“சிலர் நமக்கு நெருங்குன உறவா ஆன காரணத்தால வேற வழியில்லாம அவங்க பேச்சைக் கடனேனு கேட்டுச் சகிச்சிக்க வேண்டிய கட்டாயம் நம்ம எல்லாருக்கும் வாழ்க்கையில ஏதோ ஒரு கட்டத்துல வந்திருக்கும்… எப்படா இவங்க நம்மளை விட்டு விலகுவாங்கனு நம்ம காத்திருப்போம்… அவங்களோட ப்ரசன்ஸ் நம்ம லைஃப்ல இல்லனது ஆனதும் வரும் பாருங்க ஒரு நிம்மதி! அதுக்கு ஈடு இணை எதுவுமே இல்ல… ஹூம்! அப்பிடி சிலர் இல்லாத வாழ்க்கை உங்களுக்கு அமைஞ்சுதுனா யூ ஆர் லக்கி”
-அனுக்ரஹா
“ஹே ப்ரதீப்! ப்லீவ் மீ மேன்… உன்னைத் தவிர எனக்கு ஃப்ரெண்ட்ஸ்னு வேற யாரும் கிடையாது… நீ தானே சொன்ன, ஆல்கஹால் குடிக்கிறப்ப சொர்க்கம் போல ஃபீல் ஆகும்னு சொன்ன… ஆனா டாடி மேஜர் ஆகுறதுக்கு முன்னாடி நோ ட்ரிங்ஸ்னு சொல்லிட்டார்”
“லாஸ்ட் டைம் நம்ம போன ட்ரிப் சூப்பரா இருந்துச்சுல்ல… சோ ஸ்வீட் ஆப் யூ”
“என்னோட பர்த்டே அன்னைக்கு எனக்கு ஏதோ கிப்ட் தர்றேன்னு சொன்னல்ல… அதுக்காக நான் வெய்ட் பண்ணுறேன்”
இவை எல்லாம் மமிதா குரியனின் அழிக்கப்படாத வாட்சப் சாட்கள்! அவளுடன் பேசிய நபர் ப்ரதீப்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இதற்கு பிறகு வந்த சாட்கள் அனைத்திலும் இருவரும் ஏதோ ஒரு கருத்து முரண்பாட்டால் விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
மமிதாவைத் தவிர பிரதீபுக்கு இன்னொரு பெண் தோழி இருப்பதாக அவர்களின் சாட்கள் தெரிவித்தன. அவளுடன் அவன் அதிகநேரம் செலவிடுவதால் தன்னைக் கண்டுகொள்வதில்லை என்று மமிதா அவனிடம் சண்டையிட்ட சாட்கள் கூட இருந்தன.
அதற்கு பிறகு சில சாட்களில் நட்பை முறித்துக்கொள்ளலாமென மமிதா கூறியிருந்தாள். அதற்குக் காரணம் பிரதீபுக்கு இருந்த போதைப்பொருள் பழக்கம். அவனது புதிய தோழி அறிமுகப்படுத்திவிட்ட இப்பழக்கத்தை அவன் கைவிடுவதாக இல்லையெனத் தெரிந்ததும் நட்பை முறித்துக்கொள்ளும் முடிவுக்கு அவள் வந்திருக்கிறாள் என்பது புரிந்தது.
அவள் மீது பிரதீபுக்கு இருந்த ஒருதலைக்காதல் அவ்வளவு எளிதில் அந்த முடிவுக்கு அவனைச் சம்மதிக்கவைக்கவில்லை.
“ப்ளீஸ் மமி.. ஐ அம் சாரி… என்னால ஸ்டஃப் இல்லாம ஒருநாள் கூட இருக்க முடியாது… அதுக்காக உன் ஃப்ரெண்ட்ஷிப் வேண்டாம்னு என்னால ஒதுங்கவும் முடியாது… புரிஞ்சிக்க”
இவ்வாறு சில சாட்களில் கெஞ்சியிருந்தான். சிலவற்றில் அவளைத் திட்டியிருந்தான். இறுதியாகப் பேசிய சாட்களில் அவன் பேசிய தொனியில் மிரட்டல் மட்டுமே தெரிந்தது!
“நான் எவ்ளோ பொசசிவ்னு உனக்கு நல்லா தெரியும்… என்னை அவாய்ட் பண்ணாத மமி”
சில ஆடியோக்களும் அவன் பேசி அனுப்பியிருந்தான். ஒவ்வொன்றிலும் அவனது குரலில் அவ்வளவு கோபம் தெரிந்தது.
அனைத்தையும் கவனமாகக் கேட்டுப் பார்த்த பிற்பாடு ராகவர்தனும் ராதாகிருஷ்ணனும் அவனைக் கைது செய்யும் முடிவுக்கு வந்தார்கள். அதற்கான ஆணையைக் காவல் ஆணையரிடமிருந்து பெற்றுக்கொண்டு ஸ்ரீதருடன் சேர்ந்து ஒரு குழு மீண்டும் கேரளாவுக்கு விரைந்தது.
அவன் கைதானத் தகவல் ‘மெல்டிங் பாட்’ குழுவினருக்குத் தெரிய வந்தபோது யாராலும் அதிர்ச்சியை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. எப்படி மமிதாவைச் சிறுபெண்ணாக மட்டுமே அவர்களால் பார்க்க முடிந்ததோ அப்படி தான் பிரதீபையும் அவர்களால் சிறு பையன் என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்க முடிந்தது.
அவனைக் காவல்துறை கைது செய்திருக்கிறது என்றால் கட்டாயம் ஏதோ பெரிய காரியத்தைப் பண்ணியிருக்கிறான் என்று ஊகித்தார்கள்.
அவர்களின் ஊகத்தை மெய்யாக்குவது போல பிரதீப்பும் காவல்துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்திருந்தான்.
அவனுக்கு மமிதா மீது ஒருதலைக்காதல். அவளுக்கோ போதைக்கு அடிமையானவனிடம் நட்பு பாராட்டக்கூட விருப்பமில்லை.
இந்நிலை தொடர்ந்ததால் அவர்களிடையே இருந்த நட்பு கேள்விக்குறியானது.
பிரதீபின் குடும்பமே லோகநாதனின் தயவில் வாழ்ந்துகொண்டிருக்க, தனது பிள்ளைகளோடு அவனையும் தொழில் துறையில் வலம் வர வைக்க வேண்டுமென்ற எண்ணம் லோகநாதனுகும் இருந்தது.
அவனுடைய படிப்பில் ஆரம்பித்து பாக்கெட்மனி வரை அனைத்தும் அவருடைய பணமே!
இந்நிலையில் தான் ஒருமுறை மமிதாவைச் சந்திக்க பிரதீப் முயன்றபோது அவனுடைய போதைப்பழக்கத்தை லோகநாதனிடம் சொல்லிவிடுவேன் என அவள் மிரட்டியிருக்கிறாள்.
மாமாவின் காதுக்குத் தனது தவறான பழக்க வழக்கங்கள் போய்விட்டால் வசதியான வாழ்க்கை, பாதுகாப்பான எதிர்காலத்தை இழக்க நேரிடும் என்ற பயத்தில் மமிதாவைக் கொலை செய்ய முடிவு செய்தான் பிரதீப்.
துள்ளத் துடிக்க கொலை செய்ய அவன் ஒன்றும் தொழில்முறை கொலைகாரன் இல்லையே! அந்தப் பதின்வயது மூளைக்கு எட்டிய திட்டத்தை வைத்து பிறந்தநாளன்று அனைவரும் கலந்துகொண்ட பார்ட்டியில் யாருமறியாவண்ணம் அவர்களுக்கான மதுபானத்தை மொத்தமாக ஊற்றி வைத்திருந்த ‘ஒயின் செல்லார்’ வடிவ கொள்கலனின் போதைமருந்தைக் கலந்தான்.
அவனது திட்டமே மமிதாவின் மரணம் அளவுக்கதிகமான போதைமருந்து உபயோகத்தால் நிகழ்ந்ததெனக் காவல்துறையை நம்ப வைப்பதே!
பார்ட்டிக்கான அழைப்பு இல்லையென்றாலும் லோகநாதனின் மருமகன் என்ற உறவைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்தவன் மாமாவுடன் நல்லப்பையன் போல காட்டிக்கொண்டு அங்கு வந்திருந்த தொழிலதிபர்களுடன் உரையாடும் சாக்கில் யாருமறியாவண்ணம் போதைமருந்தை மொத்தமாக வைத்திருந்த மதுவில் கலந்துவிட்டு அமைதியாக அங்கிருந்து சென்றுவிட்டான்.
இதன் பின்னர் தான் மமிதாவின் வருகை, மெல்டிங் பாட் குழுவினரின் வருகை எல்லாம் அமைய யாரும் அவன் வந்து போனதை முக்கிய நிகழ்வாகவே கருதவில்லை.
மெல்டிங் பாட் குழுவினருடன் தனியே பேசிக்கொண்டிருந்த மமிதாவைக் கண்டவன் அவளைக் கொலை செய்ய கிடைத்த வாய்ப்பாக எண்ணி அவர்களுடன் பேசுவது போலக் காட்டிக்கொண்டு அங்கிருந்து அனுப்பிவைத்தான்.
மமிதாவுக்கு அப்போது அவனிடம் பேசும் விருப்பமில்லை. வலுக்கட்டாயமாக அவளைப் பிடித்து நிறுத்தியவன் போதையின் பிடியில் அவள் தடுமாறியதை உபயோகித்து, கையோடு கொண்டு வந்த போதைமருந்தை அவளது வாயில் திணித்தான்.
அவள் மறுக்க மறுக்க அளவுக்கதிகமான போதைமருந்தை அவளை உட்கொள்ள வைத்தவன் அவளுக்குப் போதை தலைக்கேறி உடல் வலிப்பு வந்தது போல உதறலெடுத்ததும் அப்படியே விட்டுவிட்டு ஓடினான்.
வரும் முன்னர் ஆப் செய்த சி.சி.டி.வியை இயக்குமாறு சி.சி.டி.வி கட்டுப்பாளரிடம் சொன்னவன் கற்றையாகப் பணத்தைத் திணித்துவிட்டு அங்கிருந்து ஓடி மறைந்தான்.
விசாரணையில் அவன் அனைத்து உண்மைகளையும் சொல்லிவிட வழக்கு கிட்டத்தட்ட முடியும் தருவாயை நெருங்கியது.
பின்னர் என்ன?
பிரதீப் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டான். அவன் மீதானக் குற்றம் தகுந்த ஆதாரங்களுடனும், அவனை அங்கு நேரில் கண்ட சாட்சிகள் கொடுத்த வாக்குமூலத்துடனும் நிரூபிக்கப்பட்டது.
நீதிபதி கொடுத்த தீர்ப்பைக் கேட்டதும் மமிதா கொலை வழக்கில் சந்தேகப்படுவோர் பட்டியலில் இடம்பெற்ற அனைவருக்கும் நிம்மதி பெருமூச்சு!
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்று மொத்த மெல்டிங் பாட்டும் ஆசுவாசமுற்றார்கள்.
இருப்பினும் மகளை இழந்த முதலீட்டாளருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக முகுந்தனும் அனுக்ரஹாவும் கேரளாவுக்குப் போய் தாமஸ் குரியனைச் சந்தித்தார்கள்.
அந்த மனிதருக்கு மகளது கொலைவழக்கால் ‘தான் பேசுபொருள்’ ஆகிவிட்டோமே என்ற கவலை தான் அதிகமாக இருந்தது.
நமது தேவைக்கேற்ற பணம் நம்மிடமிருக்கும் வரை தான் நாம் அந்தப் பணத்தைக் கட்டுப்படுத்துகிறோம். எப்போது நமது தேவையைத் தாண்டிய பணம் நம்மிடம் குவியுமோ அப்போது அந்தப் பணம் தான் நம்மைக் கட்டுப்படுத்தும். நமது இயல்பை மாற்றி ‘என்னை இன்னும் இன்னும் சம்பாதி’ என்ற வெறியை நமக்குள் ஏற்றும்.
பந்தபாசம், இயல்பான ஆதுரம் இதெல்லாவற்றையும் நம்மிடமிருந்து உறிஞ்சியெடுத்துவிடும்.
நேசமற்ற, அன்பற்ற கூடுகளாய்த் திரியும் நமக்கு உறவுகளின் இழப்போ, அந்த இழப்பு தரும் வேதனையோ கூட ஒரு பொருட்டாகத் தெரியாதவண்ணம் ‘அனஸ்தீசியா’ போலச் செயல்படும் வீரியம் கொண்டது பணவெறியும் அதிகார தாகமும்.
இந்நிலையில் இருக்கும் தாமஸ் குரியனிடம் என்ன பேசினாலும் அவரது மண்டையில் உறைக்கப்போவதில்லை என்று அமைதியாய்க் கிளம்பி சென்னைக்கு வந்துச் சேர்ந்தார்கள் முகுந்தனும் அனுக்ரஹாவும்.
எல்லா கலவரமும் அடங்கி அலுவலகம் வந்தவளுக்கு முகுந்தனின் அலுவலக அறையில் அவனுடன் இலகுவாகப் பேசிக்கொண்டிருந்த ராகவர்தனைப் பார்த்ததும் அதிர்ச்சியில் கண்கள் இமைக்கவில்லை.
“ஹேய் அனு! கமின்”
முகுந்தன் அழைத்த பிற்பாடு உள்ளே வந்தவள் ராகவர்தனைக் குற்றம் சாட்டும் விதமாகப் பார்த்த நொடியில் முகுந்தனுக்கு ஏதோ முக்கியமான அழைப்பு வந்தது மொபைலில்.
“எக்ஸ்யூஸ் மீ!”
அவன் வெளியேறிய அடுத்த நொடி எரிச்சலை மறைக்காமல் காட்டினாள் அனுக்ரஹா.
“கேஸ் முடிஞ்சதுக்கு அப்புறமும் ஏன் இங்க வந்து உக்காந்திருக்கிங்க? இத்தனை நாள் எங்களை விசாரணைங்கிற பேர்ல ஹராஸ் பண்ணுனது பத்தலையா?”
ராகவர்தன் எதற்கும் அசரவில்லை.
“என்னைத் தவிர வேற யார் உங்களை விசாரணை பண்ணிருந்தாலும் இந்த மாதிரி டயலாக் பேசுறதுக்கான தெம்பு உன் உடம்புல இந்நேரம் இருந்திருக்காது அனுக்ரஹா… உன் கிட்ட இருந்து உண்மைய வாங்குறோம்ங்கிற பேர்ல செதில் செதிலா பிய்ச்சு எடுத்திருப்பாங்க… அப்பிடி எதுவும் செய்யாம உங்க யாரையும் பிசிக்கலா டார்ச்சர் பண்ணாததுக்கு நீ எனக்குத் தேங்க்ஸ் சொல்லிருக்கணும்”
“அதுக்குப் பதிலா மெண்டல் டார்ச்சர் குடுத்ததை மறந்துட்டிங்க போல”
ராகவர்தனின் கண்கள் அவளை அளவிடவும் சிடுசிடுவென்ற முகம் கொஞ்சம் திகைப்புக்குத் தாவியது.
“கொலைகாரன் என்னெல்லாம் பண்ணி தப்பிக்க பார்ப்போனோ அதெல்லாம் உங்க குரூப் பண்ணுனிங்க தானே… அப்ப உங்களைப் பொன்னே பூவேனு விசாரிக்கணுமா? விசாரணைக்கு ஒத்துழைப்பு குடுத்திருந்தா என்னோட சந்தேகம் எப்பவோ நிவர்த்தி ஆகிருக்கும்… மோர் ஓவர், குடிச்சிட்டுப் போதைல மட்டை ஆகுறவங்களை என்னால அப்பாவினு நம்ப முடியாது”
அனுக்ரஹா முகம் கோபத்தில் சிவக்க ஏதோ சொல்ல வர அதற்குள் அறைக்குள் வந்து சேர்ந்தான் முகுந்தன்.
வந்தவன் முகமெல்லாம் சிரிப்பாக “சார் நம்ம குக்கிங் ஷோல கெஸ்டா கலந்துக்க வந்திருக்கார் அனு” என்று சொல்ல அவளோ எனக்கென்ன வந்தது என்பது போல் தோள்களைக் குலுக்கினாள்.
“இன்னைக்கு குக்கிங் ஷோல அவர் கூட சமைக்கப்போறது நீ தான்”
அனுக்ரஹாவின் விழிகளில் கலப்படமற்ற எரிச்சல்!
“அண்ணா”
அவள் அழுத்தமாக அழைத்த விதத்திலேயே என்ன நினைக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்ட முகுந்தன் “சாரோட விஷ் இது” என்று சொல்லிவிட பொருமலோடு அவனுடன் வீடியோ ஷூட் செய்யும் இடத்துக்கு விரைந்தாள் அனுக்ரஹா.
அவளது கண்களிலிருந்த எரிச்சலை யார் கண்டுகொண்டார்களோ இல்லையோ பிரபாவதி கண்டுகொண்டாள்.
“ஏன்டி பாயிலிங் ஸ்டேஜ்ல இருக்க?”
“நான் பர்ஸ்டிங் ஸ்டேஜ்ல இருக்கேன்டி… விட்டா வெடிச்சிருவேன்… அவ்ளோ கடுப்பு இவன் மேல”
பிரபாவதியின் காதுகளில் தனது கடுப்பைக் காட்டினாள் அவள்.
“உஷ்! இப்ப அவர் நம்ம கெஸ்ட்… டேமேஜ் கண்ட்ரோலுக்காக நாங்க யோசிச்ச ஐடியா இது… நம்மளை பத்தி அரசல் புரசலா பேசுற சில நியூஸ் சேனல்கள், யூடியூப் சேனல்களுக்கு ஏ.சி.பி நம்ம சேனல் குக்கிங் ஷோக்கு கெஸ்டா வந்த நியூஸ் பரவுச்சுனா இத்தனை நாள் நம்மளைப் பத்தி அவங்க பேசுனது எல்லாம் வீண் வதந்திங்கிற மாதிரி ஆகிடும்… கொஞ்சம் கோ-ஆப்ரேட் பண்ணு அனு… என் செல்லக்குட்டில்ல நீ”
“மண்ணாங்கட்டி”
சிடுசிடுத்தவள் “அனு நீ ரெடியா?” என்று வித்யூத் கேமராவை செட் செய்தபடி கேட்கவும் செயற்கை புன்னகையை ஒட்டவைத்துக்கொண்டாள்.
அவளது சிடுசிடுப்பு, எரிச்சல், விருப்பமின்மை எதுவும் ராகவர்தனின் விழிகளுக்குத் தப்பவில்லை என்பது கூடுதல் தகவல்!
அன்று என்ன சமைக்கலாமென முன்னரே ‘சோசியல் மீடியா டீம்’ முடிவு செய்திருந்தார்கள்.
‘கோகனட் மில்க் வெஜிடபிள் ஸ்டூ பாஸ்தா’
பாஸ்தாவுக்கான சாஸுக்குப் பதிலாக தேங்காய்ப்பாலில் காய்கறிகளை வேக வைத்து ஸ்டூ செய்து அந்த ஸ்டூவில் பாஸ்தா செய்வது என்று அவர்கள் சொன்னதும் அனுக்ரஹாவின் விழிகளில் பிரகாசம்!
அவர்களின் யூடியூப் சேனல் ஷோக்களில் கெஸ்டுகளும் சின்ன சின்ன வேலைகள் செய்வார்கள்.
அதை சாக்காக வைத்து ராகவர்தனை வேலை வாங்கலாமென அவள் தீர்மானித்துவிட்டாள்.
தங்களை அவன் படுத்திய பாட்டுக்காகச் சின்ன பழிவாங்கல்! இந்தளவுக்குத் தான் அவளால் பழிவாங்கவும் முடியும்.
“சார் அந்த உருளைக்கிழங்கை கழுவி டைஸ் போல வெட்டுங்க”
“கேரட்டை வட்டமா வெட்டுங்க சார்… ரொம்ப தடிமனா வெட்டுறிங்க… ஐயோ இது கூட தெரியாதா உங்களுக்கு?”
“பாஸ்தா வெந்துடுச்சானு பாருங்க”
இப்படி குட்டி குட்டி ஏவல்கள்! அதில் அவளுக்கு ஒரு ஆனந்தம்!
அதிலும் ராகவர்தனின் கண்ணோரங்கள் எரிச்சலில் சுருங்குவதைக் காணும்போது அத்துணை திருப்தி!
அவனும் அனுக்ரஹா வேண்டுமென்றே தன்னை எரிச்சலூட்டுவதை உணர்ந்ததால் முடிந்தவரை அமைதியாக இருப்பது போல காட்டிக்கொள்ள எவ்வித ரசாபாசமும் இல்லாமல் ‘கோகனட் மில்க் வெஜிடபிள் ஸ்டூ பாஸ்தா’ சமைத்து முடிக்கப்பட்டது.
நிகழ்ச்சி முடிவடைந்ததும் முகுந்தனோடு சேர்த்து மொத்த ‘மெல்டிங் பாட்’ குழுவிடமும் விடைபெற்ற ராகவர்தன் அனுக்ரஹாவிடம் மட்டும் பேசாமல் போனது அங்கிருந்த யாருக்கும் வித்தியாசமாகத் தெரியவில்லை. “நீ கலாய்ச்சதுல ஏ.சி.பி கடுப்பாயிட்டாரு” என்று ஷாம் சொன்னதுதான் அங்கிருந்த அனைவரின் எண்ணமும்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


