மையுலக மாயத்தில் மயங்கியவள்
மெய்யுலக வீதியில் மெல்லடி பதித்தாள்!
காகிதப் படகைக் கரையில் விடுத்து
நிஜத்தின் நதியில் நீந்தப் பழகினாள்!
-அட்சரனின் வேதா
“பிருந்தாவோட கதைல நீ சொன்ன சேஞ்சஸ் எல்லாத்தையும் பாத்துட்டேன் அச்சு. இன்னும் ஒன் வீக் டைம் வேணும் எடிட் பண்ணுறதுக்கு”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இலக்கியா சொல்லவும் சரியெனத் தலையசைத்தான்.

“கவிநேசன் புக் வேலை எல்லாம் முடிஞ்சுதா? அவரோட புக்குக்கு சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்குக்கான வேலைய சஞ்சய் எந்த லெவல்ல பண்ணிருக்கான்?”
“கவிநேசன் புக்கோட ஒர்க் ஃபைனல் ஸ்டேஜ்ல இருக்குடா. இன்னைக்கு முடிஞ்சிடும். சஞ்சய் அதுக்கான வேலையைத்தான் செஞ்சிட்டிருக்கான்” என்றவள் எப்போதும் தனது வேலை குறித்த விஷயங்களைப் பேசிவிட்டுக் கிளம்பிவிடுபவள் அங்கேயே நிற்கவும் என்னவென ஏறிட்டுப் பார்த்தான் அட்சரன்.
இலக்கியா தயங்கினாள். அட்சரனின் முகத்தில் கோபத்தின் சுவடு இல்லைதான். ஆனாலும் எங்கே தனது பேச்சால் மீண்டும் அவன் கோபத்தில் கொந்தளித்துவிடுவானோ என்ற யோசனை. பேசலாமா வேண்டாமா என்று யோசித்தபோதே அவளது முகபாவனையும் மாறியதைக் கண்டுகொண்டான் அட்சரன்.
“இப்ப எதுக்கு மைமிங் பண்ணிட்டிருக்க நீ? விஷயம் என்னனு சொல்லு”
அட்சரன் மேஜை மீது கைகளை ஊன்றிக்கொண்டு எழுந்தபடியே வினவினான்.
“அது… வேதா.. அவளும் நம்மகிட்ட மேனுஸ்கிரிப்ட் குடுத்திருந்தா. அந்த வேலைய எப்ப ஆரம்பிக்குறது அச்சு?”
கேட்டு முடித்ததும் அவனது முகத்தைக் கூர்ந்து கவனிக்கவும் செய்தாள். அங்கே கோபத்தின் சுவடில்லை. ஆழ்ந்த யோசனையின் விளைவால் உண்டான புருவச்சுருக்கம் மட்டுமே!
“அச்சு…”
“ஹான்! அவ கதைய பெண்டிங்ல வை. அவசரம் ஒன்னுமில்ல”
அலட்சியமாகச் சொன்னவனைத் திகைப்பாய்ப் பார்த்தாள் இலக்கியா.
“நம்ம பர்சனல் எமோஷன்ஸை வேலைக்குள்ள கொண்டு வரக்கூடாதுனு சொல்லுவியே அச்சு”
“நான் பர்சனல் எமோஷன்ஸை உள்ள கொண்டு வந்தா இந்நேரம் வேதாவோட மேனுஸ்கிரிப்ட் என் ஐபேட்ல இருந்து டெலீட் ஆகியிருக்கும்”
“ஏன் டிலே பண்ணணும் அச்சு? அதிகப் பக்கம் கூட இல்ல அவளோட கதை”
“ப்ரையாரிட்டி லிஸ்ட்ல பிருந்தாவும் கவிநேசனும் இருக்காங்களே இலக்கியா. அவங்க வேலைய முடிச்சிட்டு அப்புறமா பொறுமையா வேதாவோடதைப் பாக்கலாம்” என்று கட்டளையாய்ச் சொல்லிவிட்டான் அட்சரன்.
