“கிட்டாதாயின் வெட்டென மற – கொன்றைவேந்தன்ல ஔவையார் ஈசியா சொல்லிட்டுப் போயிட்டாங்க… ஆனா விரும்புன ஒருத்தரை மறக்குறது எவ்ளோ சிரமம் தெரியுமா? அவங்களை மறக்குறதுக்கான அவகாசம் கூட குடுக்காம அந்த இடத்துல இன்னொருத்தரை வைக்குறது அதை விட சிரமம்… அந்த இன்னொருத்தர் வாழ்க்கை முழுசும் துணையா வரப்போறவங்களா இருந்துட்டாங்கனா அந்தச் சிரமத்தை நம்மளோட சேர்ந்து அவங்களும் அனுபவிக்கணும்”
-அகிலன்
நடந்த திருமணத்தின் சந்தோசத்தை உணரவிடாமல் வீட்டில் அசாத்திய மௌனம் நிலவியது. சாந்தியும் மங்கையும் தங்களுக்குள் கிசுகிசுப்பாகப் பேசிக்கொண்டனர்.
சாந்தியின் அக்கா மௌனமே உருவாக அமர்ந்திருந்த அகிலனை நோட்டம் விட்டபடி அவர்களிடம் வந்தார்.
“சம்பந்தக்காரங்க ரெண்டு பேரும் பேசி முடிச்சாச்சுனா கொஞ்சம் அந்தப் பக்கம் பாருங்க… அகிலு உடைஞ்சு போயி உக்காந்திருக்கான்… சட்டுபுட்டுனு சடங்குக்கு ஏற்பாடு பண்ணுங்க… எல்லாம் சரியாகிடும்”
“ப்ச்! நீ தெரிஞ்சு தான் பேசுறியாக்கா? அவனுக்கும் ஆனந்திக்கும் ஏழாம் பொருத்தம்… இப்ப சடங்குக்கு என்ன அவசரம்?” என படபடத்தார் சாந்தி.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!

“இவ என்னடி கூறுகெட்டவளா இருக்கா? எப்பிடிப்பட்ட ஆம்பளையையும் கல்யாணம் மாத்திடும்டி… இப்ப மூஞ்சிய தூக்கி வச்சிட்டு இருக்குறவன் இன்னும் ஒரு வாரத்துல உன் மருமகள் முந்தானைய பிடிச்சுட்டுச் சுத்துவான்… எழுதி வச்சிக்க… அவன் ஒதுங்கி இருக்கான், அவ அடம்பிடிக்கானு நீங்க யோசிச்சிங்கனா ரெண்டும் ரெவ்வெண்டு திக்குல ஓட ஆரம்பிச்சிடும்… அப்புறம் குடும்பவண்டி ஓடுன மாதிரி தான்”
பெருங்குரலில் அறிவுறுத்தியவர் “ஏட்டி பூரணி” என அன்னபூரணியை அழைத்தபடி செல்ல மங்கைக்கும் சாந்திக்கும் கூட அவரது அறிவுரை சரி தானோ என்று தோன்ற ஆரம்பித்தது.
இருவரும் அவரது அறிவுரைப்படி ஆக வேண்டியதை கவனிக்க ஆரம்பித்தனர்.
அவர்களின் உரையாடலின் பேசுபொருளான அகிலன் யாருக்கோ வந்த விருந்து போல வீட்டின் உத்திரத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தான்.
கைகளில் கட்டப்பட்டிருந்த காப்பு இன்னும் கழற்றப்படவில்லை. அணிந்திருந்த உடைகள் அவனுக்குத் திருமணமாகிவிட்டதை அவ்வபோது நினைவுறுத்த மனமோ பழைய சம்பவங்களில் உழன்று கொண்டிருந்தது.
“நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் அப்பா உங்களுக்குச் சொந்தமா லேத் வச்சுக் குடுத்திடுவார்… நீங்க கம்பெனில அடுத்தவங்களுக்குக் கீழ வேலை பாக்க வேண்டிய அவசியம் இல்ல… கோடீஸ்வரன் நகர்ல புதுசா கட்டுன வீடும் நமக்குத் தான்… நம்ம பிள்ளைங்களை சின்மயால சேர்த்து படிக்க வைக்கலாம்… உங்களுக்கு லேத் வைக்குறதுக்கு எந்த ஏரியா ஓ.கேவா இருக்கும்னு சொல்லுங்க அகில்… பாளை மார்க்கெட் பக்கத்துலயும் டவுன் நெல்லையப்பர் கோவில் பக்கத்துலயும் இடம் விலைக்கு வருது… உங்களுக்கு வசதியான இடத்தை வாங்குனா நல்லா இருக்கும்னு அப்பா கேக்கச் சொன்னார்”
சொன்னவள் அவனது காதலி சுப்ரஜா. காதலி மட்டுமில்லை. அவனது அன்னைக்கு ஒன்றுவிட்ட அண்ணனின் மகளும் கூட.
