‘தி பீஸ்ட் ஆப் சாத்தான்’ குழுவினர் ஃபேபியோவையும் மேரினோவையும் கொன்று யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டார்கள். அவர்களைத் தேடிக் களைத்த போலீசாரும் காதல் ஜோடி ஊரை விட்டு ஓடிப்போய்விட்டார்கள் என்று வழக்கை முடித்துவிட்டார்கள். ஆனால் ஃபேபியோவின் தந்தை மிச்செல் மற்றும் மேரினோவின் அன்னை லிசா இருவரும் சேர்ந்து ஆறு ஆண்டுகள் தங்கள் பிள்ளைகளைத் தேடும்படி அதிகாரிகளுடன் போராடினார்கள். அவர்களின் போராட்டம் வீணாய் தான் போனது. இது குறித்து இத்தாலிய ப்ளாக் ஒன்றுக்கு மிச்செல் பேட்டி கொடுத்தபோது அதிகாரிகள் எவ்வாறு அவர் கொடுத்த புகாரை அலட்சியம் செய்தார்கள் என்பதை விவரித்தார். தனது மகனையும் அவனது காதலியையும் தேடுவதற்காக அவர்களைப் போலவே இரவு வாழ்க்கையில் ஐக்கியமாகியுள்ளார் மிச்செல். “தி பீஸ்ட் ஆப் சாத்தான் குழுவினரை இசைக்கலைஞர்கள் என்ற முறையில் சந்தித்தித்தேன். அதுவும் அவர்களின் விசிறி என்ற முறையில். ஆனால் காலம் கடந்த பின்னர் தான் அவர்கள் என் மகனைக் கொன்ற கொலைகாரர்கள் என்பது தெரியவந்தது. சாத்தானிய வழிபாடு பற்றி சிலர் பேசிக்கொள்கிறார்கள். அதற்காக தான் என் மகனைக் கொன்றிருக்கிறார்கள் என்ற கருத்தும் உலா வருகிறது. அது பற்றி எனக்குத் தெரியவில்லை” என்று சொல்லியிருக்கிறார் அவர்.
-From Internet
இதன்யா சோர்வாக படுக்கையில் அமர்ந்திருந்தாள். ப்ராணேஷ் மருத்துவரிடம் அவளது ஸ்கேன் அறிக்கைகள் எப்போது வருமென விசாரித்துக்கொண்டிருந்தான்.
“தலையோட பக்கவாட்டுல பட்ட காயத்தால அவங்களுக்கு எந்தப் பாதிப்புமில்ல… காயம் இன்னும் கொஞ்சநாள்ல ஆறிடும்… கழுத்தை நெறிச்சதால குரல்வளைல சின்ன சின்ன காயங்கள் இருக்கு… அது ஆறுறதுக்கு டேப்ளட்ஸ் எடுத்துக்கணும்” என்று மருந்து மாத்திரை விவரங்களைச் சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட ப்ராணேஷும் மனைவியின் அருகே வந்து அமர்ந்தான்.
ஆழ்ந்த யோசனையிலிருந்தவள் அவன் வந்து அமர்ந்ததும் “முரளி சார் வந்தாரா?” என்று கேட்க
“இல்ல… இன்னும் கொஞ்சநேரத்துல வர்றதா கால் பண்ணி சொன்னார்” என்றான் அவன்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“அவர் வந்ததும் மாஜிஸ்திரேட்டைப் பாக்க போகணும்”
ப்ராணேஷ் அவளை முறைத்தான்.
“காயம் ஆறுற வரைக்கும் கூட ரெஸ்ட் எடுக்க மாட்டியா?”
அவனது ஆதங்கம் அவளுக்கும் புரிந்தது.
மாஜிஸ்திரேட்டிடம் ஏகலைவனின் நிலையை விளக்கி எந்நிலையில் அவனைச் சுட நேர்ந்தது என்பதைக் கூறி அவனை விசாரிப்பதற்கான கால அவகாசத்தைக் கேட்க அவள் நேரில் செல்வது அவசியம். தலைக்காயம் கூட நடுத்தரமானது தான். மற்றபடி அவளது தொண்டை காயங்கள் ஆறும் வரை மாத்திரை போட்டுக்கொண்டு வேலை செய்யலாமே.
