“மனிதனை பூமி எனும் சிறைச்சாலைக்கு அனுப்பும் முன்னர் இறைவன் பூட்டிய விலங்குகளே உறவுகள். பெரும்பாலானவர்கள் அந்த விலங்குகளை பாரம்பரியம், கலாச்சாரம் எனும் சாவிகளைக் கொண்டு இன்னும் இறுக்கமாகப் பூட்டிக்கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். வெகு சிலரே அவற்றை உடைத்தெறிந்து விட்டு வாழ முயல்கின்றனர். எந்த ஒரு மனிதன் நம்பிய உறவுகள் கைவிடும் போது தனிமையை நேசிக்க கற்றுக் கொள்கிறானோ அவனுக்கு அத்தனிமையே பின்னர் உறவாகி விடும். சூடு கண்ட பூனையாய் அவனால் மீண்டும் எந்தப் புதிய உறவையும் நம்பவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது என்பதே உண்மை.
-தக்ஷிண்யா
தக்ஷிண்யாவும் நவ்யாவும் தங்கள் அறைக்குத் திரும்பியிருந்தனர். பாடி பாடி தொண்டை வறண்டு விட்டதால் தனது அறைக்கு மிளகு போட்ட பால் அனுப்பும்படி கேட்டுக்கொண்ட தக்ஷிண்யா முகம் கழுவி விட்டு இரவுடைக்கு மாறினாள்.
நவ்யா இருவருக்கும் சேர்த்து கொண்டு வந்த இரவுணவை பிரித்து தட்டுகளில் வைத்தவள் அவளைச் சாப்பிட அழைக்க இருவரும் வழக்கமாக சாப்பிடும் குட்டி மேஜையில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.
இருவரும் அனுதீப் சோனாக்ஷியின் ஜோடி பொருத்தத்தைப் பற்றி பேசிக்கொண்டனர்.
“அனுதீப் சாருக்கு அவரோட ஃபியான்சி மேல எவ்ளோ லவ்… தே ஆர் மேட் ஃபார் ஈச் அதர்” என நவ்யா சிலாகிக்க தக்ஷிண்யா சிரித்தாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“ஏன்டி நான் ஒன்னும் காமெடி பண்ணலையே… ஏன் இப்பிடி சிரிக்கிற?” என அவள் குறைபடவும்
“இந்த லவ், மேரேஜ், ஃபேமிலி, மேட் ஃபார் ஈச் அதர் கான்செப்ட்லாம் மனுசங்களான நாம நம்மளை ரொம்ப உயர்வா காட்டிக்க உருவாக்குனது… எனக்கு அதுல சுத்தமா நம்பிக்கை இல்ல நவி” என்றபடி கடைசி துண்டு புல்காவை வாய்க்குள் திணித்துக் கொண்டாள் தக்ஷிண்யா.
அவளை வழக்கம் போல திகைப்பாகப் பார்த்தபடி கை கழுவ சென்றாள் நவ்யா.
அதற்குள் மிளகு பால் வந்துவிட அதை அருந்தியபடி மடிக்கணினியைத் திறந்து மறுநாள் வேலைக்கான அட்டவணையைச் சரி பார்க்கத் துவங்கினாள் தக்ஷிண்யா.
நவ்யா வேலையில் கண்ணும் கருத்துமாக ஆழ்ந்தவளை பார்த்தபடியே அவளெதிரே அமர்ந்தாள்.
இன்று நேற்றல்ல, அவள் அறிமுகமான நாளிலிருந்தே உறவுகளைப் பற்றிய தக்ஷிண்யாவின் கருத்து இது தான் என்பதை நவ்யா நன்கறிவாள். காலப்போக்கில் அவளின் இந்த எண்ணம் மாறும் என்று நம்பிக்கொண்டிருந்தவளுக்கு இது நாள் வரை ஏமாற்றமே கிடைத்தது.