இலக்கியா பெருமூச்சுடன் அங்கிருந்து அகன்றுவிட அட்சரன் கைகளை நெட்டி முறித்தான்.
வீட்டில்தான் வேதவதியின் பெயரே கேட்டுத் தொலைகிறது என்றால் அலுவலகத்திலும் அவளது பெயர். சலிப்பும் எரிச்சலும் சேர்ந்தே உதயமானது அவனது மனதில்.
அந்நேரத்தில் அவனது மொபைலுக்கு அழைப்பு வந்தது பிருந்தாவிடமிருந்து. அழைப்பை ஏற்றதும் அருவியாய்க் கொட்டியது மலையாள வார்த்தைகள்.
“அட்சரன் ஃப்ரீயா இப்ப?”
“என்ன விஷயம்?”
“ரீடர்ஸ் கூட சின்னதா ஒரு மீட்டப். கோபாலபுரம் ரைட்டர்ஸ் கபேல. நீங்க வர்றீங்களா? நேத்து ரொம்ப சோர்வா பேசுனீங்களே”
அவள் அக்கறையாய்க் கேட்டதில் சின்னதொரு பாஸிட்டிவ் வைப் அட்சரனிடம். ஆனால் போகத்தான் வேண்டுமா என்று மனம் கேட்டது.
“உங்களுக்கு இஷ்டமில்லனா வேண்டாம் அட்சரன்”
“நோ நோ! நான் வர்றேன்.”
“தேங்க்யூ”
பிருந்தா அழைப்பைத் துண்டித்த பிற்பாடுதான் ஏன் இவ்வளவு அவசரப்பட்டு வருவதாகச் சொன்னோமெனத் தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.
அவனுக்கும் சின்னதொரு ஆசுவாசம் வேண்டும். கடந்த சில தினங்களாக இழந்த இயல்புவாழ்க்கை மீளவேண்டும். அதிகம் யோசிக்காமல் கார்ச்சாவியை எடுத்துக்கொண்டவன் அலுவலக அறையை விட்டு வெளியேறியதை முதலில் பார்த்தவன் சஞ்சய்.
“எங்கடா கிளம்புற?” அந்தக் கேள்வியில் இலக்கியாவும் அவளது அறையிலிருந்து எட்டிப் பார்த்தாள்.
“கோபாலபுரம் ரைட்டர்ஸ் கபே. பிருந்தா அங்க வரச் சொல்லி கால் பண்ணுனா” என்றான் அவன் சாவதானமாக.

“அவ கதைக்கு இன்னும் எடிட்டிங் ஆரம்பிக்கலயே?” – இது இலக்கியா.
“புக் ரிலேட்டடா இல்ல. அவளோட ரீடர்ஸ் மீட்டப் அங்க நடக்குது. அதுக்காகக் கூப்பிட்டா.”
“ஆனா அதுக்கு நீ ஏன் போகணும்?”
சஞ்சய் கேட்ட கேள்வி இலக்கியாவுக்கும் நியாயமானதாகவே தோன்றியது.
அட்சரன் பேண்ட் பாக்கெட்டுக்குள் கைகளை விட்டுக்கொண்டு தோள்களைக் குலுக்கினான்.
“போனா நல்லா இருக்கும்னு தோணுச்சு. கிளம்புறேன். இதுல என்ன இருக்கு?”
“நாம இதுவரை எந்த ரைட்டர் கூடவும் பர்சனலா மூவ் ஆனதில்ல அச்சு” எச்சரிக்கும் தொனி இலக்கியாவின் பேச்சில்.
சஞ்சயும் அதை ஆமோதிப்பவனாய்த் தலையசைத்தான்.
“ப்ச்! கடந்த சில நாட்களா என் வாழ்க்கை அவுட் ஆஃப் கண்ட்ரோலா போயிட்டிருக்கு. அதை இழுத்துப் பிடிக்க நான் இயல்பாகணும். புத்தகம், வாசகர்கள் வித் ரைட்டர்னு அந்த உலகம் வேற மாதிரி இருக்கும். அங்க போனா நல்லா இருக்கும்னு தோணுது.”
“போ அச்சு! ஆனா ஒன்னை மட்டும் மறந்துடாத. யூ ஆர் அ மேரீட் மேன் நவ்.”
அவன் மறக்கக்கூடாது என்பதற்காக இலக்கியா நினைவுறுத்தவில்லை. மறக்கும் அளவுக்குத் தனது நண்பன் அநியாயம் செய்பவனில்லை என அவளுக்கு ஆணித்தரமான நம்பிக்கை. ஆனால் அவனுக்குள் இருக்கும் ஈகோ இப்போது கொம்பு முளைத்த சாத்தானாக அல்லவா உருமிக்கொண்டிருக்கிறது? அது ஏடாகூடமாக அவனைச் சிந்திக்க வைத்துவிடக்கூடாது என்ற கவலையால் மட்டுமே நினைவுறுத்தினாள்.
“மேரீட் மேன்! வாவ்! அது உனக்குக் கல்யாணம்னு தோணுதா?” என்று அலட்சியமாக வினவியவன், “இம்பாசிபிள் இலக்கியா. நீயும் டிபிக்கல் இந்தியன் கேர்ள்னு நிரூபிச்சிட்ட” என்றான் போலியாய்ப் பாராட்டும் தொனியில்.
“அவ சொன்னது தப்பில்ல அச்சு. உன்னோட மேரேஜ் லைஃபுக்கு நீ கமிட்மெண்டோட இருக்கணும். அவ்ளோதான்”
சஞ்சயும் தன் பங்குக்குச் சொல்லிவிட்டு ஸ்டூடியோவுக்குள் போய்விட்டான். இலக்கியாவும் தோள்களைக் குலுக்கிவிட்டுச் செல்ல அட்சரனுக்குள்ளோ சொல்லவொண்ணா எரிச்சல்.
இத்தனைக்கும் காரணம் வேதவதி!
கடுப்பாய் வெளியேறியவன் காரிலேறி கோபாலபுரத்துக்கு விரைந்தான்.
ரைட்டர்ஸ் கபே – ஹிக்கின்ஸ்பாதம்ஸுடன் இணைந்த கபே. பழங்கால இந்தோ சரசனிக் (Indo-Saracenic) கட்டிடம் ஒன்றின் கீழ்த்தளத்தில் இயங்கி வந்த அந்த கபேவில் அச்சமயத்தில் கூட்டமில்லை.
அட்சரன் உள்ளே நுழைந்ததும் புத்தகங்கள் அடுக்கியிருந்த பகுதியிலிருந்து எட்டிப் பார்த்தாள் பிருந்தா.
“ஹேய் அட்சரன்!”
கேக், ப்ரெட், பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி அலமாரிகள் அடங்கிய பகுதியில் நின்றுகொண்டிருந்தவன் அவளை நோக்கிச் சென்றான்.
அவளது வாசகிகள் ஐந்து பேரும் அவளும் அமர்ந்திருந்தார்கள். கூடவே அவளது புத்தகங்களும். அது ஹிக்கின்ஸ்பாதம்ஸுக்கான பகுதி. புத்தகங்கள் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.
‘A room without a book is a room without a soul’ என்ற வாக்கியம் எழுதப்பட்டிருக்க அதைப் பார்த்தபடியே அமர்ந்தான் அட்சரன்.
“இவர் அட்சரன்! என்னோட லிட்டரரி ஏஜெண்ட்”
வாசகிகளிடம் அறிமுகமாகிக்கொண்டான் அட்சரன்.
