அந்நேரத்தில் மண்டபத்துக்கு வெளியே அவளைத் தேடப்போன பவிதரனிடமிருந்து அழைப்பு வந்தது ஷண்மதிக்கு.
“சொல்லு பவி! கிடைச்சாளா அவ? ஏதாச்சும் தகவல் தெரிஞ்சுதா?”
மறுமுனையில் அவன் சொன்ன செய்தியில் ஷண்மதியின் பேச்சு நின்று போனது. வழிந்த கண்ணீருடன் நெஞ்சிலடித்து அழுதுகொண்டிருந்த அன்னையைத் தவிப்போடு நோக்கினாள் அவள்.
“அண்ணா என்ன சொல்லுறாங்க?” மலர்விழி கேட்க
“மது… மது நேத்து நைட் நம்ம எல்லாரும் தூங்குனதும் இங்க இருந்து ஓடிருக்காடி. மண்டபத்தோட பேக் கேட் சி.சி.டி.வில ரெக்கார்ட் ஆகிருக்குனு பவி சொல்லுறான்” என்றாள் ஷண்மதி அழுகையோடு.
அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி! அடுத்தச் சில நொடிகளில் அதிர்ச்சி கோபமாக உருவெடுத்தது நரசிம்மன் – சிவகாமியிடம்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அங்கே நடந்த அனைத்து உரையாடல்களையும் கற்சிலை போல கேட்டுக்கொண்டிருந்த மகிழ்மாறனின் விழிகள் மலர்விழியை ஆராய்ந்தன.
இவள்தானே மதுமதியின் மொபைலைக் கையில் வைத்துக்கொண்டே திரிந்தவள்! இவளுக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை! தன்னிடம் பேசுகையில் கூட அந்த மொபைலில் அழைப்பு வந்ததென அவளிடம் கொடுக்க ஓடினாளே!
“மலர்விழி!” மகிழ்மாறன் அழைத்ததும் திடுக்கிட்டாள் மலர்விழி.
“நேத்து நான் பாக்குறப்ப எல்லாம் உன் அக்காவோட மொபைல் உன் கையிலதான் இருந்துச்சு. உனக்குத் தெரியாம இதெல்லாம் நடந்திருக்க வாய்ப்பில்ல. அவ எங்க போயிருக்கானு தெரியுமா?”
வருங்கால மதினியாயிற்றே என்று இத்தனை நாட்கள் மதுமதியை மரியாதையாக அழைத்ததை எல்லாம் மறந்து ஒருமையில் வினவினான் அவன்.
“எனக்கு எதுவுமே தெரியாது சார். நான் போனை மட்டும்தான் வச்சிருந்தேன். கால் வந்துச்சுனா கொண்டு வானு அக்கா சொன்னா. மத்தபடி அவ செஞ்சதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல”

“அப்பிடியா?”
இந்தக் கேள்வியே இறுக்கமானத் தொனியில்தான் வந்தது. கூடவே நம்பாத பாவனையும்.
தாயும் தந்தையும் திருமணத்துக்கு வருபவர்களுக்கு என்ன பதில் சொல்வதெனப் புரியாமல் தவிப்பதையும், இந்தச் செய்தி வெளியானால் எத்துணை பெரிய தலைகுனிவு நேரிடும் என்பதையும் யோசிக்க யோசிக்க மகிழ்மாறனின் கோபம் வெடிக்கத் தயாரானது.
“நம்ம சொந்தக்காரங்க எல்லாம் எப்ப நம்ம தலை குனிவோம்னு காத்திருக்காங்கடா” என்று ஆழ்வார் திருநகரிக்குச் சென்று திரும்பியபோது அன்னை சொன்னது நினைவிலாடியது.
என்ன நடந்தாலும் இந்தத் திருமணம் நிற்கக்கூடாது. மணமகள் வீட்டார் தரப்பில் நடந்த தவறை அவர்கள்தானே சரி செய்யவேண்டும்.
அதிகம் யோசிக்கவில்லை மகிழ்மாறன்.
“இந்தக் கல்யாணம் நின்னா சொசைட்டில, பிசினஸ் சர்க்கிள்ல எங்க ஃபேமிலிக்குப் பெரிய அவமானம். உங்களுக்காக நாங்க ஏன் அவமானப்படணும்? உங்க பொண்ணு இல்லனா என்ன? உங்க தம்பி மகளை என் அண்ணனுக்குக் கல்யாணம் பண்ணி வைங்க”
அழுத்தம் திருத்தமாக ஆணையிடும் தொனியில் அவன் சொல்லி முடிக்க அங்கிருந்த அனைவருக்கும் இரண்டாவது அதிர்ச்சி!
