“இத்தனை லெட்டர்ஸ் போட்டும் நீ ஒரு ‘Hmm’ கூட சொல்ல மாட்டேங்குற. நீ ஒரு ‘Ghosting Expert’னு எனக்குத் தெரியும். அதுக்காக பன்னிரண்டு வருசம் கோஸ்டிங்ல இருக்குறது கொஞ்சம் ஓவரா இருக்கு. ஆனா என் லெட்டர்ஸை நீ பத்திரமா வச்சிருக்கன்னு என் உள்மனசு சொல்லுது.)
-வானதியின் கடிதம்…
வானதியை அலங்கரித்து முடித்தார் மேக்கப் ஆர்ட்டிஸ்ட். கிரீம் வண்ணத்தில் தங்க ஜரிகைகள் ஓடிய வெண்பட்டில் பேரழகியாக ஜொலித்தவளின் முகத்தில் புன்னகைக்குப் பஞ்சம். மகளுக்கு அலங்காரம் முடிந்ததா எனப் பார்க்க வந்த கயல்விழி, அவளது முகவாட்டத்தைக் கவனித்து என்னவென விசாரித்தார்.
“ரொம்ப அவசரமா இந்தக் கல்யாணம் நடக்குதோனு ஒரு மாதிரி உறுத்தலா இருக்கும்மா.”

கயல்விழி மகளின் கன்னத்தை வருடிக்கொடுத்தவர், “இது எல்லா கல்யாணப்பொண்ணுக்கும் வர்ற பயம்தான். எல்லாம் சரியா போயிடும், கழுத்துல தாலி ஏறுனதும்” என்று சொல்ல, அவளும் சிரித்து வைத்தாள்.
அங்கே இருந்த அனைவரும் போய்விட, மொபைலில் தோழியரிடம் சாட் செய்தாள் அவள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“எப்ப வருவிங்க ரெண்டு பேரும்? நான் மதியமே வந்தாச்சு. இன்னும் இலக்கியா வேற வரல. போரடிக்குது.”
அவளது தோழியரில் ஒருத்தியான வேதவதியிடமிருந்து பதில் வந்தது.
“இன்னும் பத்தே நிமிசத்துல வந்துடுவேன் வானு.”
யாழினியும் அதே பதிலைச் சொல்லவும், மொபைலைச் சோஃபாவில் வைத்தவள், ஜன்னல் வழியே தெரியும் மலைச்சிகரங்களையும் எஸ்டேட்டுகளையும் வேடிக்கை பார்த்தாள்.

திருமண வாழ்விற்கான எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி அவள் இத்திருமணத்திற்குச் சம்மதித்திருக்கலாம். ஆனால், இப்படி உள்நோக்கத்தோடு காத்திருப்பவனை மணப்பது ஒருவிதமாய் உறுத்தியது அவளுக்கு. இன்னுமே அந்த உள்நோக்கம் கூட தனக்குத் தெளிவாய் புரியவில்லையே என்ற ஆதங்கம் கூட.
காலமும், தூரமும் ஒருவனை இந்தளவிற்கு முற்றிலுமாக மாற்றுமா என்ன?
அழகான வெண்பட்டில், வெண்தாமரையில் அமர்ந்திருக்கும் சரஸ்வதி போல அத்தனை வசீகரமாய் இருந்தவளின் வதனத்தில் மட்டும் மெல்லிய இழையாய்ச் சோகம்! திருமணமாகப் போகிற மணப்பெண்ணுக்கான நாணமோ, தடுமாற்றமோ அவளிடம் இல்லை. வெளிறிய வதனமும் இறுகிய மோவாயுமாய் சோகவயப்பட்ட பிம்பம் போல அசையாமல் நின்றிருந்தாள்.
அந்நேரத்தில் “நதி” என அட்சரனின் குரல் கேட்கவும் திரும்பினாள் அவள்.
