எல்லாருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். சிலருக்கு டாக்டர், சிலருக்கு இன்ஜினியர், சிலருக்கு டீச்சர். ஆனா எனக்கு எப்பவுமே புத்தகங்கள்தான் உசுரு. சின்ன வயசுலேயே அப்பா லைப்ரரிக்குக் கூட்டிட்டுப் போவார். அங்கே வரிசையா அடுக்கி வச்சிருக்கிற புத்தகங்களைப் பார்த்தாலே மனசுக்கு ஒரு சந்தோஷம் வரும். லைப்ரேரியன் ஆகணும்ங்கிறது என் ஆசை வந்ததும் அப்பிடித்தான். இந்தப் புத்தகங்களுக்கு நடுவுல, அதோட வாசனையோடவே வாழ்நாள் பூரா இருக்கணும்னு ஆசை. ஸ்கூல் முடிச்சதும், லைப்ரேரி சயின்ஸ் படிக்கணும்னு சொன்னப்ப, “அதை படிச்சு என்ன பண்ணப் போறே? வேற ஏதாவது நல்ல கோர்ஸ் எடுத்துப் படி”ன்னு பலரும் சொன்னாங்க. புத்தகங்கள் படிக்கிறதால கிடைக்கிற அறிவு, சந்தோஷம் வேற எதுலயும் கிடைக்காதுன்னு எனக்குத் தெரியும். அந்த அறிவை மத்தவங்களுக்கும் கொண்டு சேர்க்கிற வேலை எவ்வளவு புண்ணியம்னு நான் நினைச்சேன். சீக்கிரம் எம்.காமை முடிச்சிட்டு என் கனவு பக்கம் நகரணும்.
-விழியின் மொழி
முதுகலை முதலாமாண்டு வணிகவியல் வகுப்பில் நிலைகொள்ளா தவிப்போடு அமர்ந்திருந்தாள் மலர்விழி. சுற்றிலும் வகுப்பில் இருக்கும் சக மாணவிகள், மாணவர்களின் கவனம் எல்லாம் அவள்மீதே!
கல்லூரியின் கரெஸ்பாண்டெண்டுடன் ஒரே காரில் வந்து இறங்கியதை விட அவள் கழுத்தில் போட்டிருந்த மஞ்சள் கயிறுதான் இப்போதைய ‘செண்டர் ஆப் அட்ராக்சன்.’
“நீ கேளுடி!”
“நான் கேக்கமாட்டேன்பா. இதுவரை மலர் கிட்ட நான் பேசுனதில்ல. இதுக்கு மட்டும் பேசுனா அவ என்ன நினைப்பா?”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“அப்ப ஈஸ் கிட்ட பேசு. அவ சொல்லுவா”
“மலராச்சும் சிரிப்பா. ஈஸ் வாயைக் கிழிச்சிடுவாடி”
இப்படி சலசலப்புகள் கேட்ட வண்ணம் இருக்க மலர்விழிக்கு எப்போது பேராசியர் வந்து வகுப்பு ஆரம்பிக்குமென்ற தவிப்பு இன்னும் அதிகமானது.
நல்லவேளையாக மார்க்கெட்டிங் எடுக்கக்கூடிய பேராசிரியர் வந்துவிடவும் வகுப்பு அமைதியானது. வருகை பதிவேட்டில் வகுப்புக்கு வந்தவர்களின் விபரத்தைப் பதிந்துவிட்டு பாடம் நடத்தத் தொடங்கிவிட்டார்.
நிம்மதி என நினைத்துப் பாடத்தில் ஆழ்த்துபோனாள் மலர்விழி. அவளுக்கு அக்கவுண்டண்சி தவிர மற்ற பாடங்கள் மீது அவ்வளவாக விரோதமில்லை.
ஆனால் சோகம் என்னவென்றால் அடுத்த வகுப்பு அக்கவுண்டன்சிதான்.
அவள் பாடத்தில் ஆழ்ந்திருந்த நேரம் பியூனை அலுவலக அறைக்கு வரவழைத்திருந்த மகிழ்மாறன் “எல்லா க்ளாஸ் ரூமுக்கும் வாங்கியாச்சா? இந்த லேபிள்ஸை எல்லா ஸ்வீட் பாக்ஸ் மேலயும் ஒட்டிடுங்க” என்று கட்டளையிட்டான்.