இவள் ஏன் இவ்வாறு நம்பிக்கையற்று இருக்கிறாள்? தனிமை இந்தளவுக்கு ஒருத்தியை மாற்றிவிடுமா என்ன? அப்படி பார்த்தால் தானும் கூட குடும்பத்தைப் பிரிந்து இங்கே தனிமையில் தானே இருக்கிறோம். இது நாள் வரை தனக்கு உறவுகள் மீதிருந்த நம்பிக்கை அப்படியே தானே இருக்கிறது. இவள் மட்டும் எந்த வகையில் உறவுகளால் ஏமாற்றப்பட்டிருப்பாள்?
மண்டைக்குள் குடைந்த கேள்விகளை ஓரங்கட்டிவிட்டு கணினியில் கண்ணாய் இருந்தவளிடம் பேசத் துவங்கினாள் நவ்யா.
“நீ ஏன் தக்ஷி இப்பிடி இருக்குற? யூ ஆர் ஜஸ்ட் ட்வென்டி ஃபோர்… இப்பவே வாழ்ந்து முடிச்ச கிழவியாட்டம் ஐ டோண்ட் பிலீவ் இன் லவ் அண்ட் மேரேஜ்னு கதாகாலட்சேபம் பண்ணாதடி”
அலுத்துப் போனக் குரலில் அறிவுறுத்தினாள் நவ்யா.
தக்ஷிண்யா மடிக்கணியின் திரையிலிருந்து விழிகளைப் பிரித்தெடுத்தவள் புன்னகையுடன்
“நமக்கு ஒரு விசயத்துல நம்பிக்கை வரணும்னா டே டு டே லைப்ல அந்த விசயத்தை நம்ம பார்த்து பழகி அனுபவப்பட்டிருக்கணும்… என் லைப்ல நான் பாத்து பழகுனதுலாம் அரைவேக்காட்டு காதலும், அவசரக்குடுக்கைத்தனமான கல்யாணமும், சுயநலமான பிரிவும் தான்… தட்ஸ் ஒய் ஐ டோண்ட் பிலீவ் இன் லவ் அண்ட் மேரேஜ்” என்றாள்.
நவ்யா அவளை ஆதங்கத்துடன் உற்று நோக்கினாள்.
“யாரோ சிலருக்கு நடந்தது தான் நமக்கும் நடக்கணும்னு அவசியம் இல்லையே தக்ஷி… எத்தனை பேர் திகட்ட திகட்ட காதலிச்சு ஜாம்ஜாம்னு கல்யாணம் பண்ணி ஜோரா வாழுறாங்க தெரியுமா? அவங்கல்லாம் உன் கண்ணுக்குத் தெரியவே மாட்டாங்களாடி?”
ஓ! நீ அப்படி வருகிறாயா என்று எண்ணியவளாக நமட்டுச்சிரிப்புடன் அவளுக்குப் பதிலளித்தாள் தக்ஷிண்யா.
“நெட்ஃபிளிக்ஸ்ல ‘ஆல் ஆப் அஸ் ஆர் டெட் ‘(All of us are dead) சீரீஸ் பாத்திருக்கியா? அதுல எல்லாருக்கும் ஜாம்பி வைரஸால பாதிப்பு உண்டாகும்… ஆனா சில பேருக்கு மட்டும் அந்த வைரஸை சமாளிக்கிற இம்யூனிட்டி பவர் இயற்கையாகவே இருக்கும்…
காதலும் கல்யாணமும் கிட்டத்தட்ட அந்த ஜாம்பி வைரஸ் மாதிரி தான் நவி… சிலருக்கு அதை கடைசி வரைக்கும் கட்டிக் காப்பாத்துற திறமை இம்யூனிட்டி பவர் மாதிரி வாய்க்கும்… துரதிர்ஷ்டவசமா எனக்கு அந்த பவர் இல்லைனு நினைக்குறேன்”
“ஊப்ஸ்! இப்ப நீ என்ன தான் சொல்ல வர்ற?”
“சிம்பிள்… லவ் அண்ட் மேரேஜ்ங்கிற ஜாம்பி வைரஸ் அட்டாக்கால பாதிக்கப்பட்டு வாழ்க்கை முழுக்க ஜாம்பி மாதிரி நிம்மதியில்லாம திரிய நான் விரும்பல… என்னோட பன்னிரண்டாவது வயசுல இருந்து நான் தனியா தான் இருக்குறேன் .. எனக்குத் தனிமை பழகியும் போச்சு, பிடிச்சும் போச்சு… சோ நான் இப்பிடியே லைஃப் லாங் இருந்துக்குறேன் நவி”
“உன் கிட்ட பேசி ஜெயிக்க முடியாதுடி” மீண்டும் அலுத்த குரலில் கூறிவிட்டு குளிருக்கு இதமாக கம்பளிக்குள் ஒளிந்து கொண்டாள் நவ்யா.
தக்ஷிண்யா மடிக்கணினியை மூடி வைத்தவள் விரல்களை சொடுக்கிட்டுக் கொண்டாள்.
கண்களை மூடி கம்பளிக்குள் கிடக்கும் நவ்யாவைப் பார்த்தவள் விளக்கை அணைத்துவிட்டு தானும் படுக்கையில் விழுந்தாள்.
ஆனால் உறக்கம் தான் வரவில்லை. கண்களை மூடினால் என்னென்னவோ காட்சிகள்! ஏதேதோ குரல்கள்! மனதை உருக்கும் சிறுமி ஒருத்தியின் விசும்பல்! ஆவேசமான குறைகூறல்கள்!
முடிவில் தக்ஷிண்யாவின் உறக்கம் ஓடி ஓடி இரவின் விளிம்புக்கே சென்றுவிட்டது.
அரை குறை உறக்கத்தின் பரிசாக சிவப்பேறிய கண்களுடன் அவள் விழித்த போது நேரம் காலை ஐந்தரை.
காலையில் எழுந்ததும் செய்யும் முதல் கடமையான மொபைலை நோண்டும் கடமையை ஆற்றியவளுக்கு அனுதீப்பிடமிருந்து வாட்சப்பில் செய்தி வந்திருந்தது.
அதில் தனது நண்பனுக்கு அறை ஏற்பாட்டில் சில குறைகள் இருப்பதால் அவனை நேரில் சென்று சந்தித்து அவற்றை சரி செய்யும்படி கட்டளையிட்டிருந்தான் அனுதீப்.
நேற்று தானே நவ்யா கேட்ட போது அனைத்தும் சரியாக இருப்பதாக அந்நண்பன் கூறினான்! ஒரு நாளுக்குள் என்ன குறை அவனுக்கு?
என்னவாக இருப்பினும் அதை சரி செய்வது அவளது கடமை. அதை ஆற்றுவதற்கு தயாரானாள் தக்ஷிண்யா. குளித்து முடித்து செய்யும் வேலைக்கேற்ப உடையணிந்து அவள் கிளம்பும் போது தான் நவ்யா கண் விழித்தாள்.
“என்ன தக்ஷி சீக்கிரமே ரெடியாயிட்ட?” என்றபடி கொட்டாவி விட்டவளிடம் அனுதீப் அனுப்பிய செய்தி பற்றி கூறினாள் தக்ஷிண்யா.
அனுதீப்பின் நண்பனது அறைக்குச் சென்று அவனிடம் பேசிவிட்டு வருவதாக கூறி கிளம்பினாள் அவள்.
அழகான நதிக்கரையோரத்து அறை. இதில் என்ன குறை இருக்க முடியும்? யோசனையோடு கதவைத் தட்டினாள் தக்ஷிண்யா.
“மே ஐ கமின் சார்?”
உட்பக்கமிருந்து எவ்வித பதிலும் வராமல் போகவும் மீண்டும் கதவைத் தட்டப் போனவள் எதிர்பாராவிதமாக கதவு திறக்கவும் அதை திறந்தவனின் மார்பில் கையை வைத்து தட்டிவிட வந்தவனோ அவளைக் கண்டதும் புன்சிரிப்பு மின்ன நின்றான்.
தக்ஷிண்யா அவனை அங்கே எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது திகைத்த முகபாவத்திலிருந்தே கண்டுகொண்டான் ருத்ரதேவ்.
அவள் அசையாமல் சிலையாய் நிற்பதையும் இன்னும் தன் மார்பை கதவென எண்ணி தட்டிய கரத்தை விலக்காததையும் நமட்டுச்சிரிப்போடு கவனித்தவன் “ஹலோ மேடம் ஆர் யூ ஹியர்?” என்று தனது கரத்தை அவள் முகத்தின் முன்பே ஆட்டவும் கனவிலிருந்து விழித்தவளைப் போல பதறிக்கொண்டு விலகினாள் தக்ஷிண்யா.
விலகியதோடு “நீங்களா?” என்று தமிழில் கேட்க வேறு செய்தாள் அவள்.
அவளிடமிருந்து தமிழ் பேச்சு வரவும் ருத்ரதேவ் மார்பினூடே கைகளை கட்டிக்கொண்டு குறுகுறுவென பார்க்க தக்ஷிண்யா நாக்கை கடித்துக் கொண்டாள்.
“இப்ப என்ன லாங்வேஜ்ல பேசலாம்னு யோசிக்கிறீங்களா மேடம்?”
அவனது பேச்சில் தொனித்த கேலியில் கண்களை உருட்டி முறைத்தாள் அவள்.
அவனோ அப்பார்வையைச் சட்டை செய்யாமல் “எதுக்குப் பொய் சொல்லணும்? எதுக்கு இப்பிடி அம்மாக்கு தெரியாம சாக்லேட் சாப்பிட்ட குழந்தை மாதிரி முழிக்கணும்?” என்று கேட்கவும்
“முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட என்னைப் பத்தி எந்த விவரத்தையும் சொல்லுறது எனக்குப் பிடிக்காது சார்” என்றாள் அவள் சட்டென்று.
“குட் ஹேபிட்… பட் ஒரு தூர பிரதேசத்துல சொந்த ஊர்க்காரங்களையும் ஊர் பாஷையையும் கேட்டா யாரா இருந்தாலும் எக்சைட் ஆவாங்க… நம்ம ஊர்க்காரங்க கிட்ட அறிமுகமாகிக்கணும்னு நினைப்பாங்க… அது ஒன்னும் தப்பில்லையே” என்று சாதுரியமாக அவன் மடக்கவும் பதில் தெரியாது விழித்தாள் தக்ஷிண்யா.
பின்னர் சுதாரித்தபடி “அனுதீப் சார் ரூம் அரேஞ்ச்மெண்ட்ல உங்களுக்கு ஏதோ ப்ராப்ளம்னு சொன்னார்… என்னனு சொன்னீங்கனா நான் சரி பண்ணிடுறேன்” என்றாள்.
“ஓ! அதுக்கு தான் வந்தீங்களா?” என்றவன் மோவாயில் ஆட்காட்டி விரலால் தேய்த்துவிட்டு
“வேற ஒன்னுமில்ல… யூஸ்வலா இட்லி, தோசைனு நம்ம ஊர் சாப்பாட்டைச் சாப்பிட்டுப் பழகுன நாக்குக்கு சப்பாத்தியும் புல்காவும் சுத்தமா பிடிக்கல… உங்க ரிசார்ட் செஃப் கிட்ட எனக்காக சவுத் இந்தியன் ஃபுட் சமைக்கச் சொன்னதுக்கு இட்லிங்கிற பேர்ல டேபிள் வெயிட் மாதிரி ஒன்னை என் ரூமுக்கு அனுப்பி வச்சார்… அதை சாப்பிட்டு என் பல்லை இழக்க விரும்பாம டேரக்டா அனுதீப்கு கால் பண்ணி சாப்பாடு சரியில்லனு கம்ப்ளைண்ட் பண்ணுனேன்… இப்ப எனக்கு ப்ராப்பர் சவுத் இந்தியன் டிபன் சாப்பிடணும்… இங்க இல்லைனாலும் பரவாயில்ல… இதே ஊர்ல வேற ஏதாச்சும் ரெஸ்ட்ராண்ட்ல கிடைக்கும்னா அங்க என்னை கூட்டிட்டுப் போங்க” என்றான் அவன்.
