“அருள்! உன் கிட்ட பென் டென் வாட்ச் உண்டு. அதை நீ யாருக்கும் குடுக்கமாட்ட. ஒரு தடவை நீ அதைத் தொலைச்சிட்ட. அப்ப நான் தான் அதைத் தேடிக் குடுத்தேன். எப்ப பாத்தாலும் மூனு வருசம் சீனியர்னு நீ எவ்ளோ சீன் போடுவ தெரியுமா? அந்தச் சம்பவத்துக்கு அப்புறம் நீ எனக்குத் தேங்க்ஸ் சொன்ன. அதுவும் கிண்டல் பண்ணாம மனசார சொன்ன. எனக்கு அப்பவே ‘மெயின் கேரக்டர் வைப்’ ஆரம்பிச்சிடுச்சு தெரியுமா?”
-வானதியின் கடிதம்…
இரவில் அருள்மொழி முகிலகத்திற்கு வந்தபோது பெண்கள் முகூர்த்தப் புடவையைக் காட்டிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“இன்னும் ரெண்டு மணி நேரத்துல பிளவுஸ் வந்துடும் மதினி. வானதிக்குப் பொருத்தமான கலர்ல எப்பிடி செலக்ட் பண்ணுனிங்க?”

“கடைக்குப் போறதுக்கு முன்னாடி இந்த நிறம், இந்த ஜரிகைனு மனசுல தீர்மானிச்சிட்டுத்தான் போறது வழக்கம் கயல். உனக்கு எடுத்தப் புடவையும் ரொம்ப அழகு. அன்னைக்கும் இன்னைக்கும் நீ ரசனைக்காரிதான்.”
பெரியம்மாவால் கயல்விழியிடம் தங்குதடையின்றிப் பேச முடிவதை ஆச்சரியமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்த வானதியை நமட்டுச் சிரிப்போடு பார்த்தபடி மெதுவாகக் கடந்தான் அவன்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
மாடியில் அவனது அறைக்கு வந்ததும் இலகு உடைக்கு மாறியவன், கதவைத் தட்டிவிட்டு வானதி உள்ளே வரவும் புருவம் சுருக்கினான்.
“அருள்! உன் பெரியம்மா என்னடா மாமியார் மாதிரி பேசுறாங்க?” கண்களைப் பெரிதாக விரித்து அவள் கேட்ட விதத்தில் அவனுக்கே சிரிப்பு வந்துவிட்டது.
“அவங்க உனக்கு மாமியார்தான். உறவுமுறை தெரியாதா?” நக்கலாகக் கேட்டபடி ஐபேடை எடுத்தான் அருள்மொழி.
“ப்ச்! மீனா அத்தை எவ்ளோ ஸ்வீட்டா இருப்பாங்க, என்னை மாதிரி. இவங்க சரியான பச்சைமிளகா.”
“எங்கம்மா ஸ்வீட்னு சொல்லு. அதுக்காக உன்னை மாதிரி ஸ்வீட்னு சொல்லாத. என்னால ஒத்துக்க முடியாது.”
கேலியாய்ச் சொன்னவன் ஐபேட் மூலமாக ஆர்தரின் மொபைலுக்கு அழைத்தான். அவன் யாரிடம் பேசப்போகிறான் என எட்டிப் பார்த்தவளைத் தன்னருகே அமருமாறு சைகையால் சொன்னவன், அழைப்பு ஏற்கப்பட்டதும் முகம் மலர்ந்தான்.
“ஹாய் ஆர்தர்” எனச் சினேகமாகக் கையசைத்தவன் வானதியைக் காட்டினான் அவரிடம். “ஷீ இஸ் வானதி” எனச் சொல்ல ஆர்தரின் முகத்தில் மலர்ச்சி.

“ஓஹ்! த இங்க்-கேர்ள்” அவர் சிரிப்போடு சொல்லவும் வானதிக்கு ஆச்சரியம்.
“இங்க் கேர்ள்?”
“யாஹ்! நீங்க எழுதுற லெட்டர்ஸை வீடு வரைக்கும் ராயல் போஸ்ட் கொண்டு வருவாங்க. அதை ஐவி மேனருக்குள்ள கொண்டு போற போஸ்ட்மேன் நான்தான். இந்த டிஜிட்டல் யுகத்துல லெட்டர் எழுதுற பொண்ணு மேல எனக்கு நிறைய ஆச்சரியம் உண்டு. உங்களுக்கு நான் வச்ச செல்லப்பேர் அது.”
“தேங்க்யூ ஆர்தர். மே ஐ கால் யூ பை யுவர் நேம்?”
வானதி இவ்வாறு கேட்கவும் அருள்மொழி ஆர்தரிடம் அவள் இவ்வாறு கேட்டதற்கான காரணத்தை விளக்கினான்.
“இந்தியால நாங்க வயசுல பெரியவங்களைப் பேர் சொல்லிக் கூப்பிடமாட்டோம். அதனாலதான் வானதி உங்ககிட்ட அனுமதி கேக்குறா.” “ஓஹ்! ப்ளீஸ் கால் மீ ஆர்தர்.”
ஆர்தரிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அருள்மொழி. அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தவளின் கண் முன்னே சொடக்கிட்டவன், “என்ன? பார்வை வித்தியாசமா இருக்கு” என்று கேட்க,
“என் கண்ணுக்கு நீயே ஒவ்வொரு நிமிசமும் வித்தியாச வித்தியாசமாதான் தெரியுற அருள்” எனப் பெருமூச்சு விட்டவள், “ஆர்தர்தான் நான் எழுதுன லெட்டர்ஸை உன்கிட்ட கொண்டு வந்து தருவாரா? நீ நான் அனுப்புன லெட்டர்ஸை படிச்சிருக்கியா?” என ஆவலாய்க் கேட்டாள்.
அருள்மொழி ஐபேடை டீபாய் மீது வைத்தவன், “இதுக்கு நான் உண்மைய சொல்லிடுவேன். ஆனா அது உன்னை ஹர்ட் பண்ணும்” என்றான் யோசனையோடு.
வானதிக்கு அவன் இவ்வாறு சொன்னதுமே முகம் வாடிப்போனது. இருப்பினும் சமாளித்துக்கொண்டு, “பரவால்ல! இனிப்பான பொய்யை விடக் கசப்பான உண்மைய ஏத்துக்கலாம்” என்றாள்.
“நீ அனுப்புன எந்த லெட்டரையும் நான் படிச்சதில்ல. எல்லாத்தையும் கணப்புல போட்டு எரிச்சிடுவேன்.”
இதைச் சொன்னபோது அருள்மொழியின் குரலில் பிசிறு தட்டவில்லை. கண்களில் சற்று முன்னர் இருந்த இளகிய பாவனை மறைந்து போயிருந்தது. உதடுகளும் தாடையும் இறுகியிருந்த விதம் வானதியை மெய்யாகவே காயப்படுத்திவிட்டது.
“ஒரு லெட்டர் கூட படிக்கலையா? படிச்சிருக்கலாம்ல அருள்” குரல் நடுங்கக் கேட்டவளின் கண்களில் கண்ணீர் மெல்ல மெல்ல நிரம்பியது.

அருள்மொழி தலையை உலுக்கியவன், “லிசன்! எனக்குப் படிக்கத் தோணல. ப்ளீஸ்! இதைப் பத்தி நாம பேசிக்க வேண்டாம்” என்றான் அலட்சியமாய்.
ஆனால் வானதியால் அதை அலட்சியப்படுத்த முடியவில்லை. தனது கடிதத்திற்கு அவன் பதிலளிக்கவில்லை என்றாலும் படித்திருப்பான் என்று அழுத்தமாய் அவளுக்குள் ஒரு நம்பிக்கை இத்தனை ஆண்டுகளாக ஜீவித்திருந்தது. இதோ சில நொடிகளுக்கு முன்னர் அந்த நம்பிக்கையும் அல்லவா காயப்பட்டு வீழ்ந்து போனது.
அவனிடம் உரிமையாய் சண்டை போடக்கூட முடியாத தூரத்தில் நிற்பதாக உணர்ந்தாள் வானதி. அவன் விலக்கிவிட்டானா அல்லது விலகிவிட்டானா என்று புரியாத நிலை. இந்த நிலையில் திருமணம் வேறு! அதுதான் வானதிக்குப் பெரும் அச்சம்.
“நாம கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கணுமா? ஏன் கேக்குறேன்னா…” என்றவள் முடிக்கும் முன்னரே அவன் முந்திக்கொண்டான்.
“பழசைப் பேசாம இருந்தா நம்ம லைஃப் நல்லா இருக்கும். அந்தக் கோணத்துல பாத்தா நம்ம கல்யாணம் பண்ணிக்குற முடிவு ஒன்னும் அவ்ளோ மோசமான முடிவா தோணல.”