பியூனும் ‘Sealed with love from Magizhmaran and Malarvizhi’ என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட லேபிளை ஒவ்வொரு ஸ்வீட் பாக்சிலும் ஒட்டினார்.

ஒட்டிய பிறகு “இதை எல்லா க்ளாஸ் ரூம்லயும் குடுத்துடுங்க. எதுக்குனு கேட்டா கரெஸ்பாண்டெண்ட் மகிழ்மாறன் கல்யாணம் முடிஞ்சதுக்கான ஸ்வீட்ஸ்னு சொல்லுங்க. எம்.காம் ஃபர்ஸ்ட் இயர் க்ளாஸ் ரூம்ல குடுக்குறப்ப மட்டும் எஸ்.மலர்விழிங்கிற பொண்ணை டிஸ்ட்ரிபியூட் பண்ணச் சொல்லுங்க. அவங்கதான் என் ஒய்ப்” என்று சொல்லி அனுப்பிவைத்தான்
இதை முடித்த பிறகுதான் அவனுக்கு ஆசுவாசமாக இருந்தது. முந்தைய தினம் மற்றவர்களுக்கு எவ்வளவு பரபரப்பும் பதற்றமும் பயமும் இருந்ததோ அதே அளவுக்கு அவனுக்கும் இருந்தது.
எப்படியோ அவன் பிரச்சனையைச் சமாளித்துவிட்டான். அதற்காக நிம்மதியடைந்துவிட முடியாதல்லவா! இந்தத் திடீர் திருமணத்தால் மலர்விழிக்கு எந்தவித அசௌகரியமும் நேராமல் காப்பது தனது கடமையென எண்ணியே கல்லூரியிலிருக்கும் அனைத்து வகுப்புகளுக்கும் இனிப்பு அளிக்க முடிவு செய்தான்.
அந்த இனிப்புப்பெட்டிகளில் மகிழ்மாறன் – மலர்விழி என்ற பெயர் அச்சிட்ட லேபிளை ஒட்டியதற்கும் காரணம் இருக்கிறது. இந்நேரம் தன்னோடு மலர்விழி காரில் வந்தது கல்லூரியில் பேசுபொருளாகியிருக்கும்.
அவளது வகுப்பினர் அவளைக் கேள்விகளால் துளைத்தெடுக்க வாய்ப்புள்ளது. அந்த அசௌகரியம் அவளுக்கு வேண்டாமென எண்ணியே இந்த ஏற்பாடைச் செய்திருந்தான் மகிழ்மாறன்.
மற்ற கல்லூரிகள், பள்ளிகளுக்கும் அனுப்பிவிட்டால் இந்தக் கல்லூரியில் மட்டும் இனிப்பு வழங்கியது உறுத்தலாகத் தெரியாது என்ற யோசனையும் கூடுதலாகத் தோன்றியது.
உதவியாளர் மூலம் அந்த யோசனையைச் செயல்படுத்தச் சொன்னவன் பின்னர் கல்லூரி முதல்வரோடு மகளிர் விடுதியை மட்டும் பார்வையிடக் கிளம்பினான்.
அதே நேரம் வகுப்புக்குள் பியூன் இனிப்புப்பெட்டிகளுடன் வருவதை ஈஸ்வரி கண் காட்டியதும் கவனித்தாள் மலர்விழி.
அக்கவுண்டன்சி எடுத்துக்கொண்டிருந்த பேராசிரியை மீனா என்னவென விசாரிக்கவும் “கரெஸ்பாண்டெண்ட் சாருக்கு மேரேஜ் ஆகிடுச்சாம். அதுக்காக ஸ்டூண்ட்சுக்கு ஸ்வீட் குடுக்கச் சொல்லி அனுப்புனாங்க” என்றார் அவர்.
“புவனேந்திரன் சாருக்குத்தானே மேரேஜ் ஆச்சு?” கல்லூரியின் ஊழியர்களுக்கு அழைப்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் பேராசிரியையால் திருமணத்துக்குச் செல்ல முடியாத நிலை.
மணப்பெண் மாறிய விவரம் ஸ்டாஃப் ரூமில் அரசல் புரசலாகப் பேசியபோது கூட புரியாமல் வகுப்புக்கு வந்தவர் திருமணம் மகிழ்மாறனுக்கு என்றதும் கொஞ்சம் அதிர்ந்துதான் போனார்.
அடுத்த அதிர்ச்சி பெட்டியிலிருந்த லேபிளில் இருந்த பெயர்கள்.
மகிழ்மாறன் – மலர்விழி!
அவர் அதிரும்போதே “சாரோட ஒய்ப் இந்தக் கிளாஸ்ல படிக்குறாங்களாம். அவங்க கையால ஸ்வீட் குடுக்க சொன்னாங்க” என்று சொல்ல
“அப்பிடியா? சார் ஒய்போட பேர் என்ன?” என்று அவர் வினவ
“எஸ். மலர்விழி” என்றார் பியூன்.
இங்கோ மலர்விழிக்குத் திகைப்பு. தன் பெயரைச் சொன்னதுமே தானாகவே எழுந்து நின்றுவிட்டாள்.
மாணவர்களின் கவனம் அவள் பக்கம் திரும்பியது.
“நீயா?” ஆச்சரியமாகக் கேட்டார் பேராசிரியை மீனா.
“ஆமா மேம்!.. நேத்து… நேத்துதான் கல்யாணம் முடிஞ்சுது” என அவள் சொல்லவும் ஈஸ்வரியைத் தவிர அங்கிருந்த அனைவருக்கும் வியப்பும் ஆச்சரியமும் பெருகியது.
எப்படி இது சாத்தியமென யோசித்து மண்டையை உடைத்துக்கொள்ள, மகிழ்மாறனின் கட்டளைக்கேற்ப அவர்களுக்கு இனிப்பு வழங்கினாள் மலர்விழி.
“தேங்க்ஸ்” அசட்டுச்சிரிப்புடனுடன் சிலராலும், அதிர்ச்சியும் ஆச்சரியமுமாகச் சிலராலும் இந்த வார்த்தை உச்சரிக்கப்பட்டது.
பேராசிரியையிடம் கொடுக்கும்போது “கங்கிராட்ஸ்மா” என்றார் சங்கடமானப் புன்னகையோடு.
மலர்விழி தனது இடத்தில் அமர்ந்தவள் “இதெல்லாம் தேவையா? எல்லாரும் என்னை ஒரு மாதிரி பாக்குறாங்க ஈசு” என்று முனகவும்

“ப்ச்! அதுக்காகச் சொல்லாம இருக்க முடியுமா? கரெஸ் சார் சரியாதான் பண்ணிருக்கார். நாளைக்கும் நீ அவர் கார்ல தான் காலேஜுக்கு வருவ. டெய்லி இதைப் பாக்குறவங்க உன்னைத் தப்பா பேசிடக்கூடாதுனு முன்ஜாக்கிரதையா யோசிச்சிருக்கார் அவர். இதுக்கு நீ அவருக்குத் தேங்க்ஸ் சொல்லணும்” என்றாள் ஈஸ்வரி மெல்லிய கண்டிப்புடன்.
அன்றைய தினம் மதியவுணவுக்குப் பிறகு ஈஸ்வரியுடன் புக் ஷாப்புக்குக் கிளம்பினாள் அவள்.
“இனிமே இதெல்லாம் தேவையா?”
“அவர்தான் போனு சொன்னார் ஈசு”
“அது என்னடி அவரு இவரு சுவருனு? நல்லாவேல்ல கேக்குறதுக்கு”
அந்நேரத்தில் மகிழ்மாறனின் குரலே செவியில் ஒலித்தது போன்ற பிரமை மலர்விழிக்கு.
பேருந்திலேறியதும் கன்னத்தில் கையூன்றியபோது காலையில் அவனது பெருவிரல் ஒற்றிய தருணம் நினைவுக்கு வந்தது.

“ஜன்னல் பக்கம் உக்காராதனு சொன்னா கேக்குறியா? பாரு, வெயிலோட சூட்டுல முகம் சிவந்து போயிடுச்சு” என்றாள் ஈஸ்வரி.
முகச்சிவப்புக்கு வெயில் காரணமில்லை என்பதை அவள் எப்படி அறிவாள்!
மலர்விழிக்குச் சிரிக்கவும் முடியாமல், தன் மனவுணர்வுகளை வெளிப்படுத்தவும் தெரியாமல் ஒரு மாதிரியான தவிப்பான நிலை! இப்படி எல்லாம் இதுவரை உணராதவளுக்கு இது ஒரு புதிய, வினோதமான அனுபவமாகத் தோன்றியது.
‘இதற்கெல்லாம் நீ பழகிக்கொள்ள வேண்டும்’ திருமதி மகிழ்மாறனின் மனசாட்சி மகிழ்மாறனைப் போல அவளுக்கே அறிவுரை சொன்னது.
உணர்வுகளின் ஊசலாட்டத்தில் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது கூட புத்தியில் உறைக்கவில்லை.
“ஸ்டாப் வந்தாச்சுடி” என்று உலுக்கி அவளைத் தன்னோடு இழுத்துச் சென்றாள் ஈஸ்வரி.
புதுமணப்பெண்ணின் நிலை இவ்வாறு இருக்க, அவளது அன்னை சம்பந்தியம்மாளுடன் தயக்கத்துடன் மொபைலில் பேசிக்கொண்டிருந்தார்.
“கல்யாணம் திடுதிடுப்புனு முடிஞ்சு போச்சு. எங்க பொண்ணுக்கு நாங்க செய்யுறதைச் செஞ்சுடணும்ல சம்பந்தி.”
“நீங்க நகை ரொக்கத்தைப் பத்தி பேசுறிங்களா சம்பந்தி?” சிவகாமி வெளிப்படையாகவே கேட்டுவிட்டார்.
மறுமுனையில் குழலிக்குத் தயக்கம்.
“ஆமா சம்பந்தி. மாமாவும் அக்காவும் மதுக்கு எவ்ளோ செய்யுறதா சொன்னாங்கனு தெரியல. அவங்க அளவுக்கு எங்களால செய்ய முடியாது. எங்க வசதிக்கு ஏத்த மாதிரி மலருக்குப் பத்து பவுன் சேர்த்து வச்சிருக்கோம். அதை போடுறோம். மாப்பிள்ளைக்குத் தீபாவளிக்கு மோதிரம்…”

“இருங்க இருங்க. இதெல்லாம் இப்ப பேசுறதுக்கு என்ன அவசியம் இருக்கு? முதல்ல நீங்க என் கிட்ட தயங்காம பேசுங்க. முறை, சம்பிரதாயம் எல்லாம் எனக்கும் முக்கியமா தெரிஞ்சது உண்டு. அதுக்காக மனுசங்களை நான் மரியாதை குறைவா நடத்துறதில்ல. உங்க பொண்ணுக்குச் செய்யுறது உங்க விருப்பம். ஆனா மாறன் இதெல்லாம் விரும்ப மாட்டான். சபைல எங்க மானம் போகாம காப்பாத்துனவ மலர். அவளை விடவா நகையும் ரொக்கமும் பெருசு?”
சிவகாமி இவ்வாறு சொன்னதில் மனமெல்லாம் பூரித்துப் போனது குழலிக்கு. மகளின் அவசர கல்யாணத்தால் அவளது மரியாதை கேள்விக்குறியாகுமோ என்று பயந்த குழலிக்கு இப்போது சந்தோசத்தால் இதயம் நிரம்பிவிட்டது.
எப்படியும் மகளுக்கெனச் சேர்த்து வைத்த நகைகளை அவளிடம் ஒப்படைக்கும் எண்ணத்தில் மாற்றுக்கருத்து இல்லை அவருக்கு. ஆனால் அதைச் செய் இதைச் செய் என்று பிடுங்கியெடுக்கும் சம்பந்திகள் அமையாதது வரமே என்று எண்ணிக்கொண்டார்.
மறுவீட்டுச் சம்பிரதாயத்தை ஞாயிறன்று வைத்துக்கொள்ளலாமெனச் சிவகாமி கூறிவிட, இருவரும் தாலி பிரித்துக் கோர்ப்பதற்கு நல்ல நாள் எதுவெனப் பேசிவைத்துக்கொண்டார்கள்.
உரையாடலின் முடிவில் மதுமதி பற்றி ஏதேனும் தகவல் தெரிந்ததா என விசாரிக்கத் தவறவில்லை சிவகாமி.
“பெரிய மாப்பிள்ளையோட ஃப்ரெண்ட் போலீஸ்ல இருக்கார். அவர் விசாரிச்சதுல மது ஜாம்நகர் எக்ஸ்ப்ரஸ்ல காலைல ஏறுனது தெரிய வந்திருக்கு. அங்க போய் விசாரிக்கணும்னு பேசிட்டிருந்தாங்க சம்பந்தி. வேற எதுவும் எனக்குத் தெரியாது. அவங்க வீட்டு விவகாரத்தை எங்க கிட்ட சொல்லமாட்டாங்க. நானும் கேட்டுக்குறதில்ல. ஷண்மதி சொன்னதால இந்தத் தகவல் தெரிஞ்சுது” என்றார் குழலி.
கூடவே “மது ரொம்ப நல்லப்பொண்ணு. ஏன் அவ புத்தி இப்பிடி மாறிடுச்சுனு தெரியல” என்று வருத்தமும் பட்டார்.
சிவகாமிக்கு அவள் மீது வருத்தம் டன் கணக்கில் இருந்தது. இரு குடும்பங்களைத் தலைகுனிய வைத்தவளாயிற்றே! இருப்பினும் அவளுக்கு என்னவாகியிருக்குமோ என அவரது மகன் உள்ளுக்குள் மருகுகிறான். அவனுக்காக விசாரித்தார்.
இதை எல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு நீ என்ன செய்யப்போகிறாய் என்று புவனேந்திரனிடம் கேட்டதற்கு வேதனையோடு கூடிய சிரிப்பே அவனது பதிலாக வந்தது.
பாவம்! ஹோட்டலுக்குக் கூட செல்ல மனமில்லாமல் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்தான்.
எந்த அன்னையால் தன் மகன் இப்படி இருப்பதைப் பார்த்த பிறகும் சும்மா இருக்க முடியும்? அவருக்கு மாணிக்கவேலு குடும்பத்தினருக்குப் போன் பேச விருப்பமில்லை.
அதனால் குழலியிடம் விசாரித்தார்.
ஜாம்நகர் செல்லும் அளவுக்கு இந்தப் பெண்ணுக்குத் திருமணநாளில் என்ன அவசியம் நேர்ந்துவிட்டது? ஒருவேளை உறவுக்காரப்பெண்கள் பேசியது போல் காதலாக இருக்குமோ?
எதுவாக இருந்தால் என்ன என்று தலையை உலுக்கியவர் புவனேந்திரனிடம் அச்செய்தியைச் சொல்லப் போய்விட்டார்.
அதே நேரம் அவரது இளையமகன் கல்லூரி மாணவர்களின் விபரங்கள் அடங்கிய டேட்டாபேசில் இருந்து மலர்விழியின் மொபைல் எண்ணை எடுத்து தனது மொபைலில் பதிந்துகொண்டான்.
அது நிச்சயமாக குழலி, சிகாமணியின் எண் இல்லை என அவனுக்குத் தெரியும். சிகாமணியின் எண்ணை அவரை மளிகைக்கடையில் சந்தித்தபோதே வாங்கிக்கொண்டான்.
குழலியின் மொபைல் எண் எண்பத்து ஒன்பதில் ஆரம்பிக்கும் எனக் காலையில் மலர்விழியின் மொபைல் தொடுதிரை அவனுக்குக் காட்டிக் கொடுத்திருந்தது.
இங்கே இருந்த எண் எழுபத்தொன்பதில் ஆரம்பித்திருந்தது. அப்படி என்றால் கட்டாயம் மலர்விழியின் எண்ணாகத் தான் இருக்கவேண்டும்.
மாலையில் வழக்கம் போல முன்னீர்பள்ளத்தில் இருக்கும் அவர்களின் இண்டர்நேஷனல் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் முன்னர் மலர்விழியின் மொபைல் எண்ணுக்கு அழைத்தான் மகிழ்மாறன்.
புதிய எண் என்பதால் மலர்விழி அழைப்பை ஏற்கவில்லை. இரண்டு மூன்று முறை அழைத்ததும் அழைப்பு ஏற்கப்பட்டது.
எடுத்ததுமே “யாருங்க இது? ஒரு தடவை கால் அட்டென்ட் பண்ணலனா மறுபடி கால் பண்ணக்கூடாதுங்கிற சின்ன மேனர்ஸ் கூட இல்லாம மறுபடி மறுபடி கால் பண்ணுறிங்க?” என்று சிடுசிடுப்புடன் ஒலித்தது மலர்விழியின் குரல்.
இவளுக்கு எரிச்சல் கோபமெல்லாம் கூட வருமா?
“நான் தான் பேசுறேன்”
பெயரைக் கூட சொல்லவில்லை. மறுமுனை அமைதியாகிவிட்டது.
“ஹலோ! லைன்ல இருக்குறியா?”
“இருக்கேன்” சட்டெனப் பதில் வந்தது.
“எத்தனை மணிக்கு உன் பார்ட் டைம் ஜாப் முடியும்?”
“ஏன் கேக்குறிங்க?”

“ஏன்னா அதுக்கு அப்புறம் மிசஸ் மகிழ்மாறனா என் கூட இருக்கணுமே. அதான் கேக்குறேன்”
சீண்டலாக ஒலித்த அவனது குரலில் விசமம் கலந்திருந்ததோ? ஐயமுற்றாள் மலர்விழி.
“என்ன பதில் வரல?”
“அது… இப்ப வேலை முடிஞ்சிடும். நான் வீட்டுக்குக் கிளம்பிடுவேன்”
“எப்பிடி வருவ?”
“பஸ் இருக்கே”
“நான் வந்து உன்னைப் பிக்கப் பண்ணிக்கிறேன்”
“ஐயோ வேண்டாம்” அவசரமாக மறுத்தவள் திடுமென நினைவு வந்தவளாக “என் நம்பர் உங்களுக்கு எப்பிடி கிடைச்சுது?” என்று கேட்க
“நீ படிக்குற காலேஜ்ல நான் கரெஸ்பாண்டெண்ட். மறந்து போச்சா? நியாயப்படி நீ என் நம்பரைக் கேட்டு வாங்கியிருக்கணும். வாங்கல, அதான் நானே ஸ்டூடண்ட் டீடெய்ல தேடி எடுத்து சேவ் பண்ணிக்கிட்டேன். இன்னும் அரைமணி நேரத்துல புக் ஷாப் முன்னாடி கார் வந்து நிக்கும். ரெடியா இரு” என்றவன் அழைப்பைத் துண்டிக்கப் போனான்.
“சரிங்க” என்றவளிடம் சார் காணாமல் போயிருந்ததை அறிந்து புன்சிரிப்பு மலர்ந்தது அவன் வதனத்தில்.
“என் நம்பரைச் சேவ் பண்ணிக்க” என்றான் சலுகையாய்.
“ம்ம்”
“என்னனு சேவ் பண்ணுவ?”
மலர்விழி இப்போது திருதிருவென விழிப்பாள் எனக் கற்பனையில் பார்த்தபடியே வினவினான்.
“மகிழ் மாமா”
சுருக்கமாக அவள் சொன்னதும் மெச்சுதல் தொனியில் “நாட் பேட்! நல்ல முன்னேற்றம். இதையே ஃபாலோ பண்ணு” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
மலர்விழியோ இப்போதுதான் சீராக மூச்சு விட்டாள். அது என்னவோ மகிழ்மாறனைக் கற்பனையில் நினைத்தால் கூட அவளுக்கு ஒருவித தயக்கம் வந்து ஒட்டிக்கொள்கிறது.
‘மகிழ் மாமா’ என்ற பெயருடன் அவனது பெயரைத் தனது மொபைலில் பதிந்துவைத்தாள் சின்ன குறுகுறுப்புடன்.
PDF திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction