“வெளியுலகிற்கு நான் எந்த உணர்வுகளும் அற்ற ஒரு உறைபனிப் பாறைதான்; அதற்காக என்னிடம் இதயம் இல்லை என்று அர்த்தமல்ல. என் மனிதர்கள் என்று வந்துவிட்டால், எனக்கான அத்தனை நியதிகளையும் உடைத்தெறியும், ஒரு கொதிக்கும் எரிமலையாக மாற எனக்கு ஒரு நொடி போதும்!”
–நிலவன்
ஜன்னல் கம்பிகளில் கரங்கோர்த்து நிற்கும் மழைத்துளிகளைப் பார்த்தபடி நெல்லை எக்ஸ்பிரஸின் ஸ்லீப்பர் கோச்சின் இருக்கையில் அமர்ந்திருந்தான் நிலவன்.
முந்தைய நாள் இரவு ரயில் ஏறியிருந்தான். இதோ தாம்பரம் வந்துவிட்டது. மணி ஆறைத் தொட்டுவிட்டது. விழுப்புரத்தில் ரயில் கிளம்பும்போது ஆரம்பித்த தூறல் மேல்மருவத்தூர் வந்தடைந்தபோது பெருமழையாகியிருந்தது.
உறங்கி எழுந்தவனின் விழிகளில் விழுந்தது எல்லாம் மழை மட்டுமே! தாம்பரம் வந்ததும் தேநீர் விற்பவர்கள், சமோசா விற்பவர்கள் வர எதையும் வாங்கி உண்ணத் தோன்றவில்லை அவனுக்கு.
மனமெல்லாம் சென்னையின் மீதே! சென்னை! அவன் மிகவும் வெறுக்கும் இடத்தில் முதலிடம் சென்னைக்கே! அவனுக்கு உரிமையான ஒன்றை இழுத்துப் பிடித்துத் திருடிக்கொண்ட நகரமாயிற்றே! இருப்பினும் பிடிக்காத ஒருவரை அடிக்கடி மனம் நினைக்கும் அல்லவா! அதே போன்றதொரு நினைப்புதான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
தந்தையின் தோழருடைய மகனுக்குத் திருமணம். துளசிராஜா கடையநல்லூர்க்காரர். சென்னையில் தொழிலை ஆரம்பித்து விஸ்தரித்து இப்போது சொல்லக்கூடிய அளவுக்கு அங்கே செல்வந்தர் ஆகிவிட்டார். மகனின் திருமணத்துக்கு வைத்தியலிங்கம் குடும்பத்தோடு வரவேண்டுமெனச் சொல்லியிருந்தார்.
ஆனால் வைத்தியலிங்கத்தின் மனைவி வசந்தாவுக்குச் சிறிது உடல்நலமில்லை. அவரது சம்பந்தி வீட்டிலும் தற்போது ஏதோ சின்னப் பிரச்சனை. அதனால் திருமணத்தில் கலந்துகொள்ளும் மனநிலை அவருக்கு இல்லை. எனவே மகனை அனுப்பிவைத்தார் மனிதர்.
ஒன்பது மணிக்குத்தான் முகூர்த்தம்! எப்படியும் ஏழு மணிக்கு எழும்பூர் சென்றுவிட்டால் வெயிட்டிங் ரூமில் குளித்து உடைமாற்றி அங்கிருந்து ஆட்டோ பிடித்துத் திருமணம் நடக்கும் மண்டபத்துக்குப் போய்விடலாமென்ற எண்ணம் அவனுக்கு.
இந்தத் திருமணம் மட்டும் அவன் சென்னைக்கு வருவதற்கான காரணமில்லை. இன்னும் ஒரு ஆன்லைன் விற்பனை செயலியில் விற்பனையாளராக வி.வி அக்ரோ புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட்டைப் பதிவு செய்வதற்கான நேர்காணல் ஒன்று நடைபெறவிருக்கிறது.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற கணக்கில்தான் அவன் சென்னை வந்ததே! ரயில் ஏறியபோதே வந்தோமா வேலையைப் பார்த்தோமா ஊருக்குச் சென்றோமா என இருக்கவேண்டுமென மனசாட்சி அறிவுறுத்தியிருந்தது.
