“அன்பால யாரை வேணும்னாலும் மாத்தலாம்னு சொல்லுவாங்க. அது எல்லாச் சூழலுக்கும் பொருந்துற கருத்தாக்கம் இல்ல. சில நேரங்கள்ல கண்டிப்பான அணுகுமுறைகூட ஒரு நபரை மாத்தும். என்ன செய்யுறது? அன்பைப் பலவீனமாவும் கண்டிப்பான அணுகுமுறையைப் பலமாவும் பாக்குற சமுதாயம் இது. சூழலுக்கு ஏத்த மாதிரி நாமளும் சில நேரம் மாற வேண்டியதா இருக்குதே!”
-வசுமதி
வசுமதிக்கு வசீகரனின் செய்கைகள் யாவும் புதிராக இருந்தன. மகிழினியின் வளைகாப்பு நிகழ்வில் ஏதோ நடந்திருக்கிறதென்று மட்டும் அவளால் ஊகிக்க முடிந்தது. ஏனெனில் சென்னைக்குத் திரும்பிய தினத்திலிருந்து அவனிடம் சில மாற்றங்கள் தெரிந்தன.
வசுமதியும் ப்ரஷாந்தியும் மாலையில் பூங்காவில் சிறிது நேரம் நடப்பதுண்டு. இப்போதெல்லாம் அவளது வாக்கிங்-மேட்டாக வசீகரன் வந்தான். அவன் வந்ததால் ப்ரஷாந்தி நாகரிகமாக ஒதுங்கிக்கொண்டாள். வசுமதியும் பெரிதாக அவனை விரட்டவில்லை.
இவற்றைவிட முக்கியமான ஒரு மாற்றம் – திருநெல்வேலியிலிருந்து திரும்பிய தினத்திலிருந்து அவன் குமுதவல்லியிடம் பேசுவதில்லை. பெரும்பாலும் அவனது அலுவலகத்தின் உணவு இடைவேளை நேரத்திலும், வீட்டுக்கு வந்ததும் கிடைக்கிற நேரத்திலும் குமுதவல்லியிடம் பேசுவான் அவன்.
இப்போதெல்லாம் பேச்சுவார்த்தை இல்லை என்பதை ஒரு நாள் குமுதவல்லியே மருமகளின் மொபைலுக்கு அழைத்து அழாதக் குறையாகச் சொன்னபோதுதான் வசுமதிக்குத் தெரியவந்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“இங்க வந்தப்ப சின்ன வாக்குவாதம். அதுல முறைச்சிக்கிட்டுப் போனவன்தான். ஒரு வார்த்தை போன் பண்ணி பேசலம்மா. உங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையும் இல்லையே?”
“எங்களுக்குள்ள ஒண்ணுமில்ல. நாங்க நல்லாதான் இருக்கோம்” எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டவள் அன்றைய தினம் முழுவதும் பெரும் யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.
‘ஒருவேளை நான் சொன்னதை அவன் தீவிரமாக கடைப்பிடிக்கிறானோ? அப்படியெல்லாம் செய்பவனில்லையே அவன்’
வேலையிலிருந்து திரும்பியதும் அவனிடம் இது குறித்துப் பேசவேண்டுமென மனதில் குறித்துக்கொண்டாள். வீட்டுக்குச் சென்றவள் அவனுக்காகக் காத்திருக்கவும் செய்தாள்.
வசீகரன் வெகுநாட்களுக்குப் பின்னர் தனக்காகக் காத்திருக்கும் மனைவியைத் திகைப்பாய்ப் பார்த்தவன் இலகு உடைக்கு மாறி அவளுடன் யூட்டிலிட்டி ஏரியாவில் வந்து அமர்ந்தான். அமர்ந்தவனின் முன்னே இரண்டு காபி கோப்பைகள்.
ஒன்றை வசுமதியின் பக்கம் நகர்த்தினான். அதை அவன்புறமே நகர்த்திவிட்டு மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டாள் அவள்.
“டாக்டர் என்னைக் காபி குடிக்கக் கூடாதுனு சொல்லி ரொம்ப நாளாகுது. இப்ப எல்லாம் ஈவ்னிங் சூப் ஆர் ஜூஸ்தான் காமாட்சி ஆன்ட்டி குடுத்துவிடுவாங்க”
வசீகரன் உடனே எழுந்தான். மனதில் கொஞ்சமாய்க் குற்றவுணர்ச்சி அவனுக்கு. இதைக் கூடத் தெரிந்து வைக்காமல் போனோமே என்ற குற்றவுணர்ச்சி.
“எங்க போறீங்க?”
