“இன்னைக்குக் காலேஜ் கேண்டீன்ல சீனியர் ஒருத்தன் எனக்கு ப்ரபோஸ் பண்ணிட்டான் அருள். அவன் ஆளும் பாக்குறதுக்கு உன்னை மாதிரியே இருந்தான். எனக்கு அவனோட புரபோசலைக் கேட்டதும் சிரிப்புதான் வந்துச்சு. காதல் எல்லாம் ரொம்ப ஓவர் ரேட்டடான எமோசன்னு தோணுது அருள்.”
–வானதியின் கடிதம்…
வானதி நல்ல உறக்கத்திலிருந்தாள். மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சத்தில் அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்த அருள்மொழிக்கு மனமெல்லாம் சிந்தனை மேகங்களே!

ஸ்காட்லாந்துக்கு வந்ததன் காரணமே ஒரு இரகசியக் கோப்பினை பெறுவதுதான். அந்தக் கோப்பிலிருக்கும் தகவல்கள் ஜெயசந்திரன் வெளிநாடுகளில் செய்திருக்கும் கணக்கில் காட்டப்படாத முதலீடுகள். அவன் சொல்லியிருந்த எமர்ஜென்சி இதுவே.
லண்டனிலிருந்து இந்தியாவுக்கு வரும் வரை அவனுக்கு இருந்த நோக்கமே வேறு. தனது குடும்பத்தின் அழிவுக்குக் காரணமான ஜெயசந்திரனின் அரசியலுக்கு மட்டுமன்றி அவரது உயிருக்கும் முடிவுரை எழுதுவதுதான்.
நான்கு உயிர்கள் போனதற்கான பதிலடியாக ஜெயசந்திரனின் உயிர் போவது ஒன்றே இருக்க முடியுமென நம்பியிருந்தான். கட்சிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நுழைவதற்கான அடித்தளத்தை எப்போதோ அகத்தியன் மூலம் அவன் போட்டுவிட்டான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
கட்சியில் இருக்கும் தனது தந்தையின் ஆதரவாளர்களிடம் இன்னுமே அவன் தொலைபேசி மூலம் தொடர்பில் இருக்கிறான். அவனது பழிவாங்கும் படலத்தின் அடுத்த கட்டமென்ன என்பதில் அவனுக்கு எந்தக் குழப்பமும் இல்லை.
ஆனால் சொந்த வாழ்க்கையில் எப்போது நிலையான அமைதியை அவன் கொண்டுவரப் போகிறான் என்பதற்கு இப்போது வரை தெளிவானப் பதிலைத் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
வானதியிடம் அவளது தந்தையின் சுயரூபத்தைச் சொன்னாலும் அவள் நம்பப் போவதில்லை. ஒருவேளை நம்பினாலும் அதீதமாய் காயப்பட்டுப் போவாள். அவனது நட்பால் அவள் பைத்தியக்காரியாய் கண்ணீர் சிந்திய தருணங்களை வெகு சிரமத்தோடு இரும்பு மனிதனாய் கடப்பதே அருள்மொழிக்குத் திணறலாய் இருந்தது.
இதில் தந்தையை எண்ணி அவள் உடைந்துவிட்டால்? நெடுநேரம் யோசித்தவனுக்கு அரசியலைப் போலவே சொந்த வாழ்க்கையிலும் தீர்க்கமாய் முடிவெடுக்கும் ஸ்திரம் வந்தது. தன்னருகே உறங்குபவளை ஆழ்ந்து நோக்கியவன் மெதுவாய் குனிந்து அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
அவளை நெருங்கவோ முத்தமிடவோ அருள்மொழிக்குத் தயக்கமில்லை. அதோடு இனி தனக்கும் அவளுக்கும் இடையே எந்த ஒளிவுமறைவும் இருக்கக் கூடாதெனத் தீர்மானித்தான்.
மறுநாள் மதியம் ஏதோ அலுவல் ரீதியாய் வெளியே செல்வதாகச் சொல்லிவிட்டுப் போன அருள்மொழி, மாலையில் வானதியை எடின்பரோவின் ‘டீன் வில்லேஜ்’ பகுதிக்கு அழைத்துச் சென்றான்.
பழங்காலத்துக் கற்களால் செதுக்கப்பட்ட வீடுகளும், பாசி படிந்த அந்தச் சிற்றோடையின் சத்தமும் ஒரு மாயாஜால உலகத்திற்குள் நுழைந்த உணர்வைத் தந்தன வானதிக்கு.
அந்தச் சிற்றோடையின் குறுக்கே இருந்த, நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஒரு சிறிய கற்பாலத்தின் மீது ஏறி நடந்தார்கள் இருவரும். பாலத்தின் நடுவே, ஒரு சிறு மாடம் போன்ற மறைவிடம் இருந்தது. அதன் ஜன்னல் வழியே பார்த்தால், கீழே ஓடும் ‘வாட்டர் ஆஃப் லீத்’ நதி வைரங்களாய் மின்னியது.
அவள் பாலத்தின் விளிம்பில் நின்றபோது, அருள்மொழி அவளுக்குப் பின்னால் வந்து நின்றான். “இங்க பாரு….” என்றவன், அந்தப் பாலத்தின் கற்சுவரில் இருந்த ஒரு சிறிய ரகசிய இடுக்கிலிருந்து, ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்தான்.
பாட்டிலின் வாய்ப்பகுதி ஒரு கார்க்கினால் மூடப்பட்டிருந்தது. கூடவே அதனுள் ஒரு விண்டேஜ் காகிதச் சுருள் நூலினால் கட்டப்பட்டுக் கிடந்தது.
“என்ன இது?” என்றவளிடம் அந்தப் பாட்டிலை நீட்டினான் அருள்மொழி.
“மெசேஜ் இன் பாட்டில்” என்றான் ஆர்வமானப் புன்னகையோடு.
“அப்பிடினா?”
“அந்தக் காலத்துல கடல்ல சிக்குனவங்க அவங்களுக்கு வேண்டிய செய்தியை இந்த மாதிரி பழைய காகிதத்துல எழுதி பாட்டில்ல வச்சு மூடி கடல்ல வீசுவாங்க. பாட்டில் கடல்ல மிதந்து யார் கையில போய் சேர்ந்தாலும் உதவி கிடைக்குமேனு செய்வாங்களாம். இன்னைக்கு என் மனசுல உள்ளதை உன் கிட்ட சொல்ல என்ன செய்யலாம்னு யோசிச்சப்ப இந்த ஐடியா தோணுச்சு. எடுத்துப் பாரு.”
வானதி பாட்டிலை மூடியிருந்த கார்க்கை எடுத்தாள். பின்னர் நூலினைப் பிடித்து இழுத்து காகிதச் சுருளை வெளியே எடுத்தாள். பார்ப்பதற்கு விண்டேஜ் பேப்பர் போல இருந்தது அது.

அதைப் பிரித்தவள் அதில் முத்து முத்தாய் அருள்மொழியின் கையெழுத்து இருக்கவும் கண்களில் மின்னல் மிளிர அவனை நோக்கினாள்.
“நீ பன்னிரண்டு வருசம் எழுதுன எல்லா லெட்டருக்குமான பதில் இந்த ஒரு லெட்டர்ல இருக்கு வானதி” என்றான் அவன் இதமாக.
முகமும் அகமும் மலர அதை வாசிக்க ஆரம்பித்தாள் வானதி.
‘உன் கிட்ட நான் ரெண்டு விசயத்தை ஷேர் பண்ணனும். ஒன்னு இத்தனை வருச புறக்கணிப்புக்கான மன்னிப்பு. பன்னிரண்டு வருசம் உன்னோட உண்மையான நட்பையும் அன்பையும் நான் உதாசீனப்படுத்திருக்கேன். அலட்சியப்படுத்திருக்கேன். என் மௌனம் உனக்குக் குடுத்த வலிக்கும் கண்ணீருக்கும் என்னை மன்னிச்சுடு வானதி.