“நீ கல்யாணத்துக்குப் போற. கல்யாணத்தை மட்டும் அட்டெண்ட் பண்ணிட்டு உன் வேலைய முடிச்சிட்டு வா நிலவா. வேற எதையும் கவனத்துல வச்சுக்காத” என்று அவனது இரட்டைச் சகோதரி நிலா சொல்லித்தான் அனுப்பியிருந்தாள்.
தாம்பரத்தில் நின்ற ரயில் மெதுவாய் வேகமெடுக்க ரயில் வேகத்துக்கு ஈடாய் மழையும் வேகமெடுத்துப் பொழிய ஆரம்பித்தது.
“தி.நகர், எக்மோர்ல எல்லாம் நேத்து நைட் ஆரம்பிச்ச மழை நிக்கவேல்லையாம். இது தொடர்ந்துச்சுனா தண்ணி தேங்கி நின்னுடும். எப்பவும் டிசம்பர்லதான் சென்னைக்கு வருணதோஷம் பிடிச்சிக்கும். இப்ப சீக்கிரமே ஆரம்பிச்சிடுச்சு போல” என்று பக்கத்து இருக்கைப் பயணிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
நிலவன் அவர்கள் பேச்சில் காதை ஒட்டிக்கொண்டான். நேரம் போகவேண்டுமே! மொபைலைப் பார்க்கத் தோன்றவில்லை.
இப்படியே ரயில் சென்னை எழும்பூரை வந்து சேரத் தனது உடைமைகள் அடங்கிய ஷோல்டர் பேக்குடன் இறங்கினான் நிலவன். இறங்கியபோதும் மழை விடவில்லை. அவன் இப்போது தி.நகர் பார்த்தசாரதிபுரத்திலிருக்கும் விஜயா மஹாலுக்குச் செல்லவேண்டும்
“ஸ்டேஷனைச் சுத்தி தண்ணி தேங்கி நிக்குது. ஆட்டோக்காரங்க அநியாயமா காசு கேக்குறாங்கனு ரேபிடோல ஆட்டோ தேடுனா அவங்க எல்லாரும் ரைடை கேன்சல் பண்ணுறாங்க”
பயணிகள் பேசிக்கொண்டே செல்வது கேட்டது அவனுக்கு. சென்னையில் எங்கே செல்ல வேண்டும் என்றாலும் ரேபிடோ, ஓலா வண்டிகள் ஓடும் என்பதால் துளசிராஜாவை ரயில் நிலையத்துக்கு வரவேண்டாமெனச் சொல்லிவிட்டான்.
இப்போது போன் செய்யவும் முடியாது. வெயிட்டிங் ரூமிலோ கூட்டம் அள்ளியது. அவன் இயலாமையோடு பார்த்துக்கொண்டிருக்கையிலேயே தனது முதுகின் பின்னே இரண்டு விழிகள் துளைப்பதை அவனால் உணர முடிந்தது.
சட்டெனத் திரும்பியவன் அங்கே ரெயின்கோட் அணிந்து நின்றவளைப் பார்த்ததும் ஒரு நொடி அதிர்ந்து பின்னர் முகம் இறுகிப்போனான்.
“நிலன்…” கண்களில் பூக்கள் பூக்க உதடுகள் புன்னகையில் விரிய அங்கே நின்றவள் நியதி.
வெண்ணிறச் சட்டையும் டெனிமும் மழைக்காகப் போட்டிருந்த ட்ரான்ஸ்பரன்ட் ரெயின்கோட்டுமாய் நின்றவள் அவனைக் கண்டதும் உண்டான மகிழ்ச்சியை மறைக்க விரும்பவில்லை. அதை முகத்தில் காட்டியபடியே அவனிடம் வந்து நின்றாள்.
ஆனால் அவள் நெருங்க நெருங்க நிலவனின் முகத்திலிருந்த இயல்பான பாவனையும் இளக்கமும் கொஞ்சம் கொஞ்சமாய் விடைபெற்று அங்கே வந்து அமர்ந்தது என்னவோ இறுக்கம் மட்டும்தான்!
நியதி அவனது முகமாற்றத்தைக் கவனிக்கவில்லை. சுவாதீனமாய் அவனருகே வந்து நின்றவள் “எப்பிடி இருக்கீங்க? நீங்க நல்லா இருப்பீங்கனு நம்புறேன்” என்றபடி அவனது கன்னத்தில் ஒரு கரத்தைப் பதிக்க இரண்டாண்டுகளாக இழுத்துப்பிடித்த பிடிவாதமும் இறுக்கமும் எங்கே தளர்ந்துவிடுமோ என்று தவித்துப் போனான் அவன்.

Howdy, Admin – NM Tamil Novel World

தனது தவிப்பைக் காட்ட விரும்பாதவனாய் முகத்தின் இறுக்கத்தை இன்னுமே கூட்டியவன் மெதுவாய் அவளது கரத்தை விலக்கிவிட்டான்.
“ரொம்ப நல்லா இருக்கேன். வயக்காடு, சேறு, சகதி, வைக்கோல்போர்னு இருந்த என் வாழ்க்கை இப்ப ரொம்ப மாறி முன்னேறிடுச்சு” என்றான் இளக்கமற்ற குரலில்.
மகிழ்ச்சியில் பூவாய் மலர்ந்திருந்தவளின் வதனத்தில் யாரோ பளாரென அறைந்தது போல ஓர் உணர்வு!
“நிலன்… நான்…”
“நீ… நீனு சொல்லலாம் தானே? ஏன்னா நீங்க பெரிய படிப்பெல்லாம் படிக்குறவங்க. பன்னிரண்டாம் கிளாஸ் பாஸ் ஆன என்னை மாதிரி தற்குறி உங்களை மரியாதையில்லாம பேசிடக் கூடாது பாருங்க.”
வேண்டுமென்றே மரியாதைப் பன்மையோடு அவன் பேசவும் நியதிக்குச் சங்கடமாய்ப் போனது. ஆனால் வருத்தமாய் இல்லை. ஏனெனில் பேசுபவன் நிலவன்! அவளுக்கு மட்டும் நிலன்!
“எப்பிடி கூப்பிடணுமோ கூப்பிட்டுக்கோங்க. உங்க இஷ்டம்” என்று அவள் சொல்ல
“எல்லாமே என் இஷ்டமா இருந்திருந்தா இந்நேரம் நீ இங்கயும் நான் அங்கயும் இருந்திருக்கமாட்டோம். நமக்குள்ள எப்பவும் ‘உன் இஷ்டம்’தானே ஜெயிச்சிருக்கு. இப்ப மட்டும் என்ன திடீர்னு ‘என் இஷ்டம்’ ஞாபகம் வருது?” என அதற்கும் சூடாய்ப் பதிலடி வந்தது.
மீண்டும் முகத்திலடித்தாற்போல அவன் பேசவும் நியதியின் விழிகளில் கண்ணீர் நிரம்பிவிட்டது. உடனே பொறுமையிழந்தவனாய்ப் பின்னந்தலையைக் கோதிக்கொண்டான் நிலவன்.
இந்த உலகில் அவன் மிகவும் ரசித்த விழிகளில் கண்ணீரைக் காண்பதில் அவனுக்கு அத்துணை வெறுப்பு!
“இந்த வருஷம் மழை கம்மி! மணிமுத்தாறு, பாபநாசம்னு ஒரு டேமும்கூட இன்னும் நிரம்பல. ஆனா உன் கண்ணுக்குள்ள இருக்குற டேம் மட்டும் எப்பவும் கொள்ளளவைத் தாண்டி நிரம்பிதான் இருக்கும்ல. என்ன சொன்னாலும் குபுகுபுனு கண்ணீர் விட்டே காரியம் சாதிச்சிடுவல்ல.” என்றான் புகைச்சலோடு.
நியதிக்கு அவனது சுடுசொல்லைத் தாங்கும் எதிர்ப்புச்சக்தி என்றுமே கிடையாது. யார் முன்னிலையிலும் அழப் பிடிக்காதவளுக்கு அவனிடம் கண்ணீர் சிந்துவதில் எந்தவித ஈகோ பிரச்சனையும் இருந்ததில்லை. ஏனெனில் அவன் அவளது நிலன்!
“அழாத” பற்களைக் கடித்தபடி அவன் சொல்லவும் தலையைக் குனிந்துகொண்டாள் அவள்.
“அடேங்கப்பா! இன்னும் நான் என்ன பண்ணனும்னு இந்தக் கண்ணீர்? நீ நினைச்சதைச் சாதிச்சிட்ட. இதோ சிங்காரச் சென்னையில ஜம்முனு வாழுற. இன்னும் நான் என்ன செய்யணும்னு இந்தக் கண்ணீர்?”
நிலவன் பொறுமையிழந்த குரலில் தங்கள் இருவருக்கு மட்டும் கேட்கும்விதத்தில் அடிக்குரலில் சீறவும் சட்டென நிமிர்ந்தாள்.
“ஹான்! நான் சாதிச்சிட்டேன். எதுக்காகச் சென்னை வரணும்னு நினைச்சேனோ அதைச் சாதிச்சிட்டேன். அதுக்குப் பின்னாடி நிறைய வலியும் வேதனையும் இருக்குனு எனக்கும் தெரியும்”
“சுயநலத்தையும் சேர்த்துக்க நியதி!” சுள்ளென்று அவன் காயவும் தலையை ஆமோதிப்பாய் அசைத்தாள்.
“ம்ம்! அதுவும்தான்! ஆனா நான் மட்டும்தான் சுயநலவாதியா நிலன்?”
அவள் பேசப் பேச அந்தப் பெரிய விழிகளில் ததும்பும் கண்ணீரைக் காணக்காண தனது இதயம் இளகத் துவங்குவதைக் கண்டுகொண்டான் நிலவன்.
‘இது தவறு! இவளது உலகமும் எனது உலகமும் என்றும் ஒன்றிணைய முடியாது. இன்னும் எதுவும் சுமூகமாகவில்லை. சில ரணங்களும் சில நினைவுகளும் எப்போதும் ஆறாதவை. மீண்டும் ஒரு முறை என்னை நானே வதைத்துக்கொள்ளத் தயாராய் இல்லை’
தீர்மானமாய்த் தலையை உலுக்கியவன் “இங்க நின்னு நான் பேச, நீ கண்ணீர் விட – எதுக்கு இந்த நாடகம்? அடுத்தவங்க பார்வைக்குக் காட்சிப்பொருளா இருக்க எனக்குப் பிடிக்கல. நான் இங்க ஒரு ஃபங்ஷனுக்கு வந்தேன். ஒன்பது மணிக்கு முகூர்த்தம். போகணும் நான்” என்றான் உலர்ந்த குரலில்.
நியதியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு இயல்பானாள்.
“ஆட்டோ எதுவும் கிடைக்காது உங்களுக்கு. ரேபிடோ, ஓலா எல்லாம் ரைட் கேன்சல் பண்ணிட்டிருக்காங்க. நானும் ப்ரீயும் மெட்ரோல வர்றதுக்கே சிரமப்பட்டோம்” என்றாள் நிதானமாய்.
“அது என் தலைவலி. நான் பாத்துக்குறேன்” என நகரப் போனவனின் கையை வேகமாகப் பற்றினாள் நியதி.
“இது உங்களுக்குப் பழக்கமில்லாத ஊர் நிலன். இந்த மழை நேரத்துல நீங்க போறது சிரமமாகலாம். என்னை நீங்க நியதியாப் பாக்க வேண்டாம். ஒரு கைட் மாதிரி நினைச்சுக்கோங்க. என்கூட வாங்க. மெட்ரோல போயிட்டா நேரம் மிச்சம்.” என்றாள் தலைசரித்து.
நிலவன் ஒரு விரலால் மோவாயை அழுத்தமாய்த் தொட்டு அவளது சரிந்த தலையை நேராக்கினான்.
“வர்றேன்! ஆனா கியூட்டா பண்ணுறதா நினைச்சு எதையும் செஞ்சு என்னைக் கொடுமைப்படுத்தாத. நீ பண்ணுன வரைக்கும் போதும்” என்றான் அலட்சியமாய்.
அதற்கு மேல் நியதிக்குப் பேச என்ன இருக்கிறது? தன்னோடு அவன் வரச் சம்மதித்ததே அவளுக்கு நிம்மதியாய்!
இருவருக்கும் மனம் நிறையப் பாரங்களும், கடந்த கால நினைவுகளும் பெருகிக் கிடந்தன. ஆனால் பழையதைப் பேசி இருக்கிற இயல்பான மனநிலையை வீணடிக்காமல் நடந்து ரயில் நிலையத்தை விட்டு வெளியேறி எழும்பூர் மெட்ரோவை நோக்கி நடந்தார்கள்.
“நீங்க எங்க போகணும்?” அவள் கேட்க
“பார்த்தசாரதிபுரம், விஜயா மஹால். அங்க ஒரு கல்யாணம்” என்றான் அவன்.
நியதி சட்டென நின்றவள் “பொண்ணு மாப்பிள்ளை பேர் என்ன?” என வினவ
“ஏன்? நீ வந்து தாலி எடுத்துக் குடுக்கப்போறியா?” எனக் கேலியாய் இன்னொரு கேள்வி வந்தது.
“சொல்லுங்க நிலன்”
“பையன் பேர் தாரகேஷ். பொண்ணு பேர்… ம்ம்ம்… மதுரிமா”
உடனே முகம் மலர்ந்தாள் நியதி. மதுரிமாவின் திருமணத்துக்குச் செல்லத்தான் அவளும் தயாராக வேண்டும். மதுரிமா அவளுடைய அலுவலகத்தில் பணியாற்றிய சக தோழி.
“நானும் அந்தக் கல்யாணத்துக்குப் போகணும் நிலன். மது என்னோட கொலீக்” என்றாள் கண்கள் மலர.
பின்னர் நிலவனை ஆராய்ச்சியாய்ப் பார்த்தாள்.
“இந்த ட்ரெஸ்ஸோடவா கல்யாண மண்டபத்துக்குப் போகப்போறீங்க? ஹோட்டல் ரூம் எதுவும் புக் பண்ணலையா?”
“ரூம் கிடைக்கல. அதான் வெயிட்டிங் ரூம்ல குளிச்சு ட்ரெஸ் மாத்திக்கலாம்னு நினைச்சேன்”
“இப்ப என்ன பண்ணப்போறீங்க?”
“ஏதோ பண்ணுறேன். விடேன்!” என்றவனிடம்
“என் ஃப்ளாட்டுக்கு வாங்க” என்றாள் வேகமாக.
“எனக்கு அறிமுகமில்லாத இடத்துக்கு நான் வரமாட்டேன்”
சட்டென நடையை நிறுத்தியவள் “சீரியஸ்லி?” என்று திகைத்துச் சொல்லிவிட்டு “பயப்படாதீங்க! உங்க கற்புக்கு நான் கேரண்டி. எனக்கு எந்த டர்ட்டியான எண்ணமும் இல்ல.” என்று இலகுவாய்ச் சொல்லவும் நிலவனின் முகத்தில் சிரிப்பு எட்டிப்பார்க்க அதைப் பிரயத்தனப்பட்டு அடக்கினான்.
“உன்கிட்ட என்னை இழக்குற அளவுக்கு நான் ஒண்ணும் சூடுசொரணை கெட்டுப்போயிடல” என்று எரிந்து விழுந்தவனின் பேச்சில் அவளுக்கு வலித்ததுதான். ஆனால் அந்த வலிக்கு அவள் தகுதியானவள் என்பதால் சகித்துக்கொண்டாள்.
“அதுசரி! எனக்குத்தான் சூடுசொரணை எதுவுமில்ல. அதனால கூப்பிடுறேன். வாங்க”
“யாருக்கு இல்ல? உனக்கா? என்கிட்ட மட்டும் அதைக் காட்டலனு சொல்லு. பிடிவாதம், வைராக்கியம்னு பாத்தா நீதான் எனக்கு முன்னோடி. இவ்ளோ பேசுனல்ல, ஒரு வார்த்தை நீ யாரைப் பத்தியும் என்கிட்ட விசாரிக்கல. அவ்ளோ வைராக்கியம்ல?”
மெய்தான்! நியதியின் பிடிவாதத்துக்கு முன்னே நிலவனுடைய பேச்செல்லாம் ஒன்றுமேயில்லைதான்! ஆனால் அவள் தனது பிடிவாதத்தையும் வைராக்கியத்தையும் விலக்கிவிட்டு, சுயமரியாதையைப் புறந்தள்ளிவிட்டு யோசிப்பது அவனுடைய விஷயத்தில் மட்டும்தான். காரணம் அவன் அவளது நிலன்!
“பேசிக்கிட்டே நடந்தா லேட் ஆகிடும் நிலன். நாம போகலாம்” எனப் பேச்சைக் கத்தரித்தவளை நம்ப முடியாமல் பார்த்தவன் சுள்ளெனப் பேசத் துடித்த நாவைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவளைத் தொடர்ந்தான் நிலவன்.
இருவரும் எழும்பூர் மெட்ரோ நிலையத்தை அடைந்தனர். சென்னையின் மற்ற இடங்களைப் போலல்லாமல், மெட்ரோ நிலையம் எப்போதுமே ஒரு தனித்த உலகமாக இயங்கிக்கொண்டிருக்கும். சில்லென்ற ஏசி காற்றில், பயணிகளின் நிதானமான நடையும், அடுத்த ரயிலுக்கான அறிவிப்புகளும் ஒரு நேர்த்தியான தாளத்தில் ஒலித்துக்கொண்டிருந்தன.
மழையின் ஈரம் இன்னும் முழுமையாக விலகாத காலைப் பொழுதில், நிலவனின் முகத்தில் படிந்திருந்த அந்த இறுக்கம் அவளுக்குச் சங்கடத்தைத் தந்தது. அவனைச் சீண்டி சகஜமாக்க நினைத்தவள், அங்கிருந்த ஒரு வெண்டிங் மெஷினின் அருகே சென்றாள்.
தன் கையில் இருந்த மெட்ரோ கார்டை ஸ்வைப் செய்து, அதிலிருந்து ஒரு குளிர்ந்த சாக்லேட் மில்க்ஷேக் பாட்டிலை எடுத்தவள், அதை அவனுக்கு நேராக நீட்டினாள்.
“இந்தாங்க…”
நிலவன் அதை வாங்காமல் அவளையே கூர்மையாகப் பார்த்தான்.
“நான் இன்னும் பல் தேய்க்கல நியதி”
அவள் உதடுகள் குறும்பாக வளைந்தன.
“பரவால்ல குடிங்க. ஆடு, மாடு எல்லாம் டெய்லி பேஸ்ட் போட்டு பல்லா தேய்க்குது? அதெல்லாம் ஹெல்தியாதானே இருக்கு! குடிங்க!” என்று கிண்டல் செய்தாள்.
நிலவனின் கண்கள் கோபத்தில் சுருங்கினாலும், அவனையறியாமல் அவனது முகத்தில் ஒரு சிறிய புன்னகை வந்து எட்டிப்பார்த்தது. அதை உடனே மறைத்துக்கொண்டு, முகம் சுளித்தபடியே அந்தப் பாட்டிலை வாங்கி, ஒரு மிடறு பருகினான். அவனது அந்தச் சின்னச் செயலைக்கூடக் கூர்ந்து கவனித்தவளுக்குத் தன் மீது பிடித்தமின்மையைக் காட்ட அவன் பகீரதப் பிரயத்தனம் செய்வது தெரிந்தது.
“ட்ரெயின் வந்துருச்சு. வாங்க போலாம்,” என்றபடி நியதி நடக்க, அவனும் மௌனமாய்ப் பின்தொடர்ந்தான்.
நந்தனம் நோக்கிய அந்த மெட்ரோ ரயிலில் கணிசமான கூட்டம் இருந்தது. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் என ஒரு சின்னஞ்சிறு சென்னை அந்தப் பெட்டிக்குள் அடைபட்டிருந்தது.
நியதி ஓர் ஓரமாக, கம்பியைப் பிடித்தபடி நின்றுகொண்டாள். அடுத்தடுத்த நிறுத்தங்களில் கூட்டம் இன்னும் அதிகமாக, பயணிகளின் தள்ளுமுள்ளு ஆரம்பமானது. சட்டென ஒருவன் நியதியின் மீது மோதப் போனான்.
அடுத்த நொடி, எந்த யோசனையும் இல்லாமல், நிலவனின் வலது கை அவளைச் சுற்றிக் கம்பியைப் பற்றிக்கொண்டது. அவனுக்கும் கம்பிக்குமான அந்தச் சிறிய இடைவெளியில், அவளுக்கு ஒரு பாதுகாப்பான அரணை அமைத்து நின்றான் அவன். அவனது வாட்டசாட்டமான தேகம், வேறு யாரும் அவளை நெருங்காதவாறு ஓர் இரும்பு வேலி போல் அவளைப் பாதுகாத்தது.
அவனருகே நின்றிருந்த நியதிக்கு, அவனது மூச்சுக்காற்று நெற்றியில் பட்டுச் சிதறியது. முகம் இறுக்கமாக இருந்தாலும், அவனது கண்கள் அவளைப் பார்க்காமல் வேறு எங்கோ நிலைகுத்தியிருந்தாலும், அவனது உடம்பும் மனதும் அவளுக்கான பாதுகாப்பை அனிச்சைச் செயலாகத் தருகிறது என்பதை உணர்ந்தபோது நியதியின் மனம் இனித்தது.
‘என்னை வெறுப்பதாக நீ எவ்வளவுதான் நடித்தாலும், உனக்குள்ளிருக்கும் எனக்கான அக்கறையை உன்னால் கொஞ்சம்கூடக் குறைத்துக்கொள்ள முடியாது நிலன்…’
மனதுக்குள் சொல்லிக்கொண்டவள், அவனது நெஞ்சோடு இன்னும் நெருக்கமாகச் சாய்ந்து நின்றாள். அவனும் அவளை விலக்கவில்லை. விலக்கத் தோன்றவில்லை என்பதுதான் உண்மை. அதையும் தாண்டி அந்தக் கூட்டத்தில் விலகி நிற்கவும் இடமில்லை என்பது நிதர்சனம்.
சிறிது நேரத்தில் நந்தனம் மெட்ரோ நிலையம் வந்ததும் இருவரும் இறங்கினர்.
மழை இப்போது மெல்லிய தூறலாக மாறியிருந்தது. ஆட்டோ ஒன்று நல்ல நேரமாக வரவும் அதிலேறி மழைக்காலச் சென்னையின் ஈரமான சாலைகளில் பயணித்து, ஜி.என். செட்டி சாலையை ஒட்டியிருந்த அவளது நடுத்தர அடுக்குமாடிக் குடியிருப்பை வந்தடைந்தனர்.
“ஒரு வருஷமா நானும் ப்ரீயும் இங்கதான் தங்கியிருக்கோம். ஓனர் செங்கல்பட்டுல இருக்காங்க. ரெண்ட் மட்டும் ஜிபே பண்ணிடுவோம்”
பேசிக்கொண்டே அவனை அழைத்துப் போனவள் அவளது வீட்டுக்குள் நுழைந்ததும் ரெயின்கோட்டைக் கழற்றினாள்.
“பாத்ரூம்ல ஹீட்டர் இருக்கு நிலன். நீங்க குளிச்சிட்டு வாங்க. நான் அதுக்குள்ள குளிச்சு ரெடியாகுறேன். நாம ஒண்ணாவே கல்யாண மண்டபத்துக்குப் போயிடலாம்” என அவள் பேசிக்கொண்டே போக நிலவனுக்கோ ஆச்சரியம்.
‘இவளுக்கு அன்றும் இன்றும் இவளது நிலை பற்றி மட்டுமே யோசனை, எண்ணம். அவற்றை மட்டுமே இவள் செயலாகவும் மாற்றுவாள். கொஞ்சம்கூட அடுத்தவர்களின் மனம் பற்றியோ மனநிலை பற்றியோ யோசிப்பதில்லை’
அவன் பேசாமல் தன்னை ஊன்றிக் கவனிக்கவும் “என்ன?” என்று வினவினாள்.
“இல்ல, நீ இப்ப வரைக்கும் யாரைப் பத்தியும் விசாரிக்கல நியதி. எப்பிடி உன்னால எல்லாத்தையும் எல்லாரையும் மறந்து ரெண்டு வருஷம் இங்க இருக்க முடிஞ்சுது? ஒரு நாள் ஒரு பொழுதுகூடவா பெரியவங்க ஞாபகம் வரல?” என ஆற்றாமையுடன் கேட்டான் அவன்.
நியதி பெருமூச்சை விட்டாள். பின்னர் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“பெரியவங்க பெரியவங்களாப் பாரபட்சம் இல்லாம நடந்திருந்தாங்கனா நான் இந்த நிலைமைக்கு வந்திருக்கமாட்டேன் நிலன். நமக்குள்ள நடந்த ஒவ்வொண்ணுக்கும் நான் உங்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கேன். வேற யாரைப் பத்தியும் நான் தெரிஞ்சிக்க விரும்பல”
“எப்பிடிடி?” நம்பமாட்டாமல் அங்கலாய்த்தவன் சட்டென அவளது அருகே வரவும் நியதி மிரண்டு பின்னடைய இறுகிப்போனது நிலவனின் முகம்.
‘இதேபோல்தான் அன்றும் பின்னடைந்தாள். என்னைப் பேசக் கூடாத வார்த்தை எல்லாம் பேசினாள். என்னைப் பார்த்தால் எப்படித் தெரிகிறது இவளுக்கு?’
சினமேறியது அவனுக்கு. பின்னடைந்தவளை இடையோடு வளைத்துத் தனக்கு நெருக்கமாய்க் கொண்டுவந்தான். நியதியின் உடலெங்கும் நடுக்கம் கொடி போலப் படர என்ன எதிர்வினையாற்றுவது எனத் தெரியாமல் மருண்டு மலங்க மலங்க விழித்தாள்.
“எப்பவும் என்னைச் சீண்டி என்னென்னவோ யோசிக்க வச்சிட்டு நான் பக்கத்துல வரவும் ஏதோ மிருகத்தைப் பாக்குற மாதிரி பின்னடையுறது உனக்கு வேணும்னா இன்ட்ரெஸ்டிங்கான விளையாட்டா இருக்கலாம் நியதி. எனக்கு இது சுத்தமாப் பிடிக்கல. எப்பவும் நானா உன்னை நெருங்குனதில்ல. நீ அதை மறந்துடக் கூடாது” என்று விரல் நீட்டிச் சொல்லவும் நியதியின் முகத்தில் மீண்டும் குற்றவுணர்ச்சி படர்ந்தது.
“சாரி” என்றாள் மெதுவாக.
நிலவன் அலட்சியச் சிரிப்போடு அவளை விலக்கி நிறுத்தியவன் “இந்த சாரி எதுக்கு? இப்ப நடந்த விஷயத்துக்கா இல்ல ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயத்துக்கா?” என்று கேட்டுவிட்டு அவள் முன்னர் கைகாட்டிய அறைக்குள் சென்று மறைந்தான்.
அவனது சொற்களில் ஒளிந்திருந்த ஆற்றாமையும் ஆதங்கமும் யாருக்குப் புரியவேண்டுமோ அவளுக்குப் புரிந்தது. புரிந்துகொண்டவளுக்கு மனம் சொன்ன அறிவுரை ஒன்றே ஒன்றுதான்.
‘மீண்டும் உன் நிலனைக் காயப்படுத்திவிடாதே!’
அந்த அறிவுரையைக் கேட்பாளா நியதி?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