வாழ வேண்டிய வீடு, குழந்தைகள் படிக்க வேண்டிய பள்ளி, தொழில் நடத்த தகுந்த இடமென அனைத்தையும் அவனோடு சேர்ந்து தேர்வு செய்தவளுக்கு அவனைப் புரிந்துகொள்ளும் எண்ணம் மட்டும் கிஞ்சித்தும் இல்லாமல் போனது ஏன்?
ஒருவேளை அவள் தன்னைக் காதலித்ததாக எண்ணியது தவறோ? அவனைத் திருமணம் செய்தால் மாமியார் வீடு என புதிதாக எங்கோ சென்று வாழவேண்டிய அவசியம் நேராது. தந்தையின் செல்லப்பெண் என்ற பெயரில் அவனை வீட்டோடு மாப்பிள்ளையாக உட்கார வைத்தால் கூட சாந்தி மறுக்கப்போவதில்லை என எண்ணி தன்னை மணக்க சம்மதித்திருப்பாளோ?
ஆவுடையப்பன் “அகில்” என்று அழைத்தபடி அவனது தோளில் தட்டியபோது தான் சிந்தனைக்குதிரை தறிகெட்டு ஓடுவதை நிறுத்தியது.
கனவிலிருந்து விழித்தவனைப் போல “என்னப்பா?” என்றவனிடம்
“அம்மா உன்னை கூப்புடுறாப்பா” என்றார் அவர்.
அகிலனும் மறுபேச்சு பேசாமல் அன்னையிடம் சென்றான்.
அவரோ அன்று நடந்தேற வேண்டிய சாந்தி முகூர்த்தத்தைப் பற்றி கோடிட்டுக் காட்ட அகிலனுக்குச் சங்கடமாக இருந்தது.
“இதுக்கு என்னம்மா அவசரம்?” என்று தயங்கியவனை சாந்தி பார்த்த பார்வையில் அந்த வீடு பற்றியெரியாதது ஆச்சரியம்.

“இப்ப தான் நான் அவசரப்படாம யோசிச்சு முடிவெடுத்திருக்கேன் அகிலு… உன் பேச்சைக் கேட்டு அவசர அவசரமா கல்யாணம் ஏற்பாடு பண்ணி அது நின்னு ஊர் முன்னாடி தலை குனிஞ்சது போதும்… கிடைச்ச வாழ்க்கைய ஒழுங்கா வாழ பாரு… மறுபடியும் உன்னால நாங்க தலைகுனிஞ்சு நிக்க தயாரா இல்ல” என சீறினார் சாந்தி.
அவரது சீற்றத்தில் அகிலனின் கண்கள் கலங்கியது. பத்து நாட்களுக்கு முன்பு வரை அன்பே உருவாக இருந்த அன்னை. அவரும் தான் எவ்வளவு பழிசொற்களைத் தாங்குவார்?
“சாந்தி”
அவன் கண் கலங்குவதைப் பார்த்து மனைவியை அதட்டினார் ஆவுடையப்பன்.
“என்னை ஏன் அதட்டுறிங்க? எல்லாம் இவன் செஞ்ச தப்பு தானே”
“அவன் தெரிஞ்சா பண்ணுனான்? உன் அண்ணனும் அவர் மகளும் பண்ணுன காரியத்தை மறந்துட்டியா? பத்து நாள்ல கல்யாணம், ஊர் முழுக்க பத்திரிக்கை குடுத்தாச்சுனு தெரிஞ்சும் துணிச்சலா கல்யாணத்தை நிறுத்துனாங்க… ஏன்? இவன் செய்யாத தப்புக்காக… இவன் அப்பிடி ஒரு காரியத்தைப் பண்ணுவானானு சுப்ரஜா யோசிச்சிருக்க வேண்டாமா? சும்மா அகில் கிட்ட குரலை உயர்த்தி பேசாத… இந்த வீட்டுலயும், இதுல இருக்குற ஒவ்வொரு பொருள்லயும் பத்தொன்பது வயசுல இருந்து அவன் தூங்காம கம்பெனில ஷிப்ட் பாத்து உழைச்ச உழைப்பு இருக்கு… அவன் மட்டுமா உன் அண்ணன் மகளை விரும்புனான்? நீயும் வார்த்தைக்கு வார்த்தை அந்த சுப்ரஜாவை மருமகள் மருமகள்னு கொண்டாடுனல்ல… அவளை தலை மேல தூக்கி வச்சு ஆடுனல்ல… அவ காதலிச்சவனையும் நம்பல… பாசம் காட்டுன உன்னையும் மதிக்கல… சும்மா இவனைத் திட்டாத”
“எனக்கு மட்டும் என் பிள்ளைய திட்டணும்னு ஆசையாங்க?”