“அது… அது எப்பிடி சரியா வரும்?” என்று ஷண்மதி குறுக்கே வர
“ஏன் சரியா வராது? இவளும் உங்க வீட்டுப்பொண்ணுதானே? கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சிக்காம எங்களை இவ்ளோ தூரம் நம்ப வச்ச இழுத்துவிட்டது நீங்கதானே? தப்பைச் சரி செய்யுறதும் உங்க பொறுப்புதான். இன்னைக்குக் கல்யாணம் நின்னா உங்களை விட எங்களுக்கு அசிங்கம். சொன்ன நேரத்துக்குக் கல்யாணம் நடக்கணும். இல்லனா உங்க யாரையும் நான் சும்மா விடமாட்டேன். என்னை மீறி நீங்க எப்பிடி பிசினஸை நடத்துவிங்கனு நானும் பாக்குறேன்” என்று கர்ஜித்தான் மகிழ்மாறன்.
அவனுக்கு இந்தச் சம்பந்தத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஆயிரம் உறுத்தல்கள்! அவை எல்லாம் இப்போது உண்மையாய்ப் போன கோபம்! அதற்காக அழுதால், கோபம் கொண்டால் போதுமா? அடுத்து என்ன என்று யோசிப்பதே புத்திசாலித்தனம்.
நிலமையைச் சமாளிக்கவும், சுற்றுவட்டாரத்தில் அவர்களின் பெயரைக் காப்பாற்றவும் அவனுக்கு இருந்த ஒரே வழி புவனேந்திரன் திருமணத்தை நடத்துவது மட்டுமே! மணமகள் போய்விட்டாள்! இனி இருப்பவள் அவளது தங்கை! அவளைத்தானே மணமகளாக்க முடியும்!
அவர்கள் சொந்தத்திலும் புவனேந்திரனுக்கு ஏற்ற பெண்கள் உண்டு. ஆனால் இன்னார் மகளைத்தான் மணமுடிக்கப் போகிறோமெனத் திருமண அழைப்பிதழில் கொட்டை எழுத்தில் அச்சிட்டுவிட்டு வேறொரு குடும்பத்துப் பெண்ணை எப்படி மணமேடையில் அமர வைப்பது?
யோசித்தவனுக்கு விடையாய்த் தெரிந்தவள் மலர்விழி மட்டுமே!
“அழுதது போதும். கல்யாணத்துக்கு ரெடியாகுங்கம்மா. இன்னும் கொஞ்சநேரத்துல எல்லாரும் வர ஆரம்பிச்சிடுவாங்க. நீங்க அவங்களை வரவேற்க தயாராகணும்பா.”
அங்கிருந்த அனைவருக்கும் பார்வையால் கட்டளையிட்டவன் ‘நீயும் தான்’ என்ற ரீதியில் மலர்விழியை அழுத்தமாகப் பார்த்த கையோடு சிவகாமி – நரசிம்மனைத் தன்னோடு அழைத்துப் போய்விட்டான்.
“இது எப்பிடி சரியா வரும் மாறா? அந்தப் பொண்ணு பாவம்!” கலக்கத்துடன் கேட்ட அன்னையிடம்

“அவளை விட நம்ம நிலமை பரிதாபமா இருக்கும்மா. எப்ப எங்க தவறுவோம்னு கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்திட்டு நம்மளைச் சுத்தி நிறைய பேர் காத்திருக்காங்க. அவங்களுக்கு இந்த சிச்சுவேசன் அட்வான்டேஜ் ஆகிடக்கூடாது. அதை மட்டும் யோசிங்க” என்றான் அவன்.
“அவன் பாத்துக்கிறேன்னு சொன்னா கண்டிப்பா நல்ல விதமா இந்தப் பிரச்சனைய முடிப்பான் சிவகாமி. வா!” என்று நரசிம்மன் மைந்தன் மீது நம்பிக்கையோடு சொல்லிவிட்டு மனைவியை அழைத்துச் சென்றுவிட்டார்.
மகிழ்மாறன் ஒரு தீர்மானத்தோடு தமையனின் அறைக்குள் நுழைந்தான். அவனைக் கண்டதும் புவனேந்திரனின் நண்பர்கள் குதூகலிக்க “நான் அண்ணா கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்றதும் அவர்கள் வெளியெறினார்கள்.
புவனேந்திரனின் முகத்திலிருந்த சிரிப்பைத் தான் சொல்லப்போகும் செய்தி துடைத்தெறிந்துவிடும் என்று நினைக்கும்போதே மகிழ்மாறனுக்குச் சங்கடமாக இருந்தது.
இருப்பினும் சொல்லித்தானே ஆகவேண்டும். சொல்லிவிட்டான்.
“மதுமதி மண்டபத்துல இல்ல. அவ நைட்டே ஓடிப்போயிட்டா”
புவனேந்திரன் இந்தச் செய்தியைக் கேட்டு கலங்கி நிற்கும்போதே “இன்னும் ஒரு மணி நேரத்துல முகூர்த்தம். அவளுக்குப் பதிலா மலர்விழி மணமேடைக்கு வருவா” என்ற தகவலையும் சொல்லிவிட்டான்.
புவனேந்திரனுக்கு மதுமதி செய்த காரியம் கொடுத்த வேதனையும் அதிர்ச்சியும் அடங்கும் முன்னரே மலர்விழியை மணக்கவேண்டுமென்ற தகவலைச் சொல்லி அவனை இன்னும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டான் மகிழ்மாறன்.
புவனேந்திரனால் சில நிமிடங்களுக்கு யோசிக்கவே முடியவில்லை.
எத்தனை கனவுகள்! எவ்வளவு எதிர்பார்ப்புகள்! முந்தைய நாள் மாலையில் கூட தேனிலவு பற்றி அத்துணை ஆர்வமாகப் பேசினாளே! அவளது பேச்சு எல்லாம் பொய்யா?
நிலைகுலைந்தவன் தன்னைத் திடப்படுத்திக்கொள்ள சில நிமிடங்கள் ஆனது. அவனது முகத்தில் வேதனையில் சுவடுகள் மட்டும் குறையவில்லை.
நிதானமாக “என்னால மலர்விழியைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது மாறா” என்றான்.
‘நீ என்ன பைத்தியமா?’ என்ற ரீதியில் அவனைப் பார்த்தான் மகிழ்மாறன்.
“அந்தப் பொண்ணை ஸ்டூடண்டா பாத்துப் பழகிட்டேன்டா. ரொம்ப சின்னப்பொண்ணு. என்னால அவளை ஒய்பா கற்பனை கூட பண்ண முடியாது”
“இப்ப கல்யாணம் நடக்கலனா காத்துல போகப்போறது நம்ம குடும்ப கௌரவம்தான். உனக்கு அது புரியலையா?”
“கௌரவத்துக்காக என் மனசுக்கு ஒவ்வாத ஒன்னை நான் எப்பிடி செய்ய முடியும்? அதுவுமில்லாம மது… அவளை நான் ரொம்ப விரும்பிட்டேன் மாறா. அவ இடத்துல இன்னொருத்திய கற்பனை பண்ணக் கூட முடியாது.”

“அப்ப கல்யாணம்? எல்லா நேரத்துலயும் நாம நம்மளைப் பத்தி மட்டுமே யோசிக்க முடியாது. யோசிக்கவும் கூடாது. நீ விரும்புன ஒருத்தி உன்னை விரும்பலங்கிற பட்சத்துல சூழ்நிலையோட போக்குல போறதுதான் புத்திசாலித்தனம்”
“சூழ்நிலைக்காக இத்தனை நாள் ஸ்டூடண்டா பாத்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க முடியுமாடா? உனக்கு அவளை எத்தனை நாளா தெரியும்? எனக்கு ஸ்கூல் முடிச்சு நம்ம காலேஜ்ல சேர்ந்த நாள்ல இருந்தே தெரியும். நம்ம காலேஜ் லைப்ரரிய அதிகமா யூஸ் பண்ணுனதுக்காக மூனு தடவை நான் அந்தப் பொண்ணுக்கு அவார்ட் குடுத்திருக்கேன். ஒவ்வொரு தடவையும் ஒரு கரெஸ்பாண்டெண்டா மரியாதையோட அன்போட அந்த அவார்டைக் குடுத்தேன்டா. என் ஸ்டூடண்ட்ஸ் எல்லாரையும் என்னால ஸ்டூடண்டா மட்டும்தான் பாக்க முடியும். நீ இன்னும் கரெஸ்பாண்டெண்ட் பொறுப்போட வீரியத்தைப் புரிஞ்சிக்கல. அதனால ஈசியா உன்னால இப்பிடி சொல்ல முடியுது”
மகிழ்மாறன் நெற்றியை ஆட்காட்டிவிரலால் கீறி யோசித்தான்.
“சி.ம் வருவாராமே! நரசிம்மன் ரொம்ப வளர்ந்துட்டார்பா. நம்மளும் ஹோட்டல் நடத்துறோம். அந்த வளர்ச்சி இல்லையே!”
“அதுக்கெல்லாம் அதிர்ஷ்டமும் வேணும்வே”
“அதிர்ஷ்டம் ரொம்ப நாள் கை குடுக்காது. எப்பேர்ப்பட்ட ராஜாவும் ஒரு நாள் தெருவீதிக்கு வரத்தான் செய்யணும்”
இப்படிப்பட்ட பேச்சுகளை அவனே மண்டபத்தில் ஆங்காங்கே கேட்க நேர்ந்தது. இதுதான் சொந்தங்களின் மனநிலை. இவர்கள் மத்தியில் தன் குடும்பத்தார் தலைகுனிய வேண்டுமா?
“இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுதான் என்ன?” என நிதானமாகக் கேட்டான்.
“தெரியல” விரக்தியாய்ப் பதிலளித்தவனின் மனம் ஊமையாய் அழுததை உடன்பிறந்தவனால் புரிந்துகொள்ள முடிந்தது.
மகிழ்மாறனின் விழிகள் கடிகாரத்தின் மீது படிந்தன. நேரம் செல்ல செல்ல மகிழ்மாறனுக்குள் அமைதியின்மை அதிகரித்தது.
புவனேந்திரனோ கடைசி நேரத்தில் ஏதாவது அற்புதம் நிகழ்ந்து மதுமதி வந்துவிடமாட்டாளா என்று யோசித்தான். அவனது நேசம் உண்மையானது! அது அவனை அப்படி யோசிக்க வைத்தது.
மகிழ்மாறன் கடிகாரத்தின் முட்கள் நகரும் ‘டிக் டிக்’ ஒலியோடு காதுகளில் உறவினர்கள் பேசிய பொருமல் பேச்சும் தனது காதில் ஒலிப்பது போல உணர்ந்தான்.
பின்னர் எதையோ தீர்மானித்தவனாக “இந்தப் பிரச்சனைய நான் பாத்துக்குறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறியவன் நேரே போய் நின்ற இடம் மணமகள் அறை.
அங்கே மலர்விழி மாணிக்கவேலுவிடம் வாதிட்டுக்கொண்டிருந்தாள். ஆம்! அவள் வாதிடத் தான் செய்தாள். ஆச்சரியம் மகிழ்மாறனுக்கு. இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு சத்தமாக எல்லாம் பேச வருமா?
“இத்தனை நாள் சிகாமணி மகளா இருந்த நான் திடீர்னு எப்பிடி உங்க குடும்பத்துப்பொண்ணா மாறுனேன்? ஷண்முக்கா, பவியண்ணனைத் தவிர வேற யார் எங்களை மதிச்சிருக்கிங்க? இப்ப உங்க குடும்ப மானத்தைக் காப்பாத்த நான் என் வாழ்க்கைய பலி குடுக்கணுமா? என்ன அநியாயம் இது?”
அழுகையும் கோபமுமாகக் கேட்டுக்கொண்டிருந்தவள் அங்கே நுழைந்த மகிழ்மாறனைக் கண்டதும் உறைந்துவிட்டாள்.
அவன் நிதானமாக அங்கிருந்த அனைவரையும் ஏறிட்டவன் சிகாமணியிடம் வந்தான்.
“உங்க மகளை எனக்குக் கல்யாணம் பண்ணிக் குடுங்க. எப்பவும் இந்த முடிவை எடுத்ததுக்காக உங்களை வருத்தப்படவிடமாட்டேன்”
அவன் பேசியதைக் கேட்டதும் இரண்டாம் கட்ட அதிர்ச்சி அலை அந்த அறைக்குள்.
சிகாமணி திகைத்துப் போய்விட குழலியோ மகளின் முகத்தைப் பார்த்தார். அதில் அதிர்ச்சியும் அச்சமும் மட்டுமே ஒட்டியிருந்தன. இது சரியாக வருமா என்ற கேள்வியோடு கணவரைப் பார்க்க அவரோ கண்ணீரும் கம்பலையுமாக நின்ற தமையனை நோக்கினார்.
மாணிக்கவேலு அதிகம் பேசவில்லை. மகள் போய்விட்டாள்! மலர்விழி மணமேடை ஏறாவிட்டால் மானமும் போகும், தொழிலையும் மகிழ்மாறன் நசுக்கிவிடுவான். மனபாரத்தோடு சிகாமணியை நோக்கி கைகூப்பினார்.
எந்தக் கையால் ஊதியம் கொடுத்து வேலையாளாகத் தம்பியை நிற்க வைத்தாரோ அதே கை இன்று ‘தயவு செய்’ என்று கூப்பி நின்றது.