“நீ பழசுனு அலட்சியப்படுத்துற ஒவ்வொன்னும் எனக்கு அற்புதமான தருணங்கள் அருள். அதெல்லாம் உனக்கு ஞாபகம் வரணும்னு தான் நான் லெட்டர் எழுதுனேன். நீ அதைக் கூட படிக்கலனதும்…” முடிக்காமல் தவித்தவள் எழுந்தாள்.
எதுவும் பேசாமல் அந்த அறையை விட்டு வெளியேறியவளைச் சமாதானம் செய்யக்கூடத் தோன்றாதவனாய் அமர்ந்திருந்தான் அருள்மொழி.
லண்டனில் அவளது அண்மையில் இல்லாதபோது கூட அவள் எழுதும் கடிதங்களை அலட்சியம் செய்யத் தோன்றியதில்லை அவனுக்கு. படித்ததும் எரித்துவிடுவான்தான். அதெல்லாம் வெறுப்பின் அதீதம்; விரக்தியின் உச்சம். ஏதோ ஒரு விதத்தில் வானதியின் மீது உருவான கசப்புணர்வின் வெளிப்பாடு.
அந்தத் தருணங்களில் அருள்மொழி வேதனையுற்றதில்லை. ஆனால் இப்போது முகம் கலங்கப் பரிதவிப்போடு ‘படிச்சிருக்கலாமே?’ என வானதி கேட்டதும் கொஞ்சமாய் முணுக்கென்ற வலி அருள்மொழிக்குள். இந்தியாவுக்கு வரும்வரை வானதியை ஒதுக்கி நிறுத்தும் எண்ணம்தான். ஆனால் அவன் மனதிலும் அவளுடனான நட்பின் நினைவுகள் பசுமையாய்க் குடியிருக்கின்றனவே!
பழைய அனர்த்தத்தை எண்ணித் தள்ளி நிறுத்தினாலும் அவள் விலகி நிற்கத் தயாராக இல்லை. இப்போதோ அவனது திட்டத்தில் அவளும் ஒரு கருவியாகிவிட்டாள். என்ன நடந்தாலும் ஜெயசந்திரன் அழவேண்டும். அதற்கு எதையும் செய்ய அருள்மொழி தயார். என்ன ஒன்று, வானதி கண் கலங்கிவிட்டால் அவன் தடுமாறிவிடுகிறான்.
இப்போதைய தடுமாற்றம் மறைய அவனுக்குள் இருந்த பழியுணர்ச்சி விழித்துக்கொண்டது.
‘ஜெயசந்திரனை அழிக்க நீ ஜெயசந்திரனாய் மாறவேண்டும். இது போன்ற இளக்கம் எல்லாம் அவரிடம் கிடையாது’ என்று அறிவுறுத்தியது.
மனதிலிருந்த வலியை ஒதுக்கிவிட்டுத் திருமணத்திற்குத் தேன்மலை செல்வதற்கான ஆயத்தங்களில் ஈடுபடலானான்.
ஒரு பக்கம் ரமாவின் பேச்சு ஜெயசந்திரனுக்கு எரிச்சலை மூட்டினாலும் மகளின் திருமணம், தனது அரசியல் நகர்வைக் கருத்தில் கொண்டு அமைதி காத்தார் அந்த மனிதர். கயல்விழியிடம் மட்டும் அவர் கடுப்பைக் காட்டினார்.
“மாப்பிள்ளை வீடுனு ஒரு புல்லைப் புடுங்கிப் போட்டாலும் அந்தப் புல்லு ஆடுமாம். அப்பிடி இருக்கு இந்த அம்மாவோட அலட்டல்.”
“ஏன்ங்க இப்பிடி? மனசுல எதையும் வச்சுக்காத டைப் அவங்க.”
“உனக்கு எல்லாரும் நல்லவங்கதான் கயல்.” சலித்துக்கொண்டவருக்கு மறுநாள் காலையில் ரமா செய்த அலப்பறையில் தலை சுற்றாதக் குறை.
சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம். அங்கிருந்து கார்ப்பயணத்தில் தேன்மலை செல்வதாக ஏற்பாடு. விமானப்பயணத்திற்காக வானதி கிராப் டாப்பும் ஜீன்ஸும் அணிந்து வந்ததைப் பார்த்துவிட்டு மூச்சுப் பிடிக்கப் பேசிக்கொண்டிருந்தார் ரமா.
“கல்யாணப்பொண்ணு போடவேண்டிய டிரஸ்ஸா இது? நல்லா ஒரு புடவையைக் கட்டிட்டு வா.”
“ஃப்ளைட் டிராவலுக்கு சாரி கம்ஃபர்டபிளா இருக்காது ஆன்ட்டி.”

“நான், உன் அம்மா எல்லாம் புடவைதான் கட்டப்போறோம். நீயும் கட்டுனா என்ன? ஊர்ல போய் இறங்குறப்ப கல்யாணப்பொண்ணு மாதிரி தெரியவேண்டாமா?”
வானதி தனது அன்னையிடம் முறையிட, அவரோ “போன மாசம் எடுத்தல்ல மல் காட்டன், அதைக் கட்டிட்டு வா வானும்மா. ட்ரெண்டியா இருக்கும்” என்று சொல்ல ரமாவின் முகத்தில் மெச்சும் பாவனை.
“உன் மகளைச் சமாளிக்க உன்னால மட்டும்தான் முடியும் கயல்” என்றவர், “கருப்பு, ஊதா, கருநீலம் இந்த மூனைத் தவிர மத்த கலர்ல இருக்குற புடவையைக் கட்டு. தலையை விரிச்சுப் போடாம சின்னதா கிளிப் போட்டுக்க” என்றார் வானதியிடம்.
வானதி முணுமுணுத்துக்கொண்டே தனது அறைக்கு வந்தவள் தனது வார்ட்ரோபில் தேடினாள். கோரல் சிவப்பில் கொஞ்சமாய் ஜரிகை வைத்த மல் காட்டன் புடவை பார்வைக்குக் கிடைக்கவும் மடமடவென அதை அணிந்துகொண்டாள். கூந்தலை சிறிய கிளட்ச் கிளிப்பில் அடக்கி மீதியை விரித்துவிட்டவள், அதை மொத்தமாக அள்ளி முன்பக்கம் வழிய விட்டபடி ஹாலுக்கு வந்தபோது அங்கே யாருமில்லை.
மாடியிலிருந்து ஷூ கால்கள் இறங்கும் சத்தம் கேட்டதும் திரும்பியவள், ஃபார்மல் ஷர்ட் மற்றும் சினோஸில் வந்த அருள்மொழியைப் பார்த்ததும் உதடு சுழித்தாள்.
அவனது பார்வை அவளது உதடு சுழிப்பில் பட்டதும், “சும்மாவே உன்னைப் பாக்க சகிக்காது. இதுல வாயை வேற அஷ்டகோணலா வச்சுக்க. என்ன செல்ஃபி எடுக்குறியா?” என வினவினான் வேண்டுமென்றே.
“அதெல்லாம் இல்ல. நான் ஜீன்ஸ் போட்டா கல்யாணப்பொண்ணு மாதிரி இருக்காதாம். இப்ப நீ மட்டும் கல்யாண மாப்பிள்ளை மாதிரியா இருக்குற?” என்று அதிருப்தியோடு கேட்டாள் வானதி.
“அதுக்காக ஃப்ளைட்டுக்கு வேஷ்டி கட்டிக்கிட்டா வரமுடியும்?”
“அப்ப நான் மட்டும் புடவை கட்டிட்டு வரணுமா?” என்றவள் சுற்றிக் காட்ட, அருள்மொழியின் கண்கள் இடுங்கின.
“கொஞ்சம் பக்கத்துல வா.”
“ஏன்?”
“கடிச்சுச் சாப்பிட மாட்டேன். நீ வா முதல்ல.”
வானதி தயக்கத்தோடு அவனை நெருங்கி நிற்கவும், “புடவை கட்டுனா மட்டும் போதாது. பின்னாடி பிளவுஸ்ல இருக்குற ரோப்பை நாட் போட மறந்துட்ட. அதை முதல்ல கட்டு. போதாக்குறைக்கு முடியை அள்ளி முன்னாடி போட்டாச்சு” என்றான் அருள்மொழி சிரிப்பை அடக்கியவனாய்.
“அவசரத்துல மறந்துட்டேன்” என்றவள் பின்னே கையைக் கொண்டு போக, பிளவுஸ் இறுக்கமாக இருந்ததில் கை பின்னே இலகுவாக நகர மறுத்தது.
“என்ன?” அவள் திருதிருவென விழிப்பதைப் பார்த்துக் கேட்டான் அருள்மொழி.
“அது.. பிளவுஸ் டைட்டா இருக்கு. கையைத் தூக்க முடியல” என்றாள் அசட்டுச் சிரிப்புடன்.
