பூபேந்திரனின் கண்களில் ஒருவித ஆற்றாமை அலைமோதியது.
“நீங்க… நீங்க… அவளைப் பாக்கலையா?” என்று தழுதழுத்த குரலில் கேட்டார்.
நிலவனின் கண்களுக்குள் ஒரு வலி வந்து மறைந்தது. ஆனால் உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகையைத் தேக்கிக்கொண்டான்.
“உங்க மகளையா கேக்குறீங்க மாமா?”
அந்த ஒற்றைக் கேள்வியில் பூபேந்திரனின் கண்கள் கலங்கி, கண்ணீர் வழியத் தொடங்கியது. அவள் இதே வீட்டில் ஓடியாடிய நாட்களில் ஒருமுறையேனும் அன்பாய் ஆதுரமாய்ப் பேசியதில்லை.
“பொட்டைப்புள்ள வயசுக்கு வந்தாச்சுனா அப்பாகிட்டகூட விலகித்தான் நிக்கணும். அதென்ன கழுத்தைக் கட்டிக்கிட்டு இருக்குறது? இந்த ஆட்டம் பாட்டத்தை நிறுத்திட்டுப் பொறுப்பா அடக்கமா நடந்துக்கணும்”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
விஜயா மகளின் சிறகுகளை வெட்டுவது போல அத்துணை பேசியபோதும் கண்டுகொள்ளாது இருந்தவர்தான் பூபேந்திரன்.
“பொட்டப்புள்ளை விஷயத்துல அம்மாக்காரி நான் செய்யுற எதையும் நீங்க கேள்வி கேக்கக் கூடாது. நாளைபின்ன இன்னொரு வீட்டுல வாழப் போறவளுக்கு இந்தச் செல்லம் எல்லாம் ரொம்ப அதிகம். கூறு கெட்டுக் குட்டிச்சுவரா ஆகிப்போவும் உம்ம மக நிலைமை”
விஜயா மகளின் வளர்ப்பில் சொன்ன அனைத்துக்கும் தலையாட்டி விடுவார் பூபேந்திரன். அவரது மகளுமே அனைத்துக்கும் தலையாட்டும் ரகம்தான். ஆனால் அதற்கு ஒரு எல்லையை அவள் மனதுக்குள் வகுத்திருந்ததை அந்தக் குடும்பத்தில் யாரும் அறியவில்லை, அவள் இங்கிருந்து செல்லும்வரை.
“பொட்டப்புள்ளைய ஆசை ஆசையா கல்யாணம் முடிச்சு வச்ச கையோட மெட்ராஸுக்கு அனுப்பி வச்சிட்டு இவன் கல்லு மாதிரி அவளைப் பத்தின கவலையில்லாம வெள்ளையும் சொள்ளையுமா அலையுறான்னு ஊருக்குள்ள அம்புட்டு பயலுவளும் பேசுறானுங்க மருமகனே! இதுவே ரெண்டு வருஷமா எனக்கு மனவுளைச்சல். வீட்டுல இருக்குறவியளுக்கு அவகிட்ட நான் பேசுனா முகம் மாறுது. எனக்குமே அவ செஞ்சதுல மனசு ஒப்பலதான். ஒரு தகப்பனா நான் அவளுக்கு என்ன குறை வச்சேன்னு இப்ப வரைக்கும் எனக்குப் புரியல…”
சொல்லும்போதே அவர் குரல் உடைந்து நடுங்கியது. ஒரு காலத்தில் ஊரையே தன் கம்பீரத்தால் கட்டி ஆண்ட மனிதர், இன்று ஒரு நோயாளியாக, மகளின் நினைவால் குமைந்துபோய் உட்கார்ந்திருக்கிறார்.
“மாமா… எதுக்கு இப்ப இதெல்லாம் பேசி மனசைக் குழப்பிக்கிறீங்க? முதல்ல வருத்தப்படுறதை நிறுத்துங்க. உங்க உடம்புக்கு இது நல்லதில்ல,” என்று அவரது கரங்களைப் பற்றி ஆறுதல்படுத்தினான் நிலவன்.