கேரளாவிற்கு ஒரு எழுத்தாளரைச் சந்திக்கப் போனவன் அங்கிருந்து காரிலேயே தேன்மலைக்கு வந்துவிட்டான். அவனைக் கண்டதும் ஒளிர்ந்த அவளது வதனம், அவனருகே இருந்தவனைப் பார்த்ததும் கோபத்திற்குத் தாவியது.
அட்சரன் உடனடியாகத் தன்னருகே நின்றிருந்த அருள்மொழியைப் பார்க்க, அவனோ அலட்சியமாய்த் தோள்களைக் குலுக்கினான்.
“இன்னும் மூணு நாள்ல கல்யாணம். இப்பிடி மார்ச்சுவரில இருக்குற பிரேதம் மாதிரி முகத்தை வச்சிருந்தா யாருக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கத் தோணும்?” அருள்மொழி இவ்வாறு கேட்டதும் வானதியும் வெடிக்க ஆரம்பித்தாள்.
“கல்யாணம் பண்ணிக்கோனு உன்கிட்ட நான் கேட்டேனா? உன்னைக் கல்யாணம் பண்ணுறதுக்கு மார்ச்சுவரில பிரேதமா இருந்துட்டுப் போயிடலாம்டா.”
இருவரும் எதிரிகளைப் போல மாறி மாறி வாதிட, நடுவில் நின்ற அட்சரன் பொறுமையிழந்தான். நல்ல காரியம் நடக்கும்போது அபசகுனமாகப் பேசாதீர்கள் என்றான் உரத்த குரலில். சொன்னதோடு அந்த அறைக்கதவைப் பூட்டவும் செய்தான்.
திரும்பி இருவரிடமும் வந்தவன், “நீங்க ரெண்டு பேரும் வாழ்க்கைல ஒன்னு சேர்ந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். ஆனா நீங்க?” என்று சலிப்போடு அவன் கையசைக்கையில் கதவு தட்டப்பட்டது.
அட்சரன் கதவைத் திறந்து அங்கே நின்றிருந்த ஊழியரிடம் காபியை வாங்கிக்கொண்டு, இனி யாரும் இந்த அறைக்கு வரவேண்டாமெனச் சொல்லுமாறு அவரிடம் கூறியனுப்பினான்.
காபிக்கோப்பையை வானதியிடம் கொடுத்தவன் “குடி” என்க, அவளும் வாங்கி ஒரு மிடறு அருந்தினாள்.
“ஹீ ஹேஸ் அ ப்ளான் அச்சு.”
அருள்மொழி அவனிடம் அடிக்கடி கூறுவதுதான். ஆனால் வானதியே அதைக் குறிப்பிடவும் அட்சரனுக்கு அதிர்ச்சி.
“எனக்குத் தெரியும். இவனை அப்பாக்குச் சுத்தமா பிடிக்காது. அப்பிடிப்பட்டவர் இவனை எப்பிடி மருமகனாக்க சம்மதிச்சிருப்பார்? இவன் ஏதோ பண்ணிருக்கான் அச்சு. ஆனா அது மட்டும் இவனோட பிளான் இல்ல. வேற என்னமோ இருக்கு. இவனோட பிளான்ல ஒரு பகுதியா இருக்க எனக்கு விருப்பமில்ல. கல்யாணம், காதல் இதெல்லாம் ரொம்ப அற்புதமான விஷயங்கள். அதை இவன் சுயலாபத்துக்காகப் பயன்படுத்துறானோனு எனக்குச் சந்தேகமா இருக்கு.”
வானதி தன்னை நோக்கிச் குற்றம் சாட்டியதில் அருள்மொழியின் முகம் கோபத்தில் சிவக்க, அங்கே ஏதும் ரசாபாசம் ஆகும் முன்னர் அட்சரனின் குரல் ஒலித்தது.
“நீ சொன்னதுக்கு ஏதாச்சும் ஆதாரம் இருக்கா?”
