போஸ்ட் ட்ராமடிக் ஸ்ட்ரஸ் டிஸ்சார்டரைச் சரி செய்வதற்கான தெரபிகளில் ஹிப்னோதெரபியும் ஒன்றாகும். இதன் நோக்கமே அடிமனதில் புதைந்திருக்கும் துயரங்களை வெளிக்கொணர்ந்து பிரச்சனைகளைத் தீர்ப்பதாகும். இது எதிர்மறையான எண்ணங்களை மீண்டும் ஒருமுறை சரிப்படுத்திக்கொள்ள உதவும். அதோடு மன பாதிப்பு குணமடைய உதவும். ஹிப்னோதெரபிக்கு உடன்படுவது மனிதருக்கு மனிதர் வேறுபடும். அதோடு ஹிப்னோதெரபி கொடுப்பதற்கென நிபுணர்கள் உள்ளார்கள். அவர்களிடமே தெரபி எடுத்துக்கொள்வது நல்லது. கூடுதலாக மனநல ஆலோசகரிடம் உங்கள் குறைபாட்டைத் தீர்ப்பதற்கு சரியாக இருக்கும் வழிமுறை என்னவென கலந்தாலோசித்துக் கொள்வது அவசியம்.
-From Internet
இதன்யா உச்சபட்ச கோபத்தில் இருந்தாள்.
“ஹவ் இர்ரெஸ்பான்சிபிள் ஆன்சர்… அவங்க சண்டை போட்டதை வேடிக்கை பாத்துட்டு ஒரு சைக்கோபாத்தை கோட்டை விட்டிருக்கிங்க… அவன் எவ்ளோ டேஞ்சர் ஆனவன்னு தெரிஞ்சும் இவ்ளோ கேர்லெஸ்சா பதில் சொல்லுறிங்க… ஒரு சின்ன விசயம் அவனை ஸ்டிமுலேட் பண்ணுனா போதும், அவனுக்குள்ள இருக்குற சைக்கோபாத் முழிச்சுப்பான்… அந்த சைக்கோபாத்தோட வெறிக்கு இன்னொரு ஆள் பலியாகிடக்கூடாது… உங்களுக்கு எப்பிடி நான் புரியவைப்பேன்?”
விரக்தியில் கையை மேஜை மீது கோபத்தோடு ஓங்கி குத்திக்கொண்டாள் அவள்.
“மேடம் என்ன பண்ணுறிங்க?” முரளிரதன் அவளை அதட்டினார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இதன்யாவின் முன்னே கான்ஸ்டபிள்களோடு தலை குனிந்தபடி நின்று கொண்டிருந்த மார்த்தாண்டனுக்கும் தனது கவனக்குறைவால் நேர்ந்த பிழை மனதைச் சுட்டது. அதை விட பெரிய தவறு ஒரு முக்கியமான குற்றவாளியைத் தப்பிக்கவிட்டது.
“சாரி மேடம்”
தலையைக் குனிந்தவர் “பட் ஹாஸ்பிடல் சி.சி.டி.வியை உடனே செக் பண்ணிட்டேன் மேடம்… அவன் ஹாஸ்பிட்டலோட பின்வாசலுக்குத் தப்பிச்சு ஓடுனது பதிவாகிருக்கு… அவங்க இருந்து காட்டுக்குள்ள போகலாம்… ஆனா ஒன்னு, ஏகலைவனால ரொம்ப தூரம் போக முடியாது… ஹீ இஸ் பிசிகிக்கலி இல்”
இதன்யாவும் முரளிதரனும் அதற்கு மேல் யோசிக்கவில்லை. மார்த்தாண்டன் தலைமையில் ஒரு குழுவும், மகேந்திரனின் தலைமையில் ஒரு குழுவும் காட்டுக்குள் செல்லவேண்டுமென முடிவானது.
ஒரு குழு காட்டுப்பாதை வழியாகவும் மற்றொரு குழு தேவாலயத்தின் வழியே செல்லும் இரகசியப்பாதை வழியாகவும் காட்டுக்குள் போகலாமென தீர்மானித்தார்கள்.
இதன்யாவும் முரளிதரனும் மருத்துவமனையின் பின்பக்கத்திலிருக்கும் பகுதிக்கு சில காவலர்களை அனுப்பி வைத்தார்கள்.
கூடவே பூங்குன்றத்தை ஒட்டிய ரிசர்வ் பாரஸ்ட் பகுதி வழியே ஏகலைவன் தப்பாமல் இருக்க காட்டு இலாகாவின் உதவியையும் உடனடியாக பேசி பெற்றுவிட்டார்கள்.
“காட்டுல இருக்குற குகைய சுத்தி கவனமா தேடுங்க… உங்க பாதுகாப்பும் முக்கியம்… இது அனிமல்ஸ் நடமாட ஆரம்பிக்குற நேரம்… சோ பி கேர்ஃபுல்” என்று சொல்லி அனைவரையும் அனுப்பி வைத்த இதன்யா ஏகலவைனின் வீட்டைக் கண்காணிக்கவும் சில காவலர்களை அனுப்பி வைத்தாள்.
பின்னர் முரளிதரனிடம் “ஐ நீட் டு சேஞ்ச் மை ட்ரஸ்… போலீஸ் குவார்ட்டர்ஸ் போயிட்டு வந்துடுறேன்… நீங்க இவங்களை லீட் பண்ணி காட்டுக்குள்ள போங்க” என்று சொல்லிவிட்டு போலீஸ் குவாட்டர்சுக்கு விரைந்தாள்.
ப்ராணேஷிடம் நிலமையின் தீவிரத்தை விளக்கியவள் காவல்துறையில் கொடுத்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டாள். முரளிதரன் மூலம் உரிமம் பெற்று வாங்கிய துப்பாக்கியை ப்ராணேஷின் கைகளில் திணித்தாள்.
“இது உங்களோட பாதுகாப்புக்கு”
சொல்லிவிட்டுப் போக எத்தனித்தவளிடம் “நானும் உன் கூட வரட்டுமா?” என்று கேட்டான் அவன்.
இதன்யாவுக்குச் சிரிப்பு வந்தது.
“இந்த மாதிரி சிச்சுவேசன்ல எப்பிடி நடந்துக்கணும்னு எங்களுக்கு ஐ.பி.எஸ் ட்ரெய்னிங்ல சொல்லிக்குடுப்பாங்க… எந்த வித முன் அனுபவமும் இல்லாத உங்களை என்னோட அழைச்சிட்டுப் போக முடியாது ப்ராணேஷ்… இது சினிமாவோ வெப்சீரிசோ இல்ல, ஒரு கல்பிரிட்டைத் தேடிப் போறப்ப என்ன வேணாலும் நடக்கலாம்…. நீங்க இங்கயே இருங்க… நான் வந்துடுவேன்”
அதற்கு மேல் காலதாமதம் செய்ய விரும்பாதவள் கீழ்த்தளத்திலிருக்கும் தரிப்பிடத்திற்கு வந்து தனது பைக்கைக் கிளப்பினாள்.
அவளது இப்போதைய இலக்கு இரகசியப்பாதை வழியே போவது தான்.
பைக்கில் அவள் விரைந்தபோது அவளைக் கடந்து போனது கலிங்கராஜனின் கார். இதன்யாவுக்கு அந்தக் காரை நன்றாகவே தெரியும். இந்நேரத்தில் கலிங்கராஜன் ஏன் ஊருக்குள் வருகிறார்? ஒருவேளை இனியாவின் மரணத்துக்குக் காரணம் ஏகலைவன் என்ற உண்மை அவருக்குத் தெரிய வந்திருக்குமோ?
அவள் யோசிக்கும்போதே கலிங்கராஜனின் கார் சாந்திவனத்தை நோக்கி செல்லாமல் ரசூல் பாயின் வீட்டை நோக்கி சென்றது. ஏதோ தவறாக உணர்ந்தவள் தனது பைக்கில் அவரது காரைப் பின்தொடர்ந்தாள்.
ரசூல் பாயின் வீடு வந்ததும் காரை நிறுத்திய கலிங்கராஜன் தயக்கத்தோடு வீட்டின் வெளியே நிற்க இதன்யாவும் தனது பைக்கை நிறுத்திவிட்டு இறங்கி அவரை நோக்கி முன்னேறினாள்.
அவளைக் காணும் முன்னரே அவளது ஷூ கால்களின் சத்தம் கலிங்கராஜனின் செவிகளை அடைந்துவிட்டது.
திரும்பிப் பார்த்தவர் வருபவள் இதன்யா என்றதும் எச்சிலை விழுங்குவது தெரு விளக்கின் வெளிச்சத்தில் பளிச்சென தெரிந்தது. இதன்யா நிதானமான காலடிகளுடன் அவரிடம் வந்து நின்றாள்.
அவரது பதற்றத்தையும் இந்நேரத்தில் கூட அவரது முகத்தில் உற்பத்தியாகியிருந்த வேர்வையையும் பார்த்தவள் “என்னாச்சு கலிங்கராஜன்? இனியாவை யார் கொலை பண்ணுனாங்கனு தெரிஞ்சிடுச்சு போல… பட் அதுக்கு நீங்க போலீஸ் ஸ்டேசனுக்குத் தானே வந்திருக்கணும்.. ஏன் ரசூல் பாய் வீட்டுக்கு வந்திருக்கிங்க… எதையும் மறைக்குறிங்களா?” என்று சந்தேகத்தோடு கேட்டாள்.
கலிங்கராஜன் வேர்வையைத் துடைத்துக்கொண்டார். இனியாவைக் கொலை செய்தவர் யாரென தெரிந்துவிட்டது என அவள் சொன்னது மட்டுமே அவரது செவிகளில் ஒலித்தது.
“என் மகளைக் கொன்னது யாரு மேடம்?”
அப்படி என்றால் இவருக்கு இன்னும் தெரியாதா? பின்னர் எதற்காக இங்கே வந்திருக்கிறார்? ஆனால் அவரது கண்களில் இருக்கும் கண்ணீரைக் காணவெல்லாம் அவளுக்கு நேரமில்லை. ஏகலைவனை விடிவதற்குள் பிடித்தாகவேண்டும்.
காட்டுக்குள் சென்ற காவலர்களின் உயிருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதென்ற கவலை அவளுக்கு.
“சொல்லுங்க மேடம்… என் மகளைக் கொன்னது யாரு?”
“ஏகலைவன் சக்கரவர்த்தி”
அவ்வளவு தான்! கலிங்கராஜன் உடைந்தே போய்விட்டார்.
“அவரும் ரோஷணும் இனியாவைக் கொலை பண்ணி ஜான், நவநீதம், முத்து, ஃபாதர் பவுல் உதவியால இந்தக் கேஸை திசை திருப்பிருக்காங்க… இப்ப எல்லாரும் உண்மைய ஒத்துக்கிட்டாங்க… ஏகலைவனைத் தவிர… இவ்ளோ நேரம் எங்க கஸ்டடில இருந்தவன் கொஞ்சநேரத்துக்கு முன்னாடி தப்பிச்சிட்டான்.. அவனைத் தேடி எங்க டீம் ஆளுங்க காட்டுக்குள்ள போயிருக்காங்க… உங்க மெலோட்ராமாவ பாக்க எனக்கு நேரமில்ல… இந்நேரத்துல உங்களுக்கு ரசூல் பாய் வீட்டுல என்ன வேலைனு கேக்குறதுக்காக தான் வந்தேன்” இதன்யா படபடவென சொல்லிக்கொண்டே போனாள்.
இனியாவைப் பெற்ற தகப்பனோ சுற்றியிருந்தவர்களின் சதி வலையில் சிக்கித் தவித்து மகளின் மரணம் கேலிக்கூத்தாகிப்போனதே என்று மனம் வெம்பிப்போனார்.
அவரது இடிந்து போன தோற்றத்தைப் பார்த்த இதன்யா “நீங்க ஜானுக்கு ஏதோ துரோகம் பண்ணுனிங்களாம்… அதைத் தாண்டியும் அவர் உண்மைய சொல்லக் காரணம், சோபியாவோட படிப்பு செலவை நீங்க ஏத்துக்கிட்டது தான்… நீங்க என்ன துரோகம் பண்ணுனிங்கனு நான் கேக்கப்போறதில்ல… ஜானுக்கே அதை சொல்ல விருப்பமில்ல… இப்ப எதுக்காக நீங்க இங்க வந்து நிக்குறிங்க? அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க” என்று கறாராகக் கேட்க
“நான்… என்னை… அந்த ஏகலைவன்… ரசூல் பாய் பொண்ணைக் கடத்திட்டு வரச் சொன்னான் மேடம்” என்று சொல்லிவிட்டு முகத்திலறைந்து கொண்டு அழ ஆரம்பித்தார் கலிங்கராஜன்.
“என் பிசினஸ் வளர்ச்சிக்காக சோபியாவ சாத்தானுக்குப் பலி குடுக்க நினைச்சேன் மேடம்… எப்பிடியும் சாகப்போறவ தானேங்கிற அலட்சியம்… நான் ஜானோட பொண்ணு உயிரை துச்சமா நினைச்சதுக்குக் கடவுள் என் பொண்ணு உயிரை எடுத்துட்டார்… என் பாவக்கணக்கை சரிகட்ட என் பொண்ணு உயிரை வாங்கிட்டார் அந்தக் கடவுள்… நான் படுபாவி மேடம்… படுபாவி”
அந்த வழக்கில் அவிழாத முடிச்சுகளில் ஒன்று அவிழ்ந்துவிட்டது. கலிங்கராஜனைப் பார்க்கவே பிடிக்கவில்லை இதன்யாவுக்கு. தொழில் வளர்ச்சிக்கும் உயிர்ப்பலிக்கும் என்ன சம்பந்தம்? உழைத்தால் பணம் வரப்போகிறது. அறிவியல் இவ்வளவு தூரம் வளர்ந்தும் இந்த மனிதர்கள் மூடத்தனத்தில் முக்குளித்து கிடந்திருக்கிறார்கள்.
போதாக்குறைக்கு ஒவ்வொருவருக்குள்ளும் மோசமான இரகசியங்கள் அடங்கிய ‘பண்டோரா பாக்ஸ்’ இருந்திருக்கிறது.
அனைத்துக்கும் சூத்திரதாரி ஏகலைவன்! இத்தனை குற்றங்கள் செய்து மாட்டிக்கொண்ட பிறகும் அவனது வெறி அடங்கவில்லை. எவ்வளவு திமிர் இருந்தால் கலிங்கராஜனிடம் முபீனாவைக் கடத்துமாறு கூறியிருப்பான்!
அவனுக்கும் ரசூல் பாய்க்கும் என்ன தகராறு இருக்க முடியும்?
“அவன் எங்க இருக்கான்னு உங்களுக்குத் தெரியுமா?”
“காட்டு குகைக்கு என்ன வரச் சொல்லியிருக்கான் மேடம்”
“சோ நீங்க முபீனாவைக் கடத்த போறிங்க” இதன்யா கோபமாகக் கேட்கவும்
“என் பிள்ளைங்களைக் காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல மேடம்” என்று கதறியழுதார் கலிங்கராஜன்.
இதன்யாவுக்கு அவர் மேல் இரக்கம் பிறக்க மறுத்தது. சிறுபெண் சோபியாவை நரபலி கொடுக்க திட்டமிட்ட கொடியவராகவே அவரை எண்ணியது அவளது மனம்.
“அழுறதை நிறுத்துங்க… நீங்களும் இன்ஃப்ளுயன்சான பிசினஸ்மேன் தானே… அந்தாளோட செல்வாக்குல பாதி கூடவா உங்களுக்கு இல்ல? இவ்ளோ பெரிய கோழையா இருக்கிங்க? சோபியா, முபீனா எல்லாம் உங்க பொண்ணு இனியா மாதிரி சின்னப்பொண்ணுங்க… அவங்களுக்குனு ஒரு எதிர்காலம் இருக்கு… கொஞ்சம் கூட இரக்கமில்லாம அவளைக் கடத்தப்போறேன்னு என் கிட்டவே சொல்லுறிங்க” இதன்யா கலிங்கராஜனை இரக்கமின்றி வறுத்தெடுத்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் தன் வீட்டிலிருந்து வெளியே வந்த நிஷாந்த் அக்காட்சியைத் தூரத்திலிருந்து பார்த்துவிட்டான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