சிகாமணியின் தந்தை பாசத்தை நன்றிக்கடன் அந்த இடத்தில் வென்றுவிட்டது.
“எனக்குச் சம்மதம் தம்பி. என் பிள்ளை சம்மதம்?”
“எல்லாரும் கொஞ்சம் வெளிய இருங்க. நான் மலர்விழி கூட பேசிட்டு வர்றேன்”
மகிழ்மாறன் இவ்வாறு சொல்ல அனைவரும் யோசனையோடு கலைய ஈஸ்வரி மட்டும் மலர்விழியோடு நின்று கொண்டிருந்தாள்.
“மனுசக்கறி சாப்பிடுறதுக்கு இப்ப எனக்கு அவகாசம் இல்ல. அதனால உன் ஃப்ரெண்டை எங்க நான் கடிச்சு முழுங்கிடுவேனோனு நீ பயப்படத் தேவையில்ல”
இதற்கு மேல் அவள் மட்டும் நிற்பாளா என்ன?
ஈஸ்வரியும் வெளியேற, திக் திக் நெஞ்சுடன் நின்ற மலர்விழியில் கண்கள் கண்ணீரில் தத்தளித்தபடியே, மகிழ்மாறன் கதவைத் தாழிடுவதைப் பார்த்தன.
திரும்பியவன் சட்டையின் ஸ்லீவை முழங்கைக்கு மடித்துவிட்டபடியே “நான் இங்க வர்றப்ப நீ ஏதோ பேசுனல்ல. அதை மறந்துடு. இன்னும் அரைமணி நேரம் உனக்கு டைம்! அதுக்குள்ள உன் மனசை ப்ரிப்பேர் பண்ணிக்க” என்று சொன்னபடியே அவளை நெருங்கி வந்தான்.

“எ…எதுக்கு?” திணறியபடி வார்த்தைகள் வந்தன அவளிடமிருந்து.
“மிசஸ் மகிழ்மாறனா என் கூட சேர்ந்து வாழுறதுக்கு”
அழுத்தமாகத் தெளிவாகச் சொன்னவனை அலைபாயும் விழிகளால் அளவிட்டாள் மலர்விழி.
அவனிடம் கோவையாக நான்கு வார்த்தைகள் பேசவே நாக்கு தடுமாறும். வியர்வை சுரப்பிகளுக்கு ஓவர் டைம் வேலை கிடைக்கும். இதெல்லாம் அவளது வாழ்க்கையின் தினசரி நிகழ்வுகளாக மாறுவிடுமோ?
“என்ன பேச்சைக் காணும்?” அதட்டியது குரல்.
“அது… நான் கல்யாணம் பண்ணிக்கவே நினைக்கல”
“நான் மட்டும் டெய்லி கல்யாண கனவுகளோடவா நாளை ஆரம்பிக்குறேன்? இன்னைக்கு இருக்குற சூழ்நிலைல நரசிம்மன் குடும்பத்துப் பையனுக்கும் மாணிக்கவேலு குடும்பத்துப் பொண்ணுக்கும் கல்யாணம் நடந்தாகணும். வேற வழியில்ல”
“இல்ல…”
“நீயும் உன் அக்கா மாதிரியே எவனையும் விரும்புறியா?”
இவ்வளவு நேரம் கலக்கமாக, அழுகை வந்துவிடுமோ என்ற நிலையில் இருந்தவள் இந்தக் கேள்வியால் சினந்து விழிக்க, மகிழ்மாறனுக்கு அதுவே திருப்தியாக இருந்தது.
“இவ்ளோ உரிமையா கோவப்படுறப்பவே நீ யாரையும் காதலிக்கலனு புரியுது. இந்த உரிமையானக் கோவத்தை நான் கல்யாணத்துக்கானச் சம்மதமா எடுத்துக்குறேன். சின்னப்புள்ளைத்தனமா, கூறில்லாம எதையும் யோசிக்காம, கல்யாணப்பொண்ணா தயாராகு. எனிவே, உனக்கு இந்தப் புடவையும் மேக்கப்பும் நல்லா இருக்கு”
‘நான் எதற்கு கோபப்பட்டேன்? இவன் என்ன அர்த்தம் எடுத்துக்கொள்கிறான்?’ என அவள் பொருமும் போதே கதைவைத் திறந்து வெளியேறியவன் வெளியே நின்றவர்களிடம் “மலர் கல்யாணத்துக்குச் சம்மதிச்சிட்டா, ஆக வேண்டியதைப் பாருங்க” என்று சொல்வது அவளது செவியில் விழுந்தது.
Ghost Writers!இங்கே உள்ள கதைக்கருவைத் திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction