“உனக்காக என் உலகத்தையே நான் தீயிட்டுக் கொளுத்தினேன்; ஆனால் என் காயங்களைக் காணாமல் உன் வலியை மட்டுமே நீ பேசுகிறாய். உன் சுதந்திரத்திற்காக என் சிறையை நான் மனமுவந்து ஏற்றுக்கொண்டேன், இந்தக் காதலில் தோற்றது நானா, இல்லை உன் பிடிவாதமா?”
-நிலவன்
திருமதி நிலவன்! இந்த ஒற்றை அழைப்பு போதும் நியதியைப் பெரும் போராட்டத்தில் தள்ளுவதற்கு. கண்கள் எல்லாம் கலங்கி மூச்சுவிடச் சிரமப்பட்டு ஆக்சிஜனைத் தேடியது அவளது நுரையீரல்.
இரண்டு ஆண்டுகளாக அவள் ஏங்கித் தவிப்பதும், தூக்கம் தொலைத்துக் குற்றவுணர்ச்சியில் உழலுவதும் இந்தத் திருமதி நிலவன் என்ற பெயரைத் தனக்குத் தந்தவனை எண்ணித்தானே! அந்தப் பெயருக்கு எந்த நியாயமும் சேர்க்காமல். பெயருக்குரியவனைத் தனிமையில் ஆழ்த்திவிட்டுச் சென்னையில் தான் மட்டும் சுதந்திரமாய் வாழ்வது நியதிக்கு எப்போதுமே இருக்கும் உறுத்தல்.
இதை எல்லாம் தாண்டி அவள் வைராக்கியமாய் அவனை விட்டு விலகியிருக்கவும் சில காரணங்கள், சில காரணகர்த்தாக்கள் இருப்பது உண்மை.
‘என்னையா பொம்மலாட்டப் பொம்மை போல உங்கள் இஷ்டத்துக்கு ஆட்டிவைத்துப் பார்க்கிறீர்கள்? எதற்கும் அசைந்துகொடுக்காமல் நியதி யாரென உங்களுக்குக் காட்டுகிறேன்’ என அவள் சூளுரைக்காத நாளே இல்லை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
யாரை எண்ணி வைராக்கியம் காத்தாளோ அவர்களிடமிருந்து சின்னதாய் ஒரு மொபைல் அழைப்பு வராதா எனத் தவிக்காத பொழுதும் இல்லை. ஆனால் எப்போது அவள் அவர்களுக்கு முக்கியமாய் இருந்தாள், இப்போது அவளை எண்ணி வருந்துவதற்கு?
அவளை மனங்கவர்ந்த மகாராணியாய்க் கொண்டாடியவன் இந்த உலகில் நிலவன் மட்டுமே! அவனை அல்லவா அவள் வதைத்திருக்கிறாள். பின்னர் எங்கிருந்து திருமதி நிலவன் என உரிமையாய்ச் சொல்லிக்கொள்வது?
“என்ன? ரெண்டு வருஷத்துல அதுவும் மறந்துபோச்சா?” என அவன் சீண்டவும்
“அது எப்பவும் மறக்காது நிலன். ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன், உங்களை நான் எப்பவும் வெறுத்தது இல்ல.” என்றாள் நியதி.
நிலவன் சத்தமாய் நகைத்தான். பின்னர் சீற்றத்தோடு அவளைப் பார்த்தான்.
“என்னை உதறிட்டு இப்பிடித் தனியா இங்க வாழுறதுக்குப் பேர் என்ன? இதுதான் காதலா? இதுதான் காதல்னா நீ என்னை வெறுக்கவே செஞ்சிருக்கலாம் நியதி.”
நியதியின் முகத்தில் பதில் சொல்லத் தெரியாத திணறல் அப்பட்டமாய்த் தெரிந்தது. நிலவன் தன்னைச் சமாளித்துக்கொண்டான்.
“சரி! நீ சொல்லுற மாதிரியே வச்சுப்போம். நீ என்னை வெறுக்கல. காதலிக்குற. ஆனா நீ என்கூடச் சேர்ந்து வாழ விரும்பல. இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுற. அதே மாதிரி ஊர்ல இருக்குற யாரைப் பத்தியும் உனக்குக் கவலை இல்ல. ஆனா அவங்க உன்னைப் பத்தி கவலைப்படணும்னு நினைக்குற. இந்த மனநிலைக்குப் பேர் என்ன நியதி?”
“உங்க யாரோட வாழ்க்கையிலயும் எனக்கு முக்கியத்துவம் இல்லாதப்ப என்னோட அன்பையும் காதலையும் ஏன் உங்ககிட்ட நான் கொட்டணும் நிலன்? என்னை யாருமே முன்னிலைப்படுத்துனதில்ல. என் ஆசைகளை, என் கனவுகளை… மத்தவங்களை விடுங்க. நீங்க… நீங்க என்ன செஞ்சீங்க?”
நிலவனின் கண்களில் வேதனை படர்ந்தது செவ்வண்ணமாய்! கூடவே இதழ்களில் விரக்தியான முறுவலும்.
“நான் என்ன செஞ்சேனா? உலகத்துல காதலிச்சுக் கல்யாணம் செஞ்சவன் எவனும் செய்யாததை நான் செஞ்சிருக்கேன்டி. கல்யாணம் ஆன மூணாவது நாள் என்னை விட்டு விலகி சென்னையில படிக்கப்போறதா சொன்ன என் புதுப்பொண்டாட்டியோட ஆசைய நிறைவேத்துனவன் நான். அவ ஞாபகத்தோட ரெண்டு வருஷத்தை ஆற்றாமையோட கழிச்சிட்டிருக்கேன். காலம் பூராவும் இதுதான் என் தலையெழுத்துனு வாழவும் நான் தயார். நான் என்ன செஞ்சேன்னு கேக்குற நீ”
விலகிவிட்டான் நிலவன். அவளுக்காக அவன் தியாகம் செய்தது அவளையே! ஆனால் அது நியதிக்குப் புரியவில்லை. புரியாவிட்டாலும் பரவாயில்லை. இப்படிப் பேசி வதைக்காதே என்னை என்று அடிபட்ட பார்வை பார்த்தான் நிலவன்.
நியதி கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.
“நான் சொன்னதை நீங்க கேட்டிருந்தீங்கனா இது எதுவுமே நடந்திருக்காதுல்ல.”
“அப்ப இருந்த சூழல்ல எனக்கு உன்னைக் கல்யாணம் பண்ணுறதுதான் சரினு தோணுச்சு நியதி. அதுக்காக இப்பவும் நான் வருத்தப்படல. நாம நினைச்சிருந்தா கல்யாணத்துக்கு அப்புறம் இந்தப் பிரிவைத் தவிர்த்திருக்க முடியும். நீ அதுக்கு மனசு வைக்கல. ப்ச்! நான் இப்பிடித்தான் வாழப்போறேன் கடைசி வரைக்கும். இன்னொரு தடவை கல்யாணம் கருமாதினு பேசி என்னைச் சாகடிக்காத.”
சுள்ளென்று எரிந்து விழுந்தவனின் வாயைப் பொத்தினாள் அவள்.
“என்ன பேசுறீங்க நீங்க? வார்த்தைக்கும் சக்தி உண்டு நிலன்” மீண்டும் கண்களில் கண்ணீர் திரள நிலவனுக்கோ அதைக் காணும் தெம்பில்லை.
“இப்ப நான் என்னதான் செய்யணும்னு எதிர்பாக்குற?”
“இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்க குடும்பத்தோட சந்தோஷமா இருங்க நிலன். நான் டிவோர்ஸ் குடுத்துடுறேன்”
அவள் சொன்னதுதான் தாமதம், நிலவனின் கரம் ஆக்ரோஷமாய் நியதியின் கன்னத்தில் இறங்கியது. கண்களுக்குள் ஸ்டார் பறப்பது போல இருந்தது அவளுக்கு. கன்னமோ விண்விண்ணென்று தெறித்தது.
உழைக்கிறவனின் கை உரமேறிப்போயிருக்கும் அல்லவா! அந்தக் கையின் வண்ணத்தில் சிவந்து கன்றிப்போனது நியதியின் கன்னம்.
அதைவிடச் செவ்வண்ண வரிகள் பரவிக்கிடந்த விழிகளோடு அவளைக் கடுமையாய் உறுத்துவிழித்த நிலவனின் ஆட்காட்டி விரல் எச்சரிக்கையாய் அவளை நோக்கி நீண்டது.
“ராஸ்கல்! நானும் போனா போகுது, இவளை நாம காயப்படுத்திடக் கூடாதுனு ரொம்பப் பொறுமையா இருந்துட்டேன், அதை நீ அட்வான்டேஜா எடுத்துக்கிட்டு உன் இஷ்டத்துக்குப் பேசுவியா? இன்னொரு தடவை, கல்யாணம் டிவோர்ஸ்னு பேசிப் பாரேன், தொலைச்சிடுவேன் உன்னை”
அவன் அறைந்த அதிர்ச்சி இறங்கும் முன்னர் கடுமையாய் எச்சரித்து நியதியைச் சிலையாய்ப் பயத்தில் உறையவைத்துவிட்டான் நிலவன்.
அவள் கண்சிமிட்டாமல் ஒரு கரத்தால் கன்னம்பற்றி நிற்பதைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தாலும் பேசிய வார்த்தைகளை அவளால் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியுமா என்ன?
“உனக்காக, உன்னைக் காதலிச்சதுக்காக நீ ஆசைப்படுறேன்னு சென்னைக்கு அழைச்சிட்டு வந்து ஹாஸ்டல் பாத்துச் சேர்த்துவிட்ட கையோட உன்னை விட்டே விலகுனேன் நான். இதோ இப்பகூட நீ அவ்ளோ தூரம் கூப்பிட்டும் உன் வீட்டுக்கு வரலனா உன் மனசு கஷ்டப்படுமேனு மானம் ரோஷத்தைக் கழட்டி வச்சிட்டு உன் வீட்டுல நின்னுட்டிருக்கேன். இதுக்கு மேல நான் என்னடி பண்ணணும்? உன்னைக் காதலிச்சதுக்கு என்னால முடிஞ்ச எல்லாத் தியாகத்தையும் நான் பண்ணிட்டேன். நீயும் என்னைக் காதலிச்சதா ஞாபகம். அந்தக் காதலுக்காக இதுவரை என்ன பண்ணிருக்க? சொல்லு! நானும் தெரிஞ்சுக்குறேன்”

நியதியின் கண்கள் அலைபாய அவள் மனமோ பூஜ்ஜியம் என்றது. அதாவது இந்தக் காதலுக்காக அவள் எதையும் செய்யவில்லை. பதில் சொல்லாமல் கண்ணீரை உகுத்தவளுக்கு நிலவன் இன்னும் இரண்டு முறை அறைந்தால்கூடப் பொறுத்துக்கொள்ளும் பக்குவம்! ஆனால் அவளது அமைதி அவனை அல்லவா துண்டாடியது.
“இதுவரைக்கும் எதுவும் செஞ்சதில்ல. இனியும் நீ எதுவும் செய்யமாட்ட”
“நிலன்…” வலியை மறந்து வாய்திறந்தவள் அவனது முறைப்பில் மீண்டும் மௌனியானாள்.
“ஷ்ஷூ! நிதர்சனத்தைச் சொன்னேன். நீ மாறமாட்ட நியதி. அதுக்காக என் வாழ்க்கையில என்ன நடக்கணும்னு நீ தீர்மானிக்க வேண்டிய அவசியமில்ல. நீ இன்னும் படி. ஆடிட்டர் ஆகு, பச்சை இங்க்ல சைன் பண்ணு. உன் சாதனைய நீயே மெச்சிக்க. எனக்கு அதுல எந்தப் பிரச்சனையும் இல்ல.”
“நான் என்னதான் செய்யணும்னு எதிர்பாக்குறீங்க நிலன்?”
“சொன்னா செஞ்சுடுவியா?” எகத்தாளமாய்க் கேட்டான் நிலவன்.
“சொல்லுங்க!” திடமாய் நிமிர்ந்து கேட்டவள் அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாள். ஆச்சரியத்தில் விரிந்த அவனது விழிகள் வெகுவிரைவாய் அலட்சியத்தை உடுத்திக்கொண்டன.
“என்னமோ செய்யப்போற மாதிரி தில்லாக் கேக்குற?”
“சொல்லுங்க நிலன். நம்ம காதலுக்காக நான் என்ன செய்யணும்னு எதிர்பாக்குறீங்க?” தெளிவும் அழுத்தமுமாய் உதிர்ந்த வார்த்தைகள் இப்போதும் நிலவனுக்குள் நம்பிக்கையை விதைக்கவில்லையே!
கண்களில் கணக்கீட்டுடன் அவன் பேச ஆரம்பித்தான்.
“எல்லாத்தையும் உதறித் தள்ளிட்டு நீ இங்க வந்த. வந்ததோட நோக்கத்தையும் அடைஞ்ச மாதிரி தெரியுது. ஒரு காலத்துல நீ என்னைக் காதலிச்சது உண்மையா இருந்தா யாரையெல்லாம் உதறித் தள்ளிட்டு வந்தியோ அவங்ககூடச் சேர்ந்து வாழத் திரும்ப ஊருக்கே வந்துடு. உனக்காக அங்க ரெண்டு குடும்பம் காத்திருக்கு”
“முடியாது” யோசிக்காமல் பதில் வந்தது அவளிடமிருந்து.
நிலவனின் கண்களில் அக்னி மூண்டது.
“என்னோட உணர்வுகளுக்கு மதிப்பு குடுக்காதவங்க முகத்துல முழிக்க எனக்கு விருப்பமில்ல. அவங்க மத்தியில வாழ்ந்து மறுபடி மதிப்பிழந்துபோகவும் பிடிக்கல.” என்றாள் ஆணித்தரமாக.
“எனக்கும்தான் இந்தச் சென்னை பிடிக்கல. உன் வீட்டுக்கு வர்றது பிடிக்கல. நான் காதலிச்சுக் கல்யாணம் பண்ணுனவளைப் பிரியப் பிடிக்கல. நான் உனக்காக இதெல்லாம் செஞ்சேன்தானே? ஓஹ்! நியதிங்கிறவங்க ரொம்ப அறிவாளி. மெத்தப் படிச்ச மேதாவி. இந்த ஸ்கூல் ட்ராப் அவுட்டுக்காக இதெல்லாம் செய்யணுமா நீங்க?”
“ஏன் நிலன் இப்படியெல்லாம் பேசுறீங்க? நான் உங்களை அந்தக் கண்ணோட்டத்துல உங்களை எப்பவும் குறைவா நினைச்சதில்ல”
கண்ணீரோடு அரற்றினாள் நியதி.
“என்னை உயர்வா நினைக்கிறவ ஏன் எனக்காக நான் கேட்டதைச் செய்யத் தயங்குற? பிடிச்சவங்களுக்காக நமக்குப் பிடிக்காததைக்கூடச் செய்ய வச்சிடும் உண்மையான காதல். நான் என் காதலுக்கு உண்மையா இருக்குறேன். நீயும் என்னைக் காதலிச்சிருந்தா நான் கேட்டதை மறுக்காம செய்வ. அட்லீஸ்ட் செய்ய முயற்சி பண்ணுறேன்னு சொல்லியிருப்ப. உன் மறுப்பும் தயக்கமும் நம்ம காதல்ல நான் ஒருத்தன்தான் பைத்தியக்காரன்னு சொல்லாமச் சொல்லிடுச்சு. எது எப்பிடியோ, எனக்கு ஏழு மணிக்கு ட்ரெயின். நான் இப்ப கிளம்புனா சரியா இருக்கும். கிளம்புறேன்”
தனது மனதிலிருப்பதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து தனக்கான அறைக்குள் போய் மறைந்தவன் எப்போது வீட்டை விட்டுக் கிளம்பினான் என்றுகூட நியதிக்குத் தெரியாது. அவள்தான் கதவை அடைத்துக்கொண்டு தனது அறையில் அழுது தீர்த்தாளே!
அழுகை அடங்கிக் கண்ணீர் வற்றி அவள் நிமிர்ந்தபோது மணி ஏழு நாற்பது. நிலவனைச் சுமந்துகொண்டு ரயில் சென்னையை விட்டுக் கிளம்பி நாற்பது நிமிடங்கள் கடந்துவிட்டன.
பெரும் பாரமொன்று அவளது மனதில் ஏறியமர்ந்துகொண்டது. கோபமும் ஆற்றாமையுமாக இருந்தாலும் இன்றளவும் தன் மீது கொண்ட காதலை விடாமல் இறுகப் பற்றியிருப்பவனின் பெருந்தன்மைக்கு முன்னே தனது வைராக்கியம் எல்லாம் கயமைத்தனமாகத் தெரிந்தது நியதிக்கு.
அன்றிரவெல்லாம் உறக்கமில்லை. மறுநாள் விடியலில் ப்ரீத்தியிடமிருந்து மொபைல் அழைப்பு.
“நான் சொன்னேன்ல சிங்காநல்லூர்ல ஒரு கொரியன் ஸ்கின்கேர் கம்பெனி. அங்க நிஜமாகவே வேக்கன்ஸி இருக்குடி. நீ கிளம்பி கோவைக்கு வா. நாம இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணுவோம். கண்டிப்பா செலக்ட் ஆகிடுவோம், அப்புறம் வீக்கெண்ட்ல சென்னைக்குப் போய் வீட்டைக் காலி பண்ணி நம்ம திங்ஸை மறுபடி கோவைக்கு எடுத்துட்டு வந்துடலாம்”
ப்ரீத்தி எதிர்காலத் திட்டங்களை மனதில் வைத்துப் பேசிக்கொண்டே போக அனைத்துக்கும் சேர்த்து “ம்ம்! சரி ப்ரீ” என்று பதிலளித்தவள் கனத்த மனதோடு தனது சான்றிதழ்களை எடுத்துவைக்க ஆயத்தமானாள்.
அதே நேரம் ரயிலில் திருநெல்வேலியில் இறங்கிய நிலவனோ இயல்பு வாழ்க்கையென அவன் வரையறுத்து வைத்திருந்த வாழ்க்கைக்குள் ஐக்கியமாக ஆயத்தமானான்.
ஆங்கிலத்தில் ‘தி பால் இஸ் இன் யுவர் கோர்ட்’ என்பார்களே! அதுபோல இனி முடிவெடுக்க வேண்டியது நியதி மட்டுமே!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


