ஆதித்யனின் வீட்டுக்குப் போய் வந்த பிற்பாடு அவனிடம் பழகுவதில் இருந்த தயக்கம் அகன்றது நந்தினிக்கு. இருவருக்குமே வேலைச்சுமை அதிகம் என்பதால் கிடைத்த நேரத்தில் வாட்சப்பில் பேசுவார்கள்.
வாரயிறுதியில் சென்னையின் அழகான இடங்கள், அமைதியானக் கோவில்களில் சந்தித்து அரைமணிநேரமாவது செலவிடுவதை வாடிக்கையாக்கியிருந்தார்கள்.
ஆதித்யன் அவன் மனதிலிருந்த காதலை வெளிப்படையாகச் சொல்லிவிட்டான் என்றாலும் எப்போதுமே அவளிடம் அதை வலியுறுத்தும் விதமாகப் பேசியதில்லை.
அவனுடனான நேரங்கள் முக்தாவிடம் செலவிடுவதைப் போல இயல்பாக, இதமாக, சின்ன சின்ன கலாய்கள், ஜோக்குகளுடன் இனிமையாகவேக் கழிந்தன நந்தினிக்கு.
எந்த ஒரு ஆணுடன் ஒரு பெண்ணானவள் தனது சுயத்தையும் இயல்பையும் மாற்றிக்கொள்ளாமல் பழக முடிகிறதோ அந்த ஆணை எந்தக் காலத்திலும் அவள் தொலைத்துவிடமாட்டாள்.
அந்த ஆணுக்கும் அவளுக்குமான உறவு காதலாகத்தான் இருந்தாக வேண்டுமென எந்தக் கட்டாயமும் இல்லை. அவன் நண்பனாகக் கூட இருக்கலாம். அந்தத் தெளிவு நந்தினிக்கு இருந்தது. கூடவே அவள் வேலை பார்க்கும் ஐ.டி.துறையில் ஆண் பெண் பேதமற்ற அழகான நட்புகள் அதிகம் என்பதால் ஆதித்யனுடன் பழகுவதில் அவளுக்கு எந்த மனக்கிலேசமும் வந்ததில்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
பெண்கள் தன்னைச் சுற்றியிருப்பவர்களைக் கணிப்பதில் வல்லவர்கள். ஒரு பார்வையில், ஒரு தீண்டலில், ஒரு சிரிப்பில் எதிரிலிருப்பவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கிரகித்துவிடுவார்கள்.
சரியானவர் என்றால் தயக்கமின்றி பழகுவார்கள். தவறானவர்கள் என்றால் அவர்களுக்குள் அபாய மணி ஒலிக்கும். அதை எச்சரிக்கையாக வைத்துக்கொண்டு கவனமாகப் பழகுவார்கள்.
நந்தினியும், அப்படிப்பட்டப் பெண் தான். என்ன ஒன்று, குமரனை முதன் முதலில் இலஞ்சி குமராரின் சன்னதியில் சந்தித்தபோதே அவளுக்குள் மெல்லிய அலாரம் அடித்தது.
அதை அலட்சியம் செய்தது மாபெரும் தவறு! தவறுக்கான தண்டனையை அனுபவித்த பிற்பாடு தானே அறிவு வந்திருக்கிறது.
நந்தினியிடம் ஆதித்யனின் காதலைப் பற்றி கேட்டால் அதை மதிக்கிறேன் என்பதே பதிலாக வரும். ஆம்! அவனுடையது சிறுபிள்ளைத்தனமான இனக்கவர்ச்சி அல்ல. தொலைநோக்குப்பார்வையற்ற நேரப்போக்குக்கான உணர்வும் அல்ல.
அவன் அவளைக் காதலிக்கிறான், மெய்யாக! ஆழமாக! அழுத்தமாக! அதை அவனது கண்ணியமான நடத்தைகளும், கம்பீரமான விழிகளும் அவ்வபோது அவளுக்குத் திரைப்படம் போல காட்டுகின்றன.