அடுத்து நான் சொல்ல நினைக்குறது – என்னால நீ இல்லாம வாழ முடியாது வானதி. எனக்குள்ள இருக்குற உணர்வுக்கு நான் வச்ச பேர் காதல். ஐ நீட் யுவர் லவ், நான் இழந்த எல்லாரோட அன்பையும் உன் ஒருத்தியோட காதல்ல நான் டேலி பண்ணிக்க நினைக்குறேன். கொஞ்சம் சுயநலமான எதிர்பார்ப்புதான். இப்பிடி கேக்குறதுக்கு எனக்குத் தகுதி இல்லனு தெரியும். ஆனாலும் வெக்கத்தை விட்டுக் கேக்குறேன். என் லவ்வை ஏத்துக்குறியா? உன் பதிலுக்காக மனசு முழுக்க காதலோட காத்திருப்பேன் நான். க்ரிஞ்ச், ட்ராமானு வழக்கம் போல வசனம் பேசாம என்னை நானாவே ஏத்துக்கோயேன்.’
படித்து முடித்தவளின் மனம் படபடவென அடித்துக்கொண்டது. காதலா? சிறகடித்த இமைகளோடு அவனை ஏறிட்டாள்.
“என்ன? ஏத்துப்பியா என்னை? இல்ல, நீ உன் நட்புக்காக என் கிட்ட பன்னிரண்டு வருசம் போராடுன மாதிரி நானும் உன் கிட்ட போராடணுமா? எதுவா இருந்தாலும் எனக்கு ஓகே. ஆனா எப்பவும் நீ இல்லாத லைஃப்னு ஒன்னை நான் நினைச்சுப் பாக்க விரும்பல.”
வானதி அமைதியாக அவனிடமிருந்து அந்தப் பாட்டிலை வாங்கிக்கொண்டாள். கடிதத்தை மடிச்சிட்டு மீண்டும் பாட்டிலுக்குள் வைத்து கார்க்கினால் அடைத்தவள் தன் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டாள்.
“இந்தத் தருணத்தை நான் மறக்கவே மாட்டேன் அருள்” என்றாள் அவள் முத்தாய்ப்பாக.
தனது கேள்விகளுக்கானப் பதிலைத் தேடி அவனது விழிகள் அலைபாய, வானதி அவனது கைகளைப் பற்றிக்கொண்டாள்.
“நீ இல்லாத வாழ்க்கைய நானும் வாழ விரும்பல. நீ திரும்ப என் வாழ்க்கைக்குள்ள வரமாட்டியோனு நான் யோசிச்சு கலங்கிருக்கேன். இப்ப நீயே இதெல்லாம் வெளிப்படையா சொல்லுறப்ப நான் எப்பிடி முடியாதுனு சொல்லுவேன்?”
“ஒரு நண்பனா உன் கூட நான் இருக்கணும்னு நீ ஆசைப்பட்ட. ஆனா நான் நண்பனா மட்டும் இருக்க விரும்பல. வித்தியாசம் புரியுதா?”
வானதியின் கண்களை ஆழ்ந்து நோக்கியவனுக்கு அந்த விழிகள் தனது பார்வையைத் தவிர்ப்பதையும் தவிப்பதையும் புரிந்துகொள்ள முடியாதா என்ன?
அதிகம் அவளைப் படுத்த விரும்பாதவனாய் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்துப் போய்விட்டான். அங்கே போனதும் அவளது கையில் ஒரு கோப்பினை ஒப்படைத்தான்.
“என்ன இது?” எனக் குழம்பியவளிடம்,
“சின்ன வயசுல நாம ஒரு கேம் விளையாடுவோம். உனக்கு நான் ஏதாச்சும் ஸ்பெஷலா சொல்ல நினைச்சேன்னா அந்த ஸ்பெஷலான விசயம் எங்க இருக்குனு ஹிண்ட் குடுப்பேன். இது அந்த ஹிண்ட். வாங்கிக்க” என்றான்.
வானதியும் வாங்கிக்கொண்டாள். புரட்டியவளுக்கு அதில் வரிசையாய் சிலரது பெயர்கள், முகவரிகள், தொலைபேசி எண்கள் இருக்கவும் குழம்பினாள். அதில் மெகன் பிரவுனின் எண்ணும் அடக்கம்.
“உன் கிட்ட நான் மறைச்சிருக்குற முக்கியமான விசயத்தை நீயே தேடி கண்டுபிடி.”

அருள்மொழியின் பேச்சு வானதிக்குப் புதிராகவே இருந்தது. இருப்பினும் அந்தக் கோப்பினை எடுத்துத் தனது உடைமைகள் அடங்கிய சூட்கேசில் வைத்தாள்.
“இதை நீயே என் கிட்ட சொல்லலாமே.”
“நீ நம்ப மாட்ட வானதி.”
வானதி ஆற்றாமையோடு எழுந்தாள்.
“உன்னை நான் நம்பமாட்டேனா?”
அருள்மொழி கசப்பாய் புன்னகைத்தான்.
“இந்த விசயத்துல நம்ப மாட்ட. உனக்கு முழு உண்மையே தெரிஞ்சாலும் ஏதோ ஒரு விதத்துல இந்த விசயம் பொய்யாயிடாதானு நீ ஆதங்கப்படுவ. மார்க் மை வேர்ட்ஸ்.”
வானதி தலையை உலுக்கிக்கொண்டாள். அவனை நெருங்கினாள்.
“எல்லாத்தையும் விடு. நான் அதைப் பாத்துக்குறேன்.”
“அப்பிடியே என்னையும் பாத்துக்கிட்டா நல்லா இருக்கும்.”
“இப்ப நான் உன்னைத்தானே பாத்துட்டிருக்கேன்.”
“பாத்தா மட்டும் போதாது.”
கண்களில் கள்ளத்தனம் மின்னியதும் வானதியிடம் தடுமாற்றம்.
“போடா” என்று அவனது கையில் அடித்தவளை இறுக அணைத்துக்கொண்டான் அருள்மொழி.
முதலில் திணறி திகைத்து விதிர்விதிர்த்தவள் பின்னர் மெதுவாய் அந்த அணைப்பில் அடங்கிப்போனாள். ஏற்றுக்கொண்டதன் அடையாளமாய் அவளது கரமும் அவனது முதுகை அணைத்துக்கொள்ள அருள்மொழிக்குள் மனநிறைவு பிரவாகமாய் பொங்குவதாய்!
மறுநாளே இருவரும் லண்டனுக்குப் புறப்பட்டார்கள். தேனிலவைக் கொண்டாடிவிட்டு வருகிறார்கள் என தர்மலிங்கமும் மெகனும் நினைத்துக்கொண்டார்கள்.
கிடைத்த இடைவெளியில் மெகனிடம் அருள்மொழியைப் பற்றி விசாரித்தாள் வானதி. அவன் கொடுத்த பட்டியலில் முதலில் இருந்தவர் மெகன் ப்ரவுன் தானே.
“அருள் இங்க வந்தப்ப நிறைய நேரம் தனிமைல இருப்பான். கூடவே அவனுக்குப் பழைய ஞாபகங்கள் திரும்பிடுச்சானு பரிசோதனை நடக்க, அவனுக்கு நான் தான் சைக்யாட்ரிக் ட்ரீட்மெண்ட் குடுத்தேன். அந்தச் சமயத்துல அவன் காம்ப்ளக்ஸ் போஸ்ட் ட்ராமடிக் ஸ்ட்ரெஸ் டிஸார்டரால் பாதிக்கப்பட்டிருந்தான். வாழ்க்கைல எதிர்பாக்காம நடக்குற துயரச் சம்பவங்கள், போர், ஜெயில் மாதிரி மோசமான சூழல் இதெல்லாம் ஒரு மனுசனுக்கு இந்தப் பிரச்சனையை உண்டாக்கும். கொஞ்சம் கொஞ்சமா அவன் தேறுனான். இந்த ஐவி மேனர்ல சொகுசான வாழ்க்கை, நினைச்சதை எல்லாம் செஞ்சு முடிக்கிறதுக்கு தர்மா மாதிரி ஒரு கார்டியன், நல்ல படிப்புனு அருளுக்கு எல்லாமே கிடைச்சாலும் அவன் குடும்பத்தை இழந்ததால் வந்த வலியை ஈடு செய்ய முடியாதுல்ல.
இங்க அவனுக்கு ஃப்ரெண்ட்ஸ் கிடையாது. நான், தர்மா, ஆர்தர், செஃப் – இந்த நாலு பேரைத் தவிர அவன் வேற யாரையும் நம்பவும் மாட்டான். ஹி நீட்ஸ் அ ஃபேமிலி. அது ஒன்னு தான் அவனோட இழப்பை மறக்க வைக்கும். யூ ஷுட் ஹேவ் டு அண்டர்ஸ்டாண்ட் ஹிம் வானதி. கடந்த கால இழப்புலயே அவன் தேங்கி நின்னான்னா நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுக்கு எப்பவுமே நிம்மதியைக் குடுக்காது. கவுன்சலிங் ஏஜை அவன் தாண்டிட்டான். ஒன்லி யுவர் லவ் கேன் ஹீல் ஹிம்.”

பொறுமையாய் எடுத்துச் சொன்னார் மெகன். வானதியும் அவரது பேச்சைக் கவனமாகக் கேட்டாள்.
ஆனால் ‘யுவர் லவ்’வில் தடுமாறிவிட்டாள்.
“நான்… எனக்கு லவ்ல பெருசா நம்பிக்கை இல்ல ஆன்ட்டி மெகன்” என்றாள் திணறலோடு.
மெகனின் கண்கள் சிரித்தன.
“அதீதமா காதலிக்குறவங்க எல்லாரும் ஒரு காலகட்டத்துல காதல்ல நம்பிக்கை இல்லாம இருந்தவங்கதான் வானதி. அவங்க தான் காதலிக்குறதை வெளிப்படையா ஒத்துக்கவே மாட்டாங்க.”
“ஆன்ட்டி?” கண்களைச் சுருக்கி ‘என்னைக் கிண்டல் பண்ணுறிங்களா?’ என்ற ரீதியில் பார்த்தவள் மெகன் ப்ரவுனை இன்னுமே சிரிப்பில் ஆழ்த்தினாள்.
“நான் தர்மாவைச் சொன்னேன்” என்றவர், “இது உனக்கும் பொருந்தும். என்னால மனுசங்க கண்ணைப் பாத்து அவங்களோட உணர்வுகளை ஓரளவுக்குக் கிரகிக்க முடியும். காதல்ல நம்பிக்கை இல்லனு சொல்லுற உன்னோட கண்கள் அருள்மொழியை பாக்குறப்ப அதுல கொள்ளை காதல் எனக்குத் தெரியுதே!” எனச் சொல்ல அவளது கண்களில் ஆச்சரியப்பூக்களின் மலர்ச்சி.
அவரிடம் பேசியதில் அருள்மொழி தனிமையில் எவ்வளவு துன்பப்பட்டிருப்பான் எனப் புரிந்தது வானதிக்கு. முதல் முறையாகத் தந்தை அவனை லண்டனுக்கு அனுப்பியது சரியான முடிவில்லை என்ற எண்ணம் அவளது மனதில் உதயமானது.
அன்றிரவு அருள்மொழியிடம் அதைப் பகிர்ந்துகொண்டபோது சத்தமாக நகைத்தான் அவன்.
“டாட்ஸ் லிட்டில் பிரின்சஸ் இப்பிடியெல்லாம் யோசிக்கலாமா?”
“நான் ஒன்னும் பிரின்சஸ் இல்ல. பிரின்சசுக்குக் கனவு காணுறதைத் தவிர வேற வேலை இல்ல. நான் அப்பிடி கனவுல வாழுற ரகமில்ல.”
“சரி! நீ பிரின்சஸ் இல்ல.” என்றவன் கைகளால் அவளது கன்னங்களை ஏந்திக்கொண்டான்.
“நீ ராணி. இந்த அருள்மொழியோட வானதி ராணியா தானே இருக்க முடியும்?”

சொன்னவனின் கண்களில் பரவியிருந்த காதல் அவனது அணைப்பைப் போல முதலில் வானதியைத் திணறடித்தது. பின்னர் விதிர்விதிர்க்க வைத்தது. பின்போ பிரமிப்போடு ரசிக்க வைத்து அதிலேயே இலயிக்கவும் வைத்தது.
“அப்பிடி பாக்காத. ஐ அம் லூசிங் மை கண்ட்ரோல்.”
மெதுவாய் ஆனால் அவனுக்குரிய கம்பீரத்தோடு ஒலித்தக் குரல் இன்னுமே வானதியின் பார்வையைக் கனிய தான் வைத்தது.
அவனது ஸ்வெட்டரைப் பற்றித் தன்னருகே இழுத்துக்கொண்டவள் “ஹனிமூன் வந்துட்டு கண்ட்ரோலோட இருந்தா ரொம்ப தப்பு” என்று சொல்லிவிட்டு அவனது பார்வையில் மையல் ஏறியதும் “அவ்வா! நான் எப்பவும் போல விளையாட்டா சொன்னேன்” என்று வாயில் அடித்தபடி விலக எத்தனித்தாள்.
“இது நல்லா இருக்கே? அப்பிடி எல்லாம் உன்னை விட முடியாது.”
மெல்லிய பிடிவாதமும், வன்மையான காதலுமாய் அவளைத் தன்னை நோக்கி இழுத்துக்கொண்டவன் வானதியின் காதுகளில் “எனக்கு நீ வேணும்” என்க, அவளுக்கோ குப்பென்று வியர்த்தாற்போல சின்ன அதிர்வு மேனியில்.
கண்கள் கனிய, குரல் குழைய, உடல்மொழியில் காதல் தெரிய அவளை வேட்கையாய் பார்த்தவனிடமிருந்து மையலும் காதலும் மெல்ல மெல்ல அவளிடமும் தாவிக்கொண்டன.
“இதுக்கு மேல நாம விலகியிருந்தா அது ரொம்ப நாடகத்தனமா தெரியும்” என்றவனின் கண்களில் இருந்த குறும்பு மொத்தமாய் அவளை வாரியிழுத்துக்கொண்டது.
பார்வைச் சுழலும், காதல் சுழலும் எப்பேர்ப்பட்டவரையும் வளைத்துத் தமக்குள் புதைத்துக்கொள்ளும் வல்லமை படைத்தவை. வானதி மட்டும் எப்படி அதிலிருந்து தப்பிப்பாள்? அவளுக்குமே அவனில் அடங்குவது இயல்பாய் இதமாய் இருந்தது.
மென்மையான கன்னத்து முத்தத்தில் ஆரம்பித்த காதல் யுத்தத்தின் முதல் அத்தியாயம், இதழணைப்பின் வன்மையால் தீவிரமாக தேனிலவின் அற்புதத் தருணத்தை மோகத்தில் திளைத்துக் கொண்டாடித் தீர்த்தார்கள் இருவரும்.
எங்கே அவளைக் காயப்படுத்திவிடுவோமோ என்று அருள்மொழி தயங்கிய கணங்களில் எல்லாம் வானதியின் கருவிழிகள் ‘நீயே என் பாதுகாவலன்’ என்ற செய்தியைச் சொல்லி அவனது தயக்கத்தை உடைத்தெறிந்தன.
நாணமும், தாபமும் சிருங்காரப் பொழுதை இன்னும் அழகாக்க, பெருநதியானது சமுத்திரத்தில் சங்கமிப்பது போல இணைந்து களித்து முத்தாடித் தீர்த்தார்கள் வானதியும் அருள்மொழியும்.
அனைத்தையும் இழந்து தனிமரமாய் நின்றவனுக்கு அன்றைய தினம் தனது காதலால் இளைப்பாறுதலைக் கொடுத்துவிட்டாள் வானதி. இனி அந்தக் காதலே அவர்களது ஊடற்பொழுதுகளின் பிணக்கைத் தீர்த்துப் பிணைப்பாய் மாற்றுமெனத் தனியாய் சொல்லவேண்டுமா என்ன?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

