ரங்கநல்லூர் சிவன் கோவிலில் அன்று நல்ல கூட்டம். சனி பிரதோசம் சிறப்பு என்பதால் வழக்கத்தை விட மக்கள் அதிகமாக வந்திருந்தார்கள்.
தேவயானியும் கனகவல்லியோடு கோவிலுக்கு வந்திருந்தாள். நந்தி சிலைக்கு இருபக்கமும் மக்கள் வரிசையாக அமர்ந்து ஈசனுக்கு நடக்கும் அபிசேக ஆராதனைகளைப் பார்த்தபடி பக்தியில் மூழ்கியிருந்தார்கள். ஒரு பக்கம் சில பெண்கள் சிவபுராணத்தைப் பாராயணம் செய்து கொண்டிருந்தார்கள். கோவிலெங்கும் பக்தி மணம் கமழ்ந்து கொண்டிருந்தது.

தேவயானிக்குப் பின்னே சில வரிசைகள் பின்தங்கி அமர்ந்திருந்த பவித்ரா தனது அன்னையிடம் அவளையும் கனகவல்லியையும் காட்டினாள். அவர் ‘அமைதியாக அபிஷேகம் செய்வதைப் பார்’ என்று சைகை காட்டினார். அவளோ அமைதியாகவில்லை.
“அவளைப் பாத்தாலே எனக்கு எரிச்சலா இருக்கும்மா. ரொம்ப நல்லவ மாதிரி கோவிலுக்கு வந்திருக்கா. இவ வேலை பாக்குற ஹாஸ்பிட்டல்ல ஒரு டாக்டர் கூட சிரிச்சு சிரிச்சு பேசுனதை நானும் லலிதாக்காவும் எங்க கண்ணால பாத்தோம். சரவணன் என்னமோ என்னை மட்டும் குறை சொன்னாரே…”
மடமடவெனப் பேசிக்கொண்டே போனவள் முல்லையின் முறைப்பால் கப்சிப்பென வாயை மூடிகொண்டாள்.

முல்லை முன்பு போல இல்லை. அன்றொரு நாள் நெஞ்சுவலி என்றதும் சரவணன் வந்து உதவியதை அவரால் மறக்க முடியவில்லை. முதல் முறை தன் மகளின் திருமணப்பேச்சு நின்றுவிடக்கூடாதென்றும், இரண்டாம் முறை மகளை நிராகரித்தான் என்றும் சரவணனைப் பற்றி அவதூறு பரப்பியது எவ்வளவு இழிவானக் காரியம் என்பதை அவர் காலங்கடந்து யோசித்தார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
தன் மகளுக்கும் நல்லது நடக்கும்; அதுவரை பொறுமையாக இருப்பதே பெரியமனிதர் செய்யும் காரியம் என்று புரிந்துகொண்டு பவித்ராவுக்காக மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அவரது மகளோ தனக்கு உதவியவனின் மனைவியை அல்லவா கோவிலில் வைத்து கரித்துக் கொட்டுகிறாள்.
கடவுளின் சன்னிதானத்தில் செய்யக்கூடாத காரியம் சக மனிதரைத் தூற்றுவது. விரோதியாகவே இருந்தாலும் அவரைப் பற்றி இழிசொற்களைக் கடவுள் முன்னே பேசக்கூடாது என்பார்கள். பவித்ரா அதைச் செய்யவும் முல்லைக்கு முறைப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
சரியாக அலங்காரம் முடிந்து பூஜை ஆரம்பித்த சமயத்தில் சரவணனும் வந்துவிட்டான். அன்னை மற்றும் மனைவியோடு பயபக்தியோடு ஈசனை வணங்கினான்.
அவனும் கனகவல்லியும் பிரசாதம் வாங்க வரிசையில் நிற்க, தேவயானி அங்கே ஒருவரிடம் தொன்னை ஒன்றை வாங்கி விபூதி மற்றும் குங்குமத்தை அதில் கொட்டினாள்.
“சிவன் கோவில்ல இருந்து எதையும் எடுத்துட்டுப் போகக்கூடாதுனு தெரியாதா? சிவன் சொத்து குலநாசம்னு உங்க வீட்டுல சொல்லித் தரலையா?” என்று ஏளனக்குரலில் கேட்டபடி அவளருகே வந்தாள் பவித்ரா.
அப்போதுதான் அவளைத் தனக்காகக் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு முல்லை பிரசாதம் வாங்க போயிருந்தார். அந்த இடைவெளியைப் பயன்படுத்தி தேவயானியைச் சீண்ட வந்துவிட்டாள்.
தேவயானி அவளைக் கண்டுகொள்ளாமல் செல்ல முற்பட வழிமறித்தவளோ தனது மொபைலைக் காட்டினாள். என்னவெனக் கண்களைச் சுருக்கிப் பார்த்த தேவயானி அதிலிருந்த புகைப்படத்தைப் பார்த்ததும் ஒரு நொடி முகம் இறுகினாள். பின்னரோ புன்னகைத்தாள்.
“என்ன சிரிக்குற? இதுல இருக்குறவர் சரவணன். போன மாசம் எங்கம்மாக்கு நெஞ்சுவலினு நான் வந்து சொன்னதும் கடையை அப்பிடியே போட்டுட்டு ஓடி வந்தார் தெரியுமா? இதுல்லாம் யாருக்காக? எனக்காக. அவர் என்னைப் பிரிஞ்சிருக்கலாம். ஆனா அவரால என்னை மறக்க முடியாது. உனக்குத் தெரியுமா? ஆண்கள் தங்களோட முதல் காதலை எப்பவுமே மறக்கமாட்டாங்க. சப்போஸ் அவங்களுக்கு வேற ஒரு பொண்ணு கூட கல்யாணம் ஆனாலும் கடமைக்குக் குடும்பம் நடத்துவாங்க. ஆனா முதல் காதலியைக் காதலிச்ச மாதிரி அவங்களால பொண்டாட்டிய காதலிக்க முடியாது”
இறுமாப்போடு அவள் சொல்லவும் சத்தமாக நகைத்தாள் தேவயானி. ஏன் அவள் சிரிக்கிறாள் என்று புரியாமலும், தான் இவ்வளவு தூரம் சொல்லியும் அவள் வருந்தாமல் நிற்பதைப் பார்த்தும் பொருமினாள் பவித்ரா. சிரித்து முடித்த தேவயானி தனது மொபைலை எடுத்தாள்.
அதில் வாட்சப்பைத் திறந்து சுரேஷின் பெயரின் கீழிருந்த சாட் விவரத்தைக் காட்டினாள்.
“அண்ணனும் நானும் இன்னைக்கு அந்தப் பாம்பு வீட்டுக்குப் போயிருந்தோம் மதினி. அதோட அம்மாக்கு நெஞ்சுவலினு அண்ணன் கடை முன்னாடி வந்து அழுதுச்சு. அண்ணன் பரிதாபப்பட்டு என்னை அழைச்சிட்டுப் போனார். நாங்க அந்தம்மாவ ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோம். அந்தம்மாக்கு டாக்டர் மாத்திரை குடுத்து அனுப்பி வச்சிட்டாங்க. ஹாஸ்பிட்டல்ல அந்தம்மா ஆபரேசன் பண்ணுங்கனு டாக்டர் கிட்ட அழுது ரகளை பண்ணிடுச்சு. அவங்களைச் சமாதானம் பண்ணவே ரொம்ப நேரம் எடுத்துச்சு. அதான் நாங்க கடைக்குத் திரும்ப லேட் ஆகிடுச்சு”
அதைப் படித்ததும் பவித்ராவின் முகம் சுண்டிப்போனது. தேவயானிக்கு வழக்கம் போல அவள் மீது கோபம் வரவில்லை. மாறாகப் பரிதாபம் பிறந்தது.