அந்தச் சந்தர்ப்பங்களில் சங்கடமான உணர்வோ, சஞ்சலங்களோ நந்தினியிடம் எழுவதில்லை. அவனது குறிப்பு காட்டிய பேச்சை அவளால் ரசிக்க முடிந்தது.
எல்லாம் முடிந்தும் அவளால் முடியாத ஒரு காரியமும் இருந்தது. அது ஆதித்யனின் மேல் அவளுக்கு இருக்கும் உணர்வு காதலா நட்பா என்ற குழப்பத்துக்கு விடை காண்பது.
காதல் முறிந்த முப்பது நாட்களில் இன்னொருவனைக் காதலிக்கிறேன் என்று அவள் சொன்னால், சமூகத்தின் பார்வையில் அவளது ஒழுக்கம் கேள்விக்குறியாகும். அவள் நேரப்போக்குக்குக் காதலிப்பவளாகச் சித்தரிக்கப்படுவாள். இதெல்லாம் தாண்டி நந்தினிக்கே அவசரமாக இன்னொரு உறவில் நுழைய விருப்பமில்லை.
எப்படி முழு மனதோடு எவ்விதக் குறைகளையும் கணக்கில் கொள்ளாமல் அவளால் குமரனைக் காதலிக்க முடிந்ததோ அதே போலத் தான் ஆதித்யனும் அவளைக் காதலிக்கிறான்.
குமரன் அவளுடைய காதலுக்குச் செய்த அநியாயத்தை நந்தினி ஆதித்யனின் காதலுக்குச் செய்யக்கூடாதெனப் பிடிவாதமாக இருந்தாள்.
ஆதித்யன் போன்ற ஆண்மகனின் காதலுக்குத் தகுதியானவள் என்று எப்போது அவளுக்கே ஒரு பரிபூரண உணர்வு வருகிறதோ அன்றைய தினம் அவள் மனம் கொண்ட காதலை ஆதித்யனிடம் உரைப்பாள்.
அவளது மனதை அறிந்தவனைப் போல ஆதித்யனும் நடந்துகொண்டான்.
அவனது காதலை வெளிப்படுத்த பெரிய பெரிய பரிசுகளோ, பக்கம் பக்கமாகக் கவிதைகளோ அவனுக்குத் தேவைப்படவில்லை.
வாரயிறுதியில் சந்தித்த சமயங்களில் குட்டியாய் ஆக்சிடைஸ்ட் சில்வர் ஜிமிக்கிகள், கோன் வடிவத்தில் மடிக்கப்பட்ட செய்தித்தாள்களில் சூரியகாந்தியும் டெய்சியுமாக எளிமையான பொக்கேக்கள், கோவிலில் சந்திக்கையில் கொஞ்சமாக மல்லிச்சரம் – இப்படி அழகாய், அந்தச் சந்திப்பை அர்த்தமுள்ளதாக்கும் எளிய பரிசுகள் அவனது காதலின் தீவிரத்தை அவளுக்குச் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
அவளுக்காக அவன் மாறியிருந்தான்.
“இந்த வீக்கெண்ட் மியூசிக் டைரக்டர் கூட நீ பாட்காஸ்ட் பண்ணனும் தல”
“சாரிடா. கால் ரெண்டும் பயங்கரமா வலிக்குது”
இப்படி சொல்லிவிட்டு நந்தினியுடன் மெரினாவில் கால் கடுக்க நடப்பான் அதே வாரயிறுதியில்.
“மெட்டா க்ரியேட்டர்ஸ் மீட்டப் சோழால நடக்கப்போகுது ஏ.கே. நமக்கும் இன்விடேசன் வந்திருக்கு. நீ போற தானே?” – பவித்ரா.
