“என்னை உதறிச் சென்றவள் மீண்டும் என் முன்னே நிற்கிறாய், உரிமையாய் என் நெஞ்சில் மீண்டும் சாய்ந்திருக்கிறாய். தள்ளி வைக்கவும் முடியாமல், தழுவிக்கொள்ளவும் பயந்து, என் காதலுக்கும் காயத்திற்கும் நடுவே நான் உயிரோடு எரிகிறேன்!”
–நிலவன்
தந்தையின் முன்னே கைகட்டித் தலைகுனிந்து நின்றான் பிரகாஷ். பூபேந்திரனின் முகத்தில் அப்படியொரு அதிருப்தி. அவருக்கும் மைந்தனுக்கும் காபி கொண்டுவந்து கொடுத்த விஜயாவோ கணவரிடம் நைச்சியமாகப் பேச்சை ஆரம்பித்தார்.
“அவன் இப்ப என்ன பண்ணிட்டான்? காதலிச்சிருக்கான். அவ்ளோதானே? அவன் விரும்புன பொண்ணை அவனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிடுவோமே. நமக்கு இருக்குறது ஒரே ஒரு ஆம்பளைப்புள்ளை. அவன் ஆசைப்பட்ட வாழ்க்கையைச் சந்தோஷமா வாழ்ந்தாதானே நமக்கும் நிம்மதி?”
பிரகாஷ் தலையைக் குனிந்தபடி நின்றவன் “நிலா ரொம்ப நல்ல பொண்ணுப்பா. ரொம்பப் பக்குவமானவளும்கூட. தேவையில்லாம எதுக்கும் அடம் பிடிக்கமாட்டா. பெரியவங்களை மதிக்கத் தெரிஞ்சவ. இதெல்லாம் பாத்துத்தான் அவளை நான் காதலிச்சேன்” என்று சொல்ல
“வாயை மூடு! வீட்டுல வயசுக்கு வந்த பிள்ளை இருக்குறப்ப அண்ணன்காரன் பொறுப்பில்லாம காதல் கீதல்னு வந்து நின்னா பொட்டப்புள்ளை மனசும்தானே கெட்டுப்போகும்? அவளை வச்சுக்கிட்டு உனக்குக் கல்யாணம் பண்ணுனா ஊரு உலகம் சிரிக்காது?” என்று எரிந்துவிழுந்தார் பூபேந்திரன்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரகாஷ் சொன்னான் என்று அவர்களின் வீட்டுக்கு வருகை தந்த அவனது காதலியின் தந்தையும் சகோதரனும் சொன்ன செய்தி பூபேந்திரனை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. மைந்தனிடம் தொழிலைக் கொடுத்தால் அவன் இன்னும் உயரத்துக்கு அதைக் கொண்டுசெல்வான் என்ற நம்பிக்கையில் காடு கரை எனப் பார்த்துக்கொண்டிருந்த பூபேந்திரனுக்கு அவன் காதலில் விழுந்ததும், அவனுக்காக அவன் காதலித்த பெண் தற்கொலைக்கு முயன்றதும் மாபெரும் அதிர்ச்சி.
பிரகாஷ் தலையை நிமிர்த்தினான்.
“எனக்கு நிலாவைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கிற எண்ணமில்லப்பா. அவளுக்கு இப்ப இருபத்தாறு வயசு ஆகுது. அவங்க வீட்டுல வரன் பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. நான் நியதிக்காக லேட் பண்ணுனா நிலாவை மறந்துட்டுத்தான் வாழணும். நியதிக்கு இப்பதான் இருபதாகுதுப்பா. அவளுக்கு எப்ப கல்யாணம் ஆகி நானும் நிலாவும் சேருறது?”
பூபேந்திரன் யோசனையில் ஆழ்ந்தார். விஜயாவுக்கோ மகனின் திருமணத்தை அவன் விரும்பிய பெண்ணோடு முடித்துவிடும் ஆர்வம்.
“பேசாம எங்க அண்ணனை வரச் சொல்லுவோம்ங்க. அவர் மகனுக்குப் படிப்பு முடிஞ்சு அவரோட சூப்பர் மார்க்கெட்டைத்தானே பாத்துட்டிருக்கான். அவனை நம்ம நியதிக்குக் கல்யாணம் பண்ணி வச்சிடலாம்” என்றார் அவர்.
பூபேந்திரன் நம்ப முடியாத பாவனையோடு மனைவியைப் பார்த்தார். அவரது மகள் நியதி இருபது வயதாகும் சிறுபெண். இப்போதுதான் இளங்கலை முடித்திருக்கிறாள். உடனே திருமணம் என்றால் நன்றாகவா இருக்கும்? இருபது வயதில் இந்தக் காலத்தில் யார் திருமணம் செய்துவைக்கிறார்கள்? முதலில் நியதிக்கே இதில் விருப்பம் இருக்குமோ என்னவோ? அவள் படிப்பை விரும்பும் பெண். சி.ஏ படித்து ஆடிட்டர் ஆகவேண்டும் என்ற கனவோடு நடமாடும் பெண். ஃபவுண்டேஷனை நல்லபடியாக எழுதிவிட்டுச் சென்னையில் ஒரு பெரிய ஆடிட்டரிடம் வேலைக்குச் சேர்வதற்காக விண்ணப்பிக்கப் போவதாகச் சொல்லிக்கொண்டிருந்தாள்.
அவளைப் போய் விஜயாவின் தமையன் மகனுக்கு மணமுடித்துவைத்தால் மனம் விட்டுப்போகாதா மகளுக்கு?
ஆனால் விஜயாவோ வேறு மாதிரி யோசித்தார்.
“என்னைக்கு இருந்தாலும் அவ இன்னொரு வீட்டுக்குப் போகவேண்டியவ. அதைக் கொஞ்சம் சீக்கிரமா செய்யப்போறோம். இதுல என்ன இருக்கு?”
“நியதிக்குக் கல்யாணம் செய்ய இப்ப விருப்பமானு கேக்க வேண்டாமா?”
“பொம்பளைப்புள்ளைகிட்ட கேட்டுத்தான் கல்யாணம் செய்யணும்னு என்ன அவசியம்? அவளுக்கு எது நல்லதுனு நமக்குத் தெரியாதா? நாம சொன்னா அவ மணமேடையில வந்து உக்காரணும். அதுதான் என் வளர்ப்புக்குப் பெருமை?” என்று பிடிவாதமாய் அவர் சொல்லவும் ஆயாசமாக இருந்தது பூபேந்திரனுக்கு.
விஜயா மகனின் விஷயத்தில் காட்டும் பெருந்தன்மையை எப்போதுமே மகளின் விஷயத்தில் காட்டியதில்லை. காரணம் கேட்டால் இன்னொரு வீட்டுக்குச் செல்லும் பெண்ணைச் செல்லமாக வளர்த்தால் போகிற இடத்தில் நம் பெயரைக் கெடுத்துவிடுவாள் என்பார்.
பெண் என்றால் அடக்கமாக இருக்கவேண்டும். பெற்றோரின் வளர்ப்பைக் கேள்விக்குறியாக மாற்றும் எந்தச் செயலிலும் ஈடுபடக்கூடாது. உடை, உணவு, உறவுகளை அணுகும் முறை, கையில் புழங்கும் பணம் என அனைத்திலும் கட்டுப்பாடு உண்டு நியதிக்கு.
ஆனால் பிரகாஷுக்கோ முழு சுதந்திரம். அவன் நினைத்தால் இப்போதுகூட நிலாவை மணமுடித்துக்கொண்டு வரலாம். விஜயா மறுப்பேயின்றி ஆரத்தி கரைத்துச் சுற்றுவார். அந்த அளவுக்கு ஆண்பிள்ளை மீதான அதீத கர்வம் அவருக்கு. அதனாலேயே நியதி அவருக்கு வெறும் பொறுப்பு மட்டுமே!
சமயத்தில் இந்த அணுகுமுறையைப் பூபேந்திரன் அதிருப்தியோடு கேள்வி கேட்டிருக்கிறார். அப்போதெல்லாம் ‘செல்லம் கொடுத்துப் பெண்பிள்ளையைக் கெடுத்துவிடாதீர்கள்’ என்ற பதிலே விஜயாவிடமிருந்து வரும்.
