‘நம்ம மைண்ட்ல கான்சியஸ் மைண்ட், சப்கான்சியஸ் மைண்ட்னு ரெண்டு பகுதிகள் இருக்குறதா சொல்லுவாங்க. அந்த சப்கான்சியஸ் மைண்ட் ரொம்ப பவர்ஃபுல்லானது. ஒருத்தரை நாம பாத்துப் பேசுறப்ப அவங்க பேசுற ஸ்டைல், பாடி லாங்வேஜ் இதெல்லாம் அந்த சப்கான்சியஸ் மைண்ட்ல ஸ்டோர் ஆகும். அது ஸ்டோர் பண்ணுன எல்லா விசயங்களையும் அப்பப்ப நடக்குற சம்பவங்களோட கம்பேர் பண்ணி பாக்கும். பழைய ஆபத்தான சம்பவத்தோட இப்ப நடக்குற இன்சிடெண்டை ஒப்பிட்டுப் பாத்துட்டு அது டேஞ்சர்னு சிக்னல் காட்டுறதைதான் நாம ‘மனசுகு ஒரு மாதிரியா இருக்கு, தப்பா ஏதோ நடக்கப்போகுதுனு தோணுது’னு சொல்லுவோம் அடிக்கடி. பல நேரங்கள்ல சப்கான்சியஸ் மைண்ட் சொன்னது நடந்திடும். எப்பவுமே உங்களோட உள்ளுணர்வு குடுக்குற சிக்னலை கவனிங்க”
-ஆதிரா
அன்று காலையில் மில்லுக்குச் செல்லும்போதே மனதில் ஏதோ இனம்புரியாத அலைக்கழிப்பு ஆதிராவுக்கு. இந்த மாதிரியான மனநிலை இருக்கும்போது முடிந்தவரை புதிய வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளமாட்டாள் அவள். அதே போல சிக்கலான வேலை எதையும் இழுத்துக்கொள்ளவும் மாட்டாள்.
அவள் கிளம்பியபோது கதிர்காமன் வழக்கம் போல அவளது புடவை முந்தானையைப் பிடித்துக்கொண்டு நின்றான். அன்று அவனை அழைத்துச் செல்வது கூட அவளது மனதுக்குத் தடையாகவே தோன்றியது.
“பெரியம்மா உனக்கு யானை பொம்மை வாங்கிட்டு வர்றேன். இன்னைக்கு ஒரு நாள் ஆச்சி கூட இருப்பியாம்” என அவள் சொன்ன சமாதானங்கள் எதையும் குட்டி கதிர் கேட்கவில்லை.
சிவகாமிக்குத் திகைப்பு.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“உன் கூட வந்து பழகிட்டான். இன்னைக்குத் திடீர்னு வேண்டாம்னு சொன்னதும் அடம்பிடிக்குறான். கூட்டிட்டுப் போயேன்டி”
“அத்தை இன்னைக்கு மனசுக்கு ஏதோ உறுத்தலா இருக்கு. தப்பா படுது. குழந்தைய அழைச்சிட்டுப் போக தயக்கமா இருக்கு. ஏன்னு தெரியல”
“உன் புருசன் எதுவும் சொன்னானா?”
உடனே ஆதிரா வேகமாக மறுத்தாள்.
“புவன் எப்பவும் என்னை எதுவும் சொல்லமாட்டாங்க அத்தை. இது வேற”
சிவகாமி மருமகளின் சலனத்தை உணர்ந்தவராய் பூஜையறைக்குச் சென்றவர் வரும்போது திருநீற்று மரவையுடன் வந்தார்.
“விபூதி பூசி மனசுல சாமிய நினைச்சுக்கிட்டுப் போ. எல்லா சங்கடமும் ஓடிப் போயிடும்”
சொன்னதோடு அவளது நெற்றியில் பூசியும் விட்டார் சிவகாமி.
அன்றைய தினம் புவனேந்திரன் சீக்கிரமாகவே ஹோட்டலுக்குப் போய்விட்டான். முக்கியமான வேலையொன்று வந்துவிட்டதெனச் சொல்லிவிட்டுப் போனான்.
அவன் இருந்திருந்தால் கொஞ்சம் தெம்பாக உணர்ந்திருப்பாள் ஆதிரா.
மாமியார் பூசிவிட்ட விபூதி அவளது சலனத்தைக் குறைத்துவிட கதிர்காமனோடு காரில் ஏறினாள்.
மில்லுக்குப் போனதும் தங்கவேலு இரத்தக்காயத்துடன் எதிர்பட்டார்.
“என்னாச்சு மாமா? கால்ல இவ்ளோ பெரிய காயம்?”
பைக்கில் மில்லுக்கு வந்தவர் பைக்கை நிறுத்தியபோது தலைசுற்றி கீழே விழுந்து, அவரது கால் மீதே பைக்கின் ஸ்டாண்ட் பலமாக இடித்ததில் நல்ல காயம் அவருக்கு.
மில்லின் ஊழியர் ஒருவரை அழைத்து தங்கவேலுவை அருகிலிருக்கும் கிளினிக்குக்கு அனுப்பிவைத்தவள் கதிர்காமனோடு தனது அலுவலக அறைக்கு வந்து சேர்ந்தாள்.
அங்கே அவளுக்கு முன்னரே காத்திருந்தான் அவினாஷ். ஆதிராவின் முகத்தில் அவனைக் கண்டதும் சிடுசிடுப்பு குடியேறியது.
ஆனால் அவள் கத்தினால் கதிர்காமன் பயந்துவிடுவான் என்பதால் அமைதி காத்தாள்.
கதிர்காமனுக்காக வாங்கி போட்டிருந்த பொம்மைகளை அவனிடம் கொடுக்கவும் பையன் விளையாட்டில் ஆர்வமாகிவிட்டான். அந்த இடைவெளியில் அவினாஷிடம் தொழில் பேச்சை ஆரம்பித்தாள் ஆதிரா.
“என்ன விசயம்?”
“இந்த மாசத்துல இருந்து எங்களுக்குச் சப்ளை பண்ணுற எண்ணெய்யோட அளவை கொஞ்சம் அதிகமாக்க முடியுமானு கேட்டுட்டுப் போக வந்தேன்”
“இதுக்காக நீங்களே வரணும்னு என்ன அவசியம்?”
“தொழில் விவகாரங்களை நானே பேசி முடிச்சிடுறதுதான் வழக்கம். எப்பவும் எனக்குப் பதிலா வேற ஒருத்தரை வச்சு தொழில்பேச்சை முடிக்கிறதில்ல”
புவனேந்திரன் தனக்குப் பதிலாக இவனோடு தொழில் ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தை நடத்தியதைக் குறிப்பிடுகிறான் போல! ஆதிரா வலுக்கட்டாயமாகப் புன்னகைத்தாள்.
“எத்தனை லிட்டர் எண்ணெய் அதிகமா வேணும்?”
தனது குறிப்பை அவள் கவனிக்கவில்லை என்றதும் அவினாஷுக்கும் சப்பென்று ஆனது. அவளோடு தொழில் பேச்சைத் தொடர்ந்தான். இடையிடையே அவனது பார்வை பொம்மைகளோடு விளையாடிக்கொண்டிருந்த கதிர்காமனைத் தொட்டு மீண்டது.
அதை ஆதிரா கவனிக்கவில்லை. அவளது பார்வை அந்த மாத வரி விவரங்கள் அடங்கிய கோப்பில் குவிந்திருந்தது.
அந்நேரத்தில் வழக்கமாய் காபி டீ கொண்டு வரும் நபர் அவினாஷுக்குக் கொண்டு வந்து கொடுத்தார்.
“மேடமுக்குக் கிடையாதா?”
“மேடம் காபி குடிக்கிறதில்ல தம்பி”
அவர் போன பிறகு அவினாஷ் காபியை அருந்திய நேரத்தில் ஆதிராவின் நாசியிலேறிய காபியின் நறுமணம் அவளுக்கு மட்டும் அசௌகரியத்தைக் கொடுத்தது.