“சாரி பவி! போன வாரம் இப்பிடி கூட்டமான இடத்துக்குப் போனதால ஜலதோசம் வந்துடுச்சு. அச்! நீயே போயிட்டு வந்துடு. குறைஞ்சது ஒரு மாசத்துக்கு நான் கூட்டமான இடத்தை அவாய்ட் பண்ணலாம்னு நினைக்குறேன்”
“ஜலதோசம் ஏழு நாள்ல போயிடுமே”
பவித்ராவின் கேள்விக்குச் சம்பந்தமே இல்லாத பதிலைச் சொல்லிவிட்டு நந்தினியோடு கபாலீஸ்வரரைத் தரிசித்துவிட்டு மயிலாப்பூரின் வீதிகளில் நடை போட்டுக்கொண்டிருப்பான்.
காதல் தான் ஒரு ஆணை எவ்வளவு வினோதமாக மாற்றிவிடுகிறது!
அந்த மாற்றத்தை ரசித்தவனுக்கும், அந்த மாற்றத்தை அவனுக்குள் உண்டாக்கியவளுக்கும் நாட்கள் ஒரு காதல் கடிதத்தில் எழுதப்படும் வாக்கியங்களைப் போல சுவாரசியமாகக் கழிந்தன.
வழக்கம் போல காலையில் அவனிடம் பேசிக்கொண்டே முக்தாவுடன் அலுவலகம் வந்தவளிடம் அந்த வாரயிறுதியில் முக்கியமான வி.ஐ.பி ஒருவரை பேட்டி எடுக்கப்போவதாகக் கூறினான் ஆதித்யன்.
“எல்லாம் எங்க தல தோனிய இண்டர்வியூ பண்ணுன நேரம். இன்னைக்கு நீங்க ஒரு செலிபிரிட்டி இண்டர்வியூவர் ஆகிட்டிங்க. நானும் உங்க யூடியூப் சேனலோட கமெண்ட் எல்லாம் வாசிக்குறேன். வஞ்சகம் இல்லாம ப்ரபோசல்ஸ் வருது. இதுல பிரபாசோட அடுத்த ‘பான் இந்தியா மூவில’ அவருக்கு நீங்க தான் தமிழ் டப்பிங் பேசணும்னு ஆயிரம் கோரிக்கைகள். உங்க குரலோட ரசிகைங்கிற முறையில ரொம்ப சந்தோசமா இருக்கு ஆதி”
“குரலுக்கு மட்டும் தானா?”
“ம்ம்… உங்க மேனரிசத்துக்குக் கூட ரசிகைனு சொல்லலாம்”
“அப்பிடி என்ன மேனரிசம்?”
“அதுல்லாம் உங்களுக்குத் தெரியாது. பாக்குற எனக்குத் தான் தெரியும்”
விளையாட்டாக நகர்ந்த உரையாடல் தீவிரத்தொனிக்குத் திரும்பியது நந்தினியால்.
“செவ்வாய்கிழமை அம்மா வர்றாங்க ஆதி. திருவான்மியூர்ல ஒரு கல்யாணம். அதுக்குப் போயிட்டு அப்பிடியே சிறுவாபுரி முருகனைத் தரிச்சிக்கணும்னு ப்ளான் போட்டிருக்காங்க. ஆனா என்னால இந்த வாரத்துல வேற எங்கயும் நகர முடியாது. எங்க புராஜெக்ட்ல திடீர்னு ஒரு பின்னடைவு. நாங்க டெவலப் பண்ணிட்டிருக்குற சாப்ட்வேர்ல பேமெண்ட் மாட்யூல்ல எரர் வருது. அதைச் சரி பண்ண தலைய பிச்சிட்டிருக்கோம். இந்த எரரைச் சரி பண்ணுனாதான் நிம்மதியா அடுத்தக்கட்ட வேலைய பாக்க முடியும்”
“கூல் நந்தினி. ஆன்ட்டி வரட்டும். அவங்களை அம்மா கூட கோர்த்து விடுறேன்”
“என்ன? என்ன பண்ணப்போறிங்க ஆதி?” பதறிவிட்டாள் நந்தினி.
“அட பயப்படாதம்மா. அவங்க கிட்ட என் காதலைப் பத்தி பேசக்கூடாதுனு சொல்லிடுறேன். கோவில், குளம் போறதுக்கு ஆன்ட்டிக்கு அம்மா கம்பேனியனா இருப்பாங்க. நீ எதைப் பத்தியும் கவலைப்படாம வேலைய பாரு. ஹான், எந்த ட்ரெயின்ல வர்றாங்க?”
“செந்தூர் எக்ஸ்ப்ரஸ்ல”
“அது செங்கல்பட்டு வர லேட் ஆகுமே. எப்பிடி அவங்க உன்னோட பி.ஜிக்கு வருவாங்க? நீ அதுக்கு முன்னாடியே ஆபிஸ் போகணும்ல?”
நந்தினிக்கும் அந்த தயக்கம் இருந்தது. அவளும் முக்தாவும் தங்கியிருக்கும் பி.ஜியில் வேறு யாரிடமும் இரு பெண்களும் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்வதில்லை. எனவே யாரிடம் உதவி கேட்பதெனத் தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தாள்.
“நான் ஆன்ட்டிய ஸ்டேசன்ல இருந்து பிக்கப் பண்ணி உன்னோட பி.ஜில விட்டுடுறேன்”
“நீங்களா?”
“ஆமா! நான் தான். நான் உன்னைப் பாக்க அடிக்கடி வர்றதால உங்க பி.ஜி வாட்ச்மேன் என்னைத் தடுக்கமாட்டார். பயப்படாத. ஆன்ட்டி கிட்ட என் லவ் பத்தி மூச்சு விடமாட்டேன்”
அந்நேரத்திலும் தனக்காக யோசிப்பவன் மட்டும் எதிரில் இருந்திருந்தால் தாடி அடர்ந்த கன்னங்களைக் கிள்ளிக் கொஞ்சியிருப்பாள் நந்தினி.
‘இதெல்லாம் நட்பில் சேருமா? காதலில் வராதா?’ என்று மனசாட்சி கேட்ட கேள்விக்கு அவள் வழக்கம் போல பதிலளிக்காமல் ஆதித்யனுக்கு நன்றி கூறினாள்.
அவனும் சொன்னது போலவே செவ்வாய்கிழமையன்று செங்கல்பட்டு இரயில் நிலையத்துக்குச் சென்று யுவராணியிடம் உடைமைகளை வாங்கிக்கொண்டான்.
“நீங்க வருவிங்கனு நந்தினி சொன்னா தம்பி. நானே போயிடுவேன்னு சொன்னா எங்க கேக்குறா? உங்களுக்கு வீண் அலைச்சல்”
“நான் என்ன நடந்தா வந்திருக்கேன் ஆன்ட்டி? கார்ல வந்தேன். கார்ல உங்களை அழைச்சிட்டுப் போகப்போறேன்”
பணிவாகப் பேசியவனை யுவராணிக்குப் பிடிக்காமல் போகுமா? அதோடு முன்னர் இலஞ்சியில் சந்தித்தபோதும் முதிர்ச்சியாய் பேசியவனாயிற்றே!
தன்னுடன் காரில் ஏறியவரிடம் மெதுவாகக் குமரனைக் குறித்து விசாரித்தபடி காரைக் கிளப்பினான் ஆதித்யன்.
“ஹூம்! அவனுக்கு என்ன? பணக்காரச்சீமான் வீட்டு மருமகன். அடுத்த மாசம் அவனும் அவன் பொண்டாட்டி வினிதாவும் வெளிநாட்டுக்குப் போகப்போறாங்களாம். அதுக்கு விசா எடுக்க மெட்ராசுக்குப் போகப்போறான்னு ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க. அவன் நல்லா இருக்கான். அவனை நினைச்சு நான் பெத்த தங்கம் உடைஞ்சு போய் கிடக்குது”
“கவலைப்படாதிங்க ஆன்ட்டி. சீக்கிரமே நந்தினிக்கு ஏத்த ஒருத்தன் வருவான்”
“வரட்டும் தம்பி. அதை விட வேற என்ன எனக்கு வேணும்?”