“என்ன சாப்பிடுறீங்க?” அந்தப் பெண்கள் விசாரிக்க அவன் பணிவாய் மறுத்தான்.
“ப்ளீஸ் ஹேவ் அ பைட்” பிருந்தா வேண்டிக் கேட்டுக்கொண்ட பிறகு மார்கரீட்டா ஃப்ளாம்குச்சென் ஆர்டர் செய்தார்கள். கூடவே சூப்.
செவ்வக வடிவத்தில் பீட்சாவின் சுவையோடு வந்த ஃப்ளாம்குச்சென் நல்ல ருசி. கூடவே சூப்பும் சேர்ந்துகொள்ள அட்சரனுக்கு வயிறு நிறைந்தது.

அதோடு புத்தகங்கள் பற்றிய பேச்சு வேறு! ஏனோ சாதாரண விஷயங்களைப் பேசுபவர்களை விட புத்தகம் பற்றி, இலக்கியம் பற்றி உரையாடுபவர்கள் அட்சரனுக்கு அறிவுஜீவியாகத் தெரிவார்கள்.
அந்தப் பேச்சில் லயிக்க அவனுக்கும் பிடிக்கும். அதனாலேயே பிருந்தாவின் பேச்சு நீண்டுகொண்டே போனதும், கடிகாரத்தின் முட்கள் நிற்காமல் ஓடியதும் அவனுக்குத் தெரியவில்லை.
சரியாக ஒரு மணிக்கு அவன் வீட்டுக்குச் சாப்பிடப் போய்விடுவான். அன்று அதைத் தாண்டி அரைமணி நேரம் ஆகியும் வரவில்லை என்றதும் ராஜேஸ்வரியிடமிருந்து மொபைல் அழைப்பு வந்துவிட்டது.
அழைப்பை ஏற்றபோதுதான் தாமதமாகிவிட்டதே மனதில் உறைத்தது அவனுக்கு.
“ஹலோ மா! இன்னும் கொஞ்ச நேரத்துல…”
“நான் வேதா”
இருந்த உற்சாகம் தண்ணீர் ஊற்றினால் அமுங்கும் பால் நுரை போல உள்ளே போய்விட்டது அட்சரனுக்கு.
“நீ எதுக்கு அம்மா போன்ல இருந்து பேசுற? அம்மா எங்க?”
“அத்தை ரெஸ்ட் எடுக்குறாங்க. நீங்க சாப்பிட வரலனு கால் பண்ணச் சொன்னாங்க. என் ஃபோன்ல இருந்து பண்ணுனா நீங்க கால் அட்டெண்ட் பண்ணுவீங்களானு தெரியல. அதான் அத்தை மொபைல்ல இருந்து பண்ணுனேன்”

“எனக்குப் பசியில்ல. நான் லஞ்ச் சாப்பிட வரமாட்டேன்னு அம்மா கிட்ட சொல்லிடு”
“ம்ம்” என்றவள் அழைப்பைத் துண்டிக்கும் முன்னர், “அட்சரனுக்கு டெஸர்ட் ஆர்டர் பண்ணட்டுமா?” என்று கேட்டது ஒரு பெண் குரல்.
“வேண்டாம் பிருந்தா! ஆல்ரெடி சாப்பிட்டதே வயிறு ஃபுல்லா இருக்கு”
அட்சரன் பதில் சொல்வதும் கேட்டது.
வேதவதி யோசனையோடு அழைப்பைத் துண்டித்தவள் ராஜேஸ்வரியின் அறைக்குச் சென்றாள்.
“அச்சு வர்றானா?”
“இல்ல அத்தை! அவர் வெளிய சாப்பிட்டுட்டார். நீங்க ரெஸ்ட் எடுங்க”
ராஜேஸ்வரியை ஓய்வெடுக்குமாறு சொல்லிவிட்டுத் தனது அறைக்குள் வந்தவள் மொபைலை எடுத்துப் பார்க்க அதில் ஏகப்பட்ட துண்டிக்கப்பட்ட அழைப்புகள் யாழினியிடமிருந்து.
உடனடியாக அவளது மொபைலுக்கு அழைத்தாள் வேதவதி.
“என்ன விஷயம் யாழு? எதுவும் பிரச்சனையா? நான் அத்தை கூட இருந்தேன். ஃபோன் சைலண்ட்ல இருந்துச்சு இவ்ளோ நேரம்”
“இங்க யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்ல வேதா. நீ எப்பிடி இருக்குறனு விசாரிக்க கால் பண்ணுனேன். புது இடம், புது மனுசங்க. செட் ஆகிடுச்சா அந்த ஊரும் வீடும்?”
யாழினியின் குரலில் தோழியைப் பற்றிய கவலையும் அவள்மீதான அக்கறையும்.
“எல்லாம் ஓகே யாழு”
“என்னடி இப்பிடி சலிச்சுக்குற? நான் வேற உன்கிட்ட ஒரு விஷயம் பேசணுமே”
“எதுவும் பிரச்சனை இல்லனு சொன்னியே! இப்ப என்ன?”
பதறினாள் வேதவதி. ஏனோ சில நாட்களாக மனதுக்குள் ஒரு ஊசலாட்டம் இருந்துகொண்டே இருக்கிறது. நிம்மதியாக உறங்கும்போது கூட இடையில் தூக்கம் கலைந்து கொட்ட கொட்ட விழித்தபடி இரவுகள் கடக்கின்றன. எதிர்காலம் குறித்த கவலை அவளை ஆட்கொள்ள ஆரம்பித்திருந்தது. யாழினி வேறு பொடி வைத்துப் பேசவும் பதறிவிட்டாள்.
“நீ ஏன் காலேஜை சென்னைல கண்டினியூ பண்ணக்கூடாது?”
“இங்கயா? நானா? அதெல்லாம் யோசிச்சாலே பயமா இருக்கு யாழு. இந்த ஊரோட பரபரப்பும் அவசரமும் எனக்குப் பொருந்தவே இல்ல. எக்ஸாமுக்காக ஊருக்கு வந்தா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்னு நினைச்சேன்.”
“இதோ இப்ப பேசுறல்ல, இதுக்காகத்தான் சொல்லுறேன் வேதா. நீ சும்மா வீட்டுக்குள்ளவே முடங்கிக் கிடந்தா உனக்கு எதைப் பாத்தாலும் பயமாதான் இருக்கும். கொஞ்சம் வெளிய போ. வெளி மனுசங்களோட பழகு. உலகம் தேன்மலையோட முடிஞ்சிடுறது இல்லடி. அந்தச் சிட்டி உனக்கான எதிர்காலம். சென்னைய ‘தி சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்’னு சொல்லுவாங்க. உன் கனவுக்கும் அங்க ஒரு இடம் இருக்கும் வேதா. மனசைத் தளரவிடாத. உன் மாமா கிட்ட சொல்லு, சென்னைல படிக்க விரும்புறதா.”
“அவங்களுக்குத் தொந்தரவா இருக்காதா யாழு?”
“இதுல என்னடி தொந்தரவு? நீ அவரோட மருமகள். உனக்குக் கேக்குறதுக்கான எல்லா உரிமையும் இருக்கு”
யாழினி அழுத்தமாய் மொழிந்ததும் கேட்டுப் பார்த்தால் என்னவென்றுதான் அவளுக்கும் தோன்றியது.
“சரி யாழு! இன்னைக்கு உனக்குக் கடை லீவா?”