“நீங்க நிஜமாவே அவளைப் பாக்கலையா மருமகனே? நீங்க அவ மேல ரொம்ப அன்பு வச்சிருக்கீங்கனு எனக்குத் தெரியும். அவளைப் பாக்காம நீங்க வந்திருக்க மாட்டீங்க,” என்று கண்களில் அத்துணை நம்பிக்கையாகச் சொன்னார் அவர்.
நிலவன் எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாகச் சிரித்தான். பின்னர் அவரை மெதுவாகப் படுக்கவைத்தான்.
“ரெஸ்ட் எடுங்க மாமா. மாத்திரை போடுற நேரமாச்சு. நாம இதைப் பத்தி அப்புறமாப் பேசிக்கலாம். நீங்க ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க. முக்கியமா, சாத்தியமில்லாததை நினைச்சு மனசை அலைபாய விடாதீங்க,” என்று நிதானமாகச் சொல்லிவிட்டு எழுந்தான்.
“அப்ப என் மகள்… இனிமே இந்த வீட்டுக்கு வரமாட்டாளா?” என்று அவர் கேட்கும்போதே, அறையின் கதவைத் தள்ளிக்கொண்டு ஆவேசமாக உள்ளே வந்தார் விஜயா. அவரது முகம் முழுக்கக் கோபம் கொப்பளித்தது.
“சும்மா ஏங்க அவளையே நினைச்சு உருகிட்டு இருக்கீங்க? அவளால நாம இந்த ஊருக்குள்ள அசிங்கப்பட்டது போதாதா? அவளைத்தான் நாம எப்பவோ தலைமுழுகியாச்சே! நமக்கு இனிமே பிரகாஷ் மட்டும்தான் புள்ளை. அவன் பொண்டாட்டி நிலா நம்மளை ஒரு மருமகளா இல்லாம, சொந்த மகள் மாதிரி பாத்துக்குறா. அது நமக்குப் போதும். இந்த வீட்டை விட்டும், குடும்பத்தை விட்டும் அறுத்துக்கிட்டுப் போன சம்பந்தமில்லாத ஒருத்தியைப் பத்தி இனிமே யோசிக்காதீங்க,” என்று தனது மனதில் பொத்தி வைத்திருந்த ஆத்திரம் முழுவதையும் கொட்டித் தீர்த்தார் விஜயா.
மாமியாரும் மாமனாரும் பேசிக்கொள்ளட்டும் என்று அமைதியாக அறையை விட்டு வெளியே வந்தான் நிலவன். அவனுக்கு மாமியாரின் பேச்சில் பிடித்தமில்லை என்பதுதான் அவனது மனமறிந்த உண்மை, இப்போதும் நியதியைப் பற்றி யாரேனும் துச்சமாகப் பேசினால் அவனுக்கு வருத்தம் வந்துவிடுகிறது. மனதுக்கு ரோஷமில்லை என்பது எத்துணை பெரிய உண்மை!
ஹாலில் நிலா அவனுக்காகவே காத்துக்கொண்டிருந்தாள். கையில் இருந்த உணவுக்கிண்ணத்தில் வைஷாலிக்கு உணவூட்டி முடித்திருந்தவள், குழந்தையை நிலவனின் கைகளில் கொடுத்தாள். முகத்தை உம்மென்று வைத்திருந்த நிலவன் மாமா மாமா என்று மழலையில் சிரித்தபடி தாவிய அந்தக் குழந்தையைக் கைகளில் வாங்கியதும் இறுக்கம் தளர்ந்து புன்னகைத்தான்.
“வைஷூக்குட்டிக்கு மாமாகிட்ட என்ன வேணும்? தேடுனீங்களா மாமாவ?”
அவளைக் கொஞ்சியபடியே நிற்க, நிலா அவன் அருகே வந்தாள்.
“சென்னை போனியே… அவளைப் பாத்தியா அங்க? அவளைப் பத்தியா மாமா உன்கிட்ட கேட்டாரு?” என்று நேரடியாகவே ஆரம்பித்தாள்.
“இதுக்கு நான் பதில் சொல்லித்தான் ஆகணுமா நிலா?” என்று சலிப்போடு கேட்டான் நிலவன்.
“ஏன்டா இப்படி இருக்க? உனக்கு என்ன கோபம் இருந்தாலும், அவளை நீ விட்டுக்குடுக்கமாட்டனு எனக்குத் தெரியும். ஆனா, அவ உனக்கும்தான் துரோகம் பண்ணியிருக்கா. அவ உன்னை எப்படி அசிங்கப்படுத்துனானு மறந்துடாத,” என்றாள் கடினமான குரலில்.
“விடு நிலா. எப்பவோ முடிஞ்சுபோன பழசைப் பத்திப் பேசாத,” என்று அவளை அதட்டினான் நிலவன்.
அதைக் கேட்டதும் நிலாவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது.
“இப்பவும் அவ மேல உனக்கு அம்புட்டு அன்பு. அதான் என்னையே நீ அதட்டுற. இதுதான் எனக்கு எரிச்சலா இருக்கு. அந்த அல்லிராணி யாருக்கும் அடங்கமாட்டா. ஆனா அவளை நினைச்சு இங்க எல்லாரும் பதறுறாங்க. இதோ பாரு! அவளைப் பெத்த அப்பா, என் மாமனாருக்கு இதய நோய் வர்ற அளவுக்கு நிலைமை மோசமாயிடுச்சு. இப்பக்கூட ஒரு எட்டு இங்க வந்து பாக்கணும்னு அவளுக்கு மனசு வரல பாரு! அவ்ளோ திமிரு, வைராக்கியம் அவளுக்கு. அவ வாழ்க்கை முழுக்க இப்படித்தான் யாருமில்லாம தனியாவே நிப்பா நிலவா,” என்று ஆத்திரத்தில் சாபமே விட்டாள் நிலா.
அப்போது அங்கே வந்த பிரகாஷின் காதுகளில் இது விழுந்தது. நிலவனுக்கு ஒருவித தர்மசங்கடமாக இருந்தது. அண்ணன் முன்னாலேயே தங்கையை இப்படிப் பேசுகிறாளே என்று அவன் யோசிக்க, பிரகாஷோ சலிப்போடு பேசினான்.
“நிலா சொல்றதுல என்ன மாப்பிள்ள தப்பு இருக்கு? பெத்தவங்க, அண்ணன், கட்டிக்கிட்ட புருஷன்னு யாரைப் பத்தியும் கொஞ்சம்கூட யோசிக்காம, அவ இஷ்டத்துக்குச் சுயநலமாப் போனவதானே அவ!” என்று பிரகாஷும் கசப்பான குரலில் சொன்னான்.
தன் மனைவியின் மீதான வசைபாடுகளை, அவள் குடும்பத்தாரே தன் காதுபடப் பேசுவதை நிலவனால் சகிக்க முடியவில்லை. நியதிக்கும் அவனுக்குமிடையே ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், அவளுக்கு ஒரு வலி என்றால் இவனது இதயம் துடிக்குமே! சங்கடமான ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு, எதுவும் பேசாமல் வைஷாலி குட்டியோடு முற்றத்தை நோக்கி நடந்துவிட்டான் நிலவன்.
பிரகாஷும் நிலாவும், ‘இவன் வாழ்க்கை என்ன ஆகுமோ?’ என்ற கவலையோடு அவனையே பார்த்துக்கொண்டு நின்றார்கள்.
அதே நேரம், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் இரைச்சலுக்கு மத்தியில் நின்றுகொண்டிருந்தாள் நியதி. அவளது தோழி ப்ரீத்தியின் ஸ்கூட்டியை, கோவைக்குச் செல்லும் ஒரு ஆம்னிப் பேருந்தில் பார்சலாக ஏற்றிவிட வந்திருந்தாள்.
ஸ்கூட்டியைப் பேருந்தின் டிக்கியில் ஏற்றும் முன்பு, அந்த வண்டியின் ஹேண்டில்பாரை மெதுவாகத் தட்டிக் கொடுத்தாள். “பத்திரமா போ பிங்கி!” என்று ஓர் உயிரற்ற பொருளிடம் அவள் வருத்தத்தோடு விடைபெறுவதில், அவளது மனம் உணர்ந்த ஆழமான தனிமை வெளிப்பட்டது. கடந்த ஒரு வருடமாகச் சென்னையில் அவர்களின் கால்களாகப் பயணித்த வண்டி அது.
வண்டி பேருந்தில் ஏற்றப்பட்டுப் பேருந்து கிளம்பியதும், ப்ரீத்திக்கு கால் செய்தாள் நியதி.
“ஹலோ ப்ரீ… வண்டியை பஸ்ல ஏத்திட்டேன்டி. நாளைக்குக் காத்தால கோவைக்கு வந்துடும். நீ போய் பஸ் ஸ்டாண்ட்ல வாங்கிக்க,” என்றாள் சோர்வான குரலில்.
“தேங்க்ஸ்டி. பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸுக்குப் பேசிட்டியா?”
“பேசிட்டேன். ரூம்ல இருக்குற மத்த திங்ஸ் எல்லாத்தையும் இன்னைக்கு ஈவ்னிங்கே அவங்க வண்டியில ஏத்திடுவேன்.”
“சரிடி. நீயும் சீக்கிரம் கிளம்பி வா,” என்று சொல்லிவிட்டு ப்ரீத்தி அழைப்பைத் துண்டித்தாள்.
மொபைலை ஹேண்ட்பேக்கில் போட்டவளுக்கு, மனது அத்துணை கனமாக இருந்தது. சுற்றிலும் ஆயிரக்கணக்கான மனிதர்கள் நிற்க நேரமின்றி ஓடிக்கொண்டும், பேருந்துக்காகக் காத்துக்கொண்டிருந்த அந்தப் பேருந்து நிலையத்தில், அவள் மட்டும் ஒரு தீவைப் போலத் தனித்து நின்றாள்.
நிலவன் முந்தைய நாளிரவு வீசிவிட்டுப் போன அந்த வார்த்தைகள் அவளது காதுகளுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்து அவளைச் செவிடாக்கின.
‘நம்ம காதலுக்காக நீ இதுவரைக்கும் என்ன செஞ்சிருக்க?’
அவன் கேட்ட அந்தக் கேள்விக்கான விடையைத் தேடி அவளது மூளை அலைபாய்ந்தது. எதையாவது செய்திருக்கிறேனா? இல்லையே! அவனைக் காயப்படுத்தியதைத் தவிர, அவனது காதலைப் புறக்கணித்ததைத் தவிர அவள் எதையும் செய்யவில்லையே! அவளது வைராக்கியம் இன்று அவளையே ஏளனமாகப் பார்த்துச் சிரிப்பது போல் இருந்தது.
நெருக்கடியான அந்தச் சூழலில், வானத்தைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டாள் நியதி.
“நான் நம்ம காதலுக்காக எதுவுமே பண்ணல நிலன். இனியும் ஏதாவது பண்ணுவேனானு எனக்குத் தெரியல. செய்யக்கூடிய துணிச்சல் இப்ப வரைக்கும் எனக்கு வரல. ஏதோ ஒண்ணு நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல தடையா இருக்கு. அது நிச்சயமா உங்களோட கோபமோ, என்னோட வைராக்கியமோ இல்ல. என்னால இதை சார்ட் அவுட் பண்ண முடியும்னு தோணல. சாரி நிலன்.” என்று தனக்குத்தானே விரக்தியாக முணுமுணுத்தாள். அவளது கண்களில் இருந்து வழிந்த ஒரு துளிக் கண்ணீர், சென்னையின் அந்த வெப்பமான காற்றில் சில நொடிகளில் காய்ந்து மறைந்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