“இன்னும் எத்தனை நாள் இந்த மாயைல வாழப்போற பவித்ரா? சரவணனுக்கு இப்ப எல்லாம் நான்தான். என்னை அவர் எந்தளவுக்குக் காதலிக்குறார்னு எனக்குத் தெரியும். அவர் மேல நான் எந்தளவுக்கு நம்பிக்கை வச்சிருக்கேன்னு அவருக்கும் தெரியும். அவர் உன் மேல காட்டுனது மனிதாபிமானம். உன் அண்ணன் இல்லாத நேரத்துல வீட்டுல உதவிக்கு ஆள் இல்லனு வந்திருக்கார். அப்பவும் தனியா வரல. சுரேஷோட வந்திருக்கார். அதையும் உனக்கேத்த மாதிரி திரிச்சுச் சொல்லுற. நான் உன்னைத் திட்டப்போறதில்ல. தயவுபண்ணி உன் வாழ்க்கைய வாழப் பாரு. உனக்குனு ஒருத்தன் பிறந்திருப்பான். அவன் வர்ற வரைக்கும் உன் அம்மா அப்பாக்கு நல்ல மகளா இரு. சரவணன்ங்கிற வைரத்தை நீ தொலைச்சு ரொம்ப நாளாகுது பவித்ரா. அந்த வைரம் எனக்குச் சொந்தமாகிடுச்சு. இனி அதை என் கிட்ட இருந்து யாராலயும் பறிக்க முடியாது”
கர்வத்தோடு கூறியவளை ஏமாற்றம் ததும்பும் விழிகளால் ஏறிட்டாள் பவித்ரா. அவளது உதடுகள் கோபத்தில் துடித்தது. என்ன பிரயோஜனம்? அவளால் தேவயானிக்கு எந்தப் பதிலடியும் கொடுக்க முடியாது.
“சரவணனுக்கு இனிக்க இனிக்க பேசவராது. ஆனா உயிரைக் குடுக்குற அளவுக்கு நேசிக்கத் தெரியும். அவரோட அதட்டலும், கோபமும் அடக்குமுறை இல்ல. அது நேசிக்கிறவங்களோட பாதுகாப்பு மேல அவர் காட்டுற அக்கறை. அவர் அழுக்குப் படாம ஒயிட் காலர் ஜாப் பாக்கல. ஆனா சுயமா உழைச்சு முன்னேறுற வேகம் அவருக்கு இருக்கு. இதைப் புரிஞ்சிக்காம மனசை அலைபாய விட்டு நீ தோத்துட்ட. அவரைப் புரிஞ்சிக்கிட்ட நான் ஜெயிச்சிட்டேன். நீ என்ன முயற்சி பண்ணுனாலும் எங்களைப் பிரிக்க முடியாது. எங்களுக்குள்ள கருத்து வேறுபாடை உருவாக்க முடியாது. உனக்காக நான் சிவன் கிட்ட வேண்டிக்குறேன். நல்ல மாப்பிள்ளை கிடைச்சு நீயும் நல்லா வாழுவ”
தனது வாழ்க்கையில் குழப்பத்தை உண்டாக்க வந்தவளை வாழ்த்திவிட்டுக் கணவனும் மாமியாரும் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தாள் தேவயானி.
சுரேஷிடம் அவள் நட்பு பாராட்டியது எவ்வளவு நல்லது! அந்தச் சிறுவனிடம் தினமும் கொஞ்சநேரம் வாட்சப்பில் அரட்டை அடிக்கத் தவறுவதில்லை தேவயானி. அப்படி பேச்சுவாக்கில் சொன்னதுதான் முல்லையின் நெஞ்சுவலி பற்றிய செய்தி. அவன் மட்டும் கூறவில்லை என்றால் பவித்ரா காட்டிய புகைப்படங்கள் தேவயானிக்குக் கட்டாயம் கோபத்தை வரவழைத்திருக்கும்.
