“பிடித்தவர்களுடன் நேரம் செலவிடுகையில் நமது மனம் சலிப்படைவதே இல்லை. அவர்களின் பேச்சில் குதூகலிப்பதையும், அவர்களின் நெருக்கத்தில் மயங்குவதையும், அவர்கள் காட்டும் அன்பில் கரைந்து உருகுவதையும் தவிர நம் அப்பாவி மனதிற்கு வேறென்ன தெரியும்? பார்ப்பதையும் ரசிப்பதையும் தவிர நம்மைச் சீண்டி வேடிக்கை பார்ப்பதும் அந்த மனதின் வாடிக்கையான செயல் தான். சீண்டலில் சிலிர்த்தாவது மனதில் பதுக்கி வைத்திருக்கும் உணர்வுகளை பிடித்தவர்களிடம் நாம் வெளிப்படுத்திவிட மாட்டோமா என்ற நப்பாசை அதற்கு”
-ருத்ரதேவ்
“நீங்க பிரகியை தப்பா கூட புரிஞ்சிருந்திருக்கலாமேம்மா… கொஞ்சம் அத்தையோட ஆங்கிள்ல யோசிச்சுப் பாருங்க”
தனது அன்னையிடம் மொபைலில் பேசிக்கொண்டிருந்த ருத்ரதேவை பார்த்தபடியே மர இருக்கையில் அமர்ந்திருந்தாள் தக்ஷிண்யா. இன்னும் குமாவோன் வீட்டிலிருந்து அவர்கள் ரிசார்ட்டுக்குத் திரும்பவில்லை.
இடையே அவளைக் காணாமல் தேடத் துவங்கிய ஆரோஹி நவ்யா மூலம் தக்ஷிண்யாவின் மொபைலுக்கு அழைத்து விட்டாள்.
“எப்ப தக்ஷிக்கா வருவ? எனக்கு இங்க ரொம்ப போரடிக்குது” என்றவளிடம்
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“லஞ்ச் முடிச்சதும் நானும் ருத்ரா அங்கிளும் வந்துடுவோம்” என பதிலளித்தாள்.
ஆரோஹி அவசரமாக “அங்கிள் இல்ல… தேவ் மாமா” என்கவும்
“மாமாவா? யார் அப்பிடி சொல்லிக் குடுத்தது?” என வினவினாள் தக்ஷிண்யா.
“தேவ் மாமா தான்… இன்னைக்கு மானிங் நீங்க டேட்டிங் கிளம்புறதுக்கு முன்னாடி இனிமே தேவ் மாமானு தான் கூப்பிடணும்னு சொன்னாங்க” என்றாள் குழந்தை.
டேட்டிங்கா? ஏழு வயது குழந்தைக்குப் பரிச்சயமற்ற வார்த்தை அது. அதையும் அவன் தான் கூறியிருக்க வேண்டும். எவ்வளவு திமிர் என்று புகைந்தபடியே தாங்கள் சீக்கிரம் வந்துவிடுவோமென அவளுக்குச் சமாதானம் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
வீட்டினுள்ளே சரிதா பாயின் கைமணத்தில் மதியவுணவு கமகமவென தயாராகிக் கொண்டிருந்தது.
வெளியேயோ வானம் இதோ இப்போது உங்களுக்கு வர்ஷத்தைப் பரிசாகத் தரப்போகிறேன் என கருமைவண்ணத்தில் கட்டியம் கூறிக்கொண்டிருந்தது.
தக்ஷிண்யா அதை ரசித்தபடியே ருத்ரதேவ் அவனது அன்னையைச் சரிகட்ட செய்து கொண்டிருந்த பகீரதபிரயத்தனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனது அத்தை மனம் வருந்தியது கொஞ்சம் கூட பொறுக்கவில்லை போல. உடனே அவருக்காக அன்னையைச் சரிகட்ட ஆரம்பித்துவிட்டானே என்று எண்ணிக்கொண்டவள் வழக்கம் போல இது போல உறவுகளிடையே நிகழும் மனச்சங்கடங்களுக்கு இடைத்தரகராக வேலை செய்யும் சிரமம் தனக்கில்லை என்று நிம்மதியுற்றாள்.