“ப்ச்! இல்ல! ஆனா என்னோட உள்ளுணர்வு சொல்லுது. இவன் பழைய அருள் இல்ல. இவன் என்னோட அருள் இல்ல”
கண்கள் கலங்கத் தலையைக் குனிந்துகொண்டாள் வானதி. அருள்மொழி அதைக் கண்டும் காணாது போல நின்றான்.
“நான் என்னைக்கும் உன்னோட அருள் இல்ல. அப்பிடி இருக்கவும் எனக்கு ஆசையில்ல” என்றான் விறைப்பாக.
அட்சரன் அவனைச் சூடாய் முறைக்கவும், சட்டென நகைத்தவன், “சும்மா சும்மா கொதிக்காத நண்பா. இவங்கப்பாக்கு இந்தக் கல்யாணம் கௌரவப் பிரச்சினை. நான் இவளைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதும் சந்தோஷமா ஒத்துக்கிட்டார் அந்தாளு. அவ்ளோதான். இவ தேவையில்லாம ரொம்ப யோசிக்குறா மச்சி” என்றான் முடிக்கும்போது முறைப்போடு.
“எங்கப்பாவை அந்தாளு இந்தாளுனு சொன்னா பல்லை உடைச்சிடுவேன்.”
“முதல்ல உன் கை என் கழுத்து வரைக்கும் வருமானு பாரு. அப்புறம் முகத்தை டச் பண்ணி பல்லை உடைக்கலாம்.”
“அடேய்களா, சிங்கிள் கேப் கிடைச்சாலும் விடாம அடிச்சுக்குறீங்க” என்ற அட்சரன், “நீ காபியைக் குடி” என்று வானதியிடம் கட்டளையிட்டுவிட்டு, “நீ கொஞ்ச நேரத்துக்கு உன் திருவாயை மூடு” என்று அருள்மொழியிடம் கண்டிப்பான குரலில் சொல்லும்போதே கதவு மீண்டும் தட்டப்பட்டது.
அட்சரன் கதவைத் திறந்து, “எவன்டா அது நிலைமை புரியாம கதவைத் தட்டிக்கிட்டே இருக்குறது? கொஞ்சமாச்சும் மேனர்ஸ் இருக்கா?” என்றவன் சட்டென அமைதியானான்.

வானதி சட்டென எட்டிப் பார்த்தவள், அங்கே கண்கள் கலங்க நின்ற வேதவதியைப் பார்த்ததும், “வேதா வந்துட்டியா?” என்று மலர்ச்சியோடு வினவியதும் வெளியே நின்றவளின் முகம் தெளிவானது.
அட்சரன் நகர்ந்து வழிவிடவும் உள்ளே வந்தவள் வானதியைக் குதூகலத்தோடு அணைத்தாள்.
“நீ ரொம்ப அழகா இருக்க வானு” என்று அவள் கொஞ்ச, வானதியிடம் நாணப்புன்னகை.
அருள்மொழி அட்சரனைக் கேள்வியாய்ப் பார்க்க, “அப்புறமா சொல்லுறேன்டா” என்று சைகை காட்டினான் அவன்.
“கீழ உங்க சொந்தக்காரங்க, போலீஸ், கமாண்டோனு ரொம்ப கூட்டமா இருந்துச்சு வானு. யாழு இல்லனா நான் வந்திருக்கவே மாட்டேன்.”
வேதவதி வானதியிடம் பேசிக்கொண்டிருந்தவள் அட்சரன் கதவை அடைக்கப்போகவும் அவசரமாய் யாழினி வருவாள் என்க, அவனோ அவளிடம் கடுகடுத்தான்.
“அச்சு!”
வானதியின் குரல் உயரவும் வேதவதியிடம் தடுமாற்றம். அட்சரனிடமும் ஏதோ ஒரு மாற்றம்.
வானதி வேதவதியிடம் அருள்மொழியை அறிமுகப்படுத்தினாள்.
“அருள்.”
“ஹாய் அண்ணா!”
“ஹாய்மா!” – அருள்மொழி சினேகமாய்க் கையசைத்தான்.
“இவ வேதா. என் ஃப்ரெண்ட். மேடம் ஒரு ரைட்டர். அச்சுக்குத் தெரியுமே.” அருள்மொழி தலையாட்டினான்.
“அவங்க பேசிக்கட்டும். நீ வா” என்று அவனைத் தன்னோடு அழைத்துச் செல்ல இழுத்தான் அட்சரன்.
“இவ கதையைப் பத்தி உன்கிட்ட பேசிருந்தேனே அச்சு.”
அட்சரன் ஒரு இலக்கிய முகவர் என்பதால் வேதவதியின் கதையை அவனுக்கு அனுப்பி, பிரபல பதிப்பகம் ஒன்றில் அவளது கதை புத்தகமாக வருவதற்கான ஏற்பாட்டைச் செய்வதற்காகத் தோழியிடம் அவனது அலுவலக எண்ணைக் கொடுத்திருந்தாள் வானதி. வேதவதி கொஞ்சம் பயந்த சுபாவம்; இன்ட்ரோவெர்ட் கூட. அவளுக்குப் புதிய நபர்களிடம் பேசுவது என்றால் கஷ்டம்.
அதனால் அவளுக்குப் பதிலாக யாழினி அட்சரனிடம் பேச, அவனோ சம்பந்தப்பட்ட நபர் பேசாமல் என்னால் எந்த உதவியும் செய்யவியலாதெனக் கடுமையாகச் சொல்லிவிட்டான். வேதாவும் யாழினியும் வானதியிடம் புலம்ப, அவள் நண்பனிடம் வேதாவுக்காகப் பரிந்துரை செய்திருந்தாள்.
“ஆரம்பத்துல இருந்து இவங்க கதைக்காக மத்தவங்கதானே பேசுறீங்க. யார் ஆத்தரோ அவங்க தான் என்கிட்ட பேசணும்.”
அழுத்தம் திருத்தமாகச் சொன்னவன் அருள்மொழியோடு வெளியேற எத்தனிக்க, அதே நேரத்தில் வானதியோ வேதவதியின் கையைப் பிடித்து, “போய் பேசு அவன்கிட்ட!” என்று தள்ளி விட, சரியாக அப்போது வானதியின் பக்கம் திரும்பிய அட்சரன் மீதே அவள் மோதிக்கொண்டாள்.
அட்சரன் நல்லவேளையாக அவள் விழாமல் தடுத்துவிட்டான். பின்னர் வேதவதியும் அவளது கதையைப் பற்றி அவனிடம் சில வார்த்தைகள் பேசி வைக்க, மின்னஞ்சல் அனுப்பி வைக்குமாறு சொல்லிவிட்டு அருள்மொழியை அழைத்துக்கொண்டு வெளியேறினான்.
அவர்கள் வெளியேறவும் உள்ளே வந்தாள் யாழினி. “ஹேய் யாழு! யூ லுக் பிரிட்டி” மூவரும் சேர்ந்து குதூகலமாய்ப் பேச ஆரம்பிக்க, அருள்மொழியோடு இரண்டாம் தளத்திற்கு வந்து சேர்ந்த அட்சரனோ வானதியின் தோழியான வேதவதியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான்.
“கூகுள் காட்டுன வழில நான் காட்டுப்பக்கம் இருக்குற ரோட்டுக்குப் போயிட்டேன்டா. அங்க இந்தப் பொண்ணு நின்னுட்டிருந்தா. வனதேவதை மாதிரி.”
அருள்மொழியின் முகத்தில் விஷமச் சிரிப்பு. “வனதேவதை! ம்ம்ம்! கலக்குற அச்சு.”
“டேய்! பாக்குறதுக்கு அப்பிடி இருந்தானு சொல்ல வந்தேன். நமக்கு இந்த மாதிரி பயந்தாங்கொள்ளி எல்லாம் செட் ஆகாது. எவன் வாழ்க்கை முழுக்க இதுக்கு மவுத் பீஸா இருக்கப் போறானோ?” என்று கேலியாய்ச் சொன்னவன், “அவளை விடு! நதி ஏன் புலம்புறா? என்ன சொல்லி வச்ச?” எனத் தோழியைப் பற்றிப் பேச்சை மாற்றினான்.
“அவ கிடக்குறா. கட்சில எங்கப்பாக்கு ஆதரவான ஆட்கள் சிலர் இருக்காங்க. அவங்களோட விவரம் எல்லாம் வேணும்னு அகத்தியன் அண்ணா கிட்ட கேட்டிருந்தேன். அண்ணாவும் அவங்க எல்லாரோட காண்டாக்ட் டீடெய்லும் கலெக்ட் பண்ணி தந்துட்டார். அதைப் பத்தி அண்ணா கிட்ட பேசுனதைக் கேட்டுட்டா வானதி. அவ அப்பன் அண்ணன் மாதிரி அவளுக்கும் தமிழ்நாடு முன்னேற்ற கழகம் அவங்க குடும்பச் சொத்துனு நினைப்பு. போடா! என்னத்த ஜெர்னலிசம் படிச்சாளோ?” கடுகடுத்தான் அருள்மொழி.
“சரிங்க மாப்பிள்ளை சார்! அப்புறமா காண்டாகுங்க. இப்ப ஏதோ பூஜையாமே. அதுக்கு ரெடியாகுங்க.”
அருள்மொழி குளித்து அவனுக்காகக் கிரீம் வண்ணத்தில் தங்க நிற ஜரிகைப் பொட்டுகள் வைக்கப்பட்ட குர்தாவும் வேஷ்டியும் அணிந்துகொண்டான். அவன் தயாராகிவிட்டானா எனப் பார்க்க அங்கே வந்த ரமா, அருள்மொழியின் தோற்றத்தைக் கண்டதும் கண் கலங்கினார்.
“உன் பெரியப்பா சொல்லுற மாதிரி ராஜா மாதிரி இருக்குற அருள். ஹூம்! ராணி மாதிரி ஒரு பொண்ணைப் பாத்திருக்கலாம். சரி! இனிமே அதைப் பேசி என்னாகப் போகுது? அச்சு! நீயும் இவனும் வாங்க.”

“இவங்க சலிச்சுக்கிட்டதை மட்டும் வானதி கேட்டிருக்கணும்” என்றான் அருள்மொழி விஷமச் சிரிப்போடு அவர் போவதைப் பார்த்தவனாய்.
நண்பர்கள் இருவரும் பூஜைக்காகக் கீழ்த்தளத்திற்குச் சென்றார்கள். அந்தப் பிரம்மாண்ட அறை முழுவதும் அழகான மலர் அலங்காரத்தில் நறுமணம் கமழ, விளக்குகளின் உபயத்தால் மிளிர்ந்தது. அப்போது பெண்கள் வானதியை அழைத்து வந்தார்கள்.
“ரெண்டு பேரும் ஹோமகுண்டம் பாத்து உக்காருங்க.” அருள்மொழி அமர்ந்துவிட, வானதிக்கோ புடவை கட்டித் தரையில் அமருவதற்கு அத்துணை திணறல். மலங்க மலங்க விழித்தபடி உட்காரத் தெரியாமல் தவித்தவளைப் பார்த்தவன் எழுந்தான்.
“சாரியை இங்க பிடிச்சுட்டு உக்காரு” என அவனது வேஷ்டியில் கை வைத்து அமர்ந்து காண்பிக்க, வானதியும் அவன் சொன்னது போல அமர்ந்தாள். அமர்ந்ததும் “தேங்க்ஸ்” என்றாள் கிசுகிசுப்பாய். அந்த கிசுகிசுப்பில் நன்றியுணர்ச்சியின் பங்கு அதிகம்.
அருள்மொழி அவள் பக்கம் தலையை இலேசாகச் சரித்தான்.
“யூ ஆர் வெல்கம்”
பின்னே கண்டுகொள்ளாமல் விட்டிருந்த முந்தானையை எடுத்து அவளது கையில் கொடுத்தான்.
“இதை மடியில ஃபோல்ட் பண்ணி வச்சுக்க. யாரும் பின்னாடி நடந்தாங்கனா சேலை மிதிபடும்.”
“ம்ம்.”
அருள்மொழியின் பெரியம்மா சிரிப்போடு இருவரிடையே குனிந்தவர், “ஏன்டா இவளுக்குச் சம்மணம் போட்டுத் தரையில உக்காரக் கூடவா தெரியாது?” என அதிருப்தியாய் வினவ,
“வானதி இந்த மாதிரி தரையில உக்காந்து பழக்கம் இல்லாதவ பெரியம்மா. கல்யாணம்னா எல்லா பொண்ணுங்களும் டென்ஷனா தானே இருப்பாங்க? விடுங்க” என்று அருள்மொழி வானதிக்காகப் பேசவும்,
“க்கும்! நான் இவளைப் பற்றி ஒரு வார்த்தை குறைவா சொன்னா நீ அதுக்குப் பதில் சொல்லுறேன்னு ஒரு பக்கத்துக்குக் கட்டுரையே எழுதுற அருள். அம்மாடி வானதி! நீ திறமைச்சாலிதான்” என்று சொல்லிவிட்டு கணவரோடு போய் நின்றுகொண்டார் ரமா.
இதில் திறமை எங்கிருந்து வந்ததென யோசித்தவளுக்கு, அவரைத் தாண்டியும் மனதிற்கு இதமூட்டியவை அருள்மொழியின் கனிவான செயல்களே!
அவளுக்கு அமரச் சொல்லிக் கொடுத்தது, முந்தானையை எடுத்துக் கொடுத்தது, பெரியம்மாவிடம் அவளுக்காகப் பரிந்து பேசியது எல்லாம் சின்னச் சின்ன செய்கைகள்தான்! ஆனால், ஒவ்வொன்றும் கண்ணியமான நடத்தையின் அடையாளங்கள் அல்லவா!
தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவளிடம் “என்ன?” என அவன் வினவ, “உன்னை என்னால புரிஞ்சிக்கவே முடியல அருள்” என்றாள் ஆச்சரியம் பூசிய ஆதங்கத்தோடு.

“அதான் வாழ்க்கை மொத்தம் இருக்குதே! கொஞ்சம் டைம் எடுத்துப் புரிஞ்சிக்கலாம். இப்ப பூஜைல கான்சன்ட்ரேட் பண்ணு. உங்கப்பா உன்னையே தான் கவனிக்குறார்.”
வானதியின் சிரம் உயர்ந்தது. கண்கள் கனிய தன்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் தந்தையை நோக்கி முறுவலித்தாள் அவள்.
ஜெயசந்திரன் மகளிடம் பூஜையைக் கவனிக்குமாறு கண் காட்டவும், சரியெனத் தலையசைத்தவள் எவ்வித மனத்தாங்கலும் இல்லாமல் முழு மனதோடு பூஜையை அருள்மொழியுடன் இணைந்து செய்தாள்.
ஆச்சரியம் என்னவென்றால், பூஜையில் கவனம் வைக்குமாறு சொன்னவனின் முழு கவனமும் அவள்மீதே. அதென்னவோ புடவையில் வானதி எக்ஸ்ட்ரா அழகு என்று மனதில் பதிந்துவிட்டது அருள்மொழிக்கு.