“ஃப்ரிட்ஜ்ல ஃப்ரூட்ஸ் இருக்கு. உனக்கு ஜூஸ் போட்டு எடுத்துட்டு வர்றேன்”
“உக்காருங்க! இன்னும் கொஞ்ச நேரத்துல ப்ரஷா கொண்டு வருவா. நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”
அழுத்தமான குரலில் வசுமதி கட்டளையிடவும் அமர்ந்தான் வசீகரன்.
“என்ன பேசணும்?”
“இப்ப எல்லாம் உங்கம்மாகிட்ட பேசுறதில்ல போல.”
“உனக்கு எப்பிடி தெரியும் வசு?”
“இன்னைக்கு எனக்குக் கால் பண்ணுனாங்க. நீங்க பேசலனு வருத்தப்பட்டாங்க. நான் சொன்னதுக்காகத்தான் பேசலையா என்ன?”
வசீகரன் மௌனம் சாதித்தான். நடந்ததைச் சொல்லவேண்டும் என்றால் அவளிடம் அனைத்தையும் முதலில் இருந்தே சொல்லவேண்டும். தங்கைக்கும் சர்வானந்தனுக்குமான பிரச்சனையிலிருந்தே சொல்லவேண்டும்.
கூடவே அவளைப் பற்றி மகிழினி பேசிய வார்த்தைகளையும் சொல்லவேண்டும். ஒருவேளை அதையெல்லாம் கேட்ட பிற்பாடு வசுமதி மனம் வருந்தினால்?
“நீங்க அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? ஒழுங்கா அவங்ககிட்ட பேசுங்க. இங்க யாரும் உங்க நடிப்புக்கு அவார்டு குடுக்கப்போறதில்ல. எப்பவும் என்கிட்ட எப்பிடி நடந்துப்பீங்களோ அப்பிடி நடந்துக்கிட்டா போதும்”
“பேசாம இருக்குறதுக்கு நீ காரணமில்ல. அவங்கதான் காரணம்”
இப்போது மெய்யாகவே புரியவில்லை அவளுக்கு. அன்னையும் தங்கையும் என்ன செய்தாலும் ஆதரிப்பவனாயிற்றே! அவனே ஒதுங்கி நிற்கும் அளவுக்கு அப்படி என்னதான் பேசியிருப்பார்கள்? குறுகுறுப்பு தாளவில்லை வசுமதிக்கு.
“மகிழுக்கும் சர்வாக்கும் பிரச்சனை நடந்தது ஏன்னா…”
வசீகரன் அனைத்து விவரங்களையும் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தான். கேட்டபோது வசுமதியின் முகத்தில் அதிர்ச்சி, அருவருப்பு, ஏளனம், நகைப்பு என அனைத்து உணர்ச்சிகளும் வந்து போயின. முடிவில் அவளது முகம் இறுகிப்போனது.
“இப்ப சொல்லு! நான் பேசணுமா அவங்ககிட்ட?”
வசுமதி பெருமூச்சோடு எழுந்தாள்.
“என்னமோ அவங்க புதுசா மோசமா பேசுற மாதிரி ஓவர் ரியாக்ட் பண்ணுறீங்க? எப்பவும் என்கிட்ட பேசுறதை இந்தத் தடவை உங்க காதுபட பேசியிருக்காங்க. இதுக்காக எல்லாம் நீங்க பேசாம இருக்கணும்னு அவசியமில்ல.”
“நீதானே அவங்ககூட இருக்குற ஒட்டு உறவை முறிச்சுக்கச் சொன்ன. இப்ப?”
அதற்கும் பெருமூச்சுதான் அவளிடம்.
“சொன்னேன் தான்! ஆனா நடைமுறையில அதை நீங்க சாத்தியப்படுத்துற விதம் எனக்குப் பெருசா பிடிக்கலனு வெச்சுக்கோங்களேன். இந்தத் திடீர் பாசக்காரப் புருஷன் வேஷம் எனக்குத் திகட்டுது. ஒரே நைட்டுல ஒபாமா ஆன மாதிரி ஒரே சம்பவத்தால நீங்க மனம் திருந்துனது ரொம்ப நாடகத்தனமா இருக்கு. இதைக் கூடச் சகிச்சுக்கலாம். இனி உங்ககிட்ட பேசமுடியாதுனு உங்கம்மா எனக்குக் கால் பண்ணி அழுவாங்க. அதை என்னால சகிச்சுக்க முடியாது.”
“நான் உன்கிட்ட நாடகம் போடல வசு”
“சரி! நீங்க உண்மையா அன்பு காட்டுறதாவே இருக்கட்டும். அதுக்குனு உங்க வீட்டாளுங்ககிட்ட மூஞ்சியை முறிச்சிக்க வேண்டாம். அதே நேரம் அவங்ககிட்ட நான் உறவு கொண்டாடணும்னு நீங்க எதிர்பாக்கவோ வற்புறுத்தவோ கூடாது. தெரிஞ்சோ தெரியாமலோ உங்களுக்கும் எனக்கும் இடையில ஒரு ஸ்பேஸ் உருவாக நீங்களும் உங்க குடும்பத்து ஆளுங்களும்தான் காரணமாயிட்டீங்க. அதை நான் கொஞ்சம் கொஞ்சமாதான் கடந்து வரமுடியும். நீங்க காட்டுற அக்கறை, அன்பு எல்லாம் உண்மையா எனக்கானதுனு எப்ப தோணுதோ அப்ப அதைப் புரிஞ்சிக்கிறேன். ஆனா அதுக்கு அப்புறமும் உங்கம்மா தங்கச்சிகிட்ட நான் இழையணும்னு நினைக்கக் கூடாது. அவங்க புத்தி இன்னும் கிணத்துத் தவளை மாதிரி குறை சொல்லுறது, புறணி பேசுறதைத் தாண்டி வளரல. என்னால அப்பிடிப்பட்ட குறுகிய மனசு உள்ளவங்ககிட்ட நடிப்புக்குக்கூடச் சகஜமா பழக முடியாது.”
வசீகரன் மனைவி சொன்ன அனைத்தையும் கேட்டுவிட்டுச் சம்மதமாய்த் தலையசைத்தான்.
“எனக்கும் அவங்க பேசுனதை டைஜஸ்ட் பண்ணிட்டு மறக்க கால அவகாசம் வேணும் வசு. அதுவரைக்கும் என்னால அவங்ககிட்ட இயல்பா பேச முடியாது.” என்றவன் “உனக்காகவும் நம்ம குழந்தைக்காகவும் நான் செய்ய நினைக்குறதை இயல்பா ஏத்துக்க வசு. தப்பு நடந்துடுச்சுதான். இனி அது தொடராதுனு நான் ப்ராமிஸ் பண்ணுறேன்.” என்றான் கிட்டத்தட்ட கெஞ்சும் தொனியில்.
வசுமதி இருக்கையிலிருந்து எழுந்தவள் “என்னமோ பண்ணுங்க” என அலட்சியமாய்ச் சொல்ல
“வாக்கிங்தானே? நானும் வர்றேன்.” என்றவன் “ஃபைவ் மினிட்ஸ்” என்று ஐந்து விரல்களைக் காட்டிச் சொல்லிவிட்டுச் சமையலறைக்குள் சென்றவன் திரும்பி வந்தபோது ஜூஸ் நிரப்பி வைக்கும் தெர்மோ ஃப்ளாஸ்க் இருந்தது.
“ஜூஸ் இருக்கு. குடிச்சிட்டே வாக்கிங் போகலாம்”
தலையாட்டினாள் வசுமதியும். இருவரும் அப்பார்ட்மென்ட்டின் பூங்காவில் நடைபயிற்சிக்காக வந்தார்கள். அழகானதொரு நடைபாதையும் இரு பக்கமும் அழகுக்கான புதர்ச்செடிகளுமாக இரவின் மடியில் வானம் அடியெடுத்து வைத்த நேரத்தில் அந்தப் பூங்கா இன்னும் அழகாய்த் தெரிந்தது.
சேஜ் பச்சை வண்ணத்தில் முழங்காலுக்குக் கீழ் வரை குடைபோல விரிந்திருக்கும் காட்டன் கவுனும், கால்களுக்குச் சௌகரியமாய்க் ஷூக்களும் அணிந்து நடந்து வந்த வசுமதி ஒரு கையில் ஜூஸ் நிரம்பிய ஃப்ளாஸ்கைப் பிடித்திருந்தாள். அதில் சிப்பர் உண்டு.
சிப்பர் மூலமாக ஜூஸைக் குடித்துக்கொண்டு வந்தவளின் மறுகரம் தப்பித்தவறிக்கூட வசீகரனின் கரத்தோடு இணையவில்லை. அவள்தான் சொன்னாளே! அவனது மாற்றத்தை ஏற்றுக்கொள்ள அவளுக்குக் கால அவகாசம் வேண்டுமென!
ஒரு காலத்தில் ஆசையாய்க் கரம் கோர்க்க வந்தவளை அவன் சட்டை செய்ததேயில்லை. இதெல்லாம் சினிமாத்தனம் என்பான். விடிந்தது முதல் அடைந்தது வரை ஒரே மாதிரியாகச் செல்லும் குடும்ப வாழ்க்கையைச் சுவாரஸ்யமாக்க அவ்வப்போது சில சினிமாத்தனமான தருணங்கள் நிச்சயம் தேவை!
இயல்புக்கு மீறிய யாவுமே நாடகத்தனம் என்று எண்ணுவது மடமை! சில இயல்பு மீறிய அன்புச் செய்கைகள் மனித மனதின் பல்லாண்டு கால ஆசையாக இருக்கலாம்! பல நாள் கனவாக இருக்கலாம்! அதை மதிக்கவும் புரிந்துகொள்ளவும் வாழ்க்கைத் துணையாக வரும் இருவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.
வசீகரனுக்கு இது கற்றலுக்கான நேரம். திருமணம் முடிப்பதும், குழந்தை பெற்றுக்கொள்வதும், அந்தக் குழந்தைகளைப் படிக்க வைத்து செட்டில் ஆக்குவதும் மட்டும்தான் வாழ்க்கையின் நோக்கம் என்றால் கணவனும் மனைவியும் தங்களுக்காக எப்போதுதான் வாழ்வார்கள்?
ஒரு காலத்தில் வாழ்க்கையே இவைதான் என்று சொல்லப்பட்டதுண்டு. இந்தக் காலகட்டத்தில் இளைய தலைமுறையினர் வாழ்க்கையை அணுகும் முறையே வேறு!
அவர்கள் தங்களது வாரிசுகளுக்காகவும் பெற்றோருக்காகவும் மட்டும் வாழ்ந்தால் போதும் என்றும், வறட்டுக் கௌரவமும் சமுதாயத்தில் நாலு பேர் நம்மைப் புகழ்வதும்தான் பெருமை என்றும் வாழ்க்கையைக் குறுகலாக மட்டுமே பார்க்கவில்லை.
மாபெரும் பொறுப்புகள், கடமைகளுக்கிடையே தங்களுக்கான வாழ்க்கையையும் அவர்கள் வாழ விரும்புகிறார்கள். ஒருவேளை இதெல்லாம் முந்தைய தலைமுறையின் பார்வைக்குச் சுயநலமாகத் தோற்றமளிக்கலாம்!
தியாகச் சுடராக வாழ்ந்தே பழகியவர்களுக்கு இத்தலைமுறையினரின் இந்த வாழ்க்கைமுறை நிச்சயம் அதிர்ச்சியைத்தான் கொடுக்கும். சில பெரியவர்கள் மட்டுமே ‘ஜெனரேஷனல் ட்ராமா’வைத் தங்களுக்கு அடுத்த தலைமுறைக்குக் கடத்தாமல் அவர்கள் வாழும் முறையைக் கண்டு மகிழுவார்கள். ஆனால் அவர்கள் சொற்ப சதவிகிதம் மட்டுமே!
மிச்சம் உள்ளவர்கள் எல்லாம் ‘நாங்க எல்லாம் அந்தக் காலத்துல பெத்தவங்க மனசு கோணக் கூடாதுனு பிடிக்காத விஷயத்தைக்கூடச் சிரிச்சுக்கிட்டே பண்ணுவோம்! பிள்ளைங்க நல்லா வாழணும்னு எங்களோட சின்ன சந்தோஷத்தைக்கூட விட்டுக் குடுத்தோம்’ என்று தாங்கள் பட்ட துன்பத்தை ‘க்ளோரிஃபை’ செய்து இளைய தலைமுறையும் அப்படிக் கஷ்டப்பட்டு வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை என்ற கருத்தை மறைமுகமாக அவர்கள் தலையில் திணிப்பார்கள்.
இப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள் பெற்றோரின் ‘ஜெனரேஷனல் ட்ராமா’வைச் சுமந்துகொண்டிருப்பார்கள். அவர்களின் வாழ்க்கைத் துணையாக வருபவர்கள் நிச்சயம் பரிதாபத்துக்குரியவர்களே!
அவர்களில் சிலர் எடுத்துச் சொன்னால் புரிந்துகொள்வார்கள். சிலருக்கு அதிர்ச்சி வைத்தியம் தேவைப்படும். வசீகரன் அந்த அதிர்ச்சி வைத்தியம் கிடைத்தால் மாறும் ரகம். இதோ அவனிடம் சின்னதாய் வந்திருக்கும் இந்த மாற்றம் அவனது வாழ்க்கையில் பெரியதொரு திருப்பத்தைக் கொண்டுவருமென அழுத்தமாய் நம்பியவனாய் மனைவியைத் தொடர்ந்து நடைபாதையில் நடந்தான் வசீகரன்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