ஒரு மணி நேரமாக ருத்ரதேவின் சரிகட்டும் படலம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால் அவனது அன்னை இன்னும் மனம் மாறவில்லை.
“மணியும், ருக்மணியும் இன்னைக்கு நேத்தா நம்ம வீட்டுல வேலை பாக்குறாங்க? அவங்களோட விசுவாசத்தைச் சாக்கா வச்சிட்டு இஷ்டத்துக்கு அசிங்கப்படுத்துனா நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்டா” என்றார் சசிகலா.
“நீங்க சொல்லுறது தப்பே இல்லம்மா… பட் பிரகல்யா இந்தக் காலத்துப்பொண்ணு… அதுவும் பரம்பரை பணக்காரிம்மா… சோ கொஞ்சம் ஆட்டிட்டியூட் காட்ட தான் செய்வா… நம்ம வீட்டுக்கு வந்ததும் சரியாகிடுவாம்மா”
“ம்ஹூம்… அதுக்கு வாய்ப்பே இல்லடா… அவ உன் அத்தையோட செலக்சன் ஆச்சே… இந்த ஜென்மத்துல அவ மாறமாட்டா… சர்வென்ட்ஸை அடிமை மாதிரி ட்ரீட் பண்ணுறது, அவங்களை சந்தேகக்கண்ணோட பாக்குறது இந்த மாதிரி அல்பத்தனமெல்லாம் நல்லாவா இருக்கு? அவங்க நம்ம கிட்ட வேலை பாக்குறது வயித்துப்பாட்டுக்காக… அதை புரிஞ்சிக்கணும்… ஆனா பிரகி என்ன சொல்லுறா தெரியுமா? சர்வென்ட்ஸ்னாலே வீட்டுல முதலாளிங்களுக்குத் தெரியாம திருடுவாங்க, மளிகை சாமான் விசயத்துல திருட்டுத்தனம் பண்ணுவாங்க… வீட்டு முதலாளியம்மா பேசுறதை ஒட்டுக் கேப்பாங்க, இன்னும் என்னென்னமோ உளறுனாடா… கஷ்டப்பட்டவங்களுக்கு வேற வேலையே இல்ல பாரேன்…
நம்ம குபேர பரம்பரையா கூட இருக்கலாம் ருத்ரா… அதுக்காக பொருளாதாரத்துல நம்மளை விட குறைவா இருக்கிறவங்களை தப்பா நினைக்குறதுக்கு நமக்கு எந்த அதிகாரமும் இல்ல… கடவுள் அருளால இந்த ஜென்மத்துல நம்ம நல்ல நிலமையில இருக்குறோம்.. அதை அட்வான்டேஜா எடுத்துக்கிட்டு வேலைக்காரங்களை பத்தி தப்பா பேசி அவங்களை அசிங்கப்படுத்துறது சின்ன புத்தி… அந்தப் புத்தி இருக்குறவ மருமகளா வர்றதுல எனக்கு இஷ்டமில்ல”
நீண்ட பிரசங்கமே ஆற்றிய அன்னையின் பேச்சில் நியாயம் இருப்பதால் ருத்ரதேவால் அதில் ஒரு வார்த்தைக்குக் கூட மறுப்பு தெரிவிக்க முடியவில்லை.
இருப்பினும் தம்பி பிரகல்யாவைக் காதலிக்கிறானே! அதை சொல்லி அன்னையை அமைதிப்படுத்தலாம் என்று முயன்றான். ஆனால் சசிகலாவோ அதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அவன் ஊட்டிக்கு வந்ததும் மகாதேவிற்கு புத்தி சொல்லுமாறு கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் அவர்.
அதே நேரம் சரிதா பாய் தக்ஷிண்யாவிடம் வந்தவர் இருவருக்கும் மதியவுணவு சமைத்துவிட்டதாக கூறினார். அவரது மகளுக்குத் திடீரென வயிறுவலி என பக்கத்துவீட்டுப்பெண்மணி மொபைலில் கூறியதால் வீட்டிற்குக் கிளம்ப அனுமதி கேட்டு நின்றார்.
“இதுக்குலாம் ஏன் பெர்மிஷன் கேக்குறிங்க? நீங்க கிளம்புங்க… லஞ்ச் முடிஞ்சதும் நாங்களும் கிளம்பிடுவோம்… ரெண்டு பேர் தானே இருக்குறோம்… செல்ஃப் சர்வ் பண்ணிப்போம்” என்றவள் தான் கையோடு கொண்டு வந்திருந்த பர்சிலிருந்து இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை எடுத்து அவரிடம் கொடுத்தாள்.
“கைமருத்துவம் பாக்காம டாக்டர் கிட்ட அழைச்சிட்டுப் போய் மெடிசின் வாங்கி குடுங்க”
சரிதா பாயும் வாங்கிக் கொண்டவர் அவளுக்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட தக்ஷிண்யாவின் மனமோ அவரது மகள் கொடுத்து வைத்தவள் என்று ஏக்கப்பெருமூச்சு விட்டது.
பணம் இல்லை என்றாலும் அந்த ஏழை அன்னையிடம் அளவற்ற பாசம் இருக்கிறது. எந்நிலையிலும் பெற்ற பிள்ளைக்காக துடிக்கும் மனம் இருக்கிறது.
தக்ஷிண்யாவின் சிந்தனை இவ்வாறு இருக்கும் போதே அவளின் பார்வை அங்கே பேச்சை முடித்திருந்த ருத்ரதேவின் பக்கம் திரும்பியது.
ருத்ரதேவின் ஸ்டாமினா முழுவதும் கிட்டத்தட்ட தீர்ந்தேவிட்டது. அவனைக் கேலியாகப் பார்த்துக் கொண்டிருந்த தக்ஷிண்யாவின் அருகே சென்று அமர்ந்தவன் இல்லாத வியர்வையை வழித்து எறிந்தான்.
“என்ன மிஷன் ஃபெயிலியரா?”
கிண்டலாக அவள் வினவவும் சலிப்பாக “ஆமா மேடம்… வாழ்க்கையில நான் ரொம்ப மதிக்குற ரெண்டு லேடீசுக்கு நடுவுல மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்… என்னை பாத்தா உங்களுக்குப் பாவமா இல்லையா?” என்று கேட்டான்.
“இல்ல” என்றாள் தக்ஷிண்யா யோசிக்காமல்.
அவன் திகைக்கவும் “எந்த ஒரு மனுசன் ப்ராக்டிக்கலா யோசிக்காம எல்லாத்தையும் எமோசன்சோட கனெக்ட் பண்ணி கன்பியூஸ் ஆகுறானோ அவனைப் பாத்து எனக்கு இரக்கம் வந்ததே கிடையாது மிஸ்டர் ருத்ரா… இன்னொன்னும் ஞாபகம் வச்சுக்கோங்க, ஒரு மனுசனால எல்லாருக்கும் நல்லவனா இருக்க முடியாது… அப்பிடி இருக்கணும்னா ஒன்னு நடிக்கணும், இல்லைனா மனவுளைச்சலோட சுத்தணும்” என்று நடைமுறை வாழ்க்கைக்கு எது ஒத்து வருமோ அதை கூறினாள் அவள்.