சரவணனைச் சந்தேகப்பட்டுக் கோபம் கொண்டிருப்பாள் என்று அர்த்தமில்லை. சம்பந்தமில்லை என்று ஆன பிறகு ஏன் அவள் வீட்டில் போய் நிற்கவேண்டும், ஏன் அவளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்ற ரீதியில் வாக்குவாதம் போயிருக்கும். அந்த வாக்குவாதமும் மற்ற வாக்குவாதங்களைப் போல அரைமணி நேரத்திலோ ஒருமணி நேரத்திலோ முடிவுக்கு வந்திருக்கும்தான்! ஆனால் மனம் தவித்திருக்குமே! அதற்கான வாய்ப்பைச் சுரேஷின் சாட் தகர்த்துவிட்டது.
மூவரும் வீடு திரும்பிய பிறகு மனைவியின் முக ஜொலிப்புக்கானக் காரணத்தை வினவினான் சரவணன். அவளோ இரவில் கூறுவதாகச் சொல்லிவிட்டாள்.
மூவரும் இரவுணவு சாப்பிடுகையில் வழக்கமான இட்லியும் சாம்பாரும் தேவயானிக்குக் குமட்டியது. வாயை மூடிக்கொண்டு தோட்டத்தின் ஓரமாய் கட்டப்பட்டிருந்த குளியலறைக்கு ஓடினாள்.
“சரவணா என்னனு பாருய்யா! முத்தாரம்மா, என் மருமவளுக்கு என்னாச்சுனு தெரியலையே”
கனகவல்லி கலங்க, ரத்தினவேலு குழம்ப, சரவணனோ மனைவியை நோக்கி ஓடினான்.
குளியலறையில் இருக்கும் ஷிங்கில் வாந்தி எடுத்துக்கொண்டிருந்தாள் தேவயானி.
“தேவா!” ஓடிச்சென்று அவளது தலையைப் பிடித்துக்கொண்டான் சரவணன்.
குழாயைத் திருகி தண்ணீரால் வாய் கொப்புளித்தவள் “நாக்கு கசக்குதுங்க. தினமும் காலையில பல் தேய்ச்சதும் மஞ்சளா வாந்தி வருது. பித்தம்னு நினைக்குறேன். அத்தை கிட்ட பித்தக் கஷாயம் போடச் சொல்லி குடிக்கணும்” என்றாள் புடவை முந்தானையால் வாயைத் துடைத்தபடி.
“பித்த வாந்தியா?” குழம்பியபடி அவளை வீட்டுக்கு அழைத்து வந்தவன் அன்னையிடம் விபரம் கூற அவரோ பூரித்துப்போனார்.
“பித்தவாந்தி எல்லாம் இல்ல. இது மசக்கைக்கான வாந்தி” என்றவர் மருமகளின் முகம் வழித்துத் திருஷ்டி கழித்தார்.
தேவயானியும் சரவணனும் இன்ப அதிர்ச்சியில் ஒருவரையொருவர் இமை கொட்டாமல் பார்த்தார்கள். கனகவல்லி மகனின் புஜத்தில் தட்டி அவனை இயல்புக்குக் கொண்டு வந்தார்.
“என்னம்மா?” என்றவனிடம் மெடிக்கல் ஷாப்புக்குப் போய் கர்ப்பத்தை உறுதி செய்யும் கிட் வாங்கி வருமாறு கூறினார்.
சரவணன் கிளம்பியதும் “நீ தண்ணி குடிம்மா” என்று மருமகளுக்கு அவர் தண்ணீரைக் கொடுத்தபடியே இரகசியமாக மாதவிடாய் சரியாக வருகிறதா என விசாரித்தார் அவர்.
அவளும் நாட்கள் தவறியதை அப்போதுதான் உணர்ந்தாள். மெதுவாகத் தனது வயிற்றில் கைவைத்துப் பார்த்தாள். உள்ளுக்குள் அத்துணை ஆனந்தம்!
“இட்லிப்பொடி வச்சு சாப்பிடும்மா. உன் அத்தைக்குக் கர்ப்ப காலத்துல சாம்பார் சேரல. இப்பிடித்தான் வாந்தி எடுப்பா. உனக்கும் அப்பிடித்தான் போல. இந்தா பூண்டு போட்டு இடிச்ச இட்லிப்பொடி” என்று அன்போடு மருமகளிடம் சாப்பாடு தட்டை நீட்டினார் ரத்தினவேலு.

தேவயானி சாப்பிட்டு முடிக்கவும் சரவணன் கிட்டுடன் வரவும் சரியாக இருந்தது. அதை மனைவியிடம் நீட்டியவனின் இதயத்துடிப்பு பயங்கரமாக இருந்தது.
மூவரும் கடவுளிடம் வேண்டுதல் வைக்க குளியலறைக்குள் போன தேவயானி திரும்பி வந்து கர்ப்ப உறுதி கிட்டில் இரண்டு கோடுகள் இருப்பதை வெட்கத்தோடு காட்டினாள். ஆனந்தத்தில் கண்ணீரே வந்துவிட்டது அவளுக்கு.
“முத்தாரம்மா என் மகன் வாழ்க்கைக்கு இன்னொரு அர்த்தத்தைக் குடுத்துட்ட.” ஆழியூரில் குடிகொண்டிருக்கும் முத்தாரம்மனின் ஆலயம் இருக்கும் திசையை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டார்கள் ரத்தினவேலுவும் கனகவல்லியும்.
இந்த இனிப்பானச் செய்தியை உடனடியாக கைலாசநாதன் – காமாட்சிக்கும் மொபைலில் தெரிவித்தார்கள். இருவீட்டுப் பெரியவர்களும் ஆயிரம் அறிவுரைகள் கூறினார்கள்.
இரவின் தனிமையில் கணவனின் தோளில் சாய்ந்து நிலாவை ரசித்தபடியே சிவன் கோவிலில் நடந்ததைக் கூறினாள் தேவயானி. கூடவே சுரேஷ் மூலமாகத் தெரிய வந்த விசயத்தையும்தான். சரவணன் அவளிடம் அந்த விவகாரத்தை மறைத்ததற்கு மன்னிப்பு வேண்டினான். கூடவே தன்னிடம் பவித்ரா காட்டிய வீடியோவைப் பற்றி மனைவியிடம் கூறிவிட்டான்.
“நீங்க என்னைச் சந்தேகப்படலையா?”
“நீயும் உன் காதலும் எனக்குச் சொந்தம்னு ஆனதுக்கு அப்புறம் நான் ஏன் சந்தேகப்படப்போறேன்?” என்று கேட்டுவிட்டுத் தேவயானியின் நெற்றியில் முத்தமிட்டான் சரவணன்.

“எனக்கு உங்களைப் பத்தி நல்லாவே தெரியும். நீங்க என் கிட்ட அன்னைக்கே இந்த விசயத்தைச் சொல்லிருக்கலாம். சொல்லியிருந்தா இன்னைக்குப் பவித்ராவ கோயில்ல வச்சு வாழ்த்துனதுக்குப் பதிலா ரெண்டு வார்த்தை நறுக்குனு கேட்டிருப்பேன்”
மனைவியின் நாசியை நிமிண்டிச் சிரித்தான் சரவணன். அவள் குரலே சொல்லியது அப்படி எல்லாம் அவள் செய்திருக்கமாட்டாள் என்பதை. உறவில் நம்பிக்கை அதிகமாகிவிட்டால் மூன்றாமவரின் எந்த முயற்சியும் நமக்குக் கோபத்தை வரவழைக்காது என்பதுதான் நிதர்சனம்.
மைசூர் மல்லியின் மணம் அந்த நந்தவனத்தை அழகாக்கிய இரவில் சரவணனின் வாழ்வெனும் நந்தவனத்தை அழகாக்கிய நறுமலரான தேவயானி அவனது மார்பில் சாய்ந்துகொண்டாள் அவனது காதலை வென்று, அவர்களின் மகவைத் தனது மணிவயிற்றில் சூல் கொண்டிருக்கும் கர்வத்தோடு!
இனிதே நிறைவுற்றது!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

