“லைப்ரரில நீ உக்காந்து படிக்குற அதே இடத்துல தான் இப்ப நான் உட்கார்ந்து படிக்கிறேன். அங்க உன்னோட பார்க்கர் பேனா கறை இன்னும் அப்படியே இருக்கு. அதைப் பாக்குறபப் நீ பக்கத்துல இருக்குற மாதிரியே ஒரு ஃபீல் அருள். You are the lover of that library. நீ இல்லாத தனிமைய போக்க இப்ப லைப்ரரிக்கு நான் கம்பெனி குடுக்குறேன்.”
-வானதியின் கடிதம்…
அருள்மொழி காலையில் உறக்கம் கலைந்து விழித்தபோது, அவனருகே நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள் வானதி. எப்போது அவள் இரவில் உறங்கினாள் என்றே அவனுக்குத் தெரியாது. தனது வேலை முடிந்ததும் படுக்கையில் விழுந்தவன் இப்போதுதான் விழிக்கிறான்.
உறக்கத்தையும் தாண்டி அவள் முகத்தில் ஒரு சோர்வு. காணச் சகிக்கவில்லை அவனுக்கு. பெற்றோரும் அத்தையும் இறந்ததை எப்போது நினைத்தாலும் அவனுக்கு வானதியின் மீது பெருங்கோபம் வருவது வாடிக்கை.
‘இவள் நான் சொன்னதைச் செய்திருந்தால் இந்நேரம் என் குடும்பம் உயிரோடு இருந்திருக்குமே’ – இப்போதும் தோன்றியது அதே எண்ணம்.

ஆனால் நேற்றிரவு முழுவதும் அவள் அடைந்த அதிர்ச்சிகள் அதிகம். போதாக்குறைக்குத் தானும் அவளைத் துருப்புச்சீட்டு என்றெல்லாம் பேசிவிட்டோமெனச் சில நொடிகள் அவளுக்காகப் பரிதாபமும் பட்டான் அருள்மொழி.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
மெய்யாகவே அவனால் அவளை எதிராளியாக நினைக்க இயலுமா? கண்ணில் படாதவரை விரோதம் பாராட்டியவன், நேரில் கண்ட சில நாட்களில் திருமணம் வரை வந்துவிட்டான். இதிலெங்கே விரோதத்திற்கு இடமளிப்பது? அனைத்தையும் தாண்டி இவளை யாரோ ஒருத்தியாக அவனால் பாவித்துவிட முடியுமா?
‘ரொம்ப கஷ்டம்! நீ ஏர்போர்ட்ல வானதிய பாத்ததுமே தடுமாறிட்ட. அந்த உண்மைய ஒத்துக்க. உன்னால ரொம்ப நாள் இப்பிடி அவளை விலக்கி வச்சு பாக்க முடியாது. சுந்தரபாண்டியபுரம் சம்பவத்தைச் சொல்லுற வரைக்கும் நீ அவளை விலக்கியா வச்சிருந்த? உன்னால ஜெயசந்திரனை மட்டும்தான் வெறுக்க முடியும் அருள். வானதி மேல உனக்கு இருக்குறது ஆதங்கம், கோபம். அது அப்பப்ப எட்டிப் பாக்குறப்ப நீ இவளைத் தள்ளி நிறுத்துற. இது நல்லா இல்ல’ – நிதர்சனம் உணர்ந்த மனசாட்சி அன்பான ஆசானாய் பாடம் எடுத்ததை அந்தப் பாரீஸ்டருக்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சலிப்போடு எழுந்தவன் வானதியின் மொபைல் சத்தமாக இசைக்கவும் ஓடிப் போய் அழைப்பை ஏற்றான். ‘எப்ப தூங்குனாளோ? இந்தச் சத்தத்துல தூக்கம் களைஞ்சிடுச்சுனா பாவம்’
“மேடம்! நான் நிரஞ்சன் ஷெட்டி பேசுறேன். நிர்வான் வனம் சம்பந்தமா உங்களுக்கு மெயில் அனுப்பிருக்கேன். அதுல ஒரு வீடியோ இருக்கும் பாருங்க. அதை கோர்ட்ல ஆதாரமா சப்மிட் பண்ணுனா மான்கடா குரூப் பரிதாபமா தோத்து போவாங்க. இதுக்கு மேல நான் இந்த நம்பர்ல இருந்து கால் பண்ண மாட்டேன் மேடம். அவங்க என் போனை ஒட்டு கேக்குறாங்களோனு சந்தேகம்” – மடமடவென ஒப்பித்தது மறுமுனை.

அருள்மொழி அழைப்பைத் துண்டித்தான்.
‘உலகில் இத்தனை முட்டாள்கள் இருப்பது எனக்கு எவ்வளவு வசதி!’
அவன் முட்டாள் என நினைத்தது அழைப்பை யார் ஏற்றார்கள் என்பதைக் கூட கேட்காமல் ஒப்பித்த யாரோ ஒருவனை மட்டுமில்லை; மொபைலுக்கு லாக் கூட வைக்காமல் கவனக்குறைவாக இருக்கும் வானதியையும் தான்.
மின்னஞ்சலைத் திறந்து பார்த்தவன் மடமடவென அந்த வீடியோவைத் தனது மின்னஞ்சலுக்கு அனுப்பிவிட்டு, ‘சென்ட் மெயில்களில்’ அந்த மெயிலை அழித்தான். பின்னர் மொபைலை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டான்.
சத்தமே எழுப்பாமல் கவனமாக மொபைலை அவளருகே கிடந்த டீபாயில் வைத்தவனுக்கு, அதற்கு மேல் உறக்கம் வரவில்லை.
நிதானமாகக் குளித்து அவன் உடைமாற்ற ஆரம்பித்தபோது வானதியும் விழித்துவிட்டாள். எழுந்து படுக்கையில் அமர்ந்தவளுக்குத் தலை வலித்தது. வெற்று மார்போடு நின்ற அருள்மொழி, அவள் தன்னையே பார்க்கவும் திரும்பினான்.
“சைட் அடிக்குறியா என்னை?” என்று கிண்டல் வேறு.
வானதிக்கு அப்போது இருந்த மனநிலையில் கிண்டலை ரசிக்கத் தோன்றவில்லை. பேசாமல் எழுந்து குளியலறைக்குள் போய் கதவை மூடிக்கொண்டாள்.
அவள் திரும்பி வந்தபோது “மறுவீடு சடங்கு இருக்கு. ரெடியாகு” என்றான் அவன்.
“நான் ரொம்ப லோவா ஃபீல் பண்ணுறேன். ஏதாச்சும் சொல்லி இதெல்லாம் தள்ளிப் போடு அருள்.”
“இதை நீயே சொல்லிடு. உனக்கு நான் என்ன மௌத் பீஸா?” மீண்டும் ஏளனம்.
அந்நேரத்தில் கதவு தட்டப்பட்டது. திறந்தவள் இலக்கியாவைக் கண்டதும் என்னவென வினவினாள்.
“வேதாவ சென்னைக்கு அழைச்சிட்டுப் போகப் போறாங்க. வா.”
இலக்கியாவோடு மடமடவெனக் கீழ்த்தளத்துக்கு வந்தாள் வானதி. புது மணப்பெண் இன்னும் குளித்து மாற்றுடை தரிக்காததே அங்கே வந்திருந்த விருந்தினர்களுக்கும் ஊராருக்கும் வினோதமாய்த் தெரிந்தது. அருள்மொழியோடு வானதி தோழியிடம் சென்றாள்.
அவளது இரு கரங்களையும் பற்றிக்கொண்டவள் “சாரி வேதா” என்க,
“வானு! இன்னைக்கு நீ எந்த மனக்கிலேசமும் இல்லாம சந்தோஷமா இருக்கணும். எனக்கு நடந்ததை நான் அக்சப்ட் பண்ணிட்டேன். நீ ரொம்ப யோசிக்காத” என்றாள் அவளது குரலில் இருந்த குற்றவுணர்ச்சியைக் கண்டுகொண்டவளாய்.
இந்த இக்கட்டான நேரத்திலும் தனக்கு ஆறுதலாய்ப் பேசுபவளைக் கண்ணீரோடு பார்த்தாள் வானதி.

“நான் இப்படியே விட்டுடமாட்டேன் வேதா. என்னால ஆரம்பிச்ச இந்தக் குழப்பம் உன் லைஃப்ல பெரிய தடுமாற்றத்தைக் கொண்டு வந்திருக்கு. இந்தத் தடுமாற்றத்தைச் சரி பண்ண என்னால முடிஞ்சதை நான் செய்வேன்டி. பிராமிஸ்.” சொன்னவள் அவளை இறுக்கமாக அணைத்துவிட்டு,
“அச்சு… ப்ச்! அவன் ரொம்ப கோவக்காரன். ஆனா மோசமானவன் இல்லை. அவனுக்குச் சூழ்நிலை புரியலை. கத்திட்டுப் போயிட்டான். ஆனா ஒரு நாள் அவனுக்கு நிதர்சனம் புரியும்” என்றவள், “நல்லபடியா போயிட்டு வா. நானும் இன்னும் கொஞ்ச நாள்ல சென்னை வந்துடுவேன்” என முடிந்தவரைக்கும் தோழனைப் பற்றி நல்லவிதமாய்ச் சொல்லி வழியனுப்பி வைத்தாள்.
அவர்களின் கார் அங்கிருந்து கிளம்பும்வரை பார்த்துக்கொண்டு நின்றவளிடம் வேறு புடவை உடுத்தி மறுவீட்டுக்குத் தயாராகுமாறு ரமா கேட்டுக்கொண்டார்.
அவளோ அனைவரையும் நிதானமாக ஏறிட்டுவிட்டு, “எனக்கு மனசு சரியில்ல. எதுவா இருந்தாலும் நீங்களே பண்ணிக்கோங்க” என்று சொல்லிவிட்டுப் படியேற, முதுகுக்குப் பின்னே ரமா அதிருப்தியாய்ப் பேசுவது அவளது காதில் விழுந்தது.
அதைக் கண்டுகொள்ளாமல் இரண்டாம் தளத்து அறையில் போய் படுத்துக்கொண்டாள். அருள்மொழி நடந்த அனைத்தையும் கவனித்தவன் அட்சரனிடம் மொபைலில் பேசப் போய்விட்டான்.
“சொல்லுடா.”
அழைப்பை ஏற்றபோதே கோப அனல் அட்சரனின் குரலில். அவனது பெற்றோர் வேதவதியைச் சென்னைக்கு அழைத்து வருவதாகச் சொன்னதும் இன்னும் குதித்தான் அவன்.
“அச்சு! கொஞ்சம் அமைதியாகுடா. நிதானமா யோசி.”
அட்சரனுக்குத் தனது இயலாமையைப் பயன்படுத்தி வேதவதியைத் தனது தலையில் கட்டிவிட்டார்கள் என்ற கோபம் கொஞ்சமும் குறையவில்லை. அருள்மொழி சொன்ன அறிவுரைகள் யாவும் வீணாயின அவனிடம்.
“அவ்ளோ ஈஸியா அவளை மறந்துட முடியுமா? நெவர். தோஸ் பீப்பிள் ஆர் பிளேயிங் வித் மை மேல் ஈகோ. எந்தப் பதிலடியும் கொடுக்காம விட்டா நானெல்லாம் என்ன ஆம்பளை?”
“டேய்! மடத்தனமா பேசாத. எதிர்ல இருந்தேன்னா பளார்னு ஒன்னு விடுவேன் உன் கன்னத்துல. வானதியைக் காப்பாத்தணும்னா வேதாவைப் பலி கொடுப்பியா நீ? ரொம்ப செல்ஃபிஷான மூவ் நீ செஞ்சது. அதை நீ எப்படி மறக்கலாம்?”
“நான் அங்க நடந்ததா சொன்னது ஒன்னும் ஒழுக்கக்கேடான விஷயமில்லை. அவளோட ஏஜென்ட்டா நான் அங்க அவ கூடப் பேசினாலோ, ஏதோ ஒரு காரணத்துக்காக அவ அணைச்சதா சொன்னாலோ என்னடா பிரச்சனை? கட்டிப்பிடிச்சதுக்கே கல்யாணம் பண்ணி வைக்கணும்னு குதிக்கிறாங்க? இவங்கெல்லாம் இன்னும் எண்பதுகள்ல தேங்கி நிக்கிறாங்க.”
அவன் படபடவெனப் பொரிய, அருள்மொழிக்கு ஆயாசமாக இருந்தது.
“பிரச்சனை நீ கட்டிப்பிடிச்சதா சொன்னியே, அது இல்லடா. அதுக்கு முன்னாடியே நீ வேதா கூட குளோஸா பழகுனதை அந்த லேடி பார்த்திருக்கு.”
“குளோஸா பழகுனேனா? அப்படிச் சொல்லாத அருள், அப்புறம் நான் வெறியாகிடுவேன் பார்த்துக்க. என்னடா குளோஸா பழகுனேன்? ஆக்சுவலி கரண்ட் ஷாக் அடிச்சு பல்ஸ் குறைஞ்சு அந்த ரூம்ல கிடந்தவளைச் செத்துத் தொலைனு அப்படியே விட்டுட்டு வந்திருக்கணும். ஐயோ பாவமேனு சி.பி.ஆர் (CPR) கொடுத்து அந்த நேரத்து டென்ஷனை அனுபவிச்சதுக்கு நல்ல பரிசு கிடைச்சதுடா எனக்கு.”
“உங்களோட பழக்கமோ உன்னோட நோக்கமோ தப்புனு நான் சொன்னேனா? எங்க எல்லாருக்கும் உன்னைப் பத்தியும் வேதாவ பத்தியும் தெரியும்டா. ஆனா அங்க பேசுன லேடிக்கு, அங்க இருந்த கெஸ்டுக்கு, பிரஸ் பீப்பிளுக்கு நீங்க ரெண்டு பேரும் ஜஸ்ட் யங்ஸ்டர்ஸ்தான். அவங்க பார்வைக்கு உங்க பழக்கம் நெருக்கமா தான் தெரியும். நீ சென்னை மாதிரி தேன்மலையை எடைபோடாத அச்சு. மெட்ரோபொலிட்டனுக்கும், ரிமோட் வில்லேஜுக்கும் வித்தியாசம் இருக்குடா. நான் சொன்னபடி தூங்கு. ரெஃப்ரெஷ் ஆகு. அப்புறமா உன் ரொட்டீன் வேலைய கவனி. நாளைக்கு அவங்க வரட்டும், அப்புறமா பேசிக்க.”
அட்சரனின் பதிலுக்குக் காத்திராமல் அழைப்பைத் துண்டித்தான் அருள்மொழி. வானதியின் பதிலடியால் அதிருப்தியான ரமாவைச் சமாதானம் செய்துவிட்டு, மீண்டும் இரண்டாம் தள அறையை அடைந்தவன், வானதி அமைதியாய்ப் படுத்திருப்பதைப் பார்த்தபடி அதே அறையில் கிடந்த சோஃபாவில் அமர்ந்தான்.
“உனக்கு இங்க கம்ஃபர்டபிளா இல்லனா சென்னைக்குக் கிளம்பிடலாம்” என்றான் மொபைலைப் பார்த்தபடி.
நிரஞ்சன் ஷெட்டி அனுப்பிய வீடியோவைத் தனக்குத் தெரிந்த லண்டன் லேப் ஒன்றுக்கு மின்னஞ்சல் அனுப்பியபடியேதான் பேசினான்.
‘இந்த வீடியோல இருக்குற ஃபூட்டேஜ் எத்தனை சதவிகிதம் உண்மைனு எனக்கு ரிப்போர்ட் வேணும். இன்னும் ஒரு வாரத்துக்குள்ள வந்தா நல்லது’
அவன் தட்டச்சு செய்யும்போதே எழுந்து அமர்ந்தாள் வானதி.
“எங்க போனாலும் என்னால கம்ஃபர்டபிளா இருக்க முடியாது. ஐ ஃபீல் கில்டி.”
“உன்னால அனர்த்தம் நடந்து முடிஞ்சு ஓய்ஞ்ச அப்புறம் நீ எப்பிடி ஃபீல் பண்ணுனாலும் பாதிக்கப்பட்டவங்களுக்கு அதனால ஒரு பிரயோஜனமும் இல்ல வானதி.”
“அப்ப எனக்குப் பன்னிரண்டு வயசுதான். நான் வேணும்னு எதையும் பண்ணல. நீ என் பக்கத்து நியாயத்தையும் புரிஞ்சிக்கணும் அருள்.”
மெல்லிய ஆதங்கம் அவளது குரலில். இரவெல்லாம் உறங்காமல் தவித்தது, மனம் நொந்து அழுததை அவள் மட்டும்தானே அறிவாள்!
அருள்மொழி சீற்றத்தோடு எழுந்தான் சோஃபாவிலிருந்து. வெகு சிரமத்தோடு கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன் அவள் முன்னே போய் நின்றான்.
“இந்த வீடு முழுக்க உன் குடும்பம், உன் சொந்தக்காரங்களால நிறைஞ்சிருக்கு. உனக்கு இழப்போட வலி தெரியாது. எனக்குனு இரத்தச் சொந்தமா இங்க இருக்குறது ரெண்டே பேர் தான். நான் எல்லாரையும் ஒரே ராத்திரில இழந்தவன். இழந்தவனுக்கு இழப்போட வலி மட்டும்தான் புரியும். நியாயம் தர்மம் எல்லாம் அவனுக்குப் புரியாது, புரியவேண்டிய அவசியமும் கிடையாது.”

தாடை இறுகச் சொன்னவன், “டு பி ஃப்ராங்க், ஒவ்வொரு தடவை ஆர்தர் உன் லெட்டரைக் கொண்டு வர்றப்பவும் எனக்கு என்னைப் பெத்தவங்க என் கண் முன்னாடி தீக்கிரையானதுதான் ஞாபகம் வரும். பின்ன எப்பிடி உன்னை ஒதுக்காம இருக்க முடியும்? உன் அப்பாவை கேலி செஞ்சார்னு எதிர்க்கட்சித் தலைவரை ஒருமைல திட்டுனல்ல. உன்னோட முட்டாள்தனத்தால என் குடும்பமே அழிஞ்சிருக்கு. உன் வயசைக் காரணமா வச்சு நான் அந்த இடத்துல நியாயமா யோசிக்கணுமா? அவ்ளோ நியாயவானா இருக்க நான் விரும்பல” என்றான் பிடிவாதமாய்.
வானதி கண்ணீர் நிரம்பிய விழிகளால் கோபத்தோடு அவனை ஏறிட்டாள்.
“இதை நீ என்னைக் கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும். ஆதர்ஷ் பிரச்சனைக்கு அப்புறம் நீ விலகியிருந்தனா எல்லா பொண்ணுங்களை மாதிரி நானும் எனக்கேத்த ஒருத்தனைக் கண்டுபிடிச்சுக் கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ்ந்திருப்பேன். நீ குறுக்க வந்து எல்லாத்தையும் கெடுத்துட்ட. சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கான எல்லா தகுதியும் எனக்கு இருக்கு அருள். நீ யாரு என்னை விலகி நில்லு, எதிர்ல நில்லுனு ஆர்டர் போடுறதுக்கு? ஒரு கேள்விக்குப் பதில் சொல்லு. உன் பேமிலியோட சாவுக்குப் பழிவாங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டியா?”
அடுத்த நொடியே அருவருப்பு சூழ்ந்தது அருள்மொழியின் வதனத்தில்.
“ஏய்! சீச்சீச்சீ! என்னடி பேசுற? என்னைப் பாத்தா சைக்கோ மாதிரியா தெரியுது?” என்று கோபமாய்க் கையசைத்தான் அவன்.
“நீ சைக்கோ இல்ல. ஆனா கணக்கு போட்டு காய் நகர்த்துறவன். அதனாலதான் கேக்குறேன். இந்தக் கல்யாணத்துக்கும் ஒரு கணக்கு போட்டிருப்பல்ல. அதை பழிவாங்குற முயற்சியா நான் பாக்குறேன்.”
“நான் பழிவாங்க ஒன்னும் கல்யாணம் பண்ணிக்கல. இப்போதைக்கு இவ்ளோதான் சொல்ல முடியும்” என்றான் விறைப்பாக.
அதே நேரம் ஜெயசந்திரனின் அறையில் அவர் பரபரப்பாகவும் பதற்றமாகவும் இருந்தார்.
“இந்த அஞ்சு பயலுவலும் இருபது வருஷத்துக்கு முன்னாடியே ரவுடித்தனம் செஞ்சவனுங்க தலைவரே! ஏதோ நம்ம கட்சில இருக்கானுங்களேனு இவ்ளோ நாள் பல்லைக் கடிச்சிக்கிட்டோம். இவங்க குரூப்பையே மொத்தமா காலி பண்ணிருக்காங்க. சைலன்சர் துப்பாக்கியால கொலைகாரன் சுட்டிருப்பான்னு போலீஸ்காரங்க சந்தேகப்படுறாங்க.”
சுந்தரபாண்டியபுரத்தில் முந்தைய இரவில் தமிழக முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஐவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி இப்போதுதான் ஜெயசந்திரனின் காதுகளுக்கு இராஜேந்திரனால் கொண்டு சேர்க்கப்பட்டது.
நெற்றியை ஆட்காட்டி விரலால் கீறிக்கொண்டவர் “கொன்னவனைப் பத்தி எதுவும் தகவல்?” என்று கேட்க,

“கிடைக்கல தலைவரே! சி.சி.டி.வி எதுவும் சரியா வேலை செய்யாத நேரமா பாத்து போட்டிருக்கான்” என்றார் இராஜேந்திரன். ஜெயசந்திரன் பெருமூச்சுவிட்டார்.
கட்சியில் இப்போது சில சலசலப்புகள் ஆதித்யன் குறித்து எழத் தொடங்கியிருந்தன. அதற்கு அருள்மொழி மூலமாய முற்றுப்புள்ளி வைத்து மகளின் திருமணத்தை முடித்து நிம்மதியாய் நிமிரக் கூட இல்லை, கட்சியில் அவருக்கு விசுவாசிகளாய் இருந்த ஐவரின் மரணச் செய்தி காதுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
நாற்காலியிலிருந்து எழுந்தவர் “அகத்தியன் கிட்ட சொல்லி அவங்க உடம்புக்குக் கட்சி சார்பா மலர் வளையம் வைக்கச் சொல்லிடுங்கண்ணே!” என்றார்.
இராஜேந்திரன் சரியெனத் தலையாட்டிவிட்டுச் செல்ல, அடுத்த சில நிமிடங்களில் அகத்தியன் அவரது அறையில் ஆஜரானான்.
“என்னப்பா நீ இன்னும் கிளம்பலையா?”
“போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சு இப்ப தான் அஞ்சு பாடியும் சுந்தரபாண்டியபுரத்துக்குப் போயிருக்கு தலைவரே. நான் கிளம்புறேன். அருள் என்கூட வரப் பிரியப்படுறான்” என்றான் அவன்.
“புதுசா கல்யாணம் ஆனவன் போக வேண்டிய இடமா அது? இழவு வீடுடா”
ஜெயசந்திரன் அதிர, அகத்தியனோ இதை வேறுவிதமாய் எடுத்துரைத்தான்.
“நீங்க தேன்மலையில இருந்துக்கிட்டு அங்க வரலனு பேச்சு பரவும். அருள் வந்தா தலைவர் மருமகனையே அனுப்பிருக்கார்னு நினைச்சுப்பாங்க.”
“எப்பா! அது எனக்கும் புரியுது. இந்த விவகாரம் எல்லாம் பொம்பளைங்க ஒத்துக்கமாட்டாங்க. அபசகுனம்னு நினைப்பாங்க” என்றார் கவலையோடு.
“அருள் சமாளிச்சிடுவான் தலைவரே. நீங்க அனுமதி குடுத்தா மட்டும் போதும்.”
ஜெயசந்திரன் யோசித்தார். பின்னர் அனுமதி கொடுத்துவிட்டார். வானதியோடு தர்க்கம் புரிந்த அருள்மொழியும் அதைப் பாதியில் விட்டவனாய் அவனோடு கிளம்பிப் போய்விட்டான்.
சுந்தரபாண்டியபுரத்தில் ஐவரின் சடலங்களும் பொது இடத்தில் வைக்கப்பட்டிருக்க, ஒரே அழுகையும் ஒப்பாரியும் கேட்டது. அகத்தியனோடு மலர்வளையம் ஒன்றைச் சுமந்துவந்த அருள்மொழி, அதைப் பொதுவாக ஐவரின் உடலுக்கும் நடுவே வைத்தபோது எழுந்த குரூரமான புன்னகையைத் தனக்குள் அடக்கிக்கொண்டு நின்றான்.

அங்கிருந்த யாரின் அழுகையும் அவனை கரைக்கவில்லை.
‘இவர்கள், இந்த ஐவர்தானே எனது தந்தையின் முதுகை உடைத்தார்கள்? எனது அன்னை மீனாட்சியின் கூந்தலைப் பற்றிச் சுவரில் தலையை இடித்தே கொன்றார்கள்? கர்ப்பவதி என்றும் பாராமல் எனது அத்தையை அடித்துத் துடிதுடிக்க வைத்து மூச்சை நிறுத்தினார்கள்?’
வன்மத்தோடு நெற்றியில் இருக்கும் தழும்பைக் கைகளால் தடவிக்கொண்டான் அருள்மொழி. இது இந்த ஐவரில் ஒருவன் அவனுக்குக் கொடுத்த பரிசு.
அரைகுறை உயிரோடு கிடந்த அருள்மொழி தப்பிப் படியேறி வெளியே போனதை அறியாமல், பிஸியாக வீட்டை எரித்தவர்களுக்கு இன்று அவர்களது கொடுஞ்செயலே எமன் ஆனது.
தீயில் மனித உடல் எரியும் வாடையை இப்போதும் தனது நாசியில் உணர்ந்தவன், பெயருக்கு அங்கிருந்தவர்களிடம் ஆறுதல் சொல்லிவிட்டு மீண்டும் தேன்மலைக்கு வந்து சேர்ந்தான்.
“சாவு வீட்டுக்குப் போயிட்டு வீட்டுக்குள்ள வரக்கூடாது. தலைமுழுகணும்”
ரமா சொல்ல, வேலையாட்கள் தண்ணீரை மாளிகையின் பின்வாயிலில் வைத்தார்கள். அகத்தியனும் அருள்மொழியும் அதில் தலை முழுகினார்கள்.
“அருளுக்கு டவலும் டிரஸ்ஸும் கொண்டு போய் குடு”
ரமா படுத்தியதில், டவலும் உடைகளும் கொண்டு வந்து கொடுத்தாள் வானதி. அதை வாங்கிக்கொண்டவன் அங்கிருக்கும் அறைகளில் ஒன்றில் புகுந்து உடைமாற்றிவிட்டு வந்தான். அவன் எங்கே போகிறான் என விசாரிக்காதவளுக்குத் தந்தை மூலமாகத் தகவல் சொல்லப்பட்டிருந்தது.
திரும்பி வந்தவனிடம் “சுந்தரபாண்டியபுரத்துக்கு நீ ஏன் போன அருள்? இதெல்லாம் அப்பா பாத்துப்பாரே” என்று ஐயமாக வினவ, அருள்மொழி மெதுவாக அவளது காதருகே குனிந்தான்.
“என் குடும்பத்தை அழிச்ச அஞ்சு பேரோட முடிவு எவ்ளோ கொடூரமா இருந்துச்சுனு நேர்ல பாக்க ஆசைப்பட்டேன், அதான் போனேன்.”
இதைக் கேட்டதும் வானதியின் கண்களில் மிரட்சி. அருள்மொழியோ அலட்சியச் சிரிப்போடு அவளைக் கடந்து போனான்.
‘ஒருவேளை இந்த ஐவர்தான் அன்று வந்த ஐவரா? அனைத்தையும் மறந்தவனுக்கு இது மட்டும் எப்படி நினைவில் இருக்கும்?’
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