தக்ஷிண்யா அவனை திகைப்பாகப் பார்த்தாள்.
“என்னோட வேலை இந்த ரிசார்ட் வளாகத்துக்குள்ள மட்டும் தான் சார்… இங்க உங்களுக்குப் பிரச்சனைனா சொல்லுங்க… அதை விட்டுட்டு உங்களை ரெஸ்ட்ராண்ட், ஹோட்டல்னு அழைச்சிட்டுப் போறதுக்கு எனக்கு இங்க சேலரி குடுக்கல” என்றாள் கறாராக.
ருத்ரதேவோ தோளைக் குலுக்கிவிட்டு “அனுதீப் என்னவோ உங்களைப் பத்தி ஆஹா ஓஹோனு பாராட்டுறான்… பட் நீங்க ஒரு சின்ன வேலை செய்ய சொன்னாலே முடியாதுங்கிறீங்க… நான் அனுதீப்போட பெஸ்ட் ஃப்ரெண்ட்… என்னைக் கவனிச்சிக்கிற பொறுப்பை அவன் உங்க கிட்ட தான் குடுத்திருக்குறதா சொன்னான்… இப்ப உங்களால முடியாதுனு நான் அவன் கிட்ட இன்ஃபார்ம் பண்ணிடவா?” என்று கேட்க தக்ஷிண்யா மானசீகமாக தன் தலையிலடித்துக் கொண்டாள்.
இது நாள் வரை அனுதீப் சொன்ன எந்த வேலையையும் அவள் தட்டிக் கழித்ததில்லை. பாதியில் விட்டதுமில்லை. அந்தப் பெயரை இவன் நாசம் செய்துவிடுவான் போல என மனதுக்குள் பொருமியவள் அதை காட்டிக்கொள்ளாமல்
“அதுக்கு அவசியமே இல்ல சார்… ஃபைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க… நானே வந்து உங்களை இங்க இருக்குற பெஸ்ட் சவுத் இந்தியன் ரெஸ்ட்ராண்டுக்கு அழைச்சிட்டுப் போறேன்” என்று சொல்லிவிட்டு நவ்யாவைக் காண கிளம்பினாள்.
தான் ருத்ரதேவுடன் வெளியே செல்வதை குறிப்பிட்டு “நான் வர்ற வரைக்கும் கெஸ்ட்ஸோட ரூமுக்கு கரெக்டா ப்ரேக்ஃபாஸ்ட் போகுதானு பார்த்துக்க நவி… ஜஸ்ட் அரைமணி நேரத்துல வந்துடுவேன்” என்றாள்.
சொன்னதோடு ருத்ரதேவை அழைத்துக்கொண்டு கிளம்பவும் செய்தாள்.
அங்கே வாடகைக்கு டாக்சி புக் செய்வது தான் வழக்கம். அவர்களுக்காக தக்ஷிண்யா புக் செய்த டாக்சி வந்துவிட இருவரும் கிளம்பினர்.
தக்ஷிண்யா சொன்ன ரெஸ்ட்ராண்டும் வந்துவிட்டது. ருத்ரதேவ், தான் ஆசைப்பட்டது போல தென்னிந்திய உணவு வகைகளை அங்கே கண்டதும் நிம்மதி பெருமூச்சு விட்டான்.
தனக்கு வேண்டியவற்றை ஆர்டர் செய்தவன் தக்ஷிண்யாவையும் தன்னுடன் சாப்பிடும்படி அழைக்க அவளோ “நோ தேங்க்ஸ்… நீங்க சாப்பிட்டுட்டு கிளம்புனிங்கனா சீக்கிரமா ரிசார்ட்டுக்குப் போயிடலாம்” என்று மறுத்தாள்.
“அட என்னம்மா! நம்ம ஊர் பொண்ணாச்சே, தனியா சாப்பிட்டா நாகரிகமா இருக்காதேனு கேட்டா வேண்டாங்குறிங்க… என்ன தான் உங்க ரிசார்ட்டுக்கு நான் வந்திருந்தாலும் எனக்காக இவ்ளோ தூரம் வந்த நீங்க என்னோட கெஸ்ட் மாதிரி… அதிதி தேவோ பவனு சொல்லுவாங்க… சோ நீங்க இப்ப கடவுளுக்குச் சமானமா வேற புரொமோட் ஆகிட்டீங்க… ப்ளீஸ் சாப்பிட மாட்டேனு சொல்லி என் மனசை உடைச்சிடாதிங்க” என்றான் ருத்ரதேவ்.
தக்ஷிண்யா படபடவென பேசுபவனின் பேச்சில் அயர்ச்சியுற்றவள் அவன் மேலே பேசுவதற்குள் தனக்கும் காலையுணவைச் சொல்லிவிட்டு அமர்ந்தாள்.
அமர்ந்தவள் ருத்ரதேவ் என்ற ஒருவன் தன்னெதிரில் இருப்பதை பொருட்படுத்தாது மொபைலில் மூழ்கிப் போக அவனோ கர்மசிரத்தையாய் அவள் முகத்தில் உண்டாகும் மாறுபாடுகளை கன்னத்தில் கை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் தற்செயலாக நிமிரவும் அவனது பார்வையை விலக்கிக் கொண்டான். ஆனால் பெண்களுக்கே உரித்தான உள்ளுணர்வின் தூண்டுதலால் அவனது பார்வை விலகலை கண்டுகொண்ட தக்ஷிண்யா மொபைலை மேஜை மீது வைத்தாள்.
“ஏன் சார் நீங்க என் கிட்ட கொஞ்சம் வியர்டா நடந்துக்கிறீங்க?”
நேருக்கு நேராகப் பார்த்தபடி கேட்டவளை மெச்சும் பார்வை பார்த்தபடி பதிலளித்தான் ருத்ரதேவ்.
“சோ நான் உங்களை பார்க்குறேன், உங்க கிட்ட பேச ட்ரை பண்ணுறேன்னு உங்களுக்கும் தெரியுதுல்ல… அப்ப ஏன் நீங்க எதுவுமே தெரியாத மாதிரி காட்டிக்கிறிங்க? யூ நோ ஒன் திங், நான் ஹாய் சொல்லுறப்ப நீங்களும் ஹாய் சொன்னிங்கனா அதுக்கு அப்புறம் நான் உங்களை பத்தி யோசிக்கவே மாட்டேன்… ஆனா நீங்க பதில் பேசாம ஆட்டிட்டியூட் காட்டுனா ஏன்டா இந்தப் பொண்ணு இப்பிடி நடந்துக்குதுனு உங்களை பத்தி மட்டும் தான் யோசிச்சிட்டே இருப்பேன்…. இது தான் ஹியூமன் சைக்காலஜி மேடம்”
“பழக்கமில்லாத ஆட்கள் கிட்ட நான் அவ்ளோ ஈசியா மிங்கில் ஆகுறதில்ல சார்…. அதுலயும் ஜென்ட்ஸ் கிட்ட என் வேலை சம்பந்தமா பேசுறதை தவிர அனாவசிய பேச்சு வச்சுக்கிறது எனக்குப் பிடிக்காது”
“குட் கேர்ள்… அது வரைக்கும் நான் லக்கி தான்” என்றான் அவன்.
“ஏன் நீங்க லக்கி?” என்று அவள் புரியாது விழிக்க அவனோ மற்ற ஆண்களிடம் நீ எல்லை வைத்து பழகுவது கூட எனக்கு நல்லது தான் என்று எண்ணிக்கொண்டான்.