இப்போதோ பட்டாடையும் அணிகலனுமாக மலர் சூடி அமர்ந்திருக்கவும், உலகத்தின் ஒட்டுமொத்த அழகும் அவளிடமே குடியிருப்பது போன்ற பிரமை அவனுக்கு. பார்வையை விலக்குவதே பாவம் என்று எண்ணியது அவனது மனம். மெல்ல மெல்ல வானதியின்பால் தான் ஈர்க்கப்படுவதை அவனுமே ஏற்றுக்கொண்ட தருணம் இது.
‘இணையின் மீது உண்டாகும் இந்த ஈர்ப்பும் கவர்ச்சியும் உலகில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் இயல்பானதே! நீ ஒன்றும் தவறு செய்யவில்லை.’

மனசாட்சியே என்.ஓ.சி கொடுத்த பிறகு அருள்மொழிக்கு ஏன் தயக்கம்?
பூஜை முடிவில் இருவருக்கும் ரமா திருஷ்டி கழிக்க, அந்நேரத்தில் வந்து சேர்ந்தார்கள் இலக்கியாவும் சஞ்சயும். ஐந்து நண்பர்களும் சேர்ந்துகொண்டால் அங்கே ஆரவாரத்திற்குப் பஞ்சமிருக்காது. யாழினியையும் வேதவதியையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் வானதி. அனைவரும் வளவளத்ததில் நேரம் போனதே தெரியவில்லை.
கயல்விழி அவர்களைச் சாப்பிட அழைத்துச் செல்லுமாறு வானதியிடம் சொல்ல, அவளும் தோழமைகளுடன் கிளம்பினாள். முன்னே சென்றவளின் கையைப் பற்றி நிறுத்தினான் அருள்மொழி.
“உன் காதுல இருக்குற ஜிமிக்கி லூசா இருக்கு. டைட் பண்ணிக்க.”

வானதி திருகாணியைச் சரி செய்யப்போனவள், “ஆமா, இதெல்லாம் உன் கண்ணுக்கு எப்பிடி தெரியுது?” என்று கேட்க,
“ஏன்னா நான் உன்னைக் கவனிச்சிட்டே இருக்குறேன்” என்றான் அவன் அலட்டாமல்.
“ஏன்? நான் ஓடியா போகப்போறேன்? கவனிக்குறானாம்” வாய்க்குள் முணுமுணுத்தவளிடம்,
“நீ ஓடியெல்லாம் போகமாட்ட” என்றான் அவன் அழுத்தமாய்.
“அப்ப எதுக்கு டுவென்டி போர் செவன் (24/7) என்னையே கண்காணிக்குற மாதிரி பாக்கணும்?”
“நான் உன்னைத்தான் பாக்கணும். வேற யாரோ ஒருத்திய பாத்தா நல்லாவா இருக்கும்? நான் தான் சொன்னேனே ஐ அம் லாயல் டூ மை விமன். எனக்கும் உன்னைப் பாக்க பிடிச்சிருக்குனு வச்சுக்கோயேன்.”
புருவத்தை ஏற்றியிறக்கி அருள்மொழி சொல்லவும், இழுத்துப் பிடிக்க நினைத்த மதியத்தின் மிச்சச்சொச்ச கோபமெல்லாம் பனியாய் கரைந்து உச்சி குளிர்வதைப் போல உணர்ந்தாள் வானதி. மதியம் நடந்த கடுமையான வாக்குவாதத்தின் வெம்மையைத் தணித்தது அருள்மொழியின் இலகுவான பேச்சு. ‘இவனால் மட்டும்தான் என்னை அதீத கோபத்தில் ஆழ்த்தவும் முடியும், இப்படி ஒரேயடியாகக் குளிர வைக்கவும் முடியும். நானும் ரோசமற்று இவனது குளிர்ச்சியான வார்த்தைகளில் இதம் கண்டு தொலைக்கிறேன்’ – சந்தோஷமான சலிப்போடு அவனைத் தொடர்ந்து சாப்பிடுமிடத்திற்குக் கிளம்பினாள் வானதி.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

