கடந்து போன பத்தாண்டுகளில், சைக்கோபதி உருவாவதற்கான சில காரணங்கள் பற்றிய நரம்புயிரியல் விளக்கங்கள் கிடைத்துள்ளன. உதாரணமாக தேவையற்ற தூண்டுதல்கள், பொறுப்பற்றத்தன்மை, விரோதம் மற்றும் முரட்டுத்தனம் இவையெல்லாம் நரம்பியல் இரசாயனங்களான மோனோமைன் ஆக்சிடஸ் (MAO), செரொடனின், 5-ஹைட்ராக்சிண்டோலேக்டிக் ஆசிட், ட்ரியைடோதைரனின், ஃப்ரீ தைராக்சின், டெஸ்டோஸ்டிரோன், கார்டிசோல், அட்ரினோகார்டிகோட்ராஃபிக் ஹார்மொண் மற்றும் ஹைப்போதலாமிக் – பிட்யூட்டரி – அட்ரினல் மற்றும் ஹைப்போதலாமிக் – பிட்யூட்டரி – கொனாடல் அச்சுகளில் உருவாகும் ஹார்மோன்கள் போன்றவற்றின் அசாதாரணமான சுரப்பு அளவுகளால் உண்டாகும் பிரச்சனைகள் ஆகும். சைக்கோபதியின் மற்ற அறிகுறிகளான உணர்வு தேடுதல்கள், மோசமான அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளும் திறனின்மை போன்றவை மூளை புறணிகளின் குறைவான தூண்டுதலோடு தொடர்புபடுத்தப்படுகின்றன.
-From ‘The hidden suffering of the psychopath’ article of Willem H.J.Martens
பொன்மலை காவல் நிலையம்…
நவநீதம் விசாரணையில் கூறிய உண்மைகள் அனைத்தையும் தனது விசாரணைக்குழுவினரிடம் போட்டுக் காட்டினாள் இதன்யா.
மார்த்தாண்டன் இன்னும் காவல் நிலையத்துக்கு வரவில்லை. குவார்ட்டர்சுக்குக் குளிக்கப் போயிருப்பதாக மகேந்திரன் கூறினார்.
விசாரணை வீடியோவின் முடிவில் அவரும் வந்துவிட்டார். அவர் மீண்டுமொரு முறை வீடியோவைப் பார்க்கட்டுமென நினைத்த இதன்யா ஜானை விசாரணை அறைக்கு அழைத்து வரும்படி மகேந்திரனிடம் சொல்லிவிட்டு அங்கே சென்றாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ஜானும் அங்கே வரவழைக்கப்பட்டார். நவநீதம் தன்னிடம் சொன்னவற்றை ஜானிடம் கூறிய இதன்யா
“திருட்டுப்பட்டம் கட்டுனாங்கிற ஒரே காரணத்துக்காக உனக்கு இனியா மேல விரோதம் இருக்கலாம்னு நான் சந்தேகப்படுறேன்… அதோட முருகையா மேல கொலை பண்ணுற உனக்கு விரோதம் இருந்திருக்கு” என்று நிறுத்த
“இல்ல மேடம்…” என மறுப்பு கூற தொடங்கினார் அவர்.
“இனியாவோட காதல் விவகாரம் உன்னையும் கலிங்கராஜனையும் தவிர வேற எந்த வேலைக்காரங்களுக்கும் தெரியாதுனு நவநீதம் சொல்லிட்டா… அது மட்டுமில்ல, உன் மகளைப் பத்தியும், சாத்தான் குரூப்ல அவளுக்காக நீ சேர்ந்ததை பத்தியும் ஒன்னு விடாம சொல்லிட்டா நவநீதம்… முருகையாவ கொன்னதா மட்டும் ஒத்துக்கிட்டா போதுமா? அதுக்கான காரணம் என்ன, ஏன் முத்து உனக்கு உதவுனான்னு ஏ டூ இசட் நீ எனக்குச் சொல்லியே ஆகணும்”
ஜான் விக்கித்துப்போனார். நவநீதம் இப்படி உளறிவைப்பாளென அவர் கனவில் கூட நினைக்கவில்லை. காவல்துறை அடித்ததில் பயந்து குற்றத்தை ஒப்புக்கொண்டேன் என நீதிமன்றத்தில் அழுது பசப்பி எப்படியாவது இந்த வழக்கிலிருந்து தப்பிவிடலாமென்ற நப்பாசை நிராசையாகிப் போனது ஜானுக்கு.
தலையைக் குனிந்துகொண்டவர் “நான் உண்மைய சொல்லிடுறேன் மேடம்” என்றார்.
“வெரிகுட்… பட் அதுக்கு முன்னாடி முத்து எங்க இருப்பான்னு சொல்லு… எனி கெஸ்?”
இதன்யா அவனிடம் கேட்டபடி விசாரணைக்கான ஆயத்தங்களை மகேந்திரனைச் செய்ய சொன்னாள்.
“முத்து ரயில்வே ஸ்டேசன் ஸ்டாண்ட்ல டாக்சிய விட்டிருப்பான் மேடம்… அவன் டிரைவர்… சொந்தமா கார் வச்சிருக்கான்… அதை கால்டாக்சியா ஓட்டுவான்… ஓலா ரேபிடோலயும் ஆஃபர் வந்தா ஓட்டுவான்… பொதுவா அவன் பொன்மலை, திருநெல்வேலி சுத்துவட்டாரம் தவிர வேற எங்கயும் போகமாட்டான்… இதுவரைக்கும் ரெண்டே ரெண்டு தடவை கொல்லம் போயிருக்கான்… அங்க அவன் கூட வேலை பாத்த ஒரு மேக்கப்மேனோட வீடு இருக்கு… அவனோட கல்யாணத்துக்கு கார் வேணும்னு ஒரு தடவை போனான்… அப்புறம் அந்த ஃப்ரெண்ட் ஏதோ எமர்ஜென்சினு கூப்பிட்டதால ஒரு தடவை போனான்”
வீடியோ கேமரா ஆன் ஆனதும் இதன்யா முத்துவைப் பற்றிய கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தாள்.
ஜானும் அவனுக்கும் தனக்குமான சம்பந்தம் என்ன என்பதிலிருந்து நடந்த அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தார்.
ஜானுக்குத் திருமணமாகி ஒரு பெண்குழந்தை பிறந்ததும் அவரது மனைவி ஒரு விபத்தில் பலியானார். அன்றிலிருந்து மகள் மட்டுமே வாழ்க்கையென தீர்மானித்து கலிங்கராஜனிடம் ஓட்டுநராகப் பணியாற்றத் துவங்கினார். அப்போது அறிமுகமானவள் தான் நவநீதம்.
முதலில் ஒரே இடத்தில் வேலை செய்பவர்கள் என்ற ரீதியில் ஆரம்பித்த அவர்களின் பழக்கம் நாளடைவில் நேசமாக மாறியது. நவநீதமும் சோபியாவைத் தன் மகளாகவே கருத ஆரம்பித்தாள்.
ஆனால் திருமணம் செய்து உலகிற்கு தங்கள் உறவை பரைசாற்ற இருவரும் தயங்கினார்கள். காரணம் அவர்களின் வயது. கூடவே சோபியா தங்களது உறவை ஏற்றுக்கொள்வாளோ என்னவோ என்ற பயம். எனவே தங்களது உறவை யாருக்கும் சொல்லாமல் இரகசியமாக வைத்துக்கொண்டார்கள்.
கலிங்கராஜன் பணியாட்களுக்கு நல்லவிதமாக ஊதியம் கொடுத்து மதிப்புடன் நடத்துவார். ஜானும் நவநீதமும் அதற்கு விதிவிலக்கில்லை.
கலிங்கராஜன் மட்டுமன்றி அவரது குடும்பம் முழுவதுமே வேலையாட்களைத் துச்சமாகக் கருதும் மனம் படைத்தவர்கள் அல்லர்.
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புதுவருடம் என அனைத்துக்கும் புத்தாடையோடு போனசும் கொடுப்பவர் கலிங்கராஜன். கணவனும் மனைவியும் வெவ்வேறு மதம் என்பதால் இரு மதம் சம்பந்தப்பட்ட பண்டிகைகளும் சாந்திவனத்தில் உற்சாகத்துடன் கொண்டாடப்படும்.
இதெல்லாம் கலிங்கராஜனின் தொழிலில் சரிவு வரும்வரை தான். உலகையே ஈராண்டுகளுக்கு அடக்கியாண்ட பெருந்தொற்றான கொரானாவின் கொடிய கரத்தில் சிக்கி மக்கள் மட்டுமில்லை, மாபெரும் தொழில் சாம்ராஜ்ஜியங்களும் ஆடிப்போன காலகட்டத்தில் காலின் சரும பாதுகாப்பு நிறுவனமும் அடிவாங்கியது.
ஆன்லைன் விற்பனையில் பெருந்தேக்கம், அரசின் கெடுபிடி, ஊரடங்கால் தொழில் தள்ளாட ஆரம்பித்தது. எனவே அந்த இரண்டாண்டுகளில் கலிங்கராஜனால் வேலையாட்கள் மற்றும் குடும்பத்தினரின் அடிப்படை தேவைகளை மட்டுமே நிறைவு செய்ய முடிந்தது.
சம்பளம் தவிர வேறெந்த பண பலனையும் கொடுக்க முடியாத சூழல் அவருக்கு. வேலையாட்களும் அவரது நிலை புரிந்து நடந்துகொண்டார்கள். குழந்தைகள் தந்தையிடம் அது வேண்டும் இது வேண்டுமென நச்சரிக்கவில்லை. காரணம் கலிங்கராஜனின் மூத்த மகள் இனியா.
தனது சகோதர சகோதரிகளுக்குத் தந்தையின் நிலையைச் சொல்லிப் புரியவைத்திருந்தாள் அவள்.
கூடவே தன்னைக் கண்டுகொள்ளாதவர் என்றாலும் தந்தையின் தொழிலுக்கு உதவியாக சமூக வலைதளங்களில் தன்னால் இயன்றவரைக்கும் காலின் சரும பாதுகாப்பு நிறுவன பொருட்களை விளம்பரம் செய்தாள்.
ஆன்லைன் விற்பனை அவளது உதவியால் ஓரளவுக்குச் சீரடைந்தாலும், கலிங்கராஜன் கொரானா பெருந்தொற்று காலத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வாங்கிய வங்கிக்கடனுக்கு வட்டி மட்டுமே ஒரு பெரிய தொகை கட்டிக்கொண்டிருந்தார்.
கட்டாயம் அவருக்கு வெளிப்புற முதலீடு தேவை என்ற நிலையில் நீண்ட நாள் அண்டை வீட்டுக்காரன் என்ற முறையிலும், சக தொழிலதிபன் என்ற முறையிலும் கலிங்கராஜனின் தொழிலில் முதலீடு செய்ய முன்வந்தான் ஏகலைவன்.
தேயிலை ஏற்றுமதி செய்து அன்னிய செலாவணி ஈட்டியவனுக்கு இதெல்லாம் பெரிய விசயமாகத் தோன்றவில்லை. எனவே அடிக்கடி கலிங்கராஜனின் வீட்டுக்கு அவன் வரப்போக இருந்தான்.
இந்நிலையில் தான் மும்பையில் டிவி தொடர் தயாரிக்கும் நிறுவனத்தில் பணம் திருடியதாக முத்து காவல்நிலையம் வரை போய்வந்தான்.
அவனுக்கு மேக்கப்மேன் வேலை கொடுக்க எந்த ஸ்டூடியோவும் ஒத்துக்கொள்ளாததால் சொந்த ஊரான பூங்குன்றத்துக்கே திரும்பி வந்தான்.
மும்பையில் சம்பாதித்த பணத்தை வைத்து ஒரு கார் வாங்கி அதை கால் டாக்சியாக ஓட்டலாமென முடிவு செய்தவனுக்கு ஜான் உதவி செய்தார்.
தன் மீது மும்பையில் போடப்பட்ட திருட்டு வழக்கை யாருக்கும் தெரியாமல் மறைத்து வெற்றிகரமாக முத்து கால் டாக்சி ஓட்ட ஆரம்பித்தான்.
அவன் ஒரு திறமைவாய்ந்த மேக்கப் கலைஞன். அவனது மேக்கப் திறமையால் ஒரு நபரையே வேறொரு ஆளாகக் காட்டிவிடுவான்.
அந்தத் திறமையைக் காட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே என்ற வருத்தம் அவனுக்கு எப்போதும் உண்டு. எப்போதாவது அந்த வருத்தம் அதிகமானால் ஜானிடம் புலம்புவான் அவன்.
“எனக்கு இருக்குற திறமைக்குப் பாலிவுட்ல பெரிய மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆகவேண்டியவன்… இந்த திருட்டு வியாதியால இருந்த வேலைய இழந்து இப்ப டிரைவரா வேலை செஞ்சிட்டிருக்கேன்… ஏதாச்சும் அதிசயம் நடந்து என் தலையெழுத்து மாறிடாதானு ஏக்கமா இருக்குண்ணே”
“எல்லாருக்கும் ஆசைப்பட்ட வேலை கிடைச்சிடாது முத்து… இப்ப கையில இருக்குற வேலைய பாரு… கர்த்தரோட அருள் இருந்தா நீ வருங்காலத்துல உனக்குப் பிடிச்ச தொழில்ல திறமையா வளர்ந்து நிப்ப” என்பார் ஜான்.
ஆனால் முத்துவோ சலித்துக்கொள்வான்.
“என்னமோ நீங்க சொல்லுறிங்கண்ணே… கடவுள் என் விசயத்துலயே எப்பவோ கண்ணை மூடிட்டார்… இனி அவர் எனக்கு நல்வழி காட்டுவார்னு தோணல” என நம்பிக்கையின்றி உரைப்பான்.
இப்படி நாட்கள் கழிய ஜானின் மகள் சோபியாவுக்கு அடிக்கடி தலைவலி வர ஆரம்பித்தது. சாதாரண தலைவலி என நினைத்து மாத்திரை போட்டுக்கொண்டவள் ஒரு கட்டத்தில் தலைவலி தாளாமல் பள்ளியில் மயங்கி விழுந்தாள்.
பதறியடித்து பள்ளிக்குப் போய் மகளை மருத்துவமனைக்கு எடுத்துக்கொண்டு ஓடினார் ஜான்.
மருத்துவ பரிசோதனையில் அவளது மூளையின் சிக்கலான பகுதியொன்றில் கட்டி ஒன்று வளர்வதாகவும் அது வளர வளர தலைவலி அதிகமாகும் என்றார்கள் மருத்துவர்கள். அதை அறுவைச்சிகிச்சையில் நீக்கவில்லை என்றால் சோபியாவின் உயிருக்கே ஆபத்தாகிவிடுமென எச்சரித்தார்கள்.
கலங்கிப்போனார் ஜான். வாழ்க்கையே சோபியா தான் என வாழ்ந்து வந்தவருக்கு இது என்ன சோதனை என்ற கலக்கம்.
அறுவை சிகிச்சைக்கு ஏழு லட்சம் ரூபாய் வரை ஆகலாமென மருத்துவர் சொல்லிவிட்டார். மருத்துவமனையிலிருந்து கை நிறைய மருந்து மாத்திரைகளோடு மகளை அழைத்து வந்த ஜானின் மனம் ஊமையாய்க் கதறியது.
முதலாளியின் தொழிலும் முன்புபோல செழிப்பாக இல்லை. எனவே அவரிடம் கேட்கவும் தயக்கம்.
இரவெல்லாம் உறங்காமல் விழித்திருந்து கடவுளிடம் ஜெபித்தார். ஏதாவது அற்புதம் நடந்து என் மகளுக்கு வந்த துன்பம் போய்விடாதா என்று அழுதழுது ஜெபித்தார். இப்படியே ஒரு மாதம் சென்றது. சோபியாவின் தலைவலி மாத்திரை மருந்துக்கும் கட்டுப்படாமல் ராட்சசத்தனமாக கொடுமைப்படுத்தியது அவளை.
மகள் துடிப்பதைக் கண்ணீரோடு நவநீதத்திடம் சொல்லி அழுவார் ஜான். இந்நிலையில் தான் பொன்மலையில் சாத்தான் வழிபாட்டுக்கென ஆட்களைத் திரட்ட ஆரம்பித்திருந்தான் ரோஷண்.
அது அரசல் புரசலாக ஜானின் காதிலும் விழுந்து வைத்தது. அவனிடம் அது என்ன வழிபாடென விசாரிக்க ஆரம்பித்தார்.
“இந்தச் சாத்தான் இருளின் இளவரசன் ஜான் அண்ணா… இந்தியாவோட நார்த் ஈஸ்ட்ல இவரை வழிபடுற மக்கள் அதிகமாகிட்டாங்க… காரணம் இவரோட அருளால குணமாகாத வியாதி குணமாகும்… ஏழையா இருக்குறவன் பணக்காரன் ஆவான்… குடும்ப வாழ்க்கைல பிரச்சனை இருந்தா சரியாகும்… ஆனா அதுக்கு சாத்தான் மேல முழு நம்பிக்கை வச்சு அவரை வழிபடணும்” என்றான் ரோஷண்.
ஜானுக்கு முதலில் பயம் வந்தது. கடவுளுக்குத் துரோகம் செய்து சாத்தானிடம் சரணாகதி அடையவேண்டுமா என யோசித்தார். சாத்தான் கடவுளையே மறுதலித்தவன் ஆயிற்றே, அவனிடமா மண்டியிடவேண்டுமென தயங்கினார்.
இந்நிலையில் தான் சோபியாவின் உடல்நிலை பற்றிய செய்தி வேலையாட்கள் மூலம் கலிங்கராஜனின் காதுக்கு வந்தது.
அவர் தொழில்ரீதிப்பயணமாக வெளிநாடு செல்லவிருந்தார். அந்நிலையிலும் ஜானை அழைத்து சோபியாவின் உடல்நிலை பற்றி விசாரித்தார்.
“என் கிட்ட ஏன் முதல்லயே சொல்லல ஜான்?” எனக் கடிந்துகொண்டார் கலிங்கராஜன்.
உடனடியாக கிளாராவின் கணக்குக்கு ஏழு இலட்சம் ரூபாயை மாற்றியவர் “நம்ம ஜானோட மகள் சோபியாவோட சர்ஜெரிக்கான பணம் இது கிளாரா… அவனுக்குக் குடுத்துடு” என்று சொல்லிவிட்டார்.
சொன்ன கையோடு அவர் வெளிநாடு பறந்துவிட்டார்.
தொழிலில் சரியான இலாபம் இன்னும் இல்லாத நிலையில் வேலைக்காரனுக்கு ஏழு இலட்சம் கொடுக்கவேண்டுமா என அங்கலாய்த்த கிளாரா அதைக் கொடுப்பதைத் தாமதப்படுத்தினாள்.
பணம் வருமா வராதா என்று இழுபறியான நிலை வரவும் ஜான் உடைந்து போனார். இந்நிலையில் அவரே எதிர்பாராவண்ணம் அந்த ஏழு இலட்சம் ரூபாயைக் குமாரிக்குக் கொடுத்துவிட்டாள் கிளாரா.
ஜான் இதைப் பற்றி கேட்டபோது வெளிப்படையாக அவரை அவமானப்படுத்தினாள்.
“என்னமோ நீ குடுத்த வச்ச பணம் மாதிரி கேக்குற…. உன் மகளுக்கு ஆப்ரேஷன் நடக்கணும்னா ஜி.ஹெச்ல அவளைச் சேரு… ஏழு இலட்சம் சும்மாவா வருது? என் புருசன் அதுக்காக எவ்ளோ கஷ்டப்படுறார்னு எனக்குத் தான் தெரியும்” என்றவள்
“இதை நீங்க பத்திரமா வச்சுக்கோங்க குமாரி” என குமாரியிடம் கொடுக்கவும் ஜான் மலங்க மலங்க விழித்தார்.
“என்ன பாக்குற? இவங்க என் தூரத்துச் சொந்தம்… இவங்க ஊருல வீடு ஒன்னு விலைக்கு வருது… அதை வாங்கணும்னு ஆசைப்பட்டாங்க… என் சொந்தக்காரங்களுக்கு என் வீட்டுப் பணத்தைக் குடுக்குறேன்… உனக்கு என்ன பார்வை?” என்று சொல்லி அவரை விரட்டியடித்தாள் கிளாரா. கூடவே கணவரிடம் இதைப் பற்றி சொன்னால் வேலையை விட்டுத் துரத்திவிடுவேன் என்ற மிரட்டல் வேறு!
ஜானின் மனம் நொந்துபோனது. இத்தனை நாட்கள் இருந்த விசுவாசமான ஜான் அங்கே மரித்துப்போனார். இருப்பினும் கடவுள் ஏதேனும் அற்புதத்தை நிகழ்த்தி மகளைக் காப்பாரென உறுதியாக நம்பினார் ஜான்.
ஆனால் எப்பேர்ப்பட்ட உறுதியையும் உருக்குலைத்துவிடும் தங்களது பிள்ளைகள் நோயால் அவதிப்படும் காட்சி. சோபியா வலி தாங்காமல் அழுது அரற்றுவது, கண்ணீர் விடுவதைக் கண்டு நொந்து போன ஜானின் பக்தியை தந்தை பாசம் வெற்றி கண்டது.
அவரும் நவநீதமும் ரோஷணின் சாத்தான் வழிபாட்டுக் குழுவில் இணைந்தார்கள். நம்பிக்கையோடு வழிபடவும் ஆரம்பித்தார்கள்.
காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக குமாரி பணத்தைப் பதுக்கி வைத்த இடம் எதுவென நவநீதத்திற்கு தெரிந்துவிட்டது.
அதைக் குமாரிக்குத் தெரியாமல் திருடிய நவநீதம் யாருக்கும் தெரியாமல் சமையலறையில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த ஜானிடம் கொண்டு வந்து கொடுத்தாள்.
“இதை வச்சு புள்ளையோட ஆபரேஷனை முடிச்சிடுய்யா… அந்தக் குமாரி பொம்பளைக்குச் சந்தேகம் வந்துச்சுனா சர்ச் மூலமா கிடைச்ச உதவினு சொல்லிச் சமாளிச்சிடலாம்… அவளாலயும் கிளாராம்மாவலயும் இதை ஐயா கிட்ட சொல்லக் கூட முடியாது… ஏன்னா அவங்க செஞ்ச அநியாயம் பத்தி தெரிஞ்சா கட்டாயம் ஐயா அவங்களைக் கண்டிப்பார்னு அந்தம்மாக்கும் தெரியும்”
நவநீதம் கொடுத்த பணக்கட்டுகளை வாங்கிக்கொண்டார் ஜான். இனி மகளைக் காப்பாற்றிவிடலாமென்ற நம்பிக்கையும் சந்தோசமும் அவரது முகத்தில். மனமோ சாத்தான் வழிபாட்டுக்குப் பிறகு பணம் கிடைத்ததால் இது எல்லாம் சாத்தானின் கருணை என மூடத்தனமாக நம்ப ஆரம்பித்துவிட்டது.
எல்லாமே “ஜான் அண்ணா” எனக் கோபாவேசத்தோடு இனியா அந்த அறைக்குள் வரும் வரை தான்.
அவளது குரல் கேட்டதும் இடியோசை கேட்ட நாகம் போல நடுங்கி மிரண்டு போனார்கள் இருவரும்.
கையில் பணக்கட்டுடன் நின்ற ஜானையும், நடுங்கியபடி நின்ற நவநீதத்தையும் கோபத்தோடு உறுத்துவிழித்தவாறு வந்து நின்றாள் இனியா.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