அவள் பதிலை எதிர்பார்த்த தருணத்தில் ஆர்டர் செய்த உணவு வந்துவிட சாப்பிடும்படி கை காட்டிவிட்டு தானும் சாப்பிட ஆரம்பித்தான்.
தக்ஷிண்யா அதற்கு மேல் பேச்சை வளர்க்க விரும்பாமல் சாப்பிடத் துவங்கினாள்.
சாப்பாட்டின் இடையே ருத்ரதேவின் மொபைலுக்கு அழைப்பு வர அழைப்பை ஏற்றவன் பேசிக்கொண்டே சாப்பிட்டான்.
“குட் மானிங் அத்தை… நான் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட ரெஸ்ட்ராண்டுக்கு வந்திருக்குறேன்… ம்ம்ம்ம்… இல்ல அத்தை, நோ சப்பாத்தி, நோ புல்கா… நான் இட்லி தான் சாப்பிடுறேன்… சட்னி அவ்ளோ காரம் இல்லத்தை… லஞ்ச்ல கண்டிப்பா மோர் சேர்த்துக்குறேன்”
அவனது பேச்சை கவனித்த தக்ஷிண்யா யாரோ ஒருவர் சாப்பாட்டு விசயத்தில் ஆலோசனை சொல்லுமளவுக்கு இவன் என்ன சிறுகுழந்தையா என்று எண்ணிக்கொண்டாள்.
தானும் குடும்பத்தோடு வாழ்ந்திருந்தால் தன் மீதும் அக்கறை எடுக்க இப்படி ஒரு ஜீவன் இருந்திருக்குமோ? ஆனால் அப்படி ஒரு ஜீவன் தேவை தானா என்ன?
தான் என்ன சாப்பிடுவது என்பதில் கூட தனித்து முடிவெடுக்க முடியாத நிலை தனக்கு வாய்க்காத வரை நல்லது தானே!
மனதில் நினைத்ததை வாய் விட்டு அவனிடம் கூறியும் விட்டாள் தக்ஷிண்யா.
“நீங்க என்ன சாப்பிடணும், எவ்ளோ சாப்பிடணும்ங்கிறதை கூட மொபைல்ல பேசுனவங்க தான் டிசைட் பண்ணுவாங்க போல… இந்த சின்ன டிசிசனை கூட நீங்க எடுக்க மாட்டிங்களா?”
“உங்களுக்கு என்னை பார்க்குறப்ப சின்ன விசயத்துல கூட சுயமா முடிவெடுக்காம யாரோ ஒருத்தர் கண்ட்ரோலுக்கு ஏத்த மாதிரி ஆடுறவனா தோணலாம்… பட் அந்த யாரோ ஒருத்தர் என் மேல உயிரையே வச்சிருக்குற என்னோட அத்தை… அவங்க என்ன சொன்னாலும் என்னோட நல்லதுக்காக தான் இருக்கும்… சோ இட்லில ஆரம்பிச்சு பிசினஸ் டீல் வரைக்கும் அவங்க சொல்லுறதை கேக்குறதுக்கு நான் தயங்குனதே இல்லை”
சொல்லிவிட்டு மீண்டும் இட்லி சாம்பாருடன் உறவாட ஆரம்பித்தான் ருத்ரதேவ். தக்ஷிண்யாவோ இந்தக் காலத்தில் இப்படி ஒருவனா என அதிசயித்தாள்.
நம் மீது அக்கறையும் அன்பும் காட்டும் பெரியவர்களுக்குப் பல நேரங்களில் நாம் வளர்ந்ததே மறந்துவிடுகிறது. எனவே தான் பல நேரங்களில் அவர்களின் அன்பான செய்கைகள் ஒரு கட்டத்திற்கு மேல் அடக்குமுறைகளாக மாறுவதை அவர்களால் உணர்ந்துகொள்ள முடிவதில்லை.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