குரல் கமற கண்ணீர் கசிந்த விழிகளை புடவை முந்தானையில் துடைத்துக்கொண்டார் சாந்தி.
அகிலன் வரவழைத்துக்கொண்ட இயல்பான குரலில் “அழாதம்மா… அப்பா ஏதோ ஆதங்கத்துல பேசிட்டார்… நீ சொன்ன மாதிரி இனிமே ஒழுங்கா நடந்துப்பேன்மா… என்னால இனிமே நீயோ அப்பாவோ வருத்தப்படுற சூழ்நிலை வராது” என்றான்.
அவனது அன்னை சொன்னபடி சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்குள் சென்றவனுக்கு அவனது அறையே அன்னியமாகத் தோன்றியது.
எப்போதும் அவனது மொபைல் மட்டும் சார்ஜ் ஏறும் ப்ளக் பாயிண்டில் ஆனந்தியின் மொபைல் சார்ஜ் ஏறிக்கொண்டிருந்தது. அவனது உடமைகள் மட்டும் இருக்கும் அலமாரியில் ஆனந்தியின் கிளிப்கள், கொண்டை ஊசிகள், ஹேர் பேண்ட்கள், பவுடர் டப்பா போன்றவை பரப்பி வைக்கப்பட்டிருந்தன.
உடையை மாற்றுவோமென பீரோவைத் திறந்தவனுக்கு அங்கே ஆனந்தியின் உடைகள் பாதியிடத்தை ஆக்கிரமித்திருப்பதைப் பார்த்ததும் அவள் தனது வாழ்க்கையோடு இரண்டறக் கலப்பதற்கான அறிகுறி தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது.
பீரோவிலிருந்து டவலை எடுத்துக்கொண்டு திரும்பியவன் குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் கண்களைத் தாழ்த்திக்கொண்டான்.
வந்தவள் ஆனந்தி. வரவேற்பிற்கு செய்த முக அலங்காரத்தைக் கலைத்து முகத்தைக் கழுவிவிட்டு வந்தாள். அவளது நீண்ட கூந்தலில் மல்லிகைச்சரம் மட்டும் வீற்றிருந்தது.
அகிலன் என்ற ஒருவன் அங்கே நிற்பதைக் கவனிக்காதது போல சுவாதீனமாக பீரோவின் அருகே வந்தவள் தனது துணியிலிருந்து டவலை எடுத்து முகத்தை அழுந்த துடைத்தாள்.
பீரோவிலிருந்த கண்ணாடியைப் பார்த்து புருவ மத்தியில் அரக்கு வண்ண ஸ்டிக்கர் பொட்டை ஒட்டிக்கொண்டாள். கூந்தலை கொண்டையாக முடிந்தவள் காட்டன் நைட்டியை எடுக்கவும் அகிலன் குறிப்புணர்ந்து குளியலறைக்குள் புகுந்துகொண்டான்.
உடை மாற்றியதற்கு அறிகுறியாக அவள் போர்வையை உதறும் சத்தம் கேட்டதும் டீசர்ட் ஷார்ட்ஸில் வெளியே வந்தவன் தலையணை போர்வையோடு அவள் கீழே படுத்திருக்கவும் புரியாத பார்வை பார்த்தான்.
அவளோ அவனைக் கவனியாதவளாக மொபைலில் முகத்தைப் புதைத்திருந்தாள்.
அகிலன் தயக்கத்துடன் “ஏன் தரையில படுத்திருக்க ஆனந்தி?” என அவன் கேட்டது தான் தாமதம், படுத்திருந்தவள் எழுந்தமர்ந்தாள்.
முகத்தில் கோபச்சிவப்பு.

“ஏன் துரைக்கு ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடணுமோ?”
குத்தலாக வினவினாள் அவள்.
“சீச்சீ! நான் அதுக்காக சொல்லலை”
“வேற எதுக்கு சொல்லுற நீ? நான் கட்டாந்தரையில படுத்தாலும் கட்டையிலயே போனாலும் நீ எதுக்குக் கவலைப்படுற? அவ்ளோ நல்லவனா நீ? ஊர் முன்னாடி உன் மரியாதைய காப்பாத்துறதுக்கு என் வாழ்க்கைய இப்பிடி நட்டாத்துல கொண்டு வந்துவிட்டவனுக்கு இப்ப என்ன புதுசா கவலை?”
அன்று காலையிலிருந்து சிரமத்துடன் காத்து வந்த பொறுமை ஆனந்தியின் ‘கட்டையிலேயே போனாலும்’ என்ற வார்த்தையில் பறந்துவிட கையில் இருந்த டவலைத் தூக்கியெறிந்தான் அகிலன்.
“பிரச்சனை வேண்டாம்னு நானும் பொறுத்துப் போனா நீ ஓவரா வார்த்தைய விடுற ஆனந்தி… உனக்குக் கல்யாணத்துல விருப்பமில்லனு என் கிட்ட மட்டுமா சொன்ன, உங்கண்ணன் அப்பா அம்மா எல்லாருக்கும் தெரியும்ல… என்னமோ நான் மட்டும் தான் உன் கைய கட்டி மணமேடையில உக்கார வச்ச மாதிரி என் கிட்ட எகிறுற? உங்கப்பா முகத்துக்காக நான் சம்மதிச்சேன்… ஆமா! ஊர் முன்னாடி என் மரியாதைய காப்பாத்திக்க தான் நான் கல்யாணம் பண்ணுனேன்… உனக்கு இஷ்டம் இருந்தா இரு… இல்லனா தாலிய கழட்டி குடுத்துட்டுப் போயிடு… கூடவே இருந்து பேசி கொல்லாத”
இன்னும் மஞ்சள் மணம் மாறாத தாலியைக் கழற்ற சொல்கிறானே என்ற கோபம் ஆனந்திக்குள் சுர்ரென ஏற எழுந்து நின்றவள்
“நான் ஏன் தாலிய கழட்டிக் குடுத்துட்டுப் போகணும்? ஓ! புரிஞ்சு போச்சு… நான் போனதும் அந்த சுப்ரஜா கிட்ட கண்ணீர் வடிச்சு அவளை கல்யாணம் பண்ணிக்க நீ ப்ளான் போடுற”
“வேண்டாம் ஆனந்தி… அவளைப் பத்தி பேசாத”
அகிலன் கை நீட்டி எச்சரித்தான். அவன் எச்சரித்ததற்கு காரணம் ஆனந்தியை மணந்த பிறகு சுப்ரஜாவைப் பற்றி நினைப்பதே பாவம் என அவனது மனசாட்சி இடித்துரைத்தது தான். கூடவே தன்னை புரிந்துகொள்ளாதவளிடம் இனியொரு முறை போய் நிற்குமளவுக்கு அவன் ஒன்றும் ரோசமற்றவன் இல்லை.
ஆனால் ஆனந்தியோ முன்னாள் காதலியைப் பற்றி கூறியதால் அகிலனுக்குக் கோபம் வந்துவிட்டதென எண்ணிவிட்டாள்.
“ஓ! அவளைப் பத்தி சொன்னதும் துரைக்குக் கோவம் வருதோ? அவ்ளோ தூரம் அவள் தான் முக்கியம்னா எதுக்கு என் கழுத்துல தாலி கட்டுன?”
“பொம்பளையாடி நீ? உன் கூடல்லாம் மனுசன் இருப்பானா?” என பற்களைக் கடித்தபடி கூறியவன் மடாரென கதவை அறைந்து சாத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
கையாலாகாதத்தனம், ஆத்திரம், இயலாமை என அனைத்தும் கலந்த கலவையாக வீட்டின் கிரில் கேட்டைத் திறந்துவிட்டு கால் போன போக்கில் நடந்தவனுக்கு அமைதி எங்கே கிடைக்கும் என்ற ஏக்கம்.
அமைதி வேண்டுமா? நாங்கள் இருக்கிறோம் என இருகரம் நீட்டி வரவேற்றது அரசாங்கத்தின் டாஸ்மாக்.
வீட்டில் சண்டை, தொழில் அழுத்தம், களைப்பு என எதற்குமே மதுபானத்தின் பக்கம் அவன் போனதில்லை. இது எல்லாம் சென்னையிலிருந்து திருமணத்திற்காக அவன் திருநெல்வேலிக்கு வருவதற்கு முந்தைய கதை.
வந்த பிறகு நண்பர்களுக்கு ட்ரீட் என்ற பெயரில் எப்போது டாஸ்மாக் வாசலை மிதித்தானோ அப்போது ஆரம்பித்தது பிரச்சனை. ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்டி வந்து நின்ற பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க அவன் மதுவின் தயவை நாட, கடந்த பத்து நாட்களாக அவன் குடிக்கிறான்.
மற்றவர் ‘சீ’ என்று சொல்லும் அளவுக்குக் குடிக்கிறான். ஒரு காலத்தில் மதித்து நடத்திய உறவுகள் கேலிப்பார்வை பார்க்கும்படி குடிக்கிறான்.
இதோ இப்போதும் குடிக்கப் போகிறான்.
“ஒரு குவார்ட்டர் குடுண்ணே” என வாங்கியவன் ப்ளாஸ்டிக் தம்ளரில் ஊற்றி மடமடவென குடிக்க ஆரம்பித்தான்.
“என்னப்பா புதுமாப்பிள்ளை இங்க வந்து நிக்குற?” என தெரிந்தவர் கேட்க
“புதுமாப்பிள்ளை ஆனதால தான் இங்க வந்து நிக்குறேண்ணே” என்றான் குளறியபடி.

முழுவதுமாக நான்கு பாட்டில்களைக் காலி செய்துவிட்டு அங்கேயே விழுந்தவனுக்கு போதையில் உறக்கம் வந்துவிட்டது.
வீட்டிலோ அகிலன் இப்படி கிளம்பிச் சென்றதை அறிந்த சாந்தி கோபாவேசத்தில் கத்திக்கொண்டிருந்தார்.
“என்னமோ உம்ம மவனுக்கு சப்போர்ட் பண்ணுனீரு… இந்தா டாஸ்மாக்குக்கு ஓடிட்டான்ல… உழைக்காம திரிஞ்ச கழுதையும் டாஸ்மாக் படியேறுன ஆம்பளையும் உருப்பட்டதா சரித்திரமே இல்லவே… உம்ம மவன் வரட்டும், வளர்ந்த வெளக்குமாறால வெஞ்சாமரம் வீசுறேன்”
திருமணத்திற்கு வந்திருந்த சொந்தங்கள் கிளம்பி சென்றுவிட்டனர். வீட்டில் ஆனந்தியோடு ஆவுடையப்பன், சாந்தி மற்றும் அனுஷா மட்டுமே இருந்தனர்.
சாந்திக்கு மருமகளின் முகத்தைப் பார்க்க பார்க்க வயிறெரிந்தது. ஆனந்தியின் அருகே வந்தவர் அவளது கரத்தைப் பற்றி தனது கன்னத்தில் அடிக்க ஆரம்பித்தார்
“அத்தை என்ன பண்ணுற?” என ஆனந்தி பதற
“என்னைய அறைஞ்சு கொன்னுடு ஆனந்தி… நீயும் என்னை மாதிரி கத்தி கத்தி பேசி மனசு வலிய மறைக்குறவனு எனக்குத் தெரியும்… கல்யாணம் பண்ணி வச்சா இந்தப் பய திருந்துவான்னு நினைச்சேன்… அவன் உன் வாழ்க்கையையும் சேர்த்து சீரழிக்கானே” என அழ ஆரம்பித்தார்.
ஆனந்திக்குச் சாந்தி அழுவதைப் பார்த்ததும் கண்ணீர் முட்டியது.
முன்பென்றால் சாந்தியின் அழுகை அவளைப் பாதித்திருக்காது. ஏனென்றால் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஆரம்பித்து காய்கறி கடையில் வெண்டைக்காய் வாங்குவது வரை ஆனந்திக்கும் சாந்திக்கும் சண்டை வராமல் இருந்ததேயில்லை.
“நீ மட்டும் எனக்கு மருமகளா வந்தனா இப்பிடி எட்டூருக்கு நீளுற வாயைக் கிழிச்சு தைச்சிடுவேன்டி”
“க்கும்! நீ எனக்கு மாமியாரா வந்தனா உனக்கு மருந்து வச்சு நடமாட்டம் இல்லாம பண்ணிடுவேன்”
இப்படி தான் அவர்கள் சண்டையிட்டுக் கொள்வார்கள். அவை அனைத்தும் அந்த நேரத்துக் கோபத்தில் உதிர்த்த வார்த்தைகள்.
ஆனந்தி அவரையும் ஆவுடையப்பனையையும் பார்த்த பார்வையில் பரிதாபம் மட்டுமே இருந்தது. பத்து நாட்களுக்கு முன்பு வரை எவ்வளவு சந்தோசமாக இருந்த குடும்பம். யார் கண் பட்டதோ இப்படி ஆகிவிட்டது.
அழுது கதறிய சாந்தியைச் சமாதானம் செய்ய முற்பட்டாள் அவள்.
“சும்மா அழாத அத்தை… உன் மகன் எங்க போயிருப்பான்? திரும்பி வந்து தானே ஆகணும்… அவன் குடிக்குறது தப்பு தான்… ஆனா அகில் நிலமையில இன்னொருத்தன் இருந்தான்னா இந்நேரம் அவன் சூசைட் பண்ணிருப்பான்… அகிலுக்கு மனவுறுதி ஜாஸ்தி… ஆனா மூளை இல்ல… அதான் குடி எல்லாம் பிரச்சனைக்கும் தீர்வுனு நினைக்கான்… செய்யாத தப்புக்குப் பழிய சுமந்தவன் அவன்… வேற யார் அவனைக் கொலைகாரன்னு சொல்லிருந்தாலும் கவலைப்பட்டிருக்க மாட்டான்… அந்த சுப்ரஜா சொன்னதை அவனால ஏத்துக்க முடியல அத்தை”
“எங்க குடும்பத்து வேதனைய உன் தலையில சுமத்திட்டோமே தங்கம்” என நலிந்த குரலில் கூறினார் ஆவுடையப்பன்.
அதை கண்டதும் அனுஷா கண் கலங்கினாள்.
ஆனந்தி அவளிடம் “நீ ஏன் இங்க நிக்குற? போய் தூங்கு” என்க
“இல்ல மதினி… அம்மா…” என பிசிறு தட்டியது அவளது குரலில்.
“உங்கம்மாவை நான் பாத்துக்குறேன்… பெரியவங்க சமாச்சாரத்தை கவனிக்காம போய் தூங்கு” என அவளை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தாள் ஆனந்தி.
அவள் சென்றதும் “நீங்க அகிலை பத்தி மட்டும் யோசிச்சு அனுவை மறந்துடாதிங்க… அகிலை நான் பாத்துக்குறேன்… அவனை எப்பிடி பழையபடி கொண்டு வரணும்னு எனக்குத் தெரியும்… அவனை நான் என்ன சொன்னாலும் நீங்க ரெண்டு பேரும் அதுல தலையிடக்கூடாது” என நிபந்தனையிட்டாள் ஆனந்தி.
சாந்திக்கும் ஆவுடையப்பனுக்கும் மகன் பழையபடி மாறினால் போதுமென்ற எண்ணம். அதற்காக ஆனந்தி சாம தான பேத தண்ட நீதி எதை கையில் எடுத்தாலும் அவர்கள் தலையிடமாட்டார்கள்.
அவர்களை உறங்கும்படி பணித்தவள், தானும் விரித்து வைத்த போர்வையில் விழுந்தாள். கண்ணயர முயன்றாலோ கண்களுக்குள் “போடி நந்தி” என்று சொல்லி அவளது ஜடையை இழுத்துவிட்டு ஓடும் சிறுவயது அகிலன் வந்து சென்றான்.
அவர்களுக்குள் அப்போது இருந்த உறவு நட்பு என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். எலியும் பூனையுமாகத் திரிவார்கள் இருவரும். காலத்தின் கட்டாயத்தில் திருமணமாகியும் இன்னும் எலி – பூனை நிலையே தொடர்வது ஆனந்திக்கு விசித்திரமாகத் தோன்றியது.
பழைய நினைவுகளில் களைத்த மனம் மெதுவாக உறக்கத்தைத் தேடியது. அவன் மதுவின் போதையில் எங்கோ விழுந்து கிடக்க அவளோ பழைய நினைவுகள் கொடுத்த களைப்பில் தரையில் படுத்து உறங்கிப் போனாள்.
Ghost Writers!இங்கே உள்ள கதைக்கருவைத் திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction