ஆதித்யனிடம் சொன்னது போல அந்த வாரயிறுதியில் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் திரிவேணி இல்லம் என்ற அவனது வீட்டுக்கு வந்திருந்தாள் நந்தினி.
மலர்விழி பெயருக்கேற்ப மலர்ந்த விழிகளோடு அவளை வரவேற்றார்.
மதியழகன் மத்திய அரசின் நவரத்னா நிறுவனமொன்றில் உயர்பதவி வகித்துவிட்டு ஓய்வு பெற்ற அதிகாரியாக இருந்தாலும் எவ்வித மமதையுமில்லாமல் சினேகமாக நந்தினியிடம் பேசினார்.
இருவரது விழிகளும் ஆதித்யனுடன் நந்தினி அறியாவண்ணம் உரையாடின என்று தனியாகச் சொல்லத் தேவையில்லை.
“முன்னாடி திருமுல்லைவாயில்ல தான் இருந்தோம்டா. இந்தப் பையன் தொழிலை ஆரம்பிச்சதும் இவனுக்காக இங்க வந்தோம்” – மலர்விழி.
“போட்டோகிராபி படிச்சான். அடுத்து என்ன செய்யப்போறானோனு யோசிச்சப்ப ஃப்ரீலாஞ்சரா ஒர்க் பண்ணுனான். சில வி.ஐ.பிக்களோட வீட்டுக் கல்யாணம் ஆஃபர் எல்லாம் ஐயாக்குக் கிடைச்சுது. இவன், இவனோட ஃப்ரெண்ட்ஸ் நாலு பேரும் ஒன்னா சேர்ந்து ஒர்க் பண்ணுவாங்க. இப்ப சோசியல் மீடியா அசுரத்தனமா வளர்ந்துடுச்சு. அதனால இவங்களுக்கு போட்டோகிராபிய தாண்டி சோசியல் மீடியால ஒரு அடையாளம் கிடைச்சுது. அதையே தொழிலா மாத்திக்கிட்டாங்க. இவங்க நாலு பேருல பவி தான் சூட்டிகையானப் பொண்ணு. அவ இப்ப செலிப்ரிட்டிகளை இண்டர்வியூ பண்ணுறதைப் பாத்தா எனக்கே ஆச்சரியமா இருக்கு. சினிமா, விளையாட்டு, அரசியல்னு எல்லா தகவலையும் விரல் நுனில வச்சிருக்கா அந்தப் பொண்ணு” – மதியழகன்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவர்கள் அவளை மூன்றாவது மனுசியைப் போல கருதவேயில்லை. நந்தினிக்கும் அவர்களிடம் பேசுவதில் தடையெதுவும் இல்லை.
“நீ பேசிட்டிரும்மா. எனக்குக் கன்னிமரால ஒரு சின்ன வேலை இருக்கு. போயிட்டு வந்துடுறேன்” என்று மதியழகன் விடைபெற்றார்.
“அப்பாக்குப் புத்தகங்கள் மேல தீராக்காதல்” ஆதித்யன் அவரது அறைக்குள் இருக்கும் மினி நூலகத்தைக் காட்டினான்.
நந்தினியின் கண்களில் சுவாரசியம்.
“உங்களுக்குப் புக்ஸ் பிடிக்காதா?”
“அவ்ளோவா இன்ட்ரெஸ்ட் இல்ல நந்தினி”
தோளைக் குலுக்கியவன் “தேங்க்ஸ்” என்றான் சுவரில் சாய்ந்து ஒரு காலை மடித்து நின்றவனாக.
“எதுக்கு?”
புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தைப் புரட்டியபடியே வினவினாள் அவள்.
“வீட்டுக்கு வந்ததுக்கு. அதை விட முக்கியமா என் எதிரிய காதுல போட்டுட்டு வந்ததுக்கு”
“எதிரி?”
கேட்டபடியே காதுமடலை வருடியவள் அதிலாடிய ஜிமிக்கியை விரல்கள் தொட்டதும் உதட்டைச் சுழித்து சிரிப்பை மறைத்தாள்.
“நீங்க சொன்னதுக்காக எல்லாம் போடல. எனக்கு ஜிமிக்கி போடணும்னு தோணுனதால…”
“நான் வேற எதுவும் சொல்லலையே. ஜிமிக்கி போட்டதுக்கு தேங்க்ஸ் மட்டும் தானே சொன்னேன்”
வார்த்தைகளால் மடக்கியவனை விழிகளால் சமாளித்தவள் “கூப்பிட்டிங்களா ஆன்ட்டி?” என்றபடி நழுவிவிட ஆதித்யன் பின்னந்தலையில் அடித்துச் சிரித்துக்கொண்டான்.
சமையலறையில் தனியாளாக அஷ்டாவதானம் செய்து கொண்டிருந்த மதியழகியிடம் பேச்சு கொடுத்தபடி அவருக்கு உதவ ஆரம்பித்தாள்.
“நான் காய்கறி நறுக்கவா ஆன்ட்டி?”
“நறுக்கிக் குடேன். ஆனா கை பத்திரம்”
உடனே அனுமதி கொடுத்து அன்பாய் எச்சரிக்கவும் செய்த மலர்விழியைக் குமரனின் அன்னையோடு ஏனோ ஒப்பிட்டது அவளது மனம்.
அவன் வெளிநாட்டில் இருந்த சமயத்தில் இலஞ்சிக்குச் சென்றால் அவ்வபோது அவர்கள் வீட்டுக்குப் போய் வருவாள் நந்தினி.
அப்போதெல்லாம் சமைக்க உதவட்டுமா என்று நந்தினி கேட்டால் அந்த அம்மையாரின் முகமே மாறிவிடும்.
“எதுக்கு? என் பொண்டாட்டி உனக்குச் சமையல்காரியானு குமரன் போன் பண்ணி கத்தவா? அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் பாத்துக்கலாம். இந்தச் சமையல்கட்டு என் ராஜ்ஜியம்”
சிரித்தபடியே சொன்னாலும் அந்த வார்த்தைகளில் ஆதுரம் இருக்காது. அக்கறை தொனிக்காது. அந்தக்காலத்துப் பெண்களுக்குரிய ‘சமையலறை சாம்ராஜ்ஜியத்தின் மீதான ஒருதலைக்காதலும், அதிகாரவெறியும்’ மட்டுமே அவளால் உணர முடியும்.
மலர்விழியிடம் அத்தகைய உணர்வு எழவில்லை. சினேகமானப் பெண்மணியாகத் தோன்றினார்.
“உன்னோட வீடியோவ ஆதி காட்டுனான். என்னால என் கண்ணையே நம்ப முடியல நந்தினி. முகப்புகழ்ச்சி நல்லது இல்லனு தெரியும். ஆனா சொல்லலைனா என் மனசு தாங்காது. உன்னோட அழகு ரொம்ப சாத்வீகமானது. பாத்த உடனே கண்ணுல நிறைஞ்சு மனசுல உறைஞ்சிடும். அதான் இந்தப் பையன் மந்திரிச்சு விட்ட மாதிரி தினமும் அந்த வீடியோவையே பாத்துட்டு இருக்கான் போல”
“ஆன்ட்டி?”
மலர்விழி நாக்கைக் கடித்துக்கொண்டார்.
“உன் கிட்ட இப்பிடியெல்லாம் பேசி அசௌகரியமா ஃபீல் பண்ண வைக்கக்கூடாதுனு ஆர்டர் போட்டிருந்தான். மறந்து உளறிட்டேனா?”
சிறு குழந்தை போல அவர் திருதிருவென விழித்த விதத்தில் விழுந்து விழுந்து சிரித்தாள் நந்தினி.
அவரோடு பேசியதில் சலிப்பு தட்டவில்லை. அவளிடம் சொல்லவும் நிறைய கதைகள் மலர்விழியிடம் இருந்தன.
அவர் பிறந்த பாலக்காட்டில் ஆரம்பித்து வளர்ந்த மடிவாலா வரை அத்தனை அத்தனை கதைகள்!
பேசியபடியே நந்தினியின் கையில் சின்ன கிண்ணத்தைத் திணித்தார்.
இடியாப்பம் போல இருந்த தின்பண்டத்தில் சுடச்சுட பாதாம் பாலை ஊற்றி பூந்தியைத் தூவியிருந்தார்.
“வாவ்! என் ஃபேவரைட் பேனி. சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு ஆன்ட்டி”
ஆசையாகச் சுவைத்தாள் நந்தினி.
“நான் மைசூர் ஃப்ராஞ்சில ஒர்க் பண்ணுனப்ப அங்க ஒரு கபேல ஈவ்னிங் டைம் மட்டும் இந்த பேனி கிடைக்கும். ஜஸ்ட் நாப்பத்தொன்பது ரூபாய் தான். அவ்ளோ டேஸ்டா இருக்கும் ஆன்ட்டி”
சப்புக்கொட்டிச் சாப்பிட்டபடி அன்னையிடம் உரிமையாகக் கதை பேசியவளைச் சில அடிகள் தொலைவில் நின்று பொறாமையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் ஆதித்யன்.
வேறென்ன! என்னிடமும் சிரித்துக் கதை பேசினால் என்னவாம் என்ற மனக்குறை.
‘அடேய்! அவ கொஞ்சநேரத்துக்கு முன்னாடி தானே உன் கிட்ட பேசிட்டிருந்தா’
மனசாட்சி இடையில் புகுந்து ஆதித்யனின் தலையில் குட்டியது.
அவன் தங்களையே பார்த்துக் கொண்டிருப்பதை அந்நொடியில் கவனித்துவிட்டாள் நந்தினி.
“பிடிக்கும்னா கேட்டு வாங்கி சாப்பிடுங்க” என்று பேனி நிரம்பிய கிண்ணத்தைக் காட்டிச் சொன்னாள்.
“பிடிச்ச எல்லாத்தையும் உடனே சாப்பிட முடியாதே?”
சொன்னவனின் விழிகள் நிலைத்திருந்தது என்னவோ பாதாம் பாலால் ஈரமாகியிருந்த அவளது செவ்விழிகளில் தான்!
அவன் என்ன சொல்கிறான் என்பது புரியாமல் நொடியில் குழம்பித் தெளிந்தவள் ‘ஐயோ இவன் பேசியதை மலர்விழி கேட்டிருப்பாரோ!’ எனப் பதற்றத்துடன் சுற்றிமுற்றி பார்க்க, ஆதித்யன் நமட்டுச்சிரிப்போடு சமையலறைக்குள் வந்தான்.
சுவாதீனமாக நந்தினி வைத்திருந்த கிண்ணத்தில் பாதாம் பாலில் ஊறியிருந்த பேனியைக் கிள்ளித் தனது வாயில் போட்டுக்கொண்டான்.
அதோடு நிற்காமல் “ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை” என்று சொல்லி விசமச்சிரிப்போடு மீண்டும் அவளது சிவந்த உதடுகளை அவன் பார்க்கவும் நந்தினியின் கண்கள் காதளவு விரியாதக் குறை!
“ப்ச்! ஆன்ட்டி” என்று அடிக்குரலில் மலர்விழியைக் காட்டி விழிகளை உருட்டி ஆதித்யனை எச்சரித்தாள்.
“அப்ப தனியா இருக்குறப்ப இந்த மாதிரி பேசுடானு எனக்கு உரிமை தர்றியா?”
சின்னக்குரலில் தான் அவனும் கேட்டான். ஆனால் அவனது குரல் தான் இடிமுழக்கம் போன்றதாயிற்றே! அவ்வளவு நேரம் கடாயில் காய்கறிகளைக் கறுகாதவண்ணம் வறுத்துக்கொண்டிருந்த மலர்விழியில் செவிகளில் ‘உரிமை’ என்ற வார்த்தை மட்டும் விழுந்துவிட அவர் சட்டெனத் திரும்பிப் பார்த்தார்.
இருவரும் ஒருசேர ‘கப்சிப்’ ஆகிவிட அவர் மீண்டும் கடாயில் கவனமானார்.
“நீங்க முதல்ல வெளிய போங்க” கண்களால் சமையலறை வாயிலைக் காட்டினாள் நந்தினி.
“ம்ஹூம்”
இன்னொரு துண்டு பேனியை அவள் கையிலிருந்து பிடுங்கித் தின்றுவிட்டது போனது அந்த அபூர்வ ஜீவராசி.
அவன் போன பிற்பாடு தன்னையறியாது முறுவலித்தாள் நந்தினி.
‘இந்தப் பதற்றம், உரிமையான மிரட்டல் இதெல்லாம் என் மனதுக்கு இதமாக இருக்கிறதே! இதை நான் எப்படி எடுத்துக்கொள்வது? நான் எனது முதல் காதல் கொடுத்த வலியை எப்படி மறந்தேன்? எப்படி என்னால் ஆதித்யன் என்னிடம் உரிமையாக வாயாடுவதை வெட்கச்சிவப்போடு ரசிக்க முடிகிறது?’
மனதுக்குள் கேட்டுக்கொண்டாள் அவள்.
அன்றைய மதியவுணவை ஆதித்யனின் குடும்பத்தோடு சாப்பிட்டவள் தனது அன்னையின் புகைப்படத்தை மலர்விழியிடம் காட்டினாள். காலஞ்சென்ற தந்தையையும் தான்.
“என்னை விட்டா அவங்களுக்கு யாருமே கிடையாது ஆன்ட்டி. நான் கல்யாணம் ஆகிப்போயிட்டேன்னா யார் அவங்களைப் பாத்துப்பாங்கனு யோசிச்சு நிறைய நாள் தூங்காம இருந்திருக்கேன்”
“இதுக்கு ஏன் இவ்ளோ யோசிக்குற? நீதான் உங்கம்மாவைப் பாத்துக்கணும். உன்னைப் பெத்து வளர்த்து படிக்க வச்சு இவ்ளோ தூரம் ஆளாக்குனவங்களைக் கல்யாணம் ஆகிடுச்சுங்கிறதுக்காக அப்பிடியே விடுறது எந்த வகையில நியாயம்?”
மலர்விழி சற்றும் யோசிக்காமல் அவளிடம் கேட்டார்.
“ஆனா குமரனோட அம்மா…” என்று ஆரம்பித்தவள் சட்டென நாக்கைக் கடித்துப் பேச்சை நிறுத்தினாள்.
சில விசயங்களை விடுபட்ட வாக்கியங்கள் கூட முழுமையாகச் சொல்லிவிடும். நந்தினி முடிக்காமல் விட்ட வாக்கியத்தின் பொருள் என்னவென மலர்விழிக்குப் புரிந்தது.
அவளது கையை ஆதுரமாகப் பற்றிக்கொண்டார்.
“ஆதி உன்னைப் பத்தி எல்லாமே சொன்னான். அவன் மனசுல இருக்குறது என்னனு உனக்கும் தெரியும். உன்னை நான் எதுக்கும் வற்புறுத்தப் போறதில்ல. ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்க. நீ இந்த வீட்டை விட்டுட்டு இன்னொரு வீட்டுக்கு மருமகளா போனாலும் உன் அம்மாவ தனியா விட்டுடாத. நீயும் உன் வருங்கால புருசனும் அவங்களைக் கவனிச்சுக்கணும். நானும் என் அப்பாவுக்கு ஒரே ஒரு பொண்ணு. ஆதியோட அப்பாவ நான் காதலிச்சுக் கல்யாணம் பண்ணுனேன். என் அப்பா அம்மாவோட கடைசி மூச்சு உள்ளவரைக்கும் அவர் அவங்களைத் தன்னோட பேரண்ட்ஸ் மாதிரி அன்பா பாத்துக்கிட்டார். அதனால தான் சொல்லுறேன். நீ யாரை வேணாலும் உன் வாழ்க்கைத்துணையா ஏத்துக்க. ஆனா அவங்க கிட்ட உன் அம்மாவோட பொறுப்பை நீதான் பாக்கணும்ங்கிறதை தெளிவா சொல்லிடு”
மலர்விழியின் முதிர்ச்சியானப் பேச்சில் நந்தினியின் இதயம் நெகிழ்ந்துபோனது.
ஆண்பிள்ளையைப் பெற்றுவிட்டாலே வரப்போகிற மருமகள் பிறந்தகத்தோடு இருக்கும் அனைத்து பிணைப்புகளையும் உதறிவிட்டு முழுக்க முழுக்க தங்கள் குடும்பத்துக்கே உழைத்துக்கொட்டவேண்டும் என்று எண்ணும் சுயநலமான பெண்மணிகளை அவள் அறிவாள்.
இவ்வளவு ஏன்! குமரனின் அன்னையே திருமணத்துக்குப் பின்பு நந்தினியின் வருமானத்தில் சல்லிக்காசு அவளது அன்னைக்குப் போகக்கூடாதெனச் சொன்னவர் தானே!
காதல் மயக்கத்திலும், ‘கல்யாணாம் ஆச்சுனா இதுதானே வழக்கம்’ என்ற கட்டுப்பெட்டித்தனமான எண்ணத்தாலும் அன்று நந்தினிக்குத் தான் செய்யப்போவது மாபெரும் பிழையென்பது புரியவில்லை.
அவனது காதல் பொய்யாகிப்போனதும் அன்னையின் தோள்களில் விழுந்து கதறினாளே, அந்நொடியில் அன்னையின் அன்பு மகத்துவமானது என்பது புரிந்தது. அன்னையைத் தவிர வேறு யாரும் தன்னை உண்மையாக நேசிக்கப்போவதில்லை என்ற நிதர்சனம் புத்தியில் உறைத்தது. அப்போது தீர்மானித்தது தான் திருமணம் ஆனாலும் தனது ஊதியத்தில் ஒரு பகுதியை அன்னைக்குக் கொடுத்து அவரையும் கவனித்துக்கொள்ளவேண்டும் என்பது.
மலர்விழி அதை வலியுறுத்திப் பேசவும் நந்தினியின் மனதில் அவர் மீதான மரியாதை மலையளவு உயர்ந்தது.
மதியழகன் – மலர்விழி தம்பதியிடம் ஆசி வாங்கிவிட்டு ஆதித்யனோடு வெளியேறிவளின் மனதில் அத்துணை இதம்!
“கண்ணு கனியுது. முகம் பிரகாசிக்குது. என்ன நடக்குது?”
கேலி செய்தபடி காரின் முன்பக்கக் கதவைத் திறந்துவிட்டான் அவன்.
அவனும் அமர்ந்ததும் “மலர் ஆன்ட்டி ரொம்ப ஸ்வீட். எனக்கும் அவங்களுக்கும் வைப் ஒத்துப்போகுது” என்றாள் நந்தினி.
“அவங்க மகன் கூடவும் வைப் ஒத்துப்போச்சுனா ‘தி ஹேப்பி எண்டிங்’ போட்டுடலாம்” ஸ்டீயரிங் வீலை வளைத்தபடி குறும்பாகக் கூறியவன் நந்தினி முகத்தைத் திருப்பிச் சிரித்ததை அறியாது போனான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