ருத்ரதேவ் அவளை மெச்சுதலாகப் பார்த்தவன் “உங்க அளவுக்கு எனக்குப் ப்ராக்டிக்கலா யோசிக்க வராது… அதுவும் ஃபேமிலி விசயத்துல நான் எப்பவும் ப்ராக்டிக்கலா யோசிச்சது கிடையாது… இனிமே யோசிக்கிறதும் கஷ்டம்” என்று கூற தக்ஷிண்யா தோளைக் குலுக்கிக் கொண்டாள்.
“ஆரோஹி உங்களைத் தேடலையா?”
அவன் அவ்வாறு கேட்டதும் ஆரோஹி சொன்ன ‘டேட்டிங்’ என்ற வார்த்தை அவளுக்கு நினைவுக்கு வந்துவிட்டது. அவனை ஒரு வழியாக்கும் எண்ணத்தோடு
“அப்பவே கால் பண்ணுனா… அவ கிட்ட நீங்க என்ன சொல்லிட்டு வந்திங்கனும் சொன்னா” என்றாள் முறைப்புடன்.
ருத்ரதேவ் ஏதும் அறியாதவனைப் போல விழிக்கவும் தக்ஷிண்யாவின் முறைப்பு தீவிரமுற்றது.
அதே நேரம் வானமும் சடசடவென மழைத்துளிகளை பூமிக்குத் தாரை வார்க்கத் துவங்கியது.
இருவரும் வீட்டுக்குள் ஓடிவர மழை பயங்கரமாக பெய்ய ஆரம்பித்தது.
ருத்ரதேவ் வியப்புடன் “நிமிசத்துல இப்பிடி சடசடனு மழை பெய்யுதே… இட்ஸ் அமேசிங்” என்கவும்
“நான் நேத்தே சொன்னேன்ல, அதே மாதிரி மழை வந்துடுச்சு” என்றவள் மீண்டும் டேட்டிங் பேச்சுக்குத் திரும்பினாள்.
“உங்களுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா ஏழு வயசு குட்டிப்பொண்ணு கிட்ட டேட்டிங் அது இதுனு சொல்லிருப்பீங்க”
“இப்ப நான் டேட்டிங் போறோம்னு சொன்னது உங்களுக்குக் கோவமா? இல்ல அதை உங்க தங்கச்சி கிட்ட சொன்னது கோவமா?”
“ரொம்ப ஸ்மார்ட்டா பேசுறதா நினைப்பா உங்களுக்கு? ரெண்டுமே எனக்குக் கடுப்பு தான்… ஏன் அப்பிடி சொன்னீங்க?”
“மனசுக்குப் பிடிச்சவங்களோட டைம் ஸ்பெண்ட் பண்ணுறதுக்காக ஒரு ஸ்பெஷல் ப்ளேசுக்குப் போனோம்னா அதுக்குப் பேர் டேட்டிங் தான்”
எவ்வளவு இலகுவாக கூறுகிறான் இவன்! கோபம் வருவதற்கு பதிலாக கன்னம் சிவக்கத் துவங்கியது அவளுக்கு. காரணம் இது நாள் வரை அவளிடம் இம்மாதிரியாக யாரும் பேசியது இல்லை என்பது தான்.
பேசுமளவுக்கு அவள் இடம் கொடுத்ததும் இல்லை. வேலையைத் தாண்டி பேசுமளவுக்கு யாரையும் நெருங்க விட்டதில்லை. ஒருவேளை இவனிடம் தான் அந்த எல்லையைச் சுட்டிக்காட்டவில்லையோ!
அவள் யோசிக்கும் போதே கன்னச்சிவப்பை ரசித்தபடியே “டேட்டிங்கை விடுங்க மேடம்… நீங்க உங்க ஃபியூச்சர் பத்தி என்ன யோசிச்சிருக்கீங்க?” என்று வினவினான் ருத்ரதேவ்.
“யோசிக்கிற அளவுக்கு எதுவும் இல்ல… காலம் முழுக்க இந்த ரிசார்ட்லயே ஒர்க் பண்ணிட்டுக் கழிச்சிடணும்… முன்னாடி எனக்குனு எந்தப் பொறுப்பும் இல்ல… ஆனா இப்ப ஆரோஹி இருக்குறா… அவளுக்காக நான் உழைக்கணும்ல… இவ்ளோ தான் என்னோட ஃபியூச்சர் ப்ளானிங்”
“தனியா வாழுறதுக்குப் பேர் வாழ்க்கை இல்ல மேடம்… உங்களுக்குனு லைஃப் பார்ட்னர் எங்கயாச்சும் பிறந்திருக்கலாம்… இந்நேரம் சிக்ஸ் ஃபீட்டுக்கு வளர்ந்திருக்கலாம்… இவ்ளோ ஏன், அவன் உங்க பக்கத்துல நின்னு உங்க கூட பேசிக்கிட்டு கூட இருக்கலாம்… அவனைப் பத்தியும் கொஞ்சம் யோசிக்கலாமே… இல்லனா வயசுப்பையனை சந்நியாசியாக்குன பாவம் உங்களுக்குத் தான் வந்து சேரும்”
அவன் கூறி முடிக்கவும் புன்னகைத்தாள் தக்ஷிண்யா. சரியாக அந்நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படவும், வெளியே மழைக்கு அலங்காரமாக அவ்வபோது ஜொலித்த மின்னலின் ஒளி சாளரம் வழியே வீட்டுக்குள் நுழைந்து மழைநேரத்து காரிருளையும், மின்சாரத்துண்டிப்பு பிரசவித்த இருட்டையும் விரட்ட முயன்றது.
கூடவே இடியோசை வேறு!
தக்ஷிண்யா சாளரத்தின் அருகே நின்று கொண்டாள். சோவென பெய்யும் மழையை ரசித்தபடியே தன்னிடம் இவ்வளவு நேரம் அரட்டையடித்த ருத்ரதேவிற்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்தாள்.
“நிழல்ல இருக்குறவங்களுக்கு வெயிலோட கொடுமை தெரியாது… உங்களை மாதிரி பெரிய ஃபேமிலியில இருக்குறவங்களுக்கு என்னை மாதிரி உறவுகளால புறக்கணிக்கப்பட்டவளோட உணர்வுகள் புரியுறது ரொம்ப கஷ்டம் சார்… யாரால நான் இந்த பூமிக்கு வந்தேனோ அவங்களே என்னை நிராகரிச்சப்ப என்னால எந்த உறவுகளையும் நம்ப முடியல… இப்ப உறவுகள் எல்லாமே ரீப்ளேஸ்மெண்ட் பாலிசியோட தான் உருவாகுது… இன்னைக்கு நான் ஒருத்தரை லைஃப் பார்ட்னரா செலக்ட் பண்ணுனா கூட, நாளைக்கு என்னை ரீப்ளேஸ் பண்ணுறதுக்கு ஒரு ஆள் வந்ததும் ஹீ வில் அபேண்டன் மீ… அப்ப தனியா நின்னு கஷ்டப்படுறதுக்குப் பதிலா எந்த உறவுகள்லயும் சிக்காம இப்பிடியே இருந்துட்டுப் போறேன்”
கிட்டத்தட்ட கருங்கல் போல உணர்ச்சிகளற்று இறுகிக் கிடந்தது அவள் முகம்.
ருத்ரதேவ் பெருமூச்சொன்றை விட்டுக் கொண்டான்.
“உறவுகள் பத்தி உங்களோட புரிதல் தப்புனு நான் சொல்ல மாட்டேன்… உங்களோட பாஸ்ட் எக்ஸ்பீரியன்ஸால நீங்க இப்பிடிப்பட்ட ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம்… ஆனா நீங்க சொல்லுற மாதிரி எல்லா உறவுகளும் ரீப்ளேஸ்மெண்ட் பாலிசியோட வர்றதில்ல மேடம்… சில உறவுகள் காலம் முழுக்க நம்மளோட வருவாங்க… எந்த ரத்தச்சம்பந்தமும் இல்லாம, முதல் பார்வையிலயே பிடிச்சுப் போய், ஏதோ ஒரு வகையில ஒருத்தர் இன்னொருத்தர் மேல வைக்குற அளவுக்கடந்த நம்பிக்கை காதலா பரிணாமிச்சு அது கல்யாணத்துல முடியுறப்ப உருவாகுற கணவன் மனைவிங்கிற உறவு அப்பிடிப்பட்டது தான்… இந்த உறவுக்குள்ள கருத்து வேறுபாடு, சண்டை வரும்… ஆனா ஒருத்தர் இன்னொருத்தரை ரீப்ளேஸ் பண்ணிக்க மாட்டாங்க… மத்தவங்க எப்பிடியோ ஐ டோண்ட் நோ, என்னைப் பொறுத்தவரை எனக்குப் பிடிச்சவங்களை நான் எப்பவுமே விட்டுக்குடுக்க மாட்டேன்… சோ கொஞ்சம் போலவாச்சும் என் மேல நம்பிக்கை வைங்க” என்று சொல்லிவிட்டு கண்களைச் சுருக்கி விரல்களால் அந்தக் கொஞ்சம் என்பதை அளந்து காட்டினான் அவன்.
அப்போது வெட்டிய பளீர் மின்னல் ஒளியில் அவனது ஹேசல்நட் வண்ண விழிகளில் தெரிந்த ஏதோ ஒரு உணர்வு மறுத்துப் பேச வந்த தக்ஷிண்யாவை அமைதியாக்கிவிட்டது.
கண்கள் விரிய அவள் நிற்கையிலேயே தனது விரல்களை அரை இதய வடிவில் வைத்தவன் தக்ஷிண்யாவின் தளிர் விரல்களை அதே வடிவில் தனது விரல்களோடு ஒட்ட வைத்துக் காட்டினான்.
“நான் உங்க கிட்ட வேற ஒன்னும் கேக்கப் போறதில்ல… ஜஸ்ட் கிவ் மீ யுவர் ஹார்ட்… அதுக்குப் பிரதிபலனா லைஃப் லாங் என்னோட ஹார்ட்ல உங்களை மகாராணியாக்கி அழகு பாப்பேன்… குடுப்பீங்க தானே?”
அவளுக்கு மிக அருகில் நின்று கண்களில் காதலைத் தேக்கி ருத்ரதேவ் வினவ தக்ஷிண்யா பேச்சு மூச்சற்று போனாள்.
மெதுவாய் கண்களை விலக்கி தங்களது விரல்கள் உருவாக்கிய இதய வடிவைப் பார்த்தவள் தயக்கத்துடன் அவனை ஏறிட ருத்ரதேவ் அடுத்த நொடி மற்றொரு கரத்தால் அவளது கரத்தைக் கோர்த்துக் கொண்டான்.
“பிலீவ் மீ தக்ஷி! ஐ லவ் யூ”
ஆழ்ந்த குரலில் அவன் கூற தக்ஷிண்யாவின் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்க துவங்கின. அவள் இது வரை அனுபவித்தறியாத உணர்விது. அவன் பற்றிய கரத்தின் வாயிலாக சிலிர்ப்பொன்று நாடி நரம்புகளில் பரவ மௌனமாய் அந்த உணர்வுகளின் கலவையை அனுபவித்தபடி நின்றாள் அவள். அவளது இந்த மௌனத்தைச் சம்மதமாக எடுத்துக் கொண்டான் ருத்ரதேவ். இன்னும் நிற்காத மழையின் பேரிரைச்சலில் மின்னல்கள் வெட்டி ஜொலிக்க இடிகள் மத்தளமாய் முழங்க இனிதே ஆரம்பித்தது ருத்ரதேவுடைய காதலின் முதல் அத்தியாயம்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