“இன்னைக்கு மண்ணெண்ணெய் ஊத்த வேண்டிய நாள் ஆத்தா. வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்து குளிச்சதும் உனக்குக் கால் பண்ணுனேன். உன் குரல் கேட்டதும்தான் நிம்மதி. வானதி இன்னைக்குச் சாயங்காலம் சென்னைக்குக் கிளம்புறா. அவளைப் போய் பாக்கணும். நீ நான் சொன்னதை மறந்துடாத. லேட் பண்ணாம அவர்கிட்ட கேட்டுடு”
“சரி யாழு”
யாழினியிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவள், இரவில் உணவு அருந்தும்போது சதானந்தனிடம் மெதுவாக இந்தப் பேச்சை எடுத்தாள்.
“எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா மாமா?”
அனைவரும் இட்லி சாப்பிடுகையில் தனக்கு மட்டும் மதியம் சமைத்த சாதம், குழம்பு, பொரியல் எல்லாம் சூடு செய்யப்பட்டு பரிமாறப்பட்ட எரிச்சலில் இருந்த அட்சரனுக்கு வேதவதியின் கேள்வியில் இன்னும் அதிகமாய் எரிச்சல்.
ஏனென்றால் மதியம் அவனால் மிச்சமான சாப்பாட்டை அவன்தான் சாப்பிட வேண்டுமென ராஜேஸ்வரியிடம் சொல்லிக் கொடுத்துப் பரிமாறவைத்தவளே அவள்தான்!
“இதென்ன ஹெல்ப் அது இதுனு கேக்குறது? என்ன வேணும்னு சொல்லுடா” என்றார் சதானந்தன் பரிவாக.
“நான் இங்கயே என் பி.ஜி-யை கண்டினியூ பண்ணட்டுமா? எனக்கு எங்க காலேஜ்ல இருந்து டி.சி வாங்கி இங்க சேர்த்துவிடுறீங்களா? வீட்டுல சும்மா இருக்க கஷ்டமா இருக்கு. அதான்..”
“அவ்ளோதானே? ஜெயசந்திரனோட ஆளுங்களை வச்சு செஞ்சிடுவோம். வேற என்ன வேணும்?”
“இங்க காலேஜ் எல்லாம் பார்ட் டைம்னு கேள்விப்பட்டேன். மீதி நேரம் பார்ட் டைம் ஜாப் ஏதாச்சும்…”
அப்போது இடையிட்டார் ராஜேஸ்வரி.
“ஜாபா? படிச்சு முடிச்சுட்டுப் போகலாமே? இப்பவே ஏன்?”
சதானந்தனும் அவ்வாறுதான் முதலில் யோசித்தார். பின்னர் அவரது முகம் பிரகாசமுற்றது.
“எதுக்கு எங்கயோ வேலைக்குப் போகணும்? நீ நம்ம சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்துடு. அங்க உனக்கு எந்த வேலை பிடிக்குதோ செய்”

உடனே வேதவதியின் முகம் பூவாய் மலர அவர்கள் மூவரின் பேச்சில் அந்நியனாக உணர்ந்த அட்சரனோ கடுப்பில் முறைத்தான்.
“நானும் இத்தனை வருஷம் இந்த வீட்டுல இருக்கேன். ஒரு நாள் கூட சூப்பர் மார்க்கெட் பக்கம் என்னைக் கூப்பிடல”
பொருமியவனைக் கேலியாகப் பார்த்தார் சதானந்தன்.
“கூப்பிட்டா மட்டும் உன் மகன் வந்துடுவானா? இனிமே இவனுக்கு அங்க இடம் கிடையாது. என் மருமகள் வரட்டும். நம்ம பிசினஸ் பத்தி அவ கத்துக்கட்டும். இவன் புத்தகங்களைக் கட்டிக்கிட்டு அழட்டும்”
இப்போது அட்சரன் கேலியாய்ச் சிரித்தான்.
“உங்க சோ கால்ட் மருமகள் மட்டும் என்னவாம்? அவளும் ஒரு ரைட்டர்தான். அவளோட கனவே புக்தான்.”
சதானந்தனுக்கு அது நன்றாகவே தெரியும். கனவையும் வேலையையும் ஒன்றாக இணைப்பதில் உடன்பாடில்லாதவர் அவர். மருமகள் பகுதிநேர வேலைக்கு ஆசைப்படுவதே அவளுக்கும் கனவு வேறு, வேலை வேறு என்ற எண்ணமிருப்பதை உறுதி செய்தது அவருக்கு.
“இனிமே நான் எழுதப்போறதில்ல மாமா. நீங்க எனக்கு என்ன கத்துக் குடுத்தாலும் நான் கத்துப்பேன்”
வேதவதி சொன்னதும் மூவருமே அதிர்ந்துதான் போனார்கள்.
“ஏன்டா இப்பிடி சொல்லுற? உன் அப்பாக்கு உன்னோட கதை புக்கா வரணும்னு ரொம்ப ஆசைனு சொன்னியே”
ராஜேஸ்வரி சொல்லவும் வேதவதி தலையைக் குனிந்துகொண்டாள்.
“எனக்கு எழுதணும்னு யோசிச்சாலே அன்னைக்கு எங்கம்மா அழுததுதான் ஞாபகம் வருது. எழுத்து எழுத்துனு உலகத்தைப் புரிஞ்சிக்காம லூசுத்தனமா இருந்துட்டேன்னு தோணுது. இனிமே சுதாரிப்பா இருக்கணும்னு ஆசைப்படுறேன் அத்தை.”
நிமிர்ந்து பார்த்தவள் சாப்பாட்டை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டாள். உணவை வீணாக்குவதில் அவளுக்கு எப்போதுமே விருப்பமில்லை என்பதால் மட்டும்!
ஆனால் மற்ற மூவராலும் அவளது பேச்சுக்குப் பிறகு அன்றைய இரவில் ஒரு பிடி கூட உண்ண முடியவில்லை.
கத்தித் தீர்த்தால் தான் கோபமா? அழுது அரற்றினால் தான் வேதனையா? எதுவும் பேசாத மௌனத்துக்குள் இருக்கும் கோபமும் வேதனையும் உலகத்தின் பார்வைக்கு வராது. ஆனால் அனுபவிப்பவருக்குத் தெரியுமே அதன் தீவிரம்!
சூழ்நிலைக் கைதியாகி திக்கற்ற நிலையில் நிற்கிறோமே என்ற கழிவிரக்கத்தால் சூழப்பட்ட வேதவதியின் நிலை, விருப்பமற்ற உறவில் பிணைத்துவைக்கப்பட்ட அட்சரனின் நிலையை விட மோசம்.
காதலைக் குழைத்து அவள் எழுதித் தள்ளிய கதைகள் அவளைப் பார்த்துக் கைக்கொட்டிச் சிரித்தன.
நிதர்சனத்தில் இல்லாத காதலும், நிறைவேறாத கனவுகளும் இனி தனது எழுத்துகளை அந்நியமாக உணரவைக்கும் என்று தெரிந்ததால் அதை விட்டு விலகத் தீர்மானித்துவிட்டாள் வேதவதி.
அவள் சாப்பிட்டு முடித்துத் தட்டோடு எழுந்து போய்விட அட்சரனின் புருவங்கள் முடிச்சிட்டன.

அவனுக்கு அவளது எழுத்தும், எழுத்தை அவள் அணுகிய விதமும் அவ்வளவு பிடித்திருந்தது. அவளையும் ஒரு எழுத்தாளராகப் பிடித்துதானே இருந்தது.
ஏதோ பிரச்சனை என்று எழுத்தை விட்டு ஓடவேண்டுமா என இலக்கிய முகவர் கோணத்தில் யோசித்தான் அவன். நல்ல எழுத்துகள் கடலின் அடியாழத்தில் விளையும் முத்துகளைப் போன்றவை! அவற்றின் அருமை உணர்ந்தவனுக்கு வேதவதியின் முடிவில் வருத்தமே!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