ப்ராணேஷிடம் தான் செல்லவேண்டியதன் அவசியத்தை மெதுவாக அவள் விளக்கவும் புரிந்துகொண்டான்.
“அம்மா அப்பா வந்துட்டாங்கனா நீங்க சென்னைக்குக் கிளம்புங்க” என்று கூடுதலாக அவள் கட்டளை விதிக்கவும் அவன் மறுத்தான்.
“நோ சான்ஸ்… உன் கூட தான் நான் இருப்பேன்” என்றான் பிடிவாதமாக.
இதன்யா அவனை தீர்மானமாகப் பார்த்தாள்.
“நம்ம மறுபடி சேர்ந்ததும் நான் என்ன சொன்னேன்னு மறந்துட்டிங்களா? ரெண்டு பேரும் ஒருத்தரோட வேலைக்கு இன்னொருத்தர் தடையா இருக்கக்கூடாது… நீங்க இல்லனா ஹெட் ஆபிஸ், போர்ட் ட்ரஸ்ட்னு எங்கயும் வேலை சரியா நடக்காது… உங்க கவனம் கொஞ்சம் பிசகுனாலும் பிசினஸ்ல பெரிய தப்பு நடக்க சான்ஸ் இருக்கு… நீங்க சென்னைக்குக் கிளம்புங்க”
ப்ராணேஷ் இதற்கு மேல் அவளிடம் வாதிட விரும்பவில்லை. மாமனாரும் மாமியாரும் வந்ததும் இதன்யாவின் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுக் கிளம்புவதாகக் கூறினான் அவன்.
இதன்யா புன்னகையோடு தலையாட்டியவள் தனது மொபைலில் இருந்து கலிங்கராஜனின் எண்ணுக்கு அழைப்பு விடுத்து தன்னை வந்து மருத்துவமனையில் சந்திக்கும்படி கேட்டுக்கொண்டாள்.
அடுத்து நிஷாந்த் மற்றும் ராக்கியின் எண்ணுக்கு அழைக்கலாமென அவள் யோசிக்கையில் இருவரும் வந்துவிட்டார்கள்.
ப்ராணேஷ் அவர்கள் இருவரையும் நன்றி ததும்ப பார்த்தான். இளைஞர்கள் இருவரும் இல்லையென்றால் மனைவியின் நிலை கேள்விக்குறியாகியிருக்கும் என்பதை முரளிதரன் வாயிலாகக் கேட்டறிந்திருந்தான்.
“வணக்கம் சார்” என்று ஒருமித்த குரலில் கூறினார்கள் இருவரும்.
இதன்யா ப்ராணேஷை அர்த்தபுஷ்டியோடு பார்க்கவும் “புரியுது… வேலை சம்பந்தமா பேசப்போற… நான் கிளம்பணும்… அவ்ளோ தானே? நான் கிளம்பிட்டேன்” என்று அந்த அறையிலிருந்து புன்னகையோடு வெளியேறினான்.
அவன் வெளியே சென்றபோது கலிங்கராஜனும் முரளிதரனோடு வந்துவிட்டார்.
ப்ராணேஷை போலீஸ் குவாட்டர்சில் இளைப்பாறி சாப்பிடும்படி கேட்டுக்கொண்டார் கலிங்கராஜன்.
“என் வீட்டுல இருந்து சாப்பாடு அனுப்ப சொல்லிருக்கேன் சார்”
ப்ராணேஷும் சம்மதமாகத் தலையாட்டிவிட்டுக் கிளம்பினான்.
அவன் சென்றதும் இதன்யா அனுமதிக்கப்பட்ட அறைக்குள் சென்றார்கள் இருவரும். அங்கே ராக்கியும் நிஷாந்தும் இருக்கவே முரளிதரனின் புருவம் உயர்ந்தது.
“வாங்க முரளி சார்” என்றவளிடம் நலம் விசாரித்தார்கள் கலிங்கராஜனும் முரளிதரனும்.
பின்னர் அவர்களை அழைத்ததற்கான காரணத்தைக் கூறினாள் இதன்யா.
“நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணணும் முரளி சார்”
என்ன உதவி என்பது போல முரளிதரன் பார்க்கவும் மற்ற மூவரையும் காட்டினாள்.
“இவங்க மூனு பேர் மேலையும் எந்த அலிகேசனும் வந்துடக்கூடாது… ஒரு போலீஸ் ஆபிசரா யோசிச்சு பாத்தா இவங்க மூனு பேர் இல்லனா நம்மளால இன்னைக்கு ஏகலைவனை பிடிச்சிருக்க முடியாதுனு உங்களுக்குப் புரியும்… அதைத் தாண்டி கலிங்கராஜன் ஏன் ஏகலைவன் சொன்னதைக் கேக்கணும்? இந்தப் பசங்க ஏன் அந்த இடத்துக்கு வரணும்ங்கிற மாதிரி கேள்விகள் வந்தா இந்த மூனு பேரோட லைஃபும் மறுபடி சிக்கலாகும்… நான் சொல்லுற மாதிரி மாஜிஸ்திரேட் கிட்ட சில விசயங்களைச் சொல்லணும்… அதுல உங்களுக்கு ஆட்சேபணை இருக்காதுங்கிற நம்பிக்கைல தான் நான் இந்த உதவியைக் கேக்குறேன்”
“நீங்க வேலையில எமோசன்சை மிக்ஸ் பண்ண மாட்டிங்க… அப்பிடிப்பட்ட நீங்களே இப்பிடி சொல்லுறிங்கனா அதுக்குக் காரணம் இருக்கும்னு நம்புறேன் மேடம்… நான் மாஜிஸ்திரேட் முன்னாடி என்ன சொல்லணும்?”
“ஏகலைவன் முபீனாவைக் கடத்தலனா கலிங்கராஜனோட பசங்களை கொலை பண்ணப்போறதா மிரட்டுனதை அவர் என் கிட்ட சொன்னதால நானே ரிஸ்க் எடுத்து அவனை முபீனா மாதிரி சந்திக்கப்போனேன்… அந்த நேரத்துல தூக்கம் வராம பேசிக்கிட்டே வாக் வந்த இவங்க கலிங்கராஜனோட நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமா இருந்ததால இவரை ஃபாலோ பண்ணி வந்தாங்க… வந்த இடத்துல ஏகலைவன் என்னைத் தூக்கிட்டுப் போறதை பாத்துட்டு அவனை ஃபாலோ பண்ணுனாங்க… எனக்கும் ஏகலைவனுக்கும் சண்டை நடந்தப்ப கன் ஷாட் சவுண்ட் கேட்டு இவங்க சீக்ரேட்டான குகைய கண்டுபிடிச்சு உள்ள வந்து என் கழுத்தை நெறிச்ச ஏகலைவன் கிட்ட இருந்து என்னைக் காப்பாத்துனாங்க… இது தான் நடந்த உண்மைனு நீங்க மாஜஸ்திரேட் கிட்ட சொல்லுவிங்களா சார்?”
சம்மதமாகத் தலையசைத்த முரளிதரன் “அப்ப உண்மையா அங்க என்ன தான் நடந்துச்சு? கலிங்கராஜன் செஞ்சது எல்லாம் எனக்குத் தெரியும்… இந்தப் ப்ளானை உங்க கிட்ட சொன்னதும் நீங்க நிஷாந்தை வீட்டுக்கு அனுப்பிட்டதா தான் அவர் என் கிட்ட சொன்னார்… உண்மையா நிஷாந்தும் ராக்கியும் அங்க எப்பிடி வந்தாங்க?” என ஆர்வம் தாங்காமல் கேட்டார்.
இதன்யா தொண்டை வலிக்கிறதென சைகை காட்டியவள் நிஷாந்தே மேற்கொண்டு கூறுவான் என்றதும் அவன் குகைக்கு எப்படி வந்து சேர்ந்தான் என்பதை விளக்க ஆரம்பித்தான்.
“மேடம் என்னை வீட்டுக்குப் போகச் சொல்லி அதட்டுனாங்க… நானும் கார் கிளம்புற வரைக்கும் வீட்டுக்குப்போற மாதிரி ஆக்ட் பண்ணிட்டு கார் கிளம்புனதும் வேகமா ஓடி அதை ஃபாலோ பண்ணுனேன்… அப்ப தான் ராக்கி என் எதிர்ல வந்தான்…. ஃபாதருக்கு என்னாகுமோங்கிற பயத்துல தூக்கமே வரலனு சொன்னான்… அவன் கிட்ட நடந்த எல்லாத்தையும் சொன்னேன்… இந்த நிலமைல இதன்யா மேடம் மாமா கிட்ட தனியா மாட்டுனாங்கனா அவர் அவங்களை உயிரோட விடமாட்டார்னு தோணுச்சு… மாமாக்கு ஏமாறுறது சுத்தமா பிடிக்காது… அவர் எதிர்பார்த்த முபீனாக்குப் பதிலா அங்க மேடம் இருந்தாங்கனா கட்டாயம் அவர் அவங்களை அட்டாக் பண்ண வாய்ப்பிருக்குனு சொன்னேன்… ராக்கிய என் கூட உதவிக்குக் கூப்பிட்டேன்… அவனும் வரச் சம்மதிச்சான்… நாங்க ரெண்டு பேரும் அங்க போனப்ப கலிங்கராஜன் சாரோட கார் இல்ல… ஒரு உருவம் யாரையோ சுமந்துட்டு போறது நிலா வெளிச்சத்துல வரிவடிவமா தெரிஞ்சுது… அது மாமா தான்னு நான் கண்டுபிடிச்சிட்டேன்… ராக்கியோட மொபைல் லைட் வெளிச்சத்துல சத்தம் வராம மெதுவா அவரை ஃபாலோ பண்ணுன நாங்க ஒரு கட்டத்துல அவரை காணாம திகைச்சிட்டோம்… அவரோட வாக்கிங் ஸ்பீடுக்கு ஈடு குடுக்க முடியல… ரெண்டு பேரும் மாமா மேடமை எங்க தூக்கிட்டுப் போனார்னு தெரியாம முழிச்சப்ப திடீர்னு துப்பாக்கி சுடுற சத்தம் கேட்டுச்சு… சத்தம் வந்த திசைய பாத்து ஓடுனப்ப குகைய மாமா சரியா மூடாம போனதை வச்சு கண்டுபிடிச்சு நாங்க உள்ள போயிட்டோம்… அப்ப மாமா மேடமோட கழுத்தை நெறிச்சுக்கிட்டு இருந்தார்… என்னால அதை பாத்ததுக்கு அப்புறமும் சும்மா இருக்க முடியல… கைக்கு கிடைச்ச சின்ன பாறாங்கல்லை வச்சு அவரோட பின்னந்தலைல அட்டாக் பண்ணுனேன்… மாமா வலில மேடமை விட்டுட்டார்.. அப்புறம் இனியா எப்பிடி செத்தான்னு சொல்லி என்னை ப்ரவோக் பண்ணுனார்… எனக்குள்ள கோபத்தைத் தூண்டுனார்… என் இனியா… அவளை… ரோஷணை வச்சு”
நிஷாந்த் தடுமாறியதும் அவனது புறங்கையில் ஆறுதலாகத் தட்டினார் முரளிதரன்.
“உன் நிலமை புரியுது நிஷாந்த்… அவன் உன்னை ப்ரவோக் பண்ணி கோவப்பட வச்சு சண்டை போட நினைச்சிருப்பான்… நீ அதுக்கு ரியாக்ட் பண்ணலனதும் இதன்யா மேடம் கிட்ட இருந்து தப்பிக்க நினைச்சிருப்பான்… அதனால மேடம் அவனோட இன்னொரு கால்லயும் சுட்டுடாங்க… இதானே நடந்துச்சு?” என்று அவர் கேட்க நிஷாந்த் தடுமாறி ஏதோ சொல்ல வர அவனுக்கு முன்னர் இடையிட்டாள் இதன்யா.
“அங்க நடந்ததை பாத்த மாதிரியே சொல்லுறிங்க முரளி சார்”
நிஷாந்தின் கண்கள் இதன்யாவிடம் ஏதோ கூற அவளது பார்வையில் கண்டிப்பு ஏறியது. அனிச்சையாக நிஷாந்தின் கண்கள் கலங்கின. அவன் பின்னர் எதுவும் கூறவில்லை.
கலிங்கராஜனும் ராக்கியும் இதன்யாவை நன்றியுணர்வோடு பார்த்தார்கள். முரளிதரன் இதன்யாவின் கூற்றையே மாஜிஸ்திரேட்டிடம் சொல்வதாகக் கூறினார்.
அவர்கள் பேச்சினிடையே “உள்ள வரலாமா?” என்று கேட்டபடி ரசூல் பாயோடு வந்து நின்றார் அஸ்மத்.
அவரது கையில் சாப்பாடு பாத்திரங்கள் அடங்கிய பை இருந்தது.
“வாங்க அஸ்மத்” என்றவளிடம்
“சாப்பாட்டுக்கு அப்புறம் வேலை சம்பந்தமா பேசிக்கோங்க… எல்லாரும் கை கழுவிட்டுவாங்க” என்றார் அஸ்மத்.
இதன்யாவைத் தவிர அனைவரும் சாப்பிட்டுவிட்டதாகக் கூறவும் அவளுக்கு மட்டும் இட்லிகளை வைத்து நீட்டினார். ஒரு கிண்ணத்தில் சூடாக சூப் வேறு!
“சூப் குடிக்குறிங்களா?” என மற்றவர்கள் கையில் தம்ளரை திணித்தார் ரசூல் பாய்.
அனைவரும் சாப்பிட்ட பிற்பாடு இதன்யாவுக்கு நன்றி சொன்ன அஸ்மத் மற்ற அனைவரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு அவளுக்கு உடை மாற்ற உதவினார். மாஜிஸ்திரேட்டைச் சந்திக்கச் செல்லவேண்டுமல்லவா!
உடை மாற்றிய பிறகு “முபீ வாப்பா உங்கப்பா அம்மாவ திருநெல்வேலிக்குப் போய் கூட்டிட்டு வந்துடுவாங்க… நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் அவர்.
ரசூல் பாய் –அஸ்மத் தம்பதி கிளம்பியதும் மார்த்தாண்டனும் மகேந்திரனும் காவல் வாகனத்தோடு மருத்துவமனைக்கு வந்து சேர கலிங்கராஜன், ராக்கி, நிஷாந்தோடு இதன்யாவும் முரளிதரனும் அதிலேறி மாஜிஸ்திரேட்டைச் சந்திக்க திருநெல்வேலிக்குக் கிளம்பினார்கள்.
குற்றவாளி பற்றிய தகவலை உடனுக்குடன் நியூஸ் சேனல்களுக்கு அனுப்ப பொன்மலையில் முகாமிட்டிருந்த ஊடகத்தினர் பார்வையில் கலிங்கராஜன், நிஷாந்த் மற்றும் ராக்கி விழுவதில் இதன்யாவுக்கு விருப்பமில்லை.
எதையாவது இட்டுக்கட்டி எழுதுவார்கள் என்ற எண்ணம்.
அவர்கள் மாஜிஸ்திரேட் வீட்டை அடைந்து அவரிடம் நடந்ததை சொல்லி ஏகலைவனைத் தங்களது காவலில் வைத்து விசாரிப்பதற்கான ஆணையைப் பெற்றார்கள்.
குகையில் நடந்த அனைத்தையும் பார்த்த சாட்சிகளாக ராக்கியும் நிஷாந்தும் சேர்க்கப்பட்டனர். கலிங்கராஜனின் வழக்கறிஞர் வந்திருந்ததால் அவரும் சாட்சியாகச் சேர்க்கப்ப மாஜிஸ்திரேட்டைச் சந்திக்க வந்த விவகாரத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு அனைவரும் மீண்டும் பொன்மலைக்குக் கிளம்பினார்கள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