“திரும்பு.”
வானதி திரும்பி நிற்கவும் இரு பக்கமும் தொங்கிய கயிறுகளை அழகாய் முடிச்சிட்டான் அருள்மொழி. வெட்டி வைத்த தங்கமாய்ப் பளபளத்த முதுகும், காதும் கழுத்தும் இணையும் இடத்தில் குட்டியாய் இருந்த பூனை முடிகளும் அவனது கவனத்தைக் கலைக்கப் போராடிக்கொண்டிருக்க, நல்ல பையனாய் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.
“தேங்க்ஸ்” என்றவள் விலகப்போக, அவளது கையைப் பற்றி இழுத்து இடையோடு சேர்த்து அணைத்துக்கொண்டவன்,

“சாரில நீ அழகா இருக்க. பொண்ணு மாதிரி” என்று அழுத்தமாய்ச் சொல்ல,
“நீ பாராட்டுறியா? கிண்டல் பண்ணுறியா?” என ஐயப்பட்டாள் வானதி.
“கிண்டல் பண்ணுறவன் இப்பிடி கட்டி அணைச்சுத்தான் கிண்டல் பண்ணுவானா?”
“நீ பண்ணுவடா” என்றவள் “நேத்து நீ என்னை அழ வச்சல்ல” என்று குறை சொன்னபடி அவனது கையை அகற்றினாள் தனது இடையிலிருந்து.
“நான் சொன்னேன்ல நீ ஹர்ட் ஆவனு. நீ கேட்டு வாங்கிக்கிட்ட வேதனை அது.”
அலட்சியமாய்ச் சொன்னவனை முறைத்தாள் வானதி.
“இப்ப கூட ஆறுதலா பேசமாட்டியா? உன்னை எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு எனக்கு நானே சூனியம் வச்சுக்கப்போறேன்னு நினைக்குறேன்.”
“பில்லி சூனியம் எல்லாம் நீ ஜெயசந்திரனுக்கு மகளா பிறந்தப்பவே ஆரம்பிச்சாச்சு. அட்லீஸ்ட் என்னைக் கல்யாணம் பண்ணுனா நீ அதுல இருந்து தப்பிப்ப.” அவனது பதிலடியில் வழக்கம் போல கவுண்டர் அட்டாக் செய்ய முடியாமல் தவித்தவள் “போடா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.
இருவரது வீறாப்பும் அவ்வளவுதானா? முகிலகத்தின் சுவர்கள் கேட்டுக்கொண்டன.
அங்கிருந்து கிளம்பியவர்கள் பின்னர் விமானம் ஏறியது, தூத்துக்குடியில் இறங்கியது எல்லாம் சீராய் நடந்தேறியது. திருமண ஏற்பாட்டை தமிழகத்தின் தலைசிறந்த ஈவெண்ட் பிளானர்களிடம் கொடுத்திருந்தான் ஆதித்யன். அவர்கள் தேன்மலைக்கு ஒரு வாரத்திற்கு முன்னரே சென்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டார்கள். அவர்களை மேற்பார்வையிட அகத்தியன் எப்போதோ தேன்மலைக்குப் போய்விட்டான்.
விருந்தினர்களும் அங்கே வந்து சேர்ந்துவிட்டதாகத் தூத்துக்குடியில் இறங்கியதும் ஆதித்யனுக்குச் செய்தி வந்துவிட்டது.
“இன்னைக்கு ஈவினிங் ஒரு பூஜை இருக்கு. அதுக்கான ஏற்பாடு முடிஞ்சுதா?”
“முடிஞ்சுது சார். பொண்ணு மாப்பிள்ளையோட டிரஸ்ல ஆரம்பிச்சு எல்லாமே தயாரா இருக்கு.”
திருப்தியோடு தூத்துக்குடியிலிருந்து காரில் பயணமானார்கள் ஜெயசந்திரனின் பூர்வீகமான தேன்மலைக்கு.
தூத்துக்குடி கடந்து திருநெல்வேலி தாண்டி தென்காசி மாவட்டத்தின் எல்லைக்குள் கார் நுழையும்போதே பொதிகைத் தென்றலின் குளிர்ச்சி! மதிய வெயிலில் கூட மந்தமாருதத்தின் இதம் தெரிந்தது.
“எப்பா ஆதி! போய் இறங்குனதும் மாப்பிள்ளை பொண்ணுக்கு ஆரத்தி எடுக்கணும். சொல்லிடு அங்க. அப்புறம் பூஜைக்கு முன்னாடி ரெண்டு பேருக்கும் திருஷ்டி கழிக்கணும்.”
ரமா ஆதித்யனுக்கு நினைவுறுத்த, அவனும் அகத்தியனுக்கே அழைத்து இந்த விவரத்தையும் கூறிவிட்டான்.
“நிர்மலா அத்தை இருப்பாங்க. அவங்களை ஆரத்தி எடுக்கச் சொல்லிடு அகத்தியா” எனக் குறிப்பிடவும் செய்தான்.
ஜெயசந்திரனின் தூரத்து உறவுகள், கட்சி சார்ந்த பிரமுகர்கள், ஆதித்யனின் தொழில்முறை நட்புகள் என அனைவரும் அங்கே போய்ச் சேர்ந்திருந்தார்கள். ஜெயசந்திரன் மட்டும் முதலமைச்சருக்கான பாதுகாப்போடு அவரது கான்வாயுடன் பயணம் செய்தார். மற்றவர்கள் தனித்தனியே இரு கார்களில் செங்கோட்டையைத் தாண்டிச் சென்றுகொண்டிருந்தார்கள்.
மெதுவாய்த் தமிழக-கேரள எல்லை வர மலையில் கார்கள் ஏறத் தொடங்கியதும் வானதிக்குக் குழந்தைப்பருவத்தின் இனிமையான நாட்களின் நினைவலைகள் நெஞ்சில் ததும்ப ஆரம்பித்தன. தேன்மலை – அடர்கானகமும், உயரமான மலைச்சிகரமுமாய்ச் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்குத் தப்பியிருக்கும் அழகான மலைக்கிராமம். தேன்மலை அரண்மனை குடும்பத்தார் தங்கும் அரண்மனையும் கானகமும் அதிலோடும் நதியுமாய் அற்புதமான மலைவாசஸ்தலம் அது.
மலைச்சரிவின் முகட்டிலிருக்கும் ஜெயசந்திரனின் விருந்தினர் மாளிகையான ஜெயவிலாசத்தின் பிரதான வாயிலருகே கார்கள் வரும்போதே, கமாண்டோக்கள் பாதுகாப்புக்காக ஆங்காங்கே நடமாடிக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது. காவல்துறை பந்தோபஸ்தும் அதிகமாக இருந்தது அங்கே.

திருமண விருந்தினர்களுக்கு ஐடி பாஸ் கொடுத்திருந்தார்கள். கார்களை உள்ளே அனுமதித்த பிறகு மெட்டல் டிடெக்டர் சோதனையிட்டு விருந்தினர்களை உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தார்கள் காவலர்கள்.
பல ஏக்கர்களில் விரிந்திருந்த அந்த விருந்தினர் மாளிகை மேகங்களைத் தொட்டுவிடுமளவுக்கு அத்தனை உயரமாய், கம்பீரமாய் இயற்கை அன்னை தன் கைப்பட வரைந்த ஓவியமான தேன்மலையில் நிற்பதைக் கண்ட அருள்மொழியின் விழிகளில் அழகை ரசிக்கும் பாவனை. ஐவி மேனர் ஒருவிதத்தில் அழகென்றால் இந்த ஜெயவிலாசம் மற்றொரு விதத்தில் அழகு என்று தோன்றியது அவனுக்கு.
கேரளாவின் ‘நாலுகெட்டு’ கட்டிடக்கலை பாணியில் மேற்கூரை முழுவதும் பழுப்பு வண்ண ஓடுகளால் வேயப்பட்டு, வாயில் கதவுகள் யாவும் தேக்கினால் செய்யப்பட்டு கட்டிடக்கலைஞரின் அதீத ரசனையைக் கொட்டிக் கட்டப்பட்டிருந்தது அந்த மாளிகை. மாளிகையின் பெரிய நிலைக்கதவின் இரு புற நிலைகளிலும் தசாவதாரக் காட்சிகள் மரத்திலேயே செதுக்கப்பட்டிருந்தன.
தரையெங்கும் ஆத்தங்குடி தள ஓடுகள் பதிக்கப்பட்டு, நீண்ட அறைகளும் காற்று தாராளமாய் வந்து செல்லும் சாளரங்களுமாய் வரவேற்றது அந்த விருந்தினர் மாளிகை. இப்போது வானதி-அருள்மொழியின் திருமணத்திற்காக மலர்களாலும் விளக்குகளாலும் சொர்க்கலோகம் போல அலங்கரிக்கப்பட்டிருந்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

