“யாரிடமும் பொய்யான வாக்குறுதியை அளிக்கக்கூடாது. நம்மால் காப்பாற்ற முடியாத வாக்கை ஏன் அளிக்க வேண்டும்? இம்மாதிரியான பொய்யான வாக்குறுதிகள் பெரும்பாலான சமயங்களில் நமக்குப் பிடித்தவர்களைத் தக்க வைத்துக் கொள்ள நான் அளிக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம். ஆனால் என்றேனும் ஒரு நாள் அந்த வாக்குறுதி பொய்க்கும் போது இரு பக்கமும் சேதாரம் அதிகமாக இருக்கும். நீங்கள் விரும்புபவர்களை வருத்த விரும்பவில்லை என்றால் உங்களுக்கிடையே ‘பொய்’ என்ற வார்த்தை எந்த ரூபத்திலும் வர விடாதீர்கள். பொய்மையும் வாய்மையிடத்து என்ற குறள் எல்லாம் வாழ்க்கைக்கு ஒத்து வராது. இனிப்பான பொய்யை விட கசப்பான உண்மை, பிரச்சனைகளின் தீவிரத்தைக் குறைக்கும். எனவே உங்களால் காப்பாற்ற முடியாத பொய் வாக்குறுதிகளை எந்நேரத்திலும் எவருக்கும் அளிக்காதீர்கள்!”
-ருத்ரதேவ்
டிஃபன் டாப், நைனிடால்…
மலை மீதிருக்கும் சமதளத்தில் வட்ட வடிவில் கற்களால் கட்டப்பட்டு கம்பியால் வேலியிடப்பட்டிருந்த டிஃபன் டாப் எனுமிடத்தில் நின்று சூரிய அஸ்தனமத்தைச் சூடான தேநீருடன் ரசித்துக்கொண்டிருந்தனர் ருத்ரதேவும் தக்ஷிண்யாவும்.
அவர்கள் நின்று கொண்டிருந்த உயரத்திலிருந்து கீழே பார்த்த போது அந்நகரின் கட்டிடங்கள் தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தது போல காட்சியளித்தன. எதிரில் இருந்த மலைமுகட்டில் கதிரவன் தனது ஆரஞ்சு வண்ண கதிர்களால் ஓவியம் தீட்டியதோடு கீழே இருந்த காடுகளையும் நகரத்தையும் கூட இலவச சேவையாக வண்ணம் தீட்டிவிட்டு மறையும் மும்முரத்தில் இருந்தான்.
‘டோரதி சீட்’ எனும் அவ்விடத்தில் சூரியோதத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் காண எப்போதும் சுற்றுலா பயணிகள் குவிந்திருப்பர். அன்று ஏனோ தக்ஷிண்யாவையும் ருத்ரதேவையும் தவிர அங்கே யாருமில்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அந்த இடத்திலிருந்து படிக்கட்டுகள் இறங்கி சென்று முடிந்த சமதளத்தில் ஒரு தாபா இருந்தது. அங்கே தேநீரும் உணவும் தயாரிக்கும் மணமும் நாசியைத் துளைத்து வயிற்றில் பசியை உண்டாக்கவே ருத்ரதேவ் தனக்கும் அவளுக்கும் சுடச்சுட தேநீர் வாங்கி வந்தான்.
அதை அருந்தியபடி தான் இருவரும் ஆதவன் அஸ்தமனமாகும் அற்புதக்காட்சியை ரசித்துக் கொண்டிருந்தனர்.
ஆதவன் மறைந்ததும் குளிர் தன் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்தது.
“ஆசை தீர ரசிச்சாச்சா? இப்ப கிளம்பலாமா? நிறைய தூரம் இறங்கணும் ருத்ரா” என்று அவ்விடத்தை விட்டு கிளம்ப மனமில்லாமல் நின்று கொண்டிருந்த ருத்ரதேவை விரட்டினாள் தக்ஷிண்யா.
அவனும் அரைமனதுடன் கிளம்பி வந்த வழியே அவளுடன் நடந்தான்.
மேலிருந்து கீழே செல்லும் ஒற்றையடி பாதை கற்களால் போடப்பட்டிருக்க அதன் ஓரங்களில் பாசி பச்சைவண்ண பார்டரைப் போல செழித்து வளர்ந்திருந்தது.
மலை மேலே என்பதால் அங்கிருந்த உயர்ந்த விருட்சங்களை தனது புகையால் மூட ஆரம்பித்திருந்தது பனி.
ஸ்வெட்டரைத் தாண்டி அவள் தேகத்தைத் தீண்டிப் பார்த்த குளிருக்கு வேலியிட முயன்று தோற்றவளாக கரங்களை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு புஜத்தை அவற்றால் தேய்த்தபடி நடந்தாள் தக்ஷிண்யா.
சுற்றி முற்றி வேடிக்கை பார்த்தபடி நடந்ததாலோ என்னவோ வழிப்பாதையில் கிடந்த கல் காதலுடன் தக்ஷிண்யாவின் காலை இடறி விளையாட தடுமாறி கீழே விழுந்தாள் அவள்.
ருத்ரதேவ் வேடிக்கை பார்த்தபடி நடந்ததால் அவள் விழப்போவதை கவனிக்கவில்லை. திடீரென “அம்மா” என்ற அலறல் கேட்க திரும்பிப் பார்த்தவன், பாதையில் விழுந்ததால் கரத்தில் ஒட்டியிருந்த இலை தழை கலந்த மண்ணை தட்டிவிட்டுக் கொண்டிருந்த தக்ஷிண்யாவைப் பார்த்ததும் என்னவோ ஏதோ என பதறி அவளைத் தூக்க ஓடினான்.
“பாத்து நடக்கக்கூடாதா?” என்றபடி அவளைத் தன் கரங்களால் தூக்க முயல
“நோ ப்ராப்ளம்… நானே எழுந்திருக்குறேன்” என்றபடி எழ முயன்றாள் தக்ஷிண்யா.
“ஒன்னும் பிரச்சனையில்ல மேடம்” என்றபடி அவளைத் தூக்கிக் கொண்டவன் நடக்க ஆரம்பித்தான்.
“இன்னும் கொஞ்சதூரம் போனதும் என்னோட வெயிட் தாங்காம தானா இறக்கி விடுவிங்க”
கிண்டலாய் கூறினாள் தக்ஷிண்யா. ருத்ரதேவ் மறுப்பாய் தலையசைத்தவன்
“இட்ஸ் அ கோல்டன் ஆப்பர்சூனிட்டி… இதை இழக்குறதுக்கு நான் என்ன முட்டாளா?” என்று கண்சிமிட்ட இப்போது அவள் தான் வாயடைத்துப் போனாள்.
கீழே விழுந்ததால் உண்டான சிராய்ப்பின் எரிச்சல் கூட அவளுக்கு இப்போது தெரியவில்லை. ருத்ரதேவின் அன்பான செய்கைகளும் காதல் பார்வையும் அதை மறக்கடித்துவிட்டது.
இருப்பினும் அவனுக்குச் சிரமத்தைக் கொடுக்க விரும்பாதவளாக பாதி வழியில் இறங்கிக் கொண்டவள் மீண்டும் நைனிடாலுக்கு வரும் வரை எதுவும் பேசவில்லை.
ஹோட்டலை அடைந்ததும் “குட் நைட்” சொல்லி விடைபெறப் போனவளை ஆச்சரியப்பார்வை பார்த்தவன்
“அதுக்குள்ள குட் நைட்டா? நான் ஒரு கேண்டில் லைட் டின்னருக்குப் ப்ளான் பண்ணிருந்தேனே” என்க
“அதுக்குலாம் வாய்ப்பே இல்ல… நாளைக்கு நைனாதேவி டெம்பிளுக்குப் போகணும்… ஞாபகம் இருக்குதா? போய் ரெஸ்ட் எடுங்க” என்று கறாராகச் சொல்லிவிட்டு தனக்கான அறைக்குள் புகுந்து கொண்டாள்.
ருத்ரதேவும் அவளது இந்த உரிமைப்பேச்சை ரசித்தபடி அவனுக்கான அறைக்குள் வந்தவன் சுடுநீரில் குளிக்கலாம் என்று எண்ணும் போதே மொபைல் சிணுங்கியது.
தொடுதிரையில் ‘மகா காலிங்’ என்று வரவும் அதை காதுக்குக் கொடுத்தவன் இளைய சகோதரன் மறுமுனையில் கூறிய தகவலில் அதிர்ந்தான்.
“இவ்ளோ நடந்திருக்கு… நீ ஏன் அப்பவே எனக்குக் கால் பண்ணல?”
மறுமுனையில் மகாதேவோ “நீங்க பிசியா இருக்குறப்ப டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நினைச்சேன்ணா… பட் அதுக்குள்ள அப்பாவும் மாமாவும் தாத்தாவோட சேர்ந்து ப்ராப்ளமை சரி பண்ணிட்டாங்க” என்று பிரச்சனை முடிந்து விட்டதென உறுதிபடுத்தினான்.
ஆனால் ருத்ரதேவால் தங்கள் குடும்பத்தில் நடந்த சம்பவத்தை நம்பவே முடியவில்லை.
“என்னால இப்பவும் அம்மா அத்தைய அடிச்சதை நம்ப முடியல மகா”
“என்னால கூட தான் அத்தை சர்வாவ அடிச்சதை நம்ப முடியலண்ணா… எல்லாருமே ஒரு கட்டத்துல பர்ஸ்ட் அவுட் ஆவாங்க… இன்னைக்கு அம்மாவும் அத்தையும் அந்த ஸ்டேஜ்ல இருந்திருப்பாங்க போல” என்றான் மகாதேவ்.
இருப்பினும் ருத்ரதேவ் வழக்கம் போல அத்தையை விட்டுக்கொடுக்கவில்லை.
“வேற எதுவும்னா அத்தை இவ்ளோ வயலண்டா பிஹேவ் பண்ணிருக்க மாட்டாங்க… அவங்களை இவ்ளோ கோவப்பட வைக்குறது ஒன்னே ஒன்னு தான்… சர்வா அதை செஞ்சது தப்பு தானே” என்றான்.
ஆனால் மகாதேவால் அவனது கூற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரவர் மனத்தாங்கல் அவரவருக்குத் தான். குழந்தைகள் என்ன செய்வர் என்பது அவனது கருத்து. அதை தமையனிடம் கூறியும் விட்டான்.
“ப்ச்… அவன் சின்னப்பையன்… அவனுக்கு அந்த போட்டோவோட வரலாறு தெரியுமா? பாவம்ணா அவன்”
சர்வானந்துக்காகவும் ருத்ரதேவின் மனம் இரக்கம் கொண்டது. இருப்பினும் முழுவதுமாக லலிதா மீது தான் தவறு என்று அவனால் சொல்ல முடியவில்லை.
“எனிவே, ப்ராப்ளம் சால்வ் ஆகிடுச்சுல்ல… அது போதும்… நான் திரும்பி வர்றப்ப அத்தைக்கும் அம்மாவுக்கும் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸை கொண்டு வரப்போறேன்… அதுக்கு அப்புறம் அவங்களே நினைச்சா கூட கோவத்தை இழுத்துப் பிடிச்சுட்டு இருக்க முடியாது” என்றான் பேச்சை மாற்ற விரும்பியவனாக.
மகாதேவுக்கும் அவனது எண்ணம் புரிந்து விட்டது.
“அது என்னண்ணா சர்ப்ரைஸ்?”
“வேற யார் உன்னோட அண்ணி தான்” என்றதும்
“அண்ணியா?” என அதிர்ந்தான் அவன்.
ருத்ரதேவ் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
“ஏன்டா இவ்ளோ ஷாக் ஆகுற? உனக்கு அண்ணினு ஒருத்தி வந்து தானே ஆகணும்” என்று அவன் அமர்த்தலாக கூற
“ஆமாண்ணா… பட் திடீர்னு… நீங்க மானிங் யாரோ ஒரு பொண்ணு கிட்ட பேசுனிங்களே, அவங்களா?” என்று ஆர்வமாக கேட்டான் அவனது தம்பி.
“யெஸ்… ஐ லவ் ஹெர்”
மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டான் ருத்ரதேவ். மறுமுனையில் மகாதேவோ அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் வாயைப் பிளந்தான்.
“என்னது? நீங்க லவ் பண்ணுறிங்களா?” என சற்று உரத்தக் குரலிலேயே கேட்டுவிட்டான். பின்னர் அவசரமாகத் தனது அறையை விட்டு வெளியே வந்து யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவன் “அண்ணா நீங்க நிஜமாவா சொல்லுறீங்க?” என்று கேட்க
“ஏன்டா நான் லவ் பண்ணக்கூடாதா?” என்று அதட்டலாக கேட்டான் அவனது தமையன்.
உடனே தயங்கியவன் “அது… வந்து… நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிசர்… உங்களுக்கு எப்பிடி லவ் வந்துச்சுனு…” என்று இழுக்கவும்
“ஸ்ட்ரிக்ட் ஆபிசரை கூட ஸ்வீட் லவ்வரா மாத்துன பெருமை உன் அண்ணிக்குத் தான் போகும் மகா… ஷீ இஸ் சஷ் அ டார்லிங்” என உருகினான் ருத்ரதேவ்.
அடுத்த நொடி “அவ்ஸ்” என்று மகாதேவ் அலறவும்
“ஏன்டா கத்துற?” என்று மீண்டும் அதட்டினான் ருத்ரதேவ்.
“என்னையே நான் கிள்ளிப் பாத்துக்கிட்டேன்ணா… ரஃப் அண்ட் டஃப் ருத்ரதேவா இது?” என அவன் வியக்கவும் ருத்ரதேவுக்குச் சிரிப்பு பீறிட்டது.
சற்று உரத்தக்குரலில் சிரித்து முடித்தவன்
“நானே தான்… என்ன பண்ணுறது? காதல் வைரஸால கடுமையா பாதிக்கப்பட்டிருக்குறேன்… அதுக்கு வாக்சின், மெடிசின் ரெண்டுமே உன் அண்ணி தான்… எவ்ளோ சீக்கிரம் அவளை மிசஸ் ருத்ரதேவ் ஆக்குறேனோ அவ்ளோ சீக்கிரம் நான் குணமாகிடுவேன்” என்றான்.
மகாதேவ் அண்ணனின் மாற்றத்தைக் கண்டு வியந்தவாறே
“நீங்க ரொம்ப ஸ்பீடா இருக்கீங்கண்ணா… பட் ஐ ரியலி ஹேப்பி ஃபார் யூ அண்ட் அண்ணி… அண்ணியோட நேம் என்ன?” என்று கேட்க
“தக்ஷிண்யா” என்றான் ருத்ரதேவ்.
அந்தப் பெயரைக் கேட்டதும் ஒரு கணம் அமைதியாகிவிட்டான் மகாதேவ். தயக்கத்துடன் “இந்த நேம்…” என்று இழுத்தவன் பின்னர் தமையனின் குரலில் இருந்த ஆர்வத்தால் சொல்ல வந்ததை பாதியில் நிறுத்திவிட்டான்.
“அவளும் ரொம்ப ஸ்ட்ரிக்ட் தான்… அவ குரல் அவ்ளோ ஸ்வீட்டா இருக்கும்டா… ஃபேமிலி கொஞ்சம் சரியில்ல… அவ வாழ்க்கையில இழந்த எல்லா சந்தோசத்தையும் மேரேஜுக்கு அப்புறம் நம்ம ஃபேமிலிக்கு வந்ததும் அவளுக்குக் குடுக்கணும் மகா… உனக்கு ஒன்னு தெரியுமா? அவளுக்கு நான் உன் கிட்ட கோவமா பேசுனதை பாத்து ஒரே ஆச்சரியம்… எனக்குக் கோவப்படக் கூட தெரியுமானு அப்பாவியா கேக்குறாடா”
எப்போதும் தான் உண்டு தன் வேலையுண்டு என இருக்கும் தமையன் காதலிப்பதும் காதலிக்காக உருகுவதும் மகாதேவிற்கு மலைப்பை உண்டாகினாலும் அவனுக்காக மெய்யாகவே சந்தோசப்பட்டான். கூடவே காதல் அவனது மனதில் மட்டுமன்றி குணத்திலும் உண்டாக்கிய மாற்றத்தை நகைச்சுவையாக சுட்டிக் காட்டினான்.
“அது என்னவோ ஸ்ட்ரிக்ட் சின்னப்பாவா இருக்குற ஆம்பளைங்களோட கோவம் எல்லாம் அவங்க லைஃப் பார்ட்னர் முன்னாடி கற்பூரமா கரைஞ்சு போயிடுது”
“என்னடா கிண்டல் பண்ணுறீயா?” என்று பொய்க்கோபத்துடன் ருத்ரதேவ் கேட்கவும்
“அண்ணா சும்மா சமாளிக்க ட்ரை பண்ணாதிங்க… என்னை ஒரு நாளைக்கு எத்தனை தடவை திட்டுவிங்க? நீங்க நிக்குற இடத்துல பத்து ஏ.சி மாட்டுனாலும் அனல் அடிக்கும்னு மாலினி சொல்லுவா… அப்பிடிப்பட்ட உங்களை, காதல் ரோமியோ ரேஞ்சுக்கு மாத்திடுச்சு… இது ஸ்வீட் எடுத்துக் கொண்டாட வேண்டிய மொமண்ட்” என்றான் அவன்.
கூடவே “நீங்க ஊட்டிக்குத் திரும்பி வர்றப்ப அண்ணியையும் அழைச்சிட்டு வாங்க… அதுக்குள்ள இங்க இருக்குறவங்களை நாங்க எப்பிடியாச்சும் சமாதானப்படுத்தி வைக்குறோம்” என்றவன் ருத்ரதேவிடம் இரவு வணக்கம் சொல்லிவிட்டு தனது அறைக்குள் கிடந்த சோபாவில் அமரவும்
“யாரை அண்ணினு சொன்ன மகா?” என்ற லலிதாவின் குரல் கணீரென வாயிலில் ஒலித்தது.
மகாதேவ் அமர்ந்த வேகத்தில் துள்ளிக் குதித்து எழுந்தவன் “நானா? நான் யாரை அண்ணினு சொல்லப் போறேன் அத்தை?” என்று படபடக்க
“நீ தான் சொன்ன… இதோ இப்ப தான்… யார் கிட்ட பேசிட்டிருந்த நீ?” என்று அவர் கேட்கவும் அவனது படபடப்பு சற்று அடங்கியது.
அப்படி என்றால் தான் பேசியது ருத்ரதேவிடம் என்று லலிதாவுக்குத் தெரியவில்லை. இதை இப்படியே சமாளிப்போமென்று எண்ணியபடியே
“என்னோட படிச்ச ஃப்ரெண்டோட அண்ணா கிட்ட தான் பேசிட்டிருந்தேன் அத்தை… அவருக்கு மேரேஜ் ஆகிடுச்சு… அதான் ஊட்டிக்கு வர்றப்ப நம்ம ரிசார்ட்ல தங்கணும்னு சொன்னேன்” என்று திக்கித் திணறி சொல்லி முடித்தான்.
ஆனால் லலிதா அவன் கூறியதை நம்பியது போல தெரியவில்லை.
“அப்ப யாரை சமாதானப்படுத்துறோம்னு சொன்ன?” என்று சந்தேகமாக கேட்டார் அவர்.
மகாதேவ் திருதிருவென விழிக்கவும் அவரது சந்தேகம் ஊர்ஜிதமாகிவிட “என்னடா என் கிட்ட எதையாச்சும் மறைக்கிறியா?” என்று அதட்டலாய் கேட்டார்.
அவனோ “அவரோடது லவ் மேரேஜ் அத்தை… அதான் அவங்க ஃபேமிலிய சமாதானம் பண்ணி வைக்குறோம்னு சொன்னேன்” என்றான்.
இப்போதும் அவனது பேச்சை லலிதா நம்பவில்லை. ஆனால் தமையனின் மைந்தனிடம் ஒரேயடியாக எகிற விரும்பாமல் இடத்தைக் காலி செய்தார். அன்று மதியம் சசிகலாவிடம் வாங்கிய அறை மறக்காதல்லவா?
அவர் சென்றதும் பெருமூச்சு விட்டபடி மீண்டும் சோபாவில் அமர்ந்தான் மகாதேவ். “ஓ மை காட்! எனக்கே அத்தைய சமாளிக்குறதுக்கு இவ்ளோ கஷ்டமா இருக்குதே, அண்ணா எப்பிடி அவரோட லவ்வுக்குச் சம்மதம் வாங்கப் போறாரோ?” என்று அங்கலாய்த்துக் கொண்டான் அவன்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


