆயிரம் செய்திகளைக் கடத்தும் கணவன் மனைவியிடையே! அனைத்து ஸ்பரிசங்களும் மோகத்தில் ஆரம்பித்துக் காமத்தில் முடிவதில்லை.

எப்படி முத்தங்களுக்குத் தனித்துவம் உள்ளதோ அதேபோல ஸ்பரிசங்களுக்கும் சில தனித்துவங்கள் இருக்கும்.

தொடுதல் இல்லாமல் உணர்வுகளைக் கடத்துவதும், உரிமையை அடையாளப்படுத்திக்கொள்வதும் சாத்தியமே இல்லாத ஒன்று. கணவன் மனைவியிடையேயான ஸ்பரிசத் தொற்றல்கள் குறைவது அவர்களிடையே இருக்கும் அந்நியோன்யம் தேய்வதற்கான அறிகுறி!

சந்தீப்புக்கு இதெல்லாம் தெரியாதா என்ன? காதல் இல்லாத முன்னெடுப்பாக இத்திருமணம் இருந்தாலும் ப்ரியம்வதாவுடன் கடனே என்று வாழ அவனுக்கு விருப்பமில்லை.

ஒரு பெண் அவனுக்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கும்போது அவளது துணிச்சலுக்கும் காதலுக்கும் ஆணானவன் மதிப்பளிக்க வேண்டும்தானே! அந்த மதிப்பும் மரியாதையும் மணிமகுடம் சூட்டிக்கொள்வது அவர்களிடையே காதலுடனான தாம்பத்தியம் கனியும்போதே!

இதெல்லாம் ஒரேயடியாக நிகழ்ந்துவிட முடியாது. நிகழ்ந்தால் அது இயற்கையாகவும் இயல்பாகவும் இருக்காது. சில உணர்வுகள், சில உறவுகள் படிப்படியாகவே பலம் பெறும். அதற்கான முதல் படியில் சந்தீப் இப்போது நிற்கிறான்.

முந்தைய இரவின் தடுமாற்றமின்றி அவனால் திடமாய் ப்ரியம்வதாவின் கூந்தலை உரிமையாய்த் தீண்ட முடிந்தது. தீண்டலின் முடிவில் குறுகுறுத்த விரல் நுனிகளைக் கண்களைச் சுருக்கிப் பார்த்து அதிசயிக்க முடிந்தது. இவை அனைத்தும் ப்ரியம்வதா அறியாமல் நடந்தேறிய அழகான சின்னச் சின்ன ரசனைத் தருணங்கள்!

அவளது உறக்கத்தைக் கலைக்காமல் மெதுவாக எழுந்தவன் குளித்து முடித்து வந்தபோது கண்களைக் கசக்கிக்கொண்டு மெத்தை மீது அமர்ந்திருந்தவளிடமிருந்து குறும்புத்தனமான விசில் ஒலி!

சந்தீப் புரியாமல் விழிக்கும்போதே மூன்று விரல்களால் ‘சூப்பர்’ என அபிநயம் பிடித்தாள் ப்ரியம்வதா. கூடவே தலை சரித்து அவனைப் பார்த்தவளின் விழிகளில் விஷமத் தீற்றல்கள்!

அவள் உறங்கியிருப்பாள் என்று எண்ணி டவலோடு வந்து நின்றவனின் சிகையிலிருந்து சொட்டுச் சொட்டாய் விழுந்த நீர்த்திவலைகள் ஆடையற்ற மேனியை வருடிக்கொண்டிருந்தன.

“ரெகுலரா ஒர்க் அவுட் பண்ணுவியோ? நல்ல மசில் உனக்கு. இவ்ளோ ஹேண்ட்சம்மான ஆளு என் புருசன்னு சொல்ல எவ்ளோ கர்வமா இருக்கு தெரியுமா?”

சந்தீப் குறுகுறுப்போடு திரும்ப முயலவும் வேகமாக எழுந்து சென்று அவனது குறுக்கே வந்து நின்றாள்.

“ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது” என்று கிண்டலாய் சொன்னபடி நீர்த்திவலைகள் ஓடிய அவனது இடப்பக்க நெஞ்சில் குறும்புப்பார்வையோடு தனது ஆட்காட்டிவிரலை வைத்தவள் பின்னர் தன் கையைப் பதித்த அடுத்த நொடியில் தடதடத்த அவனது இதயத்தின் ஓசையை உள்ளங்கையில் உணர்ந்தாள்.

“ஏன் ஹார்ட்பீட் இப்பிடி அடிக்குது? காதல் எனக்கு வரம்னு சொன்னவனுக்கு இப்ப என்ன டென்ஷன்? ரிலாக்ஸ்! டீனேஜ் பாய் மாதிரி எல்லாத்துக்கும் ஷாக் ஆகாம சில விசயங்களை ஈசியா எடுத்துக்க சந்தீப்”

பெரிய மனுஷி போலத் தனக்கு அறிவுரை சொல்பவளை ஆச்சரியமாய் ஏறிட்டான் சந்தீப்.

ப்ரியம்வதா உடனே தனது கைகளால் கண்களை மூடிக்கொண்டாள்.

“இப்பிடி பாத்துப் பாத்தே ஆளை கவுத்துடுவ நீ” என்று குறை சொன்னவள் பின்னர் ஒவ்வொரு விரலாக எடுத்துக் கள்ளப்பார்வை பார்க்க எதிரில் நின்றவனுக்குத்தான் மூச்சுக்காற்றுக்கு அலையுமளவுக்குத் திணறல்.

வயது வித்தியாசம், தலைமுறை மாற்றம், மனநிலையில் உண்டாகும் தடுமாற்றம் என எத்தனையோ தடைகள் அவளை மணக்கும் முன்னர் பூதாகரமாகத் தெரிந்தன அவனுக்கு. இப்போதோ அவற்றைக் கடந்து பிரம்மாண்டமாய் விஸ்வரூபமெடுத்து நிற்பவள் ப்ரியம்வதா மட்டுமே!

அவனது மனநிலையைக் கண்டுகொண்டவள் கள்ளப்பார்வையை மாற்றிக்கொள்ளவில்லை.

“லவ்லயும் இண்டிமசிலயும் ஆம்பளைங்கதான் ஃபர்ஸ்ட் ஸ்டெப் எடுத்து வைக்கணும்ங்கிறது உலகமகா பூமர்த்தனம். எனக்கு அதெல்லாம் பிடிக்காது. இங்க நான் ஃபர்ஸ்ட் ஸ்டெப் எடுத்து வைக்குறேன்.”

பேச்சு முடிவடைந்தபோது அவனை அதீதமாய் நெருங்கியிருந்தவள் கண்களில் காதல் சுடர்விட சந்தீப்பின் குறுமுடிகள் எட்டிப் பார்த்த தாடையில் முதல் முத்தத்தைப் பதித்தாள்.

குளித்து முடித்து வந்தவனின் சருமத்தின் குளிர்ச்சி அவளது உதடுகளைத் தீண்ட, அவள் கொடுத்த முத்தத்தின் வெம்மையோ அந்தக் குளுமையோடு போட்டியிட்டு அதை அடக்கியது.

கண் மூடி நின்றவளின் உதடுகள் ஒரு கன்னத்திலும் அவளது ஒரு கரம் மற்றொரு கன்னத்திலும் படிந்திருக்க மெல்லிய குரலில் “ஐ லவ் யூ சந்தீப்” என்றாள்.

சந்தீப்புக்கு அவளது அருகாமையே பெரும் சோதனையாய்! உடனடியாய் ஏற்கவும் முடியாமல் ஒரேயடியாய் விலக்கவும் முடியாத பேரவஸ்தையாய்! தவிப்பிலும் தடுமாற்றத்திலும் திணறடிக்கும் அவளது அண்மை அவனைத் தகிக்கும் தடாகத்தில் தள்ளுவதாய்!

முத்தம் எந்தக் காரணத்துக்காகக் கொடுக்கப்பட்டதோ அந்தக் காரணம் கொடுக்கப்பட்டவனுக்கு விளங்கிய பிறகு தவிப்பும் அவஸ்தையும் இருந்து என்ன புண்ணியம்?

ப்ரியம்வதா மெல்ல விலகிக்கொண்டவள் சந்தீப்பின் கன்னத்தைப் பற்றியிருந்த கையை மட்டும் அகற்றவில்லை. மாறாய் இன்னும் அழுத்தம் கூட்டிப் பற்றிக்கொண்டாள்.

“நீ ப்ரின்ஸ் சார்மிங்தான். ஆனா உணர்வுகள் உறைஞ்சு போன ஸ்னோ ஃப்ரீஸ்டு ப்ரின்ஸ் சார்மிங். சீக்கிரமா உன்னை இயல்பா மாத்துறேன் என் ஐஸ்கட்டி ராஜகுமாரா! நீயும் அதுக்குக் கொஞ்சம் கோ-ஆபரேட் பண்ணு.”

கையைக் குவித்து ‘கொஞ்சம்’ என்று நாசியைச் சுருக்கிக் காட்டியவளின் கோரிக்கையைத் தனது தலையசைப்பால் உறுதி செய்து ஏற்றுக்கொண்டான் சந்தீப்.

“அப்புறம் நாளையில இருந்து… இல்ல இல்ல… இன்னைக்கு நைட்ல இருந்து குட் நைட் கிஸ், குட்மார்னிங் கிஸ் எல்லாம் நமக்குள்ள சகஜம். நாம ஒரு டைம் டேபிள் போட்டுப்போம். ஏழு நாள்ல நாலு நாள் நான், மூணு நாள் நீ. சரியா?”

தீவிரமான குரலில் கை விரல்களை எண்ணிக் காட்டியபடி அவள் சொல்லிக்கொண்டே போக அமைதியாய் கவனித்தவனிடம் ஆச்சரியம் ததும்பும் புன்னகை.

“இதுக்கெல்லாமா டைம் டேபிள்?”

“அஃப் கோர்ஸ்! ஹஸ்பெண்ட் அண்ட் வைஃப்குள்ள ஒரு ஸ்பார்க் இருக்கணும். அழகான இண்டிமசி உருவாகணும். அதுக்காக டைம் டேபிள் போட்டு உழைச்சா என்ன தப்பு? இப்ப ப்ரெக்னன்ஸிக்கு ஓவுலேஷன் வச்சு ப்ளான் பண்ணுறாங்கல்ல, அதே மாதிரி இது இண்டிமசிக்கான ப்ளானிங்”

காதல், திருமணம், முதலிரவு, முதல் தொடுகை, தாம்பத்தியம், குழந்தைக்கான ஆவல் என அனைத்தையும் நாணத்தோடும், திணறல்களோடும் எதிர்கொண்ட பெண்களின் தலைமுறை எப்போதோ முடிந்துவிட்டது என்பதை ப்ரியம்வதாவின் பேச்சிலிருந்து புரிந்துகொண்டான் சந்தீப்.

தேவையற்ற இழுவைகள் இல்லாத ஈராயிரக் குழவிகளின் காதல் எந்தளவுக்கு அதிரடியானதோ அந்தளவுக்கு அழுத்தமாகவும் வெளிப்படையாகவும் இருக்கும் என்பதைத் தனது செயல்கள் மூலம் அவனுக்கு உணர்த்திவிட்டாள் ப்ரியம்வதா.

“இண்டிமசி அதுவாவே மலரணும் ப்ரியா”

“அப்பிடியெல்லாம் மலராதுடா. சில விஷயங்களை நாம முயற்சி பண்ணலனா அது கடைசி வரைக்கும் நடக்காது. அடுக்குமொழில பேசி க்ரிஞ்ச் பண்ணாம சீக்கிரம் ட்ரஸ் சேஞ்ச் பண்ணு. நான் போதும் போதும்ங்கிற அளவுக்கு இந்த டவல் கோலத்தை ரசிச்சிட்டேன். ஓவர்டோஸ் ஆச்சுனா அப்புறம் ஃப்ரெஞ்ச் கிஸ் குடுத்துடுவேன். சீரியஸ்லி யூ ஆர் டூ ஹேண்ட்சம் டூ ஹேண்டில்.”

ப்ரியம்வதா சொல்லச் சொல்ல சந்தீப்பின் உதடுகள் புன்னகையைத் தவிர்க்க முடியாமல் தவித்தன.

“பதிலுக்கு நானும் க்யூட்டா இருக்கேன்னு சொல்லணும் நீ” எனக் குறைபட்டவளின் சிகையைக் கலைத்துவிட்டான் அவன்.

“நீ க்யூட்னு எனக்குத் தோணுச்சுனா கட்டாயம் சொல்லுவேன். இப்ப போய் ப்ரஷ் பண்ணிட்டு ஆபிசுக்கு ரெடியாகு.”

அவனது கையைத் தலையிலிருந்து தட்டிவிட்டாள் ப்ரியம்வதா.

“க்யூட்ங்கிற வார்த்தைய நீ டிக்‌ஷனரில தேடுனனா அதுக்கு அர்த்தம் ப்ரியம்வதானு இருக்கும். என்னையவே கலாய்க்குறல்ல? இதான் இந்த ஆம்பளைப் பசங்களை வெளிப்படையா ரசிக்கவே கூடாது.” என்று குறை சொன்னவள் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு குளியலறைக்குள் போய்விட்டாள்.

கதவை அடைக்கும் முன்னர் அவனைப் பார்த்து உதட்டைச் சுழித்து அழகு காட்டியவளின் உபயத்தால் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தீப்பின் காலைப்பொழுது சுவாரஸ்யமாக நகர்ந்தது.

NM Tamil Novel World

📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!

 

Share your Reaction

Loading spinner