1970களில் ‘ஆர்டர் ஆப் நைன் ஆங்கிள்ஸ்’ என்ற சாத்தான் வழிபாடு மற்றும் கல்ட் குழுமம் யூ.கே மற்றும் உலகெங்கும் உள்ள பிற பகுதிகளில் எழுச்சி பெற்றது. இது 1960ல் ஆரம்பிக்கப்பட்ட சாத்தான் வழிபாட்டு குழுமம் ஆகும். 1980ல் இக்குழுமத்திற்கு பொது அங்கீகாரம் கிடைத்தது. இது தொன்மையான சாத்தானிச கொள்கைகளைப் பின்பற்றுவதோடு நியோ-நாஜி சித்தாந்தத்தையும் பின்பற்றிய சாத்தான் வழிபாட்டு குழுமம் ஆகும். இந்தக் குழுமம் 1973ல் ஆண்டன் லாங் என்பவரால் தொடங்கப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆண்டன் லாங் என்பது பிரிட்டிஷ் நியோ-நாஜி செயல்பாட்டாளரான டேவிட் மியாட் என்பவரின் புனைப்பெயர் என்று கூறுபவரும் உண்டு. நரபலியை ஊக்குவிக்கும் சாத்தான் வழிபாட்டு குழுவான இது சமூகத்தில் பிளவை உண்டு பண்ணும் விதத்தில் இயங்கியது. அதோடு இந்த குழு உலகம் முழுவதும் இணையம் மூலம் பிரபலமாக இருபத்தோராம் நூற்றாண்டில் வலதுசாரிகளின் ஆதரவு பரிபூரணமாக உதவியது. அதை தொடர்ந்து தனி மனிதர்களோ அல்லது குழுவோ தங்களை சாத்தானிஷ்டுகள் என்று கூறிக்கொண்டு சமூக விரோத காரியங்களில் ஈடுபடுவது வழக்கமானது. தேவாலயங்களைச் சூறையாடுவது, குற்ற காரியங்களில் ஈடுபடுவது, மிருகங்களை குரூரமாகக் கொன்று சாத்தானுக்குப் பலியிடுவது போன்ற காரியங்களை எவ்வித பயமுமின்றி செய்து வந்தன இத்தகைய சாத்தான் வழிபாட்டு குழுக்கள். அமெரிக்க சீரியல் கில்லரான ரிச்சர்ட் ரமிரேஜ் என்பவனும், இத்தாலியன் பீஸ்ட் ஆப் சாத்தான் குழுவும் சாத்தானிசத்தைக் காரணம் காட்டி கொலை கூட செய்துள்ளனர்
-From Britanica
“என்னால இப்பவும் நம்ப முடியல… என் தம்பி கொலை எல்லாம் பண்ணிருக்க மாட்டான் நிஷாந்த்… கான்ஸ்டபிள் கனகு உன் கிட்ட சொன்னது பொய்யா இருக்கும்.. இன்னொரு தடவை உன் வாயால நீ அவனைக் கொலைகாரன்னு சொல்லாதடா… நம்ம இன்னைக்கு வாழுற வாழ்க்கை அவனோட தயவால வந்தது”
சாவித்திரி கண்ணீரும் கம்பலையுமாக ஏகலைவன் கைதானதற்கான காரணத்தை ஏற்க மறுத்து மகனிடம் வாதிட்டுக்கொண்டிருந்தார்.
நிஷாந்துக்கு அன்னையிடம் எப்படி உண்மையைப் புரியவைப்பதென தெரியவில்லை. சற்று முன்னர் தான் கான்ஸ்டபிள் கனகசுப்புரத்தினம் பொன்மலை அரசு மருத்துவமனைக்குக் காவல் பணிக்குச் செல்வதை பார்த்துவிட்டு விவரம் என்னவென கேட்டான். அப்போது தான் ஏகலைவனின் உண்மை முகத்தையும் அவன் தப்பியோடிய விவரத்தையும் அவர் கூறினார். நிஷாந்திடம் பொய் சொல்லி அவருக்கு என்ன ஆகப்போகிறது!
“மாமாவோட இயல்பைத் தாண்டி நடந்த விசயங்கள் ஏராளம்மா… அவரால நான்… நான் என் இனியாவ இழந்துட்டேன்… இப்பவும் நீ அவரைப் பத்தி யோசிக்குற… ஆனா என்னைப் பத்தி நீ கொஞ்சம் கூட கவலைப்படலல்ல… ஒவ்வொரு நாளும் தூங்குறப்ப என் கனவுல இனியா வந்து அழுறாம்மா… என்னைக் கொடுமைப்படுத்தி சாகடிச்சாங்க நிஷாந்த்னு அவ அழுறதை என்னால தாங்க முடியல… உன் தம்பியோட காதல் செத்து பதினைஞ்சு வருசத்துக்கு மேல ஆகுது… ஆனா என் காதல்… என் காதல் உனக்கு விளையாட்டா தோணுதுல்ல… இனியாவும் நானும் உண்மையா காதலிச்சோம்மா… நாங்க அத்துமீறுனதால எங்க காதல் உங்க எல்லார் கண்ணுக்கும் வயசுக்கோளாறா தோணுது… உன் தம்பி தான் என் இனியாவைக் கொன்னுருக்கார்… நீ அழுறதால மட்டும் எதுவும் மாறிடாது… அவர் இனியாவை தேவா அத்தையோட மறுபிறவினு நினைச்சிருக்கார்,.. அதுக்குக் காரணம் பிரகதி… டார்க்வெப்ல அவர் பார்த்த மூடநம்பிக்கை உள்ள வெப்சைட்ஸ்…. மறுபிறவி மண்ணாங்கட்டினு அவர் இனியா மேல… ப்ச்… என் வாயால சொல்ல முடியல… அவ என்னைக் காதலிச்சது அப்பவே அவருக்குத் தெரிஞ்சிருக்கு… என்னைக் காதலிச்ச பாவத்துக்காக இறந்து போயிருக்காம்மா இனியா… என் வலியும் வேதனையும் உனக்குப் புரியாது… இப்ப பிரகதியோட அப்பா போன் பண்ணி கதறுறார்… அவரோட மகள் ஏர்போர்ட்டுக்கே போகலையாம்… பிரகதிக்கு என்னாச்சுனு தெரியல, அவ சிங்கப்பூருக்கும் போகல… ஒருவேளை உன் வீட்டுக்கு வந்திருக்காளானு கேட்டு அழுறார்… கடைசியா உன் தம்பி தான் அவரோட வீட்டுக்குப் போயிருக்கார்… பிரகதிக்கு எதுவோ நடந்திருக்குனு சொல்லி அழுறார்… இதை இதன்யா மேடம் கிட்ட நான் சொல்லியே ஆகணும்… உன் தம்பிய நினைச்சுக் கண்ணீர் விடுறதுல ஒரு சதவிகிதமாச்சும் எனக்காக விடும்மா”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
பிரகதி மாயமான தகவலை இதன்யாவிடம் சொல்ல வீட்டை விட்டு வெளியே வந்தவன் தூரத்தில் கலிங்கராஜனிடம் விவாதம் செய்து கொண்டிருந்தவளைப் பார்த்ததும் சத்தமின்றி நடந்து ஒளிந்து நின்று அவர்களின் உரையாடலைக் கேட்க ஆரம்பித்தான்.
“அழுறதை நிறுத்துங்க… நீங்களும் இன்ஃப்ளுயன்சான பிசினஸ்மேன் தானே… அந்தாளோட செல்வாக்குல பாதி கூடவா உங்களுக்கு இல்ல? இவ்ளோ பெரிய கோழையா இருக்கிங்க? சோபியா, முபீனா எல்லாம் உங்க பொண்ணு இனியா மாதிரி சின்னப்பொண்ணுங்க… அவங்களுக்குனு ஒரு எதிர்காலம் இருக்கு… கொஞ்சம் கூட இரக்கமில்லாம அவளைக் கடத்தப்போறேன்னு என் கிட்டவே சொல்லுறிங்க”
இதன்யா சொன்னதைத் தெள்ளத்தெளிவாகக் கேட்டதும் நிஷாந்த் அதிர்ந்து போனான். ஏகலைவனின் அடுத்த குறி முபீனாவா? அவன் மனதில் இனியாவைக் கொன்றவன் மீதிருந்த வெஞ்சினம் இன்னும் கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. அந்த வெஞ்சினத்தில் பிரகதி காணாமல் போனது கூட பெரிதாய்த் தோணவில்லை.
“உங்க எல்லைய தாண்டிட்டிங்க மாமா.. இந்த தடவை நீங்க நினைச்சதை நான் நடக்க விடமாட்டேன்” என்று சொன்னவன் அவர்களை நோக்கி முன்னேறினான்.
கலிங்கராஜன் முபீனாவைக் கடத்தும் எண்ணத்தைக் கைவிட்டே ஆகவேண்டுமென இதன்யா எச்சரித்துக்கொண்டிருந்தாள். திடுமென வந்து நின்ற நிஷாந்தை பார்த்ததும் திடுக்கிட்டவள் பின்னர் சுதாரித்து
“இந்நேரத்துல நீ இங்க என்ன பண்ணுற?” என விசாரித்தாள்.
“சிங்கப்பூருக்குப் போக ஃப்ளைட் ஏறுன பிரகதி அங்க போகலனு தேவநாதன் சார் போன் பண்ணி அழுறார் மேடம்”
“வாட்? அவ எப்பிடி சிங்கப்பூருக்குப் போக முடியும்? இன்னும் கேஸ் முடியலையே?” என்றவள் பின் நிதானமாக “ஓஹ்! தப்பிச்சுப் போக பாத்தாளா?” என்று கேட்கவும் நிஷாந்த் அப்படியும் இருக்கலாமென்றான்.
“மாமா அவங்க வீட்டுக்கு இன்னைக்கு மானிங் போயிருக்கார்… பட் அந்த நேரத்துல பிரகதி சிங்கப்பூருக்கு ஃப்ளைட் ஏறிருப்பானு சார் சொல்லுறார்… எனக்கு உங்க கிட்ட இந்த நியூஸை சொல்லணும்னு தோணுச்சு” என்றான் அவன்.
இதன்யாவிற்கு இதுவும் ஏகலைவனின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம்.
“சரி! நீ கிளம்பு… உன் மாமாவ நாங்க பிடிச்சதுக்கு அப்புறம் இதை பத்தி விசாரிச்சிக்கலாம்” என அவனை அனுப்புவதில் குறியாக இருந்தவளிடம்
“நீங்க பேசுனதை நான் கேட்டுட்டேன் மேடம்… முபீனாவை மாமா கடத்த சொன்னார்னு இவர் இங்க கிளம்பி வந்திருக்கார்… என் கிட்ட ஒரு ஐடியா இருக்கு மேடம்” என்றான் அவன்.
“நிறைய வெப்சீரிஸ் பாப்பியோ?”
கிண்டலாய்க் கேட்டாலும் அவன் சொன்ன திட்டத்தைக் கவனமாகக் கேட்டாள்.
மூளை அவன் சொல்வதிலுள்ள தர்க்கப்பிழைகளை ஆராய்ந்து பார்த்தது.
நூற்றுக்கு எண்பது சதவிகிதம் தேறக்கூடிய திட்டம் தான். எனவே சரியென்றவள் “பட் ஒரு சின்ன சேஞ்ச்… நீ இப்பவே வீட்டுக்குப் போயிடணும்” என்றாள்.
நிஷாந்த் திகைத்தான்.
“முடியாது மேடம்” என்றான் பிடிவாதமாக.
“டூ வாட் ஐ சே… நீ வீட்டுக்குப் போ… உனக்குனு ஒரு ஃபியூச்சர் இருக்கு… உன் மாமாவ மாதிரி பழிவெறிய மனசுல வளத்துக்காத நிஷாந்த்… உன் அம்மாவ பத்தி யோசி… உன் ஃபியூச்சரைப் பத்தி யோசி… ஒரு இனியாவால உன் வாழ்க்கை முடிஞ்சு போயிடாது… உன் கிட்ட ஆர்கியூ பண்ண எனக்கு நேரமில்ல… ப்ளீஸ் கிளம்பு”
நிஷாந்த் அங்கிருந்து அரைமனதுடன் கிளம்பினான்.
அவன் போனதும் கலிங்கராஜனிடம் “ஏகலைவனுக்குக் கால் பண்ணி முபீனாவ கடத்தியாச்சுனு சொல்லுங்க” என்றாள்.
“சரி மேடம்” என்றவர் ஏகலைவனின் எண்ணுக்கு அழைத்தபோது இதன்யா ரசூல் பாயின் வீட்டுக்குள் சென்றாள்.
“சொல்லுங்க கலிங்கராஜன்… நான் சொன்னதைச் செஞ்சிங்களா?” என்று ஏகலைவனின் குரல் அதிகாரத்தோடு ஒலித்தது.
“செ…ஞ்சிட்டேன் சார்… எங்க வரணும்?” என்று தடுமாறிக் கேட்டார் கலிங்கராஜன்.
“லொகேசன் ஷேர் பண்ணுறேன்… வந்து சேருங்க… முபீனாவை நான் சொன்ன லொகேசன்ல படுக்கவச்சிட்டு நீங்க கிளம்பிடலாம்… அதோட உங்களுக்கும் எனக்குமான டீலிங் முடிஞ்சிடும்”
அழைப்பு துண்டிக்கப்பட்டது.
கலிங்கராஜன் துடிக்கும் இதயத்தோடு காத்திருந்தார். ரசூல் பாயின் வீட்டிலிருந்து புர்கா அணிந்து ஒரு பெண்ணுருவம் வந்தது. கூடவே ரசூல் பாயும் வந்தார்.
கலிங்கராஜனிடம் வந்த பிறகு அந்தப் பெண்ணுருவம் புர்காவின் முகத்திரையை உயர்த்திக் காட்டியது. அது இதன்யா.
“ஏகலைவன் கிட்ட பேசுனிங்களா? என்ன சொன்னான்?”
“லொகேசன் அனுப்பிருக்கார் மேடம்… கார்ல வரச் சொன்னார்”
“கார்லயா? கார் போற அளவுக்குக் காட்டுக்குள்ள பாதையில்லயே?”
ரசூல் பாய் பதற்றத்தோடு கேட்டார்.
“அவர் சொன்ன இடம் காட்டுக்குள்ள இருக்குற குகை இல்ல”
கலிங்கராஜன் தனது கரத்தை ஏகலைவனின் தேயிலை தோட்ட ஆபிசை நோக்கி கை காட்டினார்.
“அந்த ஆபிசுக்குப் பின்னாடி உங்களைப் படுக்க வச்சிட்டுக் கிளம்ப சொன்னார் மேடம்” என்றார்.
“அங்க எதுக்கு? காட்டு குகைக்கு தானே வரச் சொன்னான்னு சொன்னிங்க”
“இப்ப லொகேசன் ஷேர் பண்ணிருக்கார் மேடம்… அது அங்க தான் காட்டுது.. அங்க உங்களை படுக்க வச்சிட்டு நான் கிளம்பிடணும்னு சொல்லிருக்கார்”
பேச்சில் நேரம் செலவளிக்க விரும்பவில்லை இதன்யா.
கலிங்கராஜனின் காரில் ஏறியமர்ந்தாள். ரசூல் பாய் வெளியே நின்று கைகூப்பினார். தன் மகளுக்காக ஒரு கொடியவனிடம் அவள் மாட்டப்போகிறாளே என்ற வேதனை அவரது உடல்மொழியில் வெளிப்பட்டது.
கார் கிளம்பியது. ஏகலைவனின் தேயிலை எஸ்டேட் அலுவலகம் வந்ததும் சில அடிகள் தொலைவில் காட்டின் விருட்சங்கள் இருளில் பூதங்களைப் போல கலிங்கராஜனை மிரட்டின.
இதன்யா மயங்கியிருப்பவளை போல நடிக்க கலிங்கராஜன் அவளைத் தூக்கினார்.
வேதனையோடு “என்னை மன்னிச்சிடுங்க மேடம்… நான் கையாலாகாதவனா போயிட்டேன்” என்றார்.
மயக்கத்திலிருப்பவளைப்போல கண் மூடியிருந்த இதன்யா “கார் சீட்டுல என் மொபைல் இருக்கு… என் ஹஸ்பெண்ட் போலீஸ் குவாட்டர்ஸ்ல இருப்பார்… அவர் கிட்ட மொபைலை குடுத்து முரளிதரன் சார் டீமை காட்டு குகைக்கு இதன்யா வரச்சொன்னதா சொல்லிடுங்க… மீதிய ப்ராணேஷ் பாத்துப்பார்” என்றாள்.
கலிங்கராஜன் உடல்மொழியில் எந்த மாற்றத்தையும் காட்டாமல் இதன்யாவைச் சுமந்து சென்று தேயிலை தோட்ட அலுவலகத்தின் பின்னே படுக்க வைத்தார்.
அவள் தரையில் மயங்கி கிடப்பவளைப் போல நடிக்க கலிங்கராஜன் கிளம்பிப் போய்விட்டார்.
அவரது கார் அங்கிருந்து கிளம்பியது முகத்திரைக்குள் கண்களை விழித்து கவனித்த இதன்யாவிற்கு தெரிந்தது.
அவர் போன பின்னர் யாரும் வரவில்லை. அவள் படுத்து கிடப்பது புல்லும் புதருமாக இருக்குமிடம். பாம்பு, தேள் போன்ற விஷப்பூச்சிகளின் நடமாட்டம் தாராளமாக இருக்குமிடமும் கூட.
நொடிகள் நிமிடங்களாக சரியாக பதினைந்து நிமிடங்கள் தாமதத்திற்கு பிறகு ஷூ கால்களின் டக்டக் சத்தம் அங்கே கேட்டது. இதன்யா கண்களை சிக்கென மூடிக்கொண்டாள்..
பூரண நிலவின் ஒளியில் படுத்திருந்தவளின் மீது விழுந்தது ஏகலைவனின் ஆறடி உயர நிழல்.
கோணல் சிரிப்போடு முபீனா என நினைத்து படுத்திருந்த இதன்யாவைத் தூக்கியவனின் கண்களில் சடுதியில் பளபளப்பு வந்தது.
அவனது உடல் சோர்வில் தடுமாறினாலும் கரங்கள் இதன்யாவின் இடையை வருடின. எதுவோ தட்டுப்பட வெற்றிச்சிரிப்பு சிரித்தவன் அவளைத் தூக்கிக்கொண்டு கானகத்தை நோக்கி நடந்தான்.
அவனது கரங்கள் இடையில் ஊர்ந்த விதத்தில் அருவருத்துப் போன இதன்யாவோ கண் மூடி மயக்கத்திலிருப்பவளைப் போல கிடந்தாள். இப்போது அவள் சினிமாத்தனமாக திமிறி தனது பராக்கிரமத்தைக் காட்டுகிறேன் என்று சண்டையிட ஆரம்பித்தால் வெகு சுலபத்தில் ஏகலைவன் வென்றுவிடுவான்.
அவன் உடல்நலக்குறைவால் சோர்ந்திருக்கலாம். ஆனால் நினைத்தது நடக்கவில்லை என்று தெரிந்ததும் அவனது சைக்கோபதி தூண்டப்படுமாயின் அசுரபலம் கிடைத்துவிடும் அவனுக்கு.
இம்மாதிரியான சைக்கோக்களுக்குத் தங்களது இரையைக் கொல்லும் சமயத்தில் பலம் கூடுமென அவளுக்கு அறிமுகமாகியிருந்த மனநல நிபுணர் கூறியிருந்ததால் எவ்வித அதீத ஹீரோயினிசத்தையும் காட்டாமல் அடங்கி கிடந்தாள் அவள்.
ஏகலைவனின் உருவம் மரக்கூட்டங்களுக்கிடையே மறைய அந்த இரவின் முடிவில் ஜெயிக்கப் போவது அவனா இதன்யாவா என்பதை இனி வரப்போகும் அத்தியாயங்கள் தான் முடிவு செய்யும்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