யுவராணியின் குரலிலிருந்த ஏக்கம் ஆதித்யனின் இதயத்தைத் தொட்டது.
அவரை ஜோலோ பி.ஜியின் இரண்டாம் தளத்திலிருக்கும் நந்தினியின் அறையில் கொண்டு போய் விட்டவன் “நீங்க சிறுவாபுரி போகணும்னு ஆசைப்பட்டிங்களாமே. நந்தினி சொன்னாங்க. உங்க கூட எங்கம்மா வருவாங்க. அவங்களுக்கும் அங்க போகணும்னு ரொம்ப நாளா ஆசை” என்றான்.
“ரொம்ப சந்தோசம் தம்பி. நந்தினிக்கு வேலை அதிகமா இருக்கே, எப்பிடி கோயிலுக்குப் போறதுனு தெரியாம தவிச்சேன்.”
“அம்மாக்கு இங்க நிறைய கோயில் தெரியும் ஆன்ட்டி. ஒரு வாரம் இருந்து ஜாலியா கோவில் டூர் போயிட்டு அப்புறமா இலஞ்சிக்குப் போகலாம்”
எந்தவித பந்தாவும் இல்லாமல் தனது உடமைகளை அறை வரை எடுத்து வந்து கொடுத்து காலையுணவையும் ஆர்டர் செய்து சாப்பிட்டு முடித்ததை உறுதி செய்துவிட்டுக் கிளம்பிய ஆதித்யனின் அக்கறை யுவராணியின் மனதைத் தொட்டது.
அவனை நண்பன் என்று யுவராணியிடம் நந்தினி கூறியிருந்தாள். முதலில் ஆண்பிள்ளை நட்பா எனச் சுணங்கியவர் அவனது அன்னை, தந்தையைப் பற்றி சொன்னதும் மரியாதையானக் குடும்பத்துப் பையன் என்று எண்ணிக்கொண்டார்.
இன்றோ அந்த எண்ணம் இன்னும் இன்னும் உயர்ந்திருந்தது.
மறுநாள் திருவான்மியூர் திருமணத்துக்குச் சென்றுவிட்டு பி.ஜிக்கு வந்தவர் வேலை முடித்து வந்த மகளிடம் ஆதித்யனைப் பற்றி வினவினார்.
“அவருக்கென்ன? ரொம்ப பிசியான ஆளு. சோசியல் மீடியா மேனெஜ்மெண்ட் கம்பெனி, போட்டோகிராபினு எல்லா நேரமும் அவருக்கு வேலை காத்திருக்கும். ஆனா ஃப்ரெண்ட்சுக்கு ஒன்னுனா ஓடி வந்துடுவார்”
கண்கள் மலரச் சொன்னபடி இரவுணவுக்காகக் கோதுமை மாவைப் பிசைந்த மகளை ஆசையாகப் பார்த்த யுவராணியின் மனதுக்குள் ஆயிரம் சிந்தனைகள்!
“அந்தத் தம்பிக்கு என்ன வயசு இருக்கும்?”
“டிசம்பர் வந்தா இருபத்தொன்பது ஆகப்போகுது”
‘இதெல்லாம் மகளுக்குத் தெரிந்திருக்கிறதே’ அன்னை உள்ளம் குறித்துக்கொண்டது.
மறுநாள் காலையில் காருடன் வந்துவிட்டார் மலர்விழி.
அவரை அன்போடு வரவேற்று காலையுணவாகச் செய்திருந்த இடியாப்பத்தைப் பரிமாறினார்கள் நந்தினியும் முக்தாவும்.
வந்தவரோ இளம்பெண்களைத் தவிர்த்துவிட்டுத் தனது வயதையொத்த யுவராணியிடம் கலகலப்பாகப் பேசலானார்.
“அவங்க ஊருக்குப் போனதும் நீங்க என் கிட்ட தான் பேசணும் ஆன்ட்டி”
நந்தினி மறைமுகமாக எச்சரித்தாள்.
“உனக்கு எதுக்கும்மா சிரமம்? நாங்க வாட்சப்ல பேசிப்போம்” என்று யுவராணியுடன் கூட்டுச் சேர்த்து சிரித்தார் அவர்.
நீண்டநாட்கள் கழித்து அன்னையின் முகம் சிரிப்பில் பிரகாசிப்பதைக் கண்ணார ரசித்துவிட்டுத் தோழியோடு வேலைக்குக் கிளம்பிவிட்டாள் நந்தினி.
அவள் கிளம்பியதும் இரு பெண்மணிகளும் காரிலேறி சிறுவாபுரி முருகனைத் தரிசிக்க பயணித்தார்கள்.
கோவிலுக்குச் சென்று முருகனைத் தரிசித்துவிட்டு ஓய்வாக அமர்ந்து பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டபடியே உரையாடினார்கள் இரு அன்னையரும்.
“நந்தினிய பத்தி ஆதி தினமும் ஏதாச்சும் பேசிக்கிட்டே இருப்பான். இந்தப் பையனுக்குக் கோவிலுக்குப் போற பழக்கமே இல்ல. ஆனா நந்தினியோட ஃப்ரெண்ட்ஷிப் வந்ததுக்கு அப்புறம் வாரவாரம் அவ கூட கோவிலுக்குத் தவறாம போயிடுறான்.”
மலர்விழி சொல்ல யுவராணி பூடமாகச் சிரித்தார்.
“நந்தினிக்குக் கடவுள்பக்தி அதிகம், எங்களுக்குச் சோதனை வந்தப்ப எல்லாம் அந்தப் பக்தி தான் தைரியத்தைக் குடுத்திருக்கு. என் மகளுக்குனு சில ஆசைகள் இருந்துச்சு. அது சுக்குநூறா உடைஞ்சு போனது உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். அந்தச் சமயத்துல கூட கடவுள் துணை இருந்ததால தான் அவளால நிதானமா அந்தச் சோகத்தைக் கடந்து வர முடிஞ்சுது. அதுக்கு இன்னொரு காரணம் ஆதி தம்பிக்கும் அவளுக்கும் இருக்குற நட்பு. முதல்ல நான் கூட ஆண்பிள்ளை கூட ஃப்ரெண்ட்ஷிப்பானு தயங்குனேன். ஆனா ஆதி தம்பி ரொம்ப பக்குவமானவர்”
மலர்விழிக்குப் பெருமையில் வார்த்தை பிடிபடவில்லை.
“அவனுக்கு நந்தினி மேல விருப்பம் இருக்கு” என்று சொல்லிவிட்டார் பெருமிதத்தின் உச்சத்தில்.
யுவராணியின் கண்களில் மெல்லிய அதிர்ச்சி! அதே நேரம் பிரகாசமும் கூட.
மலர்விழி ‘ஐயோ உளறிவிட்டேனே’ என்று விழிக்கையிலேயே அவர் சிரித்தார்.
“அவரை மாதிரி ஒரு பக்குவமான பையனைத் தேடுனாலும் என்னால கண்டுபிடிக்க முடியாது.”
“ஹூம்! ஆனா அந்தப் பக்குவம் தான் அவனுக்கு எதிரி. ஆமா ராணி! இப்ப நந்தினி காதல் முறிஞ்ச சோகத்துல இருக்காளாம். இந்த நிலமைல ஒரு பொண்ணு மனசு பலகீனமா இருக்கும். அதை உபயோகிச்சு அவ வாழ்க்கைக்குள்ள நுழைய விருப்பமில்லனு சொல்லுறான். மனசு முழுக்க நந்தினி மேல கொள்ளையா பிரியம் வச்சிருக்கான்”
யுவராணிக்குக் கண்கள் கலங்கிப்போயின. இவ்வளவு அன்பானவன் தன் மகளின் வாழ்க்கையில் வரவேண்டும் என்பதற்காகத்தான் குமரனின் காதலைக் கடவுள் பொய்க்கவைத்தாரோ என்று எண்ணிக்கொண்டார் அவர்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