திடுமெனக் குமட்டிக்கொண்டு வர சட்டெனக் கோப்பினை மேஜை மீது வைத்தவள் அந்த அறையோடு இணைந்திருந்த கழிவறைக்குள் ஓடினாள்.
காபியின் வாசனை எட்டாத அறைக்குள் வந்து நின்றதும் குமட்டல் அடங்கிய உணர்வு. இருந்தாலும் நெஞ்சுக்குள் ஏதோ உருளுவது போல இருந்த உணர்வு அடங்கவில்லை.
அங்கிருந்த வாஷ் பேஷினில் தண்ணீரைத் திறந்துவிட்டு முகத்தைக் கழுவிக்கொண்டாள் ஆதிரா.
‘என்ன நடக்கிறது எனக்குள்? சமீபநாட்களாகச் சோர்வும், குமட்டலுமாக இருக்கிறதே! என்ன வியாதியின் அறிகுறி இது?’
அவள் யோசிக்கும்போதே கழிவறையின் கதவை யாரோ தாழிட்டார்கள். வேறு யாராக இருக்க முடியும்? வெளியே இருந்த அவினாஷாக மட்டும்தானே இருக்க முடியும்?
ஆதிராவுக்குப் பதற்றம்! கதிர்காமன் தனியே இருக்கிறான். ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆதிராவைக் காணவில்லை என்றால் அழ ஆரம்பித்துவிடுவான் அவன்.
“அவினாஷ் என்ன பண்ணுறிங்க? கதவைத் திறங்க?’
அவள் உள்ளிருந்து மடமடவெனத் தட்ட அதைக் கண்டுகொள்ளாமல் வில்லத்தனமானச் சிரிப்போடு சாக்லேட்டைச் சுவைத்த கதிர்காமனைத் தூக்கிக்கொண்டு ஆதிராவின் அலுவலக அறையிலிருந்து வெளியேறினான் அவன்.

மில் ஊழியர்களில் ஒருவர் வித்தியாசமாகப் பார்த்துவிட்டு நிறுத்தி விசாரிக்கவும் “உங்க மேடம் கிட்ட அனுமதி வாங்கிட்டுத்தான் குட்டிப்பையனைக் கொஞ்சுறேன்” என்று சமாளித்தவனுக்குக் கதிர்காமனுக்குச் சாக்லேட் கொடுத்துச் சமாளித்து அழைத்துச் செல்வதா சவாலாக இருக்கும்!
குழந்தையோடு தனது காரிலேறி அவன் செல்ல, ஆதிரா கழிவறைக்குள் அடைபட்டவள் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தாள்.
“யாராச்சும் வாங்க ப்ளீஸ்! நான் உள்ள இருக்குறேன். வெளிய கதிர் தனியா இருக்குறான்”
அவள் கத்துவது அலுவக அறையைத் தாண்டி வெளியே கேட்காமல் போனது ஆதிராவின் துரதிர்ஷ்டம்.
கத்தி கத்தி ஓய்ந்து போனவள் வெளியே கதிர்காமனின் குரலும் கேட்காததில் பயந்தாள்.
நல்லவேளையாக அவினாஷ் காபி குடித்ததும் தம்ளரை எடுத்துப் போக வந்த நபர் ஆதிராவின் கூக்குரலைக் கேட்டுவிட்டார். அவர் ஓடிப்போய் கழிவறை கதவைத் திறக்க வெளியே வந்தவளோ “கதிர்… கதிர் எங்க?” எனப் பரபரக்க
“இங்க ஒரு சார் இருந்தார்ல, அவர் தூக்கிட்டுப் போனார் மேடம்” என்று அவளது தலையில் குண்டைப் போட்டார்.
ஆதிராவுக்குள் சொல்லவொண்ணா நடுக்கம். அவினாஷின் குறுகிய புத்தி அவள் அறிந்ததுதான். ஆனால் குழந்தையைத் தூக்கிச் செல்லும் அளவுக்கு அவன் குரூரமானவன் என்பது தெரியாதே!
பதற்றத்தோடு மொபைலை எடுத்துக்கொண்டு மில்லை விட்டு வெளியே வந்தவள் செக்யூரிட்டியிடம் விசாரிக்க, அவினாஷின் கார் அங்கிருந்து கிளம்பிவிட்டதாகக் கூறினார் அவர்.
அவ்வளவுதான்! அதிர்ச்சியில் உறைந்து போனாள் அவள்.
அந்நேரத்தில் அவளது மொபைல் அடித்தது. அழைப்பை உடனே ஏற்றாள்.
“அடடா! அதுக்குள்ள வெளிய வந்துட்டியா? த்சூ! அந்தக் குட்டிப்பையனைத் தேடுறியா ஆதி? அவன் என் கூட தான் இருக்குறான்.”
“அவினாஷ்” கோபத்தில் அவள் குரல் நடுங்கியது. மறுமுனையில் இருந்தவன் சிரித்தான்.
“ப்ச்! கோவப்படுற இடத்துல நீ இப்ப இல்ல ஆதிரா. எப்பவுமே வானத்தைப் பாத்து இருக்குற உன் தலையும் அதுக்கு மேல இருக்குற தலைக்கனமும் எனக்கு அன்கம்ஃபர்டபிளான ஃபீலைக் குடுக்கும். இது நீ தலைகுனிஞ்சு நான் சொல்லுறதைப் பணிஞ்சு கேக்க வேண்டிய நேரம். கேக்கலனா உங்க வீட்டு வாரிசு என் வீட்டு காம்பராக்குள்ளயே அழுது மயங்க வேண்டியதுதான்”
ஆதிராவுக்குக் காம்பரா என்றால் தானியக்கிடங்கு என்று தெரியும். அவர்கள் பக்கத்தில் நிலச்சுவான்தாரர்களின் வீடுகளில் காம்பரா அறை இருப்பது வழக்கம். பெரும்பாலும் அதன் உயரம் அதிகமாக இருந்தாலும் நீளமும் அகலமும் குறுகலாவே இருக்கும். காற்று புகாத அளவுக்குக் கட்டியிருப்பார்கள்.
அதில் குழந்தையை இந்தச் சதிகாரன் வைத்துப் பூட்டிவிட்டால்?
பயத்தில் உடல் நடுங்க வேர்வையோ மழையாய் ஊற்றியது.
“இங்க பாரு அவினாஷ்! உனக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல”
“சம்பந்தமில்லடி. ஆனா உன் கிட்ட முடிக்க வேண்டிய கணக்கு ஒன்னு பாக்கி இருக்குல்ல. என் அக்காவ நீ அசிங்கப்படுத்திருக்க. அதுவும் அந்தாளு முரளி முன்னாடி. அவன் சும்மாவே எங்கக்காவ கேவலமா நடத்துவான். நீ இன்னும் கொம்பு சீவி விட்டுட்டுப் போயிருக்க. எப்பிடி எப்பிடி பொம்பளைங்கிற அடக்கமில்லாம உன் இஷ்டத்துக்கு நீ எல்லாரையும் எடுத்தெறிஞ்சுப் பேசுவ. அதை ஆம்பளை நான் வேடிக்கை பாக்கணுமா? அது எனக்கு அசிங்கம். இப்பவே நீ எங்க வீட்டுக்கு வர்ற. என் அக்கா கால்ல விழுந்து என்னை மன்னிச்சிடுங்கனு கெஞ்சுற. போலீஸ் கிட்ட போறேன், புருசன் கிட்ட போறேன், பிள்ளையோட அப்பன் கிட்ட சொல்லுறேன்னு கிளம்புன, பையன் உயிருக்கு உத்தரவாதம் இல்ல”
“அவினாஷ்” ஆதிரா பெருங்கோபத்தில் கத்த
“ஏய்! கத்தாதடி! உன் அகங்காரம் முக்கியமா, உன் வீட்டு வாரிசு முக்கியமானு நீயே முடிவு பண்ணிக்க.” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அவன்.
ஆதிராவால் என்ன செய்ய முடியும்? பரபரவென யோசித்தது அவளது மூளை.
அவினாஷ் சொல்வதை அப்படியே கேட்பதற்கு அவள் ஒன்றும் பைத்தியக்காரி இல்லையே! மகிழ்மாறனுக்கு அழைத்து நிலவரத்தைச் சொன்னால் நிலமை இன்னும் மோசமாகும்.
எனவே புவனேந்திரனின் எண்ணுக்கு அழைத்தாள்.
அழைப்பு ஏற்கப்பட்டதும் பிரச்சனையை அவள் சொல்ல புவனேந்திரனுக்கோ அவினாஷைக் கொல்லும் அளவுக்கு வெறி.
“நான் அவன் வீட்டுக்குப் போறேன் புவன். குழந்தைய அவன் எதுவும் செஞ்சிடக்கூடாது. நான் தனியா போற மாதிரியே போறேன். நீங்க சீக்கிரமா வந்துடுங்க”
புவனேந்திரன் ஹோட்டலில் இருந்து கிளம்பியபோதே ஆதிராவும் விக்கிரமசிங்கபுரத்துக்குக் காரை விரட்டினாள். அவளுக்கு அவினாஷின் வீட்டின் முகவரி தெரியும்.
அதை வைத்து விசாரித்துச் சரியாக அவனது வீட்டையும் அடைந்தாள். காரை நிறுத்திவிட்டு ஓட்டமும் நடையுமாக வீட்டுக்குள் வந்தவள் ஹாலில் சாவகாசமாக அமர்ந்திருந்த அவினாஷைப் பார்த்ததும் காளி ரூபத்துக்கு வந்துவிட்டாள்.
“எங்கடா கதிர்? மரியாதையா சொல்லு” என்று அவனது சட்டை காலரை அவள் பிடிக்க

“இப்பவும் திமிர் குறையலல்ல உனக்கு” எனக் கறுவியவன் ஹாலில் இருந்து செல்லும் வழியொன்றை காட்டினான்.
“அங்க இருக்குற காம்பரா ரூமுக்குள்ள உன் கதிர் விளையாடிக்கிட்டு இருக்கான். கொஞ்சநேரம் கத்துனான். அப்புறம் சத்தமில்ல. மயங்கிட்டானோ என்னவோ?” என்று சொல்லி அவன் சிரிக்க ஆதிரா அவனது கன்னத்தில் அறைய எத்தனித்தவள் கையை அடக்கிக்கொண்டாள்.
“மரியாதையா அந்த ரூமைத் திறந்து குழந்தைய குடுத்துடு அவினாஷ். இல்லனா காலம் முழுக்க ஜெயில்ல கிடக்கணும் நீ”
“குழந்தைய கொல்லுற அளவுக்கு எனக்குக் கல் மனசு இல்ல. இப்ப எங்க அக்கா வருவா. நீ நல்லப்பிள்ளையா அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கணும். இல்லனா என் மனசு கல் ஆகிடும். அப்புறம் உன் இஷ்டம்”
“சீ! அப்பிடி என்ன வெறி உனக்கு? நீ செய்யுற தப்புக்குச் சட்டம்…”
“ஏய்! எந்தச் சட்டத்தைப் பத்தியும் எனக்குக் கவலையில்லடி. டே ஒன்ல இருந்து நீ என்னோட ஆம்பளைங்கிற ஈகோவ சீண்டிக்கிட்டே இருந்த ஆதிரா. அதோட உச்சக்கட்டமா என் அக்காவ அசிங்கப்படுத்திருக்க. உன்னை ஊருக்குள்ள நடமாடவிட்டுட்டு ஒதுங்கி நின்னேன்னா நான் என்னடி ஆம்பளை?”
சுஜாதாவும், அலமேலுவும் உரம் போட்டு வளர்த்த ஆணாதிக்கத்தின் வித்து வளர்ந்து விஷச்செடியாய் ஆதிராவின் முன்னே நின்று கொக்கரித்தது.
ஆதிராவுக்கே ஒரு ஆண் தனது ஈகோவைத் திருப்திப்படுத்த இவ்வளவு தூரம் செல்வானா என்ற அதிர்ச்சி! பெண்களுக்கும் ஈகோ உண்டு. ஆனால் அன்புக்குரியவர்களின் உயிரோடு விளையாடுமளவுக்கு அந்த ஈகோவைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு திரியமாட்டார்கள்.
ஆதிராவுக்கு இப்போது கதிர்காமனின் நலனே பெரிதாகப் பட்டது.
அந்நேரத்தில் சரியாக அங்கே சுஜாதாவும் வந்து சேர்ந்தாள். தந்தையும் அன்னையும் திருநெல்வேலியில் அத்தை வீட்டுக்குச் சென்ற நேரத்தில் திடீரென தம்பி போன் செய்து வீட்டுக்கு வா என்றதும் பயத்தோடு ஓடி வந்திருந்தாள் அவள்.
ஆட்டோவுக்குப் பணம் கொடுத்துவிட்டு விறுவிறுவென வீட்டுக்குள் வந்தவள் அங்கே நின்ற ஆதிராவைக் கண்டதும் கடுப்பானாள்.
“இங்க உனக்கு என்ன வேலை? வெளிய போ” என விரட்ட எத்தனித்தவளை கடுஞ்சினத்தோடு உறுத்து விழித்தாள் ஆதிரா.
“எங்க வீட்டுக் குழந்தைய உங்க தம்பி கடத்திட்டு வந்து காம்பராக்குள்ள அடைச்சு வச்சிருக்கான். அவன் ஆம்பளைனு நிரூபிக்கிறானாம். நான் உங்க கிட்ட மன்னிப்பு கேக்கலனா கதிரை என் கிட்ட ஒப்படைக்கமாட்டானாம்”
“என்ன?” சுஜாதா அதிர்ந்தபோதே காம்பராவுக்குள்ளிருந்து கதிர்காமன் பயந்து அழுவது கேட்டது.
ஆதிரா பொய் சொல்லவில்லை என்று புரிந்து போனது அவளுக்கு.
“என்னடா பண்ணி வச்சிருக்க? பச்சைப்புள்ளை அது. காம்பராக்குள்ள பூச்சிப்பொட்டு இருந்தா.. கடவுளே!”
காம்பராவை நோக்கி ஓட எத்தனித்தவளைத் தன் கைப்பிடியில் நிறுத்தினான் அவினாஷ்.
“அவினாஷ் இது தப்புடா. இவ எக்கேடோ கெட்டுப் போவட்டும். நான் வாங்காத பேச்சா? பத்தோட பதினொன்னா போயிடட்டும் அதெல்லாம். குழந்தைடா அது. ஸ்ருதிய அந்த இடத்துல வச்சு பாரு”
சுஜாதா தனது மகளைக் குறிப்பிட்டு வருத்தத்தோடு சொல்ல அவினாஷா விடுவான்?
“காம்பரா ரூம் திறந்துதான் இருக்கு. உள்ளேயும் வெளியேயும் ஏணி கூட இருக்கு. இவளே போய் அவனைத் தூக்கிட்டு வரட்டும்கா. என்ன போறியா?”
நக்கலாக ஆதிராவிடம் கேட்டான் அவன்.
“போய் குழந்தைய தூக்கேன்டி. அவன் அழுறது கேக்கலையா?” சுஜாதா கத்த
“அவ போகமாட்டாக்கா. அவளுக்கு க்ளாஸ்ட்ரோஃபோபியா, சின்ன குறுகலான இடத்துக்குப் போக பயம். பாரேன், இந்த அல்லிராணிக்கும் ஆண்டவன் ஒரு இடத்துல செக் வச்சிருக்கான்” என்று சொல்லி எகத்தாளமாகச் சிரித்தான்.
அந்த இடத்தில் க்ளாஸ்ட்ரோஃபோபியாவை எண்ணி வெட்கிப் போனாள் ஆதிரா. ஆனால் அடுத்த நொடியே புவனேந்திரனோடு எடக்கல் குகையின் குறுகிய பாறை இடுக்கு பாதையில் ஏறிய தருணம் நினைவுக்கு வந்தது.
“நான் இருக்கேன்ல” மனக்கண்ணில் வந்து தைரியம் சொன்னான் புவனேந்திரன்.
ஆதிரா எதையும் யோசிக்கவில்லை. காம்பரா அறையை நோக்கி சென்றாள்.
மரத்தால் அடைக்கப்பட்டதைப் போல தோற்றமளித்த அறையின் வெளியே ஏணி இருந்தது. உள்ளேயோ கதிர்காமனின் அழுகையும் அலறலும்.
கண்களை மூடி நிதானித்தவள் ஏணிப்படியில் ஏறி உள்ளே இருக்கும் ஏணியில் கால் வைத்து இறங்கினாள். உள்ளே சின்னதாய் விளக்கு எரிந்து கொண்டிருக்க இரு பக்கமும் அடுக்கப்பட்ட மூட்டைகளுக்கு நடுவே இருந்த குறுகிய இடத்தில் குழந்தையை அமர்த்தியிருந்தான் அவினாஷ். விளையாட சில ஜாமான்கள் வேறு.
அந்த மூட்டைகளில் ஏதேனும் ஒன்று சரிந்து குழந்தை மீது விழுந்துவிட்டால் என்னாகுமென என்ற பயம் கூடவா ஒருவனுக்குத் தோன்றியிருக்காது?
ஆதிரா படபடப்புடன் ஏணியில் இறங்கியவள் கடைசிப்படியில் கால் வைத்தபோது புடவையின் முந்தானை காலில் அகப்பட்டுத் தடுக்கியதில் தவறி காம்பரா அறைக்குள் விழுந்தாள்.
விழுந்ததில் வயிற்றில் முட்டியில் நல்ல அடி! கதிர்காமன் பெரியம்மாவைப் பார்த்ததும் அழுகையை நிறுத்தி அவளை நோக்கி ஓடி வந்தான்.
வலியைப் பொருட்படுத்தாமல் குழந்தையை அணைத்துக்கொண்டவள் “ஒன்னுமில்ல ராஜா. நான் வந்துட்டேன்ல” என்றபடி கண்களை அறைக்குள் சுழலவிட்டபோது அங்கே அடுக்கப்பட்ட மூட்டைகள் தங்களை நோக்கி நெருங்கி வருவது போல ஒரு மாயை.
அவளது மனம் இல்லாத ஒன்றை நினைத்துப் பயம் கொள்ள அவளது மூளையோ அபாயமென உணர்ந்து சிக்னல் அனுப்ப அட்ரினலின் சுரப்பு அதிகரிக்க படபடப்பும் பயமுமாக நடுங்கிய ஆதிரா இன்னும் இறுக்கமாகக் கதிர்காமனை அணைத்துக்கொண்டாள்.
“உன் மனசு உன்னைப் பயப்படுத்த நினைக்குறப்ப நீ அதை ஜெயிக்கணும். வா”
புவனேந்திரன் சொன்னது நினைவுக்கு வந்தது மீண்டும். அவனது வார்த்தைகள் திடத்தையும் தைரியத்தையும் அவளுக்கு ஊட்ட முயல மீண்டும் மீண்டும் அவற்றையே உருப்போட்டபடி கதிர்காமனைச் சுமந்துக்கொண்டு படியிலேறினாள் ஆதிரா.
சீக்கிரம் ஏறாவிட்டால் மூட்டைகளுக்குள் நெருங்கி இறந்துவிடுவோமென்ற போலியான அபாயத்தை அவளது மூளை நம்பிக்கொண்டிருக்கிறது. அதே நேரம் மனமோ புவனேந்திரனின் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் மந்திரம் போல உச்சரிக்க இறுதியில் மூளையை மனம் வென்றுவிட்டது.
ஆம்! எப்படியோ காம்பரா அறையின் உட்புற ஏணியில் ஏறி வெளியே வந்து வெளிப்புற ஏணியில் இறங்கவும் செய்தாள்.
அவள் கீழே இறங்கியதும் இத்துணை நேரம் பிடித்து வைத்திருந்த தைரியம் வடிய அதிர்ச்சி மேலோங்கியதில் தலை சுற்றி கீழே சரிந்தாள் கதிர்காமனோடு.

தரையில் அவள் விழும் முன்னர் அவளை உருவம் தாங்கியது. அந்த உருவம் புவனேந்திரன்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