“பிரகாஷ்தான் நம்மளைக் கடைசி காலத்துல பாத்துக்கப்போறான். அவன்தான் நமக்கு வாரிசு. நியதிக்கு என்ன? நாளைக்கே நாம வசதியான குடும்பத்துல ஒருத்தனைப் பாத்துக் கட்டிவச்சா போதாதா? அதுவரைக்கும் நம்மளை யாரும் குறை சொல்லாதபடி அவ நடந்துக்கணும். அதுக்குத்தான் அவளுக்கு இவ்ளோ கட்டுப்பாடு. பொம்பளைப்புள்ளைய அப்பிடித் தண்ணி தெளிச்சுவிட்ட மாதிரி வளக்க முடியாதுங்க. காலம் கெட்டுக்கிடக்குது. அவ நம்ம மகள். கோயில் மாடு மாதிரி இஷ்டத்துக்குத் திரினு அவுத்துவிட முடியாது”
இதற்கு மேல் என்ன பேச முடியும் பூபேந்திரனால்? அதே நேரம் நியதியும் விஜயா சொன்னால் பெரும்பாலான நேரங்களில் தலையாட்டிக் கேட்டுக்கொள்வாள். பதின்வயதின் தாக்கத்தால் சில நேரங்களில் எதிர்த்துப் பேசி விஜயாவிடம் திட்டும் அடியும் வாங்கிய வரலாறும் உண்டு.
‘முருங்கையை ஒடிச்சு வளக்கணும், பிள்ளையை அடிச்சு வளக்கணும்’ என்று அதற்கும் ஒரு நியாயம் கற்பிப்பார் விஜயா.
இப்போது பூபேந்திரனுக்கு மனைவியின் பேச்சுக்குத் தலையாட்டுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. மனைவியின் முகம் சுணங்கினால் வீட்டின் நிம்மதியும் அமைதியும் கெட்டுப்போகும். அதனால் அவள் என்ன சொன்னாலும் சரியென்று விடுவோமெனச் சராசரி குடும்பத்தலைவராய் ஒதுங்கிக்கொள்வார். இப்போதும் அப்படியே!
மறுநாள் காலையில் விஜயாவின் சகோதரர் சந்தானபாரதி அங்கே வந்து நிற்கவும் திருமணப் பேச்சுவார்த்தை ஆரம்பித்தது.
“என் மகன் முரளி நியதியைத் தங்கச்சி மாதிரிதான் நினைக்குறான் மாப்பிள்ள. அத்தை மகளைக் கல்யாணம் பண்ணுறது எல்லாம் ஓல்ட் ஃபேஷனாம். என்னத்த சொல்ல?” என அவர் அங்கலாய்க்கையில் விஜயா கையில் காபி நிரம்பிய எவர்சில்வர் தம்ளர்கள் அடங்கிய ட்ரேயோடு வந்தார்.
“அத்தை மகள் எப்பிடித் தங்கச்சி ஆவாளாம்? நாளைக்கே கழுத்துல தாலி கட்டுனா பொண்டாட்டியா தெரிவா. நீங்க காபி எடுத்துக்கோங்கண்ணே”
“அதில்ல விஜயா…”
சந்தானபாரதி காபி தம்ளரை எடுத்துக்கொண்டபோது “மாமா” என்று ஓடிவந்தாள் நியதி. அவளைக் கண்டதும் சந்தானபாரதியின் வதனம் மலர்ந்தது.
“வாடா வாடா” என்று கைநீட்ட அவர் அருகே வந்து அமர்ந்துகொண்டாள் அவள்.
காட்டன் குர்தியும் பலாஸோவும் அணிந்திருந்தாள். விஜயா காட்டிய கண் ஜாடைகள் எதையும் கண்டுகொள்ளாமல் தாய்மாமாவிடம் மொக்கை போட ஆரம்பித்தாள் அவள்.
“நல்லா படிக்குறியா?”
“ம்ம்! ஃபவுண்டேஷன்ல நல்ல மார்க் வாங்கிருக்கேன் மாமா. அடுத்து இன்டர்மீடியட்டுக்கு அப்ளை பண்ணணும். ஆர்டிக்கிள்ஷிப் போகணும்”
“அடடா! என் மருமகள் பெரிய படிப்பு படிக்க எவ்ளோ ஆர்வமா இருக்குறா? அப்பிடியே எங்கப்பா மாதிரி” என்று சந்தானபாரதி சிலாகிக்க
“மருமகள்னு வாயால சொன்னா ஆச்சா? உன் மகனுக்குக் கட்டிவச்சு உங்க வீட்டோட மருமகளா கூட்டிட்டுப்போனா அவளும் சந்தோஷப்படுவா. நீங்களும் உரிமையா அவளை மருமகள்னு கூப்பிட்டுக்கலாம்” என எடுத்துக்காடுத்த விஜயாவின் கண்கள் மகளைக் குற்றம் சாட்டின.
ஏன் என்று அவளுக்குப் புரியவில்லை. புரிந்தாலும் ஏன் காட்டிக்கொள்ளப்போகிறாள்? அவளது தோழியர் அனைவரும் வாழும் விதத்துக்கும் அவள் இந்த வீட்டில் நடத்தப்படும் விதத்துக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் என அவளுக்குப் புரியத் தொடங்கியது பதினைந்து வயதில்.
அன்றிலிருந்து அன்னையின் கட்டுப்பாடுகளைக் கேள்வி கேட்க ஆரம்பித்திருந்தாள் அவள். அதற்காக அடியும் திட்டும் வாங்கினாலும் அவளுக்கு எதிர்த்துக் கேள்விகேட்கையில் அன்னையின் அதிகாரத்தை நோக்கிக் குரல் எழுப்பியதாக ஒரு கர்வம் வரும். இப்போதும் அப்படியே!
விஜயாவின் குறிப்புச் சுட்டல்கள் யாவும் வீணாகச் சந்தானபாரதியும் பிரகாஷ் – நிலா திருமணத்துக்குப் பச்சைக்கொடி காட்டுங்கள் என வலியுறுத்தினார் பூபேந்திரனிடம்.
“தங்கச்சி இருக்குறப்ப அண்ணனுக்குக் கல்யாணம் பண்ணிவச்சா ஊருக்குள்ள ஒரு மாதிரி பேசமாட்டாங்களா மாப்பிள்ள?” எனத் தயங்கினார் பூபேந்திரன்.
“அதுக்குத்தான் நியதிக்கு முரளியைக் கேட்டேன்ணே” – விஜயா.
அடுத்த நொடி நியதியின் முகம் மாறியது. அவள் படிக்க விரும்புகிறாள். அது தெரிந்தும் திருமணம் செய்துவைக்க அன்னை முடிவெடுக்கிறார் என்றால் அவளது படிப்பை, அவளது ஆசையை அவர் மதிக்கவில்லை என்றுதானே அர்த்தம்.
“அந்தப் பேச்சை விடு விஜயா. முரளி ஒரு முடிவு எடுத்துட்டான்னா அதை மாத்திக்கமாட்டான். எனக்கு நியதி மகள் மாதிரிதான். இங்க பாருங்க மாப்பிள்ள! ஊரான் பேசுவான்னு நம்ம பிள்ளைங்க வாழ்க்கையை நாசமாக்கக் கூடாது. பிரகாஷுக்கு அந்தப் பொண்ணையே பேசி முடிங்க. நல்ல குடும்பம்தான் அம்பாசமுத்திரத்துல. உழைப்பாளிங்க அப்பாவும் மகனும். அந்தப் பொண்ணும் படிச்சிட்டு வீட்டுல சும்மா இருக்காம வேலைக்குப் போகுது. அவங்கம்மா அதிர்ந்துகூடப் பேசாதவங்கனு உன் மதினி சொல்லுவா. அவங்களுக்கும் நமக்கும் ஒரே குலதெய்வம் வேற.”
சந்தானபாரதியின் உறுதி விஜயாவையும் பூபேந்திரனையும் அசைத்துவிட்டது.
“சரிங்க மாப்பிள்ளை. நான் அவங்க வீட்டுக்குப் போன் பண்ணி முறைப்படி பொண்ணு பாக்க வர்றது பத்தி பேசிடுறேன்”
“சீக்கிரம் கல்யாணச் சாப்பாடு ரெடியாகுதுனு சொல்லுங்க. ரொம்ப சந்தோஷம்”
மனநிறைவோடு எழுந்த சந்தானபாரதி அன்போடு விடைபெற்றார்.
‘நல்லவேளையாகத் திருமணத்தில் இருந்து தப்பித்தோம்’ என நியதி குதூகலித்த அடுத்த நொடியில் அவள் கன்னத்தில் ‘பளார்’ என அறை விழுந்தது.
விஜயாவின் கரம் அவளது கன்னத்தில் வேகமாய்ப் பாய்ந்ததில் வரித்தடங்கள் உருவாகக் கண்ணீர் ததும்பிவிட்டது நொடிக்குள் அவளது விழிகளில்.
“என்ன விஜயா இது?” என பூபேந்திரன் ஆரம்பிக்கவும் அவரைத் தீயாய் முறைத்தார் விஜயா.
“உங்க மகள் இருக்குற ஒழுங்குக்குச் செல்லம் ஒண்ணுதான் பாக்கி” என்று காய்ந்தவர் நியதியிடம் திரும்பினார்.
“என்ன ட்ரெஸ் இது? ஹான், எத்தனை தடவை சொல்லிருக்கேன், வீட்டுக்கு ஆளுங்க வர்றப்ப ஷால் போடுனு. மாடு மாதிரி வளர்ந்தா மட்டும் போதுமா? ட்ரெஸ் ஒழுங்காப் பண்ணமாட்டியா? முதல்ல ஆம்பளைங்க பக்கத்துல இப்பிடித் தொப்புனு உக்காந்து பேசலாமா ஒரு பொட்டப்புள்ளை? என் அண்ணன் ஒண்ணும் நினைக்கமாட்டாரு. ஆனா இதே பழக்கம்தானே நாளைக்கு யார் வந்தாலும் உக்காரச் சொல்லும்”
விஜயாவின் கணீர் குரல் கோபமாய் உயர நியதி கண்ணீரோடு அன்னையை நோக்கினாள்.
“இந்த ட்ரெஸ்ஸுக்கு ஷாலே கிடையாது.” அவள் சொன்னதுதான் தாமதம் இன்னொரு அறை விழுவதற்கான சூழல் உருவாகப் பூபேந்திரன் இடையில் புகுந்து மனைவியின் கையைப் பிடித்துக்கொண்டான்.
“என்ன விஜயா இது? அதுதான் சின்னப்பிள்ளை பேசுதுனா நீ எல்லாத்துக்கும் கை ஓங்குற. ஒரு வயசுக்கு மேல பிள்ளைங்களை அடிக்கக் கூடாதும்மா”
விஜயா கடுப்போடு கையை உருவிக்கொண்டார்.
“இப்பிடி எதிர்த்துப் பேசுனா வேடிக்கை பாக்கணுமா? நாளைக்குப் புருஷன்கிட்டயும் இப்பிடி எதிர்த்துப் பேசுவா. அப்ப ‘அம்மைக்காரி வளத்த லட்சணத்தைப் பாரு’னு எல்லாரும் என்னைக் கேவலமாப் பேசுவாங்க. அதுதானே உங்க ஆசை? இப்பிடி எடுத்தெறிஞ்சு பேசுற மகளைப் பெத்ததுக்கே இந்தக் குதி குதிக்குறீங்க. உங்களுக்கெல்லாம் அடக்கமான மகள் வாய்ச்சிருந்தா பூமியில நடக்காம வானத்துல பறப்பீங்க போல இருக்கே?”
கோபமாய்க் கணவரிடம் கத்திவிட்டு மகளிடம் திரும்பினார் அவர்.
“இன்னொரு தடவை வீட்டுக்கு யாரும் வர்றப்ப ஷால் போடாம கூடத்துக்கு வந்தா காலை உடைச்சிடுவேன் கழுதை. உன் ஃப்ரெண்டுக்காரிங்க தூண்டி விடுறாளுங்களா அம்மாவை எதிர்த்துப் பேசுனு? அப்பிடி உன் இஷ்டத்துக்கு வாழணும்னா நீ உழைச்சுச் சம்பாதிச்சு வாழு. இது என் வீடு, இங்க நான் சொல்லுற மாதிரிதான் இருக்கணும்”
அதிகாரமாய்ச் சொல்லிவிட்டு அவர் போய்விட நியதி கண்ணீர் கோடுகளுடன் அங்கேயே நின்றாள். பூபேந்திரன் மகளின் கூந்தலை வருடிக்கொடுத்தார்.
“நீ எதுக்கும்மா அவகிட்ட எதிர்த்துப் பேசுற? அம்மாக்கு உன்னை யாரும் தப்பா சொல்லிடக் கூடாதுங்கிற எண்ணம். அதான் கடுமையா நடந்துக்குறா. நீ சின்னப்பிள்ளை இல்ல. பெரிய படிப்பு எல்லாம் படிக்க நினைக்குற. அம்மா என்ன செஞ்சாலும் அது உன் நல்லதுக்குத்தான்டா. இனிமே அம்மா இப்பிடிப் பேசுற மாதிரி, அடிக்குற மாதிரி எதையும் செய்யாத”
அவர் ஆறுதலாய்ப் பேசியதுகூட நியதிக்கு வலியைத்தான் கொடுத்தது. ஆம்! அவள் விஜயா சொல்வதை உடனே ஏற்றுக்கொள்வதில்லை. டீனேஜில் அன்னைக்கும் மகளுக்கும் இடையே ஆரம்பித்த போராட்டம் இன்னும் தொடருகிறது.
‘அதென்ன பெண்பிள்ளைக்கு மட்டும் கட்டுப்பாடு? ஆண்பிள்ளை என்ன அவிழ்த்துவிட்ட குதிரையா?’ எனப் பொருமுவாள் நியதி.
இத்தனைக்கும் பிரகாஷ் செய்யாத அட்டகாசமில்லை. அவன் வீட்டில் இருந்தால் அவனுக்குப் பிடித்த டிவி சேனல்தான் ஓடும். அவனுக்குப் பிடித்த உணவுதான் சமைக்கப்படும்.
அவன் காபி குடித்த தம்ளர் காய்ந்து எறும்பு மொய்க்கக் கிடந்தாலும் எடுத்துக் கழுவப்போட வேண்டிய அவசியமில்லை. அதைச் செய்யத்தான் நியதி இருக்கிறாளே!
ஆண்பிள்ளை உடல் வலுவாகவேண்டுமென அசைவம் சமைத்தாலும் நியதிக்கு அதில் ஒரு துண்டுகூடத் தட்டில் விழாது.
“சிக்கன் சாப்பிட்டா சூடு, சீக்கிரம் வயசுக்கு வந்துடுவா. முட்டை எல்லாம் எதுக்கு? கேஸ் ட்ரபுள் ஆகும். பொண்குழந்தைங்க நிறைய பால் குடிக்கக் கூடாது. சின்ன வயசுலயே நெஞ்சு வளர்ந்து துருத்திக்கிட்டுத் தெரியும். இப்பவே ஷிம்மி எல்லாம் போட்டா மத்த பிள்ளைங்க கிண்டல் பண்ணுவாங்க”
ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கையும் உடல்நலனும் உணவுமுறையும் பூப்பெய்துதல், மகப்பேறை மட்டுமே கருத்தில் கொண்டு நகர்வது இந்திய சமுதாயத்தில் மட்டும்தான் நடக்கும்.
அதுவே நியதியைப் பலமுறை அயர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. கூடவே அவளது இயல்பே கொஞ்சம் அடாவடியாக இருக்கவும் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், உணவு என அனைத்திலும் அதீதக் கட்டுப்பாடுகள்! மீறினால் வரைமுறையின்றி விழும் அறைகள்!
இத்தனையையும் தூசிபோலத் தட்டிவிட்டு விஜயாவை எரிச்சலூட்டவே அவள் சில காரியங்களைச் செய்வதும் உண்டு.
நியதிக்கு இத்தனைக் கட்டுப்பாடுகளை விதிக்கும் விஜயாவுக்குப் பிரகாஷ் மட்டும் செல்லக்குட்டி. அவன் என்ன செய்தாலும் கண்டுகொள்ளமாட்டார். அவனும் தன் பங்குக்கு நியதியை அதட்டி உருட்ட முயல்வான்.
இப்படியொரு நிலையில்தான் அவனது காதல் திருமணத்துக்காகத் தனது திருமணத்தை விஜயா அவசரப்படுத்துவது நியதியை எரிச்சலுக்குள்ளாக்கியிருந்தது.
“அவன் காதலிச்சா காதலிச்சவளைக் கட்டிவைங்க. என்னை எதுக்கு அவசரமா கல்யாணம் பண்ணிக் கிணத்துக்குள்ள தள்ள நினைக்குறீங்க?” என்று கேட்டு முந்தைய தினம்தான் முதுகில் மொத்து வாங்கியிருந்தாள் விஜயாவிடம்.
“பெத்தவங்க என்ன செஞ்சாலும் சரினு கேட்டுப் பழகு” என்ற அறிவுரை வேறு!
“பொட்டப்புள்ளை எவ்ளோ படிச்சாலும் வேலைக்குப் போனாலும் ஒரு பிள்ளை பிறந்துடுச்சுனா அதுக்குப் பாடு பாக்கவே நேரம் சரியா இருக்கும். அப்ப எதுக்கு இவ்ளோ செலவு பண்ணிப் படிக்கவைக்கணும்? டிகிரியோட முடிச்சா போதாதா?” என்று விஜயா கத்த
“உங்க மகன் கூமுட்டை. அவன் இன்ஜினியரிங்ல எழுபது அரியர் வச்சு எப்பிடியோ தேறுனான். அதுக்குனு நானும் படிக்காம இருக்கணுமா? எனக்குப் படிப்பு வருது. படிக்குறேன். நீங்களா என்னைப் படிக்கவைக்குறீங்க? எங்கப்பாதானே படிக்கவைக்குறார்? அவர் முடியாதுனு சொல்லட்டும்” என்று நியதியும் பதிலடி கொடுக்க இறுதியாய்க் கிடைத்ததுதான் முதுகில் விஜயா போட்ட அடிகள்.
இப்போதும் கொஞ்சம் வலிக்கிறதுதான்! ஆனால் அவர் சொல்வதற்குத் தலையாட்டித் தனது வாழ்க்கையைக் கிணற்றுத் தவளையாக மாறிக் கெடுத்துக்கொள்ளும் எண்ணமில்லை அவளுக்கு.
கூடவே அடித்தாலும் அதட்டினாலும் அன்னைக்குத் தன் மீது பாசமுண்டு என்ற நம்பிக்கை நியதிக்கு இருந்தது. அவர் தனக்கு அநியாயம் செய்யமாட்டார் என்ற உறுதியும் அவளுக்கு உண்டு.
இதோ அன்னை அடித்தது வலித்தாலும் கண்ணீரைத் துடைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டாள்.
எதிர்பட்ட பிரகாஷிடம் “உனக்குக் கல்யாணமாமே? கலக்குற” என்று கிண்டல் செய்ய அவனோ பெருமையாகக் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டான்.
“அம்பாசமுத்திர அழகியை அள்ளிட்டு வந்துட்டோம்ல”
“அழகியா? எங்க போட்டோவைக் காட்டு”
பிரகாஷ் நிலாவின் புகைப்படத்தைக் காட்டவும் மொபைலை வாங்கிப் பார்த்தவளின் முகத்தில் கேலிச்சிரிப்பு.
“ம்ம்! பரவால்ல! என் அளவுக்கு இல்லனாலும் ஏதோ அழகு இருக்கு. என்ன படிச்சிருக்கு?”
“பி.காம்”
“என்ன பர்சன்டேஜ்?”
“அதெல்லாம் உனக்கு எதுக்கு? நீயும் பி.காம்தானே?”
“ஓஹ்! உன் ஆளும் உன்னை மாதிரியே அம்பத்தெட்டு அரியர் அன்னக்கொடியா? வெரிகுட்”
தமையனைச் சீண்டினாள் வேண்டுமென்றே! பிரகாஷ் நறநறவெனப் பற்களைக் கடித்தான்.
“உன் ஆளுக்கு அழகு இருக்குற அளவுக்கு மூளை சுத்தமா இருக்காதுபோலயே”
“ஏய்! அவ்ளோதான் உனக்கு லிமிட்டு”
“மூளை இருந்தா எதுக்கு உன்னைக் காதலிக்கப்போகுது? உனக்காக சூசைட் எல்லாம் ட்ரை பண்ணுனாளாமே? நீயே ஒரு அவசரக்குடுக்கை. உனக்கேத்த அவசரக்குடுக்கையா ஒண்ணு வந்து சிக்கியிருக்கு. கடவுள் எப்பிடிச் சேர்த்துவைக்குறார்ல? ஒரு தத்திக்கு இன்னொரு தத்தி ஜோடி. மேட் ஃபார் ஈச் அதர். ம்ம்ம்! என்ஜாய்”
கிண்டலாகச் சொன்னவள் தமையனின் தோளில் தட்டிவிட்டுத் தனது அறையை நோக்கி ஓடினாள்.
தான் படிப்பாளி, ஆகச்சிறந்த புத்திசாலி என அதீத கர்வம் கொண்ட நியதிக்கு, அவளால் தத்தியாய் விளிக்கப்பட்ட நிலாவின் மூலமாய் மாபெரும் அதிர்ச்சியைப் பரிசாக அளிக்கக் காத்திருந்தது விதி.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction



